Jump to content

பேரறிவாளன் டைரி


Recommended Posts

பேரறிவாளன் டைரி - 1

தொடரும் வலி..!தொடர்

 

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல... கலைத்துறையில் எனது 25 ஆண்டு சாதனையின் வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த காராகிரகத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேதனை ஆண்டுகள் அவை. இந்த 25 ஆண்டுகால துன்பக் கதைகளை, துயர வாழ்வை 25 பக்கங்களிலும் அடக்கிவிடலாம்... 25 தொகுதிகளுக்கான புத்தகமாகவும் அடுக்கி அழலாம்.

இந்த கால் நூற்றாண்டு சிறை வாழ்வை மூன்று பகுதிகளாகப் பிரிப்பது சரியாக இருக்கும்.

p20a.jpg

11-6-1991 முதல் 28-1-1998 அன்றுவரை விசாரணை சிறைவாசியாக இருந்த காலம் முதலாவது. அப்போது நான் குற்றம்சாட்டப்பட்டவன் மட்டுமே. 28-01-1998 அன்று வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட 5 பெண்கள் உட்பட 26 பேருக்கும் பூந்தமல்லி ‘தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். அன்றுமுதல் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம் தலைமையிலான மூவர் அமர்வு, நான் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை ஆயுள் சிறையாகக் குறைத்த 18-02-2014 அன்றுவரை ஏறத்தாழ 16 ஆண்டுகள் மரண தண்டனை சிறைவாசியாக வாழ்ந்த காலம் இரண்டாவது. 19-02-2014 முதல் ஆயுள் சிறைவாசியாக - இன்னும் சொல்லப்போனால் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டுவிட்ட ஆயுள் சிறைவாசியாக - (இது ஒரு விசித்திரமான நிலைதான், இருப்பினும் குறிப்பிட்டே ஆக வேண்டி உள்ளது) - சிறைவாசம் அனுபவித்துவரும் தற்போதைய காலம்.

மூன்று காலகட்டமும் வெவ்வேறு வகையான துன்பங்களைத் தந்திருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்று குறைவானது அல்ல. எங்களது நியாயங்கள் வெளி உலகம் அறியாவண்ணம் முடக்கப்பட்டு மூடிய அறைக்குள் நடந்து முடிந்துவிட்ட, காவல் கொடுமைகள் நிறைந்த, ஆறரை ஆண்டு விசாரணைக் காலத்தைக் காட்டிலும், எதிர்காலக் கனவுகளே அற்றுப்போன - எந்த நொடியும் உயிரைக் கொல்லும் உத்தரவு வந்துவிடும் எனத் தூக்குமர நிழலில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்தைக் காட்டிலும், விடுதலை அறிவிப்புக்குப் பின்னரும் நீடிக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகாலச் சிறை வாழ்வே சொல்லில் அடங்காச் சோகத்தை தந்துவிட்டது.

எனது துன்பங்கள் அனைத்தையும் அனைவரின் தோள்மீதும் இறக்கிவைப்பது இந்தத் தொடரின் நோக்கம் அன்று. அதில், எனக்கு உடன்பாடும் இல்லை. காரணங்கள் இரண்டு. முதலாவதாக, கடந்து வந்திருக்கும் அந்த வலிகளுக்கான காரணிகளையும் அதனை உருவாக்கிய மனிதர்களையும் குறிப்பிட வேண்டியிருக்கும். ஆகவே, எனது உண்மையான, முழுமையான வெளிப்பாடாக இருக்கும். தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு 1993-ல் ஒரு கடிதம் எழுதினேன். அதில், ‘‘இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி... என்பதெல்லாம் வெறும் பெயர்ச்சொல் - ஒரு குறியீடு மட்டுமே, நாங்கள் சாமானியர்களாக இருக்கலாம். ஆனால், எமது வழக்கில் தலையிட்டு நீதிபெற வழிவகை செய்ய வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவை’’ என்பதை வலியுறுத்தி மடல் எழுதியிருந்தேன். அப்போது எனது வயது 21. எனது மடல் அன்று உதாசீனம் செய்யப்பட்டது. ஆனால், காலம் அதன் தேவையை இன்று உணர்த்தி நிற்கிறது. அவையெல்லாம் கடந்துபோன கசப்பான அனுபவங்கள். இதுபோன்ற கசப்புகளைத் தவிர்க்க விரும்புகிறேன். அடுத்தவரை சங்கடப்படுத்துவது எனது இயல்பு அல்ல... அதேநேரம் குறைந்தபட்சம் சில உண்மைகளை வெளிப்படுத்துவது எனது வரலாற்றுக் கடமை என்பதையும் அறிந்துள்ளேன்.

இரண்டாவது காரணம் - நான் எப்போதுமே நேர்மறை சிந்தனைகளால் நிரம்பியவன் என்பதாக என்னைச் சுற்றி உள்ளவர்களால் அறியப்பட்டு இருக்கிறேன். ‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதால், நீ ரொம்ப நல்லவன்டா...’’ என்று சொல்லிச் சொல்லியே என்னை அனைவரும் உசுப்பேற்றி வைத்திருக்கிறார்கள் - என்பதால் எனது எந்தச் சோகச் சுமையையும் இறக்கிவைக்க விரும்பவில்லை. அது என்னைவிட, என்னைச் சுற்றி உள்ளவர்களைச் சோர்வடைய செய்துவிடும்.

12-08-2011 அன்று எம்மூவரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என ஊடகங்கள் செய்தி அறிவித்தன. அன்றிலிருந்து 26-08-2011 அன்று முறைப்படி எங்கள் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட Black Warrant தரப்பட்ட நாள் வரையிலான 14 நாட்கள் பெரும் சங்கடம் ஒன்றை அனுபவிக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் என்னைச் செய்தியாளர்கள் பலரும் நேர்கண்டு பேசி அதனை தத்தமது ஊடகங்களிலும் வெளிக்கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் தொடுத்த கேள்வியெல்லாம், 20 ஆண்டுகால சோகமோ, மரண தண்டனை வலியோ எனது முகத்தில் ஏதும் பிரதிபலிக்கவில்லையே, ஏன்? என்பதுதான். நான் எதிர்கொண்ட மிகவும் தர்மசங்கடமான கேள்வி அது. எனது தாயாரும் என்னிடம் மிகவும் குறைபட்டுக்கொண்டார். சோகமாக முகத்தைவைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவைதான் நான் எதிர்கொண்ட மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பம் என நினைக்கிறேன். இருப்பினும், எனது இயல்பை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை அல்லது அது மாறிவிடக் கூடாது என்பதாகத்தான் எனது 25 ஆண்டுகால போராட்டமும் இருந்திருக்கிறது எனலாம்.

p20.jpg

இதைச் சொல்வதால் எனக்குத் துன்பமே இல்லை என்றோ, நான் ஏதோ அசாத்திய துணிச்சல்காரன் என்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீகள். எல்லோரையும்போல் சாவை விரும்பாத, வாழ்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மனிதன் நான். ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’’ என்பதில் நம்பிக்கை உடைய மிகச் சாதாரணன்.

இந்தப் பின்னணியில்தான் எனது 25 ஆண்டுகால அனுபவங்களை உங்கள்முன் இறக்கிவைக்க முயன்றுள்ளேன். இதுகுறித்து எழுவர் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடும் சகோதரர்கள் கேட்டுக்கொண்ட போது, ‘‘25 ஆண்டுகால வலி’’ என்பதைவிட ‘‘நிகழ்ந்த பல முக்கியத் திருப்புமுனை சம்பவங்களும், ஈடு செய்ய முடியா சில இழப்புகளும்’’ என்ற அளவில் இந்தத் தொடரை குறுக்கிக்கொள்ள வேண்டுகோள் வைத்தேன். ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்தத் தொடர் எம் எழுவரின் விடுதலையை விரைவுபடுத்தும் என்கிற உறுதியோடு தொடர்கிறேன்...

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 2

தொடரும் வலி..!தொடர்

 

றுபிறவியில் சிறிதும் நம்பிக்கையற்ற நான் எல்லா உயிர்களுக்கும் வாழ்வு ஒரு முறைதான் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். பேரறிவாளன் என்கிற மனிதன் பிறந்துவிட்டபின் அவன் ஒருநாள் மடிந்து சாகத்தான் போகிறான். மீண்டும் ஒரு போதும் அவன் எந்த வடிவிலும் எழுந்து வரப்போவதே இல்லை. எல்லா மனிதர்களின் வாழ்வும் இப்படித்தான் தொடங்கி முடியப் போகிறது. அதில், மாற்றமில்லை. அந்த மனித வாழ்வில் 20 வயது முதல் 45 வரையிலான வாழ்வைத்தான் நாம் Prime Period என்று சொல்கிறோம். சிதைந்த காலகட்டம், இளமை வாழ்வு சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலே கடந்து போய்விட்டது. அதேபோல்தான், இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்வு என்போம். 25 ஆண்டுகளாகத் துன்பம் மட்டுமே நிறைந்ததாக வாழ்க்கை மாறிவிடுமா என்ன? எமக்கு அப்படித்தான் மாறிப்போனது. (இந்த இடத்தில் எமக்கு என்பதை எங்கள் எழுவர் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.)

ஒற்றை நாளில் எதிர்கால வாழ்வையே புரட்டிப்போட்ட அந்தத் தினம் 1991-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி இரவு சுமார் 10.30 மணி. எனது வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட அன்றைய நிகழ்வுக்குக் காரணமான பின்னணி குறித்தும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

p20.jpg

ஒரு சாதாரண, பள்ளி உடற்கல்வி ஆசிரியரான தந்தைக்கும் எந்தப் பெரிய உலக அனுபவமும் அறிந்திராத தாயாருக்கும் மகனாகப் பிறந்த எனக்கு எனது பெற்றோரால் சொல்லித் தரப்பட்ட உயர்ந்த வாழ்க்கை தத்துவம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘‘நாணயமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதம்’’. அதன் நீட்சியாகத்தான் தமிழகத்தின் அன்றைய உணர்வுகளின் வெளிப்பாடாக எல்லோரையும் போல் ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் எனது பெற்றோர். அந்த உணர்வோடுதான் நானும் வளர்ந்தேன். அன்றைய லட்சக்கணக்கான இளைஞர்களிடையே இருந்த அதே உணர்வுதான் என்னிலும் இருந்தது. ஈழத்தில் 1983 ஜூலை கலவரத்தை ஒட்டித் தமிழகத்தில் நடந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக எங்களது ஊர் பள்ளிகளின் சார்பில் பேரணிகள் நடந்தன. 12 வயது மாணவனாக நானும் அதில் பங்கேற்றேன்.
இந்த நேரத்தில் எனது குடும்பத்தின் கொள்கைப் பின்னணி குறித்தும் கூறிவிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எனது தந்தை வழிப் பாட்டன் கே.கே.தங்கவேல், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எங்கள் ஊர் பகுதியின் தளகர்த்தராகத் திகழ்ந்தார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அந்தக் கொள்கை வழியே வளர்த்தார். எனவே, எனது தந்தை - அவர் வழியே நானும் தமிழர் வரலாற்றைப் புரட்டிப்போட்ட அந்தக் கிழவரின் கொள்கை வழியே வளர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை.

சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, மனிதநேயம் என மக்களின் துன்பங்கள் களையும் தூயச் சிந்தனைகளுடன் தொடங்கிய எனது வாழ்க்கைப் பயணம் என்னை நானே காத்துக்கொள்ளவும், எனது விடுதலை குறித்து சிந்திக்கவும், செயல்படவுமான இழிநிலையை எட்டும் என ஒரு நாளும் நான் கற்பனை செய்ததில்லை. இந்தக் கோணத்தில் எனது தற்போதைய வாழ்வின் போக்கைப் பொருத்திப் பார்க்கிறபோதெல்லாம் உயிர் அறுக்கும் வேதனையை அனுபவித்து

இருக்கிறேன். என்றாலும் - மனிதநேயத்தோடு பிறருக்கு உதவுவதால் - அது விபத்தில் காயம் பட்டவரை காப்பாற்றுவதாக இருந்தாலும் அல்லது விடுதலைப் போராட்டத்தில் காயமடைந்தவரை காப்பதாக இருப்பினும் - இறுதியில் அதன் விளைவு துன்பமும் மரணமும்தான் என முடிவாகிப் போகும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அப்படியான நான் 1989-ம் ஆண்டு எனது பட்டயப் படிப்பை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக் னிக்கில் முடித்தப் பின்பு படிப்புக்குரிய தொழில் செய்துகொண்டே மேலே ஏதேனும் படிக்க வேண்டும் என ஆர்வத்துடன் சென்னை சென்றேன். அங்கு எனக்குச் சிறிய வயது முதல் தெரிந்த ஒரே இடம் வேப்பேரி ‘பெரியார் திடல்’. அங்கு அறிமுகம் ஆனவர்தான் ‘சுபா நியூஸ் போட்டோ சர்வீஸ்’ நிறுவன உரிமையாளர் அண்ணன் சுபா சுந்தரம். ராயப்பேட்டையில் இருந்த அவரது கடையில்தான் நளினியின் தம்பி பாக்கியநாதனும், தற்போதும் உயிரோடு இருப்பதாக ஆதாரங்களோடு பரப்பரப்பாகப் பேசப்படும் அரிபாபுவும் நண்பர்களாயினர்.

