Jump to content

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் 

சேரன்

 

சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”)

 

srilanka-01.jpg
 

 

அந்த மனிதருக்கு நடுத்தர வயது. சற்றுக் கூன் விழுந்த உடல். கிழிந்த காற்சட்டையூடாக உள்ளாடை வெளித் தெரிந்தது. அவரை உள்ளே அழைத்துச் சென்று கோப்பி வாங்கிக் கொடுத்த பிற்பாடுதான் அறிந்தேன்: 

அவரது குடும்பம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது. அவருடைய அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டாலும் அவருக்கு இன்னும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவில்லை. அதனால் வன்னியில் இருந்த அவரது குடும்பத்தையும் அவரால் கனடாவுக்கு அழைக்க முடியவில்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போய்விட முற்றாக உளம் சிதைந்து விட்டார். உறவினர்கள் அவ்வப்போது கவனம் எடுத்தாலும் அவர் ஒரு இடத்தில் தங்க மறுத்து தொறொன்ரோவின் ஆயிரக்கணக்கான வீடற்றவர்களோடு அவரும் முகவரி இழந்தவராக மாறினார்.

இந்தக் கதை எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஊழிக்குப் பின்னரான அஞர் எங்களை வதைக்கிற சூழல் நீண்ட காலத்துக்குத் தொடரும் என்பது தெரிகிறது. 

மே மாதம் 2009க்குப் பிறகான எமது அஞரின் ஒரு சிறு படிமமே இது.

பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு என்பவற்றைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல் அஞர். எடுத்துக்காட்டாக, ‘ஊங்கு (மிக்க) அஞர் நிலையே’ என நற்றிணையிலும் (30.10), ‘ஆர உண்டு பேரஞர் போக்கி’ எனப் பொருநராற்றுப்படையிலும்(88), ‘கோடா மரைப்பின் நடுங்கஞர்’ எனக் குறளிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. Trauma என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லாக இதனைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம். 

கிரேக்கத் தொல்கதைகளில் அறத்தினதும் ஒழுக்கத்தினதும் தலைவன் எனப் போற்றப்படும் ஹெராக்ளிஸ் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த பிற்பாடு அஞர் மேலோங்கத் தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொல்கிறான். பெலபொனேஸியன் போரில் இரண்டு படையெடுப்புகளில் பங்கேற்ற சோக்ரட்டீஸ் போர்தந்த உளக் காயங்களையும் அறக் காயங்களையும் ஆற்றுவதற்கு சிந்தனையிலும் தத்துவத்திலும் உரையாடலிலும் இறங்கினார் எனக் கருத இடமுண்டு. அஞர் சூழ்ந்த வாழ்வு எழுப்பும் முதலாவது சிக்கல் நினைவுகளையும் அனுபவங்களையும் கூறுபடுத்துவதுதான். முழுக் கதையையும் சொல்ல இயலாத ஒரு அவலம். முழுக்கதையும் எவருக்குமே தெரியாது என்பது மற்றொரு அவலம். நினைவழிதல் ஒரு தவிர்க்க முடியாத பக்க விளைவாக அஞருடன் தொடர்பு பட்டிருக்கிறது. ஊழியிலிருந்து மீண்டெழுந்தவர்களுக்கு நினைவழிதலை வென்று நினைவெழுதுதலும் நினைந்தழுதலும் நினைவேந்துதலும் போராட்டத்தினதும் எதிர்ப்பினதும் இன்றியமையாத ஒரு பரிமாணமாக அமைந்துவிடுகிறது.

எனினும் சிதறுண்ட நினைவுகளும் முழுமை பெறாத கதையாடல்களும் எங்களுடைய கதைகளையும் வாக்கு மூலங்களையும் மற்றையவர்கள் பார்வையில் எழுதிப் பரப்புவதும் எமக்கு ஒரு சவாலாக உள்ளன. அப்படி அவர்கள் எழுதுகிறபோது எம்முடனான உணர்வுத் தோழமையுடன் எழுதுபவர்களும் உள்ளனர் என்பது உண்மையாயினும் அவலத்தினதும் எதிர்ப்பினதும் குரலை நாங்கள் வெளிப்படுத்துகிறபோது அதற்குத் தனியான வலு இருக்கிறது என கருதுகிறேன்.

அஞரை எதிர்கொள்வதற்கு இலக்கியமும் கலைகளும் ஒரு முக்கியமான வழி என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இலக்கியமும் நாடகமும் அரங்கக் கலைகளும் மட்டுமே அஞர் தரும் பெரும் சிக்கல்களைத் தணிக்கப் போதுமானவை அல்ல. போர் தரும் அஞரை (Combat Trauma) எதிர்கொள்ள வெற்றி பெற்றவர்கள் நினைவுச் சின்னம் நிறுவுகிறார்கள்; கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் ஏற்பாடு செய்கிறார்கள். ‘வீர வரலாற்றை’ எழுதுகிறார்கள். போரில் கைப்பற்றிய குழந்தைகள், பெண்கள், ஆண்களை முகாம்களில் கண்காட்சிக்கு வைக்கிறார்கள்; போரின்போது தாம் நிகழ்த்திய கொலைகளையும் வல்லுறவுகளையும் படம் எடுத்துப் பகிர்ந்து மகிழ்வுறுகிறார்கள். களிப்பும் அஞரும் சேர்ந்து வெளிப்படும் விசித்திர மனநிலை இது.

இந்தச் சிறப்புப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ரோஹன பொத்லியத்தவின் கவிதை இந்த மனநிலையைத் தீவிரமாக விமர்சிக்கிற கவிதையாகும். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்த வேளை சிங்களச் சமூகம் வெற்றியைக் கொண்டாடிய வகையை நுட்பமாகப் பேசுகிறது அது. ஏற்கெனவே இதுபற்றிய கவிதைகளை மகேஷ் முனசிங்ஹவும் எழுதியுள்ளார். அவரது புகழ்பெற்ற பிணத்தீவு (மளதூபத) என்னும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய கவிதைத்தொகுதியின் அட்டைப்படமே கொண்டாட்டங்களில் வெடித்துச் சிதறும் சரவெடிகள்தான்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் அஞரை எதிர்கொள்ளும் வகையே வேறானது. அவர்கள் நினைவுகொள்ள விரும்புகிறார்கள்; அனுமதியில்லை. காணாமல் போனவர்களைத் தேடுகிறார்கள்; தேடல் முடிவற்றது. என்ன நடந்தது என்பதே சரிவரத் தெரியாது. எலும்புகளும் இல்லை; சாம்பலும் இல்லை. நினைவும் முற்றாக வர மறுக்கிறது. மே மாதம் நிகழ்ந்தது இனப்படுகொலை மட்டுமல்ல. அது பாரிய துன்பியலும் கூட. துன்பியல் என்பதை இங்கே கிரேக்கச் செவ்விலக்கியங்கள் பேசும் Tragedy / Tragodia எனும் அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன். இந்தத் துன்பியலின் ஊடுபாவாக நமது பங்கும் இருந்திருக்கிறது என்பதே அது. 

நமது ஒட்டுமொத்தமான அஞரைக் கவிதையும் இலக்கியமும் நினைவெழுதல்களும் எதிர்கொள்ள முயல்வதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பா. அகிலனின் கவிதைகளும் எழுத்தும் இதற்கான ஒரு துவக்கப் புள்ளி எனக் கருதுகிறேன். நமது துன்பியலின் மையமாக அஞரைக் கொண்டு வந்தவர் அவர்.

இந்தச் சிறப்புப் பகுதியில் சிங்களக் கவிஞர்கள் சிலர் முள்ளிவாய்க்காலைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆற்றூர் ரவிவர்மாவின் மலையாளக் கவிதை 80களில் எழுதப்பட்டாலும் அது கிளர்த்துகிற உணர்வுத் தோழமையும் அனுபவத் தீவிரமும் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது.

இந்தச் சிறப்புப் பகுதியை உருவாக்கவும் சிங்களக் கவிதைகளை மொழிபெயர்க்கவும் எனக்கு உதவிய பாஷண அபேவர்த்தன, லறீன அப்துல் ஹக், ரேணுகா இராமசாமி, சுனில் விஜேசிறிவர்த்தன, நர்மதா குமுதினி ரணவீர, அரசி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மனம் கனிந்த நன்றி.

