Jump to content

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டியை பெற இந்தியா உதவ வேண்டும்


Recommended Posts

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டியை பெற இந்தியா உதவ வேண்டும்

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டியை பெற இந்தியா உதவ வேண்டும்:-

 

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டி முறையொன்றிற்கு இந்நாடு மாற வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று உள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சராக 6வது முறையாக பதவியேற்றுள்ளார். இது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. அதை ஒட்டி எமது மனமார்ந்த பாராட்டுதல்களை எம் யாவர் சார்பிலும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரைகாலமும் ஆற்றிய சேவை அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி. எமது நாட்டின் தமிழ் மக்களும் அம்மையாரின் இந்த வெற்றியால் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளார்கள். எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு
என்ற வள்ளுவன் கூற்றுக்கமைய இந்நான்கு பண்புகளும் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் குறைவுபடாமல் இருந்து வருவதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

இந் நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் தற்போது வெற்றியீட்டியிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாi~களை நாங்கள் வென்றெடுக்க உறுதியான துணையாக இருப்பார் என்பது எமது எதிர்பார்ப்பு.

போரில் கணவன்மாரை இழந்த 89000 இற்கும் அதிகமான எமது விதவைப் பெண்களினதும், காணாமல்ப் போன பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவினர்களதும், போரினால் உடல் ஊறினையும் மன உளைச்சலையும் எதிர் கொண்ட எம் பாதிக்கப்பட்ட மக்களதும், தம் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் புலம் பெயர் மக்களினதும், பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட சிறார்களினதும் மற்றையோர்களினதும் துயர்களைத் துடைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றக் கூடிய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு.

பல காரணங்களினால் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இதுகாறும் இருந்து வந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். செல்வி ஜெயலலிதா அவர்கள் போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சரித்திர ரீதியாகப் பார்த்தால் 1983ம் ஆண்டின் கலவரத்தின் பின் இலட்சத்திற்கும் மேலான புலம் பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் சரணடைந்தனர். அன்று தொடக்கம் இன்று வரையில் மனங் கோணாமல் எம் மக்களை அங்கு வைத்துப் பார்த்துப் பராமரித்து வருவது சாதாரண ஒரு விடயமன்று.

தம் மக்களைப் பார்க்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் எம் மக்களையும் 33 வருடகாலமாகப் பார்த்துப் பராமரித்து வருவது எமது மனப்பூர்வமான நன்றியறிதல்களுக்குரியது.

1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இந்திய அரசாங்கமே முகவராக நின்று அதை முன்னேற்றியது. இந்திய அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவை 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தராது விடப்பட்டதை விடத் தரப்பட்ட உரித்துக்களும் எமது ஒற்றையாட்சியாளர்களால் பின்னர் பறித்தெடுக்கப்பட்டன.

போருக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இன்றும் எம்மிடையே வடகிழக்கு மாகாணங்களில் முகாம் இட்டுள்ளார்கள். எம் காணிகளில் பயிரிடுகின்றார்கள். வருமானத்தைத் தாம் எடுக்கின்றார்கள். எம்மக்களின் தொழில்களுள் உள்ளீடு செய்கின்றார்கள். இத்யாதி பல இடர்களுக்கு எம்மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர்.

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டி முறையொன்றிற்கு இந்நாடு மாற வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது.

புலம் பெயர் எம் மக்கள் இன்னமும் இந்திய மண்ணில் அவர்கள் பராமரிப்பில் இருக்கின்றார்கள். அவர்களின் திரும்பல் முக்கியமானது என்பதை விட இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய அரசாங்கத்திற்கு எமது தற்போதைய நிலைமையும் எமது வருங்காலமும் தார்மீகப் பொறுப்புக்களாக அமைந்துள்ளன என்பதை இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறக்கூடிய ஒரே தலைவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மட்டுமே.

 அவர் அதைச் செய்து சுமூகமான ஒரு தீர்வை நாம் பெற உந்து சக்தியாக இருப்பார் என்பது எமது கணிப்பும் எதிர்பார்ப்பும்.


இதன் பொருட்டு வடமாகாணசபையானது செல்வி ஜெயலலிதா அவர்களின் வெற்றியை வரவேற்றுப் பாராட்டும் அதே நேரம் அவரின் அரசாங்கத்துடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வதற்கும் விரும்புகின்றது.

கலை, கலாச்சாரம் மேலும் அரசியலால் எம் இரு நாடுகளின் தமிழ்ப் பேசும் மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை நாம் யாவரும் வேண்டி நிற்கின்றோம். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132536/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.