Jump to content

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்!


Recommended Posts

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 1)

 

 

ஜீவநதி  சிற்றிதழின்

சித்திரை மாத இதழில் வெளியான

எனது கட்டுரை

10154372_237584819776695_1125860041_a.jp

 

 

 

 

 

 

 

    தமிழியல் வெளியீடான எனது ‘திரையும் அரங்கும் :கலைவெளியில் ஒரு பயணம்’ நூலின் தயாரிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்தன. ‘காலச்சுவடு’ பதிப்பகம் கணினியில் தட்டச்சு வேலைகளை  முடித்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப,பிழைகளைத்  திருத்தி  காலச்சுவடிற்கும் தமிழியல் பொறுப்பாளரான - இலண்டனிலுள்ள பத்மநாப ஐயருக்கும், முன்னரே அனுப்பிவிட்டேன். நூலில் சேர்க்கவேண்டிய படங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பத்மநாப ஐயரும், அவுஸ்திரேலியாவிலுள்ள நண்பர் ரஞ்சகுமாரும்

படங்களைச் சேகரித்தனர்; ரஞ்சகுமாரே 175 படங்களை இணைத்து, நூலின் வடிவமைப்பையும்

செய்தார். ஆனால், அச்சிடுவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக

காலச்சுவடு பதிப்பகம் அறிவித்தது; ஆயினும், அவ்வாறான பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட

வாய்ப்பில்லை என, பதிப்புத்துறை அனுபவம் நிறைந்த ரஞ்சகுமார் தெரிவித்தார். இந்நிலையில் பிரச்சினை தீர்ந்து, அச்சிடும் வேலைகள் முடிந்து புத்தகத் திருவிழாவின்போது நூல் வெளிவருமா என்பதில், ஐயம் தோன்றியது. எனது நூல் வெளிவருவதையும், இதுவரையில் சென்று பார்க்காத புத்தகத் திருவிழாவைப் பார்ப்பதையும் இணைத்து, சென்னை செல்ல விரும்பிய எனக்கு, பயணத்தைத் தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், “புத்தகம் எப்படியும் வந்துவிடும்; பயண ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என, நண்பர் பத்மநாப ஐயர் தெரிவித்தார். எனவே, ஆயத்தங்களைச் செய்து, சென்னையிலுள்ள நண்பர் சிலருக்கும் அறிவித்தேன். 37 ஆவது புத்தகத் திருவிழா தை 10 – 22 வரை நடைபெறுமெனவும், எனது நூலின் வெளியீடு 11ஆம் திகதிக்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும், காலச்சுவடு கண்ணன் அறிவித்தார். எனவே, தைமாதம் 10ஆம் திகதிக்கு விமானச்சீட்டைப் பதிவுசெய்தேன். கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் அதே திகதியில் -  ஒரேநேரத்தில் - சென்னை செல்வதாகப் பின்னர் தெரிந்தது; அவரது நூல்கள் இரண்டு 12ஆம்திகதி வெளியிடப்படுவதாகவும் அறிந்தேன்.  கொழும்பில் அவருடன் சேர்ந்து, அவர் ஏற்கெனவே ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றேன்; செலவினைப் பகிர்ந்து என்னிடம் பணம் பெற்றுக்கொள்ளச் சிவகுமாரன் மறுத்துவிட்டார்! சென்னையில் நண்பர் சோமீதரனின் வீட்டில் தங்கினேன்

 

    நந்தனத்திலுள்ள வை.எம்.சி.ஏ.உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு, இடம் பகுதிபகுதியாகப் பிரிக்கப்பட்டு புத்தக விற்பனை நிலையங் களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; விரிப்புகளினால் மூடப்பட்டு நிலம் மறைக்கப்பட்டிருந்தது. 700 அரங்குகளில் ஐந்து இலட்சம் தலைப்புகளிலான நூல்கள் என, ஓர் அறிவிப்புத் தெரிவிக்கிறது! எங்கும் ஒளிவெள்ளமும் சனக்கூட்டமும்! சென்னையில் நின்றபோது புத்தகத் திருவிழாவுக்குப் பல நாள்கள் சென்றேன்; அங்கு நடைபெற்ற சிலபுத்தக வெளியீடுகளையும் கவிதை அரங்குகளையும் பார்வையாளனாக அவதானிக்க முடிந்தது; அங்கு வந்திருந்த எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர்  பலருடன் கதைக்கவும் முடிந்தது.

