எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். மீள வெயியீடு செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி.
சரி வெங்-காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு வாரப்பாடு என்று கேட்கிறீர்களா?
இது நிச்சயம் வாரப்பாடு இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்-காயம் என்ன கதை?

ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை காவல்த்துறை எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடித்தாற் போல் பதில் சொல்லி இருக்கிறது படத்தின் முடிவு.
இது பகுத்தறிவை பற்றிப்பேசும் படம், மூடநம்பிக்கைக்களைப் பற்றி பேசும் படம் என்பதைத் தவிர்த்து பார்த்தால் இது அட்டகாசமான படம் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் பாதி பார்க்கும் வரை என்னடா இவ்வளவு மொக்கையான படத்திற்கு வந்துவிட்டோமே என்று நினைக்க வைத்தது படம். ஆனால் இடைவேளைக்கு பின் இறுதிக்காட்சி முடிந்து இருக்கையை விட்டு எழும் போது தியேட்டரில் இருந்த அத்தனை பேரும் கைத்தட்டினார்கள். நான் வலிக்க வலிக்க கை தட்டினேன்.
எனக்கு கடவுள் பக்தி என்பது நிறையவே உண்டு. ஆனால் என்னைப் போன்ற ஆட்களுக்கே படம் அபரிமிதமாய் பிடித்திருந்தது. இயக்குனருக்கு நல்ல கேமராவோ, நல்ல எடிட்டிங்கோ, நல்ல கிராஃபிக்ஸோ, நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர் நடிகர்களோ, நல்ல அட்டகாசமான பாடல்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் படம் கடைசியில் கைத்தட்ட வைத்திருக்கிறது. கடைசி வரை தன்னுடைய வேகத்தை நிறுத்தவே இல்லை.
சில சாதாரண வார்த்தைகளைக்கூட சென்சார் அமைப்பு இந்தப்பட்த்தில் வெட்டியிருக்கிறது. ஆனால் “தேவிடியாப்பையா” என்ற ஒரு வார்த்தையை வெட்டாமல் அப்படியே விட்டு இருக்கிறது. அப்படி என்றால் அந்த வார்த்தையின் வீரியம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பதிமூன்று வயதுப்பெண் அந்த வார்த்தையை உச்சரிக்கும் போது தியேட்டரே கைதட்டி ஓய்ந்த்து.
கூத்தாடியாக வரும் எஸ். எம். மாணிக்கம் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய மகனுக்காக ரோட்டில் அவர் கெஞ்சுவதும் தன்னுடைய பிழைப்பை அங்கேயே அரங்கேற்றி காட்டுவதுமாக அசத்தி இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்படும் முடிவு பாவம்.... எத்தனையோ படங்கள் நடித்தவரைப்போல இவரது பாவனைகளில் அபாரம். இவர் இயக்குனரின் அப்பாவாமே.. அட...
நமக்கே அந்த சாமியார்களைப் பார்த்தால் கொல்லவேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. அதுவும் அந்த சிறுவனை நரபலி கொடுக்கும் சாமியாரை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டும் என்ற அளவிற்கு ஆத்திரம் வருகிறது. சத்யராஜ் ஒரே ஒரு பாடலுக்கு வருகிறார். அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் சில பகுத்தறிவு விதைகளை விதைத்து விட்டு போகிறார். பிறகு நடப்பது எல்லாம் விதைத்த விதைகளின் போராட்டங்கள்.
படத்தின் முக்கிய பகுதியே அந்த மூதாட்டிதான். தன் பேரன் இறந்துவிட்டான் என்றவுடன் பைத்தியம் பிடித்து அலையும் அந்த மூதாட்டிதான் படத்தின் மூலகர்த்தா. இறுதிக்காட்சியில் அந்த பாட்டி சொல்லும் வசனத்திற்கு கைத்தட்டாதவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நானே என் செலவில் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். சரியான “screen play Knock” ற்கு அந்த இடம் ஒரு உதாரணம்.
ஒரு திரைப்படம் பார்த்தால் அது நம்மை சிரிக்க வைக்க வேண்டும். இல்லை, அழ வைக்க வேண்டும். இல்லை ஆத்திரம் கொள்ளவேண்டும். அதுதான் ஒரு நல்ல சினிமாவுக்கான உதாரணம். இந்தப்படம் பார்த்து முடித்து எழும்போது ஏதோ ஒரு வகையான உணர்வை நமக்குள் விதைத்துப் போயிருப்பார்கள், அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி.
சங்ககிரி ராச்குமார், இவர்தான் படத்தின் இயக்குனர். படம் பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது, எவ்வளவு மோசமான பட்ஜெட் நிலைமை என்பது. இருந்தாலும் அத்தனையும் மிறி ஒரு நல்ல பட்த்தை விடாப்பிடியாக கொடுக்க முயற்சித்ததற்கு நிச்சயம் பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். தமிழ்சினிமாவின் ஒரு நம்பிக்கை இயக்குனர் வரிசையில் சங்ககிரி ராச்குமார் நிச்சயம் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரே படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.
நல்ல பப்ளிசிட்டி இருந்திருந்தால் நிச்சயம் இந்தப்படம் பல்வேறு நிலைகளை கடந்திருக்கும். நல்ல வெற்றியும் பெற்றிருக்கும். ஆனால் ப்ப்ளிசிட்டிக்கு ஆகும் செலவில் இந்த இயக்குனர் இன்னும் இரண்டு படம் எடுத்திருப்பர். முரணான உண்மை. ஒருவரை ஒருவர் காலைவாரிவிடும் பச்சோந்திகள் நிறைய இருக்கும் திரைத்துறையில், திறமை வாய்ந்த ஒருவரை கைதூக்கி விடும் நோக்கில் எப்படியாவது இந்தப்படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் சேரன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.
நன்றி-கவிதை காதலன்
http://www.ilankathir.com/?p=5690
















