Jump to content

தவக்கோலங்கள் (விடலைப் பருவ சிறுகதை)


Recommended Posts

teenage_2588205f[1]

கடலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது.

ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன்.

என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள்.

கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும், அது வசூலிக்கப்பட்ட இடம் ஆயத்தடி என வழங்கப்படலாயிற்று என்றும் என் ஐயா, ஆயம் பற்றிக் கூறியவை நினைவுக்கு வருகின்றன. அவர் கைதடியிலே பிறந்து வளர்ந்து அங்கேயே தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பொருள் சேர்க்கா விட்டாலும் ‘நல்லமனிதர்’ என்ற பெயரை பல வட்டங்களிலும் சம்பாதித்திருந்தார். இப்படிப்பட்ட வாத்தியாரின் பிள்ளை தப்புத்தண்டா செய்யக் கூடாது என்ற கிராமத்தின் பொதுவான விதி, பல தடவைகளில் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதுண்டு.

ஆயத்தடியில் இறங்கியதும் நினைவு ஒழுங்கைகளிலே, என் மனசு அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியை நோக்கிப் பயணித்தது.

ஆயத்தை சுற்றிய வீடுகள் பலவும் இப்போது சிதிலமடைந்துவிட்டன. எஞ்சியுள்ள வீடுகள் சில, மனித சஞ்சாரம் இழந்தனவாகத் தோன்றின. அங்கிருந்த ஆரம்ப பாடசாலையும் தரைமட்டமாயிருந்தது. திட்டியாய் தெரிந்த மண்மேட்டையும் அருகிலுள்ள கல்லு குவியலையும் வைத்துதான் பாடசாலை இருந்த இடத்தினை என்னால் அடையாளப்படுத்த முடிந்தது. அந்த ஆரம்பபாடசாலை மழலைகளின் இரைச்சலுடன் இருந்த அந்தக்காலம்…
மாரிகாலம்!

வெள்ளமும் சேர்ந்து கொள்ள பாலத்தின் கீழே நீர்முட்டி மோதி ஓடியது. கடல்நீரின் வீச்சு என் மன ஒட்டத்துடன் போட்டியிட்டது.
பாலத்தின் மீது போடப்பட்டிருந்த தார் றோட்டு யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. யுத்தகளமாக்கப்பட்ட பிறந்தமண். இதனை நினைத்துக் கொண்டதும் இதயத்திலே ஒரு துடிப்பு நின்று, மீண்டும் துடிக்கத் துவங்கியது போன்றதொரு வலி.

பாலத்தில் காவலுக்கு அமைக்கப்பட்டிருந்த ‘சென்றி’யில் இருந்து இராணுவச் சிப்பாய்கள் இருவர் துவக்கும் கையுமாக எம்மை நோக்கி வந்தார்கள். போர்க்காலமாக இருந்திருந்தால் ஆயத்தடியிலுள்ள இராணுவமுகாமிருந்தே சரமாரியாக வெடிவைத்திருப்பார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்த கெடுபிடிகள் சற்றே ஓய்ந்திருக்கின்றன.
எங்களை நெருங்கியதும், ‘வெளிநாடா..?’ என இராணுவத்தினர் தமக்குத் தெரிந்த தமிழில் கேட்டார்கள். உள்ளூரிலே வசிப்பவர்கள் கடற்காற்று வாங்க ஆயத்தடிக்கு வரத் துணிய மாட்டார்கள் என்று அவர்கள் சரியாகவே ஊகித்திருந்தார்கள்.

‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகச் சிரித்தேன்.

ஒன்று மறியாத என் மகன் என்னைப் பார்த்தான். அசடு வழியும் என் முகபாவத்திற்கு அவன் என்ன அர்த்தம் கொடுத்திருப்பான்? ஆமிக்காரர் சுணங்கி நிற்காது எம்மைக் கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். கடல் அலைகள் நுரை தள்ளியபடி பாலத்தின் மதகுச் சுவர்களில் மோதித் திரும்பின.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…,

அப்பொழுது எனக்கு, என் அருகில் நின்ற மகனின் வயசு கூட இருக்காது. நீர் பாலத்தின் கீழே ஓடிக் கொண்டிருக்க நாங்கள் றோட்டால், உப்புக் காற்றை கிழித்துக்கொண்டு சைக்கிளிலே தலை தெறித்த வேகத்தில் ஓடிக் கொண்டிருப்போம். நாங்கள் என்றால் பாலன், சொக்கன், சந்திரன், பூபாலன், துயைரன். பற்பன், நான் என்கிற அனைவரும். அப்போது எமக்கு சேவல் கூவும் விடலைப்பருவம்.

