Jump to content

ஆக்காட்டி - கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்காட்டி

கோமகன்

 

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது . 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு எலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப் பரக்க பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்கு பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் “ஹலோ ” என்று அனுங்கியவாறே ரிசீவரை காதுக்கு அருகில் வைத்தேன். ” டேய் மச்சான் கதிர் ! நான் குமணன். கொட்டிவாறிலை (Côte d’Ivoire) இருந்து கதைக்கிறன். என்னை உங்கை அனுப்பி விடுறாங்கள். நீதான் வந்து என்னை கூட்டி கொண்டு போகவேணும் நான் உனக்கு பேந்து எடுக்கிறான்” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசியின் எதிர்முனை அடங்கியது. இவனுக்கு யார் எனது இலக்கத்தை கொடுத்திருப்பார்கள் என்ற யோசனையே எனது நித்திரைக்கு உலை வைத்தது. படுக்கையால் எழுந்து கலைந்திருந்த போர்வையை உதறி விரித்துவிட்டு குசினிக்குள் நுழைந்து வோட்டர் குக்கரில் (Water- Cooker) ரில் தண்ணியை நிரப்பி கொதிக்க விட்டேன் .அந்த அதிகாலை குளிரில் ஆவி பறக்கும் தேநீர் எனது நரம்புகளை முறுக்கேற்றியது.

எனக்கு லியோனில் இருக்கும் அமுதன்தான் முதலில் நினைவுக்கு வந்தான் . அவன்தான் இந்த ‘நோக்கியா’ வேலைகள் பார்ப்பவன் . அந்த எண்ணமே எனக்கு அவன்பால் இனம்புரியாத எரிச்சலை கொண்டுவந்தது. அவன் தூரத்தில் இருந்தாலும் எல்லோருடனும் தொடர்பில் இருப்பவன். அவன் ஒருவன்தான் எங்களுடன் படித்த பழைய கூட்டுகளை எல்லாம் மறக்காது தன்னுடன் சேர்த்து வைத்திருப்பவன். அவனுடன் கதைத்தால்த்தான் எனக்கு எல்லோரது விபரங்களும் தெரியவரும். அமுதன் சிலவேளைகளில் எனக்கு விருப்பமில்லாதவர்களுக்கும் எனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிடும் குணம் உள்ளவன். அதனாலேயே அவனுக்கு நாங்கள் எல்லோரும் ‘நோக்கியா’ என்று பட்டப்பெயர் வைத்தோம்.

நினைவுகள் என்றும் அழிவதில்லை. நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட சூழல் எம் வெளி மனதை மாற்றும். இதையே காலம் வலியை மாற்றும் என்பார்கள். ஆனால் இது ஒருவகையான ஏமாற்றுத்தான். ஆனால் எல்லோரதும் நினைவுகளும் எங்கோ ஒரு மூலையில் அடிமனதில் உறைநிலையில் இருந்து கொண்டே இருக்கும். நானும் எதையெல்லாம் மெதுமெதுவாக மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தேனோ அது குமணன் வடிவில் என் மனத்தைக் கீறத்தொடங்கின. நான் தலையை சிலுப்பி அவனின் நினைப்புகளை அழிக்க முயன்றாலும் இன்று அவனது தொலைபேசி அழைப்பு மீண்டும் அதைக் கிளறி எடுத்துவிட்டது . எனக்கு என்று மட்டும் இல்லை எனது கூட்டுகள் எல்லாருமே குமணனின் அழியாத நினைவுகளைக் கொண்டிருந்தனர்.

