Jump to content

முத்துக் குளிக்க வாரீகளா...கவிக்கோ அப்துல் ரகுமான்


Recommended Posts

முத்துக் குளிக்க வாரீகளா 23: கண்களின் வேளாண்மை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kaviko_2689682f.jpg
 

சனிக்கிழமை சமூகம்

 

 

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்.

தமிழர்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.

தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த வினை பிறகு விளையாட்டாகிவிட்டது.

இது தமிழர்களின் நாகரிக பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

சிலர் பசுவை மட்டுமே மதிப்பார்கள். தமிழர் களோ காளையையும் சேர்த்தே மதிப்பார்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.

வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றப் பண்டிகையில் ஒரு நாள் இட ஒதுக்கீடு தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுதான். ஸ்பெயினி லும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் காளைகளைக் குத்த அனுமதிப் பார்களே தவிரக் காளைகளைக் குத்த மாட்டார்கள்.

சங்க காலத்தில் இதற்குப் பெயர் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது.

சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சேர்ந்திருக்கிறது.

அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள்.

காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல்.

ஆயர்கள் காளைகளை அடக்கி வெல்லும் காளைகளுக்கே தங்கள் பெண்களை மணம் முடித்துக் கொடுப்பார்கள்.

காரணம் ஆயர்களுக்கு மாடுகள்தான் செல்வம். அதனாலேயே தமிழர்கள் செல்வத்திற்கு ‘மாடு’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை’

என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ‘மாடு’ என்பதைச் செல்வம் என்ற பொருளில் கையாள்வதைக் காணலாம்.

அந்த மாடுகள் என்ற செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் வீரம் வேண்டும். அக்காலத்தில் மாடுகளைக் கூட்டம் கூட்டமாகத் திருடிக்கொண்டு போகும் கொள்ளையர்கள் இருந்தார்கள். அப்படி அவர்கள் திருடிக்கொண்டு போய்விட்டால் அவற்றை மீட்டு வரப் போர்ப் பயிற்சியும் வீரமும் வேண்டும்.

மாடுகளைக் காப்பாற்றினால்தான் குடும்பத் தைக் காப்பாற்ற முடியும். அதனால்தான் ஆயர்கள் வீரர்களுக்கே தங்கள் பெண்களைக் கொடுப்பார்கள்.

மேலும் பெண்களும் வீரர்களையே விரும்பு வார்கள்.

சங்க இலக்கியமான எட்டுத் தொகையில் கலித்தொகை என்பது ஒன்று. அதில் முல்லைக் கலி என்ற பகுதியில் ஏறு தழுவல் பற்றி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சில காட்சிகள்:

‘‘பூவை அணிந்த பூவையரிடையே தன் உடலோடும் என் உயிருக்குள் புகுந்து நிற்கிறாளே, யாரடா அவள்?’’

‘‘ஓ அவளா! கொடிய போர்க் காளையைத் தழுவி வெற்றி பெறாதவர், இவள் அழகிய மேனியைத் தீண்ட முடியாது என்று ஊரெல்லாம் பறையறைந்து அறிவிக்கப்பட்டவள் இவள்.’’

‘‘தோழி! எங்கள் பசுத் திரளிடையே நின்று, ‘காளையோடு போர் செய்ய வல்லவர் என்னைப் போல் யாருமில்லை’ என்று வீரம் பேசும் அந்த இளைஞன் ஒருநாள் நம் உறவினன் ஆகாமல் போவதில்லை. அவனைக் கண்டு என் கண்கள் காதல் வேளாண்மை செய்கின்றன.’’

‘‘கொல்லும் காளையின் கொம்புகளுக்கு யார் அஞ்சுகிறானோ, அவனை ஆயமகள் மறுமையில் கூடத் தழுவ மாட்டாள்.

‘‘காற்றுப் போலப் போய்விடுவது உயிர் என்பதை அறியாமல் உயிர் போய்விடுமோ என்று அஞ்சி, காளையின் கொம்பை அஞ்சியிருக்கும் நெஞ்சினார் தழுவுவதற்கு, அத்துனை எளியவோ ஆயமகள் தோள்கள்?’’

‘‘எம்மினத்து ஆயர் பரிசம் வேண்ட மாட்டார்கள். ஆனால் கொல்லும் ஏற்றின் கொம்புகளைத் தாம் காதலிக்கும் பெண்களின் கொங்கைகளைப் போலக் கருதி, ஆர்வமுடன் பாய்ந்து தழுவினால் அவனையே தம் மகளுக்கு ஏற்றவனாகக் கருதுவார்கள்.’’

‘‘ஏறு தழுவும் ஆற்றலும் ஆசையும் உடையவ னாக இருந்தாலும் முறை அறியாது சென்ற ஒருவன் ஏற்றைத் தழுவ முயன்று ஏற்றினால் குத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்தான். அவன் நிலையைக் கண்ட ஏறு, தன்னால் புண்பட்டு வீழ்ந்தவன் என்பதால் அவனைத் தாக்காமல் திரும்புவதைப் பாரடி தோழி!’’

‘‘பசுத் திரளை உடைய ஆயர் மகனுக்கே உன்னைக் கொடுப்போம் என்று என் சுற்றத்தார் கூறினரே, இப்போது அவர்கள் கொடுப்பதற்கு என்னடீ இருக்கிறது? தன் மேல் பாய்ந்த காளையை அவன் பாய்ந்து தழுவினானே அப் போதே என் நெஞ்சம் அவனிடம் சென்றுவிட்டது.’’

ஏறுகள் குத்திய புண்களிலிருந்து வழிந்த குருதியால் கைகள் வழுக்கவே, மணலால் கையைப் பிசைந்து, திமிரி எழுந்து, சற்றும் தாழ்த்தாமல் மீனவர்கள் கட்டுமரம் ஏறுவது போல் ஏறுகளின் மேல் பாய்ந்து தழுவி அடக்கினர் இளைஞர்கள்.

‘‘தோழி! என் காதலனைக் கொலையேறு குத்திச் செய்த புண்களையெல்லாம் என் கொங்கை வேதினால் ஒற்றடம் கொடுத்துத் தழுவிச் தழுவிப் பொதிவேனடி!”

‘‘தோழி! தயிர் கடையும்போது என் தோளில் தெறித்த தயிர்ப் புள்ளிகளின் மேல், கொல்லேற்றை தழுவிப் புண்பட்ட என் காதலனின் உடலிலிருந்து வடியும் குருதி கலந்து மயங்குமாறு தழுவுவது என் தோளுக்கு அழகு மட்டுமோ? அழகுக்கும் மேலான பெருமையடி.’’

‘‘இவள் கணவன் ஏற்றை அடக்கியவன் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே, நான் மோர் விற்றுவரும் இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோடி?’’

காளைகளோடு இளைஞர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஓர் இளைஞனின் தலையில் இருந்த முல்லைக் கண்ணியை அவனோடு மோதிக் கொண்டிருந்த காளை அலைத்து எடுத்துத் துள்ளியது. அக்கண்ணி ஒரு கன்னியின் கூந்தலில் வந்து விழுந்தது. அதை அவள் காணாமல் போனது கிடைத்தது போல் ஆர்வமுடன் தன் கூந்தலில் முடித்துக்கொண்டாள்.

‘‘இந்தக் கண்ணியை என் தாய் கண்டு கேட்டால் என்னடீ செய்வது?’’

‘‘அவன் ஓர் ஆயர் மகன். நீயோர் ஆயர் மகள். அவன் உன்னை விரும்புகிறான். நீ அவனை விரும்புகிறாய். அன்னை நொந்துகொள்வதற்கு இதில் எதுவுமே இல்லையே.’’

‘‘உன் மனம் போல் என் அன்னையின் மனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.’’

‘‘அவனையும் அளவுக்கு மீறிக் காதலிக்கிறாய். அன்னைக்கும் அஞ்சுகிறாய், இப்படி இருந்தால் எப்படி?’’

‘‘என் நோய்க்கு மருந்துதான் என்னடீ?’’

‘‘வருந்தாதே. ஏறு அவன் கண்ணியை உன் கூந்தலில் வீசியது என்பதை அறிந்து ‘இவன்தான் இவளுக்கு உரியவன் என்று தெய்வம் காட்டியது’ என்று உன் தந்தையோடு தமையன்மார் எல்லாரும் கூடி, உன்னை உன் காதலனுக்கே மணம் செய்து தர முடிவு செய்துவிட்டனரடி!’’

