Jump to content

பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...


Recommended Posts

பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...

By எஸ்.குருமூர்த்தி

 
  • David-Cameron.jpg

ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவால் உலக அளவில் பலத்த மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ளது.

உலகப் போர்களுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளிடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பின் தேவை உணரப்பட்டபோது ஐரோப்பியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. ஐரோப்பாவிலுள்ள ரஷ்யா உள்ளிட்ட 51 நாடுகளில் 28 நாடுகள் ஒரே கூட்டமைப்பாகச் செயல்பட சம்மதித்தன; 1992-இல் ஐரோப்பியக் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக உதயமானது.

அமைப்பின் வரையறை: ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதற்கென பொதுவான ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய மையம் ஆகியவை உருவாக்கப்பட்டன. அவற்றில் உறுப்பு நாடுகள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதன் துணை அமைப்பாக யூரோ பகுதி உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கான பொது நாணயமே "யூரோ'. இதை ஐரோப்பியக் கூட்டமைப்பிலுள்ள 28 நாடுகளில் 19 நாடுகள் மட்டும் தங்கள் பொது நாணயமாக ஏற்றுக்கொண்டுள்ளன. பிரிட்டன் இதை ஏற்கவில்லை. "பவுண்ட் ஸ்டெர்லிங்' நாணயம் பிரிட்டனின் நாணயமாகத் தொடர்ந்தது.

இந்த ஐரோப்பியக் கூட்டமைப்பில் ஆரம்பகால உறுப்பினராக, 1973 முதல் இருந்து வந்தது பிரிட்டன். ஆனால், தற்போது, அதில் நீடிக்கத் தேவையில்லை என்று பிரிட்டன் மக்களில் 51.9 சதவீதம் பேர் தீர்மானித்துவிட்டனர். கூட்டமைப்பில் தொடர 48.1 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், ஜனநாயக முறைப்படி, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.

1975- 2016 வாக்கெடுப்புகள்: பிரிட்டனில் பிரபுத்துவக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 1973-இல் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அந்நாடு இணைந்தது. ஆனால், 1974 தேர்தலின்போது, தாங்கள் வென்றால் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் சேர்ந்தது குறித்து மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தொழிலாளர் கட்சி அறிவித்தது. தேர்தலில் வென்று ஆட்சியும் அமைத்தது.

அதன்படி 1975-இல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, பதிவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு (67 சதவீதம் பேர்) பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் நீடிக்க ஆதரவு கிடைத்தது.

ஆயினும் காலச்சூழலில் பிரிட்டன் மக்களிடையே இந்த இணைப்புக்கு எதிரான கருத்துகள் தோன்றின. இந்த இணைப்புக்குக் காரணமான பிரபுத்துவக் கட்சியே, 2015 பொதுத்தேர்தலின்போது, தாங்கள் வென்றால் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களின் கருத்து வாக்கெடுப்பு 2017-க்கு முன் நடத்தப்படும் என்று அறிவித்தது. அத்தேர்தலில் வென்ற பிரபுத்துவக் கட்சியின் சார்பில் டேவிட் கேமரூன் பிரதமரானார்.

1993-இல் பிரிட்டனில் உதயமான வலதுசாரிக் கட்சியான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (யுகேஐபி), ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் தொடர்வதால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாக பிரசாரம் செய்து வலுப்பெற்றது. அதன் அதீத வளர்ச்சியால் கவலையடைந்த பிரபுத்துவக் கட்சி தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள இந்த பொது வாக்கெடுப்பை (பிரெக்ஸிட்) நடத்தத் தீர்மானித்தது.

இதனிடையே பிரிட்டன் அரசிலுள்ள அமைச்சர்கள், பிரபுத்துவக் கட்சியின் பிரமுகர்கள் பலரும்கூட, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், பிரிட்டன் பிரதமர் கேமரூன், கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வாக்களிக்குமாறு மக்களைக் கோரினார். இந்தச் சூழ்நிலையில்தான் ஜூன் 23-இல் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது தெளிவாகியுள்ளது.

