Jump to content

கவிஞர் கலாப்ரியா பதில்கள்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கலாப்ரியா பதில்கள்…

Kalapriyaதமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

– தூய்ஷன், மலேசியா.

முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை  மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’ என்று எழுதுகிறார். ஹைகு அல்லது ஹொக்கு முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப்பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்துவைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வடிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும், முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும், நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச்சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம்பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது.

தாகூர் ஹைகுவின் பாதிப்பினால் Fire flies –மின் மினிகள்-  என்று ஒரு ஹைகு தொகுப்பு எழுதினார். அதற்கு வங்காளத்தில் பலத்த விமர்சனம் எழுந்திருக்கிறது. அது அவ்வளவு வெற்றிகரமாகவும் அமையவில்லை. அப்புறமாகவும் அதன் பாதிப்பு விலகவில்லையோ என்னவோ மண்ணுக்கேற்ப மாற்றி Stray Birds என்று ஒன்று எழுதுகிறார். அதற்கு வரவேற்பு இருந்தது. ’மின் மினிகள்’ தொகுப்பிலிருந்து உதாரணமாக,

“Trees are the earth’s endless efforts to speak to the listening heaven”

தன்னையே கவனிக்கும் மேலுலகத்தோடு

இடையறாது பேசும் பூமியின் முயற்சியே

மரங்கள்

***

My heart today smiles at its past night of tears like a wet tree glistering in the sun after the rain is over

என் இதயம் புன்னைகைக்கிறது நேற்றைய இரவின் கண்ணீரை நினைத்து, மழை ஓய்ந்த பின் சூரிய ஒளி பட்டு மின்னும் நனைந்த மரம் போல.

நன்றாகக் கவனித்தால்  (க.நா.சு மொழி பெயர்த்த,) கொனிஷ் ரைசானின் ஜப்பானிய ஹைகுவான

நாற்று நடும் பெண்கள் பாடும் பாட்டில் மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை 
 என்பதற்கு அருகே கூட நெருங்கவில்லை தாகூரின் மின் மினிகள். தமிழிலும் இதுதான் நிலைமை.

அதனால்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன.

”படித்துக் களைத்துக்

கழற்றி வைத்த கண்ணாடியில்

இரண்டு மின் விசிறிகள்

ஓய்வில்லாமல் சுற்றிக் கொண்டு”

இது என்னுடைய கவிதை. சுஜாதா இதை ஹைகுவை நெருங்கி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆம் நெருங்குகிறோம், ஆனால் யாரும் தொடவில்லை.

***

ஒரு புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும்?

– தூய்ஷன், மலேசியா

நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும்போது நம்முடைய உலகமே மாறிப்போகிறது என்று எங்கோ படித்த ஞாபகம். கவிதை என்றில்லை எந்த (நல்ல) எழுத்தும் நம் உலகத்தை மாற்றி விடக்கூடும். மாறட்டுமே, புத்தகம் வாசிப்போம்.

இன்னொன்று, தனியே இருக்கும்போதுதான் மூளை பேசிக்கொண்டே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பேசிப் பேசி மூளை வறண்டு விடும் அதற்கு நீரூற்றுவது வாசிப்புத்தான்.

***

நீங்கள் திட்டமிட்டு உங்கள் கவிதைகளின் இறுதியில் திடுக்கீடுகளைப் புகுத்துகிறீர்களா ? 

– அன்பழகன் செந்தில்வேல், அம்பாசமுத்திரம்

இல்லை. ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்பதே உண்மை. அதிர்ச்சி, அபூர்வ நிகழ்வுகள், திடீர்த் துயர், மகிழ்ச்சி, சமூக வெடிப்புகள், அரசியல்ச் சுழற்சி அல்லது மனதை வருடும் இதமான நிகழ்வுகள் என பற்பல உணர்வுகளின் பாதிப்பினால் ஒரு கவிதைப் பொறி உண்டாகும். நிகழ்வுகள் அல்லது உணர்வுகளின் தீவிரத்தைப் பொறுத்து கவிதை உருப்பெறும். அனுபவங்களின் கொந்தளிப்பால் உருவாகும் ஒரு மொழி கவிதையின் மொழி. நீங்கள் சொல்வது போல எழுதிப் பழகிய கைக்கென்று சில உத்திகள் தாமே வாய்த்து விடுவதும் உண்டு. அப்படி உத்திகள் சிலநேரங்களில் கவிதைகளைத் திடுக்கீடாக முடிக்கவைக்கும். அது அந்த அனுபவத்தை அதே தீவிரத்துடன் வாசகனுக்கு கடத்தப் பயன்படும்.