21-05-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்துவிட்ட குண்டுவெடிப்பின் அதே இரவு நேரம் நண்பர் பாக்கியநாதனுடன் தேவி திரையரங்கில் இரவுக் காட்சியாக ‘பவுனு பவுனுதான்’ திரைப்படம் பார்த்துக்கொண்டி ருந்ததை இன்றும் என்னால் அசைபோட்டுப் பார்க்க முடிகிறது. படம் முடிந்து திரும்பும் வழியில்தான் ராஜீவ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இருவரும் அறிந்தோம். அன்று எல்லோரையும்போல் செய்தியாக மட்டுமே அறிந்த நாங்களும் அந்தச் சம்பவத்தில் பிணைக்கப்பட்டுச் செய்தியாகப் போகிறோம் என்பதை கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை.

p20a.jpg

23-05-1991 அன்று நானும் பாக்கியநாதனும் இணைந்து அவரது தமக்கை வேலை செய்துவந்த அடையாறு அனவான்ட் நிறுவனம் சென்றோம். நான் அலுவலகத்தின் வெளியே இரு சக்கர வாகனத்தில் காத்திருக்க, அவர் மட்டும் சென்று தனது தமக்கையைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அப்போது, அவர் தமக்கை கூறிய தகவல்களைக் கேட்டறிந்து பதற்றத்தோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அப்படித்தான் சிறிதேனும் எனக்கு அந்தச் சம்பவம் குறித்து தெரியவந்தது. அதன் வீரியம் உணர்ந்த எவருமே அதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள், அஞ்சுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தச் சிறிய பருவத்தில் நானும் அப்படியே இருந்தேன்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஈழ ஆதரவாளர்கள் பலரையும் சி.பி.ஐ காவல் துறை விசாரணை செய்துவந்தது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள எனது பெற்றோரிடமும் விசாரித்தனர். பின்னர் என்னைப் பற்றியும் விசாரித்தனர். அதனால், அவர்களுடன் நேரில் சென்னைவந்த எனது பெற்றோர் பெரியார் திடலில்வைத்து ஜூன் மாதம் 11-ம் தேதி இரவு சுமார் 10.30 மணிக்கு விசாரணைக்கு என என்னை அனுப்பிவைத்தனர். சட்டப்படியான விசாரணைக்கு ஒத்துழைப்பது தமது கடமை என எனது பெற்றோர் கருதியதாலும் குற்றமேதும் செய்யாத காரணத்தாலும் அச்சமின்றி நானும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தேன். அன்று அவர்கள் கேட்ட கேள்வியும், கூறிய தகவலும் ஒன்றே ஒன்றுதான், ‘‘நளினி, முருகன் எங்கு உள்ளனர் என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும். இதுகுறித்து விசாரித்துவிட்டு காலை உங்கள் மகனை அனுப்பிவிடுகிறோம்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு எனது பெற்றோரிடமிருந்து ‘மல்லிகை’க்கு அழைத்து வந்தனர்.

எனக்குப் பதில் தெரியாத அந்த ஒற்றைக் கேள்விக்கு என்னவோ, அடுத்தநாளே விடை கிடைத்துவிட்டது. நளினி, முருகன் இருவருமே 12-06-1991 அன்று சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனால், ‘‘அடுத்தநாள் காலை அனுப்பி விடுகிறோம்’’ என எனது பெற்றோருக்கு அவர்கள் தந்த உறுதி மட்டும் இன்னமும் தீர்க்கப்படாத 25 ஆண்டுகால வலியாகிப் போனது.

இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை.               

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 3

தொடரும் வலி..!தொடர்

 

p20a.jpg

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

ப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 - 4 மாதங்களில் பிணை அல்லது ஓராண்டு சிறை பரிசாகக் கிடைக்கும். இது 1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்குப்பின் ஈழத்தில் அத்துமீறி நடந்த இந்திய ராணுவத்தின் போருக்குப் பிறகான நிலை.

இதற்குமுன் ஒரு நிலை இருந்தது. தொடக்கத்தில் காந்திய வழி உரிமைப் போராட்டமாக தந்தை செல்வா தலைமையில் நடந்துவந்த ஈழத்தமிழர் போராட்டம் சிங்களப் பேரினவாதத்தின் அரச ஆயுத அடக்குமுறையின் விளைவால் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டமாக உருமாறத் தொடங்கிவிட்டது. அவை பல்வேறு ஆயுதம் தாங்கிய அமைப்புகளாக உருவாகிய சூழலில் அன்றைய இந்திய பிரதமர் மறைந்த இந்திரா காந்தி அந்த அமைப்புகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துக்கொண்டது மட்டும் அல்ல, அவர்களுக்கு இந்திய ராணுவத்தைக்கொண்டு ஆயுதப் பயிற்சியும் வழங்கிப் போரிட ஆயுதங்களும் கொடையளித்தார். அன்றைய மாநில முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோ தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள முகாம்கள் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்தார். பொருளுதவியும் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அறிவித்து தமிழ்நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைப் போராளி அமைப்புகளுக்கு நன்கொடையளித்தார். இவையெல்லாம் வரலாறு.

அவ்வாறு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஈழத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்துக்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவிய நேரத்தில் ஆரம்பித்ததுதான் எனது வாழ்க்கையும். 1984-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி  பொறுப்பேற்ற பின்பு ஈழப் போராட்டத்தில் மத்திய அரசின் போக்கில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழக ஆதரவு நிலை முன்பு போலவே நீடித்தது.

இலங்கையின் அன்றைய அதிபர் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவின் நரித்தனத்தால் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம், அதன் விளைவால் ஈழத்தில் இந்திய ராணுப் போர் என நிலைமை மாற்றமடைந்த காலத்தில் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் வெளிப்படையாக ஈழப் போராட்டத்துக்கு அரசியல் ரீதியாக நிலைப்பாடு எடுத்தாலும் பொருளுதவி, அரசியல் உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளைச் செய்து வந்த ஆதரவாளர்களைக் கைதுசெய்வதும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதும் போராளிகளைத் தடுத்துவைக்க சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதுமான நிலைப்பாடு எடுத்தனர். அந்தச் சமயத்தில் ஈழத்தில் நடக்கும் போராட்டத்துக்கு உதவுவது என்பது சட்டப்படி சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற நிலை

இருப்பினும் தார்மிக அடிப்படையில் எவருமே அதனைத் தவறாக எடுத்துக்கொண்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு கைது செய்யப்படுவதைப் பெருமையாக அறிவித்துக் கொண்டவர்களும் உண்டு.

அந்தப் பின்னணியில், அவ்வாறான செய்திகளை அறிந்திருந்த நானும், ஆதரவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, துண்டறிக்கை, சுவரொட்டி அச்சிடுவது, காயம் அடைந்தவர்களுக்கு உதவுவது என்ற அளவில் செய்யும் உதவிகளுக்காகவும் அரசியல் ரீதியான பரப்புரைப் பணிகளுக்காகவும் சில மாதங்களேனும் சிறையிருக்க வேண்டி வரும் என்ற அளவில் மட்டும் அந்த வயதில் எனது அறிவுக்கு எட்டிய அளவில் சிந்தித்தேன். எனவே சி.பி.ஐ-யினர் என்னை 19-06-1991 அன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்திக் கைதுசெய்யப்பட்டதாக அறிவித்த போதுகூட எனது எண்ணமும் அப்படித்தான் சுழன்றது. அதன் அடிப்படையில்தான் எனது வழக்கில் கைது செய்யப்பட்ட நண்பர்களிடம் நீதிமன்றக் காவலில் வந்த பின்பு, ‘‘இன்னமும் மூன்று மாதங்களில் நான் பிணையில் சென்றுவிடுவேன்’’ எனக்கூறி வந்தேன்.

எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது - ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தில் திரு.தியாகராசன்,

ஐ.பி.எஸ் அவர்கள் என்னிடம் கையொப்பம் பெற்ற சமயத்தில் காவல் துறை, சட்டம், நீதி குறித்து ஏதும் அறிந்திராத அந்த வயதில் அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி, ‘‘அய்யா, இன்னமும் எத்தனை நாள் ஜெயிலில் என்னை வைத்திருப்பீர்கள்?”... அவர் பதிலுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘எத்தனை நாள் நீ ஜெயிலில் இருப்பாய்?”... நான் சொன்னேன், ‘‘ஒரு வருடம் இருப்பேன், அய்யா”. அப்போது அவர், ‘‘உனக்கு 5 வருடம் தண்டனை கிடைக்குமடா” என்றார். ‘‘அய்யய்யோ, அவ்வளவு நாளெல்லாம் என்னால் ஜெயிலில் இருக்க முடியாது” என்றேன். என்ன வேடிக்கை - அவர் குறிப்பிட்டதைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக 25 ஆண்டுகள் கடந்துபோய்விட்டன. அவர் 5 ஆண்டுகள் எனச் சொன்னதிலும் பொருள் இருந்தது. ‘தடா’ சட்டப்படி குறைந்தபட்சத் தண்டனையே 5 ஆண்டுகள்தான் என்பதை பின்னாளில் தெரிந்துகொண்டபோது புரிந்தது.

p20b.jpg

‘தடா’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பயங்கரவாதம் மற்றும் சீர்க்குலைவுகள் நடவடிக்கை தடுப்புச் சட்டம், 1987 (Terrorist and Disruptive Prevention Act, 1987) என்ற சட்டம் குறித்த அறிவு சிறிதும் எனக்கு இருக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல, எனது வழக்கை சார்ந்த எவருக்கும், எங்கள் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர்கள், ஏன் தமிழகத்துக்கே அன்று அறிமுகம் இல்லாத புதிய சட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் ‘தடா சட்டம்’, ‘தடா’ ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மையான, முழுமையான பாதிப்புகள் குறித்து அதனைப் பதிவு செய்த திரு.தியாகராசன் அவர்கள்கூட அன்றைக்கு முழுமையாக உணர்ந்திருக்கவில்லை என்பதை இன்று அவரது நிலைப்பாட்டின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

அந்தச் சட்டத்தின் உண்மையான கோரமுகம் குறித்து அறிந்தபோது யாருமே மீட்க முடியாத தூரத்துக்கு எமது வழக்குப் போய்விட்டிருந்தது. பூந்தமல்லி ‘தடா’ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோதுகூட நாங்கள் கொலைச்சதிக் குற்றத்தில் தொடர்பற்றவர்கள் என்பதால், அதன் முடிவு கடுமையானதாக இருக்கும் எனக் கற்பனை செய்திருக்கவில்லை. அதிகபட்சம் போனால் விசாரணைக் காலத்தினை மட்டும் தண்டனைக் காலமாகக் கருதி விடுதலை செய்துவிடுவார்கள் என்றுதான் நம்பினோம். அதிகபட்சம் 7 ஆண்டுகள் தண்டனை தந்துவிட்டால் 6 மாதங்கள் தண்டனைக் கழிவு தந்து அங்கிருந்தே விடுதலை செய்து விடுவது எனச் சிறை அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்பாட்டுடன் இருந்தனர்.

3 மாதங்கள், 1 ஆண்டு, 5 ஆண்டுகள் என இறுதியாக ஆறரை ஆண்டு சிறையோடு எங்கள் துன்பம் எல்லாம் தொலைந்துபோகப் போகிறது என்கிற கனவுகளோடு இருந்த வேளையில்தான் ‘தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் அவர்கள் 28-01-1998 அன்று இந்திய நீதித்துறை, இன்னும் சொல்லப்போனால் போர்க்குற்றம் அல்லாத போர் சூழலற்ற எந்த உலக நாடுமே அதற்கு முன்பு அளித்திராத ஒரு தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பெண்கள் உட்பட 26 பேருக்கும் சாகும் வரை தூக்கிலிட உத்தரவிட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதிகள் தமது பாரா 358-ல் இந்தத் தீர்ப்பைக் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருந்தனர்.

‘‘இது ஒரு நீதிப் படுகொலை.”

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 4

தொடரும் வலி..!தொடர்ஓவியம்: பாரதிராஜா

 

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

“உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது மட்டுமே; குறையற்றது என கொள்ள முடியாது” (Supreme Court judgment is final; but not infallible) - இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையை குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர். இந்தக் கருத்தைப் பதிவுசெய்தவர் ஓய்வுபெற்ற இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஒய்.கே.சபர்வால். இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த மூத்த வழக்குரைஞர் திரு.சோலி சோரப்ஜி அவர்களும் பல்வேறு கட்டுரைகள் வாயிலாக இதையே வலியுறுத்தி வருகிறார்.

இதையெல்லாம் விடுங்கள். எங்கள் வழக்கில் என்ன நடந்தது? எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனையை உறுதி செய்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை வகித்த நீதியரசர் திரு.கே.டி.தாமஸ் 25-02-2013 அன்று ‘The Hindu’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பு குறையுடையது; மறு ஆய்வுக்கு உட்பட வேண்டியது” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது சட்டப்படி பயனற்ற, காலம் கடந்த ஒப்புதல் வாக்குமூலமாக இருப்பினும் நமது நீதி வழங்கல் முறையை அம்பலப்படுத்தியிருக்கிறது. இது எங்கள் வழக்கில் மட்டுமே நிகழ்ந்துவிட்ட நீதிப் பிழையன்று.

p20a.jpg

காவல், சிறை, அரசியல், அரசு என அனைத்து அமைப்புகளாலும் பாதிக்கப் பட்டு நிற்கும் நாட்டின் கடைகோடி மனிதனின் இறுதிப் புகலிடம் மட்டுமே. அதிலும் கீழமை நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்டு விட்டால் இறுதியில் நீதிபெற உச்ச நீதிமன்றம் உள்ளது என்ற நப்பாசையாவது பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யதார்த்தத்தில் நீதி என்னவாக இருக்கிறது என்பதை பெரும்பாலும் யாரும் உய்த்துணர முற்படுவதில்லை. நிறுவப்பட்டுவிட்ட ஓர் அமைப்பு முறையைக் கேள்வி எழுப்ப எவருக்கும் அச்சம் கலந்த தயக்கம் இருக்கவே செய்கிறது.

