Jump to content

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Essay

நண்பர் செந்தில் தான் புதிதாகத் துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றைத் தந்து செய்துதரச் சொன்னார். அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன். ஆகவே “பொறுப்பற்ற வேலையொன்றை“ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன்.அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்டுரை. அவற்றுடன் இடையறாத புழக்கத்தில் இருப்பவன் என்பதால் சொந்த மண்ணில் சதமடித்து விட்டு ஸ்டைலாக மட்டையைத் தூக்கிக் காட்டிக்கொள்ளலாம் என்பது என் தந்திரமாக இருந்தது. ஆனால் “தகதக தகதக வென ஆடவா… “ , “சித்தாடை கட்டிக்கிட்டு…” எனத் துவங்கி “ வா மச்சா ..வா வண்ணாரப்பேட்டை…” , “பல்ல இளிக்கிறவ.. தொல்ல கொடுக்குறவ ..” என சுற்றித்திரிந்து “ டாங்காமாரி ஊதாரி” வழியே வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என்னதான் பொறுப்பற்ற வேலையாக இருந்தாலும் அதற்கும் கொஞ்சம் பொறுப்பு வேண்டும் போலும்.ஒரு சிறுவன்….இந்த உலகில் சற்றே நீண்டு கிடக்கும் எதுவும் அவனுக்கு ஒலிபெருக்கி தான்.பல் துலக்கும் குச்சியை வைத்துக்கொண்டு மணிக்கணக்காக பாடிக்கொண்டிருப்பான்.தான் ஒரு பாடகன் என்பதில் அவனுக்கு “பொட்டு“ சந்தேகம் கூட இருந்திருக்கவில்லை.எல்லா சிறுவர்களும் தங்கள் பால்யத்தில் குத்துப்பாடல்களின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.பிறகு அவர்கள் கனவான்களாகவும், கோமான்களாகவும் வளர்கிறார்கள்.அச்சிறுவன் ஒரு பாடலை கேட்டுக்கொண்டிருந்தான். எஸ்.பி.பி யும், ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

 

அவனும் கூடவே பாடிக்கொண்டிருந்தான்.“அடியேய்.. மனம் நில்லுனா நிக்காதடி…“ என்று பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி அப்படியே பாடி அப்பாடலை முடித்திருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் பையன் “அடியே..” என்று பாட , அவர் “ அடீ …ஏய்” என்று பாடிவைத்தார். ”அடீ”க்கும் ”ஏய்” க்கும் இடைப்பட்ட அந்த ஒரு நொடி மெளனத்தில் பையனுக்கு அழுகை பொத்துக்கொண்டது. தனக்குப் பாட்டு வரவில்லையென்றும், தான் ஒரு பாடகனாக ஆகப்போவதில்லை என்றும் அவனுக்குத் தெளிவாக தெரிந்துவிட்டது. அது ஒரு சின்ன நகாசு வேலைதான் என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.அவன் தொட்டித் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அறைந்து கொண்டான்.அச்சிறுவனின் இக்கட்டுரையை நீங்கள் ஆசீர்வதிப்பீராக!குத்துப்பாடல்கள் என்பவை ஒரு தனித்த இசை வகைமையல்ல.அதற்குத் தனித்த இலக்கணங்கள் இல்லை. தோற்கருவிகள் அதிகம் முழங்குவதால் இப்பெயர் வந்திருக்கலாம்.ஆட்டம் நிற்காத ஒரு மனம் தவித்துச் சூட்டிய பெயராக இது இருக்கலாம்.இதற்கு முன் ” டப்பாங்குத்து” என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது.“டப்பா“ என்கிற முன்னொட்டு இதன் கீர்த்திக்கு குந்தகம் விளைவிப்பாதாக கருதிய ரசிகமனம் காலத்தில் அதை கழற்றிவிட்டுவிட்டது.இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.இன்றைய குத்துப்பாடல்களுக்கு வெறும் டப்பாவை குத்துவது போதுமானதாக இல்லை.இன்று அதற்கு நிறைய கருவிகள் , நிறைய சத்தங்கள் தேவைப்படுகின்றன.வெவ்வேறு இசை வகைமைகள் அதனுடன் கலந்துவிட்டன.பல்வேறு வகையான கிராமியப்பாடல்கள் , பழங்குடிப்பாடல்கள், கானா பாடல்கள், ராப், ஹிப்- ஹாப் போன்ற மேற்கத்திய இசை வகைமைகளின் சாயைகள் இன்று குத்துப்பாடலுடன் கலந்துவிட்டன. எனவே இப்போது அதன் சத்தமும் துடிப்பும் மேலும் கூடி விட்டது.“ஐடம் சாங்“ என்ற ஒன்றும் இங்கு உலவுகிறது.அதுவும் குத்துப்பாடலும் ஒன்றல்ல என்று நாம் அறிந்து கொள்வது நல்லது.ஐடம் சாங்கிற்கு கட்டாயம் ஒரு பெண்ணுடல் தேவை.ஆனால் குத்துப்பாடல்களுக்கு அது அவசியமில்லை. அவை குத்திலிருந்தே பிறக்கின்றன.பொதுவாக குத்துப்பாடல்கள் ஏளனத்துடன் தான் நோக்கப்படுகின்றன. ரசனைமட்டத்தின் அடித்தட்டில் வைத்து அது பார்க்கப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட சாராரின் இழி அடையாளமாகவும் அது கருதப்படுகிறது. கனவான்களை , வித்வான்களை அது முகஞ்சுழிக்க வைப்பதாக இருக்கிறது.“ சிந்து பைரவி “ படத்தில் நாட்டுப்புறப்பாடல் பாடிய சிந்து கடைசியில் அதை லாவகமாக கர்நாடக சங்கீதத்துடன் கலந்து கைதட்டல்களை அள்ளிவிட்டாள். டப்பாங்குத்து பாடலை பாடத்துணிந்த ஜே.கே.பி அண்டர்வேருடன் நிற்க வேண்டியதாகிவிட்டது.”எல்லாவற்றையும் புனிதப்படுத்திப் பார்ப்பவர்கள்தான் குத்துப்பாடல்களைத் தொடர்ந்து இழிவு சொல்லி வருகிறார்கள். வீணையின் மீட்டலில் இருந்து மந்தகாசம் பொங்க கடவுள் எழுந்து வருவாரெனில் , நமது பறைக்குள் இருந்து ஏற்றிக்கட்டிய லுங்கியுடன் தொடை தெரியக் குதிப்பதும் அவரே.

