Jump to content

நிழலாடும் நினைவுகள்..!


Recommended Posts

நிழலாடும் நினைவுகள்..!

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கொ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார்.

அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது. அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரது நம்பிக்கைகள் தகர்ந்த கதையை அழகாக ஆளமாக சொல்லியிருக்கிறியள் சாத்திரி.. கந்தையாவைப்போல எத்தனை கந்தையாக்கள்.. கதை முடிந்து போனது.? நினைவுகளை அனுபவித்தவர்கள் மீட்ட நமக்கு வரலாறு தெரிகிறது.. ம் மாட்டு வண்டியை யாழ்தேவி என்ற மாதிரி.. சிலர் நடந்து போவதை நடராசா அண்ணையின்ர கார் என்று சொல்வினம்.. பாவம் யாழ்தேவி ஓட்டுனர். :lol:

Link to comment
Share on other sites

சாத்திரி உங்கள் நிழலாடும் நினைவுகள் கதை நன்றாக அழகாக ஆழமாக நினைவுகளை மீட்டிச் செல்லுது.வாழ்த்துக்கள். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஒரு சோகபதிவு - எப்பிடியெல்லாம் ஏமாந்தது - எங்கள் இனம் என்பதை முடிவு சொல்லுது!

கதையல்ல - நிஜம் என்று எண்ணும்போது - மனசு கனக்குது!

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் வாசிக்கும் போது சோகமாக இருந்தது

பாவம் அந்த அப்பாவி யாழ்தேவி றைவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி, நிழலாடும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். இந்திய இராணுவத்தால் இப்படி அநியாயமாகக் கொலை செய்யப்பட்டோர் பலர். கண் தெரியாத 80 வயது வயோதிபரை படுக்கையில் வைத்துச் சுட்டுக்கொன்றது உட்பட பல சம்பவங்கள் எமது ஊரிலே நிகழ்ந்தன.

யாழ்தேவி என்றதும் எமது ஊரான உரும்பிராயிலும் ஒருவர் நினைவுக்கு வருகின்றார். அவர் பெயர் இராசையா. இவருக்கு யாழ்தேவி என்றால் ஒரு "பைத்தியம்" என்றே சொல்லவேண்டும். தான் "யாழ்தேவி றைவர்" என்றே எல்லோருக்கும் சொல்வார். உண்மையில் அவர் ஒரு வேலையும் செய்வதில்லை. தினமும் யாழ்தேவி வரும் நேரம் பார்த்து தான் வாங்கி வைத்திருக்கும் காக்கிச் சட்டைகளை அணிந்துகொண்டு இணுவில்வரை சென்று யாழ்தேவியைப் பார்த்துவிட்டு வருவார். யாரும் கேட்டால் தான் வேலைக்குச் சென்றுவருவதாகக் கூறுவார். அதாவது தான் யாழ்தேவியை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை ஓட்டிக்கொண்டு வந்ததாகக் கூறுவார். அதனால் இவருக்கு "யாழ்தேவி இராசையா" என்ற ஒரு பட்டப்பெயரும் இருந்தது. ஆனால் அவரைப்பற்றிய விபரங்களை என்னால் இப்போது அறியமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் மக்களில் நிறையப் பேர் ஏமாந்து போனதற்கு இதுவும் நல்ல உதாரணம்! உண்மையில் எம்மை காப்பாற்றுவர்கள் என்று நினைத்தபோது காவு கொள்ளப்பட்ட நினைவுகள் வருத்துவன! பலர் சொல்வார்கள்! இந்தியாவில் ஈழத்தவருக்கு வெறுப்பா என்று! ஆனால் சொந்தங்களாக நினைத்தவர்வர்கள் எம்மைப் பலி எடுத்தபோது தோன்றிய வேதனை ஆற்றமுடியாதது!