                                                                                                 * * *

83-களில் நான் அமுதன் குணாளன், பாமினி, நிலானி, மதுளா, ரேணுகா உயர்தரம் படித்து கொண்டிருந்த காலமது. எமது மண்ணை பச்சை சீருடைகள் பாசியாய் படர்ந்து மூடிய நாட்களும் அந்தநேரத்தில்தான். எங்களுக்கு எங்கள் கல்லூரி வாழ்க்கை சந்தோசத்தை தரவில்லை. எங்கள் கூட்டுகள் நாளுக்கு ஒன்றாக குறைந்து கொண்டு வந்தார்கள். நாட்டு விடுதலைக்காக வெளிக்கிட்ட எல்லோர் தரப்பிலும் கொள்கைவிளக்க கூட்டங்கள் கல்லூரியில் அமந்தறையாக நடந்து கொண்டிருந்தன. வேறு இடங்களில் எங்களையொத்த பதின்ம வயது பெடியளும் பெட்டையளும் அதன் வசந்த காலத்தில் மகிழ்வுடன் இருக்க எங்களுக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே இருந்தது. அந்தவயதிலேயே எங்களது உயிர்களின் இருப்புகள் எங்களிடம் இல்லாது ஓர் உலோகக்குண்டின் முனையில் இருந்தது. நாங்கள் சிலநேரம் மறந்தாலும் அது எப்பொழுதும் எங்கள் பின்மண்டையில் விடாது துரத்திக் கொண்டு வந்தது. ஒருநாள் காலை நாங்கள் கல்லூரிக்கு சென்ற பொழுது குமணன் காணாமல் போயிருந்தான். அவன் காணமல் போனது எங்களுக்கு மர்மாகவே இருந்தது. அவன் இயக்கத்துக்குத்தான் போனானா இல்லை ஆமி எங்காவது சுற்றிவளைப்பில் பிடித்துவிட்டதா என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. நாங்கள் எங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் அவனையிட்டு விசாரித்தோம். யாருமே பிடி கொடுத்து கதைக்கவில்லை அது எங்களுக்கு குழப்பமாகவே இருந்தது. காலங்கள் ஓட, ஒவ்வொரு இயக்கமும் தங்களது அரசியல் தேவைகளுக்கு எங்களை பிரச்சாரம் செய்ய அழைத்தது. இதில் பாமினி, மதுளா, நிலானி மிகத்தீவிரமாக இருந்தார்கள். அவர்கள் கவிதைகள் எழுதினார்கள். கட்டுரைகள் எழுதினார்கள். அவர்கள் எல்லோரையும் கேள்வி கேட்டார்கள். கேள்விக்குட்பட்டவர்களுக்கு பாமினி, மதுளா, நிலானி ஒரு பெரிய குடைச்சலாக இருந்தார்கள். நாளுக்கு நாள் அவர்களது கவிதைகள் கட்டுரைகள் சனங்கள் மத்தியில் தீவிர சிந்தனைகளை கொண்டுவந்தன. அதிலும் முக்கியமாக மாணவர்கள் எல்லோரும் அவர்களது கவிதைகளை கொண்டாடினார்கள். அவர்கள் பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தமது பணியைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.

