Jump to content

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT ] [ நித்தியபாரதி ]

 

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார்.

இவ்வாறு கொழும்பை தனமாகக்கொண்ட The Island ஆங்கில ஊடகத்தில் Gnana Moonesinghe எழுதியுள்ள விவரண கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மக்களின் நீண்ட காலக் காத்திருப்பின் பின்னர் தற்போது வடக்கு மாகாண வாழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை மாகாண சபைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சுதந்திரமானதும் நேர்மையானதுமான மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளருக்கு வர்த்தமானி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெறுகின்ற தேர்தல்களில் மிகவும் வேறுபட்ட இயங்கு நிலையுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல்கள் வழமையாக மேற்கொள்ளப்படும் முறைமைக்கு அப்பால் எதிர்பார்க்கப்படாத விதத்தில் நடாத்தப்படவுள்ளதானது ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை நிறுத்தியதானது தேர்தலில் அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அநாகரிமான, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் அரசாங்க உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் தற்போதைய காலத்தில்" விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து வருகின்றனர். குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படும் அதேவேளையில், இவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விசாரணை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சிலர் முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகித்த பின்னர் குற்றவியல் என்ற வரையறைக்குள் சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான ஒரு சிக்கலான சூழ்நிலையில், ஜனநாயக ஆட்சி நிலவும் சிறிலங்காவில் மக்கள் நிர்வாகப் பணிகளை ஆற்றுவதற்காக பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவது மிகமுக்கியமான ஒன்றாகும்.

வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் எதிர்கால நலன்கருதி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தான் வழங்கிய நேர்காணல்களில் வாக்குறுதி அளித்தவாறு மக்களின் எதிர்கால நலனை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் நிறைவேற்றினால் வடக்கு மாகாண சபையானது சிறிலங்காவில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

விக்னேஸ்வரன் மிகவும் ஆணித்தரமாகத் தனது கருத்துக்களை முன்வைக்கின்ற ஒருவர் என்பதாலும், தனது மனதில் படுவதை எவ்வித அச்சமுமின்றி பேசுகின்ற ஒருவர் என்பதாலும், நீதித்துறையில் சேவையாற்றும் போது உண்மையுடன் பணிபுரிந்த ஒருவர் என்பதாலும் இவர் தற்போது முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தன்னாட்சி மற்றும் தற்போதும் கடந்த காலங்களிலும் பேசப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விக்னேஸ்வரன் எவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துமாறு ஊடகவியலாளர் ஒருவர் இவரிடம் வினவியபோது, "இவை எல்லாம் அரசியல்வாதிகளுக்கு உரியவை. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. பாதிக்கப்பட்டுள்ள, துன்பப்படுகின்ற மக்களுக்கு சேவையாற்றுவதில் நான் விருப்பங் கொண்டுள்ளேன்" என விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

இவரது இந்தக் கூற்றானது விக்னேஸ்வரன், துன்பப்படுகின்ற மக்களின் உடனடித் தேவைகளை முதலில் முதன்மைப்படுத்துவதாகவும், ஆனால் ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணாது காலம் கனியும் போது அதனைச் செயற்படுத்தலாம் என்பதையே கருதவைக்கிறது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடமையாற்றிய, வாழ்ந்த விக்னேஸ்வரன் பல்வேறு இயங்கு நிலை மாற்றங்களைக் கொண்ட சூழல்களுக்குள், பாரபட்சப்படுத்தப்பட்ட பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பில் தொழில் சார் தகைமையைக் கொண்டிருக்க முடியும்.

இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் இரு தரப்பும் திறந்த மனதுடன், விட்டுக்கொடுப்புடன், புதிய அணுகுமுறைகளுடன் பேசத் தவறியுள்ளனர். இவ்விரு சாராரும் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசும் போது முரண்பாடான நிலைப்பாட்டைத் தவிர்த்து பேச்சுக்களை மேற்கொள்ளும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.

"நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானமானது நாட்டில் முரண்பாடுகளைக் களைந்து முன்னேறுவதற்கான சாத்தியத்தை வழங்குகிறது" என யூலை 17 டெய்லி மிறர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்ததானது இன்று உணர்வைத் தொடுகின்ற ஒரு முக்கிய செய்தியாகக் காணப்படுகிறது.

நாட்டில் கொள்கை வகுப்பில் ஈடுபடுபவர்களுக்கும் வடக்கில் வாழும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் இரு தரப்பு நம்பிக்கை என்பது போருக்குப் பின்னான சூழலிலும் இதற்கு முன்னரும் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. சிறிலங்காவை ஆட்சி செய்தவர்கள் வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் சுமூகமான நம்பிக்கையில் அடிப்படையில் உறவைக் கட்டியெழுப்பி பிரச்சினையைத் தீர்க்காததால் பிரபாகரன் தோற்றம் பெற்றார். பிரபாகரன் முதலில் ஒரு தலைவராகவும் பின்னர் சிறிலங்கா அரச எதிர்ப்பின் சின்னமாகவும் மாறினார்.

மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் ஊடாக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளும், விரோதங்களும் குறைவதற்கான வழிவகுக்கப்படும். இவ்வாறு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். இதன்மூலம் நாட்டில் பிறிதொரு கலவரம் ஏற்படலாம்.

