Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது

[06 - January - 2008]

* நெடுமாறன் பேட்டி

`உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு;

கேள்வி: இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் பொற்காலம் என்று எந்தக் காலத்தை நீங்கள் கருதுகின்றீர்கள்?

இந்திய அயலுறவுக் கொள்கை என்பது ஜவகர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றபோது அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டம் என்பது உலகம் இரு வேறு முகாம்களாகப் பிரிந்து கிடந்த காலகட்டம். சோவியத்ஒன்றிய முகாம் ஒன்று, அமெரிக்க ஆதரவு முகாம் மற்றொன்று. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னால் இருவேறு முகாம்கள் உலகத்தில் அன்றைக்குத் தோன்யிருந்தன. இரண்டு முகாம்களுக்கிடையே முட்டலும் மோதலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைகளாக இருந்த பல்வேறு ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்களின் சுதந்திரத்திற்காகப் போராடி விடுதலை பெற்றுவந்த காலமும் அதுதான்.

இந்தச் சூழ்நிலையில் புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் நாடுகளை அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. அந்த இரு வல்லரசுகளின் போட்டி என்பது உலகம் பூராவும் வியாபித்துப் பரவியிருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் நேட்டோ, சீட்டோ என்ற பெயரில் சோவியத் நாட்டிற்கு எதிராகப் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆங்காங்கே தன் முகாமை விரிவுபடுத்திக் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் ஜவகர்லால் நேரு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை வடிவமைத்ததோடு மட்டுமல்ல புதிதாக விடுதலை பெற்ற இளம் நாடுகளுக்கான ஒரு வழிகாட்டும் கொள்கையாகவும் அதை உருவாக்கினார். என்பதுதான் முக்கியமானது. புதிதாக விடுதலை பெற்ற ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ஒருங்கினைத்து அணிசேரா நாடுகள் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இரு வேறு முகாம்களிலும் சாராத அணிசேரா நாடுகள் முகாம் உருவாக்கினார். அதுதான் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது.

இது இரண்டு விதத்தில் உதவி செய்தது. அதில் ஒன்று, மூன்றாவது உலகப்போர் மூளுவதைத் தடுத்து நிறுத்தியது இந்த மூன்றாவது முகாமே. இரண்டாவது, புதிதாகச் சுதந்திரம் பெற்ற இளம் நாடுகள் பொருளாதார ரீதியில், இராணுவ ரீதியில் அமெரிக்காவிடமும் சோவியத் ஒன்றியத்திடமும் உதவி பெறக்கூடிய நிலையில் இருந்தன. அதன் காரணமாக அந்த நாடுகளிடம் அடிமையாகிவிட்டன என்று கூறமுடியாது.