மீண்டும் காட்சிகள் மாறின எங்களது ஆமியால் சனங்கள் தவியாய் தவிக்க எமது வான்வெளியில் அத்துமீறி நுழைந்து சாப்பாட்டு பொட்டலங்களை போட்டு சமாதானம் பேசுவோம் என்று இன்னுமோர் பச்சை எங்களுடன் ஓட்டிக்கொடிருந்த காலமது. ஒருநாள் இருளும் வெளிச்சமும் கட்டிப்பிரண்டு சண்டை போட்ட வேளையொன்றில் ஓர் அசைன்மெண்டை முடித்துக்கொண்டு நாங்கள் பருத்தித்துறை வீதியால் வந்து கொண்டிருந்தோம். பருத்திதுறை வீதியின் இரண்டு பக்கமும் சுற்றுச்சூழல் ஒருவித வெறுமையாக இருந்தது. இப்பொழுது முன்னர் போல பருத்தித்துறை வீதி தனது கலகலப்பை மறந்து வருடங்கள் ஆகிவிட்டன. தூரத்தில் இருபாலை சந்தியில் பச்சைகள் பரவியிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. தூரத்தே எனக்குப் பின்னால் நிலானியும் பாமினியும் மதுளாவும் லுமாலாவில் வந்து கொண்டிருந்தனர். எனது கை என்னையறியாது அடையாள அட்டையை தடவியது. பக்கத்தில் வந்த அமுதன் “டேய்…….. முகத்தை மாத்து. விட்டால் நீயே போட்டு குடுப்பாய் போலை கிடக்கு” என்றான். எனக்கு ஏனோ ஆமியின் இறுகிய முகத்தைக் கண்டாலே பயம் என்ற பாம்பு என்னுள் ஓங்கி கொத்தும் .இது அவர்கள் முன்னமே எங்களைப்போன்றோருக்கு தந்திருந்த சூத்திரம் என்றே  எண்ணுகின்றேன். எனது சிந்தனைக் குழப்பங்களிடையே எமது சைக்கிள்கள் இருபாலைச்சந்தி முகாம் வாசலை நெருங்கி கொண்டு இருந்தன. நானும் அமுதனும் ஐம்பது மீற்றர் தொலைவில் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தோம். கூடவே பாமினி, நிலானி, மதுளா எங்களுடன் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். எங்களுக்கு முன்னே சனம் நீண்டு இருந்தது. எல்லோரின் முகத்திலும் சவக்களையே மிஞ்சி இருந்தது. அன்று பார்த்து பச்சைகள் எல்லோரும் வெறியுடன் இருந்தார்கள். யாரோ எங்கோ பக்கத்தில் சக்கை அடைந்து இருக்கவேண்டும், அந்த வெப்பிராயம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஓர் ராணுவவண்டி ரோட்டைத் தேய்த்தவாறு உரும்பிராய் பக்கமாக இருந்து வந்து நின்றது. அதிலிருந்து கைகளில் விலங்கு  மாட்டிய ஒருவனை நெம்பித்தள்ளியவாறே பச்சைகள் இறக்கினார்கள். இப்பொழுது அமுதனுக்கு என்ன நடக்கப்போகின்றது என்று ஓர் படத்தை அவனது  மண்டை உள்ளுக்குள் வரைந்து தள்ளியது .பக்கத்தில் நிண்ட நான் ” டேய் எண்டைக்கும் இல்லாமல் ஆக்காட்டியை கொண்டு வந்து வைச்சிருக்கிறாங்கள் . இண்டைக்கு ஆர் எவை மாட்டியோ தெரியேலையடாப்பா” என்ற என்மீது  , “பொத்திக்கொண்டு வா” என்று எரிந்து விழுந்தான் அமுதன் .