உயர்வகுப்பு விஞ்ஞானம் படித்த அந்தக் காலத்தில், விஞ்ஞானம் படிக்க கைதடியில் பாடசாலைகள் கிடையாது. இதனால் பாலத்தின் மறுதொங்கலைத் தொட்டு நிற்கும் கோப்பாய் பாடசாலையில் சேர்ந்து படிக்கலானோம். விஞ்ஞானம் படிப்பதில் ஆர்வம் இருந்ததோ இல்லையோ, கோப்பாய் பெட்டைகளுடைய செந்தழிப்பான முகங்களின் நினைவு, சைக்கிளை மிதிப்பதிலே உபரியான உந்துவிசையை சேர்த்ததாக நிதானிக்கமுடிகிறது.

பாலத்தினூடாக ஒரே ஒரு பஸ் மாத்திரம் சாவகச்சேரியிருந்து மானிப்பாய்வரை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிஷம் பிந்தினாலும் பல மணித்தியாலங்கள் வீதி ஓரம் காத்துக் கிடக்க வேண்டும். அந்தக்காலத்தில் கோப்பாய்க்கு படிக்க வரும் கைதடிப் பெட்டையளுக்கு அந்தப் பஸ்தான் கதி. வசதி படைத்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தமது பிள்ளைகளை வாடகைக் காரிலும் பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெட்டையள் சைக்கிள் ஓடுவது ‘நோடாலத்தனம்’ என்று அந்தக்கால யாழ்ப்பாணம் விமர்சனம் செய்தது. பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்த சிங்கப்பூர் சிதம்பரத்தின் மகள், சைக்கிள் ஓடத்துவங்கி ‘ஆட்டக்காரி’ என்று ஊரில் பெயர் எடுத்ததுதான் மிச்சம். கோப்பாய்க்கு சைக்கிளில் செல்லும் விடலைப் பருவத்து பெடியன்களுக்கு பஸ்ஸுக்காக காத்திருக்கும் பெட்டையளைக் கண்டால் சற்று இழப்பமான எண்ணமே!

அவர்களைக் கண்டதும் சுழட்டி வெட்டி, கைவிட்டு ஓடி பல சாகஸங்கள் செய்ய விழைந்ததுண்டு. இந்த ஸ்டைல்காட்டலில் சைக்கிளும் சைக்கிளும் முட்டுப்பட்டோ, கொழுவுப்பட்டோ றோட்டில் விழுந்து அடிபட்டதுமுண்டு. கைகால்கள் உரஞ்சுப்பட்டு ‘விழுப்புண்கள்’ சுமந்த காலமது!

நாம் கோப்பாயில் படித்த பாடசாலை கிறிஸ்தவ தேவாலயத்தை ஒட்டினாற்போல் அமைந்திருந்தது. அதன் அயலிலே அதனுடன் சம்மந்தப்பட்டவர்களும் வாழ்ந்தார்கள். இதனால் இந்தப்பகுதி நாகரீகம் பெற்றதுபோல் ‘பளிச்’சென்று தோன்றியது. கிறிஸ்தவம் மூலம் இந்த கோப்பாய் பெட்டைகளுடைய அலங்காரத்திலே இலேசாகத் தலைகாட்டிய மேற்கத்திய நாகரீகம் கோப்பாய் பெட்டைகளுடைய ‘வடிவை’ உயர்த்திக் காட்டுவதாக நாம் நினைத்துக் கொண்டோம். உண்மையிலே அப்போது எனக்கு அவர்கள் அழகு தேவதை களாகவே தோன்றினார்கள்.
கைதடியிருந்து பாலத்தினூடாகக் கோப்பாய் பாடசாலைக்கு செல்லும் நாம் எமது தலைமுடி குழம்பாமல் இருக்கப் படாதபாடு படுவோம். இதற்காக நாம் எண்ணையும் தண்ணீரும் கலந்து வைத்து தலைமயிலை படிய வாரி இழுத்திருப்போம்.

