Jump to content

காற்றில் கலந்த இசை


Recommended Posts

காற்றில் கலந்த இசை 40: இசை என்றொரு பெரும் வரம்!

ஓவியம்: வெங்கட்
ஓவியம்: வெங்கட்

திரைக்கதையின் நிகழ்வுகளுக்கேற்ப பொருத்தமான பாடல்கள் ஒலிப்பது இந்தியத் திரையுலகின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்துவரும் மரபுதான். பரஸ்பரம் தங்கள் கலை வெளிப்பாட்டுடன் பகிர்ந்துகொண்டதன் மூலம், அந்த மரபின் செழுமையை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை ரசிகர்களுக்கு உணர்த்திய மேதைகள் இளையராஜாவும் மகேந்திரனும்.

இக்கூட்டணியின் முக்கியமான படைப்பு 1980-ல் வெளியான ‘ஜானி’. மகேந்திரன், இளையராஜா, ரஜினி என்று ‘முள்ளும் மலரும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி இப்படத்தில் மீண்டும் அமைந்தது. இவர்களுடன், இந்திரனின் மோதிரத்தைத் தவற விட்டுவிட்டதால் பூமிக்கு வர நேர்ந்த தேவதையான தேவியும் இணைந்துகொண்டார். ஐந்து பாடல்கள், படத்தின் மவுனங்களுக்கு இடையில் இழைந்தோடும் பின்னணி இசைக்கோவை என்று தேனில் தோய்த்தெடுத்த இசையை வழங்கியிருந்தார் இளையராஜா.

படத்தின் தொடக்கப் பாடலான ‘ஒரு இனிய மனது’ பாடல் சுஜாதா பாடியது. அமைதியைக் குலைத்துவிடாத மென் குரலில் ‘லால..லாலலா..லாலலா’ எனும் ஹம்மிங்; வழிந்தோடும் ஒற்றை வயலின் என்று முகப்பு இசையே பாடலின் தன்மையைச் சொல்லிவிடும். பல்லவியைத் தொடர்ந்து துயரங்களைக் கரையவிடும் ஒற்றை வயலின் ஒலிக்கும். ஐரோப்பிய கிராமத்தின் வனப்பை விரிக்கும் சிம்பனி பாணி இசைக்கோவை அதைத் தொடரும்.

இரண்டாவது நிரவல் இசையில் சாக்ஸபோன், புல்லாங்குழலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஒற்றை வயலின். இந்த முறை அதில் தொனிக்கும் துயரம், அன்பின் வரவுக்காகக் காத்திருக்கும் அர்ச்சனாவின் மனதைப் பிரதிபலிக்கும். சில்ஹவுட் பாணியிலான ஒளியமைப்பில், தலைமுடி தங்கமாக மின்ன மேடையில் பாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அழகு வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. பாடல் தரும் பரவசத்தில் ‘வந்த வேலையை’ மறந்து வேறு உலகத்தில் மூழ்கிவிடுவான் ஜானி.

‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘ராமே(ன்) ஆண்டாலும்’ பாடலில் மலைவாழ் மக்களின் குரல்களையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா. ‘ஜானி’ படத்தில் ஷைலஜா பாடும் ‘ஆசையைக் காத்துல’ பாடலும் அந்த வகையைச் சேர்ந்தது. கானகத்தின் கனத்த மவுனத்தைப் பிரதிபலிக்கும் புல்லாங்குழல், மலை முகடுகளில் எதிரொலிக்கும் பழங்குடியினப் பெண்களின் கோரஸுடன் தொடங்கும் இப்பாடல் மலைக் காடு ஒன்றில் இரவில் தங்கும் அனுபவத்தின் சிலிர்ப்பைத் தரக்கூடியது.