26.08.2011 அன்று எம்மூவர் மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட செய்தி வெளியான பின்பு 02-09-2011 அன்று ‘The Asian Age’ இதழில், திரு.கே.டி.தாமஸ் ‘‘Death Penalty is nothing but brutal murder by state’’ எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் இறுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் உணர்ச்சி கொண்ட மக்களைத் திருப்திபடுத்த நிரபராதியான ‘ஏசு கிறிஸ்து’ கொல்லப்பட்டார் எனவும் அவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பெயர் ‘பிலாத்து’ எனவும் சொல்லி முடித்திருந்தார்.

இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் 07-09-2011 அன்று அவருக்கு ஒரு பதில் கடிதம் எழுதினேன். அதில், உளச்சான்றோடு அவர் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என அறிவுரை கூறும் பலருக்கும் தாங்கள் இந்தக் கட்டுரையின் மூலம் மிகச் சரியான பதில் தந்துள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டுவிட்டு, இறுதியில் கடிதத்தை இவ்வாறு முடித்தேன்...

‘‘அய்யா, தூக்குமேடை மீது நான் நிறுத்தப்படும் அந்த நேரத்தில், தூக்கிலிடுபவர் எனது கழுத்தில் சுருக்குக் கயிற்றினை இறுக்கும் அந்தச் சமயத்தில் இயற்கை அன்னையிடம் வேண்டுவேன்:

ஓ... இயற்கையே!
குற்றமற்ற இந்த மனிதனை கொல்லத்
துடிக்கும் அத்தனை மனிதர்களையும்
வரலாறு மன்னிக்கட்டும்.”


இதைக் குறிப்பிடக் காரணமிருக்கிறது. ‘நீதிப் படுகொலை (Judicial massocre) என உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட எமது வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையை எப்படி விசாரித்து முடித்தது என அறிய வேண்டாமா?

‘தடா’ சட்டப்படி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்புப் பறிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் திரு.கே.டி.தாமஸ், திரு.வாத்வா, திரு.காத்ரி ஆகிய மூவர் அடங்கிய அமர்வின் விசாரணையே எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு. குற்றவாளிகள் 25 பேரின் சார்பிலும் மூத்த வழக்குரைஞர் திரு.என்.நடராசன், ‘‘ராஜீவ் கொலை வழக்கு ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கத்தக்க தீவிரவாதக் குற்றமல்ல. இது ஒரு கொலை வழக்கு மட்டுமே’’ என வாதிட்டார். எதிர்வாதம் செய்ய முடியாத சூழலில் நீதிபதிகள் இதனை அப்படியே ஏற்றனர். பின்னர் நீதிமன்றத்துக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகச் சட்ட உறுப்பினர்கள் கருதினர்.

முதலாவது வாய்ப்பு - மீண்டும் கீழமை அல்லது உயர் நீதிமன்றத்துக்கு வழக்கை அனுப்பி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (CR.P.C.) விசாரிக்க உத்தரவிடுவது. இரண்டாவது வாய்ப்பு - ‘தடா’ சட்டம் ஒரு வழக்கில் பொருந்தாது என முடிவுக்கு வந்துவிட்டால் ‘தடா’ ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (IPC) ஒருவரை தண்டிக்க முடியாது என Bilal ahmed Kallos Vs A.P. State (1997) 7 Sec 431 வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் எங்கள் அனைவரையும் விடுதலை செய்வது. ஆனால், முற்றிலும் எதிர்பாராத நிலைப்பாட்டினை நீதிமன்றம் எடுத்தது.

அதாவது, ‘தடா’ சட்டம் எங்கள் வழக்குக்குப் பொருந்தாது என்றாலும், ‘தடா’ வாக்குமூலத்தை முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தித் தண்டிக்கலாம் எனக் கூறி முந்தைய தீர்ப்பை மாற்றி அமைத்தனர். அத்தோடு நிற்கவில்லை. ஏற்கெனவே கல்பனாத் ராய் என்ற அரசியல் தலைவர் ‘தடா’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒருவரது ‘தடா’ வாக்குமூலத்தை அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவருக்கு எதிரான ஆதாரமாகக் கொண்டு தண்டிக்கக் கூடாது எனக் கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. (KALPANATH RAI Vs STATE THROUGH CBI) (1997) 8 (Sec 732). அந்தத் தீர்ப்பும் எங்கள் வழக்கில் மாற்றி அமைக்கப்பட்டது - திருத்தப்பட்டது.p20.jpg

எங்கள் வழக்கில் மாற்றியமைக்கப்பட்ட புதிய இரண்டு சட்ட நிலைப்பாடுகள்தான் எங்கள் வழக்கை - வாழ்க்கையைத் தீர்மானித்தது - சின்னாபின்னமாக்கியது. உலகமே உற்றுநோக்கும் வழக்கில் 26 பேரையும் விடுதலை செய்து விடுவதில் நீதிமன்றம் யோசித்திருக்கும் போலும். ‘தடா’ ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தின் ஆபத்து குறித்து அறிந்த நிலையில் அதனை எதிர்த்தும், அவற்றில் எவ்வாறு துன்புறுத்திக் கையொப்பம் பெற்றனர் என்பது குறித்தும் விளக்கி வழக்கின் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் எழுத்துப்பூர்வமாக பதிவுசெய்த முறையீடுகள் நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமது தீர்ப்பு பாரா 405-ல் கீழ்க்கண்டவாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

‘‘ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையைப் பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலைப் பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

நாங்கள் நால்வரும் தூக்கில் இருந்த 1999-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எம்மை நேர்கண்டு பேச வந்த மறைந்த குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களின் மருமகள் திருமதி.மோகினி கிரி அவர்களிடம் ஆதாரங்களுடன் இதனை எடுத்துக் காட்டியபோது அதிர்ந்துபோனார். எங்கள் வழக்கில் எப்படியெல்லாம் மூன்றாம் தரமுறை (Third degree methods) பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தப் புலனாய்வில் அங்கமாக அன்று இருந்த ஆய்வாளர் திரு.மோகன்ராஜ் இன்று ஊடகங்கள் வழியே அம்பலப்படுத்தி வருவதை அனைவரும் அறிவோம்.

‘‘அம்மா, உங்கள் மகன் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக்கொடுத்தான் என்பதற்காகவெல்லாம் தூக்குத்தண்டனையா எனக் கூறி நீதிபதிகள் வழக்கைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். பாருங்கள்” என்றார் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர் ஒருவர். அன்று அவர் சொன்னது என்னமோ உண்மைதான். மிகப் பெரும் கொடூரக் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றம் கண்டிருப்பதால் இது ஒப்பீட்டளவில் ஒன்றுமில்லைதான். எங்கள் வழக்கில் மறைந்து போன நபரின் பேருருவம் நீதியின் கண்களைக் குருடாக்கிவிடும் என நாங்கள் எவருமே கற்பனை செய்திராத தருணம் அது.

ஆனால் அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கி, அதற்குப் பின்னர் எடுத்துக் காட்டாகக் கொண்டு எந்த நீதிபதியும் தீர்ப்புக் கூற முன்வராத, முரண்பாடுகளின் மொத்த உருவமாக, நேர்மையற்ற தீர்ப்பு ஒன்று (மீண்டும் திரு.கே.டி.தாமஸ் அவர்களின் 25.02.2013 பேட்டியை வாசியுங்கள்) ஏழு நபர்களை மட்டும் சதிக் குற்றவாளிகள் என அறிவித்து 11-05-1999 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட போது அன்த்தோல் ப்ரான்ஸ் என்பவரின் கீழ்க்கண்ட வாசகமே என் நினைவில் வந்தது.

‘நீதி என்பதே நிறுவப்பெற்ற அநீதியை
நியாயப்படுத்துவதுதான்’.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

 

பேரறிவாளன் டைரி - 5

தொடரும் வலி..!தொடர்

 

p38a.jpg

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

1940, ஜூலை 31 - இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்து சிறையொன்றில் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடப்பட்டார். அன்று கொல்லப்பட்ட மனிதரின் பெயர் உத்தம் சிங். கொலையுண்டவர் பெயர் ஜெனரல் மைக்கேல் ஓ.டயர். மரணதண்டனை நிறைவேற்றும்முன் உத்தம் சிங், ‘‘இதற்காக நான் பெருமைப்படுகிறேன். எனது நாட்டுக்காக, அதன் விடுதலைக்காகச் சாவதில் வருத்தம் ஒன்றுமில்லை’’ என்றார். 26-12-1899 அன்று பிறந்த உத்தம் சிங், தனது 41-வது வயதில் சாவைத் தேடிக்கொள்ள காரணம் என்ன?

இந்தியாவை அடிமைகொண்டிருந்த ஆங்கில அரசு தனது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள 1915-ம் ஆண்டு Defence of India என்ற ஆட்தூக்கிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. எந்தவிதக் கேள்வியுமின்றி எவரையும் சதிக்குற்றவாளி எனக் கூறி சிறையில் தள்ளும் அதிகாரம் தந்தது அந்தச் சட்டம். அதனால் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட நிலையில், 1919-ம் ஆண்டு The Anarchical and Revolutionary crimes Act என்ற சட்டத்தை அறிமுகம் செய்கிறது ஆங்கில அரசு. இதுவே நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ‘ரௌலட்’ சட்டம் ஆகும்.

அந்தச் சட்டமும் முந்தைய சட்டத்தைக் காட்டிலும் எந்த வகையிலும் கடுமைக் குறைந்ததாகக் காணப் படவில்லை. மக்களின் பெருத்த விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், சீக்கியர்கள் ஒன்றுகூடும் வைகாசி நாளான 13-04-1919 அன்று ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடிய சீக்கியர்கள் அனைவரும் ‘ரௌலட்’ சட்டத்துக்கு எதிரான தமது ஜனநாயக வழி எதிர் கருத்துக்களை முன்வைத்தனர். அந்த மக்கள் உணர்வுகளை ஒடுக்கவே, அழிக்கவே ஆங்கில அரசின் உத்தரவுக்கு இணங்க துப்பாக்கி, பீரங்கிகள் கொண்ட ஆங்கிலப் படையினர் ஜெனரல் ஓ.டயர் தலைமையில் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று தீர்த்தனர். அதன் எதிர்வினையாகவே 21 ஆண்டுகள் கழித்து 13-03-1940 அன்று ஓ.டயர் கொல்லப்படுகிறார். மரணதண்டனை நிறைவேற்றும் முன் உத்தம் சிங், ‘‘ரௌலட் சட்டத்தின் கொடூரமே தன்னை அந்த முடிவுக்குத் தள்ளியது” எனத் தெளிவான வாக்குமூலம் அளித்தார். அது அடிமை இந்தியாவில் நிகழ்ந்துவிட்ட கொடூரம்.

சுதந்திர இந்தியாவில் - 1985-ம் ஆண்டு - ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் Terrorist and Distriptive Activities (Prevention) Act, 1985, சுருக்கமாக ‘தடா’ சட்டம். 1985 காலகட்டத்தில் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளைக் காரணம் காட்டியே மத்திய அரசு அதனை அறிமுகம் செய்தது. பின்னர் சில திருத்தங்களுடன் 1987-ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. முதன்முதலில் 1985-ல் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என உறுதி கூறப்பட்டது. ஒரு சட்டம் கொண்டுவரும் போது அதனோடு அதற்கான விதிகள் (Rules) கொண்டு வரப்படுவதே சட்ட மரபு. ஆனால், இந்திய வரலாற்றில் அதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்காட்டுகள் இல்லாத வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு 18 மாதங்கள் கழித்து நவம்பர் 1986-ல் அதற்கான விதிகள் வகுக்கப்பட்டன.

ஆரம்பத்திலேயே குளறுபடியாகக் கொண்டு வரப்பட்ட ‘தடா’ சட்டம் 1987, 1989, 1991, 1993 என இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத்தில் நீட்டிப்பை பெற்றது. 1991-ம் ஆண்டு தவிர்த்து, பிற அனைத்து ஆண்டுகளிலும் குரல் வாக்கைக் கொண்டே சட்டம் நீட்டிப்பைப் பெற்றது. 1991-ம் ஆண்டு மட்டும் மொத்தம் உள்ள 542 உறுப்பினர்களில் 250 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அவர்களில் 134 பேர் நீட்டிப்புக்கு ஆதரவாகவும் 116 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மற்றபடி ஒவ்வொரு முறை நீட்டிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் வெறும் ஒரு மசோதாவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு ‘தடா’ மீதான விவாதத்தைத் திட்டமிட்டுத் தவிர்த்தனர். முதலில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அமலில் இருந்த இந்தச் சட்டம் 1993-ம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 25 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

மிக மோசமான மனித உரிமை மீறலுக்கு அடையாளமாகக் கருதப்பட்ட, இந்திய, உலகளாவிய மனித உரிமை அமைப்புகளாலும் கற்றறிந்தோராலும் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானதுமான ‘தடா’ சட்டத்தின் கொடூர முகம் பரவலான மக்கள் கவனத்தை எப்போது ஈர்த்தது தெரியுமா? 1993-ம் ஆண்டு அன்றைய பம்பாய் நகரை உலுக்கிய, 257 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக இருந்து செயல்பட்டார் என அரசு தரப்பால் குற்றம்சாட்டப்பட்டவர் சோட்டா சகீல். அவரின் AK 566 இயந்திர துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த குற்றத்துக்காக பாலிவுட் சினிமா நட்சத்திரமான சஞ்சய் தத் அவர்கள் கைதுசெய்யப்பட்ட போதுதான் பெருத்த கவனத்தையும் கண்டனத்தையும் இந்தச் சட்டம் பெறத் தொடங்கியது. தேசிய மனித உரிமை ஆணையத் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ‘தடா’வுக்கு எதிராக சஞ்சய் தத்துக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கிப் போராடினார். ‘தடா’ சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் பிணை (Bail) கோர முடியாது என்றாலும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் திரு.வியாஸ் மற்றும் திரு.பி.என்.நாய்க் ஆகியோர் கொண்ட அமர்வு தலையிட்டு சஞ்சய் தத் மீதான விசாரணை தொடங்காத நிலையிலேயே ‘தடா’ குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி அவரை பிணையில் விடுவித்தது.