‘‘முல்லை மலர் செறிந்த கானச் சிற்றாற்றின் அருகில் உள்ள இடத்தில், மாவடுவைப் பிளந்தது போன்ற உன் கண்ணால் என் நெஞ்சைக் களவாடி உன்னுடன் கொண்டு போய் வைத்திருக்கிறாயே, நீ ஒரு கள்விதானே?’’

‘‘என்னது? உன் நெஞ்சை நான் களவாடிக் கொண்டுபோய்விட்டேனா? அதனால் எனக் கென்ன பயன்? அது புனத்திலிருக்கிற என் தமைய னுக்குச் சோறு கொண்டுபோகுமோ? மாடுகளோடு இருக்கிற என் தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டுபோகுமோ? தினையறுத்த வயலில் என் தாய் விட்டிருக்கும் கன்றை மேய்த்துக் கொண்டிருக்குமோ? எனக்கெதற்கு உன் நெஞ்சு?’’

‘‘போனால் போகட்டும் என்று மோர் கொடுத்தேன். மோர் கொடுத்தவள் வெண்ணெயும் கொடுப்பாள் என்று நினைத்தாயோ?’’

‘‘மத்தில் கட்டிய கயிறு போல உன்னையே சுற்றிச் சுற்றி என் நெஞ்சம் சுழலுதடி. நெய் கடைந்தெடுத்த பாலைப் போல் என்னை ஆக்கிவிட்டாய். என்னிடமிருந்து எடுத்த உயிரை யாவது என்னிடம் கொடுத்துவிடடீ’’

‘‘இந்த மாதிரியெல்லாம் பேசிக்கொண்டு இங்கே நிற்காதே. என் உறவினர்கள் பார்த்தால் அவ்வளவுதான். நாளைக்குக் கன்றோடு மேய்ச்சல் காட்டுக்கு வருவேன்.’’

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-23-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article8085285.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முத்துக் குளிக்க வாரீகளா 24: வழிபடு... வழிப்படு!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
valluvar_2707524f.jpg
 

திருவள்ளுவர்

நம்மை அதிமனிதனாக (Super man) செதுக்க வந்தவர்.

அதிமனிதன் என்றால் வானத்தில் பறந்து வந்து தீயவர்களைத் தண்டிப்பவன் அல்லன்.

சிறுவர் படக் கதைகளும் (Comics), திரைப்படங் களும் அப்படித்தான் காட்டுகின்றன.

திருவள்ளுவர் நாடும் அதிமனிதன் வானத்தை விட உயர்ந்தவன். மானுடப் பண்புகள் என்று எவை எவை உண்டோ அவற்றின் உச்சம் தொடுபவன். தீயவர்களை அல்ல, தீய பண்புகளை அழிப்பவன்.

நாமோ செதுக்கப்படுவதற்குத் தயாராக இல்லை. அதற்கு மாறாக அவரைச் சிலையாகச் செதுக்கி நிறுத்துவதிலேயே குறியாக இருக்கிறோம்.

வழிபடுதல், வழிப்படுதல் என்று தமிழில் இரண்டு சொற்கள் இருக்கின்றன.

இறைவனை வழிபடுவோம். சான்றோர்கள் வழிப்படுவோம். அதாவது அவர் காட்டிய வழியில் நடப்போம்.

திருவள்ளுவர் காட்டிய வழியில் நாம் நடந்தால் அதிமனிதன் ஆகலாம். ஆனால் நாமோ அவரை வழிபடுவதோடு நின்றுவிடுகிறோம்.

திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்தவர். நாமோ அவர் எப் படி இருப்பார் என்பதைப் பற்றியே சிந்திக்கிறோம்.

திருவள்ளுவர் ‘சமயக் கணக்கர் மதி வழி’ செல்லாது, எல்லோரும் ஏற்கும் பொதுமறை இயற்றியவர். நாமோ அவருக்கும் பூணூல் போடுவதிலும், நெற்றியில் நீறோ, நாமமோ தீட்டுவதிலும் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம்.

திருவள்ளுவர் நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர். நாமோ அவர் குடும்பம் பற்றி ஆராய்கிறோம்.

திருவள்ளுவர் நமக்கு நல்ல காலம் பிறக்க அருள் வாக்குக் கூறியவர். நாமோ அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பது பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறோம்.

திருவள்ளுவர் நாம் வரலாறு படைக்க வேண்டும் என்று விரும்பியவர். நாமோ அவரைப் பற்றிக் கட்டுக் கதைகள் புனைகிறோம்.

அவரைப் பற்றிச் சில கதைகள் உலவுகின்றன. அதில் ஒன்று:

திருவள்ளுவருடைய தாய் ஆதி, அவர் புலைச்சி. தந்தை பகவன், அவர் அந்தணர்.

இவர்கள் இருவரும் பிள்ளைகளைப் பெற்று அங்கங்கே போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்களாம்.

அந்தப் பிள்ளைகள், ‘பெற்றோர்களே! நீங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எங்களை இறைவன் காப்பான். நீங்கள் அடுத்த பிள்ளை பெறுவதை கவனியுங்கள்’ என்று பாடுவார்களாம்; அதுவும் வெண்பா.

அப்படி ஆதியும் பகவனும் பெற்றுப் போட்டுவிட்டுப் போன பிள்ளைகள், ஒளவை, உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர் ஆகியோராம்!

இந்தக் கதையைக் கேட்கும்போதே இது ஒரு மூடக்கதை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதில் அவ்வளவு அபத்தங்கள் இருக்கின்றன.

அந்தக் காலத்தில் ஒரு புலைச்சியும் ஓர் அந்தணனும் மணம் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதான செயலல்ல.

தாழ்த்தப்பட்ட குலத்தில் ஆதி என்ற பெயர் இருக்கலாம். ஆனால் அந்தணர் யாரும் பகவன் என்று பெயர் வைத்துக் கொள்வதில்லை.

ஒளவை, அதிகமான், கபிலர், திருவள்ளுவரின் சகோதரர்களாம். இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.

உப்பை, உறுவை, வள்ளியம்மை யாரென்றே தெரியவில்லை.

பிறந்தவுடனே பிள்ளை வெண்பா பாடுமா என்ன?

பிள்ளைகளைப் பெற்று அங்கங்கே போட்டு விட்டுப் போவது எவ்வளவு அயோக்கியத்தனம். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்றால் இல்லை.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’

என்ற முதற் குறளில் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று குறிப்பிடுவது படைப்புகளுக்கு ஆதியாக இருக்கும் இறைவனை; தம் பெற்றோர்களை அல்ல. அப்படிப் பொருள் கொள்ள இடமில்லை.

திருவள்ளுவர் பல்துறை அறிவு படைத்த பேரறிஞர். உலகம் போற்றும் சிந்தனையாளர். ஓர் அந்தணனுக்குப் பிறந்திருந்தால்தான் இத்தகைய மேன்மை பெற முடியும் என்பது இந்த மூடக் கதைக்காரனின் எண்ணம்.

இந்தக் மூடக் கதைப்படி வள்ளுவரின் மனைவி வாசுகி. அவர் கற்புக்கரசி. இதை விளக்க ஒரு கதை.

வாசுகி, கணவன் சொல்லைத் தட்டாதவர். தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதவர்.

அவர் ஒருமுறை கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த திருவள்ளுவர் அவரை அழைத்தார்.

வாசுகி ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் நீர் இறைத்துக் கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டுவிட்டுச் சென்றாராம். மேலே வந்து கொண்டிருந்த குடம் அப்படியே அந்தரத்தில் நின்றதாம்.

திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார். அவர் நெசவுத் தொழில் செய்துகொண்டிருந்தார் என்றும் கதை கூறுகிறது. இங்கே ஒரு பெரிய வரலாற்றுக் குழப்பம் நடந்திருக்கிறது.

திருவள்ளுவர் தொடர்பாக நமக்குக் கிடைத் திருப்பது திருக்குறள் மட்டுமே. அதில் இந்தக் கதைகளைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. மேலும் இக்கதைகளுக்கும் திருவள்ளுவருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதை நிரூபிப் பதற்கு ஒரு வெண்பா இருக்கிறது.

வாசுகி இறந்துவிடுகிறார். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் திருவள்ளுவர் பாடியதாக ஒரு வெண்பா கிடைத்திருக்கிறது.