தங்கள் நலனுக்கு ஏற்ற வகையில் சோவியத் ஒன்றியத்துடன் சேர்ந்து சில உதவிகளைப் பெறுவது என்ற முறையிலே தங்களுடைய சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் இழந்துவிடாமல் அதே நேரத்தில் மற்ற முகாம்களுடனும் உறவாடினார்கள். இந்தியா கூட சோவியத் ஒன்றியத்தின் உதவியில் சில பெரும் தொழில்களை இந்தியாவில் தொடங்கிற்று. அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளின் உதவியுடன் சில தொழில்களைத் துவங்கிற்று. ஆனால், இராணுவ ரீதியிலே எந்த நாட்டுடனும் உடன்பாடு செய்து கொள்வதில்லை என்பதிலே இந்தியா தெளிவாக இருந்தது. அதை அணிசேரா நாடுகளும் பின்பற்றின. இதன் விளைவாக மூன்றாவது உலகப்போர் மூளுவது அறவே தவிர்க்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் கொரியா போர் மூண்ட நேரத்தில் சுயஸ் கால்வாய் சம்பந்தமாக ஒரு போர் வெடித்தபோது அது உலகப்போராக மாறியிருக்கும். ஆனால், அதைத் தடுத்ததிலே இந்தியா பெரும்பங்கு வகித்தது. அணிசேரா நாடுகளும் அதில் பங்கு வகித்தன என்பது முக்கியமானது. ஆக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பொற்காலம் என்பது ஜவகர்லால் நேருவின் காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் போராடியபோது அவர்களுக்காக நேரு குரல் கொடுத்தார். 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக அவர் இடைக்கால அரசின் பிரதமராக இருந்தபோது இந்தோனேசியா டச்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு சுகர்ணோ தலைமையில் போராடியபோது டில்லியில் முதலாவது ஆசிய மாநாட்டை நேரு கூட்டினார். அன்று இந்தியாவே முழுமையாக சுதந்திரம் பெற்றுவிடவில்லை. அதற்கு ஓராண்டு கழித்துதான் இந்தியா முழுமையான சுதந்திர நாடாகிறது. ஆனாலும் ஒரு இடைக்கால அரசின் பிரதமராக இருக்கும்போதே இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்காக ஆசிய நாடுகளையெல்லாம் கூட்டி `டச்சு ஏகாதிபத்தியமே வெளியேறு' என்று தீர்மானம் போட்டவர் நேரு. தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு மற்ற கறுப்பின மக்களை ஒடுக்கியபோது தென்னாபிரிக்காவை உலக நாடுகள் புறக்கணிப்புச் செய்யவேண்டும் என்பதற்காக ஐ.நா. பேரவையில் தீர்மானம் கொண்டுவரச் செய்து நிறைவேற்றி,தென்னாபிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி வைக்கும் கொள்கையைக் கடைபிடித்து நேரு வெற்றியும் பெற்றார்.

சுயஸ் கால்வாய் பிரச்சினையில் எகிப்தில் மன்னராட்சியை ஒழித்து நாசர் தலைமையில் புதியதாகத் தோன்றி இருந்த ஒரு ஜனநாயக அரசை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்து நசுக்க முயற்சித்தபோது,நேரு அணிசேராத நாடுகளின் உதவியுடன் அதைத் தடுத்து நிறுத்தினார். ஆக, உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் எங்கெங்கே சுதந்திரம் பெறப் போராடினார்களோ அவர்களுக்கெல்லாம் நேரு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்தார் என்பதுதான் முக்கியமானது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிநாதமாகவும் அது இருந்தது. உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டும். அதற்கு இந்தியா உதவவேண்டுமென்பதும் அவரது கொள்கையாக இருந்தது. ஆக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அம்சங்களை எல்லாம் நாம் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் கூட நேருவின் காலத்தில் வகுக்கப்பட்ட இந்த வெளிநாட்டுக் கொள்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. அதனால்தான் அதன் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினாலும்,ஜனதாக் கட்சி ஆட்சியினாலும் பாரதீய ஜனதா ஆட்சியாயிருந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து எவராலும் விலகிச் செல்ல முற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாமே ஒழிய அடிப்படையில் அணிசேராக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கையிலிருந்து எந்தக் கட்சியும் விலகிச் செல்ல முடியவில்லை. ஆக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெளிநாட்டுக் கொள்கையை நேரு வகுத்தார். எனவே இந்தியாவின் பொற்காலம் நேருவின் காலம்தான்.

கேள்வி: சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக நேரு விளங்கினார். எனவே, இந்த வெளிநாட்டுக் கொள்கையை அவர் வகுப்பதற்கு உதவியாக இருந்த காரணிகள் என்ன? இந்தக் கொள்கையை அவர்தான் வகுத்தாரா? அல்லது அப்பொழுதான் முதல் தடவையாக சுதந்திர இந்தியாவில் பதவியேற்ற அதிகாரிகள் வகுத்தனரா? இல்லை அந்த நேரத்தில் முதல்முறையாகத் தவழ்ந்து விளையாடிய இந்திய உளவுத்துறை வகுத்ததா?