***

புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும் ?

– அன்பழகன் செந்தில்வேல், அம்பாசமுத்திரம்

வாசியுங்கள். பெரும்பாலான வாழ்தல் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது. புதிய சமூக, அரசியல் சிதைவுகள் நிர்ணயிக்கும் புதிய வாழ்க்கையை புதியதாகச் சொல்ல, எல்லா நிகழ்வுகளையும் கவனிக்கவேண்டும். தொடர்ந்து வாசிக்கவேண்டும். எழுதியதை, கொஞ்சம் அவகாசம் விட்டு மறுவாசிப்புச் செய்யவேண்டும்.

***

கவித்துவம் உங்களுக்கு எப்படி கைவரப்பெற்றது ?

– அன்பழகன் செந்தில்வேல், அம்பாசமுத்திரம்.

வந்து விட்டதாக நம்புகிறீர்களா?

காதல் என்று சொல்லலாம் ஆனால் அது (ஒரு வகை) ஒருதலை. வாசிப்பு என்று சொல்லலாம். அதிலும்kalapriya1 ஆய்ந்து தோய்ந்ததில்லை.  வாழ்க்கை என்று சொல்லலாம் அப்படியொன்றும் பிறப்பில்  வசதிக் குறைவும் இல்லை. ஒரு வேளை நான் வளர வளர இவையெல்லாம் தேய்ந்து தேய்ந்து, மனதில் ஒரு சோகபாவத்தை உண்டாக்கிற்றோ என்னவோ. ”Poetry is when an emotion has found its thought and thought has found its words” என்று ராபர்ட் ஃப்ராஸ்ட் கூறுவது போல, ஒருவகையான சொந்த சோக மனோபாவம். பிறரின் சோகங்களை உணர்கிறவனாக, சுற்றி நிகழும் உலகியலைக் கவனிக்கிறவனாக மாற்றிற்றோ என்னவோ… (நன்றாகக் கவனித்தால் எல்லாரின் கவிதைகளிலும் ஒரு சோகபாவம் அடிநாதமாக இருப்பதைக் காண முடியும். அல்லது நான் காண்கிறேன்.) அந்த கவனிக்கும் குணம் வெளிப்பாட்டு மனநிலையை உருவாக்கிற்றோ என்னவோ. இதைத்தான் கவித்துவம் என்கிறோமோ என்னவோ. எது எப்படி இருந்தாலும், எனது சிறந்த கவிதை இன்னும் எழுதப்படவேயில்லை என்கிற ஒரு ரஷ்யக் கவிஞரின் வாக்கினையே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும், பாப்லோ நெருதா சொல்வது போல, ”சொந்தச் சோகங்களால் தன்னுள் ஆழ்ந்து போவது எளிதில் நேரக்கூடிய விபத்து அதை எதிர்த்துப் போராட வேண்டும்”. தனக்கு கவித்துவம் வாய்த்திருப்பதாக நம்பும் அல்லது நினைக்கும் யாரும் தொடர்ந்து கவிஞனாக இயங்க முடியாது.

***

இன்று கவிதைகள் எழுதி வரும் இளைய தலைமுறையில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் ?

– அன்பழகன் செந்தில்வேல், அம்பாசமுத்திரம்

பட்டியலிடுவது என்பது நம்மைப் பட்டியில் அடைத்துக்கொள்வது போல. நிறையக் கவிஞர்களின் நிறையக் கவிதைகள் என்னைக் கவர்கின்றன. மிகப்புதிதாக ஃப்ராங்ளின் குமார், கனிமொழி.ஜி, சபரிநாதன், நரன், மனோ மோகன், கதிர்பாரதி, போகன் சங்கர், நேசமித்ரன், இளங்கோ கிருஷ்ணன், ஜான் சுந்தர், றியாஸ் குரானா, பாலைவன லாந்தர் (நித்ரா), தி.பரமேசுவரி, போன்றவர்கள் சில உதாரணங்கள்.