அந்த மனிதன் சாதாரண உயரத்தில் இருந்தான். ஆமி அடித்த அடியில் கால்கள் சோர்ந்து விழுந்தன. அவன் நிற்கச்சிரமப்படுவது தெரிந்தது. சிப்பாய் ஒருவன் அவனைக் கைத்தங்கலாகப் பிடித்திருந்தான். அந்தமனிதனது முகம் சாக்கு ஒன்றினால் மூடிக்கடப்பட்டு இருந்தது. கண்கள் இருந்த இடத்தில் இரண்டு ஓட்டைகள் அளவாக வெட்டப்பட்டு இருந்தன. அப்பொழுது நீண்டிருந்த நிரை நகரத்தொடங்கியது. அப்பொழுதுதான் எல்லோரும் இல்லாத கடவுள்களை எல்லாம் மனதுக்குள் கூப்பிட்டவாறே நகர்ந்தனர். அந்த மனிதனைக் கைத்தாங்கலாகப் பிடித்திருந்தவன் மறுகையால் ஓர் பிஸ்டலை அவனது பின்தலையில் வைத்திருந்தான். சனங்கள் அந்த மனிதன் முன்னால் நிறுத்தப்பட்டபொழுது அவனது தலை பலவேளை இடம்வலமாகவும் , சிலவேளை மேலிருந்து கீழாகவும் அசைந்தது. மேலிருந்து கீழாக அசைக்கப்படவர்கள்மீது சரமாரியாக அடிகள் விழுந்து தரையில் இழுத்துக்கொண்டுபோய் தயாராக நின்ற ஆமிவண்டியில் எறிந்தார்கள். அவர்களது அலறல் என்னை உறையப்பண்ணியது. எங்களுக்குப் பின்னால் பாமினியும் , நிலானியும்  மதுளாவும் ஒட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். அந்த ஆக்காட்டியின் கண்ணசைவிலேயே எங்களது உயிர்கள் ஒட்டிக்கொண்டு இருந்தன. எனக்கு முன்னால் நின்றிருந்த அமுதனின் முறை இப்பொழுது வந்தது. ஆக்காட்டி அமுதனைக் கூர்ந்து பார்த்தான் அவனது தலை மேலே எழுந்து திடீரென இடம்வலமாக ஆடியது. அமுதன் தனது அடையாள அட்டையைக்காட்டி விட்டு நகர்ந்தான். இப்பொழுது எனது முறை வந்தது. எனது மனதில் அம்மா அப்பாவின் நினைவுகள் ஓடிமறைந்தன. எனது இறுதிக்கணங்கள் ஓர் தலையாட்டல் வடிவில் கண்ணாம்மூஞ்சி விளையாடின . நான் அவனுக்கு நேராக நின்ற பொழுது நான் ஓர் கணப்பொழுதில் என்மனதைத் திடப்படுத்திக்கொண்டு அந்தக்கண்களை நேரிடையாகவே பார்த்தேன். அந்தக்கண்கள் சிவந்து கொடூரமாக இருந்தன. சிலவேளை அந்தக் கண்களுக்கு நித்திரை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கண்கள் எனக்கு மிகவும் பழகிய கண்கள். அதன் கீழ் ஓர் சிறிய கறுப்புக்காய் ஒன்று இருந்தது . எனது மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியை நான் எனது கண்களுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. அவனது தலை இடம்வலமாக அசைந்தது. ஆனால் என் பின்னால் நின்றிருந்த பாமினிக்கும், நிலானிக்கும் மதுளாவுக்கும் அந்தத் தலை மேலும் கீழுமாகவே ஆடியது. பச்சைகள் மூவரையும் இழுத்துக்கொண்டு வண்டியில் ஏற்றிய பொழுது அவர்களுக்காக  நான் குளறினேன். எனது குளறல் சத்தம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அதன் பின்னர் பாமினியும் நிலானியும் மதுளாவும் நிரந்தரமாகவே எங்களை சந்திக்கவில்லை. அவர்களை எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர்கள் பேரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆமி சத்தமே காட்டவில்லை. ஒருநாள் அமுதன், “மச்சான் அண்டைக்கு எங்களுக்கு தலை ஆட்டின பார்ட்டி எங்கடை குமணன் போலை கிடக்கடாப்பா. நீ என்ன நினைக்கிறாய் ?” என்று நான் உறுதிப்படுத்திய அந்த கண்களைப்பற்றி என்னிடம் சந்தேகமாக கேட்டான். நான் இருந்த மனநிலையில் அவனுக்கு என்னால் எதுவுமே சொல்லத்தோன்றவில்லை. எங்களை தப்ப விட்ட அந்தக்கண்கள் எப்படி பாமினியையும் நிலானியையும் மதுளாவையும் காட்டிக்கொடுத்தன? அவர்களின் பிரிவு என்னை வாட்டியது. பல இடங்களில் அந்த ஆக்காட்டியால் மாணவர்கள் கைது செய்யப்படதாக கதைகள் உலாவிக்கொண்டிருந்தன.