‘அடிசிற் கினியாளே அன்புடை யாளே

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடிப்

பின்தூங்கி முன்னெழூஉம் பேதையே! போதியோ

என்தூங்கும் என்கண் இரா’

அடிசில் என்றால் உணவு. வாசுகி மிகச் சுவையாகச் சமைப்பாராம். அதை அன்போடு பரிமாறுவாராம். திருவள்ளுவர் தூங்கும் வரை அவர் கால்களை வருடுவாராம். அவர் தூங்கிய பிறகு தூங்குவாராம். அவர் காலையில் எழுவதற்கு முன் எழுந்துவிடுவாராம்.

இப்பாடலில் தூங்குதல் என்ற சொல் உறங்குதல் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் காலத்தில் தூங்குதல் என்ற சொல் உறங்குதல் என்ற பொருளில் கையாளப்படுவதில்லை.

திருவள்ளுவர் ‘தூங்குதல்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை’ (672)

இக்குறளில் தூங்குதல் என்ற சொல் காலம் தாழ்த்துதல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன்ஆள் பவர்க்கு’ (383)

இதில் வரும் ‘தூங்காமை’ என்பதற்குச் சோர்ந்திராமை என்று பொருள்.

‘காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து’ (1163)

இக்குறளில் வரும் ‘தூங்கும்’ என்ற சொல்லுக்குத் ‘தொங்குதல்’ என்று பொருள். திருவள்ளுவர் திருக்குறளில் உறக்கம், துயில் என்ற சொற்களையே கையாண்டுள்ளார். உறக்கம் என்ற பொருளில் ‘தூங்குதல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை.

‘தூங்குதல்’ என்ற சொல் பிற்காலத்தில்தான் ‘உறங்குதல்’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

இதிலிருந்து வாசுகி கணவராகிய வள்ளுவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் அல்லர் என்று தெரிந்துகொள்ளலாம்.

அப்படியென்றால் வாசுகி கணவராகிய திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்ததாகவும், அவர் நெசவுத் தொழிலைச் செய்தார் என்றும் கதைகள் கூறுகின்றன. இதற்கும் சான்றுகள் இல்லை.

மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் ஒன்று இருக்கிறது. இது திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருடயதல்ல.

அப்படியென்றால் அது யாருடைய கோயில்?

‘சித்தர் கோவை’ என்ற நூலில் ‘திருவள்ளுவர் ஞானம்’ என்ற பெயரில் 16 பாடல்கள் காணப்படுகின்றன. இதே பாடல்கள் ஞானவெட்டியான் என்ற நூலிலும் இருக்கின்றன. இந்த நூலின் காலம் 17-18ஆம் நூற்றாண்டு.

இந்தத் திருவள்ளுவரே மயிலாப்பூரில் வசித்தவர்; நெசவுத் தொழில் செய்தவர்; வாசுகியை மனைவியாகப் பெற்றவர். இவர் திருவள்ளுவ தேவ நாயனார் எனப்பட்டார். இவர் சமணர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் தீர்த்தங்கரரின் பாதச் சுவடுகள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று இருந்தது.

பின்னால் விளைந்த சைவ, சமணப் பூசலால் இந்தப் பாதச் சுவட்டுக் கல் பெயர்த்து எறியப் பட்டது. அக்கல் அக்கோயில் பூசாரி வீட்டில் துணி துவைக்கும் கல்லாய் பயன்படுத்தப்பட்டது. இக்கல்லை நான் பார்த்திருக்கிறேன்.

ஏதோ, மன அழுக்கைப் போக்கிக் கொண்டிருந்த பாதச் சுவடு துணி அழுக்கைப் போக்கவாவது பயன்படுத்தினார்களே!

முடிவாக மயிலாப்பூர் வள்ளுவர் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் அல்லர். திருவள்ளுவர் விட்டுச் சென்ற அடிச்சுவடு திருக்குறள் என்ற ஈரடிச் சுவடுகளே!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-24-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/article8144022.ece?homepage=true

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kavi_2716956f.jpg
 

(விசாரணைக்கு உட்பட்டவன் எல்லா மதங்களுக்கும் பிரதிநிதி)

இறுதித் தீர்ப்பு நாள்.

இறந்த மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நீதிபதி ஆசனத்தில் இறைவன் அமர்ந்திருந்தான். முதலில் ஒரு நாத்திகன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.

இறைவன் தேவதூதர்களை நோக்கி ‘‘இவரைச் சகல மரியாதையுடன் கூட்டிக் கொண்டுபோய் சொர்க்கத்தில் விடுங்கள்’’ என்றான். அடுத்து ஓர் ஆத்திகன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.

‘நாத்திகனுக்கே சொர்க்கம் என்றால் இறை வனை வழிபட்ட எனக்கு அதைவிட உயர்ந்த எதையோ அவன் கொடுப்பான்’ என்று எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான்.

இறைவன் தேவதூதர்களை நோக்கி, ‘‘இவனைத் தரதர என்று இழுத்துக் கொண்டுபோய் நரகத்தில் போடுங்கள்’’ என்றான்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆத்திகன், ‘‘இறைவா! நாத்திகனுக்குச் சொர்க்கம். அன்றாடம் உன்னை வழிபட்ட எனக்கு நரகமா? இது என்ன நியாயம்?’’ என்று கேட்டான்.

இறைவன் ‘‘நாத்திகன் யோக்கியன். என்னை இல்லையென்று சொல்லிவிட்டு அவன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான். நீயோ என்னை ‘உண்டு’ என்று கூறி என்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாயே.

பாவி! என் பெயரால் நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா?

வயதுக்கு வந்தும் சிறு பிள்ளைத்தனமாய் என்னை பொம்மையாக்கி விளையாடினாய். மனிதனைப் போல் எனக்கு ஆசாபாசங்கள் இல்லை. நீயோ எனக்கு மனைவி மக்களை உண்டாக்கினாய். எனக்கு வைப்பாட்டியும் கூட்டி வைத்தாய்.

பசித்த ஏழைகளுக்கு உணவு தராமல் பசிக்காத எனக்கு உணவு படைத்தாய். மூட நம்பிக்கைகளை மதமென்று நம்பினாய். பக்தி என்ற பெயரால் அருவருப்பான செயல்களைச் செய்தாய்.

நான்தான் அண்ட சராசரங்களைப் படைத் தேன். நீ என்னை வணங்காமல் யார் யாரையோ, எதை எதையோ இறைவன் என்று எண்ணி வணங்கினாய். எதைக் கேட்டாலும் கொடுக்கும் சக்தி உடையவன் நான். நீயோ கொடுக்க சக்தி இல்லாதவர்களிடம் எல்லாம் சென்று கையேந்தினாய்.

எனக்குப் பெயர் கிடையாது. நீயோ என்னை ஆயிரம் பெயரால் கூப்பிட்டாய். அதாவது பரவாயில்லை. எனக்கு உருவம் கிடையாது. நீயோ எனக்கு ஆயிரம் உருவம் கொடுத்தாய். நீ என்னைப் பார்த்ததில்லை. பிறகு எப்படி எனக்கு உருவம் கொடுத்தாய்? எனக்கு உருவம் இருந்திருக்குமானால் ஒன்றுதானே இருந் திருக்கும்? நீ இவ்வளவு வகையாய்ச் செய்கிற பொழுதே இவை என்னுருவம் இல்லையென்பது தெரியவில்லையா? எல்லா மத வேதங்களும் எனக்கு உருவம் இல்லை என்று கூறுவதை நீ படித்ததில்லையா? படைப்புகளுக்குத்தான் உருவம் இருக்கும். படைத்தவனுக்கு இல்லை. உருவம் என்றாலே அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு. எனக்குத் தோற்றமும் இல்லை. அழிவும் இல்லை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாம் அறிந்தவர்களாக நடிக்கும் உன் குருமார்களும் இந்த உண்மையை உனக்கு போதிக்கவில்லையா?

