Jump to content

மணலில் மறைந்த நாணயம்


Recommended Posts

er.jpg

எர்னெஸ்ட் பக்லர்

தமிழில் : ராஜ் கணேசன்.

 

இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” என என்னைப் பார்த்து கேட்டாள். எனக்கு அது நன்றாகவே நினைவிருந்தது. அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்.

“அன்று நாங்கள் உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா.. ஜெப வீடு, ப்ளுபெர்ரி தோட்டம், இவ்வளவு ஏன் கிணற்றில் கூடத் தேடிப்பார்த்தோம். அப்பாவின் கவலை தோய்ந்த முகத்தை அன்று தான் நான் பார்த்தேன். குதிரையின் லகானைக் கூடச் சரியாகப் பூட்டாமல் அவசர அவசரமாக உன்னைத் தேடிக்கொண்டு மரம் வெட்டும் இடத்திற்குப் பறந்தார். அங்கே டாம் ரீவ் குவித்து வைத்து எரித்துக் கொண்டிருந்த குப்பையில் உன்னைத் தேடிக்கொண்டு அருகே பாய்ந்தார். யாராலும் அவரை அன்று கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் பார்த்தால் நீ உன் படுக்கையறையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய். இவ்வளவு களேபரமும் அன்று நீ ஒரு பென்னி நாணயத்தைத் தொலைத்ததற்காகத் தானே?”

நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவள் தொடர்ந்தாள். “அப்போதெல்லாம் நீ சரியான முட்டாளாக இருந்தாய் அல்லவா?”.

ஆம்!! உண்மையில் நான் அப்போது செய்த காரியங்கள் முட்டாள்தனமானவை தான். ஆனால் அன்று நடந்த களேபரங்களுக்கு நான் அந்தப் பென்னி நாணயத்தை

தொலைத்தது மட்டும் காரணமல்ல.

அந்தப் பென்னி நாணயம் தான் நான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்த நாணயம். அதற்கு முன்னர் நான் பென்னியை கண்ணால் கண்டதேயில்லை. அவை கருப்பாக இருக்குமென்றே பல நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் நான் தொலைத்த நாணயம் தங்க நிறத்தில் ஜொலித்தது. என் அப்பா எனக்கு முதன் முதலில் கொடுத்த நாணயம் அது. நீங்கள் என் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப் பற்றி விவரிப்பது எளிதான காரியமல்ல என்றாலும் என்னால் இயன்ற வரை அவரைப் பற்றி விவரிக்கிறேன்.

அவர் நாள் முழுக்கக் கொஞ்சங்கூடப் பதற்றப்படாமல் சலிக்காமல் உழைத்துக் கொண்டே இருப்பவர் என்று சொன்னால் அவர் ஒரு முட்டாள் போல உங்களுக்குத் தோன்றலாம். அவர் கால்களில் என்னை நிற்கவைத்து என்னுடன் விளையாடியதில்லை, இவ்வளவு ஏன் அவர் சிரித்துக் கூட நான் பார்த்ததேயில்லை என்று சொன்னால் நீங்கள் அவரைச் சரியான சிடுமூஞ்சி என நினைக்கக்கூடும்.

நான் சமையலறையில் அம்மாவிடம் என் குறும்புத்தனங்களைப் பற்றி விவரிக்கும் போது அப்பா அங்கே வந்தால், ஒரு சில புத்தகங்களின் பக்கங்களை மறைத்து வைப்பது போல நான் அமைதியாகிவிடுவேன் என்று உங்களிடம் சொன்னால் எனக்கும் அவருக்கும் ஏதோ பெரிய இடைவெளி இருப்பது போலவும், அவரைப் பார்த்தால் நான் பயந்து நடுங்குவது போலவும் உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால் இவை எதுவுமே உண்மையில்லை. அவரைப்பற்றி எப்படி விளக்கினாலும் ஒரு கற்பனை வளம் மிகுந்த குழந்தையிடம் எவ்வாறு பேசவேண்டுமெனத் தெரியாத தந்தை போலவே அவர் உங்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஆம் நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் என் அறைக்கு அருகே வரும் போது, வயல்வெளியில் வேலை செய்து முறுக்கேறிய தன் கால்களைச் சற்றே தளர்த்திக்கொள்வார்.