‘தடா’ சட்டத்தின் கொடூரக் கரங்களுக்கு சஞ்சய் தத் மட்டும் இரையாகவில்லை. கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல வழக்குரைஞர்கள், நீதிபதிகளும் எனச் சமூகத்தின் அத்தனை மனிதர்களையும் ஓர் அரக்கனைப்போல் ஆட்டிப்படைத்தது ‘தடா’ சட்டம். பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்

திரு. அஜித் சிங் பெயின்ஸ் அவர்கள் 03-04-1992 அன்று ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு காவலர்களால் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டார். அவர் செய்த குற்றமெல்லாம், காலிஸ்தான் ஆதரவுக் குரல் எழுப்பப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார் என்பது மட்டுமே. நீதிபதி அவ்வாறு எந்தக் கருத்தையும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரும்கூட இருக்கவில்லை. இருப்பினும், அவரைக் கைதுசெய்து கைவிலங்கிட்டு சித்ரவதை செய்யவும் 2 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருக்கவுமான துணிச்சலை ‘தடா’ சட்டமே காவல் துறைக்கு வழங்கி இருந்தது.

இவற்றையெல்லாம் விடுங்கள். வட மாநிலம் ஒன்றில் ஒரு தள்ளுவண்டிக்காரர் காவல் துறைக்கு மாமூல் தரவில்லை என்பதற்காக வெல்லாம் அவரைப் ‘பயங்கரவாதி’ எனக் கூறி ‘தடா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்த கொடுமைகள் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் சுவரொட்டி ஒட்டியவர்கள்கூட ‘தடா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். அந்த  அளவுக்குக் கேள்வி கேட்பாரே இன்றி எவரையும் கைதுசெய்யும் அதிகாரத்தைத் ‘தடா’ சட்டம் காவல் துறைக்கு வழங்கியிருந்தது.

சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களையே பதம் பார்த்துவிட்ட ‘தடா’ சட்டம் உலகமே உற்றுநோக்கும் ராஜீவ் காந்தி என்ற செல்வாக்கு மிக்க மனிதரின் கொலை வழக்கில் மாட்டிக்கொண்ட சாமானியர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வுக்குத் தலைமை வகித்த திரு.கார்த்திகேயன் ஆங்கில பருவ இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்தபோது சொன்னார், ‘‘தடா சட்டம் இல்லையென்றால், எங்களால் ராஜீவ் கொலை வழக்கில் ஒருவருக்குக்கூட தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது.’’

எனில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ‘ரௌலட்’ சட்டத்தைக் காட்டிலும் ‘தடா’ சட்டத்தின் ஷரத்துக்கள் எத்தனைக் கொடூரமானவை? அந்தச் சட்டம் தமிழகத்தில் எப்போது, எந்தச் சூழலில் பயன்படுத்தப்பட்டது? அந்தச் சட்டத்தின் ஆயுட்காலம் எதுவரை நீடித்தது? அதன் பாதிப்புகளை இன்றுவரை நாங்கள் எவ்வாறு சுமக்கிறோம்? ‘தடா’ சட்டத்துக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களில் நாங்கள் மட்டும் எவ்வாறு புறக்கணிக்கப் பட்டோம் என்பதையெல்லாம் தாண்டி அந்தச் சட்டத்தினை எதிர்த்துப் போடப்பட்ட சர்தார் சிங் வழக்கின் தீர்ப்பு எங்கள் எதிர்காலத்தை எப்படித் தீர்மானித்தது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 6

தொடரும் வலி..!தொடர்

 

p381.jpg

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

1980-களின் இறுதியில் தமிழகத்தை உலுக்கியப் பெயர், ‘பாண்டியம்மாள்’. காணாமல்போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் துறையிடம் கணவர் முறையிட, அடையாளம் தெரியாத ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கணவனையே கொலைகாரனாக்கி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது காவல் துறை. அந்தப் பொய்யை உண்மையாக்கச் சாட்சிகள் ஜோடிக்கப் பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்றத்தில் உயிருடன் தோன்றினார் பாண்டியம்மாள்.

இந்திய சாட்சிய சட்டப்படி (Indian Evidence Act) காவல் துறை அதிகாரி முன்பு தரும் வாக்குமூலம் ஒருவரைத் தண்டிக்கச் சாட்சியமாகக் கொள்ள முடியாது என்ற நிலையில், ஒரு நிரபராதி மனிதனின் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிட்டது. அந்த வழக்கின் இறுதியில் உண்மை வெளிப்பட்டபோது, அது இந்திய நீதித் துறையின் மனச்சான்றை உலுக்கியது. காவல் துறை ஒரு மனிதனிடம் எங்ஙனம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுகிறது என்பதற்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

 காவல் நிலையக் கொடுமைகள் குறித்து - சற்று சிந்திக்கத் தெரிந்த அனைவருமே இதுகுறித்து நன்கு அறிவர். இது, இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்து வருகிற கொடுமை அன்று. நீடித்து நிலைபெற்றுவிட்ட உலகளாவியச் சிக்கல். அதற்குத் தீர்வுகாணவே மேலை நாடுகள் புலனாய்வு முறை, ஆதாரங்கள் திரட்டுதல், தண்டனை பெற்றுத் தருதல் என்பனவற்றில் பல்வேறு நவீன முறைகளை, நாகரிக வழிகளைக் கண்டறிந்து கையாண்டு வருகின்றன. இந்தியாவிலோ, காவல் சீர்திருத்தங்கள் (Police Reformation) குறித்து உச்ச நீதிமன்றம் தொடந்து தீர்ப்புகள் வழங்கிய பின்னரும் இன்னமும் உறுதியான, ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் ஏதும் இல்லை என்பதே வருத்தம் தரும் நிலையாக உள்ளது. இன்னமும் அடித்து உதைப்பதிலும், மூன்றாம்தர முறை விசாரணை முறைகளிலும் நம்பிக்கையோடு இயங்கும் காவல் துறையாகவே நீடிக்கிறது.

இவ்வாறான காவல் துறையின் கண்காணிப் பாளர் பதவிக்குக் (Superintendent of police) குறையாத ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவரிடம் பெறும் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை ஏற்று அதையே பிரதான சாட்சியம் (Substantive Evidence) என எடுத்துக்கொண்டு தண்டிக்கலாம் என்கிறது ‘தடா சட்டப் பிரிவு 15. இந்தியக் குற்றவியல் சட்டங்களுக்கு முற்றிலும் முரணான எதிரான நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒருவர் தரும் ஒப்புதல் வாக்கு மூலத்தை அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிறருக்கு எதிராகவும் சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என அனுமதிக்கிறது, ‘தடா’ சட்டம். இது பெரும் கொடுமை அல்லவா!

எனது ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தைப் பதிவுசெய்த அதிகாரி திரு.தியாகராசன் ஐ.பி.எஸ் அவர்கள் பின்னாளில் என்ன சொன்னார் என்பதைப் பின்னர் சொல்கிறேன். 11.05.1999 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எனக்குத் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட பின்பு, நான் அடைக்கப்பட்டிருந்த சேலம் நடுவண் சிறையைச் சுற்றிப் பார்க்க வந்த பயிற்சி இந்தியக் காவல் பணிகள் (ஐ.பி.எஸ்) அதிகாரி ஒருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் குறித்து நான் சொன்னபோது, ‘‘நாங்கள் துன்புறுத்திப் பெறும் வாக்குமூலங்களை நம்பியா உங்களுக்குத் தண்டனை!” என வியப்புடன் கேட்டு வருத்தப்பட்டார். ஒரு பயிற்சிக் காவல் அதிகாரிக்குத் தெரிந்த உண்மை, பண்பட்ட நீதிபதிகளுக்குத் தெரியாதா என்ன?

“கனம் நீதிபதி அவர்களே! ஒரே ஒரு நாள் நமது காவல் துறையின் சித்ரவதையை எதிர்கொண்டால் நீங்களும் எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிடுவீர்கள்” என கர்தார் சிங் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அரசியல் அமர்வின் முன்பு வாதிட்டார், இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான திரு.ராம்ஜெத்மலானி. அதைவிட, காவல் துறை பதிவுசெய்யும் ஒப்புதல் வாக்குமூலத்தின் கொடூரத்தன்மை குறித்து எந்த வகையிலும் எடுத்துக்காட்டிவிட முடியாது. ‘தடா’ சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் எதிர்ப்புகளைப் பெற அடிப்படைக் காரணமே இந்த ஒப்புதல் வாக்குமூலப் பிரிவுதான்.

p38a.jpg

எங்கள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 17 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. அந்த 17 வாக்குமூலங்களையும் பதிவுசெய்தவர் ஒருவரே. அவர், திரு.தியாகராசன் ஐ.பி.எஸ் அவர்கள். அனைவருமே, தமது 60 நாள் சி.பி.ஐ காவல் துறையின் விசாரணைக் காலம் முடியும் நாளுக்கு முந்தைய நாள், அதாவது 59-வது நாள், ஒப்புதல் வாக்குமூல ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர் (எனில், 58 நாட்களின் சி.பி.ஐ சித்ரவதைகளைப் புரிந்துகொள்ளுங்கள்). எங்கள் வழக்கில் மொத்தம் 288 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் திரு.தியாகராசன் ஐ.பி.எஸ் அவர்கள் 52-வது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் மூலம் அரசுத் தரப்புச் சான்று ஆவணங்களாகக் குறிக்கப்பட்ட 17 வாக்குமூலங்களைக் கொண்டே, அதனை நம்பியே வழக்குக் கட்டியமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பத்தி 666-ல், “திரு.ராஜீவ் காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர். இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவுசெய்யப் பட்டவையாகும்” என நீதிபதிகள் கூறியுள்ளதில் இருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

‘தடா’ சட்டத்தின் அடுத்த மோசமான ஷரத்து எதுவெனில், சட்டப்படியான ஒரு மேல்முறையீட்டு வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பிரிவு 19 ஆகும். சாதாரணமாக, ஒரு கொலை வழக்கைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (C.R.P.C.) மாவட்ட அமர்வு நீதிபதி அல்லது கூடுதல் நீதிபதி பதவி வகிப்பவர் விசாரித்துவிட்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC)படி ஆயுள் அல்லது தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பளிக்கிறார். தூக்குத் தண்டனை அளித்துவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 366-ன் கீழ் இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு அதனை உறுதிசெய்த பின்பே தண்டனையை நிறைவேற்ற முடியும். இந்த எல்லா அடிப்படை உரிமைகளையும் மறுத்துவிடுகிறது ‘தடா’ சட்டம்.

இறுதித் தீர்ப்பு மட்டுமல்ல, ‘தடா’ நீதிமன்றம் அளித்திடும் எந்த உத்தரவை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தை அணுகிவிட முடியாது. உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். ‘தடா’ சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் உரிமை, அதற்கான நீதிபதியைத் தேர்வு செய்யும் உரிமை நீதித்துறைக்குக் கிடையாது. நடுவண், மாநில அரசுகளுக்கு மட்டுமே உண்டு என்கிறது தடா சட்டம் (பிரிவு 9). நடுவண், மாநில அரசுகளுக்குள் இணக்கமான கருத்து ஏற்படாச் சூழலில் நடுவண் அரசின் முடிவே இறுதியானது என்கிறது சட்டம். அந்தத் ‘தடா’ நீதிமன்றம் எந்த இடத்திலும் தனது விசாரணையை வைத்துக்கொள்ளலாம் (பிரிவு 10). முறையாக அறிவிக்கப்பட்ட கட்டடத்தில் இயங்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் வழக்கில் சிறைக்குள்வைத்தே பல நாட்கள் விசாரணை நடைபெற்றது. அரசால் நியமிக்கப்படுகிற அந்த நீதிபதி தனது பணி ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் பணியில் நீடிக்கலாம். குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது வழக்குரைஞரும் இல்லையென்றாலும் வழக்கை நடத்தலாம் (பிரிவு 14(5)).

என்ன வேடிக்கை, அரசே எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அரசே - உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ அல்ல - அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தை அமைக்கிறது. நீதிபதியை நியமிக்கிறது. பின்னர் தீர்ப்புக் கிடைக்கிறது எனில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து எங்களால் உயர் நீதிமன்றம் செல்ல முடியாது. எங்கள் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தால் எங்கள் எழுவருக்கும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்பில் விடுதலை கிடைத்திருக்கும் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, எல்லா மேல்முறை யீட்டுக்கும் டெல்லி செல்ல ஏழைகளால் முடியுமா?

