சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்களுக்கு போரின் கதையையும் போர்ச் சூழலில் உள்ள பாடசாலைகளின் நிலவரங்களையும் இக்கட்டடம் எடுத்துச் சொன்னது. சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் பலரது கவனத்தை போர்வடு சுமந்த இக்கட்டடம் ஈர்த்தது. பலரும் இக்கட்டடத்தின் முன்பாக நின்று படம்பிடித்துச் சென்றுள்ளனர். இக்கட்டடத்தை போர் நினைவுச்சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று பாடசாலை மாணவர்கள் தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த கட்டடத்தை அழித்து புதிய கட்டடம் கட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்றபோதும் அதற்கு எதுவித நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை இடித்தழிப்பதற்காக மட்டும் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்குப் பதிலான புதிய கட்டடம் அமைப்பதற்கான எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு பாடசாலை மாணவர்களையும் அப்பகுதி மக்களையும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தங்களின் போது விடுதலைப்புலிகள் பாவித்த கட்டடங்கள் அல்லது அசையும் அசையாச் சொத்துக்கள் பல விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பதற்கு போரின் நினைவுச் சின்னமாக சிறிலங்கா இனவாத அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக கிளிநொச்சி தண்ணீர்தாங்கி. ஆனால் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட மாபெரும் கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய தடையங்கள் அழிக்கப்பட்டு, திட்டமிட்டு மறைக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த நடவடிக்கையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி மக்களின் நினைவுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறே விடுதலைப் புலிகளின் முதற் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதல் நினைவாக இருந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் கட்டடம் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசினால் இடித்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் சந்திரசிறி இந்தக் கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் இதற்கான நிதியையும் வழங்கி இருந்தார். குறித்த கட்டடம் உடனடியாக இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் நாள் அன்று கரும்புலித் தாக்குதலில் சேதமடைந்திருந்த இந்தக்கட்டடம் கரும்புலி கப்டன் மில்லரின் நினைவாக 22 வருடங்களுக்கு மேலாக அப்படியே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நினைவுச் சின்னங்களை அழித்து வரும் நிலையில், வடபகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இனவாத அரசு மேற்கொண்டுவருவதான தகவல்களை கடந்தவாரம் இப்பகுதியில் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டது. தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.
தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தை முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் கொண்டுவந்த
தையடுத்து அந்த 9000 சிங்களவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வந்துள்ளனர். இதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது. முன்னர் தமிழர்களால் நெற்செய்கை பண்ணப்பட்ட பகுதியில் தற்போது 600 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். வடக்கின் சனத்தொகை கணிசமாக குறைந்துவிட்டது. போரில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இந்தநிலையில் இது முக்கியமான விவகாரம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தமிழ் கடற்தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் பாஸ் அனுமதிப்பத்திர நடைமுறையினை பேணிவருகின்றவேளை, குறிப்பிட்ட பகுதிகளில் எதுவித நடைமுறைகள் தடைகள் இன்றிசிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கில் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறைகள் நீக்கப்பட்டு விட்டதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உண்மையில் பெரும்பாலும் பாஸ் அனுமதி நடைமுறை சத்தமின்றி தொடர்ந்தே வருகின்றது. யாழ். குடாநாட்டின் தீவகப் பகுதிகளில் கூட பாஸ் அனுமதி நடைமுறை அமுலில் இருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அண்மையில் தீவகத்தினில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் சூடுபிடித்திருந்தது. தென்னிந்திய மீனவர்களது அத்துமீறல்கள் மற்றும் ஊடுருவல்கள் பற்றி கடற்படை தரப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தெற்கிலிருந்து வருகை தந்துள்ள மீனவர்களிற்கு இவ்வாறான பாஸ் அனுமதி நடைமுறை அமுல்படுத்தப்படுவதில்லையே என உள்ளுர் மீனவர்கள் தரப்பினில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதே நிலை வடமராட்சி கிழக்கு முதல் முல்லைதீவு கொக்கிளாய் வரையுமாக நீடிக்கின்றது. மறுபுறத்தே பூநகரி மன்னாரென இப் பாஸ் அனுமதி நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மன்னார் குருசுப்பாடு கிராமத்தினில் மீளக்குடியமர்த்த மக்கள் இரவோடிரவாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டியிருப்பதாக மீனவ அமைப்புக்கள் கூறுகின்றன. பெரும்பாலும் தெற்கிலிருந்து படையெடுத்து வந்துள்ள மீனவர்கள் தடை
செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலையே மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினதும் சில அமைச்சர்களது பின்புலமும் இருக்கின்றது. ஆனால் அவர்களை எவருமே கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு எந்த நடைமுறையும் தேவையில்லை. ஆனால் உள்ளுர் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை என்கிறார்கள்.
தொழிலுக்கு செல்ல தடைவிதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர். புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே, தாயகத்தில் எம் உறவுகள் சிங்களத்தின் பிடியில் படும் கொடும் துன்ப துயரங்களை சர்வதேசத்தின் காதுகளுக்கு கேட்கும்படி எடுத்துரைப்போம். இதற்கு நாம் ஒருமித்துக் குரல்கொடுப்போம். இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒருமித்து செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு
அழிக்கப்படும் நினைவுகள்! - கந்தரதன்
Started by
யாழ்அன்பு
, Jul 16 2012 10:47 PM
No replies to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]
















