Jump to content

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்


Recommended Posts

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்

 

மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது  மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன்  பின்னால்  அணிதிரள வைத்தது. 

04062013%20010.jpg

யுத்தம் முடிந்தவுடன்  பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது.

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம்.

தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும்  யானைகளின்  மணி ஓசை கேட்டவுடன், சீனாவிற்கு ஓடும் வழக்கத்தை தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருப்பதை, கடந்த நான்கு ஆண்டுகளில் பல தடவை கண்டுள்ளோம்.

2011 ஆகஸ்டிலும் நான்கு நாள் விஜயம். இந்த மாதமும் சீனாவிற்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச. ஒவ்வொரு தடவையும் பற்பல ஒப்பந்தங்கள். 

இதனால் சீனாவிலும் கொழும்பிலும் மந்திரிகள், அரச அதிகாரிகள் நேர்காணல்களில் தீவிரமாகிவிட்டனர். மக்களுக்கும் சில செய்திகள் உண்டு. வேலை வாய்ப்பு  அதிகரிக்கும், பயணங்களின் காலம் குறுகும், பாதைகள் 'அந்த மாதிரி' இருக்கும் போன்ற வாக்கு வங்கி வாக்குறுதிகள் மக்களுக்குச் சொல்லப்படும். அதேவேளை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் கூட  செய்தி உண்டு. மக்களுக்கு புரியாதவாறு அச் செய்தி சொல்லப்படும்.

அதன் நுட்பமான பக்கங்களை இப்பத்தி முன்வைக்கிறது. இம்முறை என்ன கொண்டுவந்தார் அதிபர் என்று பார்த்தால், உடன்பட்ட கடனின்  அளவு சற்று தூக்கலாகத்தான் இருக்கிறது. உட்கட்டுமான அபிவிருத்தித்திட்டங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க சீனாவின் புதிய அதிபர் சி ஜின்பிங் உடன்பட்டுள்ளார்.

 இதனால் எந்தவொரு நாட்டிற்கும் ஆபத்தில்லையென்று வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிசும், வியாபாரத்தைத்தவிர வேறொன்றுமில்லை என்று அதிபர் மகிந்த ராஜபக்சவும் எவ்வளவுதான் தன்னிலை விளக்கங்களை அளித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தங்கள் எரிச்சலூட்டும் விடயங்கள்தான்.

இந்தியாவைச் சுற்றி சீனா முத்துமாலை கட்டும் நாடுகளில், நிதி உதவி என்பது ஆதிக்கம் செலுத்தும் கருவியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சீனாவின் அளவிற்கு இந்தியாவால் நிதி முதலீடு செய்ய முடியவில்லையா? அல்லது அதனை வேண்டுமென்றே இலங்கை தவிர்க்கிறதா என்கிற சர்ச்சையும் உண்டு.

ஆனாலும் போருக்குப்பின்னான காலத்தில், ஏறத்தாள 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை பல உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவும் சீனாவும் கடனடிப்படையில் உதவி புரிந்ததை குறிப்பிட வேண்டும்.

சீனாவின் வர்த்தக உறவுகள் குறித்த வரலாற்றுப் பின்புலத்தைப் பார்த்தால், 1952ஆம் ஆண்டு, றப்பர் -அரிசி ஒப்பந்தம் மூலம் ஆரம்பமாகிறது இலங்கை-சீன வர்த்தகம். தற்போது அதன் வளர்ச்சி 3.17பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிற்பதற்குரிய முதலீடுகளை செய்யவும் சீனா முன்வருகிறது. அத்தோடு சீன உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கையை இந்த வருட இறுதிக்குள் 60,000 ஆக அதிகரிக்க வேண்டுமென்கிற திட்டத்தோடு இலங்கை உல்லாசப்பயணத்துறை சார்ந்தோர்,சீன நகரங்களில் புதிய விளம்பர உத்திகளை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர். 

இம்மாதம் சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தில், பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள், கடல்சார் பாதுகாப்பு, சுதந்திர வர்த்தகம் தொடர்பான கொள்கைரீதியான உடன்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல், தொடரூந்துபாதை நிர்மாணம், தென்பகுதி நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு துறைமுக அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டது. பாரிய சீனச் சந்தையில், இலங்கையின் உற்பத்திப்பொருட்களுக்கான வாய்ப்பினை பெறும்வகையில், சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை உருவாக்குவதற்கு, குழுக்களை அமைக்க இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

சீனப்பிரதமர் லி கெகியாங் அவர்கள் உடனான சந்திப்பின் போது, வர்த்தக சமநிலையற்ற (trade imbalance) போக்கு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதனை நேர்த்தியான முறையில் அணுகுவதாக கூறிய சீனப்பிரதமர், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் பற்றியதான உரையாடலில் அதிக கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அது இந்தியாவின் 'சீபா' ஒப்பந்தக்கனவினை நினைவூட்டியதாக சில அரசியல் நோக்கர்கள் சொல்கின்றார்கள்.

