நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன்.
எழுதுறதற்கு வசதியாக இருப்பதற்காகவும், எனக்கு தெரிந்த, நான் கருத்தாடல் செய்து பழகிய ஒருவரையும் தவறவிடாமல் இருக்கிறதற்காகவும் அதிக கருத்துக்கள் எழுதினவர்களில இருந்து – இறங்குவரிசையில ஆண்கள் பத்து + பெண்கள் பத்து பத்து பேராக ஒவ்வொரு தடவையும் கருத்தை பதிகின்றன்.
சிலரை எனக்கு தனிப்பட தெரியும் யாழுக்கு வெளியாலையும். சிலரை யாழுக்க மட்டும்தான் தெரியும். அவர்களை தனிப்பட தெரியாது. தனிப்பட தெரிந்த சிலர்பற்றிய சுவாரசியமான விசயங்களையும் இதில கொஞ்சம் சொல்லிறன். ஆக்களிண்ட பெயரைப்பாத்துத்தான் ஆண்பெண் எண்டு இதில எழுதிறன். எனவே, தனிப்பட தெரியாத எவரையாவது பால் மாறி சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. யாழில நடந்த பல சம்பவங்களும், ஆரம்ப காலங்களில என்னோட கருத்தாடல் செய்தபலரின் நினைவுகளும் எனக்கு மறந்துபோச்சிது. நினைவில இப்போது இருக்கிறவை பற்றி மட்டும் சொல்லிறன்.
ஆண்கள் முதல் பத்து:
யமுனா:
குரு எண்டு கூப்பிட்டு எனக்கு உசுப்பேத்திவிட்ட ஆக்களில முதன்மையானவர் இவர். அது ஏன், எப்படி, எதற்காக குரு எண்டு என்னை கூப்பிடவெளிக்கிட்டார் எண்டு எனக்கு இப்ப நினைவு இல்லை. ஆனால் ரெண்டுபேரும் குரு - சீடன் எண்டு சேர்ந்து அடிச்ச கூத்துமாதிரி யாழ் வரலாற்றில வேறு ஒன்று இருக்காது எண்டு நினைக்கிறன்.
இவர் வாழ்க்கைபற்றி தனிப்பட சில விசயங்கள் தெரியும். உண்மையில சொல்லப்போனால் எனக்கு இங்கு இருக்கும் யமுனா எண்டுறபெயரில எழுதுபவரை விட வெளி உலகில இருக்கிற உண்மையான **** எனும் பெயர் கொண்ட ஆளை அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லலாம். எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்க!
நுணாவிலான்:
ஆரம்பத்தில நான் ணுனாவிலான் எண்டு கூப்பிட பிறகு குளக்காட்டன் இடையில வந்து அது நுணாவிலான் எண்டுவரும் என திருத்திவிட்டார். யாழில பலர் பலவற்றை குப்பையாக வெட்டி ஒட்டினாலும், ஓரளவு பயனுள்ள தகவல்களை வெட்டி ஒட்டினவர் எண்டால் நுணாவிலானை சொல்லலாம்.
தனிப்பட இவரை எனக்கு தெரியாது. என்ன செய்கின்றார் எண்டும் தெரியாது. வாழ்க வளமுடன்!
மதன்:
நான் யாழில இணைஞ்ச காலத்தில அதிகம் கருத்தாடல் செய்து இருக்கிறன் இவருடன். பிறகு ஆளை காணவில்ல. மாதவனை பாக்கும்போது இடைக்கிடை இவரிண்ட நினைவு வரும். தனிப்பட தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்க!
வானவில்/பிரசண்ணா:
நான் யாழில இணைஞ்ச காலத்திலதான் இவரும் இணைஞ்சு இருந்தார். கும்பலில எல்லாரும் கிறுக்குத்தனமாக கிறுக்கின வேளையில இவரும் கிறுக்கினார். பிறகு காணாமல் போய்விட்டார்.
தனிப்பட தெரியாது. இவரது தனிப்பட்ட வாழ்க்கை எவ்.பி.ஐ க்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். எங்கிருந்தாலும் வாழ்க!