‘எண்ணையோடை தண்ணியை கலந்து வைக்காதை, தடிமன் பிடிக்கும்’ என்று அம்மா சத்தம் போடுவதை என்றுமே சட்டை செய்ததில்லை. தலைவாரி முடித்தபின், எண்ணையும் தண்ணீரும் தலை ஊத்தையும் கலந்த கோப்பி நுரையின் நுதம்பலுடன் கூடிய மஞ்சள் கலவை ஒன்று சீப்பில் படிந்திருக்கும். அதை சுத்தப்படுத்துவதற்கு என்றுமே எனக்கு நேரம் இருந்ததில்லை. நாங்கள் என்னதான் பிரயத்தனங்கள் எடுத்தாலும் சோளகக் காற்றும், கோடை காலத்தில் அள்ளிவீசும் உப்பு மண் காற்றும் எங்களுடைய சிகை அலங்காரங்களைக் குழப்பிவிடும்.

கோப்பாய் சந்தியிலே சிகை அலங்கார நிலையமொன்றுண்டு. நாங்கள் போய்ச்சேரும் அந்த காலை நேரங்களில் முதலாளி அங்கு நிற்பதில்லை. அவருடைய மகன் கோபாலுவே சலூனைத் திறந்து வைத்திருப்பான். அவனுக்கும் கிட்டத்தட்ட எங்களுடைய வயதுதான் இருக்கும். கைதடியில் இருந்து வரும் எங்களுக்கென்று சலூனில் ஒரு சீப்பு வைத்திருப்பான். உப்புமண்ணும் நல்லெண்ணையும் சொடுகும் சேர்ந்த ஒருவகை கலவை அந்த சீப்பு பற்களின் அரைப் பகுதியை அடைத்திருக்கும். அதுபற்றி நாங்கள் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. சலூனில் தலை வாரிய பின் அங்குள்ள ‘புசல்மா’ பவுடரில் கொஞ்சம் எடுத்துபூச கோபாலு அனுமதிப்பான். வேர்வை அப்பிய முகத்தில் பவுடரை பூசிக்கொண்டு சேட் கொலரையும் கை மடிப்புகளையும் சரி செய்தால், நாம் வகுப்பறைக்கு போக ‘றெடி’ என்று அர்த்தம்.

கோப்பாய் சந்தியில் கிடைத்த இந்த அலங்கார வசதிகள் அப்பொழுது ஆயத்தடியில் கிடையாது. கைதடி தன் கிராமியத் தன்மையை இழக்காது சோம்பல் முறித்தது. நாவிதர்கள் நடமாடும் சலூனாக கைதடியில் சேவை புரிந்தார்கள். இன்னொரு விசயத்தையும் சொல்லவேணும். கோப்பாயில் வாழும் நாகரீகமான பெட்டைகளின் தரிசனம் கிடைத்த பின் கைதடிப் பெட்டைகள் எனக்கு ‘பிரமிப்பை’ கொடுக்க முடியாத சாதாரணமானவர்களாகத் தோன்றினார்கள். கைதடிப் பெட்டையளை மட்டந்தட்டிய நான் பின்னர் கைதடிப் பெட்டையை மனைவியாகப் பெற்று வாழ்வதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

நான் இவ்வாறு நனவிடைதோய்ந்த கொண்டிருப்பது மகனுக்கு அலுப்புத் தந்திருக்கலாம். ‘நாங்கள் வீட்டுக்குப் போவோமா…?’ என்று மெதுவாகக் கேட்டான். என் கனவுகளிருந்து என்னை விழித்தெழச் செய்யாத ஒரு பவ்வியம் அவன் குரலே தொனித்தது.

வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினோம். வீதியோரத்தில் உடைந்துபோய் நாதியற்றுக் கிடந்த சீமந்து வாங்கு தெரிந்தது. அதன் அருகே நெளிந்து வளைந்த இரும்புக்குழாய் ஒன்று மண்ணுக்குள் புதைந்தும் புதை யாமலும் தெரிந்தது. அந்தக் காலத்திலே அது பஸ்தரிப்பு நிலையத்தை அடையாளப்படுத்தியது. பஸ்ஸுக்காக காத்திருப்பவர்கள் சற்றே காலாறி அமர்வதற்காக அந்த சீமெந்து வாங்கு அங்கு போடப் பட்டிருந்தது. என்ன காரணமோ அந்த சீமெந்து வாங்கையும் பூமணி ரீச்சரையும் என்னால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. அசோகவனத்திலே ராமபிரானை நெஞ்செல்லாம் தியானித்து, அந்த மிதிலையின் ஜானகி தவமிருந்த காட்சியை என் ஐயா, கோவில் புராணத்துக்கு பயன் சொல்லும்போது உபகதையாகக் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த சீமெந்து வாங்கிலே ஏகாங்கியாக பூமணி ரீச்சர் எதற்காக தவமியற்றினார்?