என் அறையில் நுழையும் முன்னர்த் தன் கால்களைக் கழுவி கொண்டு வரவேண்டுமென்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். எனக்கு அவருடைய இந்தச் செய்கைகள் தெரிந்தாலும், எதற்கு அவ்வாறு நடந்து கொள்கிறார் என அந்த வயதில் புரியவில்லை. அவருடைய காலடி ஓசையைக் கேட்டதுமே என் அறைக்குள் நான் உருவாக்கிய குட்டி உலகம் மிக எளிதில் உடைந்துவிடுவதாகவே தோன்றும்.

எங்கள் பெரிய தோட்டத்தின் மூலையில் சில செடிகளை வளர்த்து வந்தேன். எளிதில் வளரக்கூடிய பீன்ஸ் முதலான செடிகள் அவை. என் அப்பா தோட்ட வேலை செய்வதற்கு முன்னர் என் அருகே அமர்ந்து எனக்காக நான் அமைத்த குட்டித் தோட்டத்தில் விதைகளை விதைத்துக் கொடுப்பார். ஆனால் ஒரு முறை கூட எத்தனை வரிசைகள் விதைக்க வேண்டுமென என்னிடம் கேட்கமாட்டார். நான் நான்கு வரிசைகள் விதைக்கலாமென எண்ணியிருப்பேன், ஆனால் அவரோ மூன்று வரிசைகளோடு விதைப்பதை நிறுத்திவிடுவார். நான் அவரிடம் இன்னொரு வரிசை விதைத்துத் தாருங்கள் எனக் கேட்டதேயில்லை. சில நாட்கள் மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அப்பா வண்டியின் முன்னே நடந்து செல்வார். நான் வண்டியின் பின்னாலேயே நடந்து போவேன். ஒரு முறை கூட என்னை அவராகவே அந்த வண்டியின் மீது ஏற்றி உட்கார வைத்ததே இல்லை. நான் வண்டி மீது ஏறி உட்கார முயன்று கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரே என்னை அதில் ஏற்றி உட்கார வைப்பார்.

அவர் எனக்கு எதுவுமே பரிசளித்ததில்லை. எனக்கு ஏதேனும் வாங்கிக் கொடுங்களேன் எனச் சூசகமாகக் கேட்ட பின்னரே ஒரு நாள் எனக்குத் தங்கம் போல மின்னிய அந்தப் பென்னி நாணயத்தைப் பரிசாக அளித்தார். தன்னுடைய பாக்கெட்டிலிருந்து அதனை எடுத்து நீண்ட நேரம் கைகளால் சோதித்துவிட்டு, “உனக்கு வேண்டுமானால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்” என அதனைக் கொடுத்தார்.

நான் அவரிடம் “மிக்க நன்றி” எனக் கூறிவிட்டு அந்த நாணயத்தை வாங்கிக்கொண்டேன். மேற்கொண்டு வேறெதுவும் அவரிடம் கூறவில்லை.

அந்த நாணயத்தை வாங்கிய உடனே கடைக்கு ஓடினேன். ஒரு பென்னியை வைத்துத் தாராளமாக ஒரு “லாங் டாம்” பாப்கார்ன் வாங்கலாம். பாப்கார்ன் வாங்குவதைப் பற்றி நினைக்க நினைக்க என் பென்னி நாணயம் அந்தக் கடைக்காரரின் கருப்பு சுருக்குப் பையில் மறைவது என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த நினைப்பு தோன்றியதுமே என் நடையின் வேகம் குறைந்து போய்க் கடை அருகே சாலையின் ஓரமாக அமர்ந்தேன்.

