Jump to content

அந்தணர் / ஐயர் / பார்ப்பார் சொல் விளக்கம்


Recommended Posts

முதலில் மருத நிலத்தில் உழவர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். பின்பு அவர்கள் காலப்போக்கில் பிரிந்து உழவர், அரசர், வணிகர், அந்தணர் எனப்பட்டனர். ஒரே குலமாய் இருந்த தமிழர்கள் தமது தொழில் முறைக்கு ஏற்ப அதே தொழில் செய்வோரிடம் கொண்டும் கொடுத்து வந்ததால் நாளடைவில் வெவ்வேறு குலத்தினராயினர். அதாவது வேறு தொழில் செய்வோரிடத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்தால் தத்தம் தொழிலுக்கு ஒத்து வராது என்பதால் தம்மை ஒத்த தொழில் செய்வோரிடத்திலே பெண் எடுத்து பெண் கொடுத்து வந்தனர். பின்னாளில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனும் கருதும் நிலையை அடைந்து ஒவ்வொருவரும் தத்தம் குலமே பெரிதென எழுதி தனித் தனி குலமாயினர்.
 
அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவில் தான் பல இடங்களில் வழங்கப்படுகிறது.
அந்தணாளன் => அம் + தண் + ஆளன் = அழகிய குளிர்ந்த அருளையுடையவன் 
அந்தணன் => அம்+தண்மை+அன் =  அழகிய குளிர்ந்த அருளையுடையவன்  
 
“அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே” (தொல்காப்பியம் - மரபியல்: 68)
 
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” - தொல்காப்பியம் - மரபியல்:. 80)
 
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
 ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொழ்டு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
 
தலைவனுந் தலைவியும் சுற்றத்துடன் இல்லறம் இனிது நடாத்தித் வெறுக்கு மளவும் காம இன்பம் துய்த்து மக்களைப் பெற்று முதுமை கொண்டபின் மக்களிடம் குடும்பத்தை ஒப்படைத்து விட்டு பொது நலத் தொண்டு புரிதலே இல்லறம் நடத்தியதன் பயன் என்பதாம்.
 
அறிவும் பொதுநல ஆர்வமும் உடைய இல்லறம் நீத்த பெரியோர்களே அந்தணர் நிலையில் பொதுநலம் புரிந்து வந்தனர் இவர்களில் ஒரு சிலர் தவ வாழ்க்கை நடத்தி வந்தனர் என்பதை
"நாலிரு வழக்கில் தாபதர் பக்கமும்" 
(உழவர், அரசர், வணிகர், அந்தணர் - நால்வர் )
என்பதால் அறியலாம்.
 
திருக்குறளில் அந்தணர் பற்றி 
 
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்" - குறள்
- எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். இங்கே அந்தணர் இலக்கணம் கூறியது மட்டுமின்றி அதை துறவிகள் பெருமை கூறும் நீத்தார் அதிகாரத்தில் வைத்துள்ளார். 
 
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்" - குறள்
- அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்
 
இங்கே நூல் என்ற சொல் மேற்காணும் குறள்களில் உணர்த்தும் பொருள் 'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்பதாகும். இது பற்றி இங்கே காணலாம். http://thiruththam.blogspot.com/2009/11/blog-post_28  இந்தப் பொருளின்படி இந்தக் குறளை இப்படியும் பொருள் கொள்ளலாம். அந்தணர்களாகிய உழவர்களின் ஏருக்கும் அவர்தம் அறச்செயலாகிய பசிப்பிணி போக்குதலுக்கும் அடிப்படையாய் இருப்பது மன்னவனின் செங்கோலாகும்.
 
அந்தணர் போற்றுவது மறைநூல் என்று கொண்டால் ..
"நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த 
மறைமொழிதானே மந்திரம் என்ப - தொல்காப்பியம்"
 
பெரியோர் தம் ஆணையாற் சொல்லப்பட்டு பிறரியாமல் மறைத்துச் சொல்லப்படும் சொற்றொடரெல்லம் மந்திரம் எனப்படும்.
  
"நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறை மொழி காட்டிவிடும்"
 
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.
 
மேற்கூறியவற்றால் அந்தணர் என்போர் அறவோர்.  அவர் போற்றுவது நூல் மற்றும் அறம். நூல் என்பதற்கு மறைமொழி அல்லது மந்திரம் என்றே பலர் பொருள் தருகின்றனர். ஆனால் சிலர் நூல் என்பதற்கு  'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்றும் பொருள் தருகின்றனர். எதுவாகினும் அந்தணர் என்போர் உழவர், அரசர், வணிகர்,ஆயர், வேட்டுவர்  என்ற வகுப்பினரில் இல்லறம் முற்றிய பெரியோரே அன்றி தனி வகுப்பினர் அல்லர் என்று புலனாகும்.
 
தமிழ்த் துறவிகளான அந்தணர்கள் பெரும்பாலும் ஓரிடத்தில் நிலையாக தங்கியிராமல் ஊர்தோறும் சென்ற மக்களுக்கு நன்னெறி பகன்று வந்தனர். ஆகவே வெயிலுக்காக குடையும் செருப்பும், நீர் மொண்டு கொள்ள செம்பும், வழித் துணைக்கு ஊன்றுகோலும், தங்குமிடத்தில் விரித்துக் கொள்ள விரிப்பும், நூல்களும் கொண்டவராய் இருந்திருந்தனர் என்பதை கீழ உள்ள தொல்காப்பிய பாடலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
 
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’
 
தமிழ முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்த மையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் பொருட் பாலில், ‘பெரியாரைத் துணைக்கோடல்’, ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர் போருக்குச் செல்லும் காலத்தில் அந்தணர் அரசப் பொறுப்பை ஏற்றனர். இச்செய்தியை,
அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” தொல்காப்பியம்  சுட்டிக் காட்டுகின்றது.
 
ஐயர், பார்ப்பார் பற்றி மற்றொரு நாளில் எழுதுகிறேன்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் ஆண்ட பேராலை ஊரைச் சுத்தி சனங்களுக்கிடையிலை
பிரிவை உருவாக்கிய அந்த அணர்கள் அந்தக் காலத்திலை
அரச சபையிலை அரசனுக்கு எந்த மாதிரி மக்களை அடக்கி ஆளலாம்
எண்டும் பாடம் நடத்தினவையாம்

Link to comment
Share on other sites

வரவுக்கு நன்றி பாரியாரை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்சார்ந்து சக மனிதனை இப்படி பாகுபடுத்தி அழைப்பது சாதியம் இல்லையா..???! இதே இடத்தில்.. வேறு சாதியக் கூறுகள் உச்சரிக்கப்பட்டிருந்தால்..??????! உடனே.. கீழ்சாதி.. மேல்சாதி.. தலித்து.. என்று கொண்டு வந்துவிடுவார்களே.

 

இங்கும் தமிழும் நயமும் உள்ளது..??! :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால், திராவிடம் கூறி வரும் ’பார்ப்பன எதிர்ப்பு’ குறித்த தெளிவு கிடைத்துவிடும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் 002F சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ஐயர் என்பது, பார்ப்பனரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பார்ப்பனர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை - புலியூர் கேசிகன்). இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமயவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். இமயவரம்பன் இமயம் வரை சென்று ஆரியரை வென்றாலும் அவனது நாடு தமிழகம் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமயவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

’அந்தணர் என்போர் ஆரியப் பார்ப்பனர்தான். தொல்காப்பியம் குறிப்பிடும் அந்தணர் எனும் பிரிவு ஒன்றே, தமிழர் மரபில் பார்ப்பன ஆதிக்கம் இருந்தது என்பதை நிறுவும் சான்று’ என்று ஒரு கற்பிதம் தமிழகத்தில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அக் கற்பிதத்தை மறுக்கவே இந்தச் சான்று முன் வைக்கப்படுகிறது.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