தூயவன்:
ஆரம்பத்தில இவர் எழுதுறதுகளப் பார்துப்போட்டு யாரோ வயசில பெரிய ஆள் ஆக்கும் எண்டு நினைச்சன். தமிழில நல்ல அறிவு இருந்திச்சிது. அதை தேவையில்லாத விவாதங்களில செலவளிச்சு விட்டார். என்னுடன் யாழில அதிகம் மல்லுக்கட்டியவர்களில ஒருவர் தூயவன்.
இவரைப்பற்றி தனிப்பட கொஞ்சம் தெரியும். எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!
கந்தப்பு:
நான் யாழில சிறீ லங்கா சிறை அனுபவங்கள் தொடரை எழுதிமுடிக்க மூலகாரணமாய் இருந்தவர் கந்தப்பு. கந்தப்புவிற்கு உண்மையில நல்ல தமிழ்பற்று இருக்கிது. தாயகபோராட்டம் மீது வலுவான நம்பிக்கை, பிடிப்பு இருக்கிது.
ஊரில இருந்த காலத்தில இவரை நான் கண்டு இருக்கக்கூடும். நேரில பார்த்தால்தான் ஆள் ஆர் எண்டு தெரியும். வாழ்க வளமுடன்!
தயா:
தயா எண்டுறதைவிட தலை எண்டுதான் எனக்கு இவரை தெரியும். இவர் எப்ப யாழில தனது பெயரை மாத்தினாரோ அண்டையோட இவரிண்ட தலையிண்ட மதிப்பு குறைஞ்சிட்டிது எண்டு சொல்லவேணும். யாழில பச்சை பல்லுப்போட்ட முக்க்குறியை பார்க்கும்போது எனக்கு இவரிண்ட நினைவுதான் வரும். இவர் அதை அப்பப்ப பாவிப்பார். எங்கிருந்தாலும் வாழ்க!
ஈழவன்:
ஆரம்பத்தில அடிக்கடி கருத்தாடல் செய்வது ஈழவனுடன். பிறகு ஈழவன் யாழுக்கு வருவது குறைந்துவிட்டது. கலுசறை எண்டுற சொல்லை யாழில இடைக்கிடை பாவிக்கிற ஆள் ஈழவன் எண்டு சொல்லலாம். கலுசறை எண்டு சொல்லி ஈழவன் ஊர்ப்புதினத்தில சிறீ லங்கா அரசு ஆட்கள் யாரையாவது பேசி எழுதேக்க, அதை வாசிக்கும்போது எனக்கு சரியான சிரிப்பாய் இருக்கும்.
வீட்டில கலியாணம் பேசுவதாய் எப்பவோ யாழில சொன்னமாதிரி இருக்கிது. வளமுடன் வாழ்க!
நெடுக்காலபோவான்:
ஆரம்பத்தில எனக்கு ஒரு எதிரிபோல தோற்றமளித்து... பிறகு தனிப்பட எனக்கு ஆளை யார் எண்டு தெரியாவிட்டாலும்.. முகம் அறியாது, பின்புலம் அறியாது, வெறும் யாழில பரிமாறுகின்ற கருத்தாடல்களிண்ட அடிப்படையில மானசீகமான ஒரு நல்ல நண்பனாக ஒருவர் இருக்கிறார் எண்டால் நெடுக்காலபோவானை சொல்லலாம்.
நெடுக்காலபோவானின் சில கருத்துக்களுடன் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. ஆனால் சில கருத்துக்கள் ஆரம்பத்தில நான் அவற்றை வெறுத்து இருந்தாலும்.. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள், உண்மைகள். முன்பு இதுகளை வாசிக்கும்போது சரியான ஆத்திரமாய் இருக்கும்..என்னடா யார் இது இப்பிடி எழுதுறான் பெண்களை நார் நாராய் கிளிச்சு இவ்வளவு கேவலமாய் எண்டு... ஏதோ லூசன் ஆக்கும் எண்டு நினைச்சன். ஆனால்.. இப்போது கசப்பாய் இருந்தாலும் நெடுக்காலபோவான் சொன்ன சில கருத்துக்கள் உண்மை, யதார்த்தமாக எங்கட வாழ்க்கையில இழையோடி இருப்பவை என அறியும்போது அதே விசயங்களை இப்போது வாசிக்கும்போது சிரிப்பாய் இருக்கும். உண்மையை உண்மை எண்டு ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்?