“குத்துப்பாட்டுங்கறது வெறும் 6/8 சமாச்சாரமில்லை…அது எத்தனையோ மனிதர்களை லிபரேட் பண்ணி விடுது…எனக்கு குத்துப்பாடல்கள் பிடிக்கும், நானுன் நிறைய கேட்பேன்…ஆனா அத மட்டுமே கேட்டுட்டு இருக்கமாட்டேன்…அவ்வளவுதான்..”
( பாடகர் ஸ்ரீனிவாஸ்- தந்தி டி.வி நேர்காணல் )

g8.jpg
ஜான் தான் ஒரு முறை சொன்னார்…“இசை, எல்லா மனுசனுக்குள்ளையும் ஒரு ம்யூசிக் ஓடீட்டுத்தான் இருக்குன்னு நெனைக்கறேன். வெள்ளைக்காரனுக்குள்ள ஒரு “ rock & roll “ கச்சேரி எப்பவுமே நடந்துகிட்டே தான் இருக்கு.. அது மாதிரியே நம்ம ஆளுக்குள்ள ஒரு சத்தம் கெடக்குது .. அது “ ஒத்தையடி” தான்…”அப்புறம் அந்த “ டேபிளை“ விட்டு எழுந்துகொள்ள மேலும் அதிக நேரம் தேவைப்பட்டது.

காரைக்கால் அம்மையாரில் “ஆனந்த தாண்டவமாக“ இருந்த “தகதக தகதக வென ஆடவா..” தான் பிதாமகனில் குத்துப்பாடலாக மாற்றம் கண்டிருக்கிறது.திரு.சிவகுமார் அவர்களின் சிவநடனத்தையும்,“ வாடீ.. மாப்ளே….“என்கிற சிம்ரனின் ஆவேச அழைப்பையும் அருகருகே வைத்துப்பார்த்து எது உங்கள் மனங்கொள்ளத்தக்கதோ அதை மனம் கொள்க.