இந்தக் கொள்கையை வகுத்ததில் சுதந்திரத்திற்கு முன்னாலேயே காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கிருந்தது. காங்கிரஸ் கட்சி ஒரு வெளியுறவுத்துறையை தனது கட்சியில் அமைத்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் வெளியுறவுத் துறை ஒன்றை அமைத்தார்கள். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது அதை அமைத்தார். அவர் அதற்குப் பொறுப்பாளராக நேருவை நியமித்தார். அதுமட்டுமல்ல, உதாரணத்திற்கு சீனாவின் மீது 1938-39 களில் ஜப்பான் படையெடுத்து போர் நடைபெற்றபோது அங்கே பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக காங்கிரஸின் சார்பில் டாக்டர் கோட்னிஸ் என்பவர் தலைமையில் ஒரு மருத்துவ தூதுக்குழுவை காங்கிரஸ் கட்சி அனுப்பியது. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது. ஆனாலும், சுதந்திரமாக செயல்பட்டு ஒரு மருத்துவக் குழுவை அனுப்பி அந்த மக்களுக்கு சேவை செய்தது. அதேபோல ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரியை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்குப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று அன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

ஐரோப்பாவில், பிரிட்டனில் ஏராளமான இந்திய இளைஞர்கள் அந்தப் பேராட்டத்தில் உதவி செய்வதற்காகத் தங்கள் பெயரை எல்லாம் பதிவு செய்தார்கள். அதிலே ஒருவர் இந்திராகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயது மாணவியாக இந்திராகாந்தி இருந்தபோது படையில் சேர்ந்து ஸ்பெயினில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிற போரில் உதவுவதற்கு முன் வந்தார். ஜவஹர்லால் நேருவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது தூதராக அனுப்பியது. அவர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் போய் அங்கு திரண்டிருந்த பல்வேறு நாட்டுத் தொண்டர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். இப்படி காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே வெளியுறவுக் கொள்கையிலே தீவிரமாக கவனம் செலுத்தியது. அது படிப்படியாக வளர்ந்து நேரு அவர்களே பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அதை அமுலுக்குக் கொண்டுவரமுடிந்தது. ஆக இதற்கான அடித்தளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்குள்ளே உருவாக்கப்பட்டுவிட்டது. அதில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸும் நேருவும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைப்பதிலே முக்கிய பங்கு வகித்தார்கள்.

கேள்வி: நேருவுக்கு பிந்திய காலத்தில் இந்த கொள்கை அடிப்படையான மாற்றம் அடைய தொடங்கியது எப்போது?

இந்தக் கொள்கையில் பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை. இந்திராகாந்தி இருந்தபோது அதை அவர் அப்படியே தொடர்ந்து கடைப்பிடித்தார்.

பின்னாலே ஜனதா கட்சி ஆட்சி 1979 இல் வந்த போது அன்றைக்கு பிரதமராக மொரார்ஜி தேசாயும் வெளிவிவகாரத்துறை அமைச்சராக வாஜ்பாயும் இருந்தார்கள். வாஜ்பாய் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் கூட, இந்த அணிசேராக் கொள்கையில் இருந்து அவர் மாறவில்லை. அப்படியே அவர் அதைப் பின்பற்றினார். ஜனதா அரசும் அப்படியேதான் பின்பற்றியது. விலகிச் செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் வேண்டுமானால் அவர்கள் தீவிரமாக இருந்தார்களே தவிர மொத்தத்தில் இந்தக் கொள்கையிலிருந்து விலகவில்லை. ஆனால், ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜீவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் தன்னுடைய பாட்டனாரும் தன் தாயாரும் எத்தகைய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை உணரவில்லை. அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்பதுதான் உண்மை. அன்றைக்கு இந்தியாவின் தூதுவராக இருந்த தீட்சித், இந்தியாவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளராக இருந்த பண்டாரி போன்ற அதிகாரிகள் அவரை வழிமாற்றி நடத்தினார்கள்.

