Jump to content

நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர்

 

1967-69 யாண்டுகளில் 'சென்னை மாகாணம்' என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள்.  சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது.

ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம்.

தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு).  செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்பதை எடுத்துக்காட்டுகின்றார் இளம்பூரணர்.  அதை  “உரையாசிரியர்கள்” என்ற நல்ல நூலில் (1977) அறிஞர் மு.வை.அரவிந்தன் குறிப்பிட்டுத் “தமிழர் வழங்கிய நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை அறியும்போது எல்லையற்ற மகிழ்ச்சி பிறக்கிறது” என்கிறார்.

இது  அன்றைய தமிழகம், மூவேந்தர்களும் வேளிர்போன்ற சிற்றரசர்களும் ஆண்டதால், ஆட்சிதான் பிளவுபட்டிருந்ததே தவிர தாம் தமிழர்  என்ற  ஓரினத்து அடையாளம் பிளவுபடாமல் தெளிவாக வாழ்ந்ததைக் காட்டுகின்றது.

சங்கக்காலத் தமிழர் கூட்டணி: மேலும் சங்கக்காலத்தின் முற்பகுதியிலே தமிழர்கள் வடபுலத்து மன்னர்களின் படையெடுப்பிலிருந்து தமிழகத்தைக் காக்க 113  யாண்டுகளாவது கூட்டணியாகக் கூடியிருந்ததைக் காரவேல என்னும் கலிங்க மன்னனால் தோராயம் கிமு 175-ஆம் ஆண்டிலே பொறித்த அத்திகும்பாக் கல்வெட்டிலே  தெரிகிறது.  கமில் சுவெலெபில் (1989)  அதைக் கொண்டு தமிழர்களின் கூட்டணி கிமு 288ஆம் யாண்டிலே தொடங்கியிருக்கவேண்டும் அது மோரிய மன்னன் பிந்துசாரன் தமிழகத்தைக் கைப்பற்ற முனைந்தகாலமாய் இருக்கவேண்டுமென்றும் கணிக்கிறார்.

மேலும் சிலப்பதிகாரத்திலே வஞ்சிக்காண்டத்தில் வடபுலமன்னர்களான கனக விசயர்களை தோற்றோடும் காட்சியை “அரியில் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கன விசயரை” நீர்ப்படைக்காதை (189௧90) என்று பாடுகிறது; அஃதாவது “அழிவில்லாத பனைமாலை சூடிய அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை” (அல்லது “பனைமாலை சூடியஅருந்தமிழ்வேந்தன் ஆற்றலை அறியாது …” என்றும் வேங்கடசாமி நாட்டர் உரை). எப்படியாகினும் பனைமாலை சூடிய சேரரும் தம்மை வெறுமனே சேரர் என்று மட்டும் கருதாது அதனினும் பெரிய பொதுவாகிய தமிழர் என்ற குடியின அடையாளத்தோடு (national identity) எண்ணி வாழ்ந்தனர் என்று தெற்றெனத் தெரிகிறது.

இதனை இந்தியா என்பதோடு ஒப்பிடவேண்டும்.  இந்தியா  என்று ஒரு நாடோ குடியோ இனமோ ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர்க் கிடையாது.   யாரும் தம்மை இந்தியர்/பாரதர்/பாரதீயர் என்று அழைத்துக்கொண்டதில்லை. இந்தியா என்பதை அயிரோப்பா போல் ஒரு பலப்பல மொழியினங்கள் நாடுகள் சேர்ந்த கண்டமே ஆகும். ஆததால்தான் அதனை இந்தியத் துணைக்கண்டம் என்பார்கள். புகழ்வாய்ந்த வரலாற்று அறிஞர் துவி.நாராயண சா (D.N.Jha) என்பாரின் “இந்து அடையாளத்தின் மறுவாய்வு” (Rethinking Hindu Identity) என்ற நூலில் இது தொடர்பாகப் பல செய்திகளை விரிவாகக் காணலாம்.

1947-இலே படைத்த இந்திய நாட்டுக்கு அதன் பெயர் இந்தியக் குழுமியம் (யூனியன்);  மற்றபடி இந்தியக் குடியரசு என்றாகிய பின்னும் இந்திய அரசியற் சட்டம் இன்னும் இந்தியக் குழுமியம் என்றே சொல்கிறது. நேற்றுத் தோன்றிய ஓர் அடையாளத்திற்காக வரலாற்றுக்கு முந்திய பல செழித்த உயர்ந்த இன அடையாளங்களை ஒழித்து, சீர்மை என்ற போலிமையை உருவாக்குவது தகாது. அயிரோப்பியக் குழுமியம் போல் ஒவ்வோரினமும் மற்றோரினத்தை மதித்து ஒருவரை ஒருவர் அழிக்க முயலாமல் ஒற்றுமையாக வாழும் வழியை இந்தியக் குழுமியம் தேடவேண்டும்.