குத்துப்பாடல்கள் எளிய மனிதர்களின் எளிய மனங்களில் தொடர்ந்து வினை செய்கின்றன.அவர்களின் சங்கீதமாக அது ஒலிக்கிறது.நன்றாக உண்ண முடியாத,நன்றாக உடுத்த முடியாத,கேவலுமும் அவமானமும் கேவலமோ அவமானமோ இல்லை என்கிற வாழ்கையை வாழும் மனிதர்கள் மெல்லிசை கச்சேரியின் முன் குழுமியிருக்கிறார்கள்.அங்கு கே.வி.எம் மாமாவின் “சித்தாட கட்டிகிட்டு… “ ஒலிக்கிறது.அது கச்சேரி முடியப்போகிறது என்பதன் அர்த்தம்.கோடி இன்பங்கள் கொட்டிக்கிடப்பதாகச் சொல்லப்படும் இவ்வாழ்வில், நாலு இன்பங்களுக்குக் கூட வக்கற்ற எம் சனங்கள் மனிதனாக முதிர்ந்திராத குரங்குகளைப் போல் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்.அதே கூட்டத்தில் சென்னைக்கு வழி தெரியாத அச்சு அசல் நடனக் கலைஞர்களையும் பார்த்திருக்கிறேன்.கே.வி.மகாதேவன் எத்தனையோ அமரத்துவம் வாய்ந்த பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.ஆனால் இந்தப்பாடல் எப்படியோ ஆர்க்கெஸ்ட்ராக்களில் தவிர்க்க இயலாத பாடலாக இடம் பெற்று விட்டது.இப்படியாக , மாமா கோவில்களிருந்து எங்கள் வீதிக்கு வந்து சேர்ந்தார்.உறுதியாக சொல்கிறேன்..இதுதான் மாமா புண்ணியம்.

இந்தப்பாடலும் குமுதம் படத்தில் இடம்பெற்ற “மாமா.. மா..மா..மாமா “ பாடலும் தமிழ்த்திரை இசை வரலாற்றில் காலம் அழிக்கத் திணறுகிற குத்துப்பாடல்களால்களாக நிலைபெற்று விட்டன.இரண்டிற்கும் இசை “ஸ்வர பிரம்மா“ என்றழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன் தான் என்பதை மகிழ்ச்சி பொங்க கத்திச் சொல்ல விரும்புகிறேன். இது போலவே ஆர்கெஸ்ட்ராக்களில் கொண்டாடப்பட்ட இன்னொரு பாடல் மனோஜ் கியான் இசையில் வெளிவந்த “ ராத்திரி நேரத்து பூஜையில்”.பிள்ளைப்பருவத்தில் இருந்தே தோற்கருவிகளின் முழக்கத்திற்கு மயங்குபவனாகவே இருந்து வந்திருக்கிறேன்.எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாலையில் பள்ளிவிட்டு வந்தததும் சீருடையை கூட கழற்றாமல் அம்மா மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு அழைத்துப்போனாள்.அங்கு “ஜமாப்“ நடந்து கொண்டிருந்தது.தப்பட்டைகுச்சி என் கால்களை பிடித்து இழுத்தது.திடுமு உறுமி உறுமி அழைத்தது. ”மாட்டேன்… மாட்டேன்…”என்று சொல்லிக்கொண்டிருந்தவன் மெல்ல எனக்குள் ஆடத்துவங்கினேன் ஒரு கட்டத்தில் கூட்டத்துடன் கலந்தேன். ஆடுவது என்றால் சும்மா ஒரு சுற்றல்ல.கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மூச்சுமுட்ட ஆடினேன்.அது அருந்ததியர்களின் குழுவாக இருந்தது.அவர்களின் சீருடையும் காக்கியாகவே இருந்தது.காக்கிகளுடன் காக்கியாக கலந்து நான் ஆடிய அந்த ஒரு மணிநேரத்தை என் வாழ்வின் அசலான கலைதருணம் என்று திமிராகச் சொல்வேன்.இந்த ஒரு மணிநேரமும் என் அம்மாவிற்குள் இருக்கும் “தேவச்சி“ எங்கே ஓடிப்போனாள் என்பது எனக்கு இன்று வரை விளங்காத ஒன்று.அதை வெகுநாட்கள் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டிருந்தாள்.”எம் பையன்..அவங்க கூட சேர்ந்து ஆட்டம்னா ஆட்டம் அப்படியொரு ஆட்டம்”. குத்துப்பாடல்கள் உச்சத்தில் முழங்கும் தருணங்களின் அதன் முன்னே அந்த காக்கி ட்ரவுசர் பையனாகத்தான் நான் இன்றும் நிற்கிறேன்.