உள்நாட்டில் பிரிவினைகள்: இந்த வாக்கெடுப்பில் இரு கேள்விகளே பிரதானமாக முன்வைக்கப்பட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கலாமா? அல்லது விலக வேண்டுமா? ஆகியவையே அக்கேள்விகள். இதனால் யுகேஐபி கட்சியைத் தவிர்த்து, பிரிட்டனிலுள்ள பிரபுத்துவக் கட்சி, தொழிலாளர் கட்சி, பசுமைக்கட்சி ஆகிய அனைத்துக் கட்சிகளிலும் இருவேறு கருத்துகள் உருவாகிவிட்டன.

தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கக் கூடாது என்ற தீர்ப்பின் மூலமாக, அந்நாட்டு அரசு, வர்த்தகம், ஐரோப்பியக் கூட்டமைப்பு, உலகச் சந்தைகள் அனைத்துக்கும் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் பிரிட்டன் மக்கள்.

பிரெக்ஸிட்டில் பங்கேற்ற 3.35 கோடி மக்களில் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியவர்களைவிட அதிகமாக 13 லட்சம் பேர், விலகுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

1975 வாக்கெடுப்பின்போது இங்கிலாந்து மக்களில் 67 சதவீதம் பேர் கூட்டமைப்பை ஆதரித்தனர். தற்போது 53 சதவீதம் பேர் மட்டுமே வெளியேற்றத்தை ஆதரித்துள்ளனர். வேல்ஸ் பகுதியிலும் 52 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்துள்ளனர்; 1975-இல் இப்பகுதியில் 35 சதவீதம் பேரே வெளியேற்றத்தை ஆதரித்தனர்.

யுனைடெட் கிங்டம் (யு.கே.) எனப்படும் இங்கிலாந்திலுள்ள நாடுகளிடையிலான அரசியல் மாறுபாடுகளையும் இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு காணப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைநகர் லண்டனிலுள்ள மக்களில் 60 சதவீதம் பேர் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மொத்தமுள்ள 12 மாகாணங்களில் 9 மாகாணங்கள் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தன. இந்த முடிவுகள் பிரிட்டனின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு சிக்கலாக பிற்காலத்தில் உருவாகக் கூடும். ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் இங்கிலாந்திலிருந்து விரைவிலேயே பிரிந்துவிடக்கூடும்.

(தொடரும்...)

http://www.dinamani.com/world/2016/06/28/பிரெக்ஸிட்டும்-பிரிட்டனும/article3503544.ece

Link to comment
Share on other sites

பிரெக்ஸிட் தரும் எச்சரிக்கை: பகுதி- 2

By எஸ்.குருமூர்த்தி

 


 

  • voteing.jpg

 

ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், கூடாது என்று அந்நாட்டு மக்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வாக்கெடுப்புக்கு அடிப்படைக் காரணமாக பொருளாதாரக் காரணங்கள் கூறப்பட்ட போதிலும், வாக்கெடுப்பின் முடிவுக்கு உண்மையான காரணம், அகதிகளின் குடியேற்றப் பிரச்னைதான்.

குடியேற்றப் பிரச்னை பொருளாதாரச் சிக்கல்களைவிட மக்களை அதிகமாக அச்சுறுத்தியுள்ளது. இது அரசியல் களத்திலும் பண்பாட்டுக் களத்திலும் கூட எதிரொலித்துள்ளது. பிரெக்ஸிட் முடிவுகளை அகதிகள் குடியேற்றப் பிரச்னைக்கு எதிரான வாக்கு என்றே கூறலாம்.

ஏழு முக்கிய வாதங்கள் பிரபல ஊடக நிறுவனமான வாக்ஸ் மீடியா, இந்த வாக்கெடுப்பில் ஏழு வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அவை:

* ஐரோப்பியக் கூட்டமைப்பு பிரிட்டனின் இறையாண்மைக்கு சவால் விடுக்கிறது.

* ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதீதக் கட்டுப்பாடுகளால் பிரிட்டனின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

* ஐரோப்பியக் கூட்டமைப்பு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது.

* அதேசமயம், சீர்திருத்தங்களுக்கு எதிராக ஐரோப்பியக் கூட்டமைப்பு இருக்கிறது.

* ஐரோப்பியக் கூட்டமைப்பு நல்ல கனவாக இருந்தபோதிலும், யூரோ நாணயம் அழிவுசக்தியாக உள்ளது.

* ஐரோப்பியக் கூட்டமைப்பு அளவுக்கதிகமான அகதிகளை குடியேறச் செய்கிறது.

* ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மாறான புதிய குடியேற்றக் கொள்கையை பிரிட்டன் கொண்டிருப்பது அவசியம்.

இந்தக் காரணங்களை அடுக்கியுள்ள வாக்ஸ் மீடியா, குடியேற்றப் பிரச்னை உணர்வுப்பூர்வமான பிரசாரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இந்த ஏழு வாதங்களும் பிரிட்டிஷ் தேசிய உணர்வைத் தூண்டப் போதுமானவையாக இருந்தன.

2008-ஆம் ஆண்டுக்குப் பின் அகதிகள் குடியேற்றப் பிரச்னை பிரிட்டனில் பிரதான விவகாரமாக மாறியுள்ளது. ""அண்மைக்காலத்தில் பிரிட்டனுக்கு வந்த பல்லாயிரக் கணக்கான கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்களால், உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது'' என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டக்ளஸ் மூரே கூறியதை வாக்ஸ் மீடியா சுட்டிக் காட்டுகிறது.

2015-இல் மட்டும் பிரிட்டனுக்குள் 3,33,000 பேர் புதிதாகக் குடியேறியுள்ளனர். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் பெருமளவே என்கிறது வாக்ஸ் மீடியா.

இந்தக் குடியேறிகளுக்கு எதிரான பிரசாரத்தை சுதந்திரக் கட்சி போன்றவை முன்னெடுத்தன. கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான குடியேறிகள் பிரிட்டனில் புகுந்ததால், உள்நாட்டுத் தொழிலாளிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது. குடியேறிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்ற அரசுகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் மக்களிடையே அதிருப்திக்கு காரணமானது என்கிறது வாக்ஸ் மீடியா.

ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதிகாரவர்க்கச் செலவுகளுக்காக பிரிட்டன் 19 பில்லியன் டாலர் தொகையை பங்களிப்பாக அளிக்கிறது. இந்தப் பணத்தை பிரிட்டனிலேயே செலவிட வேண்டும் என்பது கூட்டமைப்பு எதிர்ப்பாளர்களின் கோஷமானது.

பிரெக்ஸிட் முடிவால் பிரிட்டனுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று, கூட்டமைப்பை ஆதரித்தவர்கள் கூறினர். ஆயினும் அவர்களால் உணர்வுப்பூர்வமான காரணங்களைக் கூற முடியவில்லை.

இறுதியில் பொருளாதாரக் காரணங்கள் தோற்று, உணர்ச்சிகரமான தேசிய உணர்வே முன்னுக்கு வந்து, வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது.

தொடரும் விளைவுகள் பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு முன்னதாக, இங்கிலாந்து வங்கியின் தலைவர் மார்க் கார்னி ""இது நிதித்துறையின் உறுதித்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உள்நாட்டு சவாலாகும்'' என்றார். அவர் சொன்னது உண்மையாயிற்று.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற பிரெக்ஸிட்டுக்கு வாக்களித்த நிலையில், பிரிட்டனின் பவுண்ட் நாணயம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் 11 சதவீதச் சரிவைச் சந்தித்தது. அதன் டாலருக்கு நிகரான மதிப்பு 1.50 டாலரிலிருந்து 1.32 டாலராகக் குறைந்தது.