நான் உனக்குள்ளேயே இருக்கிறேன். நீயோ என்னை வெளியில் தேடி அலைந்தாய். ஊருக்கு ஊர் எனக்கு ஆலயம் கட்டினாய். உள்ளூரிலேயே ஆலயம் இருக்க வெளியூர் ஆலயத்தை நாடிச் சென்றாய். கேட்டால் வெளியூர் தெய்வத்துக்குச் சக்தி அதிகம் என்றாய். உள்ளூரில் இருப்பவனும் நான்தான். அதெப்படி ஓர் ஊரில் இருக்கிற தெய்வத்துக்கு சக்தி அதிகமாகவும், மற்றோர் ஊரில் இருக்கும் தெய்வத்துக்கு சக்தி இல்லாமலும் இருக்கும். அது உண்மையானால் சக்தி இல்லாத தெய்வத்துக்கு ஏன் ஆலயம் கட்டினாய்?

சக்தி இல்லாத தெய்வம் என்பவனே! நீதான் தெய்வ நிந்தனை செய்பவன்.

ஆலயங்களை வியாபாரத் தலங்கள் ஆக்கி னாய். என் பெயரை லேபிளாகப் பயன்படுத்திப் பணம் சம்பாதித்தாய். ஆலயத்தை மூடிவைத்தாய். உண்டியலைத் திறந்துவைத்தாய்.

பக்தர்கள் பெருகுகிறார்கள். ஆனால் பாவி களும் பெருகுகிறார்களே, இதெப்படி? ஆலயங் கள் மன அழுக்கை வெளுக்கும் சலவைத் துறைகள். இங்கே வந்த பிறகும் ஒருவன் அழுக்காக இருக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்?

தவறான வழியில் பணம் சம்பாதிப்பவனும் என்னை வணங்குகிறான். திருடனும் என்னை வணங்குகிறான். ஊழல் பேர்வழிகள் எல்லாரும் கூச்ச நாச்சமில்லாமல் என்னை வணங்குகிறார்கள். இவர்களை விட என்னை வணங்காத நாத்திகன் மேலானவன் இல்லையா? ஆலயங்கள் என்ன பாவிகளின் சரணாலயங்களா?

‘அதைக் கொடு இதைக் கொடு’ என்று கேட்பதற்காகவே ஆலயங்களுக்கு வருகிறார்கள். ‘இனி யாருக்கும் எதையும் கொடுப்பதில்லை’ என்று நான் பிரகடனம் செய்தால், எத்தனைப் பேர் ஆலயங்களுக்கு வருவார்கள்? மனிதப் பிறவி தந்து, இன்ப சாதனங்களைத் தந்து, அதை அனுபவிக்கப் புலன்களையும் தந்தேனே அதற்கு எவனாவது நன்றி செலுத்துகிறானா? ‘பொன்னைக் கொடு’ என்று கேட்கிறானே தவிர, ‘உன்னைக் கொடு’ என்று எவனாவது கேட்கிறானா?

லஞ்சம் ஆலயங்களில்தான் தொடங்கியது. ‘எனக்குத் தென்னந்தோப்பைக் கொடு. உனக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன்’ என் கிறார்கள். ஒரு தேங்காய்க்காக ஒரு தென்னந்தோப்பையே தர நான் என்ன கேவலமான தரகனா?

என்னை மனிதனை விடக் கேவலமாகச் சித்தரித்து ஆபாசக் கதைகளை எழுதி வைத் திருக்கிறார்கள். இவற்றை நம்பும் மூடர்களா பக்தர்கள்?

நாத்திகர்கள் ஆலயங்களை இடிப்பதில்லை. ஆத்திகர்களே பிற மத ஆலயங்களை இடிக்கிறார்கள். இடித்த ஆலயத்திலும் நான்தான் இருக்கிறேன் என்பது ஏன் இந்த மூடர்களுக்குப் புரிவதில்லை.

ஆலயம் கட்டியவனையே ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். அவன் கையால் கட்டிய ஆலயம் தீட்டாகவில்லையே? அவனையும் நான் என் கையால்தானே படைத் தேன். அப்படியென்றால் நானும்தானே தீட்டு? தீட்டான ஆலயத்தில் தீட்டான இறைவனை ஏன் வணங்குகிறீர்கள்? நீங்களும் தீட்டாகி விடுவீர்களே?

நான் ஒரே பூமியைத்தான் படைத்தேன். மனிதர்கள்தாம் இது இந்தியா, இது பாகிஸ்தான், இது அமெரிக்கா, இது ரஷ்யா என்று பிரித்துச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நான் ஒரே மனித சாதியைத்தான் படைத்தேன். மனிதர்கள்தாம் ‘நான் இந்தச் சாதி, அவன் இந்தச் சாதி, நான் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்’ என்று பிரித்துக் கலவரங்கள் செய்கிறார்கள்.

யாரும் அவரவர் சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. ஆனால், மதத்துக்காகச் சண்டை போடத் தயாராக இருக்கிறார்கள். பிற மதத்தவரைத் துன்புறுத்து பவன், பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பவன் யாரோ அவனே நாத்திகன். ஏனெனில், பெயர்கள் வேறாக இருந்தாலும் எல்லா மதத்தவருமே ஒரே இறைவனையே வணங்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் உயிராலயம். ஏனெனில், நான் அங்கே எழுந்தருளியிருக்கிறேன். மூடர்கள் உயிரற்ற ஆலயத்தைக் கட்டுவதற்கு உயிராலயங்களை இடிக்கிறார்கள்.

நீ தீபமேற்றினாய்; ஆனால் நீ இருளாக இருந்தாய். நீ தூபமேற்றினாய்; ஆனால் நீ துர்நாற்றமாக இருந்தாய். நீ மலர் அர்ச்சனை செய்தாய்; ஆனால் நீ முள்ளாக இருந்தாய்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதுதான் உண்மையான வழிபாடு. அதை நீ செய்யவில்லை. எனவே நீதான் நாத்திகன். ஆத்திகன் என்று சொல்லிக்கொள்பவனே! நீதான் நாத்திகர்களை உண்டாக்கினாய்.

கோயிலிலிருந்து வரும் மந்திர ஒலியும், பள்ளிவாசலிலிருந்து வரும் அழைப்பொலியும், சர்ச்சிலிருந்து வரும் மணியொலியும் காற்றில் கலந்து ஒன்றாவதை மூடர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஆத்திகன் என்ற போர்வையில் பாவங்கள் புரிந்தவனே! நரகத்தை உனக்காகவே படைத்து வைத்திருக்கிறேன். இவனை நரகத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்றான் இறைவன்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-25-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article8171435.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

On 30/01/2016 at 1:47 PM, நவீனன் said:

முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!

இப்பதிவு மிகவும் பிடித்திருந்தது.

On 30/01/2016 at 1:47 PM, நவீனன் said:

லஞ்சம் ஆலயங்களில்தான் தொடங்கியது. ‘எனக்குத் தென்னந்தோப்பைக் கொடு. உனக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன்’ என் கிறார்கள். ஒரு தேங்காய்க்காக ஒரு தென்னந்தோப்பையே தர நான் என்ன கேவலமான தரகனா?

 

On 30/01/2016 at 1:47 PM, நவீனன் said:

நாத்திகர்கள் ஆலயங்களை இடிப்பதில்லை. ஆத்திகர்களே பிற மத ஆலயங்களை இடிக்கிறார்கள். இடித்த ஆலயத்திலும் நான்தான் இருக்கிறேன் என்பது ஏன் இந்த மூடர்களுக்குப் புரிவதில்லை.

 

On 30/01/2016 at 1:47 PM, நவீனன் said:

கோயிலிலிருந்து வரும் மந்திர ஒலியும், பள்ளிவாசலிலிருந்து வரும் அழைப்பொலியும், சர்ச்சிலிருந்து வரும் மணியொலியும் காற்றில் கலந்து ஒன்றாவதை மூடர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஆத்திகன் என்ற போர்வையில் பாவங்கள் புரிந்தவனே! நரகத்தை உனக்காகவே படைத்து வைத்திருக்கிறேன்.

 

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 26: காணாமல்போன ஒட்டகம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kaviko_2726367f.jpg
 

அறிவு என்பது வெளியிலிருந்து புகட்டப் படுவது என்றே பலரும் நினைக்கின்றனர். இது தவறு.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவு இருக் கிறது. அதை வெளியே கொண்டுவருவதுதான் கல்வி.

‘கல்வி’ என்ற சொல்லின் வேர் ‘கல்’. ‘கல்’ என்றால் தோண்டுதல் என்று பொருள். அதாவது அறிவு என்பது மறைந்திருக்கும் புதையல். அதைத் தோண்டி எடுப்பது கல்வி.

மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவதுபோல் கற்கக் கற்க அறிவு ஊற்றெடுத்துப் பெருகும் என்கிறார் திருவள்ளுவர்.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு’

‘எஜுகேஷன் (Education) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலப் பொருளும் ‘தோண்டி வெளியே எடுத்தல்’தான்.

கல்வி என்ற பொருளுடைய ‘இல்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘கண்டுபிடித்தல்’ என்ற பொருள் உண்டு.

அதாவது அறிவு நம்மிடம் இருந்தது. பின்பு ‘காணாமல் போனது’. அதைக் கல்வியின் மூலம் நாம் மீண்டும் கண்டுபிடிக்கிறோம் என்று பொருள்.

இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவு பெறுதலை ஓர் அழகான உவமை மூலம் விளக்குகிறார்கள்.

‘அறிவு சத்தியத்தை நம்புவோரின் காணாமல் போன ஒட்டகமாகும்.

எனவே, அவர் அதை எங்கே கண்டாலும் அதை அடையும் உரிமை அவருக்கு உண்டு.'

- திர்மிதீ

‘காணாமல்போன

ஒட்டகம்’ என்ற உவமை அறிவைப் பற்றிய பல ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது.

பாலைவனவாசிகளுக்கு ஒட்டகம் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு அறிவு மனிதனுக்கு இன்றியமையாதது.

பாலைவனவாசிகளுக்கென்றே ஒட்டகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டகம் இல்லையென் றால் பாலைவனவாசி வாழவே முடியாது.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் உதவியால் தான் பயணம் செய்ய முடியும். அதன் பாதங்கள் மணலில் புதையாதபடி வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

மணல் புயல் வீசும்போதும் அது கண்கள் திறந்தபடியே நடக்க முடியும். அதன் கண்களும் இமை முடிகளும் அதற்கேற்றபடி செய்யப்பட்டிருக்கின்றன.

நீரும் உணவும் இன்றிப் பல நாட்கள் ஒட்டகத் தால் இருக்க முடியும். இரண்டும் கிடைக்கும் இடத்தில் அது ஏழு, எட்டு நாட்களுக்கு வேண்டியதைச் சேகரித்து வைத்துக் கொள்ளும்.

ஒட்டகம் உயரமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. அதனால் அதன் மேல் பயணம் செய்பவன் தொலைவில் உள்ளவற்றை எளிதாகப் பார்க்க முடியும். குறிப்பாகப் பாலைவனச் சோலையைத் தொலைவில் இருந்தே பார்த்துவிடலாம்.

துன்பம் என்ற பாலைவனத்தைக் கடக்க அறிவுதான் ஒட்டகம் போல் பயன்படும். அது தூரத்தில் இருந்தே ‘பாலைவனச் சோலை’ களைப் பார்த்துவிடும்.

பயணத்தில் வாகனமாக மட்டுமல்ல; ‘கட்டுச் சோறா’கவும் ஒட்டகம் பயன்படுகிறது.

ஒட்டகத்தின் பாலும் மாமிசமும் உணவாகும், முடி உடையாகும், தோல் கூடாரமாகும், எலும்பு ஆபரணமாகும், சிறுநீர் மருந்தாகும், சாணம் அடுப்பு எரிக்கப் பயன்படும்.

அது போன்றே அறிவும் மனிதனுக்கு உணவு தரும்; உடை தரும்; உறையுள் தரும்; அழகு தரும்; மருந்து தரும்; ‘அடுப்பு எரிக்க’வும் உதவும்.

இப்படியும் சொல்லலாம் அறிவு மனிதனுக்கு உணவாகும்; உடையாகும்; உறையுளாகும்; அழகாகும்; மருந்தாகும்.

ஒட்டகம் படையாகும்; அறிவும் அப்படியே.

பாலைவனத்தில் மணல் புயல் வீசும்போது பயணம் செய்பவர்கள் ஒட்டகத்தை அமர வைத்து அதன் உடலைத் தடுப்பாகப் பயன்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.

அறிவும் அப்படித்தான் ‘புயல்’ வீசும்போது பாதுகாக்கும்.

ஒட்டகம் உருவம் பெரிதாக இருந்தாலும் சாதுவானது. அறிவும் அப்படியே.

ஒட்டகம் சரி, அதென்ன ‘காணாமல்போன’ ஒட்டகம்?

அறிவைப் பற்றிய நுட்பமான விளக்கம் இந்த உவமையில் இருக்கிறது.

அறிவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் ‘காண முடியாமல்’ இருக்கிறது. அதாவது மறைந்திருக்கிறது என்று பொருள்.

இதை விளக்க குர்ஆனில் இருக்கும் ஆதாம் தொன்மம் பயன்படும்.

இறைவன், ‘‘பூமியில் நான் என் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்’’ என்று கூறி ஆதாமைப் படைத்தான். அவருக்கு அண்ட சராசரத்தில் உள்ள எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அரபயில் பெயர் என்ற பொருளில் ‘இஸ்ம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘இஸ்ம்’ என்ற சொல்லுக்கு வெறும் ‘பெயர்’ என்பது மட்டுமல்ல பொருள்; ஒரு பொருளின் பண்பு, செயற்பாடு என்றெல்லாம் அதற்குப் பொருள் உண்டு.

கணினிக்குள் நமக்கு வேண்டியதையெல்லாம் நாம் பதிவு செய்து வைத்துக்கொள்வதைப் போல், இறைவன் ஆதிமனிதருக்குள் அண்ட சராசரங்களில் உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றிய அறிவைச் சேகரித்து வைத்துவிட்டான் என்று பொருள். அந்த அறிவு மரபணு வழியாக எல்லா மனிதர்களுக்கும் வந்து சேர்கிறது. அதனால்தான் மனிதன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை எளிதாக அறிந்து கொள்கிறான்.

அறிவியலார் மறைந்திருக்கும் இயற்கையின் ரகசியங்களை அறியும்போது அதைக் ‘கண்டுபிடித்தல்’ (Discovery) என்றுதான் சொல்கிறார்கள்.

அதாவது மறைந்திருந்ததை அல்லது ‘காணாமல் போனதை’க் கண்டுபிடித்தல் என்று பொருள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவு என்பது விதையாக இருக்கிறது. நீரூற்றி, உரம் போட்டால் அது மரமாக வளரும். இல்லையென்றால் வளராது.

‘பாலைவனவாசி தன் ஒட்டகம் காணாமல் போனால் எப்படி அதைத் தேடி அலைவானோ, அப்படி ஒவ்வொருவரும் அறிவைப் பெறத் தேடி அலைய வேண்டும்’ என்று இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாலைவனவாசி எப்படி ஒட்டகம் இல்லாமல் வாழ முடியாதோ, அப்படியே மனிதனும் அறிவில்லாமல் வாழ முடியாது.

இறைத் தூதருடைய வாக்கு மற்றொன்றையும் உணர்த்துகிறது. அறிவைப் பெறுகின்ற உரிமை மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. சிலர் கூறுவதைப் போல், ‘உயர் குலத்தோர்தாம் கல்வி கற்க வேண்டும்; தாழ்த்தப்பட்டோர் கற்கக் கூடாது’ என்பது மடத்தனமானது.

அறிவில்லாதவன்தான் இப்படிக் கூறுவான். அறிவில்லாதவன் உயர் குலத்தோனாக இருக்க முடியாது. இப்படிக் கூறுவதன் மூலம் அவன் தாழ்ந்த குலத்தவனாகிவிடுகிறான்.

அறிவு சத்தியத்தை நம்புவோரின் காணாமல்போன ஒட்டகம் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவு நெருப்பு. சத்தியத்தை நம்புவோர் அதனால் விளக்கேற்றி வெளிச்சம் பெறுவர். சத்தியத்தை நம்பாதவர் அந்த நெருப்பால் வீட்டை எரித்துக்கொள்வர்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-26-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8201827.ece?homepage=true

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 27: வெள்ளைச் சேலை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
kavi_2735480f.jpg
 

மரத்தடியில் ஊர்ப் பஞ்சாயத்து கூடி யிருந்தது. தலைவர் பேசத் தொடங்கினார்.

’’நாம இங்கே ஏன் கூடியிருக்கோம்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும். தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்கு. நம்ம ஊரு ஒட்டுமொத்தமா கூடி ஒரு மனசா ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு வாரோம். இந்தத் தேர்தல்லே எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடறதுன்னு தீர்மானிக்கத்தான் கூடியிருக்கோம். இப்ப நீங்க ஓங்க கருத்துகளைச் சொல்லலாம்.’’