***

தமிழில் கவிதை என்பதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் ?

– நேதாஜிதாசன், பெரம்பலூர்.

கவிதை என்பது மிகப்பெரிய மாய ஊசல், அது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டே இருக்கும் மாயச்சங்கிலி. அதில் அடுத்த கட்டம் என்பது முந்தினதின் நீட்சியாக இருக்கும் என்று மட்டுமே சொல்லமுடியும். உதாரணமாக சங்கக் கவிதையின் சாயலை பல நவீன கவிதைகளில் காணமுடிவது போல. ஒரு வகைமை தேயும் அடுத்த வகைமை உருவாகும். அது மொழிகள் தாண்டிய மொத்தக் கவி உலகையும் கணக்கெடுத்துக் கொண்டே புதிய உருக்கொள்ளும். புதிய உரு நிலை கொள்ளும்போது கொஞ்ச காலத்திற்கு ஒரு கட்டம் தீர்மானமாகும், மறுபடி மாய ஊசலின் ஆட்டம் தொடரும்.

***

படிமக்கவிதை இயக்கம் வளர்ந்ததை போல எதிர்க்கவிதை இயக்கம் ஏன் வளரவில்லை ?

– நேதாஜிதாசன், பெரம்பலூர்.

தமிழில் நவீன கவிதை இயக்கம் என்பது 50 ஆண்டுகளைக் கண்ட ஒன்று. அதன் முக்கியக்கூறாக படிமக் கவிதைகள் இருந்தன, இருக்கின்றன. படிமக் கவிதைகளிலும், அதன் முக்கிய பங்களிப்பாளாரான பிரமிளிலிருந்து விலகி வந்த கவிதைகளை 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் காண முடியும். அதற்குப் பின்னான படிமக்கவிதையை சங்கக்கவிதையின் நீட்சியாகவே காண்கலாம். இந்தக் காலகட்டத்தில் ஒலித்த புதுக்குரல்களில் முக்கியமானது ஆத்மாநாமுடையது. அவர் பல சோதனைகளை வெற்றிகரமாகச் செய்தார். அதில் எதிர்கவிதையும் அடக்கம். எதிர் கவிதை அல்லது (சில விமர்சகர்கள் கூறுவது போல) plain poetry-க்கான நெருக்கடி ஒரு போதும் இந்திய / தமிழ்ச் சூழலில் இல்லை. நான் எழுதியிருந்த

படிம உருவக

குறியீட்டு இடையீடில்லாத

நிர்வாணக் கவித்துவம் வேண்டி நீ

எப்போது தியானிக்கப் போகிறாய்..

என்ற வரிகள்போல இவற்றிலிருந்து விடுபடும், புதிய கலை வடிவத் தேட்டத்திற்கான அரசியல், சமூக நெருக்கடி நமக்கு ஏற்படவில்லை. என்றாலும் சமயவேல், மனுஷ்ய புத்திரன், ஷங்கர் ராமசுப்ரமணியன் போன்றவர்களின் பல கவிதைகள், என்.விக்ரமாதித்யன் போன்றவரின் சில கவிதைகள் plain poetry யாக உள்ளன. ***

கவிஞன் எப்போது தன்னைக் கண்டடைகிறான்?

– தயாஜி, மலேசியா

ஒருவனின் கவிதைகள் கொண்டாடப்படும்போது ஒருவனுக்கு நானும் கவிஞன்தானோ என்ற உணர்வு வரலாம். கண்டடைவது என்பது பெரிய வார்த்தை. `மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்- ” என்றுதான் கம்பன் பாடுகிறான் உன்னை அறிந்தோ கவிதை பாடினேன் என்று கூறவில்லை. நல்ல சாதனையாளன், மென்மேலும் சாதனைகளைச் செய்வதில் தன் வாழ்வைக் கண்டடையலாம். தன்னைக் கண்டடைய   முடியாது.

***

ஆயிரம் பக்க நாவலை எழுதியவர்களைக் காட்டிலும் சிலவரிக் கவிதைகள் எழுதியவர்கள் பரவலாக அறியப்படுவது படைப்பின் வெற்றியா அல்லது வாசகர்களின் சோம்பலா?