அப்பொழுதுதான் முதன்முதலாக நேரு அமைத்த பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச் செல்லத் தொடங்கியது. அப்பொழுதுதான் உலகம் முழுவதும் அடிமைப்பட்ட மக்கள் எங்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கிற இந்தியாவின் கொள்கையிலிருந்து தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு சுதந்திர இந்தியாவின் படை அங்கு அனுப்பப்பட்டது. இந்திய வரலாற்றில் கறைபடிவதற்கு காரணமானவர் ராஜீவ்காந்திதான். வேறுயாருமல்லர். அவருடைய தாயாரும் அவருடைய பாட்டனாரும் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு நேர்மாறான திசையில் ராஜீவ்காந்தி சென்றார். அதில் வெற்றிபெறவில்லை. படுதோல்வியடைந்தார். ஆனால், ராஜீவுக்குப் பின்னால் வந்த அரசுகளாவது ராஜீவின் இந்தத் தவறான கொள்கைகளைத் திருத்தியிருக்க வேண்டும் அல்லது தூக்கியெறிந்திருக்க வேண்டும். முன்னால் இருந்த நிலைமைக்குப் போக வேண்டும் என்று அவர்களும் நினைக்கவில்லை. செய்யவில்லை. அதனால் இன்னும் தொடர்ந்து ராஜீவின் தவறான கொள்கையையே அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கேள்வி: இதற்கு ராஜீவுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தோர் ஜவகர்லால் நேரு வகுத்த அயலுறவுக் கொள்கையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக இருக்குமோ?

புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு உள்நோக்குப் போக்குகளும் இதிலே வந்துவிட்டன. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் இந்திராகாந்தியின் அணுகுமுறை என்ன? 83 இல் ஜூலையில் கொழும்பில் கலவரம் ஏற்பட்டு 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்திராகாந்தி பகிரங்கமாகக் கண்டித்தார். திட்டமிட்ட இனப்படுகொலை இலங்கையில் நடக்கிறது என்று பகிரங்கமாகச் சொன்னார். இலங்கையே ஒரு சிறிய நாடு, அதில் இனப்பிரச்சினை ஒரு சிறிய பிரச்சினை. ஆனால், அந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகள் இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார். ஒருவர் வெளிநாட்டு அமைச்சர் பி.வி.நரசிம்மராவ், அடுத்தவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி, ஒரு சிறிய நாட்டுப் பிரச்சினையைப் போய்க் கவனிப்பதற்கு இரண்டு மூத்த இராஜதந்திரிகளை இந்திராகாந்தி அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இலங்கை அரசுக்கு ஒன்றை உணர்த்த விரும்பினார். "இந்தியா இந்தப் பிரச்சினையை முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறது ஜாக்கிரதை" என்பதை உணர்த்துவதற்கு இரண்டு ராஜதந்திரிகள் அனுப்பப்பட்டனர். "இது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பிரச்சினை. இதில் வேறு யாரும் தலையிடக்கூடாது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காகவும் இப்படி மூத்த ராஜதந்திரிகளை அனுப்பி அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுத்தார்.

ஆனால், அவருக்குப் பின்னால் ராஜீவ் காலத்திலிருந்து இன்றுவரை என்ன நடக்கிறது? ராஜீவ் பண்டாரி என்ற ஒரு அதிகாரியை இந்தப் பிரச்சினை பற்றிப் பேச இலங்கைக்கு அனுப்பினார். இலங்கைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை ஒரு அதிகாரியை அனுப்புவதன் மூலம் ராஜீவ்காந்தி குறைத்துவிட்டார். இது ஜெயவர்தனாவுக்குப் புரிந்தபோது அவர் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் முக்கியமானது. சரி இன்றைக்கும் என்ன நடக்கிறது? எம்.கே. நாராயணன், சிவ்சங்கர் மேனன் போன்ற அதிகாரிகளைத்தான் இனப்பிரச்சினை பற்றிப் பேச இந்திய அரசு அனுப்புகிறதே தவிர இராஜதந்திரிகளை அனுப்பவில்லை. இதன் மூலம் இந்தியாவே இந்தப் பிரச்சினையை முக்கியமாகக் கருதவில்லை என்ற ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். இது ஒரு பெரிய பின்னடைவினை இந்தப் பிரச்சினையில் ஏற்படுத்திவிட்டது.

