Jump to content

இயற்கை அனர்த்தத்தினால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய டக்ளஸ் எம்.பி.


Recommended Posts

இயற்கை அனர்த்தத்தினால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய டக்ளஸ் எம்.பி.

 

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவானந்தா சபையில் கேள்வியெழுப்பினார். 

பாராளுமன்றில் இன்று 23 இன் கீழ் இரண்டில் விசேட  கூற்று ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவிடத்தில் முன்வைத்த போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

douglas_devananda.jpg

அவருடைய வினாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில்  அண்மையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் உயிரிழப்புகள் உட்பட பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் பாரிய அழிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பிரகாரம் வடக்கில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் சுமார் 792 பேர் 9 முகாம்களில் இடம்பெயர்ந்த நிலையில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக   தகவல்கள் தெரிவித்திருந்தன. அதே நேரம் மேற்படி அனர்த்தம் காரணமாக வடக்கில் 971 வீடுகள் சேதமாகியுள்ளன என்றும் இவற்றில் 113 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் 1885 குடும்பங்களைச் சேர்ந்த 6627 பேரும் வவுனியா மாவட்டத்தில் 1377 குடும்பங்களைச் சேர்ந்த 5084 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 575 குடும்பங்களைச் சேர்ந்த 1826 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1997 குடும்பங்களைச் சேர்ந்த 5199  பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5446 குடும்பங்களைச் சேர்ந்த 18,265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 103 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 136 வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 254 வீடுகளும் முல்லைதீவு மாவட்டத்தில் 213 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 256 வீடுகளும் சேதமடைந்துள்ளன எனவும் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள் என்பன காணமாற்போயும் சோதமாகியுமுள்ளன என்றும் அதேபோன்று சிறுபோக நெற்செய்கை , சிறுதானிய செய்கை மற்றும் விவசாயக் காணிகள், குளங்கள், உட்கட்டமைப்புகள் போன்ற வாழ்வாதார தளங்கள் சேதமாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது. 

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனார்த்தங்கள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் பெரிதும் எதிர்பார்ப்பு கொண்டுள்ள பகுதியாக இருந்து வருவதால் இவ்வாறான பாதிப்புகள் இப் பகுதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவனாகவுள்ளன. 

அனர்த்தம் காரணமாக  மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளான தென்பகுதி மக்களது இழப்புகள்  மதீப்பீடு செய்யப்படும்வரை அவர்களுக்கு 10000 ரூபா வீதம் அண்மையில் வழங்கப்பட்டதைப் போல் அவ்வாறு பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டனவா?  இல்லையேல் அதற்கான காரணத்தை அறியதர முடியுமா?

வடக்கு மாகாணத்தில் முற்றாகவும் பகுதியாகவும் சேதமாகியுள்ள வீடுகளை மீள் நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து விளக்க முடியுமா? அது எந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன? இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் அறிவிக்க முடியுமா? 

வடக்கு மாகாணத்தில் சேதமடைந்துள்ள விவசாய குளங்கள், விவசாய காணிகள், பாதைகள், பாலங்கள் உட்பட உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா? 

மேற்படி அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை மற்றும் சிறு தானிய பயிர்ச்செய்கை போன்றவற்குக்கான நட்டஈடுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளன? 

அதேபோன்று பாதிக்கப்பட்டும் அழிந்தும் காணாமற்போயுமுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்களுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் கூற முடியுமா? 

மேலும் எதிர்காலத்தில் இயற்கை அனர்த்த காலங்களில் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கிலும் அதே நேரம் பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கும் வடக்கு மாகாணத்தில் தங்களது அமைச்சு மேற்கொண்டு வருகின்ற முன்னேற்பாடுகள் தொடர்பில் கூற முடியுமா என்றார். 

http://www.virakesari.lk/article/8067

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.