சட்டென்று அந்த தவக்கோலமும் அதனால் ஏற்பட்ட சலசலப்புகளும் என் நெஞ்சிலே….,
பாலத்தின் கீழே ஓடும் நீரிலே கல்லை விட்டெறிந்தால் அலைகள் வட்டமாக மிதக்குமே, அதுபோல.அவை எங்கே செல்கின்றன…?

பூமணி ரீச்சர் பற்றிய நினைவுகள்…!

கைதடியிலே புதிதாக ஒரு ஆரம்பபாடசாலையைத் திறந்தார்கள். அந்த பாடசாலை ஒடுக்கப்பட்ட மக்களுடைய கல்வி முன்னேற்றத்துக்காகக் கட்டப்பட்டதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்தப் பாடசாலையில் உள்ளூர் ஆசிரியர்கள் யாரும் படிப்பிக்க விரும்பவில்லை. சைக்கிள் உழக்கி வெகுதூரம் போகத் தயாராக இருந்தவர்கள் உள்ளூர் பாடசாலையை புறக்கணித்த காரணமும் புரிந்தது. சாதி மான்கள் அந்த சாதனையைப் பெருமையாகக் கூறித்திரிந்ததை இப்பொழுது நினைக்க கூச்சமாக இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அந்தப் பாடசாலையிலே மொத்தம் இரண்டு வாத்திமாரே. தலைமையாசிரியர் பதவிக்காக யோசெப் மாஸ்டர் வந்து போனார். அவர் சைக்கிள் ஒரு நடமாடும் வீடுபோல. அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த சைக்கிள் அவருடன் சுமந்து திரிந்தது. யோசெப் மாஸ்டர் வரும் நேரமே பாடசாலை துவங்கும் நேரம் என்கிற ரீதியில் சகல வல்லமை பெற்றவராக அவர் அந்தப் பாடசாலையை நடத்தினார். அங்கு படிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர் சிலருடன் அறிமுகம் வைத்துக் கொண்டு, யோசெப் மாஸ்டர் இல்லாமல் அந்தப் பாட சாலையை நடத்தமுடியாது என்ற எண்ணத்தை அங்கு நிலை நாட்டிவிட்டார். அந்தப் பாடசாலையின் உதவி ஆசிரியராக கோப்பாயிருந்து பூமணி ரீச்சர் வந்து போனார். அரசாங்கம் கொடுக்கும் பணிஸ் விநியோகத்துடன் அந்தபாடலை முடிவடையும். எப்படியும் ஆடிப்பாடி யோசெப் மாஸ்டர் இரண்டு மணிக்குத்தான் பாடசாலையை மூடுவார். பூமணி ரீச்சர் ஆயத்தடி பஸ் தரிப்புக்கு வருவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னர்தான் மானிப்பாய் நோக்கி பஸ் சென்றிருக்கும். அந்த பஸ் கோப்பாய் பாலம் வழியாக மானிப்பாய் சென்று திரும்பவும் கோப்பாய் வழியாக ஆயத்தடி தாண்டி சாவகச்சேரி சென்று மீண்டும் திரும்ப, நாலரை மணியாகிவிடும். அதுவரை பூமணி ரீச்சர் அந்த சீமெந்து வாங்கில் தவம்கிடப்பார். அப்போது நாமும் பாடசாலை முடிந்து கோப்பாயிருந்து பாலத்தூடாக ஆயத்தடி வந்து சேர்வோம். பாலத்தில் வீசும் உப்புக் காத்துக்கெதிராக சைக்கிள் மிதித்து களைத்துவரும் எமக்கு சீமெந்து வாங்கில் தனித்திருக்கும் பூமணி ரீச்சரை கண்டால் உற்சாகம் பிறந்துவிடும்.

