Jump to content

யாழின் - நிலவரம்! கலவரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nilavaram%2Bkalavaram.jpg

வக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.
கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில்,
கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.
பிடிப்பது என்ன பிடிப்பது?
கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?
கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.
பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,
அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.



ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.
கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, வழிப்பறி என,
அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,
அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.
இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று,
ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டு,
மறுபக்கம் அதிரடிப்படையை உதவிக்கு வருமாறு,
நாமாக அழைக்கும் அபாக்கிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.
கல்வியில் கடைசி மாகாணமாய் வந்த சோர்வு தீர,
போதைப்பொருள் பாவனையில் முதலிடம் பிடிக்கும்,
முன்னேற்றத்தை எட்டிக்கொண்டிருக்கிறது வடபகுதி.
குழுச்சேர்ந்து, பகைவர்களை,
பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யும் துணிவுடன்,
நம் மாணவ இளைஞர்கள் உலா வருகிறார்கள்.
நினைக்க நெஞ்சு பதறுகிறது!



கல்வி, ஒழுக்கச் சிதைவுகளை விடுத்து,
பொருளாதாரம், திட்டமிடல் ஆகியவற்றிலேனும்,
முன்னேற்றம் காண்கிறோமா என்று பார்த்தால், அதுவும் இல்லை.
யாழ்ப்பாணத்திற்கு வர இருந்த குடிநீரை,
அதன் அவசியம் தெரிந்த பின்பும்,
ஏதேதோ சொல்லித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
வவுனியாவில் அமைய இருந்த,
இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான,
விவசாய மையத்தை அமைக்கும் திட்டமும்,
அரசு கேட்ட இடத்தை நம்மவர் அங்கீகரிக்க மறுத்து நிற்பதால்,
இன்று நம் கைநழுவிப் போய்விடும் நிலையில் இருக்கிறது.
வவுனியா மக்கள் தமக்கான வாய்ப்பை அமைச்சு மறுப்பதாய்ச் சொல்லி,
அதற்கு எதிராய்க் கொதித்துப் போராடுகின்றனர்.
இந்திய நிறுவனம் தரவிருந்த அறுபத்தையாயிரம் பொருத்து வீடுகளை
கிட்டத்தட்ட தடுத்துவிட்டார்கள்.
இவர்கள் வேண்டாம் என்ற பொருத்து வீடுகளைக்கோரி
தொண்ணூராயிரம் பேர் விண்ணப்பித்தனராம். 
தடுத்தவர்களின் நியாயம் சரியோ? பிழையோ? அது ஒருபக்கம் இருக்கட்டும்.
வீடின்றி இருப்போர்க்கு வீடுகளை இனி இவர்கள் எப்படிக் கொடுக்கப்போகிறார்கள்?
நம் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில்,
தனித்த, விரிவான திட்டங்கள் எவையும்,
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.
விவசாயத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை.
விவசாய அமைச்சு எதைத்தான் ‘புடுங்குகிறது’
என்ற கேள்விக்கு விடையாக,
ஏன் பிடுங்காமல் 'பார்த்தீனியம்' பிடுங்குகிறோம் என்கிறார்கள்,
அமைச்சைச் சேர்ந்தவர்கள்.
எப்படி நம் இனம் முன்னேறும்?



போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆகின்றன.
இரண்டாம் முறையாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள்,
இனப்பிரச்சினை மகுடியை ஊதி மக்களை மயக்கி,
பாராளுமன்ற இருக்கைகளில்,
ஆற அமர இருந்து அயர்ந்து தூங்குகின்றனர்.
இடையிடையே எழுந்து இந்த ஆண்டு பிரச்சினை தீருகிறது.
அடுத்த ஆண்டு பிரச்சினை தீருகிறது என்பதாய்,
அறிக்கை விடுப்பதோடும்,
வருடந்தோறும் முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடர் ஏற்றுவதோடும்,
அவர்களது கடமை முடிந்து போகிறது.
எங்களுக்கென்று மாகாணசபை அமைந்தால்,
ஆகாயத்தைத் தொடுவோம் என்று அரற்றியவர்கள்,
மாகாணசபை அமைந்து இரண்டு வருடங்களாகியும்,
ஏதும் இயற்ற முடியாமல் தம் இயலாமையை மறைக்க,
உணர்ச்சி அரசியல் பேசி மக்களை உசுப்பி நிற்கின்றனர்.



