அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன.
அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மிகவும் சினத்துடன் 'அவர் ஒரு மனுசனா..' என்னும் போக்கில் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்கள். நானும் அப்போது யாழில் இணைந்து பதில் எழுதுங்கள் என்று கூறிவிடுவேன். அவர்கள் யாழில் உள்ளார்களா இல்லையா என்பதை நான் அறியேன்.
ஆனால் சாத்திரியின் அந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது எனக்கு மனதுள் சிரிப்பாக இருக்கும். ஏனெனில் 90களில் Dosல் ஆதமி போன்ற தமிழ் எழுத்துகளை பாவித்த காலத்தில் வெளியிட்ட கடல் என்ற சஞ்சிகையிலும் இப்படியான வகை கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதனால் திரும்ப வந்த அடிகளையும் தாங்கியிருக்கிறோம். அதற்கும் ஒரு துணிவும் அதன் தாக்கங்களைத் தாங்கும் குடும்பமும் வேண்டுமல்லவா?!
எழுத்தாளன் என்பவன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால்தான் அந்த உணர்வுகளை எழுத்தில் இறக்கிவைக்க முடிகிறது. அதுமட்டுமல்ல.. தனது உணர்வுகளை மற்றவனுடன் பகிர்ந்துகொண்டு அதை ஒரு அறிவித்தலாக அல்லது அனுபவமாக தான் சார்ந்த சமுதாயத்தில் பதிவுசெய்ய விளைகிறான். இந்த விளைவு இல்லாவிட்டால் தாக்கும் உணர்வுகளைச் சமாளிக்க மது.. போன்ற எத்தனையோ விடயங்களை நாடிவிட்டுப் போகலாம்.
ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் எழுத்தாளன்.. அந்த உணர்வுகளை தனது எழுத்தனுபவங்களைக் கொண்டு நிதானமாகச் சிந்தித்து ஒரு சீரான முறையில் எழுத்தாக்குகிறான் என்பதுதானே உண்மை?! ஆக உணர்ச்சிவசப்படுபவன் அந்த உணர்வுகளை ஒரு பக்குவமான நிலைக்குகொண்டு வரும்போதுதானே எழுத்தாளனாகிறான். இது அந்த எழுத்தாளனது அனுபவங்களைப் பொறுத்தே காத்திரமாகிறது.
நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.
தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.
உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.
எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்!!


