“புதுசா ஆலோசனை செய்யறதுக்கு என்ன இருக்கு? மூனு தேர்தலா நாம ........ கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டு வாரோம். அதே மாதிரி இந்தத் தேர்தல்லேயும் போட வேண்டியதுதான்.

“நீ அந்தக் கட்சிக்காரன் அதனால இப்படிச் சொல்றே. அந்தக் கட்சிக்கு ஓட் டுப் போட்டு என்னத்தைக் கண்டோம்?’’

“நெசந்தான். நம்மூர்ப் பிரச்சினை களைப் பத்தி அவங்ககிட்ட சொன்னோம். செய்றோம்னாங்க. ஆனா, ஒண்ணுமே செய்யல. திரும்ப அவங்களுக்கு ஏன் ஓட்டுப் போடணும்?’’

“நம்மூர்ப் பிள்ளைங்க எட்டு கிலோ மீட்டர் நடந்துபோய்ப் படிக்க வேண்டி யிருக்கு. ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தாங் கன்னு சொன்னோம். தர்றோம்னாங்க. தந்தாங்களா இல்லையே?”

“சாலைங்களெல்லாம் குண்டும் குழி யுமா கெடக்குது. சாலை போட்டுத் தாங் கன்னு கேட்டோம். செய்யுறோம்னு சொன் னாங்க. செஞ்சாங்களா? இல்லியே.”

“ஊர்ல குடிதண்ணி வசதியில்லே. பக்கத்திலேதான் ஆறு இருக்கு. குழாய் போட்டுக் கொண்டு வரலாம். சொன் னோம். செய்யுறோம்னாங்க. செய்யல.’’

“குடிக்கத் தண்ணி கேட்டோம். ’டாஸ் மாக்’ தண்ணியெ கொடுத்தானுங்க. கேட்ட தண்ணியெ கொடுக்காம, கேக்காத தண்ணியெ கொடுத்திருக்கானுங்க.”

“டாஸ்மாக் தொறந்ததும் எங்கே தொறந்தானுங்க? கோயிலுக்குப் பக்கத் துல. அதிகாரிகள்ட்ட முறையிட்டோம். ஒண்ணுமே நடக்கலே.”

“நீ விஷயந் தெரியாமெப் பேசுறே. டாஸ்மாக் கடையெ அங்கே தொறந்ததே …………… கட்சிக் கவுன்சிலரு. நீ ரொம்ப வற்புறுத்தினேன்னா அங்கிருந்து கோவிலெ அகற்றுவாங்களே தவிர டாஸ்மாக்கை அகற்ற மாட்டாங்க.”

“டாஸ்மாக் தண்ணிப் பாசனத்துல தான் அவங்க விவசாயம் நடக்குது. அதை எப்படி அவங்க அகற்றுவாங்க?’’

“குடி குடியைக் கெடுக்கும்னு சொல் லிக்கிட்டே விக்கிறாங்களே, என்ன அர்த்தம்?’’

“இது கூடவா தெரியலே? குடி கெடுக்கறதுதான்.’’

“குடிகளைக் காப்பதுதானே அரசின் கடமை; குடியைக் கெடுக்குறது அரசா?’’

“வெவரம் புரியாமெ பேசுறியே, இது குடியாட்சி, ‘குடி’மக்கள்டேதான் அரசை நிர்ணயிக்கிற ஓட்டு இருக்கு. எனவே அவங்களை சந்தோஷமா வெச்சுக்கணும். ‘குடி’மக்களுக்காகக் ‘குடி’மக்களால் அமைக்கப்படுற ‘குடி’மக்கள் ஆட்சி இது.’’

‘‘மதுவிலக்கைச் செயல்படுத்துனா ‘இலவச’ங்களைக் கொடுக்கப் பணம் எங்கிருந்து வரும்?’’

‘‘நல்லாத்தான் இருக்கு. புருஷனைக் கொன்னுட்டு பொண்டாட்டிக்கு வெள் ளைச் சேலை இலவசமாக கொடுக்கறது.’’

‘‘மக்களையெல்லாம் பிச்சைக்காரங் களா ஆக்கிட்டாங்க.’’

‘‘இது பிச்சையில்லேப்பா; லஞ்சம். மீனைப் பிடிக்கிறதுக்குத் தூண்டில் முள்ளுல வெக்கிற இரை.’’

‘‘மக்களைப் பாத்து ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’னாரே பாரதியார்.’’

‘‘இந்த நாட்டை ‘மன்னர்’களா ஆள் றாங்க? மந்திரிகள்லே ஆள்றாங்க!’’

‘‘ஜனநாயகம்ங்கிறாங்க. எங்கே இருக்கு ஜனநாயகம்?’’

‘‘அதான் தேர்தல் நடத்துறாங்களே?’’

‘‘தேர்தல்லே மக்கள் விரும்புறவங்க, மக்களுக்காகத் தொண்டு செய்ய விரும்பு வறங்க நிக்க முடியுதா? முதல்லே கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களைப் பொறுக்கி எடுக்குறாங்க. அவங்களை மக்கள் மீது திணிக்கிறாங்க. இவங் கள்ளே ஒருத்தனைத்தானே மக்கள் தேர்ந்தெடுக்க முடியும்?’’

‘‘அதனாலே இதெக் கட்சிநாயகம்னு தான் சொல்ல முடியும்; ஜனநாயகம்னு சொல்ல முடியாது’’

‘‘தேர்தல் செலவு கோடிக்கணக்கா ஆவுது. அப்படியிருக்கும்போது ஏழை கள் எப்படி நிக்க முடியும்?’’

‘‘கோடிக்கணக்கா செலவு பண்ணி நிக்கிறாங்களே, மக்களுக்குத் தொண்டு செய்ய அவ்வளவு ஆர்வமா?’’

‘‘நல்லா சொன்னே.. இந்தப் பணத்தை ஏதாவது மக்கள் நலத் திட்டத்துக்காகக் கேட்டுப் பாருங்க. அப்ப தெரியும் அவங்க யார்னு?’’

‘‘கோடிக் கணக்கா அவங்க செலவு பண்றது, சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கத்தான்...’’

‘‘கோடிகளே சின்ன மீனாயிட்டுதா?’’

‘‘அதுமட்டுமல்ல; சம்பாதிச்ச பணமும் பதவியும் இருந்தா கோட்டை கட்டி அகழி வெட்டிக்கிற மாதிரி. சூட், கேஸ்னு வந்தா ‘சூட்கேஸ்’கொடுத்தே தப்பிச்சிடலாம்.’’

‘‘பெரிய தொழிலதிபர்கள் தேர்தலுக்கு முன்னாலேயே தேர்தல் நிதிங்கிற பேர்ல லஞ்சத்தை அட்வான்ஸா கொடுத் துர்றாங்க. அது மட்டுமில்லே; புத்திசாலித் தனமா ஆளுங்கட்சிக்கு மட்டுமில்லாமெ எதிர்க்கட்சிக்கும் கொடுத்துர்றாங்க.’’

‘‘லஞ்சம் கொடுக்காம எந்த வேலை யும் நடக்கிறதில்லே. கவுன்ஸிலர் முதல் மேலிடம் வரை பங்கு பிரிச்சிக்கிறாங் களாம். கூட்டுக்கொள்ளை அடிக்கிறா னுங்க. பயப்படாம பப்ளிக்கா கேக்கு றாங்க. தட்டிக் கேக்க ஆளில்லே. ஊடகங் களெல்லாம் மூன்று குரங்குகள் மாதிரி கண்ணைப் பொத்தி, காதைப் பொத்தி, வாயைப் பொத்தி உட்கார்ந்திருக்காங்க.’’

‘‘ஜெயிப்பாங்களாங்கறதே சந்தேகம். அதிலே முதல்வர் வேட்பாளர்னு அறிவிக் கிறாங்க. இதுதான் ஜனநாயகமா?’’

‘‘வாய் கிழியப் பேசுறானுங்க. எவனுக் காச்சும் தனிச்சு நிக்கத் துணிச்சலுண்டா? சிலர் கூட்டணிலே சேர்றதுக்கே பேரம் பெசுறாங்க கோடிக்கணக்கா. இவங் களா வந்து லஞ்சத்தை ஒழிக்கப் போறானுங்க?’’