இவற்றை வைத்துத்தான்,
யாழ்ப்பாணத்தின் நிலவரம் உவக்கும் படியாக இல்லை என்று சொன்னேன்.
சிங்களவர்களுக்கெதிராகப் போராடப் போவதாய் சொல்லி வந்த நம்தலைவர்கள்,
தேசமட்டத்திலும், மாகாணமட்டத்திலும்,
இனப்பற்றில் தமக்கு நிகர் வேறெவரென? தர்க்கித்து,
தமக்குள்ளேயே போராடிப் பொழுது போக்குகின்றனர்.
தமிழ்மக்களும் நடந்ததையும் நடக்கப்போவதையும் மறந்து,
இவர்தம் சண்டைக்காட்சிகளுக்கு கைதட்டி கட்சி பிரிந்தபடி.
திரும்பத் திரும்ப எத்தனை தரம்தான் இதை எழுதுவது?
எழுதி எழுதி கை சலித்து விட்டது.
என்னாகப் போகிறது நம் இனம்?
தந்தை செல்வா சொன்னதுதான் பதிலா?



சாரதி தூங்கினால் வாகனம் தறிகெட்டு ஓடத்தானே செய்யும்.
நாம் உணர்ச்சிகளுக்கு ஆளாகி,
வாகனம் ஓட்டத் தெரியாதவர்களை சாரதிகளாக்கி விட்டோம்.
இன்று தமிழின வாகனம் கேட்பாரின்றி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
அது மோதிச் சிதைவதன் முன் அபயமளிக்க யாரும் வருவார்களா?



மேற்சொன்ன பிரச்சினைகளுள்,
இன்று உடனடியாய்த் தீர்க்க வேண்டிய பிரச்சினையாய்,
மாணவர்தம் ஒழுக்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நீதிமன்றம் அதிரடிப்படையை அழைத்து,
கல்லூரிகளுக்குக் காவல் போடுங்கள் என்று சொல்லுமளவுக்கு,
பிரச்சினை முற்றியிருக்கிறது.
உடனடியாக இப்பிரச்சினைக்கு ஏதேனும் செய்யுங்கள் என்று,
பொலிஸ்மா அதிபருக்குக் கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதியதோடு,
ஓய்ந்துபோயிருந்த முதலமைச்சர்,
வழமை போலவே இன்று வெறும் வாய்ச்சவடாலாய்,
மாகாணத்திற்குப் பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள்.
உடனடியாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்டுகிறோம் என்று,
உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார்.
கொடுக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து,
அவர்கள் செயற்படும் லட்சணத்தைப் பார்த்த பின்பும்,
அவரது இப்பொய்யான வாய்ச்சவடாலைக் கேட்டு,
புளகாங்கிதம் அடைகின்றனர் ஒருசிலர்.
தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்.



யாழ்ப்பாணத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு அடையாளங்களின்,
முதன்மை நிலையமாய் விளங்கிய யாழ் இந்துக் கல்லூரிக்கு,
தனித்த காவல் இடும்படி உயர் நீதிமன்ற நீதியரசர்,
இளஞ்செழியன் இட்ட உத்தரவு,
தலைநிமிர்ந்து நின்ற யாழ்இந்துக் கல்விச் சமூகத்தை தலைகவிழச் செய்திருக்கிறது.
அதைப்பற்றிக் கவலைப்படுவார் எவரையும் காணோம்.