இந்திராகாந்தி காலத்தில் கையாண்ட அணுகுமுறை வேறு. ராஜீவ் காந்தி காலத்தில் கையாண்ட அணுகுமுறை அதற்கு நேர் எதிரானது. இதன் காரணமாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய்விட்டது. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட ஒருநாட்டில் சீனாவும் பாகிஸ்தானும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இன்னும் பிற நாடுகளும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தும் நிலை வந்ததென்பது இந்தியா செய்த தவறினால். இந்திராகாந்தி இருந்தவரைக்கும் வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சினையில் தலையிட துணியவில்லை. ஆனால், இந்திராவின் மறைவுக்குப் பிறகு அத்தனை நாடுகளும் இலங்கையில் இறங்கிவிட்டன. அது இந்தியாவின் நலனுக்கு ஆபத்தானது என்பதை டில்லியில் இருப்பவர்கள் இன்னும் உணரவில்லை.

கேள்வி : இந்திராவிற்குப் பின் ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமராக, காங்கிரஸின் தலைவராகப் பதவி ஏற்க நேரிட்டது. இது இந்திராவின் மனதில் இருந்த திட்டமா அல்லது வேறு வழியில்லாமல் தலைமை நாற்காலியில் ராஜீவ் என்பவர் திணிக்கப்பட்டாரா?

ராஜீவ்காந்தி இந்திராவின் மூத்த மகனாக இருந்த போதிலும் கூட அவரை அரசியலுக்குக் கொண்டுவர இந்திராகாந்தி விரும்பவில்லை. ஏன் என்றால் இவர் அதற்கு லாயக்கற்றவர் என்பது இந்திராகாந்தியின் முடிவு. எனவேதான் மூத்தமகன் இருக்கும்போது இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவரை ஆக்கினார். அவருக்கு அரசியலில் முக்கியத்துவம் எல்லாம் அளிக்கப்பட்டது. அப்போது ராஜீவ்காந்தி விமான ஓட்டியாகத்தான் இருந்தார். அவருக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அதுவும் உள்ளூர் விமான ஓட்டியாகத்தான் இருந்தார். வெளிநாடுகளுக்குப் போகவில்லை.

ஆனால், சஞ்சய்காந்தி ஒரு விமான விபத்தில் திடீரென்று இறந்தவுடன் இந்திராகாந்தி தன் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்னவென்றால் புத்திர பாசத்தின் விளைவாக ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டு வந்ததுதான். அதன் மூலம் அவர் தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெரும் கேட்டை விளைவித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் அனுபவம் கொஞ்சமும் இல்லாமல் அரசியல் நாட்டமும் இல்லாமல் சுகபோகியாகத் திரிந்த ராஜீவ்காந்தியைக் கொண்டுவந்து பெரிய பதவியில் உட்காரவைத்தபோது அதற்கு ஏற்றவறாக அவர் தன்னை ஆக்கிக் கொள்ளவில்லை. அவர் அதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு முன்னாலேயே இந்திராகாந்தி இறந்துபோனார். எனவே அவருக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. சுற்றிலும் துதிபாடிகள் மட்டுமே இருந்து அவரை "ஓ...ஓ.." என்று புகழ்ந்தார்கள். ஏற்கனவே எதைப்பற்றியும் எதுவும் தெரியாத ஒருவருக்கு துதிபாடிகள் தவறான பாதையைக் காட்டினார்கள்.

