யாழ் இணைய செய்தி அலசல்
எழுதியவர்: உ. துசியந்தன்
தடைகள்.
மானுடத்தின் மாபெரும் வெற்றிகளின் இரகசியம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆதாரம்.
தொழில்நுட்ப சாதனைகளின் ஊக்கசக்தி.
விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் உற்சாகம்.
மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது "தடை மீறல்" என்பதனூடாகவே நிகழ்ந்திருக்கிறது. தடை போடல் இருக்கும் வரை, தடை மீறல் என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். தமது தனித்துவத் தேசிய அடையாளத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் - தாயக விடுதலையையும் வேண்டி நிற்கும் ஒரு இனத்தைப் பொறுத்தவரையில், தடைகள் என்பவை அவர்களின் "இருப்பு"க்கான சவாலாகும்.
அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்மக்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும், அரசியல் - இராணுவ நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். அதுபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் கொழும்பு அரசினதும், சர்வதேச நாடுகளினதும் தடைகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஆளாகியிருக்கிறது. உலக வரலாற்றையும், ஏனைய விடுதலைப் போராட்டங்களையும் உற்று நோக்குவோமானால் - இதுவொன்றும் புதிதானது அல்ல.
தடைகள் ஏற்படும் போதெல்லாம் அவை மீறப்படுவதும், அவற்றுக்கு எதிராக மாற்று வழி ஒன்று முன்வைக்கப்படுவதும் இயல்பானது. அது அவசியமும் ஆகும். மனித இனத்தின் வியக்கத்தகு கண்டுபிடிப்புகள் கூட இத்தகையது தான். தடைகள் அனைத்தையும் வென்றுதான் மனித வரலாற்றின் வெற்றிகள் எழுதப்பட்டுள்ளன. இலங்கை வாழ் தமிழர்களை பொறுத்தவரை, தடைகள் என்பவை விடுதலைக்கான வேட்கையை அதிகப்படுத்தியிருப்பதே உண்மை. புதிய சிந்தனைகளையும் - அரசியல் அனுபவ முதிர்ச்சியையும் - மாற்றங்களையும் உண்டுபண்ணும் கருவியாகவே விளங்கிவருகிறது.
தமிழர்கள் மீதான தடைகள்
அந்தவகையில், கொழும்பு அரசின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையானது, இன்று வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு நிற்கும் பாரிய பிரச்சனையாக வடிவம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தமிழரையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் இத் தடையானது, அவர்கள் மனதில் அதனை மீறவேண்டும் என்ற எண்ணத்தைக் கிளறிவிட்டுள்ளது.
பொருளாதாரத் தடை என்பது பற்றி பார்ப்பதற்கு முன்னர், இலங்கை வரலாற்றில் தமிழர்கள் எதிர்கொண்ட ஏனைய முக்கிய தடைகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்:
1956 இல் இலங்கை வாழ் தமிழர்கள் மொழித்தடையை எதிர்கொண்டார்கள். சிங்களம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழி என்றும் அரச கரும மொழி என்றும் அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்கள் நேரடியான பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களின் வாழ்க்கை மீதான தடை உத்தரவுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் எதிர்ப்பு வடிவம் தீவிரம் அடையத் தொடங்கியது.
1972 இல் இனம் என்ற அடிப்படையிலான தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது தமிழ் மாணவர்களிடையே கோபத்தையும், எழுச்சியையும் தூண்டிவிட்டது.
1978 இல் தமிழர்களுக்கு எதிராக 'பயங்கரவாதத் தடைச்சட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கும் எவரையும் நீதி விசாரணையின்றி கொல்வதற்கு இதன்மூலம் இலங்கை அரசபடைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1983 இல் பாராளுமன்ற அரசியலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் 'தனிநாட்டுத் தடைச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் எந்தவொரு அரசியற் கட்சியும் "தனிநாடு" என்பதனை தமது இலக்காகவும், கோரிக்கையாகவும் கொண்டிருப்பது தடைசெய்யப்பட்டது. அந்தச் சட்டம் பிருவருமாறு:
1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் சுருக்கம்:
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பிற் 157 ஆவது சரத்தினை உடன் அடுத்து 157 (அ) சரத்தாகப் பின்வருவன சேர்க்கப்பட்டுள்ளன:
(1) எந்த ஒரு நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கையிலோ, இலங்கைக்கு வெளியிலோ, இலங்கையிற் ஆள்புலத்தினுள்ளோ ஒரு தனியான அரசினை ஆதரிக்கவோ, சார்பாகப் பிரசாரம் செய்யவோ, முன்னெடுக்கவோ, பண உதவி செய்யவோ, தூண்டுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
(2) எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது மற்றைய சங்கங்களோ அல்லது ஒழுங்கமைப்போ இலங்கையின் ஆள்புலத்தினுள் தனியானதொரு அரசினை உருவாக்குதலை ஒரு இலக்காகவோ, அல்லது நோக்கமாகவோ கொண்டிருக்கக் கூடாது.