இன்று யாழ் இந்து என்பது,
புலம்பெயர்ந்தோருக்குக் கொண்டாட்டக் குறியீடாய் மாறியிருக்கிறது.
புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பழைய மாணவர் சங்கங்கள் அமைத்து,
தத்தம் குதூகலக் கொண்டாட்டங்களுக்காய்,
இந்துத் தாயின் பெயரில் நிகழ்ச்சிகள் வைத்து,
தாம் கூடிக் கொண்டாடிய பின் வரும் எஞ்சிய பணத்தை,
இங்கு அனுப்பி தம் இனப்பற்றையும், கல்லூரிப்பற்றையும் காட்டிநிற்கிறார்கள் சிலர்.
பதவிகளுக்காய்ப் பறந்து திரியும் அவர்களுக்கு அது பொழுதுபோக்கு.
அண்மையில் யாழ் இந்து கனடா பழையமாணவர் சங்கம் நடத்திய நிகழ்வில்,
வெள்ளைக்காரப் பெண்கள் அரைகுறை உடையில் நடனவிருந்தளித்த காட்சி,
இணையத்தில் வந்து அனைவர்க்கும் அதிர்வு தந்தது.
பணம் அனுப்புதலோடு பழையமாணவர் சங்கங்களின் கடமைகள் முடிந்து போகின்றனவா?
கல்லூரியை வைத்து ஒருபக்கம் கொண்டாட்டம்.
கல்லூரிக்குள்ளோ பலபல திண்டாட்டம்.
இதுதான் இந்துவின் வளர்ச்சியா? பழைய மாணவனாய் மனம் பதறுகிறது.



இந்துக்கல்லூரியில் மட்டும்தான் என்றில்லை,
எந்தக் கல்லூரியிலும் இதுதான் நிலைமை.
மாணவர்கள் வருங்காலச் சமுதாயத்தின் குருத்துக்கள்.
குருத்துக்கள் கருகினால் இனப்பயிர் செழித்தல் எங்ஙனம்?
கேள்வி நம்மைப் பதற வைக்கிறது.
நேற்றுத்தான் யாழிலிருந்து ஒரு ஆசிரியர் என்னோடு பேசினார்.
போதைவஸ்துக்களை மாணவர்களுக்கு ‘ரொபி’ வடிவில் கொடுத்து,
அவர்களை அப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறதாம் ஒரு கூட்டம்.
எல்லாக்கல்லூரிகளிலும் இது நடப்பதாய்ச் சொல்லி,
உண்மை ஆசிரியரான அவர் கண்ணீர் வடித்தார்.



இப் போதை வஸ்துக்கள்,
எங்கிருந்து வருகின்றன?
யார் கொணர்கிறார்கள்?
விநியோகிப்பவர் எவர்?
வியாபாரம் மட்டும் தான் இவர்கள் நோக்கமா?
இல்லை, இனச்சரிவைத் திட்டமிடுகிறார்களா?
இக்குற்றத்தின் ஊற்று எவர் கையில்?
மேற் கேள்விகளுக்கு பதறியடித்துப் பதில் காணவேண்டியவர்கள்,
அரசியல் பேசி அலட்சியம் செய்கிறார்கள்.
தொலையப் போகிறது நம்இனம்!
தலைவர்கள் செய்யவேண்டிய கடமையை,
நீதியரசர்கள் தனிமனிதர்களாய் நின்று செய்யப் போராடுகிறார்கள்.



இதுவரை இப்பிரச்சினைகள் பற்றி தீர ஆராய்ந்து விடைகாண,
நம் தலைவர்களோ கல்வியாளர்களோ அவசரப்பட்டதாய்த் தெரியவில்லை.
தலைவர்கள் வழமை போலவே அரசையும், இராணுவத்தினையும் காராணம் காட்டி,
அறிக்கை விடுவதோடு தம் வேலையை முடித்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தலைமைகளை நெறிசெய்யப்போவதாய்ப் புறப்பட்ட,
தமிழ்மக்கள் பேரவையினரிடமிருந்தும் எவ்வித குரலையும் இதுவரையும் காணோம்.