 

1.  நூல் வெளியீடுகள்

 

 ஜீவா சிற்றரங்கம், வெளி அரங்கம் என்பவற்றில் நூல் வெளியீட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன. சிற்றரங்கத்தில் சுமார் 60பேர் வரையில் அமர்ந்துகொள்ளலாம்; வெளியரங்கத்தில் சுமார் 200பேர் வரை அமரும் வசதி இருந்தது. ஆயினும், சிற்றரங்கக் கூட்டத்துக்கு முப்பது பேர்களுக்குள்தான் பார்வையாளரைக் காணமுடிந்தது! தவிர, சில விற்பனைக்கூடங்களிலும் கொஞ்சப்பேருடன் எளிமையாக வெளியீடுகள் சில நடைபெற்றன. ஒருவர் நூலை வெளியிட  ஒருவர் பெற்றுக்கொள்வார்; வெளியிடுபவர் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் நூலைப்பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பார். இந்த முறையில்தான் சிற்றரங்கக் கூட்டங்கள் நடைபெற்றன. முறையான அறிவிப்புகள் இல்லாமையால் பலருக்கும் நிகழ்ச்சிகளின் விபரங்கள் தெரிவதில்லை; இதனால் அவற்றில் பலவற்றைத் தவறவிட நேர்கிறது; நானும் இவ்வாறு சில நிகழ்வுகளைத் தவறவிட்டேன். வருங்காலத்திலாவது பொது அறிவிப்புப் பலகையில் நிகழ்ச்சி விபரங்கள் தெரியப்படுத்தப்படுவது நல்லது.

 

 10155099_237593593109151_553348920_a.jpg

 

அ). 11.01.2014 சனிக்கிழமை மாலை, காலச்சுவடு ஒழுங்குசெய்த நான்கு நூல்களின் வெளியீடு, ஜீவா சிற்றரங்கத்தில் நடைபெற்றது.

 

    சு.தியடோர் பாஸ்கரனின் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’, அரவிந்தனின் ‘கேளிக்கை மனிதர்கள்’, எனது ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’, சா.பாலுசாமியின்’ நாயக்கர்காலக் கலைக்கோட்பாடுகள்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன; முதல் மூன்று நூல்களும் திரைப்படம் பற்றியவை.

10154360_237595429775634_1425969799_a.jp

 

முறையே பெருந்தேவி, அசோகமித்திரன், அம்ஷன்குமார், த.பழமலை ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அசோகமித்திரனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஜீவநதி 6 ஆம் ஆண்டுச் சிறப்பிதழையும், கலைமுகம் இதழொன்றையும் அவரிடம் கொடுத்தேன்; தியடோர் பாஸ்கரனிடமும் அம்ஷன் குமாரிடமும் கலைமுகம்

இதழின் பிந்திய மூன்று இதழ்களையும் ஜீவநதி இதழ்களையும் கொடுத்தேன். பிறிதொரு

நாளில், ‘நிழல் திருநாவுக்கரசு’வுக்கும் கலைமுகம், ஜீவநதி இதழ்கள் சிலவற்றைக்

கொடுத்தேன். இவ்விதழ்களில், திரைப்படம் பற்றிய எனது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

 

 

ஆ.) 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை மணிமேகலை பிரசுரத்தின் 31நூல்களின் வெளியீடு இருப்பதாகவும், அதில் தனது இரண்டு நூல்களும் அடங்குமெனவும் சிவகுமாரன் தெரிவித்திருந்தார்; வெளியரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. எனினும்

நிகழ்வுக்கு வரப் பிந்திவிட்டேன். காரணம், நான் தங்கியிருந்த சாலிக்கிராமம்

நேருநகரிலிருந்து ஏழு நிமிடங்கள் நடந்து தசரதபுரம் வந்து, அங்கிருந்து பேருந்திலோ

பகிர்வு ஓட்டோவிலோ வடபழனி பேருந்து நிலையத்துக்கு வந்து, பின்னர் பெசன்ட்நகர் பேருந்தில் சைதாப்பேட்டைக்கு வந்து இறங்கி, அங்கிருந்தும் சுமார் பத்து நிமிடம் நடந்துதான்

புத்தகத் திருவிழா நடைபெறும் – நந்தனம் வை.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலைச்

சேரவேண்டும்; போக்குவரத்து எப்போதும் மிகுந்த சிரமத்தைத் தந்தது. நான் வந்தபோது

சிவகுமாரனின் நூல்களின் வெளியீடு நடைபெற்றுவிட்டது; தொடர்ந்து வேறு பலரின் நூல்கள்

வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. மேடையில் பிரமுகர் பலர் இருந்தனர்; திரைப்பட

நடிகரும் நெறியாளருமான பொன்வண்ணன், நடிகை தேவயானியும் திரைப்பட நெறியாளரான கணவரும்அவர்களுள் சிலராவர். சபையில் நிரம்பிய கூட்டம். அட்டகாசமான விளம்பர அறிவிப்புகளுடன் ரவி தமிழ்வாணன், வியாபார உத்திகளைப் பாவித்துக் கொண்டிருந்தார்! ஒருநூலின் வெளியீட்டின்போது, நூலாசிரியரின் வருங்கால மனைவியையும் மேடைக்கு வருமாறு ஒலிபெருக்கியில் அழைத்தார்; அவ்வாறே பெற்றோர் நண்பர்களையும்....! அவரது தொடர்ந்த ‘அட்டகாசங்கள்’ என் பொறுமையைச் சோதிக்கவே எரிச்சலுடன் எழுந்து, புத்தகத் திருவிழா நடைபெறும் பந்தலுள் சென்றுவிட்டேன்!

 

 இ). சில நாள்களின் பின்னர், முக்கிய விமர்சகரும் கவிஞரும் சிறுகதையாளருமான சி. மோகனின், ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் நாவலின் வெளியீடு சிற்றரங்கத்தில் நடைபெற்றது. 1982