Jump to content

இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்...


Imageபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே.

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். Imageஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

"கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.

இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும்.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்"


சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான்,

"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன.

1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.

அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.

"ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு.

நன்றி பவிதரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்குத்தி பூமேலே, தேவி ஸ்ரீ தேவி என்ன பாடல்கள்.... அமர(ன்) கானங்கள்....! tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.