சஞ்சய் தத் போன்ற அதீதமான செல்வாக்குக் கொண்டவர்கள் தவிர்த்து, ‘தடா’ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட வேறு எவரது பிணை வழக்கையும் உயர் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட தில்லை. எங்கள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் ஒருவர்கூட விசாரணைக் காலம் முழுமைக்கும் பிணையில் செல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை ஒருமுறை என்னைச் சந்திக்க வந்த திரைப்பட இயக்குநர் அண்ணன் ஜனநாதனிடம் கூறினேன். அதைக்கேட்டு லேசாக அதிர்ந்த அவர், “இது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இந்தத் தகவல் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்றார்.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 7

தொடரும் வலி..!தொடர்

 

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

“எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது” என தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டார் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மார்ஷல்.

எங்கள் வழக்கில் என்ன நடந்ததென்றால், 26 பேரில் ஏறத்தாழ 20 பேர்வரை ‘தடா’ நீதிமன்றத்தில் வாதிட வழக்குரைஞர் ஒருவரை அமர்த்தி வழக்காடும் வசதியின்றி வக்கற்றவர்களாக இருந்தோம். அதனால், அரசு செலவில் அமர்த்தித் தரும்படி நீதிமன்றத்தில் மனுசெய்து அவ்வாறு அமர்த்தப்பட்ட வழக்குரைஞர்களை நம்பியே எங்கள் எதிர்கால வாழ்வை ஒப்புவித்தோம். ஏனைய 4, 5 பேர்கூட மிகச் சாதாரண அளவில் ‘தடா’ நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமே வழக்குரைஞரை அமர்த்த முடிந்தது.

p18a.jpg

ஒரு சாதாரண உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்த எனது தந்தையின் சொற்ப ஊதியத்தை நம்பியே அன்று எனது தமக்கையின் திருமணம், தங்கையின் பொறியியல் பட்டப்படிப்பு ஆகியன காத்திருந்தன. எனது கைது ஏற்படுத்திவிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் எனது தங்கைக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டது. எனவே, படிப்பை இடைநிறுத்துவது என எனது பெற்றோர் முடிவெடுத்தனர். அந்த நிலையில், “எக்காரணம் முன்னிட்டும் கல்வியை இடைநிறுத்த வேண்டாம். முழுக் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என உதவினார், சென்னை மாணவர் நகலகத்தின் உரிமையாளரும், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனருமான அய்யா அருணாச்சலம் அவர்கள். நான் விடுதலை பெற்றவுடன் முதல் சந்திப்பாக அவரைச் சந்தித்து அவருக்கு வியப்பைத் தரவேண்டும், அதன் மூலம் எனது நன்றியை உணர்த்த வேண்டும் என எண்ணமிட்டிருந்தேன். அந்தோ கடந்த 23.05.2016 அன்று அவர் மறைந்துபோனார்.

சி.பி.ஐ புலனாய்வுத் துறை மிகப் பெரும் பொருட்செலவில் யானை பலத்தோடு ஒரு வழக்குரைஞர் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு எங்களுக்கு எதிராக வாதிட்டு வந்த நிலையில், அவர்களுக்கு ஈடாக ஒரு வழக்குரைஞரை அமர்த்தித் தர என் தந்தையால் எங்ஙனம் இயலும்? என்னைக் காட்டிலும் மோசமான பொருளாதார நிலையிலேயே பெரும்பாலும் அனைவரும் அன்று இருந்தனர். ‘தடா’ நீதிமன்றத்தில் பிணைத் தள்ளுபடியான பின்பு, நாங்கள் எப்படி உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து பிணை பெற்றிருக்க முடியும்.

257 பேரை பலிகொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் தத் உட்பட பெரும்பாலானோர் பிணையில் சென்றனர். தமது அன்றாட வாழ்க்கையை நடத்தினர். வெளிநாடுகளுக்குச் சுற்றுலாக்கள் சென்று திரும்பினர். திரைப்படங்களில் நடித்தனர். பிணை தந்த சுதந்திரத்தால் தங்களுக்கு எதிரான வழக்கை வலிமையுடன் எதிர்கொண்டு வாதிட்டனர். ஆனால் எங்கள் வழக்கிலோ, தனது கணவர் விஜயனின் ஒப்புதல் வாக்குமூலம் தவிர்த்து ஒற்றைச் சாட்சியும்கூட இல்லாமல், எட்டு ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த அவரது மனைவி செல்வலட்சுமிக்கும்கூட பிணை கிடைக்கவில்லை. காரணம், உச்ச நீதிமன்றம் செல்லப் பொருள் வசதி இல்லை என்பது மட்டுமே.

தற்போது சில சிறை நண்பர்கள் வேடிக்கையாக என்னிடம், “உங்களுக்கு என்னப்பா, உங்களுக்கு வாதிட இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி இருக்கிறார். அனில் திவான், கொலின் கொன்சால்வஸ், வைகை, யுக் மோத் செளத்ரி எனப் பலர் உள்ளனர். தமிழக அரசே உங்களுக்காக மூத்த வழக்குரைஞர் திரு.ராஜேஷ் திரிவேதி போன்றோரைவைத்து வாதிடுகிறது” என்பர்.

p18.jpg

அப்போதெல்லாம், 28.01.1998 அன்று எங்கள் 26 பேருக்கும் ‘தடா’ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கும்வரை நல்லதொரு வழக்குரைஞரை அமர்த்திடவும் வக்கற்று அரசியல் அநாதைகள்போல் இருந்த எங்கள் நிலையையோ, பின்னர் பல்வேறு தமிழ், மனித உரிமை அமைப்பினர் ஒருங்கிணைந்து ‘26 தமிழர் வழக்கு நிதிக்குழு’ அமைத்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொண்டபோது, 25 பேர் சார்பிலும் மூத்த வழக்குரைஞர் திரு.என்.நடராசன் தவிர்த்து வேறு எவரும் வாதிடும் சூழல் நிகழவில்லை என்ற நிலையையோ என்னால் விளக்க முடியாமல் ஒரு மௌனத்தோடு கடந்து போய்விடுவேன்.

அந்த நண்பர்கள் குறிப்பிடுகிற தற்போதைய மாற்றமெல்லாம் - முன்னேற்றமெல்லாம் 2011-ல் மூவர் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள். இடையில், குற்றமற்ற தனது மகனையும் அவனோடு பிறரையும் மீட்க என ஒரு தாயின் 20 ஆண்டுகால இடைவிடாத கண்ணீர் நிறைந்த போராட்டம் இருக்கிறது. நீதிக்கான அந்தப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு, அதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர்களின் - புதிய இளந்தலைமுறை ஒன்றின் தன்னலமற்ற உழைப்பு, தியாகம் இருக்கிறது. எனவே, ஒற்றை இரவில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் இல்லை அவை.

1985-ல் அறிமுகம் செய்யப்பட்ட ‘தடா’ சட்டம் தமிழகத்தில் ராஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகே முதன் முதலில் அமலுக்கு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 329/91 எனப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ‘தடா’ சட்டம் இல்லை. 24.05.91 அன்று சி.பி.ஐ புலனாய்வுத் துறை வழக்கைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்பும் அந்தச் சட்டம் இல்லை. சில நாட்கள் கழித்தே இணைக்கப்படுகிறது தமிழகத்தில் முதல் வழக்கு.

1990-ம் ஆண்டு நிகழ்ந்துவிட்ட பத்மநாபா கொலை வழக்கும்கூட, ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. மே 1991 முதல் பிப்ரவரி 1993 காலப்பகுதிக்குள் ஏறத்தாழ 147 வழக்குகள் ‘தடா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பலரும் கைதுசெய்யப்பட்டனர். சர்வதேச, இந்திய அளவில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான ‘தடா’ சட்டம் 24.05.1995 அன்று நாடாளுமன்றத்தில் நீட்டிப்புப் பெறாமல் கைவிடப்பட்டது.

 

அந்தச் சட்டம் கைவிடப்பட்டதால் எங்களுக்கு ஏதும் நன்மை கிடைத்துவிட்டதா? ஒன்றும் நடக்கவில்லை. ‘தடா’ சட்டம் இல்லை என்றாலும், ‘தடா’வின் கீழ் வழக்கைப் பதிவு செய்துவிட்டால், அந்தச் சட்டத்தின்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என பிரிவு 114 கூறுவதால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எங்கள் வழக்குக்கு இறுதியில் ‘தடா’ சட்டம் பொருந்தாது எனத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். அதனால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஆனால், இந்த அநீதிகள் அனைத்தையும் களைந்து எங்கள் வாழ்வையே புரட்டிப்போட வல்ல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. ஒன்றுமறியா எந்த மனிதனின் வாழ்வையும் சின்னாபின்னப் படுத்தவல்ல அரக்கனான ‘தடா’ சட்டம் அரசியல் சட்டப்படி செல்லுபடி ஆகாது என அறிவிக்கக் கோரி சர்தார் சிங் என்பவர் பெயரில் போடப்பட்ட வழக்கு அது. ஒட்டுமொத்தமாக இல்லையென்றாலும் ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரிவு 15 மற்றும் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்பைத் தடுக்கும் பிரிவு 19 ஆகியன சட்டவிரோதமானது எனக் கூறி தீர்ப்பு வெளியாகும் என்பதாகச் சட்ட அறிஞர்களால் கருதப்பட்ட நிலையில், அனைவரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தகர்த்துத் தீர்ப்பு வெளியான நாள் 11.03.1994.

‘தடா’வின் அத்தனைச் சட்டப் பிரிவுகளும் சரியானவை எனப் பெரும்பாலும் ஒத்தகருத்தோடு 5 நீதிபதிகளும் தீர்ப்பெழுதிய நிலையில், ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு 15 மட்டும் சட்டவிரோதமானது என நீதியரசர்கள் திரு.ராமசாமி மற்றும் திரு.சகாய் இருவரும் மாறுபட்ட தீர்ப்பெழுதினர். ஐவரில் இன்னும் ஒருவரின் நிலைப்பாடு அந்த இருவருக்கு ஏற்ப இருந்திருந்தால் எங்கள் எதிர்காலமே மாறிப் போயிருக்கும் என்ற நிலையில், அதற்கு மாறான தீர்ப்பினை எழுதினர் ஏனைய மூன்று நீதிபதிகள். அதுவே பெரும்பான்மை தீர்ப்பானது. அந்த மூன்று நீதிபதிகளில் இருவர் திரு.புன்சி மற்றும் திரு.அகர்வால். மற்றொருவர் அந்த ஐவர் அமர்வுக்குத் தலைமை வகித்த தமிழர் நீதியரசர் திரு.ரத்னவேல் பாண்டியன்.

(வலிகள் தொடரும்)

vikatan

 

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 8

தொடரும் வலி..!தொடர்

 

‘மரணம்’ - ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன். ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு எதிர்நிற்கும் என நான் கற்பனையிலும் கண்டதில்லை.

சொர்க்க, நரகத்திலும், முற்பிறவி, மறுபிறவியிலும் நான் நம்பிக்கையற்றவன் என்பதை முன்பே அறிவீர்கள். மத, இறை நம்பிக்கையற்ற பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் எனது வாழ்வில் அவை குறித்து நினைத்துப் பார்த்ததும் இல்லை. எந்தக் கருத்தும் சரியானதுதானா என்பது குறித்து அவை குறித்த தர்க்கரீதியான வாதங்களில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, உரிய சோதனைக் களத்தில் (Testing Field) மட்டுமே இறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கை உடையவன். எனக்கான சோதனைக் களமும் வந்தது. ‘தடா’ சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் எனக்கும் பிற மூவருக்கும் உறுதி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட பிறகு, உயிர் தப்ப அடுத்த வாய்ப்பு ஏதும் இல்லை.

தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கருணை மனுத் தாக்கல் செய்வதுதான் நான் உயிர்தப்ப உள்ள ஒரே வாய்ப்பு என அப்போது சொல்லப்பட்டது.

p26.jpg

‘கருணை மனு’ என்பது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருவது என்பதே எனச் சிறை காவலர்களால் அவர்கள் அறிந்த அளவில், எனக்கு கருத்துக் கூறப்பட்ட நிலையில், நிரபராதியான நான் அதில் உடன்பாடற்று இருந்தேன். அவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் ராஜீவ் கொலையில் மன்னிப்பெல்லாம் கிடைக்குமா என்பது அய்யமே என கூடுதலான ஒரு தகவலையும் சொல்லிவைத்தார்கள். இந்திரா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சதிக்குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை பெற்ற கெகர் சிங் (Keher Singh) கருணை மனு குறித்து தொடுத்த வழக்கில் தனது கருணை மனுவில் நிரபராதி என்பதற்கான வாதங்களை முன்வைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு மாறாகக் குடியரசுத் தலைவர், ஆளுநர் மனுதாரரை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யலாம்’ என உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அரசியல் அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து அறியாத தருணம் அது.