இவர் எனி நமக்கு உதவி செய்ய வேறு யாரும் இருக்கின்றார்களா என்ற அப்பாவியாக் கேட்டதாகச் சொன்ன வசனம் கண்ணைப் பனிர்க்க வைக்கின்றது! சொந்தங்களே ஏமாற்றிய போது வேறு யார் எமக்கு உதவி செய்யப் போகின்றார்கள் என்று தோணவில்லையா என்று கேட்கத் தோன்றுகின்றது!

ஆனால் உலகம் குறித்து எம்மிடம் பாடங்களைச் சொல்லித்தந்தன! அவ்வாறே நமக்கு நம் கைகளே உதவி என்பதை வரலாறுகளும் நிருபித்திருக்கின்றன! நிருபிக்கின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நினைவொன்றை உங்க பாணியில் சொல்லியிருக்கிறீர்கள் சாத்திரி அங்கிள்.வாழ்த்துக்கள்!!!! இந்திய ராணுவ வருகையின் போது மக்கள் மகிழ்ந்ததையும்.. வெடி விட்டு ஆரவாரம் செய்து... ரக்குகளுக்க்ள் முண்டியாடித்து கை கொடுத்த அந்த நிகழ்வுகள் இன்னும் மனதில் நிற்கிறது. அதைவிட அதற்கு பிறகு நிகழ்ந்த கொடுரங்களும் மனதைவிட்டு அகலவில்லை. :roll: :roll:

நாடாக இருந்தாலும் சரி... தனிமனிதனாக இருந்தாலும் சரி.. நமக்கு உதவி செய்ய யாருமில்லையா என்று நினைப்பது இனியும் முட்டாள் தனம். நமக்கு நானும் நம்ம தன்னம்பிக்கையும் தான் முன்னேற்றத்தை பெற்றுத்தரும்.

Link to comment
Share on other sites

செல்வமுத்து அவர்கள் சொன்னாவரை எனக்கும் தெரியும். மரவெள்ளி தோட்டத்திற்குள் போன ரெயினை திருப்பி தண்டவாளத்திற்கு கொண்டு வந்தேன் என்று பெருமை அடித்து கொண்டு திரிவார். எப்போ அவர் எங்கே என்று எனக்கும் தெரியாது.

உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சாத்தி.

Link to comment
Share on other sites

நிழலாடும் நினைவுகள் 2

1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஒட்டோவில்ப் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ராணியக்காவை பாக்க போறன்.

இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள். இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை .

ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று எங்கள் ஊரிலிருந்த ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள். தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள்.

நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் சாமான்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விப்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர்.

ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு மிசினும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.

அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னை அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது.

நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .

சரி பிறத்தாலை கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் தானே உதிலை சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணி வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும்.

நில்லடா காகம் என்ற படி தோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நொக்கி எறிந்த படி இரண்டு பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது.

ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம் நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலான “இதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார்.

அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை.

சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால்ப் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன்.

இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில் ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம் ஒரு இரவு ஒரு இடி விழுந்தது. அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்கள்ப் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா??

என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.

அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம் தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள்

என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள் ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான்.

அவர்களது சத்தம் கேட்டு அந்த மகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது வசய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதக்கு புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டை நொக்கி ஓடினோம்.

அங்கு நான் கண்ட காட்சி ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார். எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.

நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள்.

அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு செலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம்.

வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம். உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார்.

யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை.

அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் என்ன செய்யலாமெண்டு யொசித்த போதுதான் மானிப்பாய் வைத்திய சாலையிில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வானில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் தானே எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன்

ஆனால் தான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய் அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது.

ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார்.

அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும் அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன்.

நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான்.

கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர் என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன்.

எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடரச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர்.

மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன் தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார்.

நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் தம்பி இப்ப வருத்தமெல்லாம் மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா ஆனால் இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் டொக்ரர் மார் சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு .

அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.

நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தாயாராகியபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வாறன் என்றபடி அவரை உற்று பார்க்க அவரது கைகள் மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரது கண்களில் இருந்து கண்ணிர் வடிந்துகொண்டிருந்தது.

என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.

பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான். எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கொபம் வரும் ்

அனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கெள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................

இதோ ராணியக்கா அடிக்கடி பாடும் அந்த பாடல் அவரது நினைவுகள் வரும்போதெல்லாம் போட்டுக் கேட்பேன் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

http://www.megaupload.com/fr/?d=RPKE7049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் சிந்தும் நினைவுகளுடன் எழுதிய உண்மைக்கதை உள்ளத்தை உருக்கிவிட்டது.

ராணி அக்காவிற்குப் பிடித்த பாடலிலுள்ள "சுடுநீரில் வீழ்ந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா" என்ற வரிகளைப் போல் அவரது வாழ்க்கையும் ஆகிவிட்டது. ஆனால் அதே பாடலிலுள்ள "குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமா? என்ற வரிபோல் எம் நாட்டில் வசந்தங்கள் வரவேண்டும். வரும்! சீக்கிரம்!

Link to comment
Share on other sites

மனதை உருக்கும் உண்மை கதை கண்ணில் நீர வரவைத்து விட்டது. :cry: :cry: :cry: :cry:

இப்படி எத்தனை ராணி அக்காக்கள் கொல்லப்பட்டனர்.

பாடல் இணைப்புக்கு நன்றி அருமையான ஒரு பாடல்.

Link to comment
Share on other sites

தம்பிக்காக தன் வாழ்க்கையை இழந்து விட்டா அந்த ராணி அக்கா. இப்படியாக எத்தனை பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டு போனார்கள் அந்த அரக்கர்கள். :twisted:

உங்கள் நிழாடும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சாத்திரி.

Link to comment
Share on other sites

  • 3 months later...

நிழலாடும் நினைவுகள்

கப்ரன் கோணேஸ் (R.P.G.கோணேஸ்)

16.05.87.அன்று பிறபகல் ஒரு இரண்டுமணியளவில் வல்லைவெளியில் வடமராட்சியிவிருந்து ஒரு வாகனம் அச்சுவேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வல்லை பாலத்தை அணமித்துகொண்டிருந்த பொழுது அப்போ பலாலி படைத்தளம்நோக்கி போய் கொண்டிருந்த உலங்கு வானுர்தியொன்று அந்த வாகனத்தை கவனித்தவிட்டு அதன் மீது தாக்குதலை தொடுக்கவும்.

அச்சு வேலியில் வல்லைவெளியின் முடிவில் இருந்த தெனங்காணி ஒன்றினுள் இருந்த காவலரணில் காவல் கடைமையில் இருந்த இரண்டு போராளிகள் அந்த உலங்குவானுர்தி மீது தாக்குதலை தொடுக்க உலங்கு வானுர்தி திரும்பி பலாலி படைத்தளத்துனுள் சென்று மறைந்து கொள்கிறது. உலங்கு வானுர்தி நடாத்திய தாக்குதலில் வாகனத்தில் வந்த ஒருவர் காயமடைந்திருந்தார் அவரிற்கு முதலுதவி வழங்கி அவரை அந்த வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தங்கள் காவலரணினுள் மீண்டும் போகவும் பலாலியில் இருந்து ஒரு கடல் விமானம் மேலெழுந்து வட்டமடிக்க தொடங்க (இந்த விமானம் தான் 80 களின் இறுதியிக் காலங்களில் இலங்கை இராணுவம் உளவு பார்க்க பயன்படுத்தியது)இரண்டு உலங்கு வானுர்திகள் மேலெழுந்து போராளிகள் இருந்த அந்த காவலரணை தாக்கதொடங்கின.

