முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு நினைவு தெரிந்து அது ஒரு அரசியல் நிகழ்வாக கணித்து தொடங்கும் காலத்தை எனது பத்தாவது வயதில் இருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.எனது அரசியல் குடும்ப பின்னனி தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்தது .தமிழ் காங்கிரஸ் கட்சி பிரபல சட்டதரணி ஜீஜீ பொன்னம்பலம் தலைமையில் இருந்தது என்று பலருக்கு தெரிந்து இருக்கும் .அந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாரளுமன்றம் சென்று உப சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட உடுப்பிட்டி சிங்கம் என்று பலரால் அழைக்கப்பட்ட சிவசிதம்பரம் அவர்களும் அப்பொழுது உள்ளூராட்சி அமைச்சருமாக இருந்த பிரமதாசாவும் கலந்து கண்ட வைபவத்தினை கண்ட நிகழ்விலிருந்து இந்த கட்டுரையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.எமது ஊரில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்சாரம் வழங்கலை தொடங்கி வைப்பதற்குக்கு இவர்கள் அழைத்து வரும் பொழுது நூல் நாடா வெட்டும் பொழுது பிரமேதாசா ,சிவசிதம்பரம்,எனது உறவினர் ஆகியோரை எடுக்கும் புகைபடத்தில் நானும் ஒரு பத்துவயது சிறுவனாக நான் அகப்பட்டு இருந்தேன்.அது அடுத்த நாள் வீரகேசரி முதல் பக்கத்தில் வந்தது அதில் தெளிவாக எனது முகமும் இருந்தது .
இதன் மூலம் அந்த வயதிலே எனக்கு கிடைத்த அரசியல் அந்தஸ்த்து என்று அக மகிழ்ந்தேன்.உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆரம்ப காலங்களில் ஒரு இடதுசாரி சிந்தனை பட்டவராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்றாலும் பின் ஒரு படு வலதுசாரி போக்கு கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் பாரளுமன்றம் சென்றவர் .தமிழ் காங்கிரஸ் கட்சி அப்பொழுது யாழ் மேட்டுகுடிகளின் பலத்த ஆதரவு பெற்ற கட்சியாகவே இருந்தது. அது வட மாகணத்தை தவிர்த்து வேறு தமிழ் பிரேதசங்களில் வெற்றி பெற்று பாரளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொழுது கொண்டிருக்கவில்லை.ஒப்பீட்டளவில் அன்று தந்தை செல்வா தலைமையில் இருந்த தமிழரசு கட்சியின் போட்டிக் கட்சியாக தோற்றமளித்தாலும் மூன்று இடங்களுக்கு மேல் பாரளுமன்றத்துக்கு தெரிவானதாக எனக்கு ஞாபகமில்லை.
யாழ்ப்பாண தொகுதியில் தெரிவாகி ஜீஜீ பொன்னம்பலமும் உடுப்பிட்டி தொகுதியில் இருந்து மு .சிவசிதம்பரமும் வவுனியா தொகுதியில் இருந்து தா.சிவசிதம்பரமும் மட்டும் தான் நான் பார்த்த காலத்தில் தெரிவாகி இருந்திருந்தார்கள் .இந்த தா .சிவசிதம்பரம் என்பவர் வவுனியாவில் யாழ் பாணத்தவரின் மேலாதிக்கம் அதிகம் இருக்கு என்று சொல்லி முதல் முதலில் யாழ் அகற்று சங்கம் என்று உருவாக்கினவராவார்.60 களில் நடந்த பிரபல சத்தியாக்கிர போராட்டத்தை தமிழரசு கட்சியினர் நடத்திய பொழுது அப்பொழுது ஒரேயொரு எம்பியாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மு.சிவசிதம்பரம் இணைந்து செயல் பட்டிருந்தார் என்று கேள்விபட்டிருந்தேன் .இதை பிற்கால தமிழ் காங்கிரஸ் அரசியல் மேடையில் சிவசிதம்பரத்தை வைத்து கொண்டு ஜீஜீ இந்த விடயம் பற்றி குத்தி பேசியதை நேரில் கேட்டு இருக்கிறேன்,தமிழரசு கட்சி அதிகமான தொகுதிகளில் வென்றாலும் தமிழ் காங்கிரஸுக்கு குடாநாட்டில் பரவலாக செல்வாக்கு இருந்தது.இந்ந தமிழ் காங்கிரஸ் கட்சி மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பதுக்கு உறுதுணையாக நின்றது குறிப்பாக ஜீஜீயை சாடுவோர் உளர்.அதே நேரத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியினரில் ஜீஜீ புகழ் பாடுவோர் ஜீஜீ இலங்கையின் முதல் மந்திரிசபையில் கைத்தொழில் மந்திரியாக இருந்த காரணத்தினால் அதை பயன்படுத்தி எந்த வித தொழிற்சாலையும் இல்லாத தமிழ் பிரேதசத்தில் மூன்று தொழிறசாலைகள் அமைத்திருந்தார் என்று பெருமை கொள்வர், அந்த மூன்று தொழிற்சாலைகள் அவையாவன காங்கேசன்துறையில் அமைந்த சீமேந்து தொழிற்சாலை ,பரந்தனில் அமைந்த இரசாயன தொழிற்ச்சாலை கிழக்கில் வாழைச்சேனையில் அமைந்த காகித தொழிற்சாலை ஆகும். மேலும் ஜீஜீ பொன்னம்பலமும் பிரபல சட்டத்தரணியாக இருந்தமையால் அவரின் மிக விவேகமான வாதங்களை கதை வடிவில் கூறி பெருமையும் கொள்வர்.
