Jump to content


Tamil Star News
Photo

"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்


  • Please log in to reply
1 reply to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,241 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 20 July 2012 - 05:17 PM

"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்


Posted Image
தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் தலையாய என்னை அடுத்த ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு விஸா அனுப்ப வைத்துவிட்டது.

அதன் பின் நடந்த ஆரம்ப நாட்களின் களோபரங்கள், விஷ்ணுபுரம், காவல் கோட்டம் அளவுக்குப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ள வேண்டியவை என்றாலும் இன்றுவரை எனக்கு முள்ளாய் ஒரு விஷயம் குத்திக் கொண்டே இருக்கிறது. மெல்பனுக்கு நான் வந்த பின்னர் பழக்கமான ஒரு சகபாடி, இவன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன், வந்து ஆறுமாதம் தான் ஆகியிருக்கும், நம் ஊர்ப்பழக்க வழக்கங்களை நையாண்டி பேசிக் கொண்டும், தான் இனி ஒஸி என்றும் பட்டம் குத்திக் கொண்டான். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்த நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றது, பல சமயங்களில் சிலரது செய்கைகள் அதைத்தானாக நினைப்பூட்டிக் கொண்டு.

கடந்த வியாழன் அன்று அவுஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர இலாகாவின் (Australian Bureau of Statistics) 2011 ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டு விபரங்கள் வந்தபோதும் பழைய சகா கதவைத் திறவடி கதையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. எனக்கும் சரி, இந்தக் குடிசன விபரத்தை எதிர்பார்த்த சக நண்பர்களுக்கும் ஓரளவு ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகத் தான் எண்ணத் தோன்றியது 2011 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டில் தமிழர் எண்ணிக்கை தொடர்பான தகவல். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தரவுகளின் படி அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 151 பேர் என்பதாக இருக்கின்றது. இதைவிட சில ஆயிரமாவது மேலதிகமாக இருக்கலாம் என்பதே நமது ஐயமாக இருக்கின்றது. தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்த விரும்பாதோர், இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள், சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தோரில் தமிழை மூத்த தலைமுறை மொழியாக மட்டும் கொண்டு, ஆங்கிலத்தைத் தம் தாய் மொழியாகத் தழுவிக் கொண்டோரும் என்று இந்த இருபதாயிரத்துக்குள் வருமோ என்று நினைப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் புள்ளிவிபர இலாகாவின் அறிக்கையின் பிரகாரம் கிடைத்த தகவல்களை வைத்து அலசி ஆராயலாம் என நினைக்கிறேன். 2011 ஆம் ஆண்டின் ணக்கெடுப்பின் விபரங்கள் கடந்த வாரம் வெளியாகின்றன என்ற செய்தியறிந்து புள்ளிவிபர இலாகாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரமான தகவல் கையேடு ஏதும் அச்சில் கிட்டுமா என்று கேட்டேன். இணையத்தைப் பார்க்கச் சொன்னார்கள். எனது அலுவலகத்தில் இருந்து ஒரு எட்டு நடந்தால் பிராந்திய புள்ளிவிபர இலாகா அலுவலகம் உண்டு எனவே அதன் படியேறினேன். எந்த விபரம் தேவை என்றால் நாங்கள் பிரதியெடுத்துத் தருவோம் ஆனால் நாளாகும், காசும் ஆகும் என்றார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்தக் கணக்கெடுப்பில் ஏன் இணையத்தை மட்டும் நம்ப வைக்கிறார்களோ, மக்கள் வரிப்பணத்தில் கொஞ்சூண்டாவது இப்படியான பயன்தரு வேலைகளின் அச்சிடும் பணிக்கு ஒதுக்கலாமே அரசே?


2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 50 ஆயிரத்து 151 பேர். இதன் முக்கிய பங்காளிகளைக் கீழ்வரும் அட்டவணை விளக்குகின்றது.


Posted Image

இதில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னும், 95 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரித வேகமாகவும் அகதிகளாகக் குறிப்பிடத்தமிழர்களை உள்வாங்கிக் கொண்டது இந்த நாடு, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொழில், கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். அடுத்த நிலையில் இருக்கும் இந்தியத் தமிழர் தொழில் மற்றும் கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வாழ்ந்த அடுத்த தலைமுறைத் தமிழர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை நோக்காகக் கொண்டு இந்த நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்கள். முதியோர் நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது பல சலுகைகளை (இலவசம் உட்பட) வழங்குவதே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள் என்று சொல்லலாம்.

அவுஸ்திரேலியாவை மாநிலங்களாக வகைப்படுத்தி முறையே நியூசவுத்வேல்ஸ் (தலைநகர் சிட்னி), விக்டோரியா ( தலைநகர் மெல்பர்ன்), குயின்ஸ்லாந்து (தலைநகர் பிரிஸ்பேன்), தெற்கு அவுஸ்திரேலியா (தலைநகர் அடலெய்ட்), மேற்கு அவுஸ்திரேலியா ( தலைநகர் பேர்த்), வட மாநிலம் (தலைநகர் டார்வின்), தஸ்மேனியா (தலைநகர் ஹோபார்ட்), ஆகியவை மாநில ஆட்சியின் கீழும் அவுஸ்திரேலிய தலைநகர் பிராந்தியம் (தலைநகர் கான்பெரா) இது அரசாங்கத்தின் நேரடி ஆளுகையிலும் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ஆ.கந்தையா அவர்களின் People speaking Tamil at home in Australia என்ற நூலில் 2006 ஆம் ஆண்டு வரை தமிழர் குடியேற்றம் தொடர்பில் கீழ்க்காணும் அட்டவணை காணப்பெறுகின்றது. அதைத் தமிழில் தருகின்றேன்.


