Jump to content

மன்னவா மாலை கொடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவா மாலை கொடு

வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வரவும் “ஓ இப்ப பாட்டும் கூத்தும் என்ன தேவையா இருக்கு? கொஞ்சநாளா நானும் பார்க்கிறன் என்னவோ எனக்கு இதொண்டும் சரியாத் தெரியல்ல. அப்பா இருந்த காலத்தில எத்தனை மதிப்பும் மரியாதையுமா இருந்த குடும்பம். ஊரில எங்கட குடும்பத்தை புகழாதவர் இல்லை. இப்ப அதெல்லாம் பழங்கதையாப் போச்சு. அந்த மகராசா மதிப்போட போய்ச் சேந்திற்றேர்” என்றபடி மூக்கைச் சிந்தி சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் காயத்திரியின் அம்மா பாக்கியம்.

“ஏனம்மா இப்ப என்ன நடந்திற்றுதெண்டு இப்படி கவலைப்படுறீங்க?”

“இன்னும் என்ன நடக்க வேணும். நேற்று மனோகரிய சந்திச்சனான் அப்பதான் சில செய்திகள் காதில விழுந்தது. இருந்தாலும் என் மகள் காயத்திரி அப்படி ஒன்றும் செய்யமாட்டாள் எண்டு சூடாப் பதில் சொல்லிப் போட்டன்.”

“அம்மா நீங்க வாழ்ந்த காலம் வேறு இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு. நான் என்ன உங்களுக்குச் சொல்லாமலோ அல்லது உங்கட சம்மதம் கேட்காமலோ ஏதாவது செய்யப் போறன்.”

“அதுதான் ஊரெல்லாம் சொல்லுது. நீ வேற என்ன சொல்லப் போறாய்”என்றபடி பாக்கியம் சமையலறையை நோக்கிச் செல்லவும் இந்த நிலையில் அம்மாவுடன் எதிர்த்துக் கதைப்பதோ விளக்கம் கூறுவதோ எவ்வித பயனையும் ஏற்படுத்தாது என்று உணர்ந்த காயத்திரி “ பிரியா நாங்க கடைக்குப் போகலாம் வாங்க” என்ற கூப்பிடவும் துள்ளலுடன் தாயின் கையைப் பிடித்தபடி “அம்மம்மா போட்டுவாறன்” என்று தன் மழலை மொழியில் கூறினாள்.

“தாயும் மகளும் குளிருக்க திரியாம கெதியா வாங்கோ” என்று அத்தாயுள்ளம் விடை கொடுத்தது.

என்னதான் காயத்திரியை கடிந்து பேசினாலும் பாக்கியத்தால் முழுவதுமாக தூக்கி எறிந்து பேச மனம் இடம் கொடுக்கவில்லை.

இருபது வயதிலேயே எத்தனையோ இனிய கனவுகளுடன் இல்வாழ்வில் அடி எடுத்து வைத்தவள் காயத்திரி. பெற்றவருக்கு செல்லப் புதல்வியாக அண்ணனுக்கு அருமைத் தங்கையாக பணம் பதவி பொருத்தம் எல்லாம் பார்த்து செய்து வைக்கப்பட்ட திருமண பந்தத்தை ஒரு வருடத்திலேயே பறிகொடுத்து வாழ்ந்ததற்கான சாட்சியாக கையில் பிரியாவுடன் கைம்பெண்ணாக நின்ற காயத்திரியைப் பார்த்து பெற்றவரும் உடன் பிறந்தவனும் துடிதுடித்துப் போயினர். காயத்திரியும் உலகம் புரியாத அந்த இளம் வயதிலேயே உள்ளம் உடைந்து வீட்டுக்குள் முடங்கிக் கொண்டாள். பெற்றவரே கதியாக பிரியாவே உலகமாக வாழத் தொடங்கியவளை விதி வேறு விதமாக இன்று மாற்றிவிட்டது நிஜம்.

மகளின் நிலைகண்டு மனம் உடைந்து உடல் தளர்ந்து மறைந்துவிட்ட தந்தையின் இழப்பும் நாட்டுநிலை காரணமாக அண்ணா தாய்மண்ணைத் துறந்து கனடா வந்ததும் தாங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு புலம் பெயர்ந்து அண்ணாவின் உதவியுடன் கனடா வந்ததும் இன்று நினைக்கும் போதும் ஏதோ கனவில் நிகழ்ந்தது போல இருந்தது.