படிப்படியாக கொண்டுவரப்பட்ட இத் தடைகளின் மூலம், தமிழ் மக்களுக்கு எதிரான முற்று முழுதான திட்டமிட்ட அரசியல் வடிவமொன்று கட்டவிழ்த்துவிடப்பட்டது. இவற்றின் ஓர் உச்சமாக:
1987 இல் அன்றைய அரசுத்தலைவராக விளங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வட பகுதிக்கான பொருளாதாரத் தடையை முதன் முதலில் அறிமுகம் செய்துவைத்தார். அதன்பின், இப் பொருளாதாரத் தடை தொடர்ந்து இவர்களது பேரினவாத அரசியல் சீடர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. இன்றைய அரசுத்தலைவர் மஹிந்த இராஜபக்ஷ காலத்தில் இது மேலும் மெருகூட்டப்பட்டு - நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இப்போது, சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகக் கருதப்படுகிற யாழ்ப்பாணப் பகுதியிலும் பொருளாதாரத் தடை நிலவுகிறது. அதேநேரம், வன்னிப் பகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியமென வர்ணிக்கப்பட்ட வண்ணம் பொருளாதாரத் தடை நிலவுகிறது. அத்தோடு, விடுவிக்கப்பட்ட பிரதேசமென பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கிலும் பொருளாதாரத் தடை நிலவி வருகின்றது.
இத்தகைய அரசியல் - பிராந்திய சூழ்நிலைகளிலிருந்து பார்க்கும் போது, இத் தடைகள் தமிழர்களுக்கு எதிரான நேரடியான தடைகள் என்பது தெட்டத் தெளிவாகின்றது. ஆகவே, இன்றைய நிலமையில் "பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை" என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதாரத் தடை/மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் என்பது ஓர் இனத்துக்கு எதிரான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
இவற்றில் வேடிக்கை என்னவென்றால், இவர்களால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் பெரும்பாலானவை எவையும் இலங்கைத் தென்பகுதி மக்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ உற்பத்தி செய்யப்படுபவையல்ல. இப்பொருட்கள் அந்நிய நாடுகளால் வழங்கப்பட்டு - கொழும்பில் இறக்கப்பட்டு - வரி செலுத்தலுக்கு உள்ளாகி - அதன்பின்னர் விநியோகத்துக்கு வருபவை.
இந்நிலையில், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் கூட, வரையறுக்கப்பட்டதாக கொழும்பு அரசினால் தடுக்கப்படுகின்ற செயற்பாடு சிந்திக்கப்படவேண்டிய ஒன்று. வெளிநாட்டு பொருட்கள், அதற்கான வரிசெலுத்தும் மக்களுக்கே கிடைக்க விடாது தடுக்கும் ஒரு செயலை, இன்றைய கொழும்பு நிர்வாகம் புரிந்து வருகிறது. தென்னிலங்கைச் சிங்கள மக்கள் செலுத்தும் வரி போன்றே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் வரி செலுத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் பாகுபாட்டு நடவடிக்கையானது கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயமாகிறது.
தடைகள் மீறல்
காலம் காலமாக, தமிழ் மக்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்ட போதும், அத்தடைகள் கண்டு தமிழினம் ஒன்றும் துவண்டு போய்விடவில்லை. சோர்ந்து மூலையில் கிடந்து ஒப்பாரி வைக்கவில்லை. மொழித் தடையையும், தரப்படுத்தல் முறையையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், தனிநாட்டுத் தடைச் சட்டத்தையும் மீறி, வீறுகொண்டு தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியமை வெளிப்படையானது. இந்தத் தடை மீறல்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்:
மொழித் தடையை எதிர்கொள்ளல்: ஒரு காலத்தில் கொழும்பையும் அதனை மையப்படுத்தி இருக்கும் தொழில் வாய்ப்பையும் நம்பி வாழ்ந்த இலங்கைத் தமிழ்ச்சமூகம் - (சிங்களம் படித்தும் பயனில்லை என்பதால்) கொழும்பை விட்டுப் புறப்பட்டு முதலில் மத்திய கிழக்கிற்கும், பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா கண்டங்களுக்குமாக புலம்பெயர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. இதன் விளைவாக இலங்கை அரசின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் தம்மை விடுவித்துக் கொண்டுள்ளனர்.