                                                                                            * * *

உயிர்த்திருத்தலின் இருப்பானது சிறிது சிறிதாக குறுகிய காலத்தில் என்னையும் அமுதனையும் பிரான்ஸ் என்ற பனிபடர்தேசம் தத்தெடுத்துக்கொண்டது. இது காலப்பிழையா இல்லை எமது சுயநலமா என்ற கேள்வி இந்தப் பனிபடர் தேசத்தில் என்றுமே என்னை அரித்துக்கொண்டிருந்தது. வேலைகள் நிமித்தம் அமுதன் லியோனுக்கும் நான் பாரிஸிலும் இருந்து கொண்டோம். அவ்வப்பொழுது இருவரும் பழைய கதைகளைக் கதைப்பது என்ற அளவிலேயே எமது தொடர்புகள் இருந்தன. ஆனால் இன்று அமுதனின் வேலையால் ஓர் புதிய வினை ஒன்று என்னை நெருங்கி வருவதாகவே எண்ணிக்கொண்டேன். எனக்கு அதிகரித்த வேலைகள் குமணனின் நினைவை சிறிது எட்டத்திலேயே வைத்துக்கொண்டன. காலம் நாட்களையும் கிழமைகளையும் விழுங்கி குளிர்காலத்தின் நடுப்பகுதி என்று அன்று எனக்குக் காட்டியது. மீண்டும் குமணனது தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அந்த செய்தியானது தான் கொட்டிவாறில் (Côte d’Ivoire) இருந்து அன்று காலை வெளிக்கிடுவதாகவும் பின்னேரமே பாரிஸ் சார்ல்ஸ் து கோல் விமானநிலையத்தில்  இறங்குவதாகவும் என்று இருந்தது.

பாரிஸ் சார்ல்ஸ் து கோல் விமானநிலையம் பல்லின மக்களின் பரபரப்பில் பரந்துவிரிந்திருந்தது. கண்ணாடிகளின் ஊடே இயந்திரப்பறவைகள் இம்மிபிசகாது நிரைகட்டி நின்றன. கொட்டிவாறில் (Côte d’Ivoire) இருந்து புறப்படும் எயார் பிரான்ஸ் தரையிறங்க நேரம் இருந்தது. கிடைத்த நேரத்தில் ஓர் எஸ்பிரசோவை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். குளிர் முகத்தில் அடித்து எலும்பு மச்சைக்கு ஹலோ சொல்லியது. எஸ்பிறாசோவை சிப்பியவாறே சிகரட் ஒன்றை உதட்டில் பொருத்தி அதன் முனையை சிவப்பாக்கினேன். சிகரட் புகையும் எஸ்பிறாசோவும் குளிரின் சுகவிசாரிப்புகளுக்கு மறுத்தான் விட்டன. எனக்கும் குமணனுக்குமான இடைவெளிகள் அதிகமாக இருந்ததால் அவனது முகம் மங்கலாகவே என் மண்டையின் ஓரத்தில் பதிவாகியிருந்தது. அடிப்படையில் குமணனது செயல்பாடுகள் முன்பு எனக்கு அவன்மீது வெறுப்புகளைத் தந்தாலும், எனது நாட்டை சேர்ந்த ஓர் சகதமிழனுக்கு செய்கின்ற அடிப்படை உதவியாகவே எனது நிலைப்பாடு இருந்தது. அதற்கப்பால் என்மனம் அவனிடம் நெருங்க ஏனோ மறுத்தது .

விமான நிலையத்தின் அறிவிப்பு எனது சிகரட் புகை லயத்தைக் கலைத்தது. நான் குமணனை வரவேற்க தயாராகி நின்றேன்.  வெளியேறும் கதவினால் பயணிகள் வெளியேறிக்கொண்டு இருந்தார்கள். ஒரு ஆசிய  முகத்தையும் என்னால் காண முடியவில்லை. ஒருவேளை உள்ளே மாட்டுப்பட்டுவிட்டானோ என்று மனம் அலைபாய்ந்தது. என்ன அதிகம் காக்க வைக்காது ஓர் ஆசிய முகம் கதவினால் வெளியேறியது. அந்த முகத்தின் கண்ணின் கீழே ஓர் கறுப்பு காய் இருந்தது. நான் அந்த முகத்தை நோக்கி முன்னேறி “டேய் குமணன்” என்றேன். அவன் என்னை திரும்பிப் பார்த்து என்னிடம் ஓடிவந்து கட்டிக்கொண்டான் “.உள்ளுக்கை ஏதாவது பிரச்சனையோ?” “இல்லையடாப்பா. கொஞ்சநேரம் புத்தகத்தை வைச்சு நோண்டினாங்கள். தலைமாத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. வலு கிளீனாய் தலை மாத்தி விட்டாங்கள் “. என்றவாறே ரெயில்வே ஸ்ரேசன் நோக்கி என்னுடன் கூட நடந்தான் குமணன்.