Posted Image

2000 - 2010 ஆம் ஆண்டுக்கும் உட்பட்ட காலப்பகுதியில் 1303 பேரில் இருந்து 2900 பேர் வரையாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதைவிடக் கண்டிப்பாக குடிபெயர்ந்த தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மதக் கோட்பாடுகளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து, அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் வழிபாட்டிடங்களை அமைக்கவும், பிரார்த்தனைகளில் ஈடுபடவும் வழி சமைத்திருக்கும் இந்த நாட்டில் தமிழரில் 36,940 பேர் இந்துக்கள், 4932 பேர் கத்தோலிக்கர், இஸ்லாமியர் 1893 பேர், அங்கிலிக்கன் திருச்சபை 1150 பேர், பெந்தகோஸ் 1055 பேர், எந்தவித மதமும் கைக்கொள்ளாதோர் 722 பேர் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

கீழ்க்காணும் அட்டவணைகள் 2011 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி தமிழரின் தனிநபர் வருமான வகுப்புகளைக் காட்டுகின்றன (SBS - Census Explorer 2012)

Posted Image
Posted Imageதாம் விரும்பிய கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கற்கவும், எந்தவிதமான பாரபட்சமான கல்விக்கொள்கையும் கொண்டிராத இந்த நாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் மேல்வகுப்புப் படித்தோர் பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே கற்றுத் தேர்ந்தோர் மேற்படிப்புக்குமாகத் தம் கல்வியைத் தொடர ஏராளமான கற்கை நெறிகளும், கல்வி நிறுவனங்களும் உண்டு. அதே சமயம் கல்வி, மற்றும் தொழில் சார் அனுபவத்திற்கேற்ப வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலும் இந்த நாட்டில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. தனியார் வியாபாரங்கள் குறிப்பாக இலங்கை இந்திய மளிகைக்கடைகள், இலங்கை, இந்திய உணவகங்களை வைத்திருப்போரும் கணிசமானோர் உண்டு. மேற்குலக நாடுகளோடு ஒப்பிடும் போது சொந்த வீடு வாங்கி வைத்திருப்போர் இந்த நாட்டில் அதிகம் எனலாம்.

Australia வில் தமிழ்க்கல்வி என்ற வகையில் ஆரம்பக் கல்வி தொட்டு பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி வரையாகத் தமிழை ஒரு பாடமாகப் பயிலக் கூடிய வாய்ப்பும் வசதியும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நியூ சவுத்வேல்ஸ் மாநிலம், மற்றும் விக்டோரியா மாநிலம் ஆகிய மாநிலங்களிலேயே பல்கலைக்கழகம் வரையிலான கற்கை நெறிக்கான வசதி உண்டு. இதனால் பெருமளவான தமிழ்ப்பிள்ளைகள் பயன்பெற்று வருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதற்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

ஊடகம் என்ற வகையில் பத்திரிகை ஊடகத்தைப் பார்ப்போமேயானால், இந்த நாட்டில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் தொடங்கி ஒருவருடமோ இரண்டு வருடமோ ஓடி ஓய்ந்த வரலாறுகள் உண்டு. இப்போது எஞ்சியிருப்பவை என்று பார்த்தால் ஈழமுரசு, தென்றல், தமிழ் ஓசை ஆகிய இலவச ஏடுகளும் கலப்பை, வல்லினம் போன்ற பணம் கொடுத்து வாங்கக் கூடியசஞ்சிகையும் அடங்குகின்றன. இந்திய சஞ்சிகைகளோடு போட்டி போட வேண்டிய சவாலையும், உள்நாட்டில் பரவலான வாசகர்கள் இன்மை, எழுத்தாளர்கள் அதிகம் நாட்டம் கொள்ளாமை போன்றவையே இந்த நாட்டில் இயங்கும் தமிழ்ப் புதினங்களுக்குச் சவாலாக அமைகின்றன.

வானொலி ஊடகத்தை எடுத்து நோக்கினால் SBS என்ற பல்லின மொழி பேசும் வானொலி வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையின் ஒரு மணி நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கியுள்ளது. இதைத் தவிர பல்வேறு சமூக வானொலிகள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று வாரத்தின் ஏதாவது ஒரு நாளைப் பங்கு போட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்குவதோடு 24 மணி நேரத் தமிழ் வானொலிகளாக அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இன்பத் தமிழ் ஒலி ஆகியவையும் இயங்குகின்றன. 24 மணி நேர வானொலிகளைக் கேட்பதற்கு விசேட கருவிகள் தேவை .

அதே சமயம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது இணையமூடாகவும் கேட்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.

உசாவியவை:
Australian Bureau of Statistics 20/06/2012
SBS - Census Explorer 2012
People speaking Tamil at home in Australia - Dr.A.Kandiah (January 2008)
கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் - கலாநிதி ஆ.கந்தையா (December 2004)


http://kanapraba.blogspot.ca/2012/06/blog-post_25.html

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

Advert

#2 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,985 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 21 July 2012 - 10:13 AM

இணைப்பிற்கு நன்றி நுணா..அவுஸ்ரேலியா செய்திகளை தாங்கி வரும் திரி ஒன்று நேற்று திறக்கப்பட்டு இருந்தது கண்டேன்...அதற்கு கீழ் இதை பதிந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..அல்லது நகர்த்தி விட்டால் ஒரு திரிக்கு கிளேயே பல்வேறு செய்திகளும் தாங்கி வரும் போது அங்கு,இங்கு என்று தேடித்திரியத் தேவை இல்லை.ஆகவே தான் சொல்கிறன் தவறாக கருதிகொள்ள வேணாம்.

 

நட்புடன்......யாயினி.

 





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]