பூமணி ரீச்சர் வடிவு என்றுதான் சொல்ல வேணும். அதிகமான பூச்சுமினுக்குகள் நாடாதவர். அமைதியானவர். ‘நல்லாப் படிப்பிக்கிற ரீச்சர்’ என்று ஊரில் எல்லோரும் சொல்வார்கள். இருப்பினும் அவரது முகத்தில் எப்போதும் ஒருவகைச் சோகம் எட்டிப் பார்க்கும். பாடசாலையால் நாங்கள் திரும்பி வரும்போது பூமணி ரீச்சர் அந்த வாங்கிலே பஸ்ஸுக்கு காத்திருப்பது எமக்கு தூரத்திலேயே தெரிந்துவிடும். குனிந்த தலை நிமிராமல் புத்தகக் கட்டும் கையுமாக, தனித்து அவர் சீமெந்து வாங்கில் இருப்பதை பார்க்கும்போது ‘அவரை கிண்டல் செய்தால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றும்.

ஊர்ப் பெரிசுகள் மத்தியிலே அப்போது கசிந்த ஒரு கதை என் செவிகளிலே விழுந்தது. பூமணி ரீச்சர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு ஐயாவைப் பார்க்க வந்து போன பிறகுதான் எல்லாவற்றையும் கோர்வைப்படுத்தி விளங்கிக் கொண்டேன். யோசெப் மாஸ்டர் கண்டிப்பான தலைமை வாத்தியார் என்று ஊருக்கு காட்டிக் கொள்வார். தன்னுடைய மனைவி தீராத வருத்தக்காரி என்றெல்லாம் சொல்லி பூமணிரீச்சரின் அநுதாபத்தினைப் பெற்று தனக்கு சாதகமாக்கும் திட்டம் போட்டிருக்கிறார். பாடசாலை முடிவதற்கு முக்கால்மணி நேரத்துக்கு முன் போய், பஸ்ஸை பிடிக்கும் படியும், ரீச்சரின் வகுப்புக்களை தான் பார்த்துக் கொள்வதாகவும் சில நாட்கள் சலுகைகள் கொடுத்துப் பார்த்தார்.

‘உந்த ‘எளிய’ வீட்டுப் பொடியள் படிச்சென்ன உத்தியோகம் பார்க்கப் போகுதுகளோ…?’ எனக்கூறி வகுப்பு நேரங்களிலே அதிகம் கஷ்டப்பட வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தார். பூமணி ரீச்சரோ இவை ஒன்றுக்கும் அசைந்து கொடுக்கவில்லை. ‘இதுபடியாது’ என்பதை புரிந்து கொண்ட யோசெப் மாஸ்டர் பூமணி ரீச்சரை வதைக்க துவங்கினார். ஒன்றரை மணி பஸ்ஸை தவற விட்டு ஆயத்தடியில் அடுத்த பஸ்ஸுக்கு நாலரை மணி மட்டும் காத்திருக்கும் விதமாக பாடசாலை மணி அடிக்கத் துவங்கினார். அப்பொழுதும் பூமணி ரீச்சர் எந்தவித முணுமுணுப்புமின்றித் தன் கடமையை ஆற்றினார்.