குமணன் நன்றாகவே மாறிவிட்டிருந்தான். ஒல்லியான நெடுவலான அவனது உடம்பு சிறிது தசைப்பிடிப்பாக இருந்தது. நாங்கள் இருவரும் நான்காவது ரெயில்வே ஸ்ரேசனான செவ்றோனில் இறங்கி அறையை அடைந்தோம். அறைக்கு வந்தவுடன் தனது சூட்கேசை வைத்து விட்டு அறையை ஒரு சுற்று சுற்றிவந்தான். குமணன் நான் அவனுக்கு கோப்பி போட்டுக்கொண்டிருந்தேன். “மச்சான் நல்லாய்த்தான் அறையை வைச்சிருக்கிறாய் “. என்ற அவனுக்கு எனது புன்சிரிப்பையே பதிலாக தந்தேன். இருவரும் கோப்பியை எடுத்துக்கொண்டு பல்கனிக்கு நகர்ந்தோம். திறந்த பல்கனியினூடாக குளிர் காற்று இருவரின் முகங்களிலும் அறைந்தது. வெளியே கப்பியிருந்த இருட்டை சோடியம் வெப்பர் விளக்குகள் துரத்தப் போராடின. நான் கோப்பியை சிப்பிக்கொண்டு சிகரட்டின் முனையை சிவப்பாகிக்கொண்டே, ‘சொல்லு மச்சான். உன்னோடை கனகாலம் எனக்கு தொடர்பில்லாமல் போச்சுது. இவ்வளவுகாலமும் என்ன செய்தனி ?’ அவ்வளவுநேரமும் சந்தோசமாக கதைத்துக் கொண்டிருந்த குமணனின் முகம் இறுகத்தொடங்கியது. அவனையறியாது கண்கள் சிவப்பாகின. துளிர்த்த கண்ணீர் விழவோ விடவோ என்று அவனது கண்களிடம் கேட்டுக்கொண்டிருந்தன. என்முன்னால் நின்றிருந்த குமணன் மெதுவாக விசும்பினான் .”எந்த சனத்துக்காய் காடுமேடெல்லாம் அலைஞ்சனோ அந்தசனமே என்னை வெறுக்குது மச்சான். இடையிலை ஒரு இடத்திலை றொக்கி எடுக்க போன நேரத்திலை இந்தியன் ஆமியிட்டை மாட்டுப்பட்டு போனன். நீ இந்தியன் ஆமியிட்டை மாட்டியிருந்தால் அவன்ரை குணம் உனக்கு தெரியும். சித்திரவதையிலையே எந்தப்பெரிய கொம்பனையும் அவங்கள் பேச வைப்பாங்கள் . பேசாட்டில் கொஞ்ச நாளிலை எங்கையாவது பொட்டல் வெளியிலை ரத்தம் ஒழுக கிடப்பாய். ஒருகட்டத்திலை அவங்கடை சித்திரவதை தாங்கேலாமல் அவங்களோடை சேர்ந்திட்டன். அதாலை இயக்கம் என்னை போட றொக்கி எடுத்திது. ஒரு கட்டத்திலை இந்தியன் ஆமியும் என்னை போட வெளிக்கிட ஒரு மெட்ராஸ் ரெஜிமெண்ட் படையதிகாரி தான் என்னை போடுறன் எண்டு சொல்லி கூட்டி கொண்டு போய் என்னை தப்பிப் போகவிட்டான். பேந்து எவ்வளவோ கஷ்ரப்பட்டு இங்காலை வந்தன். உள்ளதை சொல்லுறன். சாகலாம் போலை கிடக்கு மச்சான். ஆனால் நான் இருந்த இடம் இப்பிடி சா எண்டு சொல்லி தரேலையடாப்பா. முந்தி நித்திரை இல்லாமல் இருந்தன். ஏமம் சாமம் எல்லாம் திரிஞ்சன். அதிலை ஒரு பிடிப்பு இருந்துது. இப்ப வாற நித்திரை கேட்டுக்கு ஒண்டுமே இல்லை மச்சான்” என்ற குமணனது உடல் குலுங்கியது.