எனக்கு நெடுக்காலபோவானை நினைக்க சிரிப்பு வருகிற ஒரு விசயம் என்ன எண்டால்.. முன்பு எங்கையோ ஒரு இடத்தில யாழ்ப்பாணத்தில மணலுக்கால வெறுங்காலோட நடந்துபோறது பற்றியும் தனது கால்களைப்பற்றியும் ஏதோ விமர்சனம் செய்து ரெண்டுவரிகளில எழுதி இருந்தார். நெடுக்காலபோவானில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் பல்வேறு விசயங்கள் பற்றிய பரந்துபட்ட அறிவை வளர்த்து இருக்கிறது. அதை விருத்தி செய்யுறது எண்டு சொல்லலாம்.
வாழ்க்கையை பரிசோதனைகூடமாக மாற்றாது, அம்மா, அப்பா, சகோதரங்களிண்ட சொல்லை கேட்டு, அச்சாப்பிள்ளைமாதிரி நல்ல ஒரு துணையுடன் இணைந்து வளமுடன் வாழ வாழ்த்துகள்!
கலைஞன் / மாப்பிளை:
அது வேற யார்? நாந்தான். இவரில பிடிக்காதவிசயம் என்ன எண்டால் யாழில இணைஞ்சது. பிடிச்ச விசயம் என்ன எண்டால் யாழில எழுதுவதை நிறுத்திக்கொண்டது. என்னையே நான் வாழ்த்த முடியாது. வேற சொல்லிறதுக்கு ஒண்டும் இல்லை.
பெண்கள் முதல் பத்து:
கறுப்பி:
யாழுக்கு எழுதிறதால எழுதிற ஆக்களுக்கு பயன் இருக்கிதோ இல்லையோ ஆனால் யாழ் இணையத்துக்கு எப்பவும் பயன் இருக்கிது. யாழ் இணையத்துக்கு பலமான ஒரு மூலாதாரமாக இருக்கிற ஆக்களில கறுப்பியை சொல்லலாம். காலம்பற ஒவ்வொருநாளும் நாங்கள் எழும்பி கிடுகிடு எண்டு பல்லு மினுக்கி முகம் கழுவுறதுமாதிரி கறுப்பி ஊர்ப்புதினம் பகுதியில வந்து கிடுகிடு எண்டு தானாக இயங்கிற இயந்திரம் மாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப்போட்டு போவா. கறுப்பியின் செய்திகள் இங்கு செய்திபார்க்க வருபவர்களுக்கு நல்ல தீனி என்பதில சந்தேகம் இல்லை.
யாழில காதலர்தினம் எண்டு இந்தவருசம் கூத்து அடிச்சு இருந்தம். அதன் ஒரு அங்கமாக ஒரு நேரடி போட்டி வச்சு இருந்தன். இதன் கடைசிக்கேள்வியாக உங்கள் காதலருக்கு ஒரு கடிதம் எழுதுங்கோ எண்டு கேட்டு ஒரு கேள்வி போட்டு இருந்தன். யமுனாவும், விகடகவியும், கறுப்பியும் மூன்று வெவ்வேறு விதமான காதல் கடிதங்களை எழுதி இருந்தார்கள். நான் சும்மா விளையாட்டுக்கு அந்தபோட்டியை யாழில வைத்து இருந்தாலும்.. மூன்றுபேரும் இவ்வளவு Serious ஆக தங்கட உள்ளங்களில் இருந்து தமது உண்மையான காதலர்களை நோக்கி கற்பனையில் கடிதம் எழுதுவார்கள் எண்டு நான் நினைக்க இல்லை.
இந்த மூண்டு கடிதங்களையும் வாசிக்க எனக்கு அண்டைக்கு கண் எல்லாம் கலங்கி ஒரு அழுகை மாதிரி வந்திட்டிது எண்டு சொல்லலாம். சும்மா தேவையில்லாத ஒரு கேள்வியை விளையாட்டாய் கேட்டு மூண்டுபேரிண்ட உண்மையான உணர்வுகளையும் அவமதித்துப் போட்டனோ எண்டு நினைச்சு கலங்கிவிட்டேன். காதலிச்சு பார்த்தவர்களுக்குத் தெரியும் காதலின்வலி. நான் அதன் வலியை உணர்ந்து இருந்ததால மூவரும் எழுதின அந்த மடல்களின் பெறுமதியை, கனத்தை என்னால உணரக்கூடியதாக இருந்திச்சிது.
