
தன்னைக் கடத்திச் சென்றவர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்புத் துறையினரே என்று, விடுவிக்கப்பட்டு, அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நான் தங்கியிருந்த அறைக்குள் திடீரெனப் புகுந்த சுமார் 15 வரையிலான கடத்தல்காரர்கள், என்னை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
துப்பாக்கிகளுடன் இருந்த அவர்கள், அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரே.
அவர்கள் என்னை இராணுவ முகாம்களிலோ, காவல் நிலையங்களிலோ தடுத்து வைத்திருக்கவில்லை.
அவர்கள் யார் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
ஆனால், அவர்கள் நடந்து கொண்ட கடுமையான முறைகளில் இருந்து, அரசியல் அங்கீகாரம் கொண்டவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவைகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
என்னைக் கடத்தியவர்கள் உடனடியாக சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் தமது உத்தியை மாற்றிக் கொண்டனர்.
இந்தக் கடத்தலை என் மீதான தெளிவானதொரு கொலை மிரட்டலாகவே நான் பார்க்கிறேன்.
இது அடிப்படை உரிமைகளை மீறும் செய்ல். அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என் நினைத்தேன்.
எனது அரசியல் தொடர்பாக, கட்சி தொடர்பாக, அதன் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக, உதவியாளர்கள் தொடர்பாக பல கேள்விகளை அவர்கள் எழுப்பினர்.
எனது போலியான அடையாளங்கள் பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே குணரட்ணத்தை சிறிலங்கா அரசபடைகள் கடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆட்களைக் கடத்துவதற்காக இரகசிய காவல்துறைக் குழுக்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
http://www.puthinapp...?20120412105979
