உடனடியாக அந்த போராளிகளிற்கு உதவ அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமில் இருந்து சில போராளிகள் ஒரு வாகனத்தில் விரைகின்றனர்.அவர்கள் அச்சுவேலி நோக்கி போய்கொண்டிருந்த வாகனம் பட்டுபூச்சி பண்ணையை கடக்கும் போது மூண்றாவதாக ஒரு உலங்கு வானூர்தி அந்த வாகனத்தை கலைத்து தாக்குதல் நடாத்ததொடங்கியது.தோப்பு சந்தியை வாகனம் அண்மித்ததும் உலங்கு வானுர்திஏவிய ஒரு குண்டென்று வாகனத்தின் அருகில் வீழ்ந்து வெடிக்கவும் நிலை தடுமாறிய வாகனம் அங்கிருந்த சிறிய மதகில் மோதிநின்றது.

வாகனத்தினுள் இருந்த கோணேசிற்கும் இன்னொரு போராளிக்கும் வாகன கண்ணாடிகள் உடைந்ததில் காயங்கள் ஏற்படவே வாகனத்தை மீண்டும் இயக்கிய போராளிகள் அச்சுவேலி சந்தியில் அமைந்திருந்த ஒரு தனியார் வைத்திய சாலையில் கோணெசையும் மற்ற போராளியையும் இறக்கிவிட்டு வல்லை சந்தியை அடைந்து அங்கு உலங்கு வானுர்திகள் மீது தாக்குதலை தொடுக்கவும் சில நிமிட நேர சண்டையின் பின்னர் உலங்கு வானூர்தியும் கடல் விமானமும் பலாலி தளத்தினுள் சென்று மறைய அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. வைத்திய சாலையில் கோணேஸ் காயமடைந்து அனுமதிக்கபட்ட செய்தி கெள்விப்படதும் அவள் அழுதபடி பதறியடித்து கொண்டு ஓடோடி வந்தாள் என்ன நடந்தது பெரிய காயமா ஆழுக்கு ஒண்டும் இல்லையா என்று அங்கு நின்ற தாதியை கேள்விகளால் துளைத்தவளை.

ஒண்டும் இல்லை சின்னகாயங்கள்தான் வான் அடிபட்டடு கண்ணாடி உடைஞ்சதாலை கன்னத்திலையும் நெஞ்சிலையும் கண்ணாடியள் குத்தி போட்டுது காலும் அடிபட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப டொக்ரர் உள்ளை பாத்தகொண்டு நிக்கிறார் அவசரபடாதை என்று அவளிற்கு ஆறுதல் சொன்ன அந்த தாதியின் தோள்களில் சாய்ந்தபடி குழந்தையை போல விம்மியழ தொடங்கி விட்டாள். அவள்யார்?? அவள் ஏன் அழுகிறாள்?? அவளிற்கும் கோணேசிற்கும் என்ன சம்பந்தம்??? பார்ப்போம். கோணெசின் கிராமமான அச்சுவேலிதான் அவளின் சொந்த கிராமமும் எனவே கோணேசை அவளிற்கு பல வருடங்களாக படிக்கும் காலங்களில் இருந்தே தெரியும் அந்த வைத்தியசாலையில் அவளும் ஒரு தாதியாக வேலை செய்கிறாள்.

அவள் கொணேசை பலவருடங்களாக காதலிக்கிறாள். கோணேஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிற்சிகள் முடித்து விட்டு வேறு இடங்களில் அவனது பணிகளை முடித்துவிட்டு அவனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தபோதுதான் அவள் கோணேசிடம் தனது காதலை தெரிவித்திருந்தாள்.கோணேஸ் தனது நிலையை விளக்கி அவளது காதலை மறுத்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். ஆனாலும் அவள் விடுவதாய் இல்லை அவனை சுத்தி சுத்தியே வந்தாள் இதுதான் இவளிற்கும் கோணேசிற்கும் உள்ள தொடர்பு. கோணேஸ் அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வைத்தியரிடம் விசேட அனுமதி பெற்று தனது பொறுப்பின்கீழ் இரவு பகலாய் கோணேசை கவனித்துவந்தாள்.