யமுனா, விகடகவி, கறுப்பியுக்கு நீங்கள் விரும்பியபடியான வாழ்க்கை அமைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்..! தனிப்பட கறுப்பியை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!
வெண்ணிலா:
யாழில யார் காதலைப்பற்றி அதிக எண்ணிக்கையில கவிதை எழுதி இருக்கிறீனம் எண்டு கேட்டால் அதற்கு பதிலாக வெண்ணிலாவை சொல்லலாம். ஏன் கடிதம்போட்டாய்... ஏன் என்னை அப்பிடி ஒருமாதிரி முறைச்சுப்பார்த்தாய் எண்டு கேட்டு ஒரு காதல் கவிதை. பிறகு ஏன் கடிதம் போடாமல் இருக்கிறாய்... எண்டு கேட்டு இன்னொரு காதல் கவிதை.
வெண்ணிலா காதல்பற்றி கவிதையில கதைக்காத விசயம் இல்லை எண்டு சொல்லலாம். சிலது வாசிக்க சிரிப்பாய் இருந்தாலும்.. வெண்ணிலாவின் கவிதையிண்ட பாணி, அதை சொல்லிற முறை, கையாளுற சொல்லுகள், முடிச்சுப்போடுற சிந்தனைகள் எண்டு சொன்னால் பொறுமையாக நல்ல மனநிலையுடன் குந்தி இருந்து வாசிப்பவர்களுக்கு அது நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.
வெண்ணிலாவின் ஒரு சகோதரி சிறீ லங்கா விமானக்குண்டுவீச்சில முன்பு மரணம் அடைந்ததாக யாழில ஒரு இடத்தில அவ எழுதி இருந்ததை வாசிக்க வருத்தமாக இருந்திச்சிது. தனிப்பட வெண்ணிலா பற்றி அதிகம் தெரியாது. வெண்ணிலா தான் விரும்புவதுபோன்ற பிரியமான நல்ல ஒரு துணையுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!
ரசிகை:
யாழில எனக்கு முதன்முதலாக தனிமடல் மூலம் எனது கவிதைபற்றிய விமர்சனம் சொல்லி எனது எழுத்துக்களை ஊக்குவிச்ச ஆளாக ரசிகையை சொல்லலாம். ரசிகை புதுமைகளை விரும்புபவர், முற்போக்கான சிந்தனைகளை ஆதரிப்பவர் எண்டு நினைக்கிறன். நான் ஆண்களும் ஒரு காலத்தில குழந்தைகள் பெற்றுக்கொள்ள விஞ்ஞான வசதிகள் கிடைக்கும் என்றுகூறி ஆரம்பிச்ச ஒரு கருத்தாடலை பலர் நையாண்டி செய்தவேளையில நான் மனம்கோணிப்போய் இருந்தவேளையில எனது சிந்தனையை ஆதரிச்சு ஒரு ஆக்கபூர்வமான கருத்து பதிந்து இருந்தா. நான் யாழில இணைவதற்கு முன்னர் நிறையவிவாதங்கள் எல்லாம் செய்து இருக்கிறா. இப்போது வருவது குறைந்துவிட்டிது.
ரசிகையின் வாழ்க்கைத்துணை மணிவாசகன் ஒரு சிறந்த கவிஞர். தனிப்பட இவர்களை எனக்கு தெரியாது. ஆனாலும் விரைவில இவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கலாம் எண்டு நினைக்கிறன். மணிவாசகனும் ரசிகையும் சிவபெருமானும், உமாதேவியாருமாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!
தூயா:
யாழில இணைஞ்ச ஆரம்பத்தில நான் தூயாவுடன் அதிக கருத்தாடல்களில கலந்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். எங்கட சுயசரிதையை யாழ் நாற்சந்தியியில சொல்லிற ஏதோ ஒரு விளையாட்டுக்கு தூயா என்னை முதலாவதாக அழைத்து இருந்தா. யாழில பெண்களிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டபோது நான் எல்லாரிடமும்போய் கெஞ்சிக்கூத்தாடி சமரசம் செய்யவேண்டிய ஒருநிலை ஏற்பட்டிச்சிது. தூயாவுக்கு வரக்கூடிய கோபத்தை நான் அப்போது அறிஞ்சு இருந்தன்.