‘‘வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லே. மக்களும் சரியில்லே. ஆயிரம், ரெண்டா யிரத்தை வாங்கிக்கிட்டு ஓட்டுப் போடு றாங்க. இது மட்டும் லஞ்சம் இல்லியா?’’

‘‘அவங்க என்ன செய்யறோம்னே தெரி யாமே செய்றாங்க. ஆயிரம் ரெண்டாயிரத் துக்குத் தங்களையே வித்துர்றாங்க.’’

‘‘ஜனங்க சிந்திச்சு ஓட்டுப் போடுற தில்லே. ஒண்ணு சாதிக்காக ஓட்டுப் போடறாங்க, இல்லேன்னா மதத்துக்காக ஓட்டுப் போடறாங்க.’’

‘‘அதிலே கட்சிக்காக ஓட்டுப் போடு றதை விட்டுட்டியே. அதை விட மோசம் நடிகர்களுக்கு ஓட்டு போடுறது.’’

‘‘ஜனங்க ஜனங்களா இல்லே. அப் புறம் எப்படி ஜனநாயகம் இருக்கும்?’’

‘‘நாட்டைப் பிரிக்கிறது குற்றம் கிறாங்க. வறுமைக் கோடுன்னு ஒண்ணைப் போட்டு ஏழை நாடு, பணக்கார நாடுன்னு பிரிவினை செய்திருக்காங்களே, இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்குறது?’’

‘‘லஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தூக் குல போடணும். வாக்குறுதிகளை நிறை வேத்தாதவங்களைச் சிறையிலே போடணும்.’’

‘‘கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நடக்குற காரியமா என்ன?’’

தலைவர் செம்பிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டுப் பேசினார்.

‘‘எதுக்குப்பா வெட்டிப் பேச்சு? நாம இப்ப என்ன செய்யணுங்கறதெப் பத்திப் பேசுங்க.’’

‘‘நான் ஒண்ணு சொல்றேன். செய்வீங் களா? இதிலே நம்ம பிரச்சினைகள் தீர வழியிருக்கு.’’

‘‘என்ன செய்யணும்னு சொல்லு.’’

‘‘எதுவும் செய்யாமெ இருக்கணும்னு சொல்றேன்.’’

‘‘என்னப்பா சொல்றே?’’

‘‘யாருக்கும் ஓட்டுப் போடப் போற தில்லே. தேர்தலெப் புறக்கணிக்கிறோம்னு அறிவியுங்க. அற்புதங்கள் நடக்கும். நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்.’’

சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தலை வர் அறிவித்தார்.

அவ்வளவுதான். அற்புதங்கள் நடக்கத் தொடங்கின.

மக்கள் யார் யாரையெல்லாம் தேடி அலைந்து பார்க்க முடியாமல் திரும்பினார்களோ, அவர்களெல்லாம் மக்களைப் பார்க்க ஓடி வந்தார்கள்.

ஆட்சியர் தலைவரின் காலைப் பிடிக் காத குறையாக அறிவிப்பைத் திரும்பப் பெறக் கெஞ்சினார். விரைவில் பள்ளிக் கூடம் கட்டித் தருவதாக வாக்களித்தார்.

மடமடவென சாலைகள் போடப்பட் டன. அடிகுழாய்கள் அமைக்கப்பட்டன. டாஸ்மாக் அகற்றப்பட்டது.

பெரியவர் ஒருவர் வியப்போடு சொன்னார்: ‘‘போடுற ஓட்டை விடப் போடாத ஓட்டுக்கு சக்தி அதிகமாயிருக்கே!’’

- இன்னும் முத்துக்குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-27-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/article8232022.ece

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 28: அமுதம் பரிமாறுபவர்கள்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kavikko_2744561f.jpg
 

எல்லா மதங்களும் அன்பையே போதிக் கின்றன. ஆனால், மதவாதிகளோ பகைமையையே போதிக்கிறார்கள்.

ஒவ்வொரு

  மதமும் ஒரு விளக்கு. மதவாதி களோ விளக்கினால் வெளிச்சம் பெறுவதை விட்டுவிட்டுப் பிறருடைய வீடுகளை எரிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இந்து மதம் ‘மனித குலம் ஒரே குடும்பம்’ (வஸுதைய்வ குடும்பகம்) என்கிறது.

‘‘படைப்பினங்கள் இறைவனின் குடும்பம். அவ னுடைய குடும்பத்தார்க்கு நலம் புரிபவனே இறை வன் முன்னிலையில் படைப்புகளிலேயே மிகவும் உயர்ந்தவனாவான்’’ என்கிறார் நபிகள் நாயகம்.

‘‘உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி நட்பும் கருணையும் உடையவனாய்… யார் என் பக்தனா கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்’’ என்கிறார் கண்ணபெருமான் பகவத் கீதையில்.

பக்தன் என்றால் அவன் கையில் பூக்கள் இருக்க வேண்டும்; ஜெபமாலை இருக்க வேண்டும். ஆனால், பக்தர்களில் சிலர் பூக்கள் ஏந்த வேண்டிய கைகளில் கடப்பாரைகளை ஏந்துகிறார்கள். ஜெபமாலை இருக்க வேண்டிய கைகளில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள்.

மதவாதிகளில் சிலர் நஞ்சைக் கக்கும் நாகப் பாம்புகளாக இருக்கிறார்கள். சிலர் மட்டும் அமுதம் பரிமாறும் அமரர்களாக இருக்கிறார்கள்.

அந்த அமரர்கள் சிலரைக் காணலாம்:

புகழ்பெற்ற அமர்நாத் பனி லிங்கத்தைக் கண்டு பிடித்தது பூட்டா மாலிக் என்ற ஆடு மேய்க்கும் முஸ்லிம் சிறுவன். அவன் அதை பார்த்து வியந்து ஊர்ப் பெரியவர்களிடம் வந்து கூறினான். அன்று முதல் பனி லிங்க வழிபாடு தொடங்கியது.

பக்தர்கள் பனி லிங்கத்துக்குக் காணிக்கை யாகும் பொருள்களில் ஒரு பங்கு இன்றைக் கும் பூட்டா மாலிக் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுகிறது.

இன்றைக்கும் பனி லிங்கத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்களை குதிரைகளிலும், தூக்கியும் சென்று உதவுபவர்கள் முஸ்லிம்களே.

இந்துக்களைக் கொன்றார், இந்துக் கோயில் களை இடித்தார் என்று வரலாற்றுப் புரட்டர்களால் அநியாயமாகப் பழி சுமத்தப்படும் ஔரங்கசீப் வாரணாசி விசுவநாதர் ஆலயத்தை இடித்தார் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஏன் இடித்தார் என்பது பற்றி எழுதவில்லை.

விசுவநாதர் ஆலயத்தின் தலைமைப் பூசாரி கட்ச், சமஸ்தான இந்து அரசனின் மனைவியைக் கடத்திச் சென்று கருவறைக்குக் கீழே இருந்த நிலவறையில் கெடுத்துவிட்டான்.

இதை அறிந்த இந்து அரசர்கள் கோயில் தீட்டாகிவிட்டது; எனவே அதை இடித்துவிட வேண்டும் என்று ஒளரங்கசீப்பிடம் முறையிட் டார்கள். அவர்கள் விருப்பப்படி கோயிலை இடித்த ஒளரங்கசீப், புதிதாக ஒரு கோயிலைக் கட்டித் தந்தார்.

அதுமட்டுமல்ல ஒளரங்கசீப் பல இந்துக் கோயில்களுக்கு மானியம் அளித்துள்ளார். அவற்றுள் வாரணாசி ஜங்கம்பதி சிவன் கோயில், உஜ்ஜயினி மகா கலேஷ்வர் கோயில், சித்திரகுத்தின் பாலாஜி ஆலயம், கவுகாத்தி உமான்ந்த் கோயில், சத்ருஞ்ச்சயின் ஜைனர் கோயில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளரங்கசீப் மதுரை ஆதீன மடாதிபதி 237-ஆம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மித்தியேஸ்வர சுவாமிகள் காலத்தில், குருமகா சன்னிதானம் அணிந்துகொள்வதற்காக யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ‘திருவடிக’ளையும் வெள்ளியால் செய்த ‘சோடச உபசார தீபாராதனை’ப் பொருட் களையும், நைவேத்யம் செய்ய வெள்ளிப் பாத்திரங்களை அளித்ததோடு, பயணத்தில் சவாரி செய்ய இரண்டு ராஜஸ்தான் குதிரைகளையும் அன்புப் பரிசாக அளித்து மகிழ்ந்தார் என்று மதுரை ஆதீன வரலாறு கூறுகிறது.