பூமணி ரீச்சருக்கு பலாலி ஆசி ரிய பயிற்சி கல்லூ ரியில் கணித பாடத்திலே விசேட பயிற்சி பெறுவதற்கு அனுமதி கிடைத்திருந்தது. இது சம்மந்தமாக ஐயாவின் ஆலோசனை கேட்பதற்கு இரண்டாம் முறை வீட்டுக்கு வந்திருந்தார். ஐயாவுக்கு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஆலோசனை சொல்லும் தகமை இருந்தது என்று ஊர்மதித் ததுதான் இதற்கு காரணம். பூமணி ரீச்சர் கைதடிக்கு படிப்பிக்க வந்து போன காலங்களில் யார் வீட்டுப் படலையும் திறந்தது கிடையாது. இரண்டு முறை எமது வீட்டுக்கு வந்து போனதை பக்கத்து வீட்டு விதானையார் மாமி கண்டிருக்கிறார். அவவுக்கு எப்பொழுதும் கழுகுக் கண்கள். இருப்பினும் மாமியை உச்சிப் போட்டு விதானையார் மாமா ஊர் எல்லாம் மேய்ந்து திரிவார். இதனால் மாமி இந்த விசயங்களில் ஊர் ஆம்பிளையளை என்றுமே நம்பினது கிடையாது. மாமி சாதாரணமாக வீட்டால் வெளிக்கிடுவது குறைவு. பூமணி ரீச்சர் வந்து போன அன்று மாலை மாமி எங்கள் வீட்டுக்கு வந்தது இதற்காகத்தான். பலதும் பத்தும் ஊர்க் கதைகள் பேசியபின் ரீச்சர் பற்றிய கதையை துவங்கிய மாமி, ஆண் வர்க்கத்தையே ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தார். இறுதியில் ‘நீயும் கவனமாக இரு’ என அம்மாவையும் எச்சரித்து, தன் கதையை முடித்தார். அம்மாவுக்கு மாமியின் பெலவீனம் நன்கு தெரியும். பூமணி ரீச்சர் பற்றிய சகல விபரங்களையும் மாமிக்கு கூறும் போது நான் படிப்பது போன்று பாசாங்கு பண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.
‘நல்ல குணமான பெட்டை. அதின்ரை தலைவிதி இன்னும் கயாணம் கட்டாமல் இருக்குது. தகப்பன் முந்தி இவரோடை கோப்பாய் தமிழ் றெயினிங் கொச்ஸிலை ஒண்டாய் படிச்சவராம். அந்தாள் பாரிசவாதம் வந்து செத்துப் போச்சு. பெட்டைக்கு இப்ப முப்பத்தெட்டு வயதாகுது’ என அம்மா ‘உச்சு’க் கொட்டி நிறுத்தினார்.
‘பெட்டைக்கு சகோதரங்கள் ஒண்டுமில்லையே…?’ என மாமி விடுப்பு புடுங்கினார்.

‘தம்பிக்காறன் ஒருத்தன் இருக்கிறான் குடிகாரன். வேலை வெட்டி இல்லாமல் சொத்தை வித்து குடிச்சுக் கொண்டு திரியிறானாம். தமிழ் வாத்தியார் எண்ட படியாலை தானே கண்ட நிண்ட பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் தூக்கி அடிக்கிறாங்கள். அதுதான் பெட்டை கெட்டித்தனமாய்ப் படிச்சு ‘மற்ஸ்’றெயினிங் போக இடம் கிடைச்சிருக்கு. ஸ்பெசல் றெயினிங்குக்கு போய் வந்தால் பெரிய பள்ளிக் கூடங்களிலை படிப்பிக்கலாமெண்டு பார்க்குதாக்கும்’ என ரீச்சர் பற்றிய வர்த்தமானத்தை சொல்முடித்தார் அம்மா.

பூமணி ரீச்சர் பற்றிய சகல விபரங்களையும் அறிந்தபின் எனக்கும் அவர்மீது ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆனாலும் ஒரு நாள் பேய்த்தனமான உசாரிலே முப்பத் தெட்டு வயதாகியும் ரீச்சர் இன்னமும் கயாணம் கட்டாத சங்கதியை பெடியள் மட்டத்திலே அவிட்டு விட்டேன். ‘அப்படியோ சங்கதி’ என கவனமாக விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான் பாலன்.

பாலனுக்கு அவனுடன் படிக்கும் கோப்பாய் பெட்டை ஒன்றிலே கண். அதற்காக அவன் படாத பாடில்லை. உடுப்புகளை சலவை செய்து மினுக்குவதிலும் விதம் விதமாக தலையை இழுத்து ‘ஸ்டைல்’ செய்வதிலும் அதிக நேரம் செலவழிப்பான். பாலன் எவ்வளவு தான் திருகுதாளங்கள் செய்து முயன்ற போதிலும் பெட்டை பாலனை என்றுமே திரும்பி பார்த்ததில்லை. ஒருதலைக் காதல் உச்சிவரை ஏறியதால் அவன் வெறிகொண்டு அலைந்தான்.
ஒருநாள் கணிதவாத்தியார் கஷ்டமான கணக்கை கரும்பலகையில் எழுதினார். கணக்கில் கெட்டிக்காரனான பாலனால் மட்டுமே அந்தக் கணக்கை செய்யமுடிந்தது. அன்றைக்கு அந்தப் பெட்டை பாலனைப் பார்த்து அருட் பார்வை ஒன்றை வீசிவிட்டாள். இதனால், அன்று பின்னேரம் தலைகால்புரியாத சந்தோசத்தில் எங்களுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். ஆயத்தடியில் பூமணி ரீச்சர் வழக்கம் போல் வாங்கில் அமர்ந்திருந்தார். தன்மயமான நினைவுகளிருந்து விழிப்படைந்து சடுதியாக ‘தனிமையிலே இனிமை காணமுடியுமா…?’ என்ற சினிமா பாடலை பாலன் ராகம் இழுத்துப் பாடத்துவங்கினான். அவனுக்கு ஒரு கொம்பனி கொடுக்கும் நட்புணர்விலேயும் பாடுவதிலே நான் பாலனுக்கு சளைத்தவன் அல்ல என்கிற எண்ணதிலேயும் பாடலின் அடுத்தவரியை நான் பாடி முடித்தேன்.