தரப்படுத்தலை எதிர்கொள்ளல்: இலண்டனை மையமிட்டு கல்வி வாய்ப்புக்கான புலம்பெயர்தலை தமிழ்க் கல்விச் சமூகம் மேற்கொண்டது. இன்று புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் அடுத்த தலைமுறை, உயர்கல்வியை அந்தந்த நாடுகளிலேயே சிறப்பான முறையில் மேற்கொள்கிறது.
தனிநாட்டுத் தடைச் சட்டத்தை எதிர்கொள்ளல்: தரப்படுத்தலுடன் தொடங்கிவிட்ட இளைஞர்களின் எழுச்சி ஆயுதப்போராட்டத்தின் பால் நம்பிக்கைகொண்டது. 83இல் தனிநாட்டுத் தடைச் சட்டத்தின் பின், அரசியல் ரீதியாக இனிப் பேசிப் பயனில்லை என உறுதிகொண்டது. அரசியல் வழிக்கு தடைபோடப்பட்டதும், அதற்கு மாற்றீடாக ஆயுதவழிப் போராட்டத்தை முன்நிறுத்தி இளைஞர்களும் மாணவர்களும் அணிதிரண்டனர்.
இப்படியாக ஒவ்வொரு தடையும் மீறப்பட்டும், தடைக்கெதிரான மாற்று வழிகள் கையாளப்பட்டும் வந்துள்ளன. ஆதலால், தடைகள் ஒவ்வொன்றும் தமிழ்மக்களின் போராட்டத்தில் மைல் கற்களாகவே விளங்கிவருகின்றன.
பொருளாதாரத் தடைக்கு மாற்றீடு
கொழும்பு அரசின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை என்பது, வடக்கு கிழக்கு வாழ் எமது உறவுகளுக்கு நேரடியாளக பொருட்கள் கிடைப்பதற்கான, மாற்று வழியொன்றைத் தேடுவதிலேயே கருத்தாய் இருக்கின்றது.
இதனால் தான் இன்றைய அரசியல் அரங்கில் பொருளாதாரத் தடை என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களிடையே ஓர் விழிப்புணர்வையும் - தனியாக வாழவேண்டும் என்கிற கட்டாயத்தையும் - ஓர் ஒழுங்கு முறையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இப் பின்னணியில் இருந்து நோக்கும் போது, இன்றைய அரசியல் கோரிக்கையில் முன்நிறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயமாக, பொருளாதாரத் தடைக்கு மாற்றீடான செயல்வடிவம் ஒன்று அவசியமாகின்றது. வடக்கு - கிழக்கு மக்களுக்கு கொழும்பினூடாக சர்வதேச இறக்குமதிப் பொருட்கள் வராமல், நேரடியாகவே வந்தடைவதற்கான மாற்று ஏற்பாடு ஒன்று அரசியல் கோரிக்கையாக முன்வைக்கப் படவேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.
பொருட்களை கொழும்பு அரசாங்கம் நேரடியாக விநியோகம் செய்வதில்லை. பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள் வர்த்தகர்கள். அப்படியிருக்க, வரிசெலுத்தும் மக்களுக்கு பொருட்கள் சென்றடைவதை தடுக்கிற கொழும்பு நிர்வாகத்திடம் "தடையை நீக்குங்கள்' என்று இரந்து கொண்டிருப்பதில் பயனில்லை. அதை எதிர்த்து குரல் கொடுத்து காலம் கழிப்பதை விடுத்து, மாற்று வழியினைத் தேடவேண்டும்.
இதன் அடிப்படையில், வடக்கு - கிழக்கு மக்களுக்கான நேரடியான "வர்த்தக உறவு மையம்" ஒன்றை இப்பிராந்தியங்களில் (வடக்கு - கிழக்கு பகுதிகளில்) சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டுமென்பது முன்நிலைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக விளங்குகின்றது. இதன் மூலம் கொழும்பு அரசின் தடைகளை நாம் எமக்கு ஏணிப்படிகளாக்கிக்கொள்ள முடியும். இத் தடைகள் அனைத்தும் இட்டுச்செல்லப்போவது தனிநாட்டுக்கே!

