– தயாஜி ,மலேசியா

திருக்குறள் ஒவ்வொரு குறளுக்காகவும் அறியப்படுகிறது. ஒட்டு மொத்தமாகவும் அறியப்படுகிறது. ராமாயணம் 10000 தனித்தனிச் செய்யுள்களுக்காகவும் அறியப்படுகிறது. காவியமாகவும் அறியப்படுகிறது. தாகூர் சொல்லுவார்; “தாமரையிலையின் மீதிருக்கும் நீர் முத்து, அது மிதக்கும் பிரம்மாண்டமான ஏரியை விட அழகாக இருக்கிறது….” ஒவ்வொன்றும் ஒவ்வொரு  வகையில் வசீகரம். வசீகரிக்கிறவர்கள் பரவலாக அறியப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வாசகனைச் சோம்பல் கொள்ளாமல் வாசிக்க வைப்பதே நல்ல எழுத்து. அது நாவலாகவும் இருக்கலாம் குட்டிக் கவிதையாகவும் இருக்கலாம்.

***

இதுதான் கவிதை என்றும் இது கவிதையே அல்ல என்றும் கவிதை குறித்து விமர்சிக்கிறார்கள். உண்மையில் எது கவிதை? இதற்கென ஏதும் வரையறை உண்டா? அப்படி வரையறை ஏதும் இல்லையென்றால் எழுதப்படும் எல்லாமும் கவிதைதானா?

– நித்தியா வீரராகு, மலேசியா.

எழுதப்படுகிற எல்லாமுமே கவிதை இல்லை. மீண்டும் தாகூரைத்தான் துணைக்கழைக்க வேண்டும். சிறந்தவகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை சிறந்தவைகள் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன என்பார் அவர். நல்ல கவிதைகளும் தன் வாசகனை அப்படித்தான் தேர்ந்து கொள்ளும். கவிதையை வரையறுக்கவே முடியாது. நல்ல கவிதை காலம் கடந்தும் நிற்கும். You will find poetry nowhere  unless you bring some of it with you என்று ஜோசப் ஜுபேயா (Joseph Joubert.) சொல்வது போல ”கவிதையைக் கவிதையிடம் நாம்தான் கொண்டுசேர்க்க வேண்டும்.” அதாவது வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கவிஞனின் பார்வையோடு அணுக முடிகிற எல்லாமே கவிதைதான்.

***

உங்களுக்கு ஏன் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும்?

-ஆர் அபிலாஷ்

ஒரு 58 வருடக் கதையைக் கேட்கிறீர்கள். ஆரம்பத்தில் எம்.ஜிஆரை அவருடைய பெண்மைகலந்த அழகுக்காக, இரட்டை நாடிக்காக, சுருண்ட முடிக்காக, ரோஸ்நிறத்துக்காக, சண்டைக்காகப் பிடிக்கும். பின்னால் அவருடைய ஈகைக்காக விளம்பர உத்திகளுக்காக, அன்புக்காக, கோபத்துக்காக, பிரியத்திற்காக பிடிவாதத்திற்காக, பிறருக்காக எதையும் செய்வதற்காக, தனக்காக எல்லாம் செய்வதற்காக, ராஜ தந்திரத்திற்காக,  வழுக்கல்களுக்காக,  தைரியத்திற்காக, பயத்திற்காக, சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காதற்காகக் கூட எனக்கு ஏராளமாகப் பிடிக்கும்.

மேலும், ரசிகர் வட்டம் என்பது ஒரு பாதுகாப்பு வளையம் போல, சில நேரங்களில் சில விஷயங்களில் பத்திரத் தன்மையை, a sort of social security, வழங்கும். இதை நானே உணர்ந்திருக்கிறேன். ரசிகர்கள் தங்களது ஐகான்களைத் தெய்வமாக்கி விடுகிறார்கள் எனலாம். Adolescent வயதில் ஏற்பட்ட பிம்பங்களை ஏன் சற்றே அறிவு கூடிய பின் மறக்கவேண்டும்? அதனாலேயே அவர் தொடர்ந்து என் நினைவுகளில் இருக்கிறார்.

 

http://vallinam.com.my/version2/?p=2968

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.