மறுநாள் கொணேசை பார்க்க ஒரு போராளி சென்றபொழுது அவள் கோணேசின் காயங்களை சுத்தம் செய்து மருந்து கட்டிகொண்டிருந்தாள். சென்ற போராளி கோணேசை நலம் விசாரித்துவிட்டு அவனிற்கு தேவையானவற்றை விசாரித்து கொண்டே அருகிலிருந்த மேசையை பார்த்தான். ஒரு சாப்பாட்டுபெட்டி இருந்ததை கவனித்தவன் கோணேசை பார்த்து அட நான் சாப்பாடு வாங்கி தரத்தான் வந்தனான் பிறகென்ன உனக்கு யாரோ கொண்டந்து தந்திட்டினம் என்றவும். அவள் கோபமாக யாரோ இல்லை நான் தான் கொண்டுவந்தனான் ஆனால் உங்கடை சினேதனுக்கு பசி இல்லையாம் நான் குடுத்தா சாப்பிட மாட்டாராம் என்றவும் அந்த போராளி ஓ பசி இல்லையாமே சரி என்ன சாப்பாடு எனறவாறு சாப்பாட்டு பெட்டியை திறந்து பாத்த்தவன்.

ம்.......புட்டும் முட்டை கத்தரிக்காய் எலாம் பொரிச்சு போட்டிருக்குவாசம் அந்தமாதிரியிருக்கு சரி உனக்கு வேண்டாம் எண்டா ஏன் வீணா கொட்டுவான் நானே சாப்பிடறன் எண்றவாறுஅந்த போராளி அதை சாப்பிட தொடங்கவும் மருந்து கட்டி முடிந்ததும் அவள் கோபமாக கவனம் சாப்பாட்டு பெட்டியையும் சேத்து விழுங்கிடாமல் அதை கழுவிதந்திட்டு போங்கோ என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.அவள் போனதும் கட்டிலில் இருந்த போராளியை எட்டிஉதைந்த கோணேஸ் நான் பசிகொதியிலை இருக்கிறன் நீ ரசிச்சு சாப்பிடுறியா? கெதியா போய் சாப்பாடு கட்டிகொண்டுவா என்று என்று சொல்லவும் சிரித்தவாறே உனக்கு குடுத்துவைச்சது அவ்வளவும்தான் சரி நான் போய் சாப்பாடு கட்டிகொண்டு வாறன் எனறவாறே

அந்த போராளி வெளியே சென்று சாப்பாடு எடுத்து கொண்டு திரும்பி வருகையில் வழிமறித்த அவள் என்ன சாப்பாடு கட்டிகொண்டு பொறிங்கள் போலை நாங்கள் ஆசையா செய்து குடுத்தா அவரக்கு பிடிக்காது கடையிலை சாப்பிடட்டும் அப்பதான் கொழுப்பு குறையும் எனறபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்து. அண்டைக்கு அவர் காயப்படேக்கை அவர் போட்டிருந்த சேட்டு கிழிஞ்சுபோச்சுது ஒரே ரத்தமும் அதை எறிஞ்சாச்சு அதாலை அவர் அவர் நெடுக விரும்பி போடுற சிவப்பிலை செக்(கட்டம்) போட்ட சேட் ஒண்டு வாங்கினனான் நான் குடுத்தா வாங்க மாட்டார் அதாலை நீங்களே இதை அவரிட்டை குடுத்து விடுங்கோ என்று அவனிடம் நீட்டினாள்.