‘இமயவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு உற்சாகத்துடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ‘தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

‘அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரியப் பார்ப்பனர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரியப் பார்ப்பனரே, உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரியப் பார்ப்பனர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரியப் பார்ப்பனரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரியப் பார்ப்பனர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், பார்ப்பார் குறித்த இக்கட்டுரைக் கருத்துகளை குணா மீது ஏற்றவில்லை.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்தின் மறைமுகத் தலைவர்களாக விளங்கினர். தமிழகப் பார்ப்பார் இதற்கு நேர் எதிர் நிலையில் இருந்தனர். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை:

‘தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’ - (தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்றுப் பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

‘உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (‘தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வௌ;ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’- (அகநாநூறு 337)

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’--(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரியப் பார்ப்பானாக இருக்கலாம். அல்லது ஆரியப் பார்ப்பாரது கருத்தியலைத் தழுவிய தமிழராகவும் இருக்கலாம்.

பார்ப்பாரில் ஆரியக் கருத்தியலைக் கலந்தனர் ஆரியர்கள். தமிழ்ப் பார்ப்பார்கள் தமது வானியல் அறிவால் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர். இந்த இடத்தைப் பிடிக்க ஆரியர் போட்டியிட்டனர். இதன் விளைவாகவே, பார்ப்பார் குலம் ஆரியச் சார்புடையதாக மாறியது. வானியலை ஆரியர் சோதிடம் ஆக்கினர். வான சாஸ்திரம் என்றனர்.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, தமிழ்ப் பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியபள் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’ - என்றார் திருவள்ளுவர்.

‘கல்வியை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம். பார்ப்பாரது பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் கெட்டுவிடும்’ என்பது இக்குறளின் நேரிடைப் பொருள். இக்குறளில், பார்ப்பானது பிறப்பு ஒழுக்கம் என்பது என்ன?

பிறப்பு ஒழுக்கம் என்பது ஒருவரது பிறப்பிலிருந்து தோன்றி வரும் ஒழுங்காகும். மரபு அறிவு, கலை முதலியவை அந்தந்த மரபு சார்ந்த குலத்தினருக்கே வழி வழியாக வருபவை. ஆனால், கல்வி என்பது பிறரால் கற்றுக் கொடுக்கப்படுவது. இந்த முரணையே, திருவள்ளுவர் இக்குறளில் முன்வைக்கிறார்.

’பார்ப்பான் தனது மரபு அறிவைக் குன்றச் செய்தால் அது கெட்டுவிடும். கல்வி அப்படிப்பட்டதல்ல, அதை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம்’ என்கிறார். பார்ப்பாரது பிறப்பு/மரபு அறிவு எது? வானியல் அறிவே!

இக்குறளில் திருவள்ளுவர் பார்ப்பான் என அழைப்பது, ஆரியப் பார்ப்பனரையே எனக் கருதும் போக்கும் உள்ளது. அது சரியல்ல. ஆரியப் பார்ப்பார் என நாம் அழைக்கும் பிரிவினரின் ஒழுக்கத்தை வள்ளுவர் ’ஆசாரம்’ என்ற சொல்லால் வேறு ஒரு இடத்தில் குறிக்கிறார்.

’கயமை’ எனும் அதிகாரம் ஆரியப் பார்ப்பனரின் கருத்தியல்களைக் கடுமையாகச் சாடுகிறது.

‘தாம் கேட்ட வேதத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்துப் பரப்புவோர் கயவர்’ என்கிறார் வள்ளுவர்.

’அறைபறை அன்னர் கயவர் தாங்கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்’ என்பது அக்குறள்.

