குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்)
கட்டுரை தகவல்
சுப் ராணா
பிபிசி இந்திக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம்.
ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?
குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா?
குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்?
டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், "குளிர் காலத்தில் நமது தாகம் கணிசமாகக் குறைகிறது. நமக்கு குறைவாகவே வியர்க்கும், அதனால் உடலுக்குக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதைப் போல நாம் உணர்கிறோம்," என்று விளக்கினார்.
"பலர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள், அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து, வேண்டுமென்றே தண்ணீரை குறைவாகக் குடிக்கிறார்கள்" என்றார்.
மேலும், "கோடைக் காலத்தைப் போலவே குளிர் காலத்திலும் உடலுக்கு அதே அளவிலான தண்ணீர் தேவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஹீட்டர்கள், டிரையர்கள் மற்றும் உட்புற வெப்பமூட்டும் அமைப்புகள் காற்றை மிகவும் வறண்டதாக மாற்றுகின்றன. இது நீர் இழப்பை மேலும் அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றார் அவர்
பட மூலாதாரம்,Getty Images
அமெரிக்க இதய சங்கத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, நீண்ட காலம் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
"குளிர் அதிகரிக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க புற ரத்த நாளங்களை உடல் சுருக்குகிறது" என்று மெட்டாமார்போசிஸ் (ஒரு ஆரோக்கியம் சார்ந்த தளம்) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் மற்றும் உணவு நிபுணருமான திவ்யா பிரகாஷ் கூறுகிறார்.
"இதனால் உடலின் மையப் பகுதிகளில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடல் எல்லாம் சரியாக இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் உணர்கிறது. இதன் காரணமாக, தாகம் எடுக்கும் உணர்வு 40% வரை குறையலாம். ஆனால் உடலின் அடிப்படைத் தண்ணீர் தேவையில் வானிலை சூழல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அந்தத் தேவை எப்போதுமே சுமார் 2.5 முதல் 3.5 லிட்டர் வரை இருக்கும்." என்றார் அவர்
பட மூலாதாரம்,Getty Images
குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
நமது உடலில் சுமார் 60% நீர் உள்ளது.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புலின் குமார் குப்தா, "இந்த நீர் ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தின் மூலமாகத்தான் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் முழு உடலின் செல்களுக்கும் சென்றடைகின்றன," என்கிறார்.
"நீரின் அளவு குறையும்போது, ரத்தம் அடர்த்தியாகிறது. இது மூளை செயலிழப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அபாயம் குறிப்பாக குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். அடர்த்தியான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதற்கு இதயம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது."
உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, மூளை ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது என்றார் அவர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து, மலச் சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது.
மேலும், நீண்ட காலம் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தோல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் உணவு நிபுணரும், 'ஒன் டயட் டுடே' அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் இது தொடர்பாகப் பேசும்போது, "அதிகப்படியான மந்தநிலை, பலவீனம், சோர்வு, அதிகரித்த மன அழுத்தம், பதற்றம் (நீர்ச்சத்துக் குறைபாடு கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது), தலைச்சுற்றல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற உணர்வுகள் என நீர்ச்சத்துக் குறைபாட்டை உணர்த்தும் சில சமிக்ஞைகளை நம் உடல் வெளியிடுகிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் உடல் செல்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதைக் குறிக்கின்றன," என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நெருப்பால் உடலை சூடுபடுத்துவது உடலிலுள்ள நீரின் அளவை குறைக்கிறது.
யாருக்கு அதிக ஆபத்து உள்ளது?
முதியவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் அனு அகர்வால்.
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் விளைவுகள் வெவ்வேறு வயதுப் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என்றும் மருத்துவர் அனு அகர்வால் விளக்குகிறார்.
''இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடைய (40 வயது வரை) பெண்களுக்கு ஏற்கெனவே உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு உடலில் நீர்ச்சத்து குறைய வழிவகுக்கிறது. இதனால் மாதவிடாய் வலி அதிகரிக்கிறது, மேலும் வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.''
தொடர்ந்து பேசிய அவர், "குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது, நச்சுகள் உடலில் தங்கி கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது" என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
தண்ணீர் குடிக்க சரியான வழி என்ன?
தண்ணீர் குடிக்க உகந்த வழி குறித்தும் மருத்துவர் அனு அகர்வால் விவரித்தார்
குளிர்காலத்தில், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த 2-3 மணிநேரத்திற்குள் 2-4 கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் குடிக்கவும்.
உங்கள் தூக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மாலை 5 மணிக்குள் உங்கள் தினசரி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
மாலைக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கம் கலைவதற்கும் வழிவகுக்கும்.
மேலும், "குளிர் காலத்தில் மக்கள் தண்ணீருக்குப் பதிலாகத் தேநீர், காபி, சூப் அல்லது மிக அதிக சூடான தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஆனால் மிக அதிக சூடான தண்ணீரைக் (50-60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் நமது உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ். இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே சரியான வழியாகும். இது உடலுக்குச் சிறந்தது மற்றும் எளிதில் உறிஞ்சப்படும்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cwy1xn7j2jyo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.