1956-ம் ஆண்டு வெளியான ”அமரதீபம்” படத்தில் இடம்பெற்று ஜிக்கி பாடிய “ஜாலிலோ ஜிம்கானா“ பாடலிருந்துதான் ”டப்பாங்குத்து” துவங்குவதாக ஒரு வரலாறு சொல்கிறது.அப்பாடலையொட்டி”தஞ்சை ராமைய்யதாஸ்“ டப்பாங்குத்து பாடலாசிரியர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.அன்று துவங்கி ஒவ்வொரு காலத்திலும் ஒரு பாடல் மக்களை ஆட வைத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது.பல்வேறு பாடல்களை பாடியிருந்தாலும் “ கட்ட வண்டி கட்ட வண்டி” , “பொதுவாக எம் மனசு தங்கம்” என்று துவங்கி ”ஊருவிட்டு ஊருவந்து” வரை மலேசியா வாசுதேவன் ஒரு குத்துபாடகராகவே அதிகமும் கொண்டாடப்பட்டார்.சிலர் இதை ஒரு குறையாகக் கூட சொல்வதுண்டு. அவர் பாடிய ”தண்ணி கருத்திருச்சு..” , ”ஊருவிட்டு ஊருவந்து..” ஆகிய பாடல்கள் சமீபமாக ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கின்றன.அவை அவர் குரலின் மேலான ஏக்கத்தை மேலும் கூட்டுகின்றன.

சென்னையில் நடக்க இருந்த என் புத்தக வெளியீடு ஒன்றிற்காக நண்பர்கள் சிலர் சேலத்தில் குழுமி கிளம்பினோம். அது “ கலாசலா கலசலா..“ வந்திருந்த சமயம்.டி.ஆரும்,எல்.ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்தடித்த அக்கூத்து காருக்குள் 50 முறைகளுக்கும் மேலாக அரங்கேற்றப்பட்டது.

”மை டியர் டார்லிங் உன்ன.. மல்லிகா கூப்புட்ற..“ என்கிற வரி கள்வெறியின் மயக்கத்தில் “ நம்மை பிடித்த பிசாசுகள் போயின“ என்பதாகக் கேட்டது.அது புத்தாண்டு தருணம்.பொதுவாக நான் புத்தாண்டை நம்புபவனல்ல.ஆனால் அந்த ராத்திரியில் “மல்லிகா” வை அவ்வளவு நம்பினேன்.அவள் எல்லோரையும் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவாள் என்று அவ்வளவு உறுதியாக நம்பினேன்.“ மை டியர் டார்லிங் உன்ன.. மல்லிகா கூப்புட்றா ..Happy new year“ என்கிற குறுஞ்செய்தியை நண்பர்கள், இலக்கிய ஆளுமைகள் என்று பலருக்கும் அனுப்பினேன்.சமயவேல்,ரவிசுப்ரமணியன் போன்றோரிடமிருந்து அதே துள்ளலுடன் பதிலும் வந்தது.இப்போது கேட்கையில் அப்பாடல் பொலிவற்று ஒலிக்கிறது. ஆனால் அந்த ராத்திரியின் பொலிவு மங்கிவிடவில்லை.

இன்று வெளிவரும் அநேக படங்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்டோ குத்துப்பாடல்கள் இடம்பெறுகின்றன.எல்லா பாடல்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுவதில்லை.ஒரு மனிதனின் அமர்ந்த கோலத்தை ஆடும்கோலம் ஆக்குவது அவ்வளவு சுலபமல்ல.குத்துப்பாடல் ஒன்றும் மலிவுச்சரக்கல்ல என்பதை ஒரு ரசிகனாகவே என்னால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.அதுவும் பிற வகையினங்கள் கோரும் உழைப்பையும், ஈடுபாட்டையும் கோருபவைதான்.தனது ”கீதாஞ்சலி” ஆல்பத்தில் ராஜா இவ்வாறு சொல்கிறார் ”இந்த பக்திப்பாடல்களில் என் ஆன்மாவை கரைய விட்டிருக்கிறேன்.. இப்பாடல்களை கேட்கின்ற ஜீவன்களில் ஒரே ஒரு ஜீவனாவது இவன் தன் ஆன்மாவை இதில் கரைய விட்டிருக்கிறான் என்பதை உணர்ந்தால் நான் ஜென்மம் எடுத்ததின் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்வேன்”. ”கானக்கருங் குயிலே…” பாடலிலும் தான் அவர் தன் ஆன்மாவை கரைய விட்டிருக்கிறார்.ஆனால் அதை அவர் சொல்லமாட்டார்.நாமேதான் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