சிறிது யொசித்த அந்த போராளி சரி தாங்கோ குடுக்கிறன் எனறவாறு வாங்கி கொண்டு போனவன். கோணேசிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு டேய் இந்தா உனக்கொரு சேட்டும் வாங்கினனான் போட்டுபார் என்று அந்த சேட்டை நீட்டினான்.அவனை நிமிர்ந்து பார்த்த கோணேஸ் நீ எனக்கு இப்ப சேட்டுவாங்கினனி இதை என்னை நம்பசொல்லுறாய்?? எனக்கு தெரியும் யார் வாங்கி தந்திரு்பினம் எண்டு பேசாமல் அவையிட்டையே அதை கொண்டு போய் குடுத்திட்டு காம்பிலை என்ரை உடுப்பு பையிலை ஒரு சேட்டும் சாரமும் எடுத்துகொண்டுவாஎன்று அந்த போராளி அனுப்பிவைத்தான்.அந்த போராளியும் திரும்ப அவளிடமே அந்த சேட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

நான்கு நாட்கள் கழித்து 20.05.87 அன்று வழைமை போல விடிந்த காலை 7.மணியளவில் இலக்கம்3 என்று அடைமெழியில் அழைக்கப்படும் ஒட்கப்புலம் புலிகளின் முகாமின் வோக்கியில் பலாலி தொண்டைமானாறு வீதியில் வழளாய் என்கிற கிராமத்தின் காவல் கடைமையில் இருந்த ஒரு போராளியின் அழைப்பு

நம்பர்3..... நம்பர் 3... குட்டி......... ஓவர்.........

குட்டி.... குட்டி .......நம்பர் 3....சொல்லுங்கோ ஓவர்.......

தொண்டைமானாறிலை இருந்து வந்த ஆமி குறூப் ஒண்டு ஒரு அம்பது பேரளவிலை றோட்டை விட்டு கீழை இறங்கிது என்ன செய்ய ஒவர்.......

வடிவா பாருங்கோ திரும்பி றோட்டிலை ஏறி பலாலி பக்கம் போனால் பேசாமல் விடுங்கோ கூடுதலா உள்ளை இறங்கினா உதவிக்கு மற்ற சென்றிலை உள்ளவையையும் எடுத்து அடியுங்கோ நாங்கள் உடைனை வாறம் உடைனைக்குடைனை தொடர்பிலை இருங்கோ ஓவர்.....

என்று வோக்கியில் முகாமிலிருந்த போராளி கதைத்துகொண்டே மற்றைய போராளிகளிற்கு அறிவித்தல் கொடத்ததும் சில வினாடிகளிலேயெ அனைத்து போராளிகளும் ஆயுதங்களுடன் ஒரு யுத்தத்திற்கு தயாராய் வாகனங்களில் பாய்ந்து ஏறவும் வாகனங்கள் வளளாய் பகுதிக்கு செல்வதற்காக அச்சுவேலி சந்தியை நோக்கி விரைந்தன.அவர்கள் புறப்பட்டதுமே வழளாய் பக்கமிருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இராணுவம் குடியிருப்பு பகுதிகள் நோக்கி முன்னேற தொடங்கியதால் அங்கு காவல் கடைமையில் நின்ற போராளிகள் தாக்குதலை தொடங்கிவிட்டிருந்தனர்.

போராளிகளின் வாகனங்கள் அச்சுவேலி சந்தியை அண்மித்து கொண்டிருக்கவும் எதிரே வந்த ஒருவரின் சைக்கிளில் கொணேஸ் தனது முகாம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.கோணேச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலாடும் நினைவுகளுக்குள் ஆயிரமாயிரம் நினைவுகள் துளிர்க்கிறது. தேசத்தின் மீதான காதலில் தங்கள் வாழ்வு மீதான காதலைத் துறந்தவர்கள் தான் மாவீரர்கள். அந்த வகையில் தன்னையும் கரைத்த கோணேசின் நினைவுகளை மீட்டியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஆகா அஸ்வினி மாமி கன காலத்திற்கு பிறகு என்ன ஆத்திலை ஆம்படையான் அத்திம்பேர் குழந்தைகள் சேமமா இருக்காளா? நன்றி கறுப்பிக்கும் நன்றிகள் முக்கியமானவிடயம் என்னவெனில் கோணேஸ் என்கிற இந்த போராளியின் சொந்த பெயர் விபரம் எனக்கு ஞாபகத்தில் இல்லை எனவே அச்சுவேலியை சேந்தவர்கள் அல்லது இவரது விபரம் தெரிந்த உறவினர்கள் இவரது முழுபெயர் மற்றும் புகைபடங்கள் ஏதாவது இருந்தால் இணைத்து விடுங்கள்

