Jump to content


Tamil Star News
Photo

ஈழத்தின் இசைக்குயில் சிட்டு அண்ணா!


  • Please log in to reply
No replies to this topic

#1 கலையழகன்

கலையழகன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 330 posts
  • Gender:Male

Posted 20 August 2012 - 03:39 AM


ஈழப் போராட்டத்தில் பாடல்களின் பங்கு அளப்பரியது. வெற்றிகளின் பின்னால் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள், வீழ்ந்த வீரர்களின் நினைவுப்பாடல்கள், மக்களின் துன்பதுயரங்களை வெளிப்படுத்தும் பாடல்கள், தலைவரைப் பற்றிய பாடல்கள் என பலவிதங்களில் அமைந்த பாடல்கள் போராட்டத்தில் மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்தன. ஈழப்போராட்டத்தின் இசையுலகில் தனக்கென்றொரு முத்திரை பதித்துச் சென்ற பாடகன் ஒருவனின் பதினைந்தாம் ஆண்டு நினைவுநாள் ஆவணிமாதம் முதலாம் நாளாகும்.

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.


தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் அவரின் கலைப்பயணத்தைத் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார். பாடகராக அறிமுகமானபின் பெருமளவு கலைத்துறை சார்ந்த கடமையே இவருக்கு வழங்கப்பட்டது.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது. ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல் அது. "சின்னச் சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்" சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும். கண்ணீரில் காவியங்கள் தொடங்கி சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.


தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு இயங்கி வந்தது. ஏனைய இசைக்குழுக்கள் போலவே இக்குழுவும் மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். தமிழீழ இசைக்குழுவின் நிகழ்வுக்கு ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணாவின் பாட்டு மட்டுமிருந்தாற்போதும், இசைக்குழு களைகட்டிவிடும்.

ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்கள அரசு தமிழர்மேல் போர் தொடுத்தபோது வன்னிப்பெருநிலப்பரப்பே போர்க்கோலம் கொண்டது. விடுதலைப்புலிகள் பல படையணிகளை உருவாக்கிக் களம்காண ஆயத்தமாகினர். தென் தமிழீழத்திலிருந்து ஆயிரத்துக்குமதிகமான போராளிகள் ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளவென வன்னிக்கு வந்து சேர்ந்தனர்.

இந்நேரத்தில்தான் சிட்டண்ணாவும் களத்துக்குச் சென்றார். ஓரணியைத் தலைமைதாங்கி புளியங்குளம் பகுதியில் காப்பரண்கள் அமைக்கும் பணியைத் திறம்படச் செய்துமுடித்தார். சண்டை வலுத்தபோது களத்திலே இறங்கும் நேரம் சிட்டண்ணாவுக்கு வந்தது.

ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று 01.08.1997 அன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

சிட்டண்ணா வீரச்சாவடைந்த செய்தி மக்களிடத்தில் பேரதிர்ச்சியை உருவாக்கியது. ஒவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்பட்ட, அனைவராலும் அறியப்பட்ட சிட்டண்ணாவின் இழப்பு, கலையுலகத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் பேரழிப்பாகவே அமைந்தது.

"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற கருத்து பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தான் அமைந்திருந்தன. கரும்புலிகள் நினைவுப்பாடல்களும் பொதுவான மாவீரர் நினைவுப்பாடல்களும் பெரும்பாலும் அவரது குரலிலேயே வெளிவந்துள்ளன.

தான் வீரச்சாவடைந்தால் தனக்காக ஒரு பாடலைத் தயாரியுங்கள் என்று பகடியாகச் சொல்லிச் சென்ற சிட்டண்ணாவுக்குரிய முதலாவது நினைவுப்பாடலான ‘சிட்டுச் சிட்டு சிட்டு எங்கள் மண்ணில் பூத்த மொட்டு’ என்ற பாடலை சாந்தன் அவர்கள் பாடினார்.

ஈழப்போராட்டத்தின் பாடற்பரப்பில் என்றும் அணையாத விடிவெள்ளியாக மிளர்ந்துகொண்டிருக்கும் மாவீரர் மேஜர் சிட்டுக்கு எமது பதினைந்தாமாண்டு நினைவு அஞ்சலி உரித்தாகட்டும்.

-ஈழமுரசு ஒஸ்ரேலியா

http://tamilleader.c...0-03-08-09.html

“பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப் போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும்!. எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டும்!”

-தமிழீழத் தேசியத் தலைவர்

 

BlackHeader_v4.png


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]