மின்னஞ்சல்: cheran@uwindsor.ca

புகைப்படங்களுக்கு நன்றி: அமரதாஸ், சேரன்

http://www.kalachuvadu.com/issue-197/page25.asp

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: நினைவுகளும் இலக்கியமும் 

சாஷா ஈபெல்லிங்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அரசி விக்னேஸ்வரன்

sasha.jpg

 

ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. பேரழிவின் பின்னான தனது ‘உடல்’ என்ற கவிதையில் இவ்வாறு கவிஞர் சேரன் எழுதுகிறார்: 

கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல்
இறப்பிலும் மூட மறுத்த கண்களின்
நேர்கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு,
ஆச்சரியம்,
தவிப்பு,
தத்தளிப்பு,
கொதிப்பு,
ஆற்றாமை,
முடிவற்ற ஒரு பெருங்கனவு

கண்கள் இன்னமும் விறைத்துப் பார்த்தபடி இருக்கின்றன. அவை இன்று எங்களைப் பார்க்கின்றன. அந்தக் கனவைப் பலர் கண்டார்கள். இலங்கையின் யுத்தம் எப்படி நினைவுகூரப்பட வேண்டும்? அது நினைவு கூரப்படத்தான் வேண்டுமா? நினைவு கூரப்படத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்பவர்கள், மனிதர்கள் உண்மையாகவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள் என்று நம்புபவர்களாக இருக்கின்றார்கள். ‘யுத்தத்தின் முடிவு’ என்பதன் அர்த்தம் என்ன, சமாதானமா? பாடம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதா? எல்லாம் முன்பு இருந்தது போல வழமைநிலைக்கு திரும்பிவிட்டது என்பதா? ஒருவரால் கடந்த காலத்தின் பயங்கரங்களை மறந்துவிட முடியும் என்பதா?

இலங்கையின் நிகழ்காலத்தை ‘யுத்தத்துக்குப் பிந்திய’ காலம் என்று சிந்திப்பதன் அர்த்தம் என்ன? 

யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சி என்ற ஜெர்மானிய 

அரசியல் தத்துவவாதியான கார்ல் வொன் குளோசி விற்சின் (Carl von Clausewitz) கருத்தில் உண்மை உள்ள தென்றால், அதன் மறுபக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஃபிரஞ்சுத் தத்துவஞானி மைக்கல் ஃபூக்கோ, வொன் குளோசிவிற்சின் கருத்தைத் தலைகீழாக்கி, அரசியலை, மாற்று வழிகளிலான யுத்தத்தின் தொடர்ச்சி யாகத்தான் பார்க்க முடியும் என்று நினைவூட்டியிருக் கிறார். ஒன்றைத் தவிர்த்துவிட்டு மற்றொன்றைப் புரிந்து கொள்ள முடியாது. இக்கருத்தை ஃபூக்கோ பின்வருமாறு விளக்குகிறார், ‘‘போராட்ட சக்திகளுக்கிடையில் உள்ள உறவை ஒருவகையான மௌனமான யுத்தத்தின் மூலம் நிரந்தரமாகப் மீளப் பொறித்து வைத்திருப்பதும் அதை நிறுவனங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், ஏன் மக்களது உடல்கள் என்பவற்றுள்கூட மீளப் பொறித்தலுமே அரசியல் அதிகாரத்தின் பாத்திரம் ஆகும்.” 

அப்படியானால், இது ஒரு நினைவுகூரல் சம்பந்தப்பட்ட விடயமாக இருக்க முடியாது. மாறாக, இன்னமும் தொடரும் மௌன யுத்தத்தினைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியாகவே இருக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எங்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது. நாங்கள் யுத்தம்பற்றிக் கட்டாயம் பேச வேண்டும். அதற்கான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எல்லா யுத்தங்களையும் போலவே இங்கும் சிக்கல் என்னவெனில், ‘உண்மையான வாழ்வு’ என நாம் அழைப்பதனை எப்படி வரைவு செய்யப் போகிறோம் என்பதில் இருக்கிறது; மொழியைப் ‘பிரதிநிதித்துவம்’ செய்வதற்கான கருவியாக அல்லது ஊடகமாகப் பயன்படுத்துவதில் இருக்கிறது. யுத்தம் என்பது முழுமையாக வெளிப்படுத்தப்பட முடியாத எண்ணக் கருக்களுக்குள் அடங்காத, ஒரு கூட்டு நிதர்சனம். இப்படியிருக்கும் போது எப்படி ஒருவர் யுத்தத்தைப்பற்றி முழுமையாகப் பேச முடியும்? பல தத்துவவியலாளர்களும் இலக்கியக் கோட்பாட்டாளர்களும் கூறுவதுபோல எல்லா வெளிப்பாடுகளும் பிரதிநிதித்துவப் படுத்தல்களும் பகுதியளவானவை; அகநிலை சார்ந்தவை; அதனால் முடிவாகக் குறைபாடுடையவை என்றால் நாம் எப்படி யுத்தத்தை வார்த்தைகளுக்குள் கொண்டுவருவது? அத்துணை பெரிய ஒரு நிகழ்வுக்கு எப்படி நியாயம் புரிவது? பெயரிடுவதன் மூலம் பயங்கரத்தை மகிமைப்படுத்துவதை எப்படித் தவிர்ப்பது? 

இது இலகுவானதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம் கட்டாயம் முயல வேண்டும். பேச ஆரம்பிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இலக்கியத்தின் பக்கம் நாம் திரும்பலாம். ஆக்க எழுத்துக்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், நாடகம் எழுதுவோர் என்போரின் படைப்புக்கள் கொண்ட அசாதாரணமான ஒரு இலக்கியக் களஞ்சியம் முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றது. யுத்தத்தைப் புரிந்துகொள்வதற்கான எமது எத்தனத்திற்கு இந்த இலக்கியம் உதவியாக இருக்கும். “இலக்கியம், மக்களையும் உலகத்தையும், நேரடியாக அல்லாவிட்டாலும், தனி மனிதர்களின் சிந்திக்கும் - உணரும் சக்தியை விழிப்புடன் வைத்திருப்பதன் மூலம் மாற்றக்கூடியது” என்று ஆஸ்திரியக் கவிஞரான எரிக் ப்ரீட் (Erik Fried 1921 - 1988) தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார். கவிஞர் ஆட்ரி லார்ட் (1934 - 1992) சொன்னதுபோல “பெயரற்றவற்றைச் சிந்திப்பதற்காக அவற்றுக்குப் பெயர் கொடுக்க உதவும் ஒரு வழிதான் கவிதை.”

அப்படியானால் தமிழ் இலக்கியத்தில் யுத்தம்பற்றி என்ன இருக்கிறது? இலங்கையின் அண்மைய வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்ன? இலங்கையைப் பற்றி எழுதும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களில் பல கருப்பொருட்கள் இருக்கின்றன. முக்கிய வரலாற்று நிகழ்வுகளிற்குச் சாட்சியமாதல், கூட்டு இன்னல்களை நினைவுபடுத்தல், தனிப்பட்ட துன்பங்களைப் பதிதல், யுத்தத்தின் புரியவைக்க முடியாத - எதிர்வுகூற முடியாத தன்மையைக் கருத்தாக்கம் செய்தல், இலங்கையின் உள்நாட்டு வன்முறைகளை உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளுடன் தொடர்புபடுத்துதல், பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களைப் பதிவு செய்தல், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே அன்பும் காதலும் உருவாவதற்கான சாத்தியங்களை உரைத்தல், இழந்த (கற்பனை செய்யப்பட்ட) சொந்த நிலத்துக்கான ஏக்கம், முஸ்லிம்களுக்கெதிரான தமிழ்த் தேசிய வன்முறை, தமிழ் அகதிகள் எதிர்நோக்கிய வன்முறைகளும் சித்திரவதைகளும், அவர்கள் புதிய சூழலில் தம்மைத் தகவமைத்துக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள் என்பன அவற்றில் சில. இலக்கியம் கூட்டு நினைவுகளை மீள்கட்டமைப்பதற்கு உதவுகிறது அல்லது தனிப்பட்ட நினைவுகளைக் கூறுவதற்கு வழிசெய்து தருகிறது; இதன்மூலம் கூட்டுக் கற்பிதங்களை எதிர்க்கவும் மாற்றியமைக்கவும் முடிகிறது. உள்ளக, குறிப்பிட்ட ஒன்று பற்றிய இலக்கியத்தின் வலியுறுத்துகையால் உலகளாவிய புரிந்துணர்வை உருவாக்கவும் முடியும். 

இலங்கை பற்றிய உலகத் தமிழ் எழுத்துக்களில் என்ன இருக்கிறது என்கிற கேள்விக்குப் பொதுப்படையான ஒரு விளக்கத்தையும் கொடுக்க முடியும் என நான் நினைக்கிறேன். 