இடம் இருந்து வலமாக மு,.சிவசிதம்பரம், ஜீ ஜீ பொன்னம்பலம், தா.சிவசிதம்பரம்

50க்கு 50க்கு என்ற கோசத்துடன் ஜீஜீயின் தமிழ்காங்கிரஸும் .சமஸ்டி அரசியல் என்னும் மாநில சுயாட்சி கோரிக்கையுடன் செல்வாவின் தமிழரசு கட்சியும் அரசியல் நடத்தி கொண்டிருந்தனர் .அதே நேரத்தில் உது ஒன்று சரிவராது தமிழர் சுயாட்சி கழக நவரத்தினம் என்பவர் தனித் தமிழ் நாடு என்ற கோசத்துடனும் இருந்தார் .அவருடைய கட்சியில் சிங்கள தனி சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருந்த கோடிஸ்வரன் என்பவரும் இருந்தார்
70 களில் நடைபெற்ற இலங்கை பொது தேர்தல் தான் எனக்கு முதன் முதலாக ஞாபகத்தில் இருந்த தேர்தலாகும் .அந்த தேர்தலில் தமிழர்களின் முக்கிய கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் மக்கள் முன் வைத்த கோசம் . தமிழரசு கட்சி தமிழர்களின் தாயகத்தின் தலை நகராகா திருகோணமலையில் பல்கலைகழகம் அமைக்க வழி வகை செய்வோமோனவும் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் யாழ்ப்பாண்த்தில் அமைக்க வழிவகை செய்வோமென தேர்தலில் மேடைகளின் பிரச்சாரம் செய்தனர்.
தமிழரசுகட்சியின் முக்கிய பொறி பறக்கு பேச்சளாராக ஆலாலசுந்தரமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரகா ஆனந்த சங்கரியும் கொடிகட்டி பறந்தனர் ..70 களில் நடைபெற்ற தேர்தலில் பல முறை வென்ற தனது கோட்டையாக கருதிய உடுப்பிட்டி தொகுதியில் சிவசிதம்பரம் தோல்வியுற்றார் .அதே போல் வட்டுகோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தியாகராஜா என்பவரால் தோல்வி யடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மேலும் இருவர் தெரிவாகி இருந்தனர் நல்லூர் தொகுதியில் இருந்து அருளம்பலம் என்பவரும் கிளிநொச்சி தொகுதியில் இருந்து ஆனந்தசங்கரியுமாகும் ..70களில் பெரும் சிறிமா தலைமயிலான சுதந்திர கட்சி பெரு வெற்றியீட்டியது அந்த அரசாங்கத்தில் பீட்டர்கெனமென் தலைமையிலான சோவியத் சார்பு கம்னீயூஸ் கட்சி ட்ரொக்சிய கட்சியான என்.எம் பெரேரா வின் தலைமையிலான சமசமாஜகட்சி அங்கம் வகித்து இருந்தனர்
( தொடரும்)
http://www.yarl.com/...ndpost&p=739454 பாகம் -2
http://www.yarl.com/...ndpost&p=739617 பாகம் -3
http://www.yarl.com/...ndpost&p=740096 பாகம்-4
http://www.yarl.com/forum3/index.php?showtopic=99522&view=findpost&p=741662 பாகம் -5
Edited by அரக்கன், 23 March 2012 - 11:23 PM.







.jpg)