அது ஒரு ஆகஸ்டு மதியம். பச்சை இலைகளின் மணமும் அறுத்த புல்லின் வாசனையும் வெயிலில் மிதந்தன.வெயில் என் தோள்களில் ஒரு பூனைக்குட்டி போலத் தவழ்ந்து கொண்டிருந்தது. மாவு போல மிருதுவான மணல் என் பாதங்களில் பதிந்திருந்தது. சாலையில் ஒரு வண்ணத்துப்பூச்சி எங்கிருந்தோ பறந்து வந்தமர்ந்தது. அதன் இறக்கைகள் மூடித்திறப்பதை பார்க்கும் போது அது மூச்சு வாங்குவது போல இருந்தது. அருகிலிருந்த குளிர்ந்த குட்டையிலிருந்து மாடுகளின் கழுத்து மணியோசையை மிகக் கூர்மையாகக் கேட்க முடிந்தது. அப்போது என் நாணயத்தை வெளியே எடுத்து விளையாடத் தொடங்கினேன்.

எனக்கு அந்தப் பென்னியை செலவழிக்க மனமே வரவில்லை. அந்த நாணயத்தை மணலில் புதைத்துவிட்டு மீண்டும் தோண்டி எடுத்தேன். ஏதோ ஒரு புதையலைத் தோண்டி எடுப்பது போல ஒவ்வொரு முறையும் தோண்டி எடுத்தேன். இப்படியே நாணயத்தைப் புதைத்து எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு முறை தொலைத்துவிட்டேன். எவ்வளவு தோண்டியும் நாணயம் கிடைக்கவில்லை.

என் அறையில் ஓசை கேட்டு விழித்தெழுந்தேன். என்னை எங்குத் தேடியும் கிடைக்காமல் கடைசியாக என் அறைக்கு வந்து பார்த்த போது அங்கே நான் உறங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்து அழுது கொண்டே வந்து என்னை எழுப்பினார் அம்மா.

“டேனி.. டேனி”

அம்மாவின் குரல் கேட்டதும் கண் விழித்தேன்.

“எங்கே போனாய்? உன்னைக் காணாமல் நாங்கள் தவித்துப் போனோம்”

“என்னுடைய பென்னி நாணயத்தைத் தொலைத்துவிட்டேன் அம்மா”

“என்னது பென்னியை தொலைத்துவிட்டாயா? ஒரு நாணயத்தைத் தொலைத்ததற்கா இங்கு வந்து மறைந்து கொண்டிருக்கிறாய்?” என அம்மா கேட்டார். அவர் அருகே அப்பாவும் நின்று கொண்டிருந்தார். அவர் மட்டும் அங்கே இல்லையென்றால் அம்மாவிடம் விரிவாகவே காரணத்தை விளக்கியிருப்பேன்.

நான் நாணயத்தை ஒரு புதையல் போலத் தோண்டி எடுத்து விளையாடிய கிறுக்குத்தனத்தை அப்பாவின் முன்னே எப்படி விவரிப்பேன். அந்த நாணயம் தொலைந்த பின்னர் என் அடிவயிறு புரட்டி எடுத்ததைப் பற்றி எப்படிக் கூறுவேன்? நான் உண்மையில் அவர்களிடமிருந்து தப்பிக்க இங்கே வந்து ஒளிந்து கொள்ளவில்லை என எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது? அப்போது எனக்குத் தெரிந்திருந்த குறைந்தபட்ச வார்த்தைகளை வைத்து என்னுடைய உணர்வுகளை அவர்களுக்குப் புரியவைப்பது முடியாத காரியமென்பதால் தான் என் படுக்கையறையில் வந்து அழுது கொண்டிருக்கிறேன் என எப்படி அவர்களிடம் சொல்வது?

“நீ எங்களை எப்படிப் பயமுறுத்திவிட்டாய் தெரியுமா? சரி மணி ஒன்பதாகி விட்டது. வந்து சாப்பிடு” என அம்மா அழைத்தார்.