தமிழர்களும் அதே நல்ல எண்ணத்தில் தம் அடையாளப் போராட்டத்தில் வரம்பு மிஞ்சிப்போய் மற்ற மொழி இனத்தாரின் பெருமைகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் மறுக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்; வடமொழி மரபோடு பல சிக்கல்கள் இருப்பதால் அந்த வாதாட்டத்தில் உணர்ச்சி பொங்கி வடமொழி மரபிற்கு உரிய சிறப்புகளை மறுக்கும் போக்குக் கூடாது.

அதேபோல் ஏனைய திராவிட மொழிகளோடும் இணக்கம் தேவை.  மற்ற 25 திராவிடமொழிகளில் மலையாளம் தவிர மீதி 24 மொழிகள் நேரடியாகத் தமிழ்மொழியினின்று கிளைத்தன அல்ல; அதைப் பாரித்து உரைப்பதும் குற்றமாகும். செந்தமிழ் மொழி மூலத் திராவிடமொழியோடு (Proto-Dravidian) மிகவும் நெருக்கமானது, மற்ற எல்லாத் திராவிட மொழிகளையும் விட செந்தமிழ் மொழியின் பெரும்பாலான கூறுகள் மூலத் திராவிட மொழியினின்றும் அப்படியே இருப்பவை.  மூலத் திராவிட மொழி பேசியது ஏறக்குறைய கி.மு 3000 என்பது உருசிய மொழியியல் அறிஞர் ஆன்றுரோநோவ் (Andronov) கணிப்பு.

 

ழகாரம் தமிழ்-மலையாளம் மட்டும் காக்கிறது; பலப் பல முழுச்சொற்கள் (ஒன்று, இரண்டு, நாலு, ஏழு, எட்டு, அங்காடி, கழுதை) அப்படியே ஐயாயிரம் ஆண்டுகள் பழையன. மேலும் உலகில் 2300 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கும் ஒரேமொழி செந்தமிழ் மொழியே; அந்த ஒரு மொழியில்தான் இன்னும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட 1800 ஆண்டுகள் பழைய இலக்கியங்களைத் தாய்மொழிப் பாடத்தில் நேரடியாகப் பயில்கிறார்கள்.  மற்ற மொழியினர் 500 ஆண்டுகள் கூடப் பழைய இலக்கியம் புரிந்துகொள்வது கிடையாது. அதுவே தமிழ் மொழிக்கு உரிய ஒரு பெரிய உலக விந்தையாகும்; அதை அந்த அளவோடு அமைந்து அதைப் போற்றும் வழியை ஆய்வோமாக.

 

அந்தப் பெருமைக்கு உரியோராக நாமும் பெருந்தன்மையோடு ஒழுகுவோமாக.

 

http://perichandra.wordpress.com/2010/11/26/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/

Link to comment
Share on other sites

 வடமொழி மரபோடு பல சிக்கல்கள் இருப்பதால் அந்த வாதாட்டத்தில் உணர்ச்சி பொங்கி வடமொழி மரபிற்கு உரிய சிறப்புகளை மறுக்கும் போக்குக் கூடாது.

 

 

அந்தப் பெருமைக்கு உரியோராக நாமும் பெருந்தன்மையோடு ஒழுகுவோமாக.

 

 

அப்படியெல்லாம் விட முடியாது.. அப்படி விட்டா ஊருக்குள்ள ஒரு பய நம்மள மதிக்க மாட்டன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெல்லாம் விட முடியாது.. அப்படி விட்டா ஊருக்குள்ள ஒரு பய நம்மள மதிக்க மாட்டன்.. :)

 

அது சரிதான்...!

 

ஆனால் தமிழருக்குள்ளேயே ஆயிரமாயிரம் பங்காளிச் சண்டைகளைக் கண்ட மற்றவர்களால் (இவ்வளவு தொன்மையான இனிய மொழியிருந்தும் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் மனோபாவத்தால்) இன்றும் நம் இனம் ஏளனமாகவே பார்க்கப்படுவதும், அந்நிய தலைவர்களால் அடக்கியாளப்படுவதும் கொடுமைதானே? :o

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.