எனக்கு அவன் அழுவதை பார்க்க மனது கனத்தது. அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனது மனப்பாரம் குறையும் மட்டும் அவனை அழவிட்டேன். அவனது விசும்பல் மெதுவாக குறைய ஆரம்பித்தது. இந்த கண்கள் போட்டுக்கொள்ளும் மேலதிக கண்ணாடிகளிலேயே எல்லோருக்கும் வித்தியாசமான காட்சிகள் தெரிகின்றன. காலப்போக்கில் அதையே அவர்கள் உண்மையெனவும் நம்பிவிடுகின்றனர். ஆனால் கண்ணுக்கும் வெளிப்பக்கத்துக்கும் இடையில் கண்ணாடி என்ற ஒன்று இருகின்றது என்பது ஏனோ அவர்களுக்கு  தெரிவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் கண்ணாடியை கழட்டும் பொழுது அவர்களுக்கு உண்மைக்காட்சிகள் தெளிவாகத் தெரியும். அதுபோலவே எனக்கும் குமணனை பற்றிய எண்ணக்காட்சிகள் மாறத்தொடங்கின.  “சரியடாப்பா பழசுகளை மறக்க ட்ரை பண்ணு. அது கொஞ்சம் கஷ்ரம் தான். ஆனால் காலம் கொஞ்சம் கொஞ்சமாய் அதுகளை மறக்கப் பண்ணும் .  இங்காலை வந்திட்டாய் தானே. எல்லாம் நல்லதாய் நடக்கும். ஒண்டுக்கும் யோசிக்காதை. நீ என்னோடையே இரு”. என்றுமட்டுமே என்னால் அவனுக்கு சொல்ல முடிந்தது . குமணன் என்னுடன் இருக்கவந்து ஒரு கோடையையும் ஒரு பனிக்காலத்தின் நடுப்பகுதியையும் கடந்துவிட்டிருந்தான். காலம் அவனை ஓரளவுதான் மாற்றியிருந்தது. பிரான்ஸ் அவனை அகதியாக அங்கீகரித்து இருந்திருந்தது. குமணன் இப்பொழுது ஓர் தங்குவிடுதியில் வேலைசெய்து கொண்டிருந்தான். நான் அவனுடன் ஓர் எல்லைவரையிலேயே கதை பேச்சுகளை வைத்துக்கொண்டேன்.

ஒருநாள் அதிகாலை வேளையிலேயே செவ்ரோன் நகர்ப்பகுதியை அடர்ந்த பனிப்புகார் கால் வரை மூடியிருந்தது. இலையுதிர்த்த பைன் மரங்களில் உறை பனி மொட்டுக்கட்டியிருந்தது. அகன்ற வீதி யாருமற்று துடைத்து விட்டால்ப்போல் இருந்தது. அந்த அதிகாலை பொழுதும் அடர் பனிப்புகாரும் குமணனுக்கு விபரிக்க முடியாதவோர் மனக்கிளர்ச்சியை உருவாக்கியிருந்தன. குமணன் இரவு கொட்டியிருந்த பனியில் கால்கள் புதையப் புதைய அந்த அகன்ற வீதியில்  வேலைக்காக இரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தான். அவன் பின்னே வெண்பனியில் அவனது கால் அடித்தடங்கள் வந்து கொண்டிருந்தன. ஓர் வளைவில் அமைதியாக நின்றிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தன்னை உயிர்ப்பித்து அவனருகில் மின்னல் வேகத்தில் அவனைக்கடந்த பொழுது, அதில் இருந்து சீறிய தோட்டா குறி தப்பாது அவனது தலையின் பக்கவாட்டை துளைத்துச் சென்றது.

02 மாசி 2016 

பன்நாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்திய சிறுகதை போட்டியில் 3 ஆம் பரிசு பெற்றது.

http://vallinam.com.my/version2/?p=2896

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லோரின் முகத்திலும் சவக்களையே மிஞ்சி இருந்தது
 எந்த தப்பும் செய்யாவிடிலும் அந்த பயம் வந்தே போகும் இணைப்பிற்கு நன்றிகள் கிருபன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.