
முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய காலகட்டத்தில் இது முறையா? முறையா என்பதை விட மிகப் பெரிய முட்டாள்தனம் இது.
நம் அப்பாக்களை கொஞ்சம் உன்னித்து பாருங்கள், மனைவியிடம் ம்,சரி,என்ன,ஆமா என்று தான் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளை மட்டும் பேசுவார்கள், ஆனால் மற்ற பெண்களிடம் அதிகமாக பேசுவார்கள். அதாவது மற்றவர்கள் முன்னிலையில் நான் என் மனைவி சொல்லை கேட்பவன் அல்ல. என் சொந்த சிந்தனையை பயன்படுத்துவன் என்று காட்டிக் கொள்ள. அப்படியான பெண்களை தான் இந்த சமூகத்தின் ஆண்கள் இன்றும் விரும்புகிறார்கள்.
இதே, தான் கேட்ட எதையும் வாங்கித் தராத ஒரு அம்மா, எப்போதும் முறைக்கும் ஒரு அம்மா போன்ற மனைவியை ஆண்கள் எதிர்பார்ப்பார்களா? இல்லையே.
முதலில் அம்மாவையும், மனைவியையும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அம்மா என்பவர் ஒரு மகனை/மகளை பொறுத்த வரை வெறும் மனுஷி அல்ல. அடுத்தவர் வாழ்க்கைக்கு வெளிச்சம் தர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல, ஒருவனால் எப்போதும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வாழ்ந்து விட முடியாது, தன்னை உயர்த்திக் கொள்ள, உணர்ந்து கொள்ள அதை விட மேலான ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. அது ஒரு டார்ச் லைட் ஆகவோ அல்லது சூரியன் ஆகவோ கூடவோ இருக்கலாம். அந்த இரண்டாவது தான் மனைவி. இரண்டு பேரும் வேறு வேறு தலைமுறையில் இருக்கிறவர்கள். உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, அதே அளவு அம்மாவுக்கும் மனைவிக்கும் இருக்கும் அல்லவா?

தன் மனைவி தன் அம்மாவை போல இல்லை என்பவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்று சமையல். அதெப்படிங்க மகனாக உங்களுக்கு பிடிக்கும் சமையல், உங்கள் அப்பாவுக்கு ஒரு கணவராக எப்படி பிடிக்கிறது? உங்கள் அம்மா, உங்கள் அப்பாவின் அம்மாவைப் போலத்தான் சமைக்கிறாரா? உங்க அப்பாவுக்கு கிடைச்சது போல ஒரு அனுசரனையான பொண்டாட்டி வேணும் ஆனா உங்களால் அனுசரித்து போக முடியாது. இதெப்படி நியாயம் ஆகும். உங்கள் மனைவி செய்யும் சமையல் உங்கள் குழந்தைக்கு பெரும்பாலும் பிடிக்கும் தானே? அப்போ தப்பு யார் மேல.
உங்க அப்பா இன்னும் அவங்க அம்மா சாப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே சாப்பாடு ஒழுங்கா வராது பாத்துக்கோங்க.
அடுத்து என் மனைவி என் அம்மா போல பாந்தமாக சேலை கட்டி தான் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் மாடர்ன் உலகத்தை வரவேற்பார்கள்,பெண்கள் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வார்கள். எப்படி என்றால், தன் அலுவலகத்தில், தான் பார்க்கும் பெண்கள் மாடர்ன் உடை உடுத்தினால். ஆனால் தன் மனைவி அப்படி இருக்கக் கூடாது. அப்படி எல்லோரும் நினைத்து இருந்தால் பாண்ட்,ஷர்ட் போட்ட ஒரு பெண்ணை கூட நீங்கள் தெருவில் பார்க்க முடியாது, அப்படிபட்ட மாடர்ன் பெண்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் நான் மாடர்ன் பார்ட்டி என்று, இன்னும் 60களை தாண்டாத அசடுகள் நீங்கள்.
இன்றைய பெண்கள் யாராவது தங்கள் அப்பாவை போல கணவரை கேட்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. ஏன் அப்பா என்பவர் தன்னிடம் பாசமாக இருக்கிறார் என்பதை தாண்டி, தன் அம்மாவை அவர் சக மனுஷியாக நடத்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்படி கேட்கும் பெண்கள் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வேண்டும்.
சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன், (இதுக்கு நிறைய லைக் வேற, நான் கொடுத்தேனா என்று தெரியல)
“கோவம் வந்தால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பவர் அம்மா, சமைக்காமல் படுப்பவள் மனைவி”
இது என்னய்யா கொடுமை, உங்க அம்மா உங்களுக்கு மட்டுமா சமைக்கிறார், தன் கணவனுக்கும் தானே? ஒரு குழந்தை பிறந்த பின் உங்கள் மனைவியும் இதையே தான் செய்வார். சரி அப்படியே கோவம் வந்தால் யாரால்? பெரும்பாலும் கணவனால், அப்படி வந்தால் கோவத்தைக் காட்டுவதில் என்ன தவறு? ஒரு ஆண் கோவத்தைக் காட்டலாம் ஆனால் பெண் காட்டக் கூடாதா?
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே , உங்கள் அம்மா என்பவர் ஒரு ஆணுக்கு மனைவி, உங்கள் மனைவி என்பவர் ஒரு மகனு(ளு)க்கு தாய்(வருங்காலத்தில் கூட இருக்கலாம்).
- Prabu Krishna -
பி.கு:- இதனை வாசிக்கும் போது நெடுக்ஸ் அண்ணாவின் நினைவு வந்தது.
அவர் ஒரு திரியில் கூறியிருந்தார், "தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே" என்று. இங்கு மனைவியில் தவறா கணவனில் தவறா என்ற கேள்விக்கு விடை இங்கு உண்டு.
Edited by துளசி, 04 July 2012 - 07:45 PM.

