லண்டன் பங்குச்சந்தை 8 சதவீதம் சரிவு கண்டது. பர்க்லேஸ் வங்கி, ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் பங்கு மதிப்புகளும் 30 சதவீதம் சரிவு கண்டன. யூரோவுக்கு நிகரான பவுண்டின் மதிப்பும் 3.3 சதவீதம் வீழச்சி அடைந்தது. பிரிட்டன் அரசுப் பத்திரங்களின் மதிப்பும் சரிந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இந்த வீழ்ச்சி உணரப்பட்டது. யூரோ நாணயமும் 3.2 சதவீதம் சரிவு கண்டது. அதேசமயம், அமெரிக்க டாலரும் ஜப்பானின் யென்னும் இதனால் லாபம் பெற்றன. தங்கமும் 8 சதவீதம் விலை ஏறியது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 48 டாலராகக் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளிலும், ரூபாய் நாணய மதிப்பிலும் இதன் தொடர்ச்சியான விளைவுகள் காணப்பட்டன. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆயினும் இந்த பாதிப்பு நீடித்திருக்காது. ஆனால், பிரெக்ஸிட்டின் விளைவுகள் ஐரோப்பாவிலும் உலக அளவிலும் நீண்டகால விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

இது ஐரோப்பியக் கூட்டமைப்பை மேலும் உடைக்கவும் கூடும். அல்லது, அதன் பொது நாணயமான யூரோ கேள்விக்குள்ளாவதைத் தடுக்க முடியாது.

யூரோ என்பது தனியொரு நாட்டின் இறையாண்மை பெற்ற நாணயமல்ல. அது பல நாடுகளின் பொது நாணயமாக ஏற்பதாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த நாணயம் மட்டுமே. அதனால் இறையாண்மை கொண்ட நாணயங்கள் போல நீடித்திருக்க இயலாது.

உலகமயமாக்கலுக்கு சிக்கல்1990-களில் ஆரவாரமாகத் தொடங்கப்பட்ட உலகமயமாக்கலுக்கும், பிரிட்டனின் இந்த வெளியேற்றம் கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாகவே உலக வர்த்தகம் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. உலகமயமாக்கலின் பயன்கள் கேள்விக்குறியாகிவரும் நிலையில் பிரெக்ஸிட் முடிவுகள் அதற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

1986 முதல் 2006 வரையிலான 20 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தின் அளவு ஒட்டுமொத்த உலக உற்பத்தி போல (ஜிடிபி) இரு மடங்காக இருந்தது. அதன்மூலம் பல வளரும் நாடுகளில் ஏழ்மை குறைந்தது. அந்த அடிப்படையில்தான், வர்த்தகம் மூலமாக உலகில் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் திட்டமிட்டனர். அதன்படியே உலக வர்த்தக அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் 2007-லிருந்து உலக வர்த்தகம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. உலகின் ஜிடிபிக்கு இணையாகவே அதன் வர்த்தகமும் 2007 முதல் 2015 வரை காணப்பட்டன. உலகமயமாக்கலின் பலனாக உலக வர்த்தகம் பெருகாவிட்டால், அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். பிரெக்ஸிட் அதன் முதல் கட்டம்.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டாலோ, ஜப்பானில் ராணுவமயமாக்கலுக்கு ஆதரவான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டாலோ, உலக அரங்கில் இந்தியா பிரதானப் பங்கு வகிக்க நேரலாம். அப்போது, அமெரிக்காவும் ஐரோப்பாவும் தலைமை தாங்கும் தற்போதைய உலகமயமாக்கல் தத்துவத்துக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் எதிராக உலகம் திரும்பலாம்.

வர்த்தகமல்லாது உலகமயமாக்கலை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவது குடியேற்றப் பிரச்னை தான். அந்த வகையில் பிரெக்ஸிட் உலகுக்கு முதல் எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது.

(முற்றும்)

http://www.dinamani.com/tamilnadu/2016/06/29/பிரெக்ஸிட்-தரும்-எச்சரிக்க/article3504662.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.