Jump to content


Orumanam
Photo

இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?


 • Please log in to reply
2 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 10:37 AM

இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?

ஆக்கம்: கே. சஞ்சயன்


குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடியது போலத் தான், இந்தியாவும் இப்போது இலங்கை விவகாரத்தில் ஓடவிட்டதைப் பிடிக்க முனைகிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியாவுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சிக்கல் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல. சின்னஞ் சிறிய நாடான இலங்கை தான்.


எப்போதும் தன் காலடிக்குள் கிடக்கும் என்று இந்தியா நம்பிய இலங்கை, அதன் கால்களுக்குள் புகுந்து ஓடி விளையாடத் தொடங்கி விட்டதால், இந்தியா இன்று என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. சீனாவின் செல்வாக்கில் இருந்து, இலங்கையை எப்படித் தன்பக்கம் இழுப்பது என்ற சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய நிலையில் இப்போது உள்ளது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை எப்போது முடிவுக்கு கொண்டு வந்ததோ, அப்போதே இந்தியாவின் கையை விட்டு இலங்கை போய்விட்டது.


ஜே.ஆரைப் போலவே மஹிந்த ராஜபக்ஷவும் மிகவும் தந்திரசாலி என்பது பலருக்குப் புரிவதில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை- இந்தியாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நடத்திய விதத்தைப் பார்க்கும் எவரும், அவர் ஒரு தந்திரசாலி என்பதை நம்பித் தான் ஆக வேண்டும்.


ஒரு பக்கத்தில் சீனாவிடம் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்தும் தேவையானளவுக்கு ஆயுதங்களை வாங்கி புலிகளுக்கு எதிரான போரை நடத்திக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அந்த நாடுகளுக்கு விரோதமான இந்தியாவுடன் உறவுகளைப் பேணி- விடுதலைப் புலிகளை காப்பாற்றக் கூடிய புறச்சூழல்களையெல்லாம் அவர் உடைத்தெறிந்திருந்தார். இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஒத்துழைக்காது போயிருந்தால், சீனாவினதோ, பாகிஸ்தானினதோ ஆயுதபலத்தை வைத்து ஒன்றையும் சாதித்திருக்க முடியாது.


சர்வதேச அழுத்தங்கள் எப்படியோ ஒரு கட்டத்துக்கு அப்பால் போரை நகர்த்த இடமளிக்காத நிலையை உருவாக்கியிருக்கக் கூடும்.


மிகவும் நெருக்கடியான சமயத்தில் ஜே.ஆர் மிகத் தந்திரமாக இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியை பொறியில் சிக்கவைத்து, இந்தியப் படைகளை வடக்கு, கிழக்கில் கொண்டு வந்து இறக்க வைத்தார். இதன்மூலம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போர் இலங்கை இராணுவத்திடம் இருந்து இந்தியப்படைகளின் கைக்கு மாறியது. ஜே.ஆர் ஒதுங்கி நின்று அதை வேடிக்கை பார்த்தார். அதேபோலத் தான், இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.


போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் இந்தியா எதிர்பார்த்தது போன்று எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், பி்ராந்திய வல்லரசாக இருந்தும், இலங்கை விவகாரத்தில் இந்தியா கையாலாகாத நிலையில் தான் இருக்கிறது.


போர் முடிவுக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவின் இரண்டு வெளிவிவகார அமைச்சர்கள், இரண்டு வெளிவிவகாரச் செயலர்கள், இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று முக்கிய அதிகாரமட்டத்தினர் எல்லாம் கொழும்புக்கு பலமுறை வந்து போயினர். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மட்டும் தான், இன்னமும் கொழும்புக்கு வந்து அழுத்தம் கொடுக்த குறை. அவர் கூட, புதுடெல்லியிலும், வெளிநாடுகளில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் போதெல்லாம் இதுபற்றிப் பலமுறை கூறிவிட்டார். இலங்கையிடம் முடிந்தளவுக்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பார்த்து விட்டது புதுடெல்லி. ஆனாலும் இலங்கை அரசை மசியவைக்க முடியவில்லை.


இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்திலும் சரி, வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தும் விடயத்திலும் சரி, இந்தியா சொல்லும் எதையும் இலங்கை செய்யவும் இல்லை. கேட்கவும் இல்லை.


அதேவேளை, ஒரேயடியாக இலங்கை அவற்றை நிராகரித்து விடவும் இல்லை. ஆமாம்... செய்கிறோம்.. என்று சொல்லப்படும். வாக்குறுதியும் அளிக்கப்படும். ஆனால், அது நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படும். இந்த நடைமுறை தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.


கடைசியாக கடந்த மாத இறுதியில் கொழும்பு வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்குக் கூட இலங்கை அரசை இணங்க வைக்க முடியாது போனது. இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் கையை விட்டுப் போய் விட்டது என்று சொல்வதில் தப்பில்லை.