இது தொடர்பாக நாம் கற்கிற முதலாவது பாடம்: 

புலமைசார் எழுத்துக்கள் சிக்கலான விடயங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் விளக்கம் தருகிற முறைமையைப் பின்பற்றக் கூடும். காரணகாரியத் தொடர்பு கொண்ட விளக்கத்தை வழங்குவதற்காகவும் அர்த்தமுள்ள, தர்க்கரீதியான, பரீட்சித்துப் பார்க்கத்தக்க ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காகவும் அவை இவ்வாறு முயலலாம். இலக்கியமோ இன்னும் அதிகமான சிக்கல்களை உருவாக்குகிறது. மிலன் குந்தேரா நாவல் பற்றி பின்வரும் கூற்று ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தும்: “ஒவ்வொரு நாவலும் வாசகருக் குச் சொல்கிறது: ‘நீ நினைப்பதுபோல் எதுவுமே எளிமையானது அல்ல.’ அதுதான் நாவலின் நித்திய உண்மை.” 

இலக்கியம், குரல்களின் பல்வகைமை மூலம் சிக்கலான பலவற்றை வெளிப்படுத்துகிறது. ஆனால் அவற்றில் எந்தக் குரலுமே இறுதி வார்த்தையைக் கொண்டிருப்பதில்லை. இலக்கியத்தில் நாம் நேரடியாகச் சொல்லப்படுவதனை அறிகிறோம். ஆனால் மொழி தோற்கும்; ஏமாற்றும். சொற்கள் தொலைந்த நேரங்களில், ஏக்கம் - கற்பனைவாதம் என்ற உணர்வுகளில், ஏன் பயந்திருக்கும் அல்லது பைத்தியமாகியிருக்கும் புனைவின் கதாபாத்திரங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்கிறோம். கதைகூறல் கயிற்றில் நடப்பதுபோல ஆபத்தாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ ஆகிவிடும்போது இலக்கியம் இவ்வாறான தருணங்களை அனுமதிப்பது மட்டுமல்ல, வலியுறுத்தவும் வேண்டி இருக்கிறது. இலக்கியம் ‘கறுப்புப் புள்ளி’களையோ புரியாத, புரியவைக்க முடியாத நிகழ்வுகளையோ பூசி மெழுகவில்லை. மாறாக, ஆபத்து - தீர்மானமின்மை மற்றும் குழப்பம் என்பவற்றைக் கொண்டாடுகிறது. ஜனநாயகம், மனித உரிமை, வரலாற்றின் நியாயப்படுத்தும் சக்தி என்பவை பற்றிக் கருத்தியல் வாதங்களில் ஈடுபடுவதை விடுத்து இலக்கியம் வாசகர்களின் கவனத்தைச் சரிபார்க்க முடியாத தனிமனிதரிடம், குறிப்பிட்ட ஒன்றிடம், ஒருமையிடம் குவிய அனுமதிக்கிறது. 

இது எம்மை இரண்டாவது பாடத்திற்குக் கொண்டு வருகிறது. இலக்கியம் எங்களுக்கு ஒரு வகையான மெதுவான, பொறுமையான, உணர்வுடன் கூடிய வாசிப்பினைக் கற்றுத்தருகிறது. எட்வர்ட் செய்த் கூறுகின்றார்: “இலக்கியம் என்பது வழக்கத்திலும் புதுமையிலும் சமூகத்தில் வேறெங்குமில்லாதவாறு வார்த்தைகளை மேலும் சிக்கலான, நுட்பமான பயன்பாட்டுக்கு உட்படுத்தல்”. அப்படியென்றால் இந்த சிக்கலும் நுட்பமும் கவனமாக ஆழ்ந்தறிய வேண்டியவை. ஒரு தனிச் சொல்லால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது தகவலுக்காக வாசித்தல் அல்ல; இந்த வாசிப்பு வாசகரை இடர்ப்படுத்துவது; ஆபத்துக்குள்ளாக்குவது. மொரிஸ் ப்ளாஞ்சோ (Maurice Blanchot) இந்த வகை வாசிப்பை மனத்தில் வைத்துத்தான் இப்படிக் கூறியிருக்கக்கூடும்: “வாசித்தல் என்பது மிக எளிய விடயம். அதற்கு எந்த ஒரு திறமையோ சிறப்பான அறிவோ பலமோ தேவையில்லை . ஆனால் பலவீனம், நிச்சயமற்ற தன்மை என்பன நிறையத் தேவை.” இலக்கியத்தின் இந்தப் பலவீனத்தை வேண்டும் தன்மை எம்மை இறுதியாக ஒரு கருத்துக்கு இட்டுச் செல்கிறது. அதுதான் நெறிமுறை சார்ந்த சுய அறிவு மற்றும் கணிப்பீட்டினை வளர்ப்பதற்கான இலக்கியத்தின் சாத்தியப்பாடு. 

இந்த இலக்கியக் கற்பனை மற்றும் தனிமனிதக் கடமை என்பவற்றுக்கிடையேயான தொடர்புபற்றிக் கவிஞர் சேரன் கூறிய சில வார்த்தைகளை இறுதியாகக் குறிப்பிடலாம்:

“நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிற துயரும் இழப்பும் பயங்கரமும் மற்றவர்கள் தொடர்பான நேயத்தையும் பொறுப்புணர்வையும் அவர்களையும் தோழமையுடன் அரவணைக்கிற பரந்த மனநிலையையும் எங்களுக்குள் வளர்க்க வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவலில் வருகிற அலியோசா கரமாஸவ் சொல்லுவார்: மற்றைய எல்லோருக்கும் கூட நாங்கள்தான் பொறுப்பானவர்களாக இருக்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அத்தகைய பொறுப்புணர்வு எனக்குத்தான் அதிகம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இது ஆழமானதோர் உண்மை அல்லவா?” 

இதனால்தான் நாம் இலக்கியப் படைப்பாளிகளின் பக்கம் திரும்ப வேண்டியிருக்கின்றது. அந்தக் கடற்கரையில் அந்த உடலின் கண்கள் இன்னும் விறைத்துப் பார்த்தபடியிருக்கின்றன; அவை எம்மையும் விறைத்துப் பார்க்கின்றன. அதனால்தான் முள்ளிவாய்க்கால் முக்கியமானது, நம் நினைவுகளும் முக்கியமானவை. 

சாஷா ஈபெல்லிங் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் ஒப்பீட்டு இலக்கிய விரிவுரையாளர். இலங்கை யுத்தம் பற்றிய தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். (A Second Sunrise [Navayana, New Delhi, 2012], Lost Evenings, Lost Lives [Arc, UK, 2016]) தற்போது இலங்கை யுத்தம் தொடர்பில் தமிழ் இலக்கியம் என்ன கற்றுத்தருகிறது என்னும் பொருளில் நூலை எழுதி வருகிறார்.

http://www.kalachuvadu.com/issue-197/page27.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: பேரழிவுக்குப்பின் கவிதை? | காலச்சுவடு |

ரோஹித் பாஷன அபேவர்தன
தமிழில்: லறீனா அப்துல் ஹக்

ஆஸ்விட்ஸ் வதை முகாம் அனுபவத்துக்குப் பின்னர் கவிதையெழுதுதல்’ பற்றி தியோடர் அடர்னோவின் மிகப் பிரசித்திபெற்ற கூற்றினை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று தரம் மேற்கோள் காட்டியுள்ளமை எனக்கு நினைவிருக்கிறது. முதலாவது, அனுர கே. எதிரிசூரியவின் ‘நிஷ்ஷப்த’ (நிசப்தம்) கவிதைத் தொகுதியைப் பற்றி 2003இல் ஹிரு பத்திரிகைக்கு நான் எழுதிய குறிப்பிலும், இரண்டாவதாக விக்டர் ஐவனுடன் சேர்ந்து இனப்படுகொலை தொடர்பில் ராவய பத்திரிகையில் 2009ஆம் ஆண்டு சூடுபிடித்த விவாதங்களின் போதும் அக்கூற்றை மேற்கோள் காட்டினேன். சில காலத்துக்கு முன்பு நிர்மால் ரஞ்சித் தேவசிரி (கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இடதுசாரிச் செயற்பாட்டாளர்) மகேஷின் கவிதையோடு அடர்னோவின் மேற்படி கூற்றினைக் குழப்பிக்கொள்வதற்கும் இப்பின்புலம் காரணமாக இருந்திருக்கலாம். ‘பூந்தி’ (சிங்களக் கவிதைகளுக்கான) இணையதளத்தில் ‘சொஹொன் ஹொரு’ (மயானத் திருடர்கள்) எனும் தலைப்பில் அமைந்த மகேஷின் கவிதை பற்றி எதிர்வினையாற்றியிருந்த நிர்மால் இவ்வாறு எழுதியிருந்தார்:

