எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .
"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".
கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .
"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".
பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .
"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".
"என்னகதை ?"
"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?
அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .
"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மாநில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".
பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .
" எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்க்கு வாறான் . இந்தக் கேணியடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது . பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".
என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .
"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".
பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதியில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .
"சொல்லு பாமினி".
அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............
"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".
அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் .
Edited by கோமகன், 15 March 2012 - 07:21 AM.
