வித்தியாசமான தாளக்கட்டில் அதிரும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னதாக, ‘யோ…யோ’ எனும் பெண் குரல்களைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் ஷெனாயை ஒலிக்க விடுவார் இளையராஜா. தீக்காய்தலுக்காக மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து பரவிச் செல்லும் புகையைப் போல் பாடல் முழுவதும் புல்லாங்குழலைக் கசிய விட்டிருப்பார். இப்பாடலில் தோன்றும் நடிகை சுபாஷிணி, பாடலுக்கு வாயசைக்காமல் நடனம் ஆடுவதாகக் காட்சிப்படுத்தியிருந்தார் மகேந்திரன். “என்னங்க இது, இப்படிப் பண்ணிட்டீங்களே என்று மிஸ்டர் இளையராஜா என்னிடம் கேட்டார்” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் புன்னகையுடன் குறிப்பிட்டார் மகேந்திரன்.

வாவா பெடல் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டாருடன் டிஸ்கோ பாணியில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் ‘ஸ்னோ ரீட்டா ஐ லவ் யூ’ பாடல், அகன்ற கண்ணாடியும் பெல்பாட்டமும் கலைந்த கேசமுமாய் வளையவரும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை வேகம் கொண்ட பாடல் இது. அதேசமயம், கரடுமுரடான பாத்திரமான வித்யாசாகருக்குள் எழும் காதல் உணர்வைப் பிரதிபலிக்கும் மெல்லிசையை, பாடல் நடுவே கசிய விட்டிருப்பார் இளையராஜா.

முதல் நிரவல் இசையில் சற்றே நகைச்சுவை உணர்வு ததும்பும். வா வா பெடல் இசைக்குப் பின்னர், பாறையிலிருந்து விழும் அருவியின் சாரல் போன்ற வயலின் இசைக்கோவை ஒலிக்கும். பாடல் காட்சியிலும் அதையே பிரதிபலித்திருப்பார் மகேந்திரன். இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் ஒற்றை வயலின், அதைத் தொடர்ந்து, கைக்கெட்டும் தொலைவில் மிதக்கும் மேகத்திலிருந்து விழும் தூறலைப் போன்ற இசை என்று இனிமையைச் சேர்த்துக்கொண்டே போவார் ராஜா. எஸ்.பி.பி. குரலின் கம்பீரம், பாடலின் புத்துணர்ச்சியை இரட்டிப்பாக்கும்.

ஜென்ஸி பாடிய மிகச் சிறந்த பாடல், ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’. பியானோவின் அதிகபட்ச இனிமையை வெளிக்கொணர்ந்த அதி உன்னதமான பாடல்களில் ஒன்று இது. மெலிதான முணுமுணுப்பாகத் தொடங்கும் பியானோ, ரஷ்ய நாவல்களில் வருவதுபோல், மெலிதான பனிப்படலம் போர்த்திய ஸ்டெப்பி புல்வெளி நிலத்தில் இருக்கும் ஒற்றை வீட்டை நினைவுபடுத்தும். அர்ச்சனாவைப் பொறுத்தவரை, தவறான நோட்ஸைத்தான் பியானோவில் ஜானி வாசிப்பான்.

ஆனால், அதுவே நம்மை உருக வைக்கப் போதுமானதாக இருக்கும். அர்ச்சனாவின் வாசிப்பில் அவள் வீட்டின் வரவேற்பறையில் உருக்கொள்ளும் இசை, மெள்ளப் பெருகிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் இடம்கொள்ளாமல் வெளியே மிதந்து சென்று, மாலை நேரத்தின் மலைப் பிரதேசங்களில் உலவத் தொடங்கிவிடும். நிரவல் இசையை அப்படித்தான் உருவாக்கியிருப்பார் இளையராஜா. அடிவானத்தில் மெல்லியக் கீற்று போல் தோன்றி வளர்ந்துகொண்டே வரும் வானவில்; மலை முகடுகளின் வழியே எல்லைகளற்ற பயணத்தில் நீண்டு செல்லும் மாலை நேரச் சூரியனின் கதிர் என்று வயலின் இசை மூலம் ஒரு தேர்ந்த ஓவியனின் படைப்பாற்றலுடன் காட்சிகளை உருவாக்கியிருப்பார்.

