Jump to content

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல


Recommended Posts

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல

அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இருந்த போதிலும் வெற்றி இலங்கையின் கைக்கெட்டும் என்று கூறுவதற்கில்லை என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்யப்படும் அதே வேளை இலங்கை தரப்பில் வேகமான காய் நகர்த்தல்கள் அதிகளவு அங்கலாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதியின் அறை கூவல்

சென்ற மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கை அரச தரப்பில் மேற் குறித்த பிரேரணைக் கெதிராக நடத்தப்பட்டு வருவதற்கப்பால் “இலங்கை மீது கை வையாதே“ இலங்கை மக்களே கிளருங்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷ சென்ற வாரம் அலரி மாளிகையில் அமைச்சர் விமல் வீரவன்ச சகிதம் வீடமைப்பு விடயம் தொடர்பானதொரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அறை கூவல் விடுத்தார்.

இலங்கைக்கு வெளிநாட்டு அறிவுறுத்தல்கள், தலையீடுகள் எதுவுமே தேவையில்லை என்று அவர் கூறியதோடு யுத்தத்தில் வெற்றியீட்டிய கட்டத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அதாவது பயங்கரவாதம் என்ற ஈனத்தை முறியடிப்பதற்கு கூலிப்படைகளை அமர்த்தவில்லை. உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில் எமது தளபதிகள் வழி நடத்தலில் முற்றிலும் எமது வீரதீரமான படையணியினராலேயே யுத்தம் நடத்தப்பட்டது என்று கூறியதோடு நின்று விடாமல் எமது கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களின் அடிப்படையில் நாட்டை நடத்திச் செல்வதற்கு வேண்டிய அறிவு, ஆற்றல், பலம் யாவும் இலங்கையில் உண்டு. அந்நிய சக்திகளிடமிருந்து கற்றுக் கொள்வதற்கோ எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழி காட்டுவதற்கோ ஒன்றுமே இல்லை என்று ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்றெல்லாம் பிரதேச வேறு பாடின்றி இனம், மதம், குலம் போன்றவை ரீதியாக வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்றும் ஒரு தாய் பிள்ளைகள் ஆகிய நாம் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறாகவே இலங்கை மக்கள் எல்லோரும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் அல்லவா?

நல்லாட்சி என்பது பலத்த கேள்விக் குறியாகியுள்ளது

ஜனாதிபதி ராஜபக்ஷ அலரிமாளிகையில் நிகழ்த்திய “ மலைப் பிரசங்கம்“ ஒரு வகையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வந்ததன் மறு பதிப்பாகவும் நோக்க வேண்டியுள்ளது. பன்னிரண்டுக்கும் அதிகமான நாடுகள் யுத்தத்தின் வெற்றிக்குக் கை கொடுத்ததாக அன்று ஜனாதிபதி கூறி வைத்தது ஞாபகம்.

குறிப்பாக இந்தியா வழங்கிய பங்களிப்பினை அரசாங்க உயர் மட்டத்தினர் வெகுவாக பாராட்டினர். மற்றும் அமெரிக்கா வழங்கிய புலனாய்வு மற்றும் செய்மதி சேவைகள் யுத்த வெற்றிக்கு கைகொடுத்த விடயமும் தெரியாத ஒன்றல்ல. மற்றும் வெகு ஜீவகாருண்ய பாணியில் மிகக் கவனமாக அன்று நடத்தப்பட்டது “ மனிதாபிமான செயற்பாடுகள் என்று அரசாங்கம் நடித்து வந்ததாயினும் அதனை யுத்தம் என்று இன்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளதைக் காணலாம்.

மற்றும் பிரதேச மற்றும் இன, மத, குல, வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பதற்கு ஒரு தார்மீக யோக்கியதை வேண்டுமல்லவா?

ஏனென்றால் மேற் குறித்த சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து அனைத்து மக்களையும் உள்ளீர்த்து நல்லாட்சி நடத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் புறப்படும் என்பது பலத்த கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் மாறாக அரசாங்கத்துக்குள்ளேயே இடம் பெற்று வரும் அடாவடித்தனங்களின் பெறுபேறுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் கொலைகள் ஆங்காங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும் அது பொது மக்களால முறியடிக்கப்பட்டு கடத்தல் காரர்கள் ஒப்படைக்கப்பட்டனராயினும் அவர்கள் இராணுவத்தரப்பினர் என்பதும் விரைந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் உலகறிந்த விடயமாகி விட்டதல்லவா?

உதயசாந்த வேறு யாருமல்ல ஆளும் ஐ.ம.சு.மு. வைச் சேர்ந்த பிரமுகர் என்பதும் தெரியாததொன்றல்ல. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி உதய சாந்தவின் சகோதரர் ஜானக்க பிரபாத் தொதபேக்ம இதே இராணுவ பிரமுகர்கள் சிலரால் கடத்தப்பட்டு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இன்று இலங்கை அரசாங்கம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றனவென்றால் தண்டனை விலக்கல் கலாசாரமானது எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையே வெள்ளிடை மலை போல காட்டுகின்றது. இன்று அரசாங்க கட்சிக்காரரே இலக்கு வைக்கப்பட்டு வரும் சூழலில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும் நாள் வந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.