‘அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது’-எனும் குறளில், ‘கீழ்மக்களது ஒழுக்கம் (ஆசாரம்) அச்சம்தான். அதைத் தவிர வேறு ஏதேனும் ஒழுக்கம் உண்டு என்றால் அது ஆசைப்படுவதுதான்’ என்கிறார்.

ஆரியப் பார்ப்பனர் துவக்கம் முதலே, வாழ்வைக் கண்டு அச்சப்படுபவர்தான். தமது அச்சங்களைப் போக்கவே எதற்கெடுத்தாலும் கடவுளிடம் வேண்டும் வழக்கம் அவர்களிடையே தோன்றியது. ஆனால், ஆசைப்படுவதில் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர். துணிந்து செய்ய அச்சப்படுவது, ஆசைகளைப் பெருக்கிக்கொண்டே போவது ஆகிய இரு முரண்கள்தான் ஆரியப் பார்ப்பனியத்தின் அனைத்து ஊழல்களுக்குமான அச்சாணிகள்.

இதே மனநிலை, அரசதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இருப்பதுண்டு. அச்சம், ஆசை ஆகிய இவ்விரண்டு பலவீனங்களைக் கொண்டுதான் ஆரியப் பார்ப்பனர், தமிழ் அரசர்களைத் தம்போக்குக்கு வளைத்தனர். இப்போக்கை வள்ளுவர் மேற்கண்ட குறளில் குறிக்கிறார்.

‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்’

-என்பதும் ’கயமை’ அதிகாரக் குறளே.

‘தேவர்களும் கயவர்கள்தான். ஏனெனில் அவர்களும் கயவர்கள் போல, தாம் விரும்பிய அனைத்தையும் செய்கின்றனர்’ என்பது இதன் பொருள். ஆசைப்படட அனைத்தையும் செய்வது கயமை என்கிறார். ஆதலால் ‘தேவர்கள்’ கயவர் என்கிறார். இது ஆழ்ந்து நோக்கத்தக்க குறள். ஆரியக் கருத்தியல்கள் மீது வள்ளுவர் வீசிய கணைகள் இவை.

இந்த அடிப்படையில், ’மறப்பினும்...’ குறளில் உள்ள ‘பார்ப்பான்’ எனும் சொல்லை ஆய்ந்தால்தான் முழு விளக்கம் கிடைக்கும். பார்ப்பார் குலத்தினர், தமிழ் மரபில் வந்தோர். அவர்களது குல அறிவான வானியலை ஆரியப் பார்ப்பனர் திருடிக் குன்றச் செய்தபோது வள்ளுவர் இயற்றிய குறள் அது எனக் கொள்ளலாம். இதிலிருந்து, பார்ப்பாரது அறிவையும், அங்கீகாரத்தையும் ஆரியப் பார்ப்பனர்கள் அரசதிகாரத் துணையுடன் தமதாக்கிக் கொண்டனர் என்பது மேலும் உறுதிப்படுகிறது.

ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்துடன் நெருங்கி அடைந்த ஆதாயங்கள் எண்ணிலடங்காதவை. இறையிலி நிலங்கள், பிரமதேய நிலங்கள் ஆகிய பெயர்களில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தமிழ் அரசர்கள் வழங்கிய கொடைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்த வழக்கம் ஒன்றை இங்கே காண்போம்.

குமட்டூர் கண்ணானாருக்கு இமயவரம்பன், 500 கிராமங்களையும் தென் தமிழகத்தில் தனக்கு வரும் அரசு இறையில் ஒரு பங்கினையும் வழங்கினான் என்கிறது பதிற்றுப் பத்து. தமிழ் அந்தணர்களுக்குத் தமிழ் அரசர்கள் இவ்வாறான இறையிலி வழங்கும் வழக்கம் இருந்ததை இச் சான்று உணர்த்துகிறது. இந்தத் தமிழ் அந்தணர்களின் ஃ அறிவாளர்களின் இடத்தைத்தான் ஆரியப் பார்ப்பனர்கள் பிடித்தனர்.