“ மலரே மெளனமா..” வித்யாசாகரின் நெற்றிப்பொட்டிலிருந்தும்,“மச்சா மீசை வீச்சருவா..“ அவரின் குதிகால் வெடிப்பிலிருந்தும் பிறந்தவையல்ல.இரண்டும் அவர் நெஞ்சிலிருந்து வந்தவையே.”வேணாம் மச்சா வேணா..இந்த பொண்ணுக காதலு “ பாடலில் முதல் சரணம் முடிந்த பிறகு ஒரு தேம்புதல் துவங்கும்.முழங்காலில் சூட்டப்பட்ட நெற்றிச்சுட்டி அது.அப்படத்தின் கோமாளித்தனத்திற்கோ, அப்பாடலின் பொக்கை வரிகளுக்கோ அத்தேம்புதலை பெற ஒரு அருகதையும் இல்லைதான்.அது உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது.ஆனாலும் காதைக்கொடுத்தால் உருக்கிவிடக்கூடியதுதான்.குத்துப்பாடல் என்று இளக்காரம் செய்யப்பட்டு ஒதுக்கப்படும் ஒன்றிற்காக ஒரு இசையமைப்பாளன் இவ்வளவு மெனக்கெடுவான் எனில் ஒரு எழுத்துக்காரன் தன் எழுத்திற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று இப்பாடலையொட்டி நான் யோசித்ததுண்டு.

தேவா கானா பாடல்களையும் குத்துப்பாடல்களையும் கலந்து நிறைய ஹிட் பாடல்களை வழங்கியிருக்கிறார்.அதிகம் அறியப்படாத ஆனால் குத்துப்பாடல் ரசிகர்களின் அபிமான பாடல் ஒன்று ”சூரியன் சட்டக்கல்லூரி” படத்தில் இடம் பெற்ற “ரீக ரீக ரீக ரீகமோ” பாடல்.”மதுரை சின்னப்பொண்ணு” குரலில் ஒலிக்கும் அப்பாடல் நிஜமாலுமே செம குத்து.

ஒரு விடுமுறை ஞாயிறு.லேட்டாக எழுந்து கண்களைத் தேய்த்தவாறு டி.வியைப் போட்டேன்.அதில் கோமாளி போன்ற ஒரு மனிதன் தன் சுட்டுவிரலை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டிருந்தான்.அது பார்க்க அவ்வளவு குதூகலமாக இருந்தது.அதன் சத்தமும் ஆட்டமும் புதிதாக இருந்தது.பாடல் முடியும் வரை ஒரு பல்லியைப் போல் சுவரில் ஒட்டிக்கொண்டு நின்றேன்.அந்தப் பாட்டைக் கேட்க ஊர் திரண்டுவிடும் என்பது முதன்முதலாக கேட்ட அந்த முக்கால்வாசி பாட்டிலிலேயே தெரிந்துவிட்டது. அப்பாடல் “ வால மீனுக்கு வெலங்கு மீனுக்கும் கல்யாணம் “. இந்த இடத்தில் குத்துப்பாடல்கள் படமாக்கப்படும் விதம் பற்றி கொஞ்சம் பேசலாம். குத்துப்பாடல்கள் இயல்பாகவே நடனத்துடன் தொடர்புடையவை. உண்மையைச் சொன்னால் பல