அடுத்த நாளும் அதே பாடலை அதே சந்தர்ப்பத்திலே பாடியதை தற்செயல் என்று சொல்லமுடியுமா?
மூன்றாம் நாளும் பாலன் ‘தனிமையிலே இனிமை காணமுடியுமா’ எனப் பாடத்துவங்கினான். ஓர் உள்ளுணர்வால், நான் பூமணி ரீச்சரின் திசையிலே பார்த்தேன். அவர் முகத்தை பொத்தி குலுங்கி அழுவது தெரிந்தது.
நான் வீட்டுக்குள் நுழைந்து சைக்கிளை நிற்பாட்டியதும் ‘உன்ரைமகன் ஆயத்தடியிலே பாட்டுக் கச்சேரி நடத்திப் போட்டு வாறாராக்கும்’ என்று அம்மாவுக்கு குத்தல்கதை சொன்னவாறு ஐயா என்னைப் பிடித்துக் கொண்டார். ‘செல்போன்’ இல்லாத அந்தக் காலத்தில் ஆயத்தடியில் நடந்தது எப்படி ஐயாவுக்கு போனது என்பதை நான் அறியேன். ஐயாவின் கையில் இருந்த துவரந்தடி என் உடம்பில் துள்ளி விளையாடியது. என் தொடை வழியாக சிறுநீர் கழிந்த பின்பே ஐயா அடியை நிப்பாட்டினார். சிறிது காலத்தின் பின் அந்த வாங்கு வெறிச்சோடிக் கிடந்தது. பூமணி ரீச்சர் பலாலி றெயினிங் கொலிச்சிலே படித்துக்கொண்டிருக்கிறா எனக் கேள்விப்பட்டோம்.
இதற்கு பல வருடங்களின் பின், நான் ஜேர்மன் பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருக்கிற காலத்தில், யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியொன்றிலே பூமணி ரீச்சர் படிப்பிப்பதாகவும் அற்புதமான கணக்குரீச்சர் என மாணவர்கள் புகழ்வதாகவும் ஜேர்மனிக்கு அகதியாக வந்து சேர்ந்த என் பள்ளித் தோழன் துரையன் சொன்னான். இப்பொழுதும் அவர் குடும்ப பந்தங்களுள் ஈடுபடாது மாணவ உலகில் அறிவுச்சுடர் ஏற்றுபவராகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புகழ்ந்தான்.

சடுதியாக பூமணி ரீச்சரின் உருவம் என் உள்ளத்திலே விஸ்வரூபம் கொள்ளலாயிற்று. இப்பொழுது பூமணி ரீச்சர் இருக்கிறாரா…?

பழைய நினைவுகளிலே மிதந்து கொண்டிருந்த நான், யதார்த்தத்தை மறந்து விட்டேன் போலும். என் மனைவியும் என் உறவினர் ஒருவரும் எம்மைத் தேடி வண்டியில் ஆயத்தடிக்கு வந்தார்கள்.
‘ஆமிக்காறன்கள் உலாவிற இடத்தில, வளர்ந்த பெடியனையும் வைச்சுக்கொண்டு என்ன செய்யிறியள்? சும்மா வெளிப்பார்வைக்குத் தான் அமைதி. உள்ளுக்கை இன்னும் புகைஞ்சு கொண்டுதான் இருக்கு’ என்று உறவினர் கண்டித்தார். மனைவி பொங்கி வந்த அழுகையை மறைத்தாள். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. எதுவும் பேசாமல் வண்டியில் வீடுபோய் சேர்ந்தோம். மறுநாள் உறவினரை அழைத்து பூமணி ரீச்சர் பற்றி விசாரித்தேன். உறவினருக்கு என்வயது தான். விவசாயி. ஊரை விட்டுப் போகாமல் நாட்டுப் பற்றோடு வாழ்பவர். ஊரில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் முன்னின்று உதவி செய்பவர்.