அருகிலிருந்த அப்பா, “ம்ம்.. சாப்பிடு” என்று மட்டும் கூறினார். அவர் அன்று பேசிய ஒரே வரி அது மட்டும் தான்.

மறுநாள் அம்மா என்னிடம் தோண்டித்துருவி கேள்விகள் கேட்பார் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக அப்பா என்னிடம் கேள்வி கேட்பார் எனக் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் கைகளில் அரிவாள் கொண்டு புல்லினை அள்ளி பன்றிகளுக்குப் போட்டுக் கொண்டிருந்தோம். அப்பா வயலுக்குச் செல்லாமல் எங்களுடன் நின்றுகொண்டிருந்தார். கெத்தேலில் தண்ணீர் இருந்தும் இன்னொரு வாளி தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினார். பன்றிகள் அனைத்தும் தங்கள் காலை உணவை முடித்துவிட்டனவா என ஒரு முறை நோட்டம் விட்டார். பின்னர் என் அருகே வந்து, “நீ அந்த நாணயத்தை எங்குத் தொலைத்தாய் என நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.

“எனக்கு அந்த இடம் நன்றாகத் தெரியும்” என அவரிடம் கூறினேன்.

“அப்படியா.. சரி என்னுடன் வா. அந்த நாணயத்தைக் கண்டுபிடிக்க முடியுமாவெனப் பார்ப்போம்” என்று கூறி அழைத்துச் சென்றார்.

அவரை நான் உட்கார்ந்திருந்த சாலைக்கு அழைத்துச் சென்றேன். அவர் என் கைகளைப் பிடிக்காமல் என்னுடன் நடந்து வந்தார்.

“இங்கே தான் நான் மணலில் விளையாடிக் கொண்டிருந்த போது நாணயத்தைத் தொலைத்துவிட்டேன்” என அவரிடம் கூறினேன். தனியாக ஒரு நாணயத்தை வைத்து மணலில் என்ன விளையாட்டு விளையாட முடியுமென அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அவர் பார்வையில் அந்தக் கேள்வி தெரிந்தது.

அவரால் கண்டிப்பாக அந்த நாணயத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றியது. அவர் கத்தியால் லாவகமாக மரப்பட்டையை உடையாமல் உரித்துப் புல்லாங்குழல் செய்து கொடுத்திருக்கிறார். அவர் சிறு வயதில் தனக்காகப் புல்லாங்குழல் செய்திருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் மீன் பிடிக்கத் தூண்டிலில் போடும் முடிச்சுகள் இறுக்கமாக இல்லையெனில் அவர் விரல்களாலேயே தடவிப்பார்த்து கண்டுபிடித்து விடுவார். என்னுடைய சக்கரத் தள்ளுவண்டி உடைந்து போனால், அதனை உடைந்ததற்கான தடயமேயின்றி உடனே சரி செய்து தருவார். அவர் கீழே அமர்ந்து கைகளைச் சல்லடையாக்கி மணலைத் துழாவி என் நாணயத்தைச் சில நொடிகளில் கண்டுபிடித்தார். அவர் அந்த நாணயத்தைக் கைகளில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.

“டேன்.. நேற்று நீ இதற்காக மறைந்து கொண்டிருந்திருக்க வேண்டாம்.. இதனைத் தொலைத்ததற்காக நான் உன்னை அடித்திருக்கமாட்டேன்” எனக் கூறினார்.

இதைக்கேட்டதும் எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

“அப்பா.. நான் உங்களிடம் அடி வாங்க பயந்து என் அறையில் மறைந்து கொண்டிருந்தேன் என நினைத்துவிட்டீர்களா” எனக் கோபத்துடன் கேட்டேன். இதை அவரிடம் கேட்கும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நானே அவரை அடித்தது போல இருந்தது.