எனக்கு யாழில இருக்கும் தூயாவைவிட வலைப்பூவில இருக்கிற தூயாவை அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லலாம். நான் தூயாவின் வலைப்பூவில பின்னூட்டல்கள் போடுவது இல்லை எண்டாலும் இடைக்கிடை போய் பார்க்கிறது என்ன நடக்கிது எண்டு. கந்தப்பு மாதிரி தூயாவிண்ட தமிழ்பற்றும், தாயகப்போராட்டம் மீது இருக்கிற நம்பிக்கை, ஆதரவும் பாராட்டுக்குரியது.
தூயாவில எனக்கு பிடிச்ச விசயம் எண்டால் சமையல்தான். தூயாவுடன் தற்போது சேர்ந்து இருக்கும் பெற்றோர், அண்ணாமார் கொடுத்து வைத்தவர்கள். தூயாவின் வருங்கால துணையும், குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள் (கோவிக்க்கூடாது கனக்க கதைக்கிறன் எண்டு). ஏன் எண்டால் வீட்டில இருந்து Restaurant மாதிரி விதம், விதமாக சாப்பிடலாம். தூயாபற்றி தனிப்பட அதிகம் தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!
அனிதா:
நான் யாழில யாராவது எழுதுற ஒவ்வொரு கருத்தையும் அவர்களிண்ட Profile க்குப்போய் அடிக்கடி வாசிச்சு இருக்கிறன் எண்டால் அது அனிதாவிண்ட கருத்துக்களாகத்தான் இருக்கும். தமிழில எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அனிதா கஸ்டப்பட்டு ரெண்டு வசனத்தில எழுதுற கருத்க்களில எனக்கு ஈர்ப்பு அதிகம்.
பிரியசகி மூலம்தான் எனக்கு அனிதா அறிமுகம் ஆகினா. ஆரம்பத்தில “ஒண்டு சொன்னால் நீங்கள் கோவிக்கக்கூடாது சொல்லவோ” எண்டு கேட்டா. நானும் “என்ன சொல்லுங்கோ” எண்டு கேட்க தான் எனது ரசிகையாம். நான் யாழில எழுதுறதுகள் எல்லாத்தையும் வாசிப்பாவாம் எண்டு சொன்னா. பிறகு நான் சொன்னன் “நானும் ஒருவிசயம் சொல்லுவன் நீங்கள் கோவிக்கமாட்டீங்கள் தானே” எண்டு. “என்ன” எண்டு கேட்டா.. நானும் உங்களைமாதிரித்தான் நீங்கள் எழுதுற கருத்துக்களை எல்லாம் உங்கட Profileக்கு வந்து ஒண்டுவிடாமல் வாசிப்பன் எண்டு சொன்னன். அவவுக்கு அதைக்கேட்க பெரிய சிரிப்பு.
அனிதாவில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. தான் காலம்பற எழும்பினால் இரவுதான் படுக்கிறது இடையில தூங்குவது கிடையாது எண்டு சொல்லுவா. நான் எண்டால் ஒருநாளைக்கு பத்துத்தரம் படுக்கிறதும் எழும்பிறதும். சின்னனில இருந்து இப்பிடி பழக்கமா போயிட்டிது. தூங்கிவழியுறது கெட்டபழக்கம்தான் என்னசெய்யுறது?
அனிதாவில இருக்கிற எனக்கு பிடிக்காத விசயம் என்ன எண்டால் கோவம் எண்டு சொல்லலாம். தனக்கு சின்னக்கோபங்கள் வராது. வந்தால் எல்லாம் பெரிய கோவமாய்த்தான் வரும் எண்டு சொல்லுவா. அனிதா வளமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!
ரமா:
ரமாவோட கருத்தாடல் செய்து ஒரே ஒரு இடம்தான் நினைவில இருக்கிது. நான் முன்பு ஒருதடவை வாசணைத்திரவியம் வாங்கேக்க குடை, இதர இத்தியாதிகள் இலவசமாக கிடைச்சது பற்றி சொல்லி இருந்தன். ரமா யாழ் காலக்கண்ணாடியை செய்யேக்க அதுபற்றி ஏதோ சொல்லி இருந்தா. பிறகு அதுபற்றி ஏதோ கிறுக்கி இருந்தோம். ரமா முன்பு யாழுக்கு அடிக்கடி வருபவர் எண்டு நினைக்கிறன். நான் இணைஞ்சபிறகு வருவது குறைஞ்சு போட்டிது. ரமா எழுதிய கவிதைகளை வாசித்து இருக்கிறன். அதில ஒன்று அப்பா பற்றினதாக இருக்கவேணும்.