டெல்லியை முஸ்லிம்கள் ஆண்ட காலத்தில் நாணயங்களில் லட்சுமி, சீதை, ராமர் உருவங்களைப் பொறித்தார்கள்.

ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷீகோ வேதம், உபநிடதங்களின் சிற்சில பகுதிகளை பாரஸீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்த நூல்களின் மூலமே ஐரோப்பியர் இந்து மதம் பற்றி அறிந்துகொண்டனர்.

அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த ஷைகுஃபைஸி மஹாபாரதத்தைப் பாரஸீக மொழியில் மொழிபெயர்த்தார்.

இந்துக் கோயில்களையெல்லாம் இடித்தார் என்று பழிசுமத்தப்படும் மாலிக்காபூர் மதுரை ஆதீன 238-ஆம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலாயுத சுவாமிகள் காலத்தில் ஆதீனத்திற்கு வந்து கலந்துரையாடி மகிழ்ந்ததோடு, பூசைக்கு வேண்டிய வெள்ளிப் பாத்திரங்களை அளித்து மகிழ்ந்தார் என்று மதுரை ஆதீன வரலாறு கூறுகிறது.

சிருங்கேரி மடத்தின் மீது படையெடுத்த பரசுராம் பாவ் என்ற மராத்தியன் மடத்தைக் கொள்ளையடித்து நாசம் செய்ததோடு ஸ்ரீ சாரதா தேவியின் விக்கிரகத்தையும் அகற்றினான்.

மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். அவர் மடத்திற்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்ததோடு ஸ்ரீசாரதா தேவியின் சிலையையும் நிறுவ உதவினார்.

அதுமட்டுமின்றித் திப்புசுல்தான், ஸ்ரீ வெங்கட் ரமணா, ஸ்ரீநிவாஸ், ஸ்ரீரங்கநாதர் பெயர்களில் உள்ள கோயில்கள், கோவை குறிச்சி செல்லப்பாண்டி அம்மன் கோயில், சேலம் மின்னக் கல் கோபால கிருட்டிணன் கோயில், மேலும் பல இந்துக் கோயில்களுக்கு மானியங்களை வாரி வழங்கியுள்ளார். மதுரை ஆதீனத்துக்கும் பூசைக்குரிய வெள்ளிப் பாத்திரங்கள் அளித்த தோடு ஓர் ஆண் யானையையும் பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறார்.

கி.பி. 1688-ல் காஞ்சி வரதராஜப் பெருமாள், தாயார் திருமேனிகளைத் திருச்சி மாவட்ட உடை யார் பாளையக் காட்டில் கொண்டு போய் வைத் திருந்தார்கள். கோயில் நிர்வாகிகள் எவ்வளவோ கேட்டும் உடையார்பாளையம் ஜமீன்தார் திரு மேனிகளைக் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்தான் திருவேங்கட இராமனுஜ ஜீயர் கர்நாடக நவாப் சாததுல்லாகானிடம் முறையிட்டார். நவாப் தளபதி தோடர்மாலிடம் படையோடு சென்று திருமேனி களை மீட்டு வருமாறு ஆணையிட்டார். தோடர் மாலும் அவ்வாறே சென்று திருமேனிகளை மீட்டு வந்தார். அதன் பின்னர் திருமேனிகள் கோயிலில் முறைப்படி பிரதிட்டை செய்யப்பட்டன.

திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஹைதர் அலி 8 கிலோ தங்கக் காசு மாலை அளித்தார். அது இன்றும் சுவாமி அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நூறாண்டுகளுக்கு முன் திருப்பதி வெங்கடேஸ் வரருக்கு ஒரு முஸ்லிம் அளித்த பெரிய தங்கப் பதக்கமும் இன்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஹைதராபாத் முஸ்லிம் வியாபாரி எஸ்.மீரான் சாஹிப் 1.5 கிலோ எடையுள்ள 108 தங்க மலர்களைத் திருப்பதி கோயிலுக்கு அளித்தார். அவை இன்றும் செவ்வாய்தோறும் செய்யப்படும் அஷ்டதல பாத சேவையில் சுவாமியின் பாதத்தில் அர்ச்சிக்கப்படுகின்றன.

மீரான் சாஹிப் திருச்சானூர் பத்மாவதி தேவிக்கும் தங்கக் கோப்பை ஒன்றை அளித் திருக்கிறார். அது இன்றும் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டை திருவேட்டகம் கோயிலுக்கு ஆர்க்காடு நவாப் மானியம் அளித்திருக்கிறார். அன்று முதல் இன்றுவரை அந்த நவாப் கட்டளைப்படி ஒரு முஸ்லிம் வீட்டில் இருந்து கோயிலுக்கு பால், பழம், பூ அனுப்பப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சையது இஸ்மாயில் நிர்வாகியாக இருந்துள்ளார். இன்றும் அவர் சாமதி கோயில் வளாகத்திலேயே இருக்கிறது.

வடஆர்க்காடு சோழிங்கர் அருள்திரு பக்தவத்சலு சுவாமி கோயிலில் ஆண்டாள் திருமேனி இல்லாதிருப்பதை அறிந்து மொகலாய மன்னர் பரூக் சீயர் அதனை அக்கோயிலுக்குள் பிரதிட்டை செய்ய உதவினார்.

கிழக்கிந்தியக் கம்பெனி படையெடுப்பால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கோயில் கள் சேதப்படுத்தப்பட்டன. பூஜைகள் நடைபெற வில்லை. இதையறிந்த கர்நாடக நவாப் அமீகாத் சாயுபு 1793-இல் கோயில்களைப் புதுப்பிப்பதற் கும், பூஜைகள் நடைபெறவும் ஏற்பாடு செய்தார்.

18-ஆம் நூற்றாண்டில் குற்றாலநாதருக்கும், நெல்லை காந்திமதி அம்மனுக்கும் திருவிழாக் கொண்டாட முஸ்லிம்கள் நிதி திரட்டி உதவியுள்ளனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் அமைந்திருக் கும் நிலம் முழுதும் ஆர்க்காடு நவாப் கொடையாக அளித்தது. கோயிலுக்குள் ஆர்க்காடு நவாப் அவருடைய மனைவி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது மந்திராலயம் என்று வழங்கப்படும் இடம் முன்பு மாஞ்சோலை என்று அழைக்கப் பட்டது. இந்த இடத்தை மகான் ராகவேந்திரருக்கு வழங்கியவர் அதோனி நவாப்.

இந்துக்களும் இது போல் முஸ்லிம்களுக்கு செய்திருக்கின்றனர்.

ஐயப்பனை தரிசிக்கச் செல்வோர் முதலில் கம்பத்தில் இருக்கும் வாவேர் பள்ளிவாசலுக்குச் சென்று முதல் மரியாதை செலுத்திய பிறகே சபரி மலைக்குச் செல்கின்றனர்.

மதுரை காஸி முஹல்லாவில் உள்ள பள்ளி வாசலைக் கட்டித் தந்தவர் சுந்தர பாண்டியன்.

இராணி மங்கம்மாள் பல பள்ளிவாசல்களைப் பராமரிக்க நன்கொடை அளித்துள்ளார். திருச்சி தப்லே ஆலம் பாதுஷா தர்காவுக்கு ஏழு கிராமங்களை 7,000 ஏக்கர் பரப்பளவு மானியமாக அளித்ததைக் குறிப்பாகச் சொல்லலாம்.

மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்குக் கூன்பாண்டியன் 14 ஆயிரம் தங்கக் காசுகளை அளித்துள்ளார்.

இவை போன்று தர்காக்களுக்கும், பள்ளி வாசல்களுக்கும் மானியம் கொடுத்த இந்து அரசர் பலர்.

வரலாற்றின் இருட் பக்கங்களைக் காட்டி மக்களிடம் துவேஷத்தை வளர்ப்பதை விட, இத்தகைய ஒளிப் பக்கங்களைக் காட்டி மத நல்லிணக்க உணர்வை வளர்ப்பது நாட்டுக்கு நல்லது.

- நிறைந்தது.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-28-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8260969.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.