1971-ல் பிறந்த நான் ஒரு சராசரி இளைஞனுக்கு உள்ள கனவுகளோடுதான் வளர்ந்தேன். மிகச் சிறந்த படிப்பாளி அல்ல. இருப்பினும், பெற்றோருக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் அளவுக்கு கல்வியில் தாழ்ந்ததுமில்லை. ஒழுக்கக் குறைவானவன் என ஒரு நாளும் என்னைப் பற்றி எனது பெற்றோரிடம் எவரும் முறையிடும் அளவுக்கு நான் வாழ்ந்ததும் இல்லை. மிகவும் அன்பான இரண்டு சகோதரிகளைப் பெற்றதால் பாசத்துக்குப் பஞ்சமில்லை. எனது தாய், தந்தை என இரு வீட்டாரிலும் நானே மூத்த ஆண் வாரிசு என்பதால், இரு வீட்டாரின் அன்புக்கு அளவில்லை. இங்ஙனம் வளர்க்கப்பட்ட என்னிடம் அன்பைத் தவிர்த்து வேறு எந்தக் குணமும் குடிகொண்டிருக்கவில்லை. ராஜீவ் காந்தியை மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுமைக்கும் எவரையும் காயப்படுத்த நான் எண்ணவில்லை.

அப்படியான நான் 19 வயதில் கைது செய்யப்பட்டு பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்றாலும் இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், அனைத்தையும் பொய்யாக்கி உச்ச நீதிமன்றத்தாலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். பரந்த உலகம் ஒன்றில் ஒரு பறவையைப்போல் சுற்றித் திரிந்த நான், 6 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்ட அகண்ட சுவர்களால் சூழப்பட்ட அறை ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப்பட்டேன். உறவுகளின் கூட்டத்தாலும் அவர்களின் அளவற்ற அன்பாலும் சூழப்பட்டிருந்த என் உலகத்தில் தனிமை தவிர்த்து எதுவுமே இல்லாமல் போனது. தனிமை என்றால் சாதாரண தனிமை அல்ல - 24 மணி நேரமும் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் (எனக்குப் பாதுகாப்பாய்!) காவலர் முன்புதான், பகலை விஞ்சும் வெளிச்சத்தைப் பீய்ச்சும் விளக்கொளியில்தான், எந்த மறைப்பும் இன்றி எனது காலைக்கடன்களை முடித்திடவும் உண்ணவும் உறங்கவுமான தனிமை அது.

எப்போதும் ஒரு வெள்ளைக் கால்சட்டை, கைச்சட்டை. உள்ளாடை அணிய அனுமதி கிடையாது. (லங்கோடு என ஒன்றைத் தருவார்கள்). கால் செருப்பு அணிய முடியாது. பகல் நேரங்களில் பக்கத்தில் அடைபட்டிருக்கும் எனது வழக்கின் நண்பர்கள் தவிர, எனது துன்பம் பகிர மனிதர் எவரும் இல்லை. என்னைப்போலவே துன்பத்தில் இருக்கும் அவர்களிடம் எனது துன்பத்தை எப்படிப் பகிர்வது? வாரம் ஒரு முறை வரும் எனது தாயாரிடமும் எப்போதாவது வரும் பிற உறவுகளிடமும் காவலர் புடைசூழப் பேசுகிற நேர்காணலில் எந்தத் துன்பத்தை நான் சொல்வது? அப்போது நான் சேலம் நடுவண் சிறையில் உள்ள உயர் பாதுகாப்புத் தொகுதியில் அடைக்கப்பட்டுக் கிடந்தேன்.

எல்லாம் முடிந்து போனது - முடிவுக்கு வந்துவிட்டது. என் சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. மனதளவில் என்னால் எதிர்கொள்ள முடியாத பெரும் சுமை அது என்பது தெரியும். உள்ளம் மொத்தமும் வேதனையும், உறக்கம் தொலைத்த இரவுகளுமாகக் கழிந்த நாட்கள் அவை. குற்றமேதும் செய்யாத எனக்குக் கொலைத் தண்டனையா? போன பிறவியில் செய்துவிட்ட தவறுக்கான தண்டனை என்றோ அல்லது இந்தப் பிறவியிலேயே செய்துவிட்ட வேறு ஏதேனும் குற்றத்துக்கான தண்டனை இது என்றோ என் பகுத்தறிவு மனம் ஏற்கத் தயாராக இல்லை. விதி என்று சொல்லியும் என்னால் விட்டு ஒதுக்க முடியவில்லை. அது சொல்ல முடியாதத் தவிப்பு, சொல்லில் அடங்கா பெருந்துன்பம்.

அப்போதுதான் முதன்முறையாகப் புரியத் தொடங்கியது - அவ்வளவு எளிதில் மீளவே முடியாத பெரும் சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டு விட்டேன் என்பது. அரசியல் சூழ்ச்சியில் பலியாகிப்போன எத்தனையோ அப்பாவி மனிதர்களில் நானும் ஒருவனாகிச் சாகப் போகிறேன் என்பதை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது. இதனை எதிர்க்க எனக்கு வழியுமில்லை - பலமுமில்லை. மரணத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் என்னிடம் இல்லை. சாவைச் சந்திப்பதற்கு முன்பாக ஒரு சாதாரண மனிதனாக எனக்கு நானே கட்டிவைத்திருந்த எனது எதிர்காலக் கனவுக் கோட்டையைச் சிதைக்க வேண்டும். அதுவே, எனக்குச் சாவை எதிர்கொள்வதைக் காட்டிலும் சவாலாக இருந்தது. எனது மரணம் பரிதாபத்துக்குரியதுதான். இருப்பினும், எந்த நிலையிலும் அழுதுவிடக் கூடாது - கண்ணீர் சிந்திவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

அந்தச் சிறையின் சிறை அலுவலர் அறைக்குப் பின்புறம்தான் தூக்குமேடை அமைந்திருந்தது. அந்த அறையின் சன்னல் வழியே அதைப் பார்க்க முடியும். என்னைப் பலியிடப்போகும் அந்த பலிபீடத்தைப் பழக்கப்படுத்திக்கொள்வது இறுதி நிமிடங்களில் பதற்றத்தைத் தவிர்க்கும் எனக் கருதி அதைப் பார்த்துவைத்தேன். அந்தச் சிறையில் இறுதியாகத் தூக்கிலிடப்பட்டவரின் இறுதி நிமிடங்கள் எப்படிக் கழிந்தன எனக் காவலர்களிடம் கேட்டறிந்தேன்.

28 வயதில் வாழ்க்கையைப் பற்றிய புரிதலே எனக்கு முழுமையடையாதபோது, மரணத்தை எங்ஙனம் புரிந்துகொள்வது? அந்தத் துணிவை தருவதற்கு எனக்கு ஒரு துணை தேவைப்பட்டது. ஆத்திகர்களுக்கு உள்ள விதி, தலையெழுத்து, பிறவிப் பயன் என்ற பெயர்களில் தேடுதலுக்கும் வழியில்லை, ஆண்டவனிடம் அழுது முறையிட்டு ஆறுதல்படவும் வாய்ப்பில்லை. இந்த 25 ஆண்டுகால என் நீதிக்கான போராட்டத்தில் இதுவரை எத்தனையோ இந்து, கிறிஸ்தவ, இசுலாமியர் எனப் பாகுபாடு இல்லாமல் உண்மையான பாசத்தோடும் மனிதத்தோடும் தங்களது அன்பை, ஆதரவைச் செலுத்தி வருகின்றனர். அவர்களின் அன்பு இல்லையென்றால், இன்று நான் இல்லை. அவர்களின் மனிதம் போற்றத்தக்கது. நீதிக்கான அவர்களது குரலே என் பலம். இருப்பினும், என்னை முழுமையான நாத்திகனாக உணர்ந்த அந்தத் தருணத்தைப் பதிவுசெய்வது எனது கடமை.

எனக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி மரணத்தை எதிர்கொள்ளும் துணிவைத் தந்தவர் வள்ளுவர். ‘இடுக்கண் அழியாமை’ அதிகாரத்தின் ஒவ்வொரு குறளையும் “உறங்குவது போலும் சாக்காடு’’ என்ற வாக்கியத்தையும் எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது. அவைதான் எனக்கு வாழ்வு, மரணம் ஆகியவற்றின் ஆழ அகலத்தை அறிமுகம் செய்தது. வள்ளுவம் தந்த தெளிவுதான், குற்றமற்ற எவரையும் கொல்லத் தயாராக இருக்கும் இந்த நீதி அமைப்பு முறை குறித்த புரிதலைத் தந்தது. மரண தண்டனை என்ற போலியானதும், ஏற்றத்தாழ்வு மிக்கதுமான தண்டனை வடிவம் குறித்து ஆராயும் உணர்வை உண்டாக்கியது. எல்லாம் சரி, மரணத்தை எதிர்கொள்ளும் மன உறுதியை வள்ளுவம் தந்து விட்டது. எட்டு ஆண்டு உழைப்பும் வீணாகி எனக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துவிட்ட என் தாயாரின் முகத்தைப் பார்க்கும் துணிவை மட்டும் எனக்கு எந்த நூலும் வழங்கவில்லை. அந்த உணர்வை வேறு ஒரு சமயம் எழுதுவேன்.

மற்றபடி 09.06.1999 அன்று அதிகாலை தூக்கிலிடப்படுவதாக நாள் குறிக்கப்பட்ட செய்தியை எனக்கு முறைப்படி அறிவித்த - எத்தனையோ படிப்பினைகளைக் கொடுத்துச் சென்ற மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 9

தொடரும் வலி..!தொடர்

 

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

‘கேட்பது உயிர் பிச்சையல்ல... மறுக்கப்பட்ட நீதி’ என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எனது தண்டனையை உறுதி செய்த பின்பும் அதுவே எனது போராட்டமாக இருந்து வருகிறது. இந்திய நீதியியல் அமைப்பு முறையில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்ற மேல் முறையீடு, இறுதியாக உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்பு என்ற அடுக்குகள் உள்ளதை அறிவோம். எங்கள் வழக்கு ‘தடா’ சட்டப்படியானது என்பதால், உயர் நீதிமன்ற வாய்ப்புப் பறிக்கப்பட்டது என்பதை ஏற்கெனவே கண்டோம். உச்ச நீதிமன்றத்தின் இருவர் (அ) மூவர் கொண்ட அமர்வு ஒரு கொலை வழக்கில் தீர்ப்பளித்துவிட்டால், அதுவே இறுதியாகிவிடுகிறது... தவறானதாக இருந்தாலும்கூட.

உச்ச நீதிமன்றமும் தவறிழைத்துவிட்டால் அதனை நேர் செய்ய அரசியல் சட்டத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பு (Article 137 - Review of judgements or orders by the supreme court) வழங்கப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் 0.001 சதவிகித அளவில்தான் சீராய்வு மனு ஏற்கப்படுகிறது. காரணம், எந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களோ அவர்களேதான் சீராய்வு மனுவினையும் விசாரித்துத் தீர்ப்புத் தருகின்றனர். எங்கள் வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்களைச் சுட்டிக்காட்டிச் சீராய்வு மனுத் தாக்கல் செய்தபோது, மூன்று நீதிபதிகளும் வழக்குக்குள் செல்லாமல் சீராய்வு மனுவுக்குள்ள எல்லைகள் குறித்து தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை மட்டும் வெளிப்படுத்தித் தீர்ப்புத் தந்தார்கள். நீதிப் பிழையைச் சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கூறி சீராய்வு மனுவின் எல்லையினை அகலப்படுத்தினார்கள். (to maintain a review petition it has to be shown that there has been miscarriage of Justice. Of course, the expression ‘miscarriae of justice’ is all embracing) இருப்பினும், நீதிபதிகள் எங்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை.

p26.jpg

பின்னர் 2002-ல் Rupa Ashok Hurraa Vs Ashok Hurra (2002) 4 Sec 388) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தனது அதிகார எல்லையைப் பயன்படுத்தி புதிய சட்ட வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தியது. அதுவே குறை தீர்வு மனு (Curative Petition). சீராய்வு மனு முடிவுக்கு வந்த பின்பு குறை தீர்வு மனுவினைத் தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே சீராய்வு மனுவில் எழுப்பிய அதே சங்கதிகளைத்தான் இதிலும் எழுப்ப முடியும். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மூவர், குறைதீர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என முதற்கட்ட ஆய்வு செய்து, பின் உகந்தது எனத் தீர்மானித்தால் அந்த மூவருடன் ஏற்கெனவே அந்த வழக்கை சீராய்வு மனுவின்போது விசாரித்த நீதிபதிகளும் இணைந்து 5 நீதிபதிகளாக விசாரித்துத் தீர்ப்பளிப்பர். எங்கள் வழக்கின் உச்ச நீதிமன்றச் சீராய்வு மனு 08.10.1999 அன்று முடிவுக்கு வந்து விட்டதால், 2002-க்குப் பிறகு புதிதாகத் தோன்றிய குறை தீர்வு மனு வாய்ப்பினை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது அனைவரும் அறிவீர்கள், எனக்கு எதிரான ஒற்றை ஆதாரமான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர் திரு.தியாகராஜன், ஐ.பி.எஸ் அவர்கள் ‘ஆனந்த விகடன்’, 04.12.2013 இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேரறிவாளன் என்னிடம், ‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்று சொன்னார். அந்த வரிகளில், ‘ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத்  தெரியாது என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன்”, எனக் கூறியவர் பேட்டியின் இறுதியில், ‘‘ஒரு நீதிப் பிழையைச் சரி செய்ய என் வாக்குமூலம் உதவும் என்றால், அதற்காக எத்தகைய விளைவுகளையும் நான் சந்திக்கத் தயார்” என உளச்சான்றுடன் நிறைவு செய்தார். சொன்னதுபோலவே எழுத்துப்பூர்வ வாக்குமூலமும் தந்துவிட்டார்.