சரணம் தொடங்குவதற்கு முன்னர், மலை மீதிருந்து மிதந்து வரும் இசை மீண்டும் வரவேற்பறையில் பரவும். இரண்டாவது நிரவல் இசையில் வால்ட்ஸ் பாணி தாளத்தில் பியானோ, புல்லாங்குழல், வயலின் என்று இசைக் கருவிகள் ஒன்றையொன்று தழுவியபடி பாலே நடனம் ஆடுவதைப் போன்ற விரிவான இசைக்கோவையைத் தந்திருப்பார். அதைத் தொடர்ந்து வரும் ‘நீ தீட்டும் கோலங்கள்’ எனும் வரி, உண்மையில் இளையராஜாவைக் குறிப்பதாகவே தோன்றும்.

சிறந்த பாடல்கள் நிறைந்த இந்த ஆல்பத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘காற்றில் எந்தன் கீதம்’. பொன்னிற மழைத்துளிகளின் நடுவே சில்லிடும் மாலை நேரக் காற்றாக, கிட்டார் இசைக்கு மேல் ஒலிக்கும் ஜானகியின் ஆலாபனையுடன் பாடல் தொடங்கும். காதலனின் வருகைக்காகத் துடிப்புடன் காத்திருக்கும் இதயத்தின் புலம்பல் இப்பாடல். முதல் நிரவல் இசையில் மெல்லிய முணுமுணுப்பாகத் தொடங்கும் புல்லாங்குழல், அதைத் தொடரும் சாக்ஸபோன், சந்தூர், கிட்டார் இசைக் கலவை ஆகியவை துயரார்ந்த மனதுக்குள் இருக்கும் வார்த்தைகளின் இசை வடிவங்களாக வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், அதைத் தொடர்ந்து விவரிக்க முடியாத சோகத்தின் வெளிப்பாடாக ஒலிக்கும் அமானுஷ்யம் கலந்த பேரோசை சாதாரணமாகத் திரைப்படப் பாடல்களின் தென்படாத நுட்பத்தைக் கொண்டது. தனது அன்புக்குரியவர் தொலைதூரத்தில் எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கற்பனை செய்யும் ஆழ்மனதின் வெளிப்பாடு இந்த இசைக்கோவை. இப்பாடல் அமரத்துவம் பெறுவதற்கான அடிப்படை ஆன்மா இந்த இடம்தான். இரவுகளில் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்கும்போது இந்த இடத்தில் மிகப் பெரிய வெற்றிடத்தை உணர முடியும்.

இரண்டாவது நிரவல் இசையிலும் இதுபோன்ற இசைக்கோவை உண்டு. சந்தூர் இசையைத் தொடர்ந்து, அடை மழை சற்றே குறைந்து சாரலாவது போன்ற வயலின் இசைக்கோவையை ஒலிக்கச் செய்வார் ராஜா. அதைத் தொடர்ந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மற்றும் கிட்டாரின் சம்பாஷணையும் மனதின் பரிதவிப்பைப் பதிவுசெய்திருக்கும். துயரத்தில் தளும்பும் குரலில் பாடியிருப்பார் ஜானகி. கிளைமாக்ஸ் பாடலான இப்பாடலுடன் படம் சுபமாக முடிவடையும். அப்போது ‘மியூசிக் இஸ் தி லைஃப் கிவர்’ எனும் வாசகம் திரையில் ஒளிரும். இளையராஜா போன்ற அபூர்வக் கலைஞர்களின் படைப்புகள் இருக்கும் வரை இந்த வாசகம் சாஸ்வதமானது!

(நிறைந்தது)

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%

                                                                                         (நிறைந்தது)   

 

 

 

 

                                                                                       (நிறைந்தது) 

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • Replies 52
  • Created
  • Last Reply
  • 4 months later...

இளையராஜா பாடல்களில் உங்கள் மீது தாக்கம் செலுத்திய பாடல், உங்களை நெகிழ வைக்கும் பாடல் எது ?

http://www.hotstar.com/tv/neeya-naana/1584/celebrating-music-from-the-80s/1000036229

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.