 

srilanka-03.jpg

“சில காலத்துக்கு முன்பு, ஆஸ்விட்ஸ் வதை முகாம் அனுபவத்துக்குப் பின்னர் கவிதையெழுத முடியாமை பற்றி’ தியோடர் அடர்னோ குறிப்பிட்டிருப்பதாக ரோஹித் பாஷன அபேவர்தன எனும் எனது நண்பர் கூறியிருந்தார். மகேஷ் முனசிங்ஹவுக்கு, அடர்னோ மற்றும் பாஷன ஆகியோரைப் பற்றித் தெரியுமோ என்னவோ!” (http://www.boondi.lk/article.php?ArtID=599)

முதல்தரம் வாசிக்கும்போது எனக்கு நிர்மாலின் கருத்து விளங்கவில்லை. மகேஷினால் எழுதப்பட்ட கவிதையொன்றுக்கு எழுதிய ஓர் எதிர்வினைக்குப் பதிலாக நான் எழுதிய ஒரு விடயத்தைக் குழப்பிக் கொண்டமைக்கான முரணகை அர்த்தம் சில காலத்தின் பின்னரே எனக்கு விளங்கியது. ஏதோ ஒரு காரணத்தினால், நானே மகேஷ் முனசிங்ஹ எனும் பெயரில் கவிதைகளை எழுதிவருவதாக 

அக்கால கட்டத்தில் சிலரால் பரப்பப்பட்டுவந்த ஐயமே அதற்குக் காரணமாய் அமைந்திருக்கும் என இப்போது ஊகிக்கின்றேன். அந்தவகையில், நிர்மாலின் முரணகையான எதிர்வினைக்கு, ‘‘Auschwitz வதை முகாம் அனுபவத்துக்குப் பின் கவிதை எழுதுதல் மிலேச்சத்தனமானது” என்பதை மேற்கோள் காட்டிய எனக்கு, வேறு பெயரில் கவிதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக’ அவர் கருதியிருந்தமையே அதற்குக் காரணமாக அமைந்திருக்கும். மகேஷின் ‘மலதூபத்த’ (பிணத்தீவு) கவிதைத் தொகுதி அந்தச் சிலுவையில் இருந்து என்னைக் கீழிறக்கிவிட்டுள்ளது. 

ஆஸ்விட்ஸ் வதை முகாம் அனுபவத்துக்குப் பின் கவிதை எழுதுவதைத் தவிர்த்தல் வேண்டும் என அடர்னோ சொல்லியிருப்பதாகத் தவறான ஒரு முடிவுக்கு வருவதற்கு, அக்கூற்றின் பின்புலத்தினைக் கருத்திற் கொள்ளாமல் புறந்தள்ளியமையே காரணமாகும். அவர் எழுதிய விடயத்தை அதற்கேற்ற சரியான பின்புலத்தில் இருந்தே மேற்கோளாக, எளிமையாக முன்வைக்கப்படுமிடத்து, அது பின்வருமாறு அமையும்:

‘சுதந்திரமற்று இறுக்கமான கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வாழத் தொடர்ந்தும் நிர்ப்பந்திக்கப்படுவதாக ஒரு சமூகம் மாறுகிறபோது சமூக மனநிலையும் உயிரற்று, சடமாக மாறிவிடுகிறது. சமூகம் மேன்மேலும் பருப் பொருள் சார்ந்ததாக மாறும் அளவுக்கு மனித மனமும் உயிரற்று மேன்மேலும் பொருள்சார்ந்ததாக மாறிவிடும். அந்நிலையிலிருந்து சமூகம் தன்னை விடுவித்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் முரணகை உள்ளதாகவே அமையும். இத்தகைய சூழலில் பேரழிவு பற்றிய தீவிரமான உணர்வு நிலை இருந்தாலும் கூட அது வெற்று உரையாடல்களாகத்தான் சீரழிய நேரும். பண்பாட்டுத் திறனாய்வு என்பது பண்பாட்டுக்கும் மிலேச்சத்தனத்துக்கும் இடையேயான விவாதத்தின் இறுதி நிலையை அடைந்துள்ளது. 

உண்மையில், அடர்னோவின் கூற்றின் பின்புலம், கவிதையல்ல; பண்பாடு பற்றிய ஆய்வாகும். மிக விரிவான பொருளில் நோக்கினால், அது தத்துவார்த்தம் சார்ந்ததாகும். தத்துவார்த்தமானதாக முன்வைக்கப்பட்ட ஒன்றை வெறுமனே சொல்லின் நேர்ப்பொருளில் அர்த்தம் காணவிழைவது தவறாகும். எனில், அத்தவற்றினை இழைத்தவர் நிர்மால் மட்டுமல்ல; அடர்னோ பிற்காலத்தில் வழங்கிய வியாக்கியானங்களே அதற்குச் சான்றாகும். ஆஸ்விட்ஸ் வதைமுகாம் அனுபவங்களுக்குப் பின்னரும் ஒருவரால் கவிதையெழுதுவது சாத்தியமில்லை என நான் ஒருதரம் கூறிய கூற்று எதிர்பாராத கோணத்திலான ஒரு விவாதத்துக்கு அடித்தளம் இட்டுக் கொடுத்துள்ளது. நான் அதனை எதிர்பாராத காரணம், தத்துவார்த்தமாகச் சொல்லப்பட்ட ஒன்றை - அது தத்துவவியல்சார்ந்த ஏதேனுமொரு கருப்பொருளில் அமைந்திராதபோதிலும்கூட, அதனை - யாரும் நேர்ச்சொற் பொருளில் எடுத்துக் கொள்வதில்லை என்பதாலாகும்.’ (Metaphysics - Concept and Problems)2

Mala-Doopatha---Final.jpg

அடர்னோவின் கூற்று ஐரோப்பாவில் நாஸிகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பித்த யூதர் ஒருவரிடம், தான் அதன் பின்பும் உயிர்வாழ்ந்திருப்பது தொடர்பில் உறுத்திக்கொண்டே இருக்கும் குற்றவுணர்வின் உளவியல் தாக்கத்தைவிட வலிமையான வேறொரு விடயத்தையும் உணர்த்திநிற்கின்றது. தனது கூற்றின் நோக்கம், ‘மீள உயிர்ப்பிக்கப்பட்டுள்ள நவீன கலாச்சாரத்தின் வெற்றிட’த்தினை அடையாளப்படுத்துவதாகும் என அவர் எழுதுகிறார். கசப்பான உண்மை யாதெனில், Auschwitz வதைமுகாம் என்பது பீத்தோவன், கோர்த்தே, ஷிலர் ஆகியோர் உருவாக்கிய கலாச்சாரச் செயற்பாடுகளிலிருந்தே தோன்றிய ஒன்றாகும் என்பதே. மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொல்லும் நச்சுவாயு முகாம்களை நோக்கி எந்தவித எதிர்ப்புமின்றி தலைகுனிந்தபடி மௌனமாகப் பயணித்த பல லட்சக்கணக்கான பெண்கள், மனிதர்களின் மனங்களுள் உருக்கொண்டிருந்த பண்பாடுபற்றி எழும் இழப்பினடியான விம்மல் மெல்லியதொரு புகையாக மாறி மங்கி மறைந்துபோனபின், அவ்வாறான நச்சுவாயுக் கொலைக்களங்களை உருவாக்கிய கலாச்சாரப் பெருமித உணர்வுக்குப் பங்களிப்புச் செய்தமை மிலேச்சத் தனமானது எனச் சொல்லும்போது, அதன் நேர்ச் சொற் பொருளுக்கு அப்பாலான தத்துவார்த்த உண்மையொன்று அதில் பொதிந்துள்ளது. 

அடர்னோவின் கூற்றையே பின்புலமாக வைத்து நோக்குகையில், இவ்வாறு கேள்வியெழுப்ப முடியும்: முள்ளிவாய்க்காலின் பின்னர் இருபத்தோராம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை அரசியலில் அறவியல் நியாயம் கண்டு, அதன் தூய்மையை நிறுவ முனைந்து, மிக மோசமாக வீழ்ச்சியுற்றுப்போன ஒரு கலாச்சாரத்துக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் மகேஷின் ‘மலதூபத்த’ (பிணத்தீவு) மறைமுகமாகவேனும் பங்காற்றுகின்றதா?

என்னுடைய கருத்தின்படி, எங்கள் வரலாற்றிலேயே நாகரிக வீழ்ச்சியின் குறிகாட்டியாகத் திகழ்வது 2009ஆம் ஆண்டாகும்.