யார்தான் இப்பிரச்சினைக்கு விடைகாண்பது?
இப் பிரச்சினைக்கான மூலவேர்களை அறுக்கும் வேலையை,
சட்டம் பார்த்துக் கொள்ளட்டும்.
ஆனால் அதற்குள் எத்தனை இளம் குருத்துக்கள் கருகப்போகின்றனவோ,
கருகாமல் தடுக்கவேண்டியது நம் கடமை.
எங்ஙனம் தடுப்பது?



முதலில் பிரச்சினையின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதுதான் முக்கியம்.
நோய் தொடங்கிய இடம் தெரியாமல் வைத்தியம் செய்வது எப்படி?
நோய்க்கான ‘மூலத்தை’ பின்வருமாறு வகுக்கலாம்போல் தெரிகிறது.
முப்பதாண்டு கால அடக்குமுறையின் பிரதிபலிப்பான இளையோரின் எதிர் எழுச்சி.
இலட்சியமற்ற, பொருளையே நோக்கமாகக் கொண்ட கல்வி முறை.
இளையோர்க்குப் புலம்பெயர் தமிழர்களின் போக வாழ்வு தரும் ஏக்கம்.
அறத்தைத் துச்சமென மதிக்க வழிகாட்டும் மூத்த தலைமுறை.
தொண்டு மனப்பான்மையும், மாணவர்மீதான கருணையும், ஆழ்ந்தஅறிவும் இல்லாத ஆசிரியத்துவம்.
வலிமைகுன்றிய, ஆளுமையற்ற கல்விச்சிந்தனை இல்லாத கல்லூரித்தலைவர்கள்.
இளையோர்க்கு கடவுள் வழிபாட்டை இளமை தொட்டு இயல்பாக்காத வாழ்க்கைமுறை.
ஊடகங்கள் ஊடாகவும், சினிமாக்கள் ஊடாகவும், இளையோர் மனதில் பதிக்கப்படும் வன்முறை உணர்வு.
சமூகத்தோடு இணைந்து வாழ நேரமில்லா கல்வியூட்டல் முறை.

இவைதாம் நம் யாழ் சமூகத்தின்
இளையோர்தம் ஒழுக்கயீனங்களின் வித்துக்கள்.
முதலில் இவ்விஷவித்துக்களை நீக்க வழிசெய்யவேண்டும்.
காரணங்களை நீக்காமல் காரியங்களைக் கண்டு பதறுவது அறிவுடைமையாகாது.



கடந்த முப்பதாண்டுகளாக,
கருவில் தொடங்கி, காலமெல்லாம் நம் இளையோர்தம் அனுபவங்கள்,
வன்முறைகளைச் சுற்றிச் சுற்றியே வந்தன.
வன்முறை வன்முறை, வன்முறை என,
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்த
கூக்குரல்களைக் கேட்டுத்தான்,
இன்றைய இளையதலைமுறை வளர்ந்தது.
யுத்தம் தொடங்கிய காலந்தொட்டு,
யாழ்ப்பாணம் திறந்த வெளிச் சிறைச்சாலையாய்த்தான் இருந்தது.
அதற்குள் நேர்மையும், நீதியும், இரக்கமும் அற்ற
அரசின் தாக்குதல்கள் ஒருபுறம்.
தமக்கு அடங்கி நடக்கும்படி அழுத்தம் தந்த
இயக்கங்களின் நடவடிக்கைகள் மறுபுறம்.
இவற்றால் அன்றாடம் நிலையாமையை உணர்ந்து வளர்ந்த நம் இளையவர்களுக்கு,
உலக இளையோரின் போக வாழ்வு வெறும் கனவுச் சுகமாகவே இருந்துவந்தது.
இவையெல்லாம் ஒன்று சேர்ந்து நம் இளையோர் மனதில்,
ஆழ்ந்த அழுத்தத்தை உண்டாக்கிவிட்டன.
அழுத்தப்பட்ட ஒருபொருள் விடப்படும்போது,
இயற்கையை மீறி எழும்பித்துள்ளுவது இயல்புதானே.
அதைத்தான் இன்றைய இளையோரின் ஒழுக்கக்கேட்டின்,
முதற் காரணமாய்க் கருதவேண்டியிருக்கிறது.