ரமா வளமுடன் வாழ வாழ்த்துகள்!
இன்னிசை:
நான் கலைஞன் பிறகு முரளி எண்டு பெயரை மாத்தினாப்பிறகும் என்னை மாப்பு இல்லாட்டிக்கு மாப்பிளை எண்டுகூப்பிடுற ஆக்களில ஒரு ஆள் இன்னிசை. இன்னிசை இணைஞ்ச ஆரம்பத்தில இவ ஆணா பெண்ணா எண்டு எனக்கு தெரிய இல்லை. நான் ஆண் எண்டு நினைச்சு இருந்தன். இதனால சும்மா பகிடிக்கு இன்னிசைபாடிவரும் எண்டுற அந்தபிரபலமான பாடலை (விஜய் நடிச்ச படம் பெயர் மறந்துபோச்சி) முழுதுமாக எழுதி இருந்தன். பிறகு அதை நினைக்க சிரிப்பாய் இருந்திச்சிது.
இன்னிசையுடன் நிறைய கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். நிறைய நகைச்சுவைகளை பரிமாறி இருக்கிறன். இப்ப எல்லாம் மறந்துபோச்சிது. இன்னிசை தனது துணையுடன், குடும்பத்தினருடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!
பிரியசகி:
நான் இப்பவும் கூட ஜோதிகாவிண்ட பாடல்களை பார்க்கும்போது உடனடியாக மனதில வாற ஆள் பிரியசகிதான். ஆரம்பத்தில அக்கா அக்கா எண்டு கூப்பிட்டது. பிரியசகி “என்ன எல்லாரையும் பெயர் சொல்லி கூப்பிடுறீங்கள் என்னை மாத்திரம் அக்கா எண்டு கூப்பிடுறீங்கள்?” எண்டு கேட்டு இருந்தா. நிறைய நகைச்சுவைகளை பிரியசகியுடன் யாழில பரிமாறி இருக்கிறன்.
முந்தி செல்வன் எண்டு ஒரு தொடர் எழுதவெளிக்கிட்டது. பிறகு சில பிரச்சனைகள் காரணமாக அதை கைவிட்டுவிட்டன். தானும் தனது அம்மாவும் சேர்ந்து நான் எழுதுகின்ற செல்வன் தொடரை ஆவலுடன் விரும்பி வாசிப்பம் எண்டு பிரியசகி சொல்லுவா. நலமோடு வாழுதல் பகுதியிலதான் பிரியசகி எழுதுவது அதிகம் எண்டு நினைக்கிறன்.
பிரியசகியில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் ஓடி ஓடி வேலை செய்து உழைக்கிறது. கஸ்டப்பட்டு உழைக்கிற காசை வீணாக பொருட்கள் வாங்கி செலவளிக்காது கவனமாக சேமிச்சு வையுங்கோ எண்டு முன்பு ஒருமுறை பிரியசகியுக்கு சொல்லி இருந்தன். பிரியசகியுக்கு விஷ்ணு எண்டு உண்மையான கூடப்பிறந்த அண்ணா இருப்பதாய் அறிஞ்சன். அவருடன் எனக்கு பழக்கம் இல்லை. நான் யாழில இணைஞ்ச காலத்தில அவர் கருத்து எழுதுவது குறைந்துவிட்டது எண்டு நினைக்கிறன்.
பிரியசகி, அம்மா, அப்பா, அண்ணா குடும்பத்தினர் நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!
சண்முகி:
இடைக்கிடை என்னுடன் கருத்தாடலில் பங்குபற்றி இருக்கிறா. இப்ப மறந்துபோச்சிது. கடைசியாக அரவிந்தன் வைத்த போட்டிகளில கலந்து இருந்தா. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!