குத்துப்பாடல்களும் பார்க்கச் சகிக்காதவை. மோசமாக எரிச்சலூட்டக் கூடியவை.பெண்களை குறையுடையில் காட்டினால் போதும் என்கிற பொதுநம்பிக்கையுடையவை.”வீரம்” படத்தில் இடம் பெற்ற “ஜிங் ஜிக்கா..“ பாடலை முதலில் பார்த்தேன்.பிறகு கேட்டேன்.பார்த்த போது, ”நமக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டதே…” என்று ரொம்பவும் வருந்தினேன்.பிறகு கேட்ட போது “அட..அந்த பாட்டா இது..’ என்று ஆச்சர்யப் பட வைத்தார் குப்புசாமி.புஷ்பவனம் குப்புசாமியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்து கொடுத்த இன்னொரு பாடலும் எனக்கு பிடித்தமானது. அது “ காத்தாடி போல ஏண்டி என்ன சுத்துற..“.மாயாவி படத்தில் இடம் பெற்றது.இப்பாடலை பார்க்கவும் செய்யலாம்.கேட்ட போது புல்லரிக்க செய்த பல பாடல்கள் பார்த்த போது பெருத்த ஏமாற்றத்தை அளித்த அனுபவம் பலருக்கும் இருக்கும்.எனக்கும் அந்த அனுபவம் உண்டு. முன்பு நான் சிலாகித்துச் சொன்ன “ கலாசலா கலசலா.., “ ஏ.. பேரு மீனா குமாரி’(கந்தசாமி) போன்ற பாடல்கள் மோசமாக ஏமாற்றியவை.ஆனால் மிஷ்கின் தன் படத்தில் இடம்பெற்றிருக்கிற இரண்டு குத்துப்பாடல்களை அதன் உச்சபட்ச அழகியல் சாத்தியங்களுடன் படமாக்கியிருக்கிறார்.1956–ல் தோராயமாக துவங்கும் குத்துப்பாடல் வரலாற்றில் அவருடைய “வால மீனு” பாடலும் , ”கத்தாழ கண்ணால” பாடலும் தவிர்க்க இயலாத வண்ணம் இடம்பிடிப்பதில் அவை படமாக்கப்பட்ட விதத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு.

குத்துப்பாடலாவது நவண்டை கடிக்கச் செய்வது.மாறாக , ராஜா கண்செருகச் செய்யும் பல குத்துப்பாடல்களை வழங்கியிருக்கிறார்.இக்கட்டுரைக்காக முதன்முதலில் கேட்ட பாடல் “ஆட்டமா ..தேரோட்டமா..”.கேட்டு முடிக்கையில் இது குத்துப்பாடலே அல்ல என்று தோன்றிவிட்டது.ஒரு குத்துப்பாடலுக்கு எதற்கு இவ்வளவு அலங்காரம்..? எதற்கு இவ்வளவு மயக்கடிக்கும் இசை சேர்க்கைகள்? என்று தோன்றியது. குத்துப்பாடல் என்றால் என்ன என்கிற ஆதாரமான கேள்வியையும் அது தோற்றுவித்தது.ராஜாவும் ராவான குத்துப்பாடல்கள் பலதை தந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். காலத்தே சற்று பின்னோக்கிப் போய் அப்படியான ஒன்றை கேட்போம் என்று கிளம்பிய நான் தவறுதலாக கேட்டு வைத்தது “தண்ணீ.. கருத்திரிச்சு..” பாடலை.”சாமீ..!இப்பாடலில் சரசக்காட்சிகளுக்கு சத்தத்தை குறைத்தும்,ஆட்டக்காட்சிகளுக்கு ஏற்றியும் வைத்த புண்ணியவான் யாரோ,அது ஸ்ரீதரோ, ராஜாவோ யாராயினும் அவருக்கு என் அநேக கோடி நமஸ்காரங்கள்.ஒரு குத்துப்பாடலுக்கு நவண்டைக் கடிக்க செய்வது போதுமானது தான்.கூடவே கண் செருகவும் வைக்க முடியும் என்பதை நிரூபிப்பவை ராஜாவின் பாடல்கள்.

இக்கட்டுரையின் நோக்கம் குத்துப்பாடல்களுக்கு முடி சூட்டுவதல்ல. மாறாக அதன் தகுதிக்கேற்ற இடத்தை நிறுவ விழைவதுதான்.எனக்கும் குத்துப்பாடல்களின் மேல் விமர்சனங்கள் உண்டு.அதற்கு ஒரு குறையாடைப்பெண் அவசியமில்லை என்கிற போதும் அது அதிகமும் பெண்னுடலை தின்னக் குடிக்கும் சாராயமாகவே மாற்றப்பட்டு விட்டது.இது அதன் பெரிய பலஹீனம்.அதனை தூஷணை செய்வோருக்கு சிக்கும் எளிய சாக்காக இது அமைந்துவிட்டது.