கடைசியில் அவரது அத்தனை திட்டங்களும் தோல்வியடைந்தன. அவர் அந்தப் பிரதமர் நாற்காலிக்கு லாயக்கற்றவர் என்பதை அவர் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் நிரூபித்துவிட்டார். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜவஹர்லால் நேருவோ, இந்திராகாந்தியோ பெற்றிராத பெரும் வெற்றியை ராஜீவ்காந்தி இந்திராகாந்தியின் மரண அனுதாப அலையினால் பெற்றார். கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் கட்சியிலே வெற்றிபெற்றார்கள். ஐந்து ஆண்டுகள் கழிவதற்குள் கிட்டத்தட்ட சகல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அவர் தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தது. பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை இல்லாது போயிற்று அவருக்கு. ஆக ராஜீவ்காந்தி ஒரு திட்டமிட்ட படுதோல்வியாளர்.

கேள்வி : மத்தியில் ஜனதாக் கட்சி ஆட்சி அமைத்தபோது இந்திராகாந்தி கைது செய்யப்பட்ட வேளையில் ராஜீவ்காந்தியும் அவரது மனைவியும் எடுத்த நிலைப்பாடு என்ன?

இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் ஜனதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட போது ராஜீவும், சோனியாவும் நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் லண்டனில் போய் தான் வாழ்ந்தார்கள். இந்தியாவிற்கு வரவேயில்லை. மீண்டும் இந்திராகாந்தி வெற்றிபெற்று பிரதமரான பின்புதான் இந்தியா திரும்பினார்கள். தன்னுடைய தாயாருக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கும்போது அருகில் இருந்து ஆறுதல் சொல்லவேண்டியவர். தானும் தன் குடும்பமும் தப்பித்தால் போதும் என்று நினைத்து ஓடிப்போனார்.

கேள்வி: இன்று இருக்கின்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாதா?

இந்தியாவிற்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்ததே ராஜீவ்காந்தி என்பது போல இவர்கள் மாரடித்துக் கொள்வதும் சபதம் எடுத்துக் கொள்வதும் எவ்வளவு தூரம் நியாயமானது?

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை ஒரு போதும் இவர்கள் அறிந்தில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அவர்களில் பெரும்பாலோர் துதிபாடிகளாக இருக்கின்றார்கள். மக்களிடம் சொந்த செல்வாக்கில்லாதவர்கள், மக்களிடம் வேர் இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைமையில் ராஜீவ்காந்தியோ, சோனியா காந்தியோ, இந்திராகாந்தியோ யார் இருந்தாலும் அவர்களின் நிழலில் இவர்கள் பதவிகளைப் பெற்றார்கள். சொந்தமாக இவர்களுக்கென்று எந்தச் செல்வாக்கும் கிடையாது. அப்படிப்பட்டவர்கள் தான் ராஜீவ்காந்தியைச் சுற்றி நின்று அவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். இப்பொழுதும் அந்தக் கூட்டம் தான் சோனியா காந்தியைச் சுற்றி நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலோர் அந்தக் கட்சிக்கே சம்பந்தமில்லாதவர்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சொந்த மாநிலத்தில் மராட்டிய மாநிலத்தில் அந்த மக்களால் படுதோல்வி அடையச் செய்யப்பட்டவர்கள் சிவராஜ் பாட்டில் சோனியா துதிபாடி என்ற காரணத்தினால் தேர்தலில் தோற்றுப்போன அவரைத் தூக்கி இந்தியாவின் உள்துறை அமைச்சராக உட்கார வைக்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்பது ஒரு பெரிய பதவி. அதில் தேர்தலில் மக்களாலேயே தோற்கடிக்கப்பட்ட ஒருவரைக் கொண்டு வந்து நியமிக்கிற அளவிற்கு சோனியாகாந்தி இருக்கிறார் என்று சொன்னால் வெளியில் நடப்பது என்ன? மக்கள் தீர்ப்பு என்ன? என்பதெல்லாம் அவருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. இன்றைக்கு மத்திய அரசிலே அமைச்சராக இருக்கிற பலருக்கு சொந்த மாநிலத்தில் செல்வாக்கே கிடையாது.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.