போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான நடுவத்தின் (CWVHR)
சார்பாக கனடா நாட்டின் ஒன்ரோறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரின் அய்ந்து
நட்சத்திர ஷெரேட்டன் பார்க்வேயில் 15 ஆம் நாள் காலை மிகப் பெரிய அளவில் மனித
உரிமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு நுழைவுக்
கட்டணமாய் 30 அமெரிக்க டொலர் அறிவிடப்பட்ட போதும் அரங்கு நிறைந்த ஆர்வலர்கள்
வருகை தந்திருந்தார்கள்.
மாநாட்டில் காலை நிகழ்வாய் மனித குலத்திற்கு ஏதிரான் குற்றங்கள், போர்
குற்றங்கள், இனப்படுகொலை பற்றிய மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 250க்கும்
மேற்பட்ட அறிஞர்களும், சட்ட தரணிகளும், மனித உரிமை பிரதிநிதிகளும் பங்கெடுத்து
கொண்டனர். மாநாட்டில் போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள்,
இனப்படுகொலை பற்றிய ஆய்வுகளும், தடுப்பதற்கான வழிவகைகள், ஐக்கிய நாடுகளின்
பங்கு - கனடாவின் பங்கு, அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், ஜெனிவா பிரகடனமும்
போர்க்குற்ற விபரங்களும், இலங்கை போர்க்குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள்
விசாரணை செய்வதற்கான சாதக நிலைமைகளும் அவற்றை மறைப்பதற்கான சதி முயற்சிகள்
நடைபெறுவதையும் விரிவாக மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலர்கள், சட்ட
வல்லுநர்கள்;, பேரறிஞர்களும் பங்கு கொண்டு விவாதித்தனர். இவ்வரங்கில் கலந்து
கொண்டு மக்கள் தமது ஈழ உறவுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதியும்,
நிம்மதியும் நிரந்தரமான விடுதலையும் கிடைக்க இக்கருத்தருங்கு வழிவகைகளை
கண்டுள்ளனர் என்பது தெளிவாய் தெரிகிறது.
உணவு இடைவேளைக்குப் பின்னர் தமிழினப் படுகொலைகள் நூல் வெளியீட்டு விழா இடம்
பெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழீழ மண்ணின் விடுதலைக்கு அயராது பாடுபட்டு
வருபவரும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவருமான நக்கீரன் தலைமையேற்று
நடத்தினார். அப்போது அவர் தமிழினப் படுகொலைகள் பற்றிய தரவுகளை ஆவணப்படுத்திய
வடகிழக்கு மனிதவுரிமைக்கான செயலகத்தின் பணியாளர்களின் தொண்டை நினைவு
கூர்ந்தார். குறிப்பாக அதன் செயலாளராகப் பணியாற்றிய எம்.எக்எஸ. கருணரத்தின
அடிகளார் அவர்களை நினைவு கூர்ந்தார். மேலும் கண்ணீரும் செந்நீரும் நிறைந்த எமது
வரலாறு சமகாலத்தில் பதியப்பட்டு வருங்கால சந்தததியினரின் பார்வைக்கு வைக்க
வேண்டிய அவசியத்தையும் தமிழினப் படுகொலை என்ற நூலின் ஆங்கிலப்பதிப்பை
தமிழரல்லாதகளிடமும் குறிப்பாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளடமும் சேர்க்கப்பட
வேண்டிய தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
நூல் குறித்த ஆய்வினை முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈழவேந்தன்
நிகழ்த்தினார். தமிழ் அறிஞர் சண்முகம் குகதாசன் தான் பிறந்து வளர்ந்த திரியாய்
உட்பட திருகோணமலை மாவட்டத்தில் நடந்த இனப் படுகொலைகளை நினைவு கூர்ந்தார்.
தமிழினப் படுகொலை நூலின் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டின் பதிப்புக்களை
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முதல் தலைவரும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் 2005 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று சிங்கள
அரசின் கைக்கூலிகளால் கொல்லப்பட்டவருமான ஜோசப் பாரராஜசிங்கத்தின் துணைவியார்
சுகுணம் பாரராஜசிங்கம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான
நடுவத்தின் (CWVHR) சார்பாய் அதன் தலைவர் திரு. ஏன்டன் பிளிப்ஸ் முன்நின்று
நடத்தினார். மாலை நாக்கு மணிக்கு நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவேறியது.



