சினேகிதி:
பெண்கள் பகுதியில யாழில தமிழில நிறைய செப்படி வித்தைகள் காட்டுற ஆள் எண்டால் தமிழ்தங்கைக்கு அடுத்ததாய் சினேகிதியை சொல்லலாம். சினேகிதிமாதிரி யாழில வேற ஒருவரும் மினக்கட்டு ஆழமான கட்டுரைகள் எழுதுவது இல்லை எண்டு நினைக்கிறன். நான் முன்பு செல்வன் எண்டு தொடர்கதை எழுதேக்க நிறைய கூத்துகள் எல்லாம் ஆடினம். அதன் ஒருபகுதியாக செல்வன் தொடரில நடிக்கிறதுக்கு ஆக்கள் தேவை எண்டு கேட்டு ஒரு கருத்தாடல் செய்தம். அதில நான் சும்மா பகிடியாய் ஒரு விளம்பரம் செய்துபோட்டது செல்வன் தொடரிற்கு விளம்பர அனுசரணையை இவர்கள் தருகின்றார்கள் எண்டு. அதில சினேகிதியிண்ட ஒரு விளம்பரத்தையும் விளையாட்டாய் போட்டுவிட்டன்.
ஆனால்... அது உண்மையில சினேகிதியை தனிப்பட பாதித்தது எனக்கு தெரியாது. என்னுடன் தொடர்புகொண்டபோது சினேகிதி கேட்ட முதலாவது கேள்வி உங்களிட்ட ஒரு விசயம் கேட்க வேணும் எண்டு... என்ன சொல்லுங்கோ எண்டு சொல்ல... ஏன் அப்பிடி விளம்பரம் போட்டனீங்கள். எண்டு கேட்டா. தனக்கு அதனால வந்த பிரச்சனைகளை சொன்னா. அதைக்கேட்க எனக்கு தர்மசங்கடமாய் போய்விட்டிது. கோவிச்சுக்காதிங்கோ. மன்னிச்சுக்கொள்ளுங்கோ எண்டு சொன்னன். சரி பரவாயில்லை எண்டு சொல்லி எனக்கு பெருந்தன்மையோட பாவமன்னிப்பு தந்துபோட்டா.
சினேகிதியை ஆரம்பத்தில எனக்கு தெரிந்து இருகாட்டியும் அவ இடைக்கிடை வந்து அப்போது என்னுடன் நகைச்சுவையாக கதைச்சு இருக்கிறா. அவவிண்ட கையெழுத்தில முந்தி பூனைக்குட்டி ஏதோ படம் இருந்திச்சிது எண்டு நினைக்கிறன். யாழில இருக்கிற ஒவ்வொருவரும் நிஜமான முகங்களுடன் இன்னொரு வாழ்க்கையில இருந்தாலும்... முகம் அறியாமல் கருத்தாடல் செய்யேக்க அவர்களிண்ட கையெழுத்து, அவாட்டர் படம், இதுகள் எங்கட மனதில ஒரு கற்பனையான பாத்திரத்தை உருவாக்கி இருக்கும்.
சினேகிதியில எனக்கு பிடிச்ச விசயம் எண்டு சொன்னால்.. ஒழுங்காய் குழப்படி செய்யாமல் படிக்கிறது.. வேலை செய்யுறது.. எண்டு சொல்லலாம். பிடிகாத விசயம் எண்டு சொன்னால்.... இப்ப அண்மைக்காலமாக எழுதுறது எல்லாம் உளவியல் பற்றி இருக்கிது. அதுகளை வாசிக்க என்னமோ மாதிரி இருக்கிது. நான் ஊரில இருந்தபோது சுமார் மூன்று ஆண்டுகள் மிகவும் தீவிரமாக பல உளவியல் புத்தங்கள் படிச்சது. அதுபற்றி பல விசயங்களை சிந்திச்சது. ஆனால்.. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு நான் சும்மா தேவையில்லாமல் பல விசயங்களை சிறுவயதில ஆராய்ஞ்சு என்னையே குழப்பிபோட்டனோ எண்டு யோசிப்பது உண்டு. இந்தவகையில நல்லவிசயமாக இருந்தாலும் எனக்கு உளவியல் கல்வி எண்டால் பிடிகாது.
சினேகிதி சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!
வளரும்..
Edited by முரளி, 15 December 2008 - 04:39 AM.


