உரையாடலின்போது, அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயமொன்றினை நிறுவும் விருப்பத்தையும் சீனப்பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு செய்மதி தொடர்பாடல், விண்வெளி தொழில்நுட்பம், மற்றும் கடற்தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் இலங்கைக்கு உதவிடத் தயார் என்கிற உறுதி மொழியையும் அவர் வழங்கியுள்ளார்.

முக்கியமாக எட்டப்பட்ட உடன்பாடுகள் எவை என்று நோக்கினால், அத்தனகல, மினுவாங்கொட,குருநாகல நீர் வழங்கல் திட்டம், கண்டியில் சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் அனுராதபுரத்தில் ஒரு நுண்கலை அரங்கம் என்பவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவைதவிர நவம்பரில்  நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில்    பிரத்தியேகமாக கூட்டப்படும் வணிக மாநாட்டில் சீன வர்த்தகக்குழுவினரை பங்குபற்றுமாறு அரசால் அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியும் கவனிக்கத்தக்கது. இரு நாட்டுக்குமிடையே மூலோபாய இருதரப்பு உறவினை வலுப்படுத்த, சீனப்பிரதமரையும், அதிபரையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.

அதேவேளை, கடன் பொறிக்குள் வீழ்ந்துள்ள இலங்கை அரசானது, உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவிடமிருந்து பாரியளவில் கடனுதவிகளைப் பெற்றாலும், 9 பில்லியன் டொலர் வர்த்தகப் பற்றாக்குறையால் ஏற்படும் நிதி நெருக்கடிக்குள் இருந்து விடுபட முடியாதென நிதியியல் ஆய்வாளரும், ஐ.தே. க. வின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எரன் விக்கிரமரட்ன எச்சரிக்கின்றார்.

வெளிநாட்டில் பணிபுரிவோரின் 6 பில்லியன் டொலர் வருவாய்  மற்றும்  உல்லாசப்பயணத்துறையால் கிடைக்கும் 1.5 பில்லியன் வருவாய் என்பவற்றைச் சேர்த்தாலும் 2 பில்லியன்களுக்கு மேல் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைவிட கடனாகப்பெறும் வெளிநாட்டு நாணயங்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு மேலதிகமாக 1.5 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது.

ஆகவே இவற்றைச் சீர்செய்ய, வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதற்கான மாற்றுவழி என்று அரசு கணிப்பிடுகிறது.

சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனத்திடமிருந்து 580மில்லியன் டொலரைக் கடனாகப்பெறும் வகையில், நிதி திட்டமிடல் அமைச்சுக்கும் இந்த வங்கிக்குமிடையே பரிந்துணர்வு ஒப்பந்தமொன்று உருவாகலாமென்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கடந்த 7 வருடங்களில், 37 அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன் வழங்கிய சீன அரசின் எக்ஸ்சிம் (EXIM) வங்கித் தலைவர் லி ரோகு அவர்களோடு விரிவான உரையாடலில் இலங்கை அதிபர் ஈடுபட்டுள்ளார்.

இந்த எக்ஸ்சிம் வங்கிதான், நுரைச்சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்திற்கு முதற்கட்டமாக 455 மில்லியன் டொலர்களையும், கொழும்பு- கட்டுநாயக்கா துரித நெடுஞ்சாலைக்கு 310 மில்லியன் டொலர்களையும், மாத்தல சர்வதேச விமான நிலைய கட்டுமானப்பணிக்கு 190 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு வழங்கியது.

ஆனாலும் சீனாவிடமிருந்து பாரியளவு தொகையை கடனாகப் பெற்றாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம், கடனிற்கான வட்டியைச் செலுத்தக்கூட போதுமானதாக இல்லை என்பதுதான் அரசின் பெருங்கவலை.

மொத்த உள்ளூர் உற்பத்தியில்  (GDP) , ஏற்றுமதியின் சதவீதம் தேய்ந்து கொண்டே போகிறது. ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார சிக்கல், மத்தியகிழக்கில் நீடிக்கும் அமைதியற்ற சூழல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை என்கிற காரணிகள் இணைந்து இலங்கையின் ஏற்றுமதியில் என்றுமில்லாத அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 

கடந்த வருடம் இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தி 6.4 சதவீதமாக இறங்கியுள்ளது. 2013 இல் இதைவிட மேலும் இறங்கிச் செல்லுமென பொருளியல் ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றார்கள். இதைவிட சுவாரசியமான இன்னொரு விடயமும் உண்டு.

சீன அரசின் கடன், அதன் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 50 சதவீதத்தை எட்டியுள்ளதாம். 2011 இல் GDP இன் 37.8 வீதமாகவிருந்த அரசின் கடனளவு , 2012இல் 40 சதவீதத்தை எட்டியது. இப்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் (IMF) உயர் நிலை அதிகாரிகளே, இந்த 50 வீத கணிப்பு பற்றி கூறுகின்றார்கள். சீனாவும் அதனை மறுக்கவில்லை.

ஆகவே சீனாவின் இலங்கைக்கான நிதியுதவி எத்தனை காலத்திற்கு நீடிக்குமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

 

 

http://www.tamilkathir.com/news/12945/58//d,full_art.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.