சுதந்திரத்தினை விழைந்த, பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் இரத்தம் தோய்ந்த யதார்த்தத்தை, உள்ளார்ந்த உணர்வுகள் சூனியமாகிப்போன நிலையைத் தவிர வேறு எதையும் இழந்துவிடாத, தெற்கில் அன்றாட வாழ்வை ஓட்டிக்கொண்டு, தீவிரமாக மேலெழும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வெற்றுப் பேச்சளவில் சமாதானத்தை முன்னெடுப்பவர்களும் அறிவுஜீவிகளும் ஊடகவியலாளர்கள், இலக்கியக்காரர்கள் மற்றும் கவிஞர்களும் சிந்தனையாளர்கள் மற்றும் புரட்சியாளர்களும் அர்த்தமற்ற கதையாடல்களை நீட்டி முழங்கி, நமது ஒட்டுமொத்தப் பண்பாட்டு வீழ்ச்சியைத் தந்திரமாக மூடிமறைத்துள்ளனர். வன்னியின் கூட்டுப் படுகொலை அத்தியாயங்கள் தொடர்பில் ஒட்டுமொத்தச் சமூகத்தினதும் குற்றவுணர்வை மிதித்து நசுக்கி அடக்கும் முனைப்பில், இவர்களில் அனேகர் அடுத்துவந்த ஆறு ஆண்டுகளில் உயிர்ப்பற்ற வெற்றுக் கோஷங்களைக் கலை என்றும் அரசியல் என்றும் உருமாற்றி நம்முன் கொண்டுவந்து நிறுத்தினர்.

என்றாலும், நமது இலக்குசார்ந்த பார்வைக்கோணங்களும் பண்பாட்டு வேர்களும்/ நிலைக்களன்களும் இப்போது, வெளிப்பார்வையில் உயர்ந்து உள்ளார்ந்து வெற்றிடத்தைச் சுமந்துள்ள வெற்றுப் புற்றுகளைப் போலுள்ளன. எங்கள் மொழியானது புதிய அர்த்தப்பாடுகளைத் தோற்றுவிக்க முடியாத கோரமான, பிற் போக்கான வெற்று ஒலிக்கோவையாக மாறிவிட்டிருக்கிறது. உச்சநிலையில் தூக்கி நிறுத்தப்பப்பட்டுள்ள நமது வெற்று இலக்கியக் கற்பனைகள், இசைக் கூச்சல்கள், போலியான சினிமா வெளியீடுகள் என்பவற்றின் உள்ளீடாக இருப்பது நீண்டகாலப் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய கொடிய நஞ்சாகும்.

முள்ளிவாய்க்காலின் பின் சிங்களப் படைப்பிலக்கியம் பிணத்தினைப் புணர்ந்து இன்பம் துய்க்கும் காமுகர்களின் மனவிகாரத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

யூத இன மக்களின் படுகொலைக்குப் பின்னர் ஜெர்மன் மொழியின் நிலை குறித்து அற்புதமான விளக்கமொன்றினை அளித்த ஜார்ஜ் ஸ்டெய்னர் இவ்வாறு கூறுகிறார்: “போருக்குப் பின்னான ஜெர்மனின் நிலை அதிசயமானதாக இருந்தது. எனினும், அது மிகவும் அரிதான ஒரு நிலையாகும். மேம்போக்காகப் பார்க்கையில் அங்கு மகத்தானதொரு ஜீவாவேசத்தினைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும், உள்ளார்ந்து நோக்குகையில் அங்கே மிக மோசமான வெற்றிடம் அல்லது இயக்கமின்மையே காணப்பட்டது. அங்கே செல்லுங்கள்; பிரம்மாண்டமான சாதன உற்பத்தி வரிசைகளின் வியப்பில் இருந்து விடுபட்டு, ஒருகணம் அப்பால் நோக்குங்கள்; இயந்திரங்களின் பேரிரைச்சல் கேட்காமல் இருக்க ஒருகணம் செவிகளை மூடிக்கொள்ளுங்கள். அங்கே ஜெர்மன் மொழி செத்துப் போயிருப்பதை உணர்ந்துகொள்வீர்கள்.”

தினமும் பத்திரிகைகளையும் வார இதழ்களையும் புதிதுபுதிதாய் அச்சகங்களில் இருந்து ஊற்றுக் கிளம்பினாற்போல் வெளிவந்து கொண்டிருக்கும் ஜனரஞ்சகமான, அறிவுத்தளம் சார்ந்த பல்வேறு வகை நூல்களையும் விரித்துப் பாருங்கள்; புதிய ஜெர்மன் மேடை நாடகம் ஒன்றைக் கண்டுகளிக்கச் செல்லுங்கள்; வானொலியிலோ பாராளுமன்றத்திலோ ஒலிக்கும் ஜெர்மன் மொழியைச் செவிமடுத்துப் பாருங்கள். அது இனியும் கோத்தேயின், ஹெய்னேயின், நீட்ஷேயின் மொழியன்று. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், அது தாமஸ் மன்னின் மொழியும் அல்ல. அதனை ஏதோ ஒருவித பேரழிவு பீடித்துள்ளது. அது வெற்று இரைச்சலையே எழுப்புகின்றது. அது கருத்துப் பரிமாறலில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், சகோதரத்துவ இணைவினை ஏற்படுத்தக்கூடிய அர்த்தப்பாடுகளை அதனால் தோற்றுவிக்க முடியவில்லை.” (Language and Silence: The Hollow Miracle)

யுத்தத்துக்குப் பின்னரான ஜெர்மன் இலக்கியம் முகங்கொடுக்க வேண்டியிருந்த வெறுமை அல்லது இயக்கமின்மையின் அடியாக உள்ளார்ந்துள்ள கோட்பாட்டுச் சிக்கலினை விளக்கும்வகையில் க்ளவுஸ்மன் தனது எளிய கேள்வியை எழுப்பியுள்ளார். சொற்களின் கனதியான உள்ளர்த்தம் அழகிய கற்பனாவாத நிலையை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, யதார்த்த உலகில் இலக்குமயப்பட்ட சமூகத் தொடர்புகளினூடே மானிடச் செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் விதத்திலேயே அது கனதியுடையதாகின்றது. இனஅழிப்புக்களையும் அநீதிகளையும் திட்டமிட்ட விதத்தில் சரிகண்டு நியாயப்படுத்தும் சொற்கள், அவற்றின் காட்டுமிராண்டித்தனமான அர்த்தப்பாடுகளுக்கு இடையில் சிக்குண்டு, சின்னாபின்னப்பட்டுச் செத்துப்போகும். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனித சமூகத்துக்கு எதிரான கொடூரங்களையும் மிக மோசமான அநியாயங்களையும் வீரகாவியங்களாக மடைமாற்றம் செய்யும் குற்றேவல் பணிக்குக் குத்தகை எடுக்கப்பட்ட ஒரு மொழியின் ஜீவ அக்னியானது, அந்த மாபெரும் கொடூர இருளுக்குள்ளேயே அமிழ்ந்து அணைந்துபோய்விடும். தார்மீக அறம் அல்லது பொதுவான மானிடப் பிணைப்பு தொடர்பிலான உண்மையான அர்த்தப்பாட்டினை மீளவும் தோற்றுவிக்கும் சக்தியை அம்மொழி இழந்துவிடும்.

எனினும், குரூரங்களின் முன்னால் ஒரு மொழியை மௌனித்துப்போகச் செய்தல் மீட்சிக்கான பாதையைக் காட்டித் தருமா? ‘வார்த்தையால் வடிக்கமுடியாத’ மிகப்பெரும் கொடுமைகளின் முன்னிலையில் மொழியின் மௌனம் மிகப் பொருத்தமானது என்றே ஸ்டெய்னர் கருதினார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “Auschwitz வதைமுகாம் அனுபவம் என்பது உலகின் தர்க்க அறிவுக்கும் மொழியாடலுக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. மொழியாடலின் வழியே சொல்லப்பட முடியாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது தர்க்கரீதியில், உரைப்பவர் - கேட்பவர் ஆகிய இருநிலைகளிலும் மொழியின் உயிர்ப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவதாகும்..’ (Language and Silence: K)

