என்ன தோன்றுகின்றது?இலட்சங்கள் பலவற்றை வட்டிக்கும்
வட்டியின் குட்டிகளுக்கும்
குடியிருக்கும் ஒரே காணித்துண்டையும் ஈடுவைத்து
ஏஜென்சி, சப்-ஏஜென்சி என்று வாரியிறைத்து
சீமைக்கு வந்து சீந்துவாரின்றி
முன்னர் வந்து முதலாளியான தமிழர்களிடம்
இரண்டுக்கும் நாலுக்கும் தும்படித்து
அரை வயிறு கால் வயிற்றுடன் சேமித்த காசையும்
சொலிசிற்றர்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் விட்டெறிந்தும்
எல்லா அப்பீல்களும் பிழைத்துப் போய்
ஒளிந்துவாழவும் முடியாமல் பிடிபட்டு
டிரென்சன் சென்ரர்களில் சோறும் கிடைக்காமல்
பிளேன் ஏறுமட்டும் கனவுடன் இருந்த
உங்களுடனும் உங்களது இரண்டு பவுண் பொதியுடனும்
பாயும் சிங்கங்களைக் தாங்கிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன்
பலவருடம் காணாத கோயில் திருவிழாவுக்கு
புலிப்பல்லுச் சங்கிலியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து
ஒன்றாகப் பயணிக்காமல் பார்த்துக்கொண்ட
இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது.
Edited by கிருபன், 16 June 2012 - 04:00 PM.