Link to comment
Share on other sites

இன்று தான் யாழ் தேவி கந்தையாவின் கதையினை வாசித்தேன். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க,இந்திரா மகன் வாழ்க என்று கத்தியதும்......

நம்பி எமாந்து போய்விட்டோம். பிரிந்தாயோ பிரியதர்சினி என்ற துண்டுப்பிரசுரங்களைப்பார்த

Link to comment
Share on other sites

இந்திய இராணுவத்தின் செல்களுக்குத் தப்ப இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்த சிலர் தீபாவளி தினத்தன்று இந்திய இராணுவம் இந்துக்கள் என்பதினால் இன்று ஒன்றும் செய்யமாட்டினம் என்று நினைத்து தங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்றச் சென்று இந்திய இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்ட கொடுமையான சம்பவமும், அவர்களின் பிணங்கள் கோவிலின் பின் வீதிக்குப் பக்கத்தில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானத்தில் எறிக்கப்பட்டபோது பிணவாடையுடன் அன்றைய பொழுதினைப் போக்கிய மக்களுடன் நானும் இருந்த சோகக் கதை..

Link to comment
Share on other sites

அருமை சாத்திரி அவர்களே இவர்களின் கோரத்தை அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

யாழ்தேவி ட்ரைவர் அருமை இந்த அரக்கர்களுக்கு தெரியுமோ நம்பவச்சு கழுத்தறுத்தவர்தானே ராஜீவ்

இப்படி எத்தனை கந்தையாமார்

ஆனால் இந்திரா அம்மையார் இருந்திருந்தால் இப்போது சுதந்திர தமிழீழத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம் என நான் நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

ராணி அக்காவின் கதையினை வாசிக்க கண்களில் இருந்து நீர். அகிம்சை என்ற பொய் முக முடி போட்ட கேடுகெட்ட ஈனப்பிறவிகள். இதுவா ஜன நாயகம்?. பிரியதர்சினியின் மகனால் அழிக்கப்பட்ட இன்னொரு சகோதரியின் சோகக்கதை.

Link to comment
Share on other sites

காதலைவிட தேசம் தான் சிறந்தது என வீரமரணம் அடைந்த கோணேஸுக்கு எனது வீர வணக்கம். கோணேஸ் வீரமரணம் அடைந்த அன்று குப்பிளானில் வீரமரணம் அடைந்தவர் யாழ் மாவட்ட தளபதி லெப்டினன் கேணல் ராதா. அன்று குப்பிளான் மக்களுக்கு நடந்த சம்பவத்தினைப்பார்க்க http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=203053#203053 இங்கே செல்லவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஊர்பக்கத்தில் நடந்த போராளியின் நினைவுகளை மீள நினைவுபடுத்திய சாத்திரிக்கு நன்றிகள். போராட்டத்தில் துணிந்து, எதிரியின் துப்பாக்கியைக் கண்டு அங்சாமல் களம் ஆடிய போராளிகளின் வரிசையில் கோணோஸ் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவர். அவரை மீண்டும் நினைவு கூறுகின்றோம்!

Link to comment
Share on other sites

ஆசைகளை புதைத்துவிட்டு தாய் நாட்டிற்காக தம்மையே அர்பணித்துக் கொண்ட மாவீரர் கோணேஸ் அவர்களின் நினைவுப்பதிகளை தந்த சாத்திரிக்கு நன்றிகள்.

கோணேஸ் அவர்களுக்கு அஞ்சிலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.