அழுத்தங்களால் சமநிலை குழம்பி நிற்கும் இளையோரை,
மீட்டெடுப்பது எப்படி?
ஒரேவழி, அவர்களைப் பழைய வாழ்வை மறக்கும்படி செய்வதுதான்.
அதனைச் சாதிப்பது எங்கனம்?
திரும்பத்திரும்ப பழைய அழிவுகளைச் சொல்லிக்கொண்டிராமல்,
இலட்சியங் கொண்ட புதிய வாழ்வை நோக்கி
அவர்கள் மனதைத் திருப்பவேண்டும்.
வெற்றிகளின் சுவையைத் தொட்டுக் காட்டினால்,
தோல்விகளின் சுமையை இளையோர் மறப்பார்கள்.
இந்தப் பொறுப்பு நம் தலைவர்களுக்கு உரியது.
நம் தலைவர்கள் இதைச் செய்வார்களா?
எவன் செத்தால் எமக்கென்ன எனும் நிலையில்தான் அவர்கள்.
பழைய வாழ்வை நினைப்பூட்டி நினைப்பூட்டியே,
தமது பதவித்தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அவர்களால், இவை ஏதும் நடக்குமென்று தெரியவில்லை.
சரி அவர்களை விடுவோம்.
வேறெவர்தான் இதனைச் சாதிப்பது?



அரசியல் தலைமைகள் கைவிட்டால்,
அடுத்து இளையோரைக் காக்கும் ஆற்றல்,
வீடு, கல்விக்கூடம் ஆகியவற்றில்த்தான் இருக்கமுடியும்.
பெற்றோரும், வீடும்,
ஆசிரியர்களும், கல்லூரியும்,
மனம் வைத்து நினைந்தால் ஓரளவு  நம் இளையோரை மீட்டெடுக்க முடியும்.
இவர்களும் மாணவர்களை நெறிசெய்யும் வலிமையற்றுப்போய் நிற்பதுதான்,
நம் துரதிஷ்டம்



சமூக உணர்வில் யாழ்ப்பாணத்தார்,
எப்போதும் பலயீனர்களாய்த்தான் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் தனிவாழ்வு நிர்ணயத்தில் அவர்கள் பலசாலிகள்.
அதனாற்றான் முப்பதாண்டுகள் தொடர்ந்து கொடும் போர் நிகழ்ந்தபோதும்,
பண்பாடு, ஒழுக்கம், கல்வி என்பவற்றில்
யாழ்ப்பாணம் வீழ்ச்சி காணாதிருந்தது.
ஊருக்குள் நுழைந்த எதிரிகளால் வீடுகளுக்குள் நுழையமுடியவில்லை.
இன்று அந்தத் தனிவாழ்வுக் கட்டுப்பாட்டையும்,
யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது.
காரணம் சொல்கிறேன்.



உயர் இலட்சியங்களை நோக்கி மாணவர்களை நகர்த்தும் விருப்பு,
இன்று பெற்றோர் எவர்க்கும் இல்லாது போய்விட்டது.
இலட்சியமற்ற, பொருளையே நோக்கமாகக் கொண்ட
வாழ்க்கை முறையையே,
இன்று பெற்றோரும் விரும்பத் தொடங்கிவிட்டார்கள்.
டொலர்களைத் தேடி ஓடுவதும்,
ஓடச்செய்வதுமே  இன்று அவர்களின் இலட்சியமாம்.
பொருளுக்கே முதலிடம் கொடுத்து
பிள்ளைகளை நெறி செய்யும் பெற்றோர்களால்,
மாணவர்கள் மத்தியில் இலட்சியப்பிடிப்பு என்பது
இன்று இல்லை எனும்படியாய் ஆகிவிட்டது.



