அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு தேன் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல
வெண்ணிலவே சிரிக்காயோ
கோதையெனைக் காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலே காய் வெண்ணிலா
1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்
2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!
3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)
4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.
5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்
6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்
7.அவரைக்காய் அவரை காய் என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை) ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.
8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.
9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)
10. இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
11.உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
12.ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.
13.ஜாதிக்காய் சாதிக்காய்
14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்
தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.
15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்
16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல
வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.
17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )
(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு
18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.
19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)
இது
வெள்ளரிக்காயா
விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.
இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.
Edited by புலவர், 25 March 2012 - 11:11 AM.