அதிலும், ஜெனிவா தீர்மானத்தின் போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டை அடுத்து, இலங்கையின் அலட்சியப் போக்கு இன்னும் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. அதனால் தான் தனது கொழும்புப் பயணத்தின் முடிவில் சிவ்சங்கர் மேனன், ஜெனிவாவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள மீளாய்வுக் கூட்டத்தை நினைவுபடுத்தியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா எந்தப் பங்கையும் வகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில் தான் இந்தியா இன்னொரு கதவைத் திறந்து உள்ளே நுழையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையுமாறு கோரியுள்ளார்.


தம்முடன் முதலில் பேசி இணக்கப்பாடு கண்ட பின்னர் தெரிவுக்குழுவில் இணைவது பற்றி யோசிக்கலாம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.


ஆனால், இந்தியாவோ நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு போய் நிறுத்த முனைகிறது. இதற்கான காரணத்தையும் அசோக் கே காந்தாவே கூறியுள்ளார்.


இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஏனைய எந்தவழியிலும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த வழியிலேனும் ஏதேனும் ஒரு இணக்கத்துக்கு வருகிறதா என்று பார்க்கலாம் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு.


இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணிய வைக்க முடியாத நிலையில் தான் இந்தியா கடைசிக்கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.


நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலேனும் ஏதாவது தீர்வு வருகிறதா என்று பார்க்கலாம் என்ற இந்தியாவின் கருத்து, இலங்கை அரசின் மூலம் தீர்வு ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா தோல்வி கண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் ஒரு தீர்வை பெறமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கூட இந்தியாவினால் வெளிப்படுத்த முடியவில்லை.


உள்ளே வாருங்கள் பார்க்கலாம் என்பது தான் இந்தியாவின் பதிலாக இருந்துள்ளது. போருடன் முடிந்து போன இலங்கை மீதான இந்தியாவின் பிடியை, மீளக் கைப்பற்றும் இந்தியாவின் முனைப்புக்கு வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.


இப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே நம்பிக்கையும் – பிடிமானமும் என்னவென்றால், வரும் நவம்பர் முதலாம் திகதி நடக்கவுள்ள ஜெனிவா மீளாய்வுக் கூட்டம் தான்.


அதைக் கூட இந்தியா எந்தளவுக்கு உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது தெரியவில்லை. இந்தநிலையில் பிராந்திய வல்லரசான இந்தியா- உலக வல்லரசாக உருவெடுப்பதற்கு பெரிய நாடுகள் ஒன்றும் சவாலாக இல்லை.


சின்னஞ்சிறிய இலங்கை தான் அதற்குச் சவாலாக மாறியுள்ளது.


இந்தச் சவால் உருவாக இலங்கையின் போக்கோ, சீனாவின் செல்வாக்கோ மட்டும் காரணமல்ல இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் கூடத் தான்.


மூலம்: தமிழ் மிரர் - ஆடி24, 2012
பிரசுரித்த நாள்: Jul 24, 2012 10:12:36 GMT


 • குமாரசாமி likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 விவசாயி விக்

விவசாயி விக்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,219 posts
 • Gender:Male
 • Location:ஒன்டாரியோ, கனடா
 • Interests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்

Posted 24 July 2012 - 01:47 PM

இருக்கிறதை தக்கி கொள்ளவே வழி இல்லை.

நேபால், பூட்டான் போன்று சீனாவிடம் சிறி லங்கா காரரை தாரை வார்த்துவிட்டார்கள்.

இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.

 


#3 அன்புசிவம்

அன்புசிவம்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 62 posts
 • Gender:Male

Posted 27 July 2012 - 03:25 AM

இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?

போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் இந்தியா எதிர்பார்த்தது போன்று எதுவுமே நடக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்திலும் சரி, வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தும் விடயத்திலும் சரி, இந்தியா சொல்லும் எதையும் இலங்கை செய்யவும் இல்லை. கேட்கவும் இல்லை.இதையெல்லாம் சொல்லத்தான் பிரனாப்பும், மற்ற பல அமைச்சர்களும் இந்தியாவில் இருந்து வந்தனர் என்று இன்னும் நம்புவது கவலையளிக்கிறது. இந்திய அரசின் நோக்கம் எல்லாம் எப்படி இந்தியாவின் பன்னாட்டு கம்பெனிகள் இலங்கையில் காலூன்றுவது, மற்றும் இதை சாக்காக வைத்துக்கொண்டு எப்படி தனக்கான சில பல தனிப்பட்ட ஆதாயங்களை தேடிக் கொள்வது என்பதற்காகத்தான். ஒன்றும் தெரியாத அப்பாவியாக நீங்கள் இங்கே இந்தியாவை சித்தரிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதெல்லாம் இந்தியாவின் கனவில் கூட இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருப்பது இந்தியாவுக்கு மிகவும் பிடித்தமானதாகத்தான் தெரிகிறது.
விட்டு விடுதலை யாகிநிற் போமிந்தச் சிட்டு குருவியை போலே.....


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]