ஒரு குறித்த இலக்கை அடைய நினைந்து நடப்பதே இலட்சியமாம்.
அவ் இலக்கு உயர்ந்ததாய் இருத்தல் அவசியம்.
இன்று பெற்றோர் அனைவரதும் குறித்த இலக்கு
பொருள் என்று ஆகிவிட்டபடியால்,
மாணவர்களிடம் உயர் இலட்சியப்பதிவுகள் இல்லாமல் போய்விட்டன.
இலட்சியம் இல்லாதவனை எவனும் அசைக்கலாம்.
பொருள் போகத்திற்கானது.
அதுநோக்கி நகர்த்தப்படும் ஓர் இளைஞன்,
போகம் போதைவஸ்து வடிவில் கைக்கு வந்தால்,
அனுபவிக்கத்தான் செய்வான்.
அவனை உயர் இலட்சிய மனிதனாக்கி விட்டால்,
பலயீனங்கள் அவனைத் தீண்டா.
அங்ஙனம் அவனை ஆக்குவது,
பெற்றோரது கட்டாயக் கடமையாம்.
இக்கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறுவார்களேயானால்,
பிள்ளைகளின் சிதைவுக்கு அவர்களே காரணமாகிவிடுவார்கள்.



அறம் என்ற ஒன்றைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை,
இன்றைய மூத்த தலைமுறையே மெல்ல மெல்ல மறந்து வருகிறது.
ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தார் குற்றமாய்க் கருதிப் பதறிய,
சத்தியமின்மை, ஒழுக்கமின்மை, விசுவாசமின்மை, அன்பின்மை என்பவை,
இன்று அங்கு அங்கீகரிக்கப்பட்ட விடயங்களாகிவிட்டன.
புலம்பெயர்வதற்காய் ,
‘ஏஜென்டை’ப் புருஷன் எனப் பதிவு செய்யும் பொய்மையும்,
‘ஒபிஸ் பார்டி’களில் குடிக்கிறேன் என
இயல்பாய் உரைக்கும் ஒழுக்கமின்மையும்,
வாழ்வுதரும் தொழிலுக்கே வஞ்சனை செய்யும் விசுவாசமின்மையும்,
சிறு சிறு குறைகளுக்காக குடும்பங்களை உடைக்கும் அன்பின்மையும்,
யாழ்ப்பாணக் குடும்பங்களில் இன்று சாதாரண விடயங்களாகிவிட்டன.



இவற்றால் அறவேலிகள் அறுக்கப்பட்ட சமுதாயமாய்
நம் சமுதாயம் மாறிவிட்டது.
இச்சமுதாயத்திற்குள் குற்றங்கள் நுழைவதும்,
குற்றம் செய்வோர் அங்கு தருக்குடன் வீற்றிருப்பதும்,
சுலபமான காரியங்களாகிவிட்டன.
இந்தப் பலயீனங்கள் முற்றியதால்த்தான்,
நம் இளையோரை வேட்டையாட,
வீடு, கல்லூரி எனும் புனித இடங்களுக்குள்ளேயே,
கொடூரர்கள் பயமின்றி நுழையத் தொடங்கியிருக்கின்றனர்.
எனவே நம் இளையோரை அவர்களிடமிருந்து காக்கவேண்டுமாயின்,
மீண்டும் நம் தனி வாழ்க்கையைப் பலப்படுத்தி,
சமுதாயத்தின் அறவேலியை வலிமையுறச் செய்யவேண்டும்.
இஃது பெற்றோர்தம் கடமையாம்.