கனடா வந்த புதிதில் காயத்திரியும் நாலு சுவருக்குள் முடங்கித்தான் கிடந்தாள். காயத்திரியின் இளமையும் தனிமையும் அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் வேதனையாக இருக்க ஒருநாள் அண்ணா அம்மாவிடம் “அம்மா காயத்திரி இப்பிடியே வீட்டுக்குள்ள இருக்கிறதைவிட ஏதாவது வேலை கிடைத்தால் போகட்டுமே அவளுக்கும் பொழுது போக்காக இருக்கும்” என்றான். அம்மா தயக்கத்துடன் “ஏன் தம்பி காயத்திரியை வேலைக்கு விட்டால் மற்றவையள் ஏதும் சொல்லமாட்டினமோ?” “அம்மா எங்களுக்கு காயத்திரியின் சந்தோசம்தான் முக்கியம். நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்” என்றவன் அன்று முதல் காயத்திரிக்கு வேலை தேடத் தொடங்கினான்.

தான் வேலைக்குப் போகப்போகிறோம் என்று அறிந்ததும் காயத்திரியின் மனதுக்குள் குழப்பமாகவே இருந்தது. “எனக்குத்தான் வாழ்க்கையே முடிந்து விட்டதே இனிஎன்ன பிரியாவை வளர்த்து ஆளாக்கினால் போதும்” என்றுதான் அவளது சிந்தனை ஓடியது. இருந்தும் உள்ளுக்குள் இன்னொருமனம் “எத்தனை நாளைக்கு அம்மாவும் அண்ணாவும் அரணாக இருப்பார்கள். நான் ஏன் சுயமாக வாழப் பழகக்கூடாது”.என்று இன்னொரு கோணத்தில் சிந்திக்கவும் செய்தாள். முடிவில் காயத்திரி வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

ஆரம்பத்தில் அவள் யாருடனும் பழகாமல் தான் ஏதோ தீண்டத்தகாதவள் போல ஒதுங்கி ஒதுங்கியே இருந்தாள். காலப்போக்கில் அவளும் அங்கு வேலை செய்பவர்களுடன் மெல்ல மெல்ல பழகத் தொடங்கினாள். இருந்தும் யாருடனும் தேவையில்லாமல் பேசமாட்டாள். இவளது அமைதியும் அடக்கமும் வேலைசெய்யுமிடத்திலும் காயத்திரிக்கு மதிப்பைக் கொடுத்தது. காயத்திரியுடன் வேலை செய்யும் ஸ்ரீபன் அவளுடன் அன்பாகப் பழகத் தொடங்கினான். முதலில் நட்பாக ஆரம்பித்த பழக்கம் காலப்போக்கில் ஒரு அன்புப் பிணைப்பாக வளர ஆரம்பித்தது. இருந்தும் காயத்திரி தன்னைச் சுற்றி ஒரு வேலியிட்டு பண்புடனேயே பழகி வந்தாள். ஒரு நாள் ஸ்ரீபன் “காயத்திரி நான் உம்மை திருமணம் செய்ய விரும்கிறன் உமது விருப்பத்தை அறியலாமா?” என்று நேரிடையாகவே கேட்டுவிட்டான். காயத்திரிக்குள் குழப்பம். என்னைப்பற்றி எல்லா விபரமும் தெரிந்துதான் கேட்கிறானோ அல்லது தன்னை ஒரு கன்னிப் பெண்ணாக கற்பனை செய்துதான் கேட்கிறானோ என்று அவளுக்குள் படபடப்பாக இருந்தது. அவளது முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் ஓடுவதைக்கண்ட ஸ்ரீபன் “என்ன காயத்திரி நல்லா யோசிக்கிறீர்” என்று கேட்கவும் “இல்லை உங்களுக்கு என்னைப்பற்றி எந்தளவு தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள்தான் ஆனால் எனது கடந்தகாலத்தைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை” என்றாள். “காயத்திரி எனக்கு உம்மைப்பற்றி விபரங்கள் ஓரளவு தெரியும் நான் உம்மில் இரக்கப்பட்டோ அல்லது பெரிய தியாகம்செய்வதாக நினைத்தோ உம்மைத் திருமணம்செய்ய நினைக்கஇல்லை. எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என்னுடன் அன்பாக ஆதரவாக நட்பாக இருக்க வேணும். நல்ல அமைதியான பண்பான உமது குணமும் பழக்கவழக்கங்களும் எனக்கு உம்மில் விருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. நான் உம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. நீர் உமது முடிவை ஆறுதலாக யோசித்து சொல்லும். நீர் எனக்கு மனைவியாக வந்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன்.” ஏன்றபடி விடைபெற்றுச் சென்றுவிட்டான்.