ஸ்டெய்னரின் கூற்று, ‘ஆஸ்விட்ஸ் வதைமுகாம் அனுபவத்தின் பின்னர் கவிதை எழுதுதல்’ எனும் அடர்னோவின் கூற்றுடன் பெரிதும் பொருந்திப்போகின்றது. பரந்துபட்ட அர்த்தத்தில் நோக்குகையில், மேற்படி இரண்டு நிலைப்பாடுகளுமே ஆஸ்விட்ஸ் வதைமுகாமின் கொடிய யதார்த்தத்தை வெளிப்படுத்துதல் தொடர்பில், மொழிக்கு இருக்கக்கூடிய பௌதீக அசாத்தியப்பாட்டினைப் பற்றிக் கூறமுற்படவில்லை என்பது தெளிவு. ஆஸ்விட்ஸ் வதைமுகாமை உருவாக்கிய அதே கலாச்சாரத்துக்கு உரிய விழுமியங்களை இனியும் மீளுருவாக்கம் செய்வதில் அழகியல் துறைகளினூடே பங்காற்றுவது தொடர்பில் உள்ள தார்மீக நியாயம் பற்றிய அறம்சார் கோட்பாட்டுச் சிக்கல் குறித்துத்தான் அடர்னோ பேசமுற்பட்டுள்ளார். அடர்னோவில் இருந்து சற்று வேறுபட்டு, ஆஸ்விட்ஸ் வதைமுகாம் அனுபவங்களின் யதார்த்தம் மொழியாடலின் சாத்தியப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்ற அடிப்படையில் அதுகுறித்து மௌனம் சாதிப்பதைப் பரிந்துரைக்கும் ஸ்டெய்னரின் கூற்றுக்கு, ‘வார்த்தைகளால் வடிக்க முடியாத’ கொடுமைகளை விவரிப்பதற்கு மொழியைப் பயன்படுத்தும்போது, மானிட உண்மையை உரைப்பதில் மொழி தனது வெளிப்பாட்டுத் திறனை இழந்துவிடுகிறது என்பதே பின்புலக் காரணியாக அமைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் சிங்கள மொழியில் நிலவிய நீண்ட ‘மௌன’மானது, எவ்வளவு அநியாயங்கள் இடம்பெற்றன என்பதை அறியாத காரணத்தால் விளைந்த ஒன்றன்று. மாறாக, அது, மனிதப் படுகொலை ராணுவத்துக்கும் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அநியாயக்கார சமூகத்துக்கும் இடையில் பிரக்ஞைபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஓர் உடன்பாட்டின் பிரதிபலம். யுத்த சமயத்தில் அரசின் இராணுவ சிப்பாய்க்கும் தெற்கின் பொதுப் பெரும்பான்மை சமூகத்திற்கும் இடையில் வினைத்திறன் வாய்ந்ததாய் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைப் பிரிப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடே இதுவாகும். கற்பனைக்கெட்டாத அநியாயங்களினால் ஏற்படக்கூடிய அறவியல்சார் குற்றவுணர்வினை அப்படியே உள்ளுறுஞ்சிக்கொண்டு, அதனை அன்றாட வாழ்வில் ஒரு சாதாரணமான நிகழ்வெனக் கடந்துசெல்லக்கூடிய பொறிமுறை இந்த வேலைப்பிரிப்பினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. பரந்த அர்த்தப்பாட்டின் அடிப்படையில் நோக்குகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற குரூரமான அவலங்களுக்குக் காரணமான படுகொலைச் செயற்பாடுகள் தனியே ஆயுதமேந்திய அரச படைச் சிப்பாய்களின் சிருஷ்டியல்ல. அந்த மோசமான அநியாயங்களில் ஈடுபட்ட ஆயுதமேந்திய படையினர், அச்செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு முன்னின்று உழைத்த அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள், பாடலாசிரியர்கள், சினிமாக்காரர்கள், பாடகர்கள் முதலானோர் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் இடையே நெருக்கமான தொடர்பினைக் கட்டியெழுப்பிய, இனப்படுகொலை அரசின் கொள்கையே அதனை உருவாக்கிற்று. இத்தகைய கூட்டமைப்பினை இயல்பான ஒன்றாகக் கொண்டு, மற்றொரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான கொடுமைகளை நியாயப்படுத்தும் சாதனமாகவே மொழி பயன்படுத்தப்பட்டது.

இந்தப் படுகொலைக் கூட்டணிக்கு எதிராக மொழியின் தார்மீகமான மனிதத்தின் சாரத்தைக் காக்கும் தன்முனைப்போடு எளிய சொற்களோடும் உயரிய இலட்சியத்தோடும் விடாப்பிடியாக நின்று, அந்த அறத்தினைக் காப்பதைப் புறந்தள்ளியிருந்த சிங்களக் கவிதை இலக்கியத்தை அந்த அவமானத்திலிருந்து மீட்டெடுத்தவர்கள் இளம் சிங்களக் கவிஞர்கள் ஒருசிலர் தாம் என்றே கருதுகின்றேன். மகேஷ் முனசிங்ஹவைத் தவிர அஜித் சீ. ஹேரத், மஞ்சுள வெடிவர்தன, ரோஹண பொத்துலியெத, டிம்ரான் கீர்த்தி, தரங்க ஜயசேன, சுபத்ரா ஜயசுந்தர, மாலதி கல்பனா, குமாரி ப்ரணாந்து (இவர்களில் சிலரது கவிதைகள் காலச்சுவடு மே 2012 இதழில் வெளியாகியுள்ளன) உள்ளிட்ட வெகுசிலரை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழுவினர், குறிப்பாக பூந்தி இணையதளத்துக்கும் ராவய பத்திரிகையின் இலக்கியப் பத்திக்குமாக எழுதிய மிக முக்கியமான அரசியல் கவிதைகள் அதிக அளவில் மின்னஞ்சல் மூலமாகவே பரவலடைந்தன.

அவர்கள் தத்தமது துறைகளில் எதிர்கொள்ள நேர்ந்த சவால்களுள் முதன்மையானது, மிகப்பெரும் இனவழிப்பொன்றை நியாயப்படுத்தி, அந்தக் கொடிய அநியாயத்தினை களிபேருவகையோடு கொண்டாடத்தக்க ஒன்றாகக் கட்டமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மொழிக்கு, மற்றோர் இனத்தினை அடக்கியொடுக்குவதன் முழுமொத்த வடிவமாக ஆக்கப்பட்ட ஒரு மொழிக்கு எதிராக, மானுடத்தின் சாரத்தை மீளப்பாய்ச்சும் வகையிலான அர்த்தப்பாட்டினை எவ்வாறு தோற்றுவிப்பது என்பதே. இதே பிரச்சினை தொடர்பில், உலக யுத்தத்துக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிகப் பிரசித்திபெற்ற கவிஞராகப் போற்றப்படும் பால் செலானுக்கும் மேற்சொன்ன கவிஞர்களுக்கும் இடையில் ஒரு தற்செயலான சமாந்திரத் தொடர்பு நிலவுவதாகவே கருதுகின்றேன். நாஸி வதைமுகாமொன்றில் தனது பெற்றோரைப் படுகொலை செய்த கொலைகாரர்களின் தாய்மொழி, தனது தாய்மொழியாக இருப்பதைப் பொருட்படுத்தாது, ஜெர்மன் மொழியிலேயே கவிதைகளை எழுதிவந்த பால் செலான் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். வேறுபட்ட பின்புலத்தில் பார்வைக்கோணம் வித்தியாசமானதாக இருந்தபோதிலும் கூட, மேற்சொன்ன சிங்களக் கவிஞர்களும் ஜெர்மன் கவிஞன் செலான் எதிர்கொண்ட அதே தர்மசங்கடமான நிலைமையினையே எதிர்கொண்டனர்; என்றபோதிலும், கடந்த தசாப்தத்தில் சிங்கள மொழியில் எழுந்த மகத்தான கவிதையாக நான் கருதும், அஜித் சீ. ஹேரத்தின் ‘ஸப்த ஸ்வப்ன’ (ஏழு சொப்பனங்கள்) எனும் கவிதை மேற்சொன்னவாறான கொடும் பாழிருளுக்குள் மூழ்கியிருந்த சிங்கள மொழியின் அடியாழத்தில் இருந்துதான் தோன்றியுள்ளது. 

அதன் பொருள், முள்ளிவாய்க்காலின் பின்னர் கவிதை எழுத முடியும் என்பதா?

இங்கு, அடர்னோவின் சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் அவரே அளித்த விளக்கங்களை மீளவும் கருத்திற்கொள்வது மிக முக்கியமானதாகும். ‘கொடுந்துயரங்களை அனுபவித்தல் தொடர்பிலான புரிதல் மனிதர்கள் மத்தியில் இருக்கும்வரை, கலை அந்தப் புரிதலை வெளிப்படுத்தக்கூடிய வடிவினில் அமைந்திருத்தல் வேண்டும்’ எனும் ஹெகலின் கூற்றினை மேற்கோளாகக் கொண்டு, ஆஸ்விட்ஸ் தொடர்பான தனது கூற்றை வெறுமனே நேர்ப்பொருளில் புரிந்து கொண்டவர்களை நோக்கி அடர்னோ இவ்வாறு குறிப்பிடுவார்: “அக்காலகட்டத்தின் புத்துயிர்ப்புக் கலாச்சார வெற்றிடத்தைச் சுட்டும் வகையில் ‘அவுஷ்

விட்ச்’சின் பின்னர் ஒருவரால் கவிதை எழுத முடியாது என்று நான் ஏலவே சொன்னது போலவே, மறுதலையாக, அந்நிலையில் ஒருவர் கவிதை எழுதவேண்டும் என்றும் என்னால் கூறமுடியும்”.9

மகேஷின் ‘பிணத்தீவை’ப் பொறுத்தவரையில், முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அபரிமிதமான துயரங்கள், வேதனைகள் பற்றிய குற்றவுணர்வுள்ள சொற்பத் தொகையினரான சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சமூகப் புரிந்துணர்வின் வெளிப்படையான பிரதிபலிப் பாகவே அமைந்துள்ளது. இந்நூல், 2009ஆம் ஆண்டு சிங்களவர்களான எங்களிடமிருந்து மானுடப் பண் பாட்டினைப் பிரதிநீக்கம் செய்து மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தின் அச்சமூட்டும் ஆழமான அடித்தளங்களை நேரடியாக எட்டிப் பார்க்க அஞ்சாத மனிதன் ஒருவனின் கலகக்கார வாக்குமூலமாகும்.