அடுத்து மாணவர்களைக் காக்கும் பொறுப்பு,
 கல்வி நிலையங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரியது.
தொண்டு மனப்பான்மையும், கருணையும், ஆழ்ந்த அறிவும்,
ஆசிரியத்துவத்தின் அடிப்படைத்தகுதிகள்.
ஒருகாலத்தில் மாணவனின் ஒழுக்கயீனத்தை,
தம் வாழ்வின் தோல்வியாய்க் கருதி வாடிய ஆசிரியர்கள்,
பலபேர் யாழில் இருந்தார்கள்.
அத்தகையோர் மாணவர்களுக்கு,
பாடத்தை மட்டுமன்றி பண்பையும் போதித்தனர்.
இத் தகுதிகளோடு கூடிய ஆசிரியர்களை,
தேடிக்கண்டுபிடிப்பது இன்று அரிய விடயமாகிவிட்டது.



நம் பண்பாட்டில் மாதா, பிதா, தெய்வம் என்ற உறவு வரிசையில்,
வைக்கப்பட்டவன் ஆசிரியன்.
இன்றோ ஆசிரியர்களை மிரட்டும் அளவில் மாணவர்கள்.
காரணம் தொண்டாக இருந்த ஆசிரியப்பணி தொழிலாக மாறியமையே.
கல்லூரிகளில் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் செல்லும்,
‘கிளார்க்’காகத்தான் ஆசிரியனும் ஆகிவிட்டான்.
இன்று ஆசிரியர்களைப் பொறுத்தவரை,
உயிரற்ற கோப்புகளாகவே மாணவர்களும்.
சம்பளத்துக்காய் மாத முடிவை நோக்கும் கவலையே
இன்றைய ஆசிரியர்களின் பெருங் கவலையாம்.
நிலைமை இதுவானால்,
உணர்வு எப்படி வரும்?
உறவு எப்படி வரும்?
உரிமை எப்படி வரும்?



தம்மேல் பற்றற்ற ஆசிரியர்கள்மேல்,
மாணவர்கள் எங்ஙனம் பற்று வைப்பார்கள்?
அதனால் இன்று ஆசிரிய, மாணவ உறவு,
பாதாளத்தின் அடிவரை போய்விட்டது.
இந்த நிலை மாறினாலன்றி,
ஆசிரியர்கள்தம் கட்டுப்பாட்டில்,
மாணவர்கள் வரப்போவதில்லை.
அதனால் மாணவர்கள்,
குற்றங்களிலிருந்து எழப்போவதும் இல்லை.



ஆராய ஆராய பிரச்சினைகள் நீள்கின்றனவேயன்றி,
விடைகள் வெளிவருவதாய் இல்லை.
தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என,
அனைவரும் கையாலாகதவர்களாய்ப் போக,
மாணவப்பயிர்கள் மாளத்தொடங்கியிருக்கின்றன.
இம்மூவரும் சரிப்பட்டால்,
நான் முன் சொன்ன பிரச்சினைகளின் மூலவேர்களை அறுத்துவிடலாம்.
பலயீனப்பட்ட உடல்களை கிருமிகள் தாக்கத்தான் செய்யும்.
பலயீனப்பட்ட சமுதாயத்தில் குற்றங்கள் விளையத்தான் செய்யும்.
இறந்தகாலப் பாதிப்பிலும் வருங்கால வீறாப்பிலும்
நிகழ்காலத்தைத் தொலைக்கப்போகிறோம்.
ஒன்றுபட்டு நம் சமுதாயத்தை பலப்படுத்துவதே,
தமிழர்தம் இன்றைய தலையாய கடமையாம்.
உண்மை உணர்ந்து இந்நிலையை உடன் மாற்றத்தலைப்படாவிட்டால்,
யாழ்ப்பாண நிலவரம் தொடர்ந்தும் கலவரம்தான் !
 

http://www.uharam.com/2016/05/blog-post_25.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.