கருப்பின மக்களின் இசையாக மேற்கில் பிறந்தவை அதன் அரசியலோடு தான் ஒலிக்கின்றன.தன் மக்களின் பாடுகளை, விடுதலை வேட்கையை அவை பாடுகின்றன.”தமிழ் ராப்” பாடலாக ஆடுகளம் படத்தில் இடம்பெற்றிருக்கிற “வாழ்க்கை ஒரு போர்க்களம்“ என் அபிமானத்திற்குரியது. ராப் பாடல்களில் எளிய மனிதர்களின் கொச்சைச் சொற்கள் தாராளமாக புழங்குகின்றன.அவை அப்பாடலுக்கு ஒரு தனித்த அழகியலையும் வழங்குகின்றன.

”வெளக்கென்ன நீ இனிமே என்ன தொடாதே”… (வெளக்கென்ன /நீ/இனிமே/என்னதொடாதே)என்கிற வரி ஒரு கருப்பின மனிதனின் குரலாக ஒலிக்கையில் கொள்ளும் அர்த்தரூபம் கிளர்ச்சிகரமானது.இப்பாடலின் இடையே ஒரு நொடிக்குள் ஒலித்தடங்கும் “ங்கொய்யால“ என்கிற சொல் தரும் பரவசமும் அலாதியானது.அது தன் ஆண்டையை நோக்கி வரலாற்றின் கோபத்தோடு கத்துகிறது.எனக்கு இப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் “ ங்கொய்யால “ என்றே ஒலிப்பதாக தோன்றியது.

”வெல்வோமே…. வீழாமல்…” என்று கனத்த கரகரப்பில் முழங்கும் இப்பாடலை தாராளமாக நமது முற்போக்கு அரசியல் மேடைகளில் ஒலிபரப்பலாம். நமது குத்துப்பாடல்களிலும் கொச்சை சொற்கள் உண்டு. ஆனால் அவை வெறும் கொச்சை சொற்கள் மாத்திரமே.

g9.jpg

“வத்திப்பெட்டினா வத்திப்பெட்டினா குச்சிக ஒரசத்தான்
பத்திக்கிச்சுனா பத்திகுச்சுனா பீடி குடிக்கத்தான்..”

போன்ற வரிகள் ஒரு லேசான சிரிப்பை வரவழைக்கத்தான் செய்கின்றன.எனக்கும் இந்த அர்த்தமின்னையின் சிரிப்பு பிடித்துத்தான் இருக்கிறது.ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை.மேற்கில் இருப்பது போல் இங்கு “popular music“ என்று ஒரு தனி வகை இல்லை. இங்கு சினிமா இசை தான் “popular music“ கானா பாடல்கள், பழங்குடிப் பாடல்கள், கிராமியப்பாடலகள்,ராப் பாடல்கள் என்று எவை சினிமா இசைக்குள் நுழைந்தாலும் அவை சினிமா பாடல்களாக மாறி தன் குணாதிசியங்களை இழந்துவிடுகின்றன.அங்கு இவை இயல்பாகவே அரசியல் நீக்கம் செய்யப்பட்டு விடுகின்றன.வெற்றுக் கேளிக்கைப் பொருட்களாக மாறி விடுகின்றன. ஒரு மனிதனுக்குக் கேளிக்கை அவசியம் தான். எத்தனையோ இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அவன் கேளிக்கைகளில் தான் சற்று மூச்சுவிடுகிறான்.ஆனால் ஒருவனை முழுக்கவும் கேளிக்கைகளால் நிரப்புவதென்பது ஒரு வகையில் அவன் புத்தியை மழங்கடிக்கும் செயல்தான். நமது குத்துப்பாடல்களின் முகத்தை சற்றே மாற்றி வைத்தால், அதை பறையிசையைப் போல ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்க முடியும். அதற்கான முழுதகுதியையும், பெருந்துடிப்பும் அதனுள்ளே நிச்சயம் உண்டு.

http://kapaadapuram.com/?p=61

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா ! செம்ம குத்து, கட்டுரையைச் சொல்கிறேன்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=S6uazhnETzM 

//1956-ம் ஆண்டு வெளியான ”அமரதீபம்” படத்தில் இடம்பெற்று ஜிக்கி பாடிய “ஜாலிலோ ஜிம்கானா“ பாடலிருந்துதான் ”டப்பாங்குத்து” துவங்குவதாக ஒரு வரலாறு சொல்கிறது.//

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.