"வன்முறைகளைத் தவிர்த்து புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றுபடும் அதேவேளையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமனதுடன் ஆதரவை வழங்குவதே நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும்" என விக்னேஸ்வரன் தெரிவித்த கூற்றை அரசாங்கமும் மக்களும் முன்னுதாரணமாக எடுத்து செயற்பட வேண்டும்.

தீர்க்கப்படாத சில பிரச்சினைகளுக்கு வரையப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாக தீர்வை முன்வைக்க வேண்டும் என்கின்ற நடைமுறை அணுகுமுறையின் பிரகாரம் விக்னேஸ்வரன் பணியாற்ற விரும்புகின்றார் என்பது போல் தென்படுகிறது. சிறிலங்காவில் போர் நடக்கின்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் காணாமற் போன மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் போதியளவு தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது மிகப் பெரும் பிரச்சினையாகக் காணப்படுகிறது.

தான் முதலமைச்சராக பதவியேற்றால், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் திறந்து வைப்பேன் என்பதில் விக்னேஸ்வரன் நம்பிக்கையாக உள்ளார். நீதித்துறையில் முன்னர் பணியாற்றியதனைப் பயன்படுத்தி சட்டமா அதிபரைச் சந்தித்து, இவ்வாறு காணாமற் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் சந்திப்புக்களை மேற்கொண்டு தீர்வொன்றை எட்டுவதற்கான சாத்தியம் இருக்கலாம் என விக்னேஸ்வரன் கருதுகிறார்.

இவற்றுக்குத் தீர்வு காண்பதில் சட்டமா அதிபர் தனக்கு உதவலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் நம்பிக்கை கொள்கிறார். இதுதவிர, காணாமற் போன அல்லது இறந்தவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும் விக்னேஸ்வரன் கருதுகிறார். காணாமற் போன மற்றும் தடுப்பிலுள்ளவர்கள் தொடர்பில், ஆரம்பத்தில் 50 அல்லது 100 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால் அது மிகப்பெரிய சேவையாக இருக்கும்.

நாட்டில் போர் முடிவடைந்து அமைதி நிலவும் காலப்பகுதியில், மிகப் பெரியளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பது மற்றும் பொது மக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தினர் குறுக்கிடுவது தவிர்க்கப்பட வேண்டும். சிறிலங்காவில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவத்தின் பெரியளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பில் ஏனைய பலரைப் போலவே விக்னேஸ்வரனும் தனது எதிர்க்கருத்தை முன்வைத்துள்ளார்.

20 இராணுவப் படைப் பிரிவுகளில் வடக்கில் 10-15 படைப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதானது நாட்டில் சமாதானத்தை ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பொது அமைப்புக்களுடன் இணைந்து சேவையாற்றுபவர் என அங்கீகரிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேராசிரியரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடமையாற்றிய பேராசிரியர் சாவித்திரி குணசேகர போன்ற ஒருவர் வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது குறுகிய பேரினவாத மனப்போக்கைக் கொண்ட ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் வடக்கு மாகாண ஆளுநர் பதிவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இவர் எவ்வித மாற்றுக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. சமாதான காலத்தில் இராணுவ மனநிலையுள்ளவர்கள் நிர்வாகத்தில் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது விக்னேஸ்வரனின் கருத்தாக உள்ளது.

"நல்லதொரு புரிந்துணர்வுடன் குழுவாக இணைந்து பணியாற்றக் கூடியவர்களை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்" என கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் விக்னேஸ்வரன் அறிவுரை வழங்கியிருந்தார். அரசியல் விவகாரங்களுக்கு அப்பால், கல்விசார் செயற்பாடுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றில் பரந்த நோக்குடன் சிந்திக்கின்ற செயற்படக்கூடியவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

"போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒன்றாக வடக்கு மாகாண சபை காணப்படுகிறது. இதனால் வடக்கு மாகாண சபை எவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியுமோ அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு மிகவும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்" எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார். வடக்கு மாகாண நிர்வாகத்தை அரசியல் மயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் விக்னேஸ்வரன் தெளிவாக விளக்கியுள்ளார்.

இருப்பினும் தொழில் வாய்ப்புக்களும் நியமனங்களும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறான செயற்பாடுகள் சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவதற்கான காரணிகளாக காணப்படுகின்றன. முதலமைச்சராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டால், நிர்வாகத்தைக் கொண்டு செல்வதில் போட்டிநிலை ஏற்படாது. இதன்மூலம் ஒரு பொறிமுறைக்குள் பணியாற்றுவதுடன், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வடக்கு மாகாண சபை வழிகாட்டியாக இருக்கும்.

இதன் மூலம் நாட்டில் அமைதி ஏற்பட்டு, நாட்டில் செழுமை ஏற்பட்டு மக்கள் மகிழ்வாக வாழமுடியும். மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் வசதிவாய்ப்புக்களுடன் அமைதியுடன், சமாதானமாக வாழ்வதற்கான அறிவுபூர்வமான தீர்வுகள் எட்டப்படும். கல்வி அறிவுடையவர்கள் நிர்வாகத்தை நடாத்தும் போது பாதிக்கப்பட்ட சமூகம் செழுமையுடன் கூடிய சிறந்த வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

http://www.puthinappalakai.com/view.php?20130807108818

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.