.jpg)
(எஸ்.கே.பிரசாத்)
வடக்கு - கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க முன்வரவேண்டும் என்று தழிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமெரிக்க துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அமெரிக்க உதவித்தூதவர் தலைமையிலான குழுவினர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில்,
'தமிழ் மக்கள் இன்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அரசின் இராணுவத்தின் ஆதிக்கத்தின் மத்தியில் தமிழ் மக்கள் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தமிழீழம் என்ற ஒன்றுக்காக போராடியிருக்கின்றார்கள். தற்போது அனைத்தையும் இழந்து தமிழ் மக்கள் ஏதிலிகளாக வாழந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் இந்தப் போராட்டத்தின் அழிவுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இதனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்கா அக்கறையுடன் செயற்பட வேண்டும்' என்று இச்சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
அமெரிக்க குழுவினருடனான சந்திப்பின்போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை சர்வதேசம் சமூகம் ஏற்றுக்கொண்டு இதற்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு இவற்றிற்கு மேலாக தமிழ் மக்களின் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன.
அத்துடன் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில அபகரிப்பு காரணமாக தமிழர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் வடபகுதிக்கு படையெடுத்துள்.
இதனால் தமிழ் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
அத்துடன் தற்போது இலங்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலஅபரிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றால் தமிழ் தேசத்தை மேற்குலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilmirr...0-15-09-28.html