அவரது ஒப்புதல் வாக்குமூலம் தாமதமானது என்றாலும், 25 ஆண்டுகளாகத் தொடரும் எனது  தாயாருடைய நீதிக்கான போராட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆயினும், நமது நீதி அமைப்பு முறை ஒரு வழக்கில் நிரபராதி என நிரூபிக்கும் புதிய ஆதாரங்களை இறுதித் தீர்ப்புக்குப் பின் கருத்தில் கொள்வதில்லை. அரசியல் சாசனம் பிரிவு 32-ன்படி ரிட் மனுத் தாக்கல் செய்யவும் முடியாது. காரணம், ஒரு குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒரு ரிட் மனு மூலம் கேள்வி எழுப்ப முடியாது என்பதே சட்ட நிலை. புதிதாக உருவான குறை தீர்வு மனு வாய்ப்பிலும் சீராய்வு மனுவில் கூறாத புதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வழிவகை இல்லாததால், திரு.தியாகராசன் அவர்களின் வாக்குமூலத்தை எப்படிச் சட்டப்படி பயன்படுத்துவது என்ற பெரும் வினா எழுந்துள்ளது.

இந்தச் சமயத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புனிதமானது, கேள்விக்கு அப்பாற்பட்டது எனக் கூறும் அல்லது அந்தப் புரிதலுடன் வாழும் அன்பர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 194-ஐச் சுட்டிக்காட்டுதல் பொருந்தும். பிரிவு 194 ஐ.பி.சி என்ன சொல்கிறது எனில், மரண தண்டனை பெற்றுத் தரக்கூடிய எண்ணத்தோடு பொய்யான சாட்சியத்தினை அளித்தல் அல்லது உருவாக்குதல், அதன் விளைவால் ஒரு நிரபராதி தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டுவிட்டால்... (Giving or fabricating false evidence with intent to procure convition of capital offence, if innocent person be thereby convicted and executed). எனவே, சட்டத்தின் பெயரால் ஒரு நிரபராதி தூக்கிலிடப்படும் வாய்ப்பை இந்தியத் தண்டனைச் சட்டமே அங்கீகரிக்கிறது. நமது உச்ச நீதிமன்றமே Santhoshkumar Bariyar Vs State of Maharashtra (2009) 6 sec 498) வழக்கில் அதற்குமுன் வழங்கப்பட்ட ராஜீவ் வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகளில் தொடர்புடைய 15 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது எனத் தீர்ப்பெழுதியது. அதற்குள் அந்த 15 பேரில் இருவர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர்.

இங்கிலாந்து நாட்டில், இதுபோன்ற நீதிப்பிழைகளைத் தவிர்க்க ராயல் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் 1995-ம் ஆண்டு Criminal Appeal Act என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, Criminal Cases Review Commission (CCRC) என்ற தனித்த அமைப்பு ஒன்று நிறுவப்பட்டு நீதிப்பிழை மற்றும் நிரபராதி என்பதாக முறையிடும் வழக்குகள் குறித்த மனுக்களை ஆராய்ந்து, உகந்தவற்றை அந்த நாட்டு மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்துத் தீர்வு காணப்படுகிறது.

அயர்லாந்து நாட்டிலும் நீதிப்பிழையால் ஏற்படும் ஆபத்து குறித்து உணரப்பட்டு Criminal Procedure Act 1993 எனச் சட்டம் இயற்றப்பட்டு இறுதித் தீர்ப்புக்குப் பின் எழுகிற புதிய சாட்சியத்தின் அடிப்படையில் நிரபராதி என நிரூபிக்க மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், கனடா நாட்டு அரசின் நீதித்துறை சார்பில் Criminal Conviction Review Group (CCRG) என்ற அமைப்பு நிறுவப்பட்டு முறையீடுகள் பெறப்பட்டு, உண்மை இருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் பிழையான நீதியால் பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல, அவர் இறந்தபின் அவரது மனைவி அல்லது வாரிசுகளும் அவரை நிரபராதி என நிரூபிக்கச் சட்டம் இடம் தருகிறது. அமெரிக்காவில் நீதிப்பிழை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு தனித்தனி சட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கு கரோலினா மாநிலத்தில் Actual Innocence Commission என்ற அமைப்பை அந்த மாநில அரசு உண்டாக்கி தீர்வு காண்கிறது. நார்வே நாட்டில் Norwegian Criminal Cases Review Commission (NCCRC) உள்ளது. மற்றும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ட்ரினிடேட் மற்றும் பல நாடுகளிலும் நீதிப்பிழையினை அங்கீகரித்து, தீர்வு காண்கின்றன.

நமது நாட்டில் அதுபோன்ற சட்ட வாய்ப்புகள் இல்லை என்பதால், ஏற்கெனவே நான் குறிப்பிட்டதைப்போல் கேகர் சிங் வழக்கில் ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வு, ‘‘அரசியல் சட்டப் பிரிவு 72 மற்றும் 161-ன் கீழ் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் வழக்கின் சாட்சியங்களை மீளாய்வு செய்து நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறான முடிவை எடுக்கலாம் - அதிகாரம் உண்டு” என அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது திரு.தியாகராசன் அவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 30.12.2015 அன்று நிரபராதி என விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு மனு அளித்துள்ளேன். இவையெல்லாம் தற்போது ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்கள்.

ஆனால், எனது சீராய்வு மனு முடிவுக்கு வந்து விட்ட 8.10.1999-க்குப் பிறகு எனக்கு அன்று இருந்த ஒரே வாய்ப்பு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கான கருணை மனு மட்டுமே. கருணை மனு குறித்த புரிதல் இல்லாத அன்றைய நிலையில் முதலில் அதில் கையெழுத்திடத் தயங்கிப் பெரும் மனப் போராட்டத்துக்கு ஆளானேன். கேகர் சிங் தீர்ப்பின் மூலம் விளக்கம் பெற்ற நிலையில் 17.10.1999 அன்று கையெழுத்திட்டுத் தந்த, ஏறத்தாழ 200 பக்கங்கள் அடங்கிய, எனது கருணை மனுவினை மாநில அமைச்சரவையிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் 27.10.1999 அன்று, 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தவர் வேறு யாருமல்ல; அன்றைய தமிழக ஆளுநரான உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் பாத்திமா பீவி.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 10

தொடரும் வலி..!தொடர்

 

p38.jpg

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14. உண்மையில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானா என்பது, சாமான்ய இந்தியனின் கேள்வியாக எப்போதுமே இருந்து வருகிறது. மறைந்த மனித உரிமைப் போராளியும் நீதியரசருமான திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பொன்றில், “சிறைகள் வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல” எனக் குறிப்பிட்டார். “மூடாத கல்லறையில் நடமாடும் பிணங்களடா” என கவிஞர் ஒருவர் சிறைவாசிகளின் வலியைப் பதிவு செய்தார்.

கொலைக் குற்றம் என்பதற்கு இந்தியா முழுமையும் ஒரே சட்டம்தான் உள்ளது. ஆயுள் சிறை என்பதற்கான பொருளும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் முன்விடுதலை மட்டும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஒருமுறை எங்கள் சிறையைப் பார்வையிட வந்த அகில இந்திய சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மைய (APRA) இயக்குநர், 20 ஆண்டுகளுக்கு மேலும் சிறைவாசம் அனுபவிக்கும் எங்கள் வழக்கினர் தவிர்த்து வேறு சிலரையும் பார்த்துவிட்டு வியந்துபோய், “எங்கள் ஆந்திர சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர்கூட இல்லை” என்றார். கர்நாடக மாநில அரசு, கடந்த 07.01.2014 அன்று அரசு ஆணை (Government order HD 138 PRA 2013, BANGALOE, DATED: 07.01.2014) ஒன்றை வெளியிட்டது. அதாவது, அந்த மாநிலத்தில் தண்டனைக் கழிவுடன் 14 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தண்டனை அனுபவிக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைசெய்வது என முடிவெடுக்கிறது. அதன்படி, 2016-ல் மட்டும் ஏறத்தாழ 600-க்கும் அதிகமான ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். கேரள மாநிலத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று 8 ஆண்டுகள் முடித்த நன்னடத்தை ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்று மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் நிலையைக் களையத்தான், 20.10.1999 மற்றும் 26.09.2003 ஆகிய தேதிகளில் கூடிய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) வழிகாட்டல் நெறிமுறைகளுடன் கூடிய பரிந்துரையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைத்தது. ஆணையத்தின் அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டு நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் Model Prison Manual என ஒன்றைத் தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. நடுவண் அரசின் பரிந்துரையின்படி எந்தச் சிறையிலும் தண்டனைக் கழிவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேல் எந்த ஆயுள் சிறைவாசியும் சிறையில் இருக்கக் கூடாது. நாங்கள் தண்டனைக் கழிவே இல்லாமல் 25 ஆண்டுகளை முடித்துவிட்டோம்.

எங்கள் வழக்கில் நடுவண் அரசு உரிமை கொண்டாடச் சட்டப்படி கூறும் ஒரே காரணம் வழக்கை விசாரித்தது நடுவண் புலனாய்வுத் துறை (CBI) என்பது மட்டுமே. ஆனால், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் நிலை என்ன? அதனை விசாரித்ததும் CBI அமைப்புதான். ‘தடா’ சட்டப்படி வழக்கு நடந்து, உச்ச நீதிமன்றம் ‘தடா’ பிரிவுகளில் தண்டனையை உறுதி செய்தது. நடிகர் சஞ்சய்தத் அந்த வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளில் 5 ஆண்டு தண்டனை பெற்றார். ‘தடா’ சட்டமும், இந்திய ஆயுதச் சட்டமும் நடுவண் அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட சட்டங்கள் என்பதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.c.) பிரிவு 435 (2)-ன்படி நடுவண் அரசுதான் எந்தத் தண்டனைக் கழிவையும் வழங்க முடியும் என்கிறது டிசம்பர் 2, 2015 அன்று வழங்கப்பட்ட எங்கள் விடுதலையை எதிர்த்துப் போடப்பட்ட, வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இருப்பினும், 8 மாதங்கள் தண்டனைக் கழிவு பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் நடிகர் சஞ்சய்தத்.

அவரை யார் விடுதலைசெய்து ஆணை பிறப்பித்தது என்பதுதான் எனது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை. அவரை விடுதலை செய்ய நடுவண் அரசின் முன்அனுமதி பெறப்பட்டதா? குறைந்தபட்சம் நடுவண் அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா? எதற்கும் விடை இல்லை. அவரது தண்டனைக் காலத்தில் ஆண்டுக்கு 28 நாட்கள் என ஏறத்தாழ 84 நாட்கள் Furlough என்ற விடுப்பில் சென்று திரும்பினார். இந்த நாட்கள் தண்டனைக் காலமாகக் கருதப்படும். இவையில்லாமல் தண்டனைக் காலத்தில் கணக்கில் வராத பரோல் விடுப்புகளில் சென்றால், அவர் தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியிடமிருந்து ஒரு AK47, ஒரு கைத்துப்பாக்கி ஆகியன வாங்கிய குற்றத்துக்காகத் தண்டனை பெற்றிருந்தார். அப்போது அவரது வயது 32. சிறைக்குள் வானொலி வர்ணனையாளராக இருந்த அவரது நன்னடத்தையை நான் கேள்வி எழுப்பவில்லை. அதனால் அவருக்குக் கிடைத்த முன்கூட்டிய விடுதலையை மறுத்தலிக்கவில்லை. ஆனால் அதே அளவுகோள், சட்ட நிலைப்பாடு எனது வழக்கில் ஏன் இல்லாமல் போனது என்பதே எனது கேள்வி?

‘தடா’ சட்டம், வெடிபொருள் சட்டம், ஆயுதச் சட்டம் என நடுவண் அரசின் மொத்த ஆளுகைக்குட்பட்ட சட்டப் பிரிவுகளில் ஆயுள் தண்டனை பெற்ற தனது மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சார்ந்த 13 சிறைவாசிகளை முன்விடுதலை செய்யக் கோரி பஞ்சாப் மாநில அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. அவர்களில் 1990-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று 25 ஆண்டுகள் 8 மாதங்கள் தண்டனையைக் கழித்து விட்டு உத்தரப் பிரதேச சிறையில் இருந்த வார்யாம் சிங் (Waryam Singh) என்ற சிறைவாசியை நடுவண் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களின் பரிந்துரையின் பேரில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு.அகிலேஷ் யாதவ் இந்த ஆண்டின் முற்பகுதியில் விடுதலை செய்துவிட்டார். அந்தப் பட்டியலில் மேலும் மூவரின் முன்விடுதலைக்கு நடுவண் அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் எனது விடுதலையிலும் கருத்தில் கொள்ளப்படுமா?

இவர்கள் அனைவருமே சிறை நன்னடத்தைக்காக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள் எனில், எனது நன்னடத்தை குறித்து நான் சொல்வதைக் காட்டிலும் சிறையில் என்னைப் பராமரிக்கும் சிறை அதிகாரிகளும் உடன் வாழும் சிறைவாசிகளும்தான் கூற வேண்டும். ஏறத்தாழ 15 ஆண்டுகள் எனக்கு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத்தலைவர் (DIG OF PRISONS) திரு.ராமச்சந்திரன் அவர்கள் இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி தந்துள்ளார்.