சம்பிக்க ரணவக்கையின் சித்து விளையாட்டு மற்றும் இன்றைய ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் மீது மீண்டும் நோக்குவோமாயின் முதற்கண் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் கவனத்தில் கொள்ளப்படக்கூடியதாகும். போர்க் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ( ஆயர்) வேண்டுகோள் விடுத்திருப்பதன் காரணமாகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று தான் கூறியுள்ளதாக பத்திரிகையாளர்கள் மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்கு ரணவக்க பதிலளித்தார்.

சரி அப்படியானால் இது தொடர்பான விண்ணப்பக் கடிதத்தில் ஒப்பமிட்ட ஏனைய 30 கத்தோலிக்க அடிகள் மாருக்கும் எதிராக வழக்குத் தொடர தேவையில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு மக்கள் யாரும் தத்தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரம் உண்டு.

ஆயினும் அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் நலமான எதிர் காலத்தை நோக்கி நிற்க வேண்டும் என்று ரணவக்க பதிலளித்தார். இனவாதத்தை வெறியாகக் கொண்டு இனக் கலவரம் ஒன்றினைத் தூண்டும் மனோ பாவத்தைக் கொண்டிருப்பவராகிய சம்பிக்க ரணவக்க நல்லிணக்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ரணவக்க தனது அறிவுக்கு எட்டாத விடயங்கள் பற்றியே பேசுகிறார் என்று ஆயர் பதிலடி கொடுத்துள்ளதையும் காண முடிகிறது.

தூதுவர் தமரா குணநாயகம் பேசுகிறார்

அமெரிக்காவின் பிரேரணையானது இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் கங்கணம் கட்டி நிற்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் கூறியதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் தமரா அம்மையார் அளித்த பேட்டியொன்றில் இப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் இலங்கை புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்திருப்பதாலும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவும் அதற்கப்பால் உலகில் மிக அதிகளவு பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால் உலகாதிக்கம் செய்வதற்கு தென்கிழக்காசியாவில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறதாயினும் இது சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான இலங்கை அரசாங்கத்துக்கு, அது மட்டுமல்லாமல் உலகில் படு மூர்க்கத் தனமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்ததாகிய இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கையாண்டு வரும் தந்திரோபாயங்கள் நிச்சயமாக ஒத்து வராதவை என்றும் அவர்கள் விரும்பும் அடி பணியும் அரசாங்கம் இலங்கையில் இன்று இல்லை என்றும் அர்த்தப்பட தமரா அம்மையார் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடைப்பிடித்து வருவது அப்பட்டமான இரட்டை வேடமும் ஆசாடபூதித்தனமும் ஆகுமென்றும் அவர் கடிந்துள்ளார். அது உண்மைதான் என்றாலும் கூட இலங்கை அரசாங்கமும் நிழற் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னைப் பார்க்க வேண்டிய தேவையை மறந்து விடமுடியாது.

மன்னார் ஆயருக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய ( ஜே. எச். யூ.) தரப்பினர் வழக்குத் தொடரப் போகிறார்களாமே என்று எழுப்பிய கேள்விக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் (ஃஃகீஇ) ஏனையோரைப் போலவே ஆயரும் சாட்சியம் அளித்ததை அடுத்து அவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது என்று தூதுவர் தமரா கூறியதோடு நாம் இப்போது சமாதானம் மற்றும் நல்லிணக்கப் பாதையில் பயணிக்கத் தலைப்பட வேண்டுமே தவிர சர்ச்சைகளிலும் முரண்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கத் வேண்டியதில்லை என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமரா அம்மையார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ரோமா புரியில் வத்திக்கான் மையத்திற்கும் தான் சம காலத்தில் தூதுவராக பணியாற்றி வருவதால் ஙீஙஐ பாப்பாண்டவர் அருளப்பருடனும் வேறு பல வத்திக்கான உயர் மட்டத்தினரிடமும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் இலங்கை நிலைமை தொடர்பாக கொண்டிருக்கும் அறிவைப் பாராட்டியதோடு நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் அக மகிழ்ந்துள்ளதைக் காண முடிகிறது.

தூதுவர் என்பவர் ஒருவர் தனது நாட்டின் நன்மைக்காக வெளிநாடுகளில் தங்குபவர் என்று கூறப்படுவதுண்டு. அவர் பொய்களையும் கூறுபவர் என்றும் இது அர்த்தப்படும்.

மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக அதாவது வெளிநாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து வெளியிட்டுள்ளதை யாரும் அறிவர். அதில் தவறில்லை. ஆனால் அவர் அநேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலித்து வருவதும் இலங்கை கத்தோலிக்க சமூகத்திற்குள் வடக்கு தெற்கு விரிசல்கள் உருவாகுவதைப் பார்த்து வாளா விருப்பதும்தான் கவலைக்குரியதாகும்.

http://www.thinakkural.com/articles/11431-2012-03-20-19-05-50.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.