(சுருக்கப்பட்ட கட்டுரை)

 

http://www.kalachuvadu.com/issue-197/page31.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தைக் காதலிப்பவன்

ரோஹன பொத்லியத்த
ஓவியம்: எஸ்.ஜி. வாசுதேவ்
சிங்களத்திலிருந்து தமிழில்: ரேணுகா இராமசாமி

 

kavithai-rohana.jpg

வானத்தை அண்ணாந்து பார்த்தபடி 
முற்றத்தில் விரைந்து ஓடினேன்

மேகங்கள் பிரியும் இடைவெளிகளூடே 
வடக்கை நோக்கிப் பயணிக்கும் விமானம் 
உரத்த சத்தம்

மயிர்க் கூச்செறிகிற உடல்
உள்ளங்கால்களில் துவங்கி 
உடலையே உருக்கும்
வெப்பம்

இன்னும் சில கணங்களில்
குருதி பெருக்கெடுக்கிறது
வடக்கின் பால்வெள்ளைக் 
கடற்கரை மணலில்
துளித் துளியாக
விழுகிறது

நான்
விரைந்து ஓடினேன் அறைக்குள் 
சுயமைதுனம் துய்க்க.

 

ரோஹன பொத்துலியத்த: இலங்கையில் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். பத்து ஆண்டுகளாகக் கவிதை எழுதி வருகிறார். அவரது தலைமுறையின் சிறந்த அரசியல் கவிஞர்களில் ஒருவர். ரோஹனவின் முதலாவது கவிதைத் தொகுதி, ‘அஹஸ ஹெடி வீ அத’ (குழம்பிய வானம்) 2011 இல் வெளியாகியது. லங்கா செய்தித் தாள் நடத்திய இலக்கிய விழாவில் சிறந்த கவித்தொகைக்கான விருதைப் பெற்றது. அரசு ஊழியராகப் பணி புரிகிறார்.

http://www.kalachuvadu.com/issue-197/page35.asp

 

 

 

வடுக்களைப் படமெடுப்பேன்

சுபத்ரா ஜெயசுந்தர
ஓவியம்: ராம்குமார்

kavithai-subatra.jpg

பழைய நைகோன் காமிராவும்
சிங்கத்தின் தங்க சாமந்தித் தோலும்
என்னிடம் இருந்திருந்தால்
மாற்றுருவில் 
அங்கு இருந்திருப்பேன்
வடுவுற்ற அமைதியை 
போரின் அமைதியை
ஒளிப்படங்கள் எடுக்க

கரு வளையங்கள் சூழ்ந்த 
பெண்ணின் மார்பகங்கள்
வெளிப்பட்டன
அவளது தலைமுடி சிக்குப்பட்டு
வளையல்கள் நொறுக்கப்பட்டிருந்தன.
இந்த மரணத்துக்கு சாட்சியமில்லை
விளக்கம் தேவையில்லை

பாதி எரிந்த தொட்டிலின் கீழ்
தாய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்
மரச்சட்டங்கள் இல்லாதிருந்தால்
குழந்தை தப்பியிருக்கக் கூடும்
ஒரு வேளை

இல்லை
பிறந்த குழந்தை நடப்பதில்லை
சித்தார்த்த கௌதமன் மட்டுமே
நடந்தான்.

ஒரு வாலிபன் முடமானான்:
முதுகெலும்பில் சுடப்பட்டது
அவனது மரணத்தைப் படமெடுப்பேன்

எலும்புகளின் ஆழத்துள் காயங்கள்
இருந்தால்
மரணித்த துறவியாக
சாவு அமைதியாய் இருக்கும்.

எனது காமிராவின் கண் 
இமைத்தது; குறிபார்த்தது
பின் படமெடுத்தது

தழும்புகள் போலிருந்த
குண்டுகள் துளைத்த ஓட்டைகளை
படமெடுத்தது

குழந்தைகள் அமைதியாய் உறங்குவர்
உண்மையில் அதுதான் சமாதானம்

சொந்த மண்ணில் எழ அனுமதியில்லாத
தழும்புற்ற அவர்களது சிறு பாதங்களை
படமெடுப்பேன்
ஆனால் நாடோடிகளுக்குக் கூட
விருப்புற்ற இடத்தில்
வேரூன்ற ஒரு கணம்
கிடைத்தது

மழைக்காலத்தில் நீர்வழிகள்
நிறைந்திருந்தன.
வெடித்தன
நான் நீரைப் படமெடுப்பேன்
ஏன் குண்டுப்பொழிவில்
அது எரியவில்லை?

முறையான மிலேச்சத்தனத்தின்
கீழ் மனிதர்கள்:
கைகால்களற்ற சிலர்
கண்களற்ற சிலர்
தோலற்ற சிலர்

சுவாசித்தபடி இன்னும் சிலர்
குந்தியிருந்தனர் 
உறக்கத்திலிருக்கும் அந்த
அசைவிலாப் பிணங்களினருகே
கண்விழித்திருப்பது போல.
விழித்திருக்க இனி
யாரும் இல்லை 
என்ற உணர்வுடன் அவர்கள்
பிணத்தருகே
விழித்திருக்கையில்
யாருமற்ற அந்த வெறுமையை
படமெடுப்பேன்.

கவிதை நூலின் கடைசிப் பக்கம்
கேட்பாரற்ற சமைக்காத அரிசி
காட்சிச் சிதறல்கள்
வெறுமையான பறவைக் கூண்டு
துண்டும் துணுக்குமாய் நேசம்
நொறுங்கிய மண்பானைகள்
புகை

நான் அந்தப் பார்வையின்மையை
படமெடுப்பேன்

கண்கூசும் வெயிலில்
அனைத்து நிறங்களிலும் வடிவங்களிலும்
சிதறித் தழும்புற்ற இதழ்கள்
வரைவிட முடியாத 
நிறங்களையும் வடிவங்களையும்
உருவாக்கும்.



வெள்ளைக் கொடி ஏந்தி நீரைக் கடத்தல்
மே 2009: நந்திக்கடல்: இந்து மகா சமுத்திரத்தின் பழங்குழந்தை


நேற்று எங்களைச் சுற்றி சீலைகளைத் தொங்கவிட்டு
பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துக்கொண்டோம்.
வெளிப்புறத்தை காணாதிருத்தல் என்பது கணநேர பாதுகாப்புணர்வு.
இன்று நாங்கள் நேராக நடந்து, தேவைப்படும்போது
அசையாது நிற்க வேண்டும். காகங்கள் நேராகப் பறப்பன
என்பது உண்மையா?

முன்பிருந்ததை விடப் பாலம் கீழிறங்கியிருந்தது. அதனடியில்
மனிதர்கள் பிணங்களைப் போல மிதக்கின்றனர். 
போர் காகங்களைக் கழுகுகளாக்கியுள்ளது. 
பழுப்பு நிறக் கன்றுக்குட்டி தாயைச் சுற்றி வருகிறது.
விழும் வெடிகுண்டுகள் தாலாட்டு அல்ல....

இந்த நீர் கலங்கியிருக்கிறது. என்னைப் போன்ற மனிதக்குரங்குக்கு
கூட காற்றின் வாசம் சகிக்கமுடியாமல் இருக்கிறது. உயிரோடிருப்பவரின்
மூச்சுக்காற்றும், இறந்தவரின் மெல்ல அடங்கும் வெம்மையும்
நீரை மாயமாக்குகின்றன. உபரி எனும் சொல் மனிதர்க்கு அடைமொழி ஆகுமா?
தண்ணீரில் எங்களைக் குவித்தால் அதன் மீது நடப்போம். நாங்கள் எடையற்றவர்கள்

மரணம் பெரிதல்ல, ஆனால் காயங்கள்.காயமற்ற ஒருவர் எங்களுக்குத் தேவை.
எங்கள் தசையைக் கொண்டு.வெள்ளைக் கொடி ஒன்றை உருவாக்குவது 
அப்படியொன்றும் கடினமானதல்ல
தோலினடியில் தசை வெளுத்து வெண்மையுற்றிருக்கும் இப்போது.