அதனைக் கேட்டதும் என் அப்பாவின் முகம் மாறியது. அந்த முகம் என் அம்மாவுடன் சண்டை போட்டபின்பு வரும் முகம். சில மாலைகளில் அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு என்ன செய்வது எனப் புரியாமல், என் பள்ளி புத்தகத்தையோ அல்லது ஏதேனும் பேப்பரையோ கைகளில் வைத்துக் கொண்டு ஆழமாகப் படிப்பது போலப் பாவனைச் செய்யும் முகம் அது. நான் அந்தச் சமயத்தில் அவரிடம் நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லியே ஆக வேண்டும். அப்போது தான் என் அப்பா என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயத்தைப் போக்க முடியும். நடந்தவை எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் சரி, அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்தேன்.

“நான் வேண்டுமென்றே அந்த நாணயத்தை மறைக்கவில்லை அப்பா. சத்தியமாகச் சொல்கிறேன். நான் அந்த நாணயத்தை மணலில் புதைத்து மீண்டும் புதையலைத் தோண்டி எடுப்பது போல ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நான் ஒரு தங்கப் புதையலை தோண்டி எடுப்பது போல ஒவ்வொரு முறையும் எனக்குள் நினைத்துக் கொண்டேன்”

அப்போது அப்பா குனிந்து என்னை உற்றுப்பார்த்தார். நான் மேலும் தொடர்ந்தேன்.

“நான் அந்தத் தங்கப்புதையலை வைத்து உங்களுக்குக் கதிர் அறுக்கும் இயந்திரம் வாங்கவேண்டுமென நினைத்துக் கொண்டேன். அந்த இயந்திரத்தைக் கொண்டு உங்கள் வேலையை நீங்கள் மிகச் சீக்கிரமாக முடித்துவிட்டு வீட்டுக்கு வரலாம். பின்னர் ஒரு பெரிய கார் வாங்கி நீங்களும் நானும் அதில் தினமும் டவுனுக்குச் செல்லலாம் என நினைத்துக் கொண்டேன். நாம் சாலையில் வண்டியில் செல்வதை மக்கள் அனைவரும் சந்தோஷமாகத் திரும்பிப் பார்ப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்”

அப்பா என்னையே தலை அசையாமல் பொறுமையாக உற்றுப்பார்த்து, நான் பேசி முடிப்பதற்காகக் காத்திருந்தார்.

“நீங்களும் நானும் சிரித்துப் பேசிக்கொண்டே அந்த வண்டியில் செல்வது போல நினைத்துக் கொண்டேன் அப்பா” எனச் சொல்லி முடித்தேன். அவர் என்னை முழுதாக நம்பவேண்டும் என்பதற்காக என் மனதில் இருந்த அனைத்தையும் மறைக்காமல் அவரிடம் கூறிவிட்டேன். அன்று தான் முதல் முறையாக என் அப்பா கண்களில் கண்ணீர்த் துளிகளை நான் கண்டேன்.

என்னிடம் அந்த நாணயத்தைக் கொடுக்க வந்து பின்னர்த் தயங்கி தன்னுடைய சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இன்று எங்கள் குடும்பத்தின் நிலை எனக்கு நன்றாகத் தெரியும், எங்களிடம் பெரிதாகச் சொத்து எதுவுமில்லை, நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செல்வதற்குக் கார் எதுவுமில்லை. நேற்று அப்பாவுடைய பழைய துணிகளை நாங்கள் வெளியே எடுத்து வைத்த போது ஒரு கோட்டில் அந்த நாணயத்தைக் கண்டேன்.

அது அவர் வழக்கமாகக் காசு வைக்கும் பாக்கெட் இல்லை. அந்த நாணயம் அப்போதும் பளபளப்புக் குறையாமல் இருந்தது. அனேகமாக இறக்கும் வரை அப்பா அதனை அடிக்கடி பாலிஷ் செய்து வைத்திருக்க வேண்டும்.

நான் அந்த நாணயத்தைக் கோட்டிலேயே திரும்ப வைத்துவிட்டேன்.

•••

நன்றி : ராஜ் கணேசன்.

http://www.sramakrishnan.com/?p=5219

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.