நாடு பிடித்தல், சுரண்டுதல், ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்தல் ஆகியவை ஆரியரது கொள்கைகள். மனுநீதியும் அர்த்த சாத்திரமும் இவற்றையே வலியுறுத்தின. தமிழர் மரபு இந்தச் சுரண்டல் கோட்பாடுகளை எதிர்த்து வந்தது.

தொல்காப்பியம் முதல் வள்ளலார் பாடல்கள் வரை இந்த ஆரியக் கோட்பாட்டு எதிர்ப்பு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதைக் காணலாம். ஆரியம் என்பது சாதியம் மட்டும் அல்ல; அது தமிழின ஒழிப்புக் கோட்பாடு. ஆரிய எதிர்ப்பு என்பது சாதிய எதிர்ப்பு மட்டும் அல்ல; தமிழ் உரிமையை நிலைநாட்டும் போராட்டம்; தமிழர் தாயகத்தைக் காக்கும் போராட்டம்; தமிழர் மரபுவழி அறிவாற்றலை மீட்டெடுக்கும் போராட்டம். இந்தப் புரிதலும் தெளிவும் தமிழ்த் தேசியர்களுக்கு அடிப்படையாகும்.இந்தப் போரட்டத்தையே தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆரியருக்கு எதிரான நேரடி போர்கள் நடத்தி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட பேரரசர்கள் வெற்றிவாகை சூடினர்.

தமிழரது போர் மறத்தின் முன் நிற்கவியலாத ஆரியர், தமிழர் நாகரிகத்தில் கலந்து அதைச் சீரழிக்க முற்பட்டனர். இதோடு நில்லாமல், தமிழரது அறிவாற்றலைத் தமதாக்கிக் கொண்டனர். தமிழரது உழைப்பாற்றலைச் சுரண்டிக் கொழுத்தனர். இதுவே ஆரியர் நம்மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

Link to comment
Share on other sites

தொழில்சார்ந்து சக மனிதனை இப்படி பாகுபடுத்தி அழைப்பது சாதியம் இல்லையா..???! இதே இடத்தில்.. வேறு சாதியக் கூறுகள் உச்சரிக்கப்பட்டிருந்தால்..??????! உடனே.. கீழ்சாதி.. மேல்சாதி.. தலித்து.. என்று கொண்டு வந்துவிடுவார்களே.

 

இங்கும் தமிழும் நயமும் உள்ளது..??! :rolleyes:

 

கருத்துக்கு நன்றி நெடுக்ஸ்.

ஒரு மனிதன் மருத்துவம் சார்ந்த தொழில் செய்வதால் அவனை மருத்துவர் என்ற அழைப்பதில் தவறில்லை. இதில் சாதியம் இல்லை. ஆனால் அவன் மருத்துவர் என்பதாலே அவனுக்கு சமூகத்தில் சக மனிதர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தான் சாதியம்.  

கொஞ்சம் வரலாறை புரட்டுங்கள் அப்பொழுதுதான் சாதியம் பற்றியும் சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தெரிய வரும் !!

 

Link to comment
Share on other sites

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால், திராவிடம் கூறி வரும் ’பார்ப்பன எதிர்ப்பு’ குறித்த தெளிவு கிடைத்துவிடும்.

...........................

தமிழரது போர் மறத்தின் முன் நிற்கவியலாத ஆரியர், தமிழர் நாகரிகத்தில் கலந்து அதைச் சீரழிக்க முற்பட்டனர். இதோடு நில்லாமல், தமிழரது அறிவாற்றலைத் தமதாக்கிக் கொண்டனர். தமிழரது உழைப்பாற்றலைச் சுரண்டிக் கொழுத்தனர். இதுவே ஆரியர் நம்மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

 

மிக விரிவான தகவலுக்கு நன்றி பொன்மலர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.