சுபத்ரா ஜயசுந்தரவின் முதலாவது கவித்தொகை ‘றனின் ரன் ருவெத்தி’, (தங்க இதயம் கொண்ட பெண்) 2015 இல் வெளியாகியது. சிங்களம், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கவிதை எழுதுகிறார். கனடாவில் வாழ்கிறார்.

 

http://www.kalachuvadu.com/issue-197/page36.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொள்ளாதிருப்பதைத் தவிர்ப்பதற்காக

மகேஷ் முனசிங்ஹ
ஓவியம்: தியேப் மேத்தா

kavithai-mahesh.jpg


அவள் நிர்வாணமாயிருந்தாள்
பகலின் ஒளியுறிஞ்சி
இரவின் இருட்டை
வானுக்குப் பகிர்ந்தபடியிருந்தது நிலம்
கையிலிருந்த மெல்லிய போர்வையால்
சிதைந்த மென்னுடலை மூடிவிட்டு
நீ அவளைப் பாராமல் கடந்துசென்றாய்

பொறு. 
நீ அவளை அடையாளங்காண வேண்டும் 
அவளை நன்கறிந்த அயலவன் நீதான்

அவர்கள் வெடிவைத்து எரித்துச் சாம்பலாக்கியது
ஆண்களெனும் சரித்திரத்தைத்தான்
வல்லுறவுகொண்டு கடலெறிந்ததென்னவோ
பெண்களெனும் உரிமையைத்தான்
இந்த அனைத்தையும் புறந்தள்ளியபடியேதான்
நீயிருந்தாய்

பூமி கிளர்ந்தெழ 
ஆண்களின் சாம்பல்
துளிர்க்கும் தளிருக்கு உரமாகக்கூடும்
கடல்நீர் ஆர்ப்பரித்தெழ எழ
நாளையும் பெண்ணுடல்கள்
இக்கரை ஒதுங்கக்கூடும்
நாளை மறுநாளும்
அதற்கடுத்த எல்லா நாள்களிலும் கூட... 

கரையொதுங்கிக் கிடக்கும் நிர்வாண உடல்
சிதைத்தழிப்பது
கலாசாரத்தையும் ஒழுக்க விழுமியங்களையும் என்றால்
உன் கையிலிருக்கும் கடைசிப் போர்வையால்
அதுவும் ஓர் முடிவுக்கு வருதல் கூடும்!

நெற்றியில் தொடங்கி 
கால்விரல் நுனிவரைக்கும்
கவனமாய் உற்றுநோக்கு
இந்த உருவத்தை அச்சொட்டாய்
அடையாளம் காணத்தக்க
அவளின் அயலவன் நீயேதான்!

 

மகேஷ் முனசிங்ஹ: நீண்ட காலமாகக் கவிதை எழுதி வருகிறார். இவரது, “ மள தூபத”, ( பிணத் தீவு) எனும் தொகுதி 2015 இல் வெளியாகியது. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றிய கவிதைகள். கனடாவில் வாழ்கிறார்.

சிங்களத்திலிருந்து தமிழில்: லறீனா அப்துல் ஹக்

http://www.kalachuvadu.com/issue-197/page38.asp

 

 

திரையின் மறுபக்கத்துக் கவிதை
டி.எம். டிம்ரான் கீர்த்தி
ஓவியம்: அர்ப்பிதா சிங்

kavithai-dimran.jpg


சிங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது 
நான்கு மூலைகளிலும் உள்ள அரசிலைகள் 
கூர்வாளால் கிழிக்கப்பட்டன 
பனம் பூக்களும் தென்னம்பூக்களும் 
தயங்கியபடி களத்தில்
வீழ்கின்றன 

பனையோலைகளாலும் தென்னோலைகளாலும் 
விசித்திரமான பின்னல்கள் பின்னப்படுகின்றன 
கலரியில் விசில் சத்தம் 
இப்போது உரத்துக் கேட்கிறது 
சரவெடிகள் வெடித்து எழுந்து 
எரிந்து சாம்பலாகி 
யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வீழ்கின்றன. 

திரையரங்குகளில் 
மதுக் கோப்பைகள் நிரம்புகின்றன 

தேசப்பற்று நிரம்பி வழிகின்றது. 
கொண்டாட்டத்தின் சத்தத்துக்குள்
மரணம் விழித்தெழுகிறது 

ஓலைக் குடிசைக்குள்ளிருந்து 
ஒரு மனைவி விம்முகின்றாள். 
வானுக்குமற்று மண்ணுக்குமற்று 
சிங்கம் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது

 

டி.எம். டிம்ரான் கீர்த்தி: புதிய தலைமுறைக் கவிஞர். முதலாவது கவித்தொகை, ‘சாதய சூதானம்’ (கொண்டாட்டத்துக்குத் தயார்) 2011இல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘யன்னம் சந்தரே’ இலங்கை அரச விருதைப் பெற்றது. கூலித் தொழிலாளராக வேலை.

சிங்களத்திலிருந்து தமிழில்: அரசி விக்னேஸ்வரன்

http://www.kalachuvadu.com/issue-197/page39.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009
குமாரி ஃபெர்னாண்டோ
ஓவியம்: லக்ஷ்மா கௌட்

kavithai-kumari.jpg


துயரம் கலந்த நீண்ட நாட்கள்  
உனது துன்பத்தின் வரலாறு 

கல்லறைகளிலிருந்தபடி 
பிறக்காத குழந்தையின் இரத்தத்தில் கூட 
எழுதப்பட்டு விட்டது. 
எனவே சுதந்திரக் கனவு 
அவர்களின் இரு கண்களுடனும் 
ஒப்பந்தமிட்டிருந்தது. 

இளமைநாட்களும்
முதுமைக்காலமும் 
குரூரமான வயதென்னும் மரத்தினால் 
எரிக்கப்பட்டன
ஆத்மாவையும் 
உடம்பையும் நோக்கி 
வேட்டைக் களத்தின் 
அம்புகள் எய்யப்பட்டன 


இப்பொழுதும்,
பசித்திருக்கும் குழந்தைகளைத் 
தேடிக்கொண்டு
பெருங்காட்டில் ஒளிந்திருக்கும் 
தமிழச்சி நீ ஓர் 
அரற்றலின் நதி 

ஆழங்களில் கொதித்துக் கொண்டிருக்கும்
கதறல்கள் பற்றிய 
எழுதப்படாத கவிதைகள்
எனது மொழியில் எத்தனை?
பாடப்படாத பாடல்கள்
எனது மொழியில் எத்தனை?

கடவுள் பற்றிக்கூட 
பாடல்கள் பாடப்படுமா
இந்தப் பூமியில்? 

காலத்தை நம்பி
நாகரிகத்தை விட்டு விலகிவிட்ட 
எனது நிலத்துக்கு 
உனது மரணம் 
ஒருபோதும் செய்தியல்ல

சிதறிய கை கால்களை 
சேகரித்துக்கொண்டு
இரத்தம் தெறித்த
குழந்தைகளை
மார்பில் அணைக்கிறோம்
மனிதர்களாய் 
பெண்களாய்
மரணத்தின் அருகில்

உனது இரத்தத்தை 
ஒரு வரி கவிதையால் கூட 
ஈடு செய்ய முடியாது 

திரும்பிப் பாராமல் 
வீசி எறியும் 
இந்த மொழி
ஒரு பெரும் புயல்

 

 

குமாரி ஃபெர்னாண்டோ: ஊடகவியலாளர். கவிஞர். இலங்கையில் நீர்கொழும்பு என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார். இவருடைய கவிதைகள் ஹிரு சஞ்சிகையிலும் பூந்தி எனும் சிங்கள இலக்கிய இணைய தளத்திலும் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக் கட்டம் பற்றிய இவருடைய சில கவிதைகள் அருந்ததி ஃபெர்னாண்டோ எனும் பெயரிலும் வெளியாகி இருக்கின்றன.

சிங்களத்திலிருந்து தமிழில்: அரசி விக்னேஸ்வரன்

 

http://www.kalachuvadu.com/issue-197/page40.asp

Link to comment
Share on other sites

  • 3 years later...

ஈழ இலக்கிய உலகில் சிறந்த கவிதைத்தொகுப்புக்கு நூலாக இனப்படுகொலை பற்றிய "அஞர்"கவிதைத் தொகுப்பு நூலாசிரியர்
சேரன் அவர்களுக்கு. ஆனந்த விகடன் விருது வழங்கப்பட்டபொழுது..

எங்கள் பொயட் ஐயா ஜெயபாலன் அவர்களும் இணைந்துள்ளார் 
?t=21

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.