‘அந்த பூமணி ரீச்சர் இப்ப கைதடியிலை தான் இருக்கிறா. அவ பென்ஷன் எடுத்து கனகாலம். ரத்வத்தை நடத்திய யாழ்ப்பாண படையெடுப்போடை கோப்பாயிலையுள்ள வீடுகளில் பெரும்பகுதி அழிஞ்சுபோச்சு. கைதடி பழக்கப்பட்ட ஊரெண்டு இங்கைதான் வந்தவ. வன்னிக்கு போகேலாமல் அல்லோலகல்லோலப்பட்டு சனம் கைதடிக்கு வர அனாதை குழந்தைகளுக்கு ஒரு ஆசிரமம் துவங்கினவ. ஊர்ச்சனம் எல்லாம் அவவுக்கு நல்ல சப்போட்டும் மரியாதையும். அனாதைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிற ஒப்பற்ற சேவை. உண்மையாய் நீங்கள் அதை ஒருக்கா போய் பார்க்க வேணும். பூமணி ரீச்சர் அந்த ஆசிரமத்தை கைலாயம் போலத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அவவிடம் படிச்ச ‘பெடியள்’ வெளிநாட்டிலை இருந்து நிறைய நன்கொடை அனுப்பி வைக்கினம். வாறகாசிலை ஒரு சதமும் அவம் போகாமல் பிள்ளையளுக்கு சிலவழிக்கிறா’ என தெட்டம் தெட்டமாக பூமணி ரீச்சர்பற்றிய சகல விபரங்களையும் உறவினர் சொல்முடித்தார். அவர் சூட்டிய புகழாரம் உண்மைதான் என்று ஊரே ஒப்புக்கொள்வதை அறிந்து மகிழ்ந்தேன்.

அன்று மாலை குடும்பத்துடன் பூமணி ரீச்சரின் ஆசிரமத்துக்கு சென்றேன். தன்னலமற்ற சேவையால் அந்த ஆசிரமம் மிகச் செழுமையாக இருந்தது.

பூமணி ரீச்சர், என்னை உடனடியாக அடையாளம் காணவில்லை. வாத்தியாரின் மகன் என அறிமுகம் செய்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவரது தலை நரைத்திருந்தது. முதுமை தலை காட்டியது. இருப்பினும் அந்தக் கண்களிலே அன்று பார்த்த அதே நேசம் தேங்கியிருந்தது.
‘தம்பி…, நீங்கள் முதலிலை ஜேர்மனியிலும் இப்ப அவுஸ்ரேலியாவிலும் வாழ்வதாகக் கேள்விப்பட்டேன்.’
நான் இலேசாக சிரித்தேன். என் மனைவி ஆசிரமத்துக்கு மகன் பெயரில் வருடாவருடம் அவனது பிறந்த நாளையொட்டி நன்கொடை அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்துடன் வந்திருந்தாள். ரீச்சரிடம் விபரம் கூறி பணம் கொண்ட கவரை கையில் கொடுத்தேன்.

‘மகன்ரை வயதில உம்மை அப்ப கண்டது. உம்மைப் போலத்தான் துருதுருவென்று இருக்கிறார்’ என்று கூறிச் சிரித்தார். மனித நேயம் செழித்து வளரும் அந்த ஆசிரமத்திலே கொஞ்சநேரம் பூமணி ரீச்சருடன் இருந்தது நெஞ்சுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. புறப்படத் தயாரானோம். ஆசிரமத்தின் வாசல்வரையிலும் ரீச்சர் நடந்துவந்தார். விடைபெறும் பொழுது என் மனைவியின் கையிலே மிகப் பவ்வியமாக நாம் கொடுத்த நன்கொடைக்கான பற்றுச்சீட்டினைக் கொடுத்தார்.

பூமணி ரீச்சர் நடத்தும் அந்த ஆசிரமத்திலே மனித நேயம் மட்டுமல்ல, நாணயமும் தன் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


– ஆசி கந்தராஜா-

http://www.aasi-kantharajah.com/சிறுகதைகள்/தவக்கோலங்கள்-விடலைப்-பர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.