உள்ளபடியான இந்தப் பாகுபாடுகளை உச்ச நீதிமன்ற பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கடந்த 08.01.2016 அன்று புனே, எர்வாடா சிறைக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்தேன். 30 நாட்கள் கழித்தும் அங்கிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில் 01.03.2016 அன்று அந்தச் சிறையின் முறையீட்டு அலுவலருக்கு (First Appllate Authority) மனு செய்தேன். 21.03.2016 அன்று ‘‘நீங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான Indian Postal Order 3.11.2011-ல் எடுக்கப்பட்டதால் காலாவதியாகிவிட்டது. எனவே மனு நிராகரிக்கப்படுகிறது’’ என பதில் அனுப்பினர். இதைக் கண்டுபிடிக்க சிறை அதிகாரிகளுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது.

p38a.jpgநானும் சலிப்படையவில்லை. மீண்டும் மார்ச், 2016 மாதத்தில் புதிய Postal Order பெற்று 24.3.2016 அன்று புதிய விண்ணப்பதுடன் இணைத்து அனுப்பினேன். எனது விடாமுயற்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும். இதற்கும் 30 நாட்களில் எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் நான் 04.05.2016 அன்று மேல்முறையீடு செய்தேன். அதன்பின் விழித்துக்கொண்ட எரவாடா சிறையின் தகவல் அலுவலர் 18.05.2016 தேதியிட்டு எனக்கு ஒரு பதில் அனுப்பினார். அதில் நான் கேட்ட தகவல் மூன்றாம் தரப்பினர் தகவல் (Third Party Information) என்பதால், தர இயலாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இதைவிட எவராலும் கேலிக்குரியதாக்க முடியாது. இனி ஓர் அரசு நிறுவனத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு (Tenders) அதில் ஒருவருக்கு அனுமதியும் மற்றவர்களுக்கு மறுப்பும் தெரிவிப்பர் எனில், மறுக்கப்பட்டவர் எவரும் எப்படி அந்த ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எனக் கேள்வி கேட்க முடியாது. நல்ல மதிப்பெண் எடுத்த எந்த மாணவரும் ஒரு பொறியியல் கல்லூரியில் தன்னைவிடக் குறைவான மதிப்பெண் எடுத்தவரை அனுமதித்தது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில், அவையெல்லாமும் மூன்றாம் தரப்புத் தகவலாகிவிடுகிறது.

இந்த நிலையில்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான எனது போராட்டத்தில் முதல் முறையாக மேல்முறையீட்டு அலுவலர் எனது சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்கும்படி அனுமதிக் கடிதம் அனுப்பினார். 28.06.2016 அன்று எனது சார்பில் மும்பை வழக்குரைஞர் திரு.நிலேஷ் என்பவர் எரவாடா சிறையின் மேல் முறையீட்டு அலுவலர் முன்பு ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை முன்வைத்திருக்கிறார். மேல்முறையீட்டு அலுவலரின் பதில் இன்னமும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.

ஒருபுறம் பதவி, செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளைக் கேள்வியே எழுப்ப முடியாமல் இருப்பதும், மறுபுறம் 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் மாநில அரசே முடிவெடுத்து விடுதலை அறிவித்தாலும் எவர் வேண்டுமானாலும் கேள்வி எழுப்ப முடியும் எனில், எங்கள் வழக்கு அரசியல் சாசனத்தின் பிரிவு 14-க்கு அப்பாற்பட்டதா? - மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்.

(வலிகள் தொடரும்)

vikatan

Link to comment
Share on other sites

பேரறிவாளன் டைரி - 11

தொடரும் வலி..!தொடர்

 

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!

நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன். இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை வருகிற ஆகஸ்ட் 1 அன்று கடந்துவிட முடியும் என நம்புகிறேன். அன்றுதான் மூவர் அமர்வு முன்பு, எங்கள் விடுதலைக்கு எதிரான நடுவண் அரசின் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த 19-02-2014 அன்று எங்கள் எழுவரையும் விடுதலை செய்வது குறித்து கருத்துக் கேட்டு அன்றைய காங்கிரஸ் நடுவண் அரசுக்கு மாண்புமிகு முதல்வர் அம்மா தலைமையிலான தமிழக அரசு எழுதிய மடல் குறித்த வழக்கு அது. கடந்த டிசம்பர் 02, 2015-ல் உச்ச நீதிமன்ற ஐவர் அரசியல் அமர்வு, அதுகுறித்த 7 வினாக்களுக்கு விடை தந்துவிட்ட பின்பு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஒரு கடிதத்தினை கடந்த மார்ச் 02, 2016 அன்று நடுவண் அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது என்ற நிலையில் தற்போதைய பி.ஜே.பி நடுவண் அரசு பழைய கடிதத்தை முடித்துவைக்கத் தயங்குவதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. தற்போதைய கடிதத்துக்கும் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் பதில் தரவில்லை, பி.ஜே.பி அரசு. இந்த நிலையில் ஏற்கெனவே ஐவர் அரசியல் அமர்வில் முடிவாகிவிட்ட வழக்கில் இன்னமும் தீர்வை நோக்கி நகராமல் தொடர்ந்தும் நீட்டிப்புக் கேட்டு நடுவண் அரசு ஏன் காலம் தாழ்த்துகிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடுவண் அரசு மீண்டும் 4 வாரங்கள் கேட்க நீதிபதிகள் தர மறுத்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் 1 அன்று வழக்கு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். முடிவு நீதியின் பக்கம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

p38.jpg

அன்றைய நாளில் எனது தாயாரின் 25 ஆண்டுகள் கண்ணீர் நிறைந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில், என்னைக் காட்டிலும் அவர்தான் இந்தத் தண்டனையைச் சுமந்து திரிகிறார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு முறை நான் எழுதிய கோரிக்கை மனுவில், ‘‘துன்பம் மிகுந்த, எல்லையில்லாக் காத்திருப்பின் இறுதியில் சிதையுண்டு போவது எனது வாழ்வும் வசந்தமும் மட்டுமானால், பறிக்கப்படுவது எனது உயிராக மட்டும் இருக்குமானால், அதையிட்டு நான் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால், வாழ்வின் இறுதிப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் எனது பெற்றோர் தமது குற்றமற்ற மகனின் உயிரை மீட்கும் போராட்டத்திலேயே காலங்கழித்திடும் துன்பத்தை என்னால் இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, எனது எஞ்சிய நாட்களை அவர்களோடு நான் கழித்தாக வேண்டும்.

எனது தாயார் குறித்து எழுதாமல், எனது சிறை நாட்குறிப்பு முழுமையடையாது. இருப்பினும், எப்போதும் போலவே அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். நீதிக்கான எனது போராட்டத்தில் நன்றியோடு நான் நினைத்துப் பார்க்க வேண்டிய மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களில் முதன்மையானவராக மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் இருக்கிறார். அவர் செய்த உதவிகளும், எழுதிய கடிதங்களும், காட்டிய அன்பும் வரலாறாக என் மனச்சுவரில் எழுதப்பட்டிருக்கிறது. அவை குறித்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் பதிவுசெய்வேன். ஏறக்குறைய 2009-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத்தின் இளம் வழக்குரைஞர் குழு ஒன்று உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் ஆழ்ந்த சட்ட அறிவோடும் போராடி வருகிறது. அதுகுறித்தும் நான் விரிவாக உங்களுடன் பகிர வேண்டும். 2011 தொடக்கத்திலிருந்து இன்று வரை, மூடி மறைக்கப்பட்ட எனது வழக்கின் உண்மைகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி எனது தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி அவர்கள் ஆதரவினை திரட்டியதில் பெரும் காரணமாக இருந்த, இருக்கிற சாமான்ய மனிதர்கள் பலரின் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பு குறித்து உங்களுக்குக் கூற வேண்டி உள்ளது.

இவையெல்லாம் கடந்து எப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சில் குற்ற உணர்ச்சியை உண்டாக்கி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிடுகிற அன்புத் தங்கை செங்கொடியின் தியாகம் குறித்து நான் என்னவென்று குறிப்பிடுவது? என்றுமே எதனாலும் ஈடு செய்யவே முடியாத தியாகம் அவருடையது. எனக்குத் தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட அன்று செங்கொடியின் முகம்தான் என்முன் தோன்றியது. அன்றைய உணர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டுமே என என் மனம் ஏங்கியது. அவரது தியாகம், அன்றைய எனது மனநிலை குறித்தும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன். இவைகளோடு எனது சிறை வாழ்வை, அங்கு பழகிய, பழகும் மனிதர்களை, பெற்ற வாழ்க்கை அனுபவங்களை உங்கள் கரம் பிடித்து அழைத்து வந்து சுற்றிக்காட்ட வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

உங்களுடனான எனது இந்தக் குறுகிய காலப் பகிர்தலில் எனது ஒட்டுமொத்த வாழ்வையும், வழக்கையும் நான் விவரித்து விடவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் நீதியானவையாக மட்டுமே இருந்து விடுவதில்லை என்ற புரிதலோடு இருப்பினும், எனக்குத் தூக்குத் தண்டனை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியே, தான் தவறிழைத்து விட்டதாகப் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட பின்பும், எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த காவல் துறை உயரதிகாரியே எழுத்துப்பூர்வமாக நான் நிரபராதி என வாக்குமூலம் அளித்த பின்பும் என்னை நிரபராதி என ஏற்பதில் சிலருக்குத் தயக்கம் இருப்பின், அதற்கான நோக்கத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

பேரறிவாளன், 9 வோல்ட் பேட்டரி மட்டும் வாங்கித் தரவில்லை, சிவராசனுக்கு தனது சொந்த பெயரில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கித் தந்தார் எனவும் இன்னும் பலவாறு குற்றச்சாட்டுகளை அடுக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதுபோல் எந்த குற்றச்சாட்டுக்காகவும் எனக்குத்  தண்டனை - தூக்கு  வழங்கப்படவில்லை. ராஜீவ் கொலைக்கு மோட்டார் சைக்கிள் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அவர்களின் வாதத்தை அப்படியே ஏற்றாலும், உலகமே அதிர்ச்சிக்குள்ளான ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிக்கு, கொலைக்குப் பயன்படுத்த எனத் தெரிந்து, தனது சொந்த பெயரில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தந்த முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சட்ட விரோதச் செயல் செய்பவர்கள்கூட சட்டப் படியான ஆவணத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரியவில்லை. இதே வழக்கில் 23-வது எதிரியாக இருந்த தனசேகரன் அவர்கள் பொய்யான பெயர், முகவரி கொடுத்து ஆவணங்கள் பெற்று 6 ஜிப்சி ஜீப் வாங்கினார் என்பதும், அவற்றில் ஒன்றுதான் ராஜீவ் கொலைக்குப் பின்னர் சிவராசன் பயன்படுத்தியது என்பதும், இறுதியில் தனசேகரன் சதிகாரர் இல்லை என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரியவில்லை. வழக்கின் 12-வது எதிரியான விஜயன் அவர்கள் ராஜீவ் காந்தியை கொன்ற தனு சென்னையில் சென்றுவர ஒரு மிதிவண்டி வாங்கித் தந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவரை உச்ச நீதிமன்றம் சதிகாரர் இல்லை என விடுவித்துவிட்டது என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரியவில்லை. எனவே, எனக்கு தண்டனை பெற்றுத்தர காரணமான குற்றாச்சாட்டு 9 வோல்ட் பேட்டரி மட்டுமே. அதற்கான விடையை, திரு.தியாகராசன் ஐ.பி.எஸ் பகிர்ந்து விட்டார். எது எப்படி இருப்பினும், எல்லாப் பொய்மைகளையும் உடைத்தெறியும் வலிமை உண்மைக்கு இருக்கிறது. அது, இப்போது சிறைப்பட்டு இருக்கிறது. பொய்மை எனும் கூடு உடைத்து அது சிறகடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் அதற்காகக் காத்திருங்கள்.

தற்காலிகமாகத்தான் உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். எனது உணர்வுகளை, ஆதங்கங்களைக் கடந்து வந்த வலிகளை சிலவேனும் உங்களுடன், உங்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லியிருப்பேன் என நம்புகிறேன். உங்களது உள்ளத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பதைக் காட்டிலும் என் தரப்பு உண்மைகளை உங்களுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்கிற முயற்சிதான் என்னில் அதிகம் இருந்தது.

எனக்காக அனுதாபப்படுவதை நான் ஒரு நாளும் விரும்பவில்லை. நீதிக்காக அனுதாபப் படுங்கள். ஏனெனில், அதுதான் மிக மோசமாகத் தற்போது காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது.

நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தில் வென்று எவ்வாறேனும் விடுதலைக் காற்றைச் சுவாசித்துவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாளும் முயன்று வருகிறேன். அந்த முயற்சிகளில் தோற்று விழுகிற ஒவ்வொரு முறையும் ‘செவ்வியான் கேடு’ என்றே அவை நினைக்கப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மீண்டும் எழுந்திருக்கிறேன்.

எது எப்படி இருப்பினும் இறுதியில் நீதி வீழ்த்தப்பட்டுவிடக் கூடாது - தோற்றுவிடக் கூடாது. எனவே, நீதி வெல்வதற்காக நீங்களும் குரல் எழுப்புங்கள். உங்களின் குரல் இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய அத்தியாயங்களை எழுத உதவட்டும். தமிழகம், அதற்கு முன்னோடியாக இருக்கட்டும். நீதி வெல்லட்டும். வணக்கத்துடன்.

அ.ஞா.பேரறிவாளன்
நடுவண் சிறை,
வேலூர்.


-முற்றும்

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.