Jump to content


Tamil Star News
Photo

யாழ் இணையம் - 11ஆவது அகவை


  • Please log in to reply
No replies to this topic

#1 வலைஞன்

வலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 1,458 posts
  • Gender:Male
  • Location:ஐக்கிய இராச்சியம்
  • Interests:அழகு, அறிவு, அசைவு, அமைதி

Posted 30 March 2009 - 11:47 AM

அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும்,

யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் - 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. ஆழ்ந்த அர்ப்பணிப்பு, விடா முயற்சி, பொறுமை, நோக்கம் தவறாமை - யாழ் இணைய உறவுகளின் அன்பும் ஆதரவும் - தளர்ந்து போகும் நேரங்களில் உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்கள் - ஆலோசனைகளை வழங்கி மெருகூட்டும் உறவுகள் - இத்தனையும் தான் இதனை சாத்தியமாக்கியது.

இன்று, இந்த வளர்ச்சியை - இந்த மகிழ்ச்சியை - கொண்டாடும் மனநிலையில் நாம் யாருமே இல்லை என்பதே உண்மை. எமது தமிழீழ நாடு - எமது மக்கள் - எமது போராளிகள் - எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழல் எம்மை துயருக்குள் தள்ளியுள்ளது. நாள்தோறும் சிங்கள இனவெறி அரசால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது போராளிகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் மண் மீட்கப் போராடி மாவீரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். இழப்புச் செய்திகளையும், மக்களின் அவலங்களையும் தாங்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் சோர்ந்துவிடவில்லை. சோரப்போவதுமில்லை. எமது எண்ணம், நோக்கு இரண்டும் மாறப்போவதுமில்லை.

எந்தச் சூழலாயிருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப - தமிழ் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப - யாழ் இணையம் தன்னைத் தகவமைத்து உருவமைத்து வெளிப்படும். மண் மீட்புப் போருக்காய், இனப்படுகொலைக்கு எதிராய் எழுச்சிகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களோடு யாழ் இணையமும் தன்னை ஒன்றிணைத்துள்ளது. மக்களின் இன்றைய உணர்வுகளை, எண்ணங்களை, எழுச்சியை காவும் ஒரு ஊடகமாய் தன்னை மையப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், எழுச்சிப் போராட்டங்கள் போன்றவற்றுக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறது. தாயக விடுதலைக்கான இணையம் சார்ந்த கூட்டுமுயற்சிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்கு உறுதுணையாக யாழ் இணைய கருத்துக்கள உறவுகள் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு + எழுச்சிப் பேரணிகளுக்கான பதாகைகளை உருவாக்கினோம். கொட்டொலிகளை எழுதினோம். இணைய ஊடக பரப்புரைக்கான ஒத்துழைப்புகளை வழங்கினோம். மக்களின் அவலங்களை - தமிழரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தோம். இனப்படுகொலை பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்க தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினோம். ஆங்கில வலைப்பதிவைத் தொடங்கினோம். "சிறிலங்காவைப் புறக்கணி" என்கிற முயற்சிக்கான ஆதரவை வழங்கினோம் - அதற்கான பதாகைகள் தயாரித்தோம் - அதற்கான இணையப்பக்கம் உருவாக்கினோம். இன்னும் இன்னும் எம்மாலானதைச் செய்துகொண்டிருக்கிறோம். நாம் என்றால் யார்? யாழ் இணைய உறவுகள் நீங்கள்.

நாம் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுவதல்ல நோக்கம். கூட்டுமுயற்சியாய் எம்மால் நிறைய செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இவற்றை பட்டியலிட்டோம். கூட்டுமுயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம். கூட்டுமுயற்சிகளை நாம் வரவேற்கிறோம். நாம் இன்னும் நிறைய செய்யவேண்டும் - என்ன செய்யவேண்டும், என்பதை எண்ணவேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது. பயனுள்ள - செயற்திறனுள்ள - புதிய - வித்தியாசமான - தாயக விடுதலை நோக்கிய கூட்டுமுயற்சிகளுக்கு தன்னாலான ஒத்துழைப்பை யாழ் இணையம் வழங்கும்.

இந்த நேரத்தில், யாழ் இணையத்தை நடாத்துவதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் எடுத்துச்சொல்ல விரும்புகிறோம்:

1. யாழ் இணையத்தை பராமரிப்பதற்கு நாம் செலவிடும் நேரம். வேலை நேரம், குடும்பத்துக்கான நேரம், தனிப்பட்ட வேறு வேலைகள் இத்தனைக்கு மத்தியில் தான் நாம் யாழ் இணையத்தை இயக்குகிறோம். பலநேரங்களில் வேலையில் இருந்துகொண்டு, யாழ் இணையத்தள வேலைகளைச் செய்கிறோம் - குறிப்பாக கருத்துக்களத்தை மட்டுறுத்தும் வேலை. எனவே கருத்துக்கள உறவுகள் பொறுப்புணர்ந்து கருத்துக்களை எழுதுவீர்களானால் எமக்கு மட்டுறுத்தும் நேரம் மிச்சப்படும்.

2. யாழ் இணையத்தை நடாத்துவதற்கான பொருளாதாரச் செலவு. இணைய வழங்கிக்கான மாதாந்தச் செலவு, மென்பொருட்களுக்கான செலவு, இற்றைப்படுத்தலுக்கான செலவு என்று பல்வேறு செலவுகள். விளம்பரங்களூடாக இவற்றை ஈடுகட்டவே நாம் விரும்புகிறோம். எனவே, யாழ் இணைய உறவுகள், உங்களுக்கு தெரிந்த நிறுவனங்களினூடாக விளம்பரங்களைப் பெற்றுதந்தால் பயனுள்ளதாக அமையும்.

3. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களால் வெளியிலிருந்து வரும் சில சிக்கல்கள். தொலைபேசி, மின்னஞ்சல்கள் ஊடான எச்சரிக்கைகள், வசவுகள், தனிப்பட்ட தாக்குதல்கள். இவற்றை நாம் கணக்கிலெடுப்பதில்லை. எனினும், கருத்துக்களத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் பொறுப்புணர்ந்து, பண்பான முறையில், நேர்மையாக வைக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும் - எமது மக்களோடும் - எமது போராளிகளோடும் - நாம் என்றும் இணைந்திருப்போம்.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்.

நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
  • தமிழீழன் likes this
வலையில் கலைஞன்
வலைஞன்

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]