அதன் பின் எத்தனை நாட்கள் அவளது இதயத்துக்குள் கேள்விகளும் பதில்களுமாய் எத்தனையோ விடைகாண முடியாத விவாதங்கள். முடிவில் தன் அருமை மகள் பிரியாவை பிரியமுடியாது என்று காரணம் கற்பித்ததும் ஸ்ரீபன் “காயத்திரி எப்ப உம்மை ஏற்பதாக முடிவு செய்தேனோ அப்பவே பிரியாவையும் என் மகளாகவே ஏற்றுக்கொள்வதாக தீர்மானித்து விட்டேன். உமக்கு விருப்பமென்றால் நான் பிரியாவிற்கு ஒரு நல்ல தந்தையாக இருப்பன்.” ஏன்றான். முடிவில் கற்கனைகளில் மட்டும் ஜந்து வருடமாக வாழ்ந்து முடித்தவள் கனவுகளில் வாழத் தொடங்கி விட்டாள். அவளது வயதொத்த பெண்கள் கணவனுடனும் குழந்தைகளுடனும் செல்வதைக் காணும்போது அவளது மனதிலும் மாற்றங்கள் ஏற்படத்தான்; செய்தது. பெண்மை மென்மையானதுதான் ஆனாலும் உறுதியானது. இன்று எப்படியாவது அண்ணாவிடம் பேசிவிடவேண்டும் என்ற முடிவடன் அவன் ஓய்வாக இருந்த நேரம் பார்த்து பக்கத்தில் போய் “அண்ணா நான் உங்களோட கொஞ்சநேரம் கதைக்க வேணும்” என்றாள் தயக்கத்துடன். பீடிகை பலமாக இருக்கவே அண்ணா வியப்புடன் “என்ன காயத்திரி சொல்லு” என்றான். “அண்ணா என்னோட வேலை செய்யிற ஸ்ரீபனை உங்களுக்குத் தெரியும்தானே. அவர் என்னை திருமணம் செய்ய விரும்புறார். அதுதான் உங்கட முடிவையும் தெரிந்தபின் முடிவெடுக்கலாம் என்று” இழுத்தபடி அண்ணாவின் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

அண்ணாவின் முகத்தில் சற்று நேரச் சஞ்சலம். திடீரென்று காயத்திரியின் வேண்டுதலைக் கேட்டு அதிர்ந்தாலும் முகத்தில் அவனையும் அறியாமல் ஒரு பிரகாசம். சுமையலறையில் நின்றபடி இவர்களது உரையாடலை அரைகுறையாகக் கேட்ட அம்மா” என்ன அண்ணனும் தற்கையும் யாருக்கு திருமணம் பேசுறீங்க” என்றவள் தொடர்ந்து “இப்ப கலிகாலம். எங்கட காலம் எவ்வளவு கடடுப்பாடா ஒழுக்கமா வாழ்ந்த காலம். இப்ப கனடாவுக்கு வந்து எல்லாம் தலைகீழாக நடக்குது.” என்றாள் சூடாக. அண்ணாவுக்கு அம்மாவின் வார்த்தைகள் ஆத்திரத்ரைக் கிளப்பியது.

“அம்மா நீங்க ஏன் இப்பிடி கதைக்கிறீங்க. இப்ப என்ன காயத்திரி உங்களுக்கோ எனக்கோ தெரியாமல் ஒன்றும் செய்யஇல்லையே. எங்களது சம்மதத்தைக் கேட்டுத்தானே முடிவு எடுக்க இருக்கிறாள். இந்த ஜந்து வருடமாக அவளைப் பார்த்து நாங்கள் வேதனைப்படாத நாளே கிடையாது. இழந்து போனது போனதுதான். அதற்காக வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்க வேண்டுமா? இனி எதிர்காலத்தில் பிரியாவும் காயத்திரியும் சந்தோசமாக இருப்பதுதானே அம்மா முக்கியம்.

“அப்பிடியெண்டால் எங்கட சமூகம் எங்களை கேலி செய்யாதோ?

“அம்மா சமூகம் சாதி மதம் என்ற வேலிக்குள்ள இருந்து இப்ப எத்தனை பரந்த சமூகத்தில நாங்க வாழுறம். இங்கயும் நாம் சமூகத்தை சாட்டாக வைத்து இருட்டில உழலுறது சரியில்லை அம்மா.”

மகனின் யதார்த்தமான பேச்சு பாக்கியத்தின் பிடிவாதத்தை தளர்த்தியது.

“அப்ப பொடியனைப் பற்றி விசாரிக்க வேண்டாமோ?” என்ற அம்மாவின் குரல் சற்றுத் தளர்ந்திருந்தது.

“விசாரிக்கத்தான் வேண்டும். ஆனால் முக்கியமா காயத்திரி இப்பிடி ஒரு முடிவு எடுக்கமுதல் நல்லா யோசித்துத்தான் முடிவெடுத்திருப்பாள். நானும் நாளைக்கு முதல் வேலையா ஸ்ரீபனுடன் கதைக்கப் போறன்”

மகனின் வார்த்தைகளில் தொனித்த தீர்மானமும் தீர்க்கமான சிந்தனையும் கிராமத்து மண்ணில் வாழ்ந்த அந்தத் தாயின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த

“என்னமோ காயத்திரி இப்படி மொட்டைமரமாக நிற்கிறாளே என்று நான் மனதுருகி இறைவனை வேண்டினது வீண்போக இல்லை.” என்று மலர்ச்சியடன் காயத்திரியை நோக்கினாள்.

காயத்திரியின் முகத்திலும் நாணத்தின் ரேகைகள் மெல்லிய இழையாக இதழ்களில் புன்முறுவலாக வெளிப்பட்டது.

“பிரியாக் குட்டி” என்று மாமா கூப்பிட்ட குரல் கேட்டு ஓடிவந்த பிரியாவிடம்

“பிரியா இத்தனை நாளும் அப்பா எங்கே அப்பா எப்ப வருவார் என்று அடிக்கடி கேட்பியே கெதியில பிரியாவின் அப்பா வரப்போறார்” என்று சொல்லவும் பிரியா முகம் மலர காயத்திரியிடம் ஓடிச்சென்று “அம்மா அப்பா வரப் போறாரா” என்று விழிகள் வியப்பினால் விரிய அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அக் குழந்தையின் அடிமனதில் புதைந்திருந்த இத்தனைநாள் ஏக்கமும் வெளிப்பட அங்கிருந்த மூவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அலை மோதியது.

Link to comment
Share on other sites

கண்மணி அக்கா கதை மிகவும் நன்றாக இருந்தது இறுதிவரை சுவாரசியமாக கதையை நகர்த்தி சென்ற விதம் அழகு :lol: எனக்கு உங்கள் கதைகளிள் நீங்கள் நகர்த்தி செல்லும் விதம் தான் பிடிக்கும் அலுப்பிலாம கொண்டு போவீங்க வாழ்த்துக்கள் கண்மணி அக்கா :lol: ... "மாலை கொடுத்த மன்னவனை" பாராட்ட தான் வேண்டும் ஆனா மாலை கொடுத்து விட்டு ஏமாற்றிவிட்டு போகும் மன்னவர்களிற்கும் குறை இல்லை கண்மணி அக்கா என்ன நான் சொல்லுறது சரி தானே :lol: ..அடுத்த கதையில் சந்திக்கிறேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையைப் படித்துச் சுவைத்துப் பாராட்டிய கலைஞன் யமுனா இருவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயத்தின் முற்போக்காக எழுதப்பட்ட கதை அழகு . வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி! உங்களது கற்பனை வளம் வாழ்க! சில சமயம் உண்மைகள் கற்பனைகளைவிடவும் சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்தவைதான். ஸ்ரீபன் போன்ற உத்தமருடன் நான் நேரிலேயே பழகியிருக்கிறேன். வாழ்த்துகள் கண்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் எழுத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் அனைவருக்கும் நன்றிகள்.

படித்துப் பாராட்டி கருத்துத் தெரிவித்த கறுப்பி சுவி விகடகவி அனைவருக்கும்

நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.