எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது, வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள "அக்கரை' என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் மயிலிட்டி பிரதேசமானது மண்வளமும், கடல்வளமும், கைத்தொழில் வளமும் கொண்ட பிரதேசமாக இருந்தது. சொந்தத் தொழில் செய்தே நாங்கள் வருமானம் ஈட்டினோம். நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை.
ஆனால் தற்போது நாங்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற நாங்கள் வீடுகள் மாறிமாறி தொடர்ந்தும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் நாம் நிர்கதியான நிலையில் உள்ளோம்.
கடற்றொழில் தவிர மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் வேறு எவ்விடத்திலும் தொழில் செய்ய முடியாத நெருக்கடிக்குள் நாம் வசித்து வருகின்றோம். இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் இருந்தது.
மயிலிட்டித் துறையில் கடற்றொழில் செய்பவர்களைத் தவிர அந்தத் தொழிலை அண் டித் தொழில் செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுடை நலன்புரி முகாமில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாம் இங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.
மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.
வளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது. இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார். இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது.
http://onlineuthayan...581268928701070
Edited by akootha, 28 July 2012 - 03:57 AM.















