Jump to content


Orumanam
Photo

"உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" - புல்லட்ஸ்.


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 17 August 2012 - 12:21 PM

"நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!"

திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்!

ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் கலையாகச் செய்பவர்கள்!

சரி..உங்களுக்குத் தெரிந்தவர்கள்,நீங்கள் கேள்விப்பட்டவர்கள் இவர்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள்....
"ஆசிரியன் என்ற பெயரில் பள்ளிச் சிறுமிகளைப் பாழ் படுத்தியன்!"...
"சாதி,மதம் என்று,மக்களைப் பிளவுபடுத்தி...நாட்டைச் சீரழிக்கும் அரசியல்வாதி!"
"காசுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பச்சோந்திகள்!"
"அரசு மருத்துவ மனையில் கையெழுத்துப் போட்டுவிட்டு,அவன் சொந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவன்"
"கமிஷனுக்கு ஆசைப்பட்டு,கலவையில் கைவைக்கும் காண்டிராக்ட் காரன்"
"ஆற்று மணலை கடத்தும் அயோக்கியன்"
"வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்,வேலை ஏய்ப்பு நிறுவனங்கள் நடத்துபவன்"
"குடும்பப் பெண்களை விபசாரத்தில் தள்ளும் மாமாப் பையன்!"
இப்படி....இப்படி....இன்னும் அனேக சமூக விரோதிகள்!...இப்பொழுது சொல்லுங்கள் இவர்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்,கேள்விப் பட்டும் இருக்கிறீர்கள்தானே?

ஆனாலும் பாருங்கள்...இதுபோல நபர்களைக் கொல்ல,எந்த `நல்லவர்களும் எங்களுக்கு வாய்ப்பே தருவதில்லை!
இதில் இன்னும் ஒரு விபரீதம் என்னவென்றால்...இதுபோல நபர்கள்,எங்களை விலைக்கு வாங்கி வைத்திருப்பதுதான்!
ஆக...துரதிஷ்ட வசமாக நாங்கள் கொல்ல நேர்வது எல்லாம்...
"மணல் கடத்தலைத் தடுக்கும் இளைஞன்"
"சரண் என்று,கையைத் தூக்கிவரும் அகதி!"
"போதை மருந்து கடத்தலைத் தடுத்த காவலர்"
இப்படி...இப்படி...அப்பாவிகள் லிஸ்டாகவே இருக்கிறது!

எந்த ஒரு மன உறுத்தலும் இல்லாமல்,எப்படி உங்களால் கொல்ல முடிகிறது என நீங்கள் கேட்கலாம்...அதான் முன்னமே சொல்லிவிட்டோமே..."விலைக்கு வாங்கியவர்களுக்கு விசுவாசமானவர்கள் நாங்கள்"...டாட்!
என்றாலும் சில நேர்மையான நபர்கள்,அபூர்வமான சில தருணங்களில் எங்களைப் பயன்படுத்தியது உண்டு...
இவர்கள் சுட்டிக் காட்டும் நபர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்...உண்மையில் அவர்கள் இந்தச் சமூகத்தில் வாழவே அருகதையற்றவர்கள்...அவர்களைப் போட்டுத் தள்ளும் போது மட்டும்,எங்களிடம் ஒரு உற்சாக வேகம் பீறிட்டுக் கிளம்பும்!.

உங்களுக்குத் தெரியுமா?...எவ்வளவு கொடூரமானவனும்,மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்தக் கடைசி நொடிகளில்,அதாவது எங்களை நேராக சந்திக்கும் தருணத்தில்...அவர்கள் கண்களில்,அவர்கள் அதுவரை செய்த பாவங்களை மன்னித்து,உயிர்ப் பிச்சை தரும்படி...ஒரு கெஞ்சுதல் தெரியும்!...அந்த நொடி... அந்த நொடி...நாங்கள் தயங்கித் தடுமாறித்தான் போவோம்!...நாங்கள் தயங்கித் தாமதிக்கும்,அந்த `மைக்ரோ`செகண்டில்...அவர்கள் கண்களில் மறுபடியும்,ஒரு நம்பிக்கையும்...அதே பழைய குரூரமும் திரும்பும் பாருங்கள்!!!...பெரும்பாலும் இந்த நேரத்தை நாங்கள் `மிஸ்`செய்வதில்லை...வெடித்துக் கிளம்பி,நேராக அவர்கள் நெற்றிப் பொட்டோ,இதயமோ...அசுர வேகத்தில் பாய்ந்து குத்திக் கிழித்து விடுவோம்!...இளம் சூடான அவர்கள் குருதி...எங்களை நனைக்கும் அந்தத் தருணம் இருக்கிறது பாருங்கள்...ஆஹா!...உண்மையில் அப்பொழுதுதான் எங்களின் ,பிறவிப் பயனை முழுதாய் உணர்கிறோம்!

ஐயோ!...இவ்வளவு கொடூரமானவர்களா நீங்கள்?...இதயத்தில் கருணையே இல்லாத `ஜடமா` நீங்கள்? என நீங்கள் சந்தேகிப்பது புரிகிறது...

உண்மைதான் மனிதர்களே!...நீங்கள் யூகித்தது சரிதான்...நாங்கள் `ஜடம்`தான்....எங்களை `தோட்டாக்கள்`என அழைப்பார்கள்!....`புல்லட்ஸ்`என்று ஆங்கிலத்தில் சொன்னால்...தமிழர்களாகிய நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்!.
எங்கள் இருப்பிடம் துப்பாக்கிகள்தான்...எங்களைப் பயன் படுத்துவதும் நீங்கள்தான்!

என்ன?!!!...ஜடப் பொருள்கள் எல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனவா?என நீங்கள் வியப்பது புரிகிறது...
"சிந்திக்க வேண்டிய மனிதர்களான நீங்கள் `ஜடமாகிப்`போனதால்...ஜடமான நாங்கள் சிந்திக்க வேண்டியது ஆகிவிட்டது மனிதர்களே!"
ஆறறிவு படைத்த மனிதனை.. போயும் போயும்... ஜடப் பொருள்கள் கேலி பேசுவதா..என ,உங்களில் பலர் கூச்சலிடுவது கேட்கிறது...உண்மையில் எங்களை `ஜடம்`என கேலி பேச,உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை மனிதர்களே!..அதிலும் குறிப்பாக `தமிழர்களான`உங்களுக்கு சுத்தமாய் அந்த யோக்யதை இல்லை..!

யாழ் நூலகம் தெரியுமா?...யாழ் நூலகம்!...இலங்கையில் அது எரிக்கப் பட்டபோது இங்கே இந்தியாவில் நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழர்களே?`ஜடமாக`நின்று வேடிக்கைதானே பார்த்தீர்கள்?!...நூலகக் கட்டிடங்களும்..நூல்களும்...கேவலம் `ஜடப்`பொருள்கள் என்றுதானே அத்தனை அலட்சியம் உங்களுக்கு?...அட முட்டாள்களே!...அவர்கள் எரித்தது...உங்கள் மொழியை...உங்கள் இனத்தை...உங்கள் வரலாற்று ஆதாரங்களை!.
அட ...ஆடுமாடு கூட ,தன இனத்திற்கு ஒரு ஆபத்து என்றால்..ஒற்றுமையாகக் குரல் கொடுக்கிறதே!..குறைந்த பட்சம் ..அந்த உணர்வாவது உங்களுக்கு இருக்க வேண்டாமா?
"ஆயிரம் மக்கள் அழிக்கப்படுவதை விட..ஒரு நூலகம் அழிக்கப்படுவது அதிக ஆபத்தானது"
என்று கூடவா உங்கள் `பகுத்தறிவு `உங்களுக்குச் சொல்லவில்லை?!

என்ன தலை கவிழ்ந்து நின்று விட்டீர்கள்?
யோசித்துப் பாருங்கள் மனிதர்களே!...நாங்கள் ஜடமாகப் பிறந்து,ஜடமாகவே மடிந்தும் விடுகிறோம்...ஆனால் உயிருள்ள,பகுத்தறிவுள்ள மனிதனாகப் பிறந்த நீங்கள்...ஜடமாக அல்லவா...உங்கள் நிலையில் இருந்து,கீழே இறங்கி விட்டீர்கள்?..
இப்பொழுதாவது புரிகிறதா எங்களின் ஆதங்கம்?.
எங்களுக்கும் சரியான நபர்களின் கரங்களில் இருந்து,தவறான நபர்களை தண்டிக்கவே ஆசை மனிதர்களே!...எந்த நிலையிலும் தவறு எங்களுடையது அல்ல...நாங்கள் வெறும் கருவிகளே!...அதனால்தான் மீண்டும் உங்களைக் கேட்கிறோம்..
நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்...உங்களுக்குத் `தெரிந்தவர்கள்` யாராவது இருந்தால் சொல்லுங்கள்!
http://iyyanarss.blo.../blog-post.html
  • வல்வை சகாறா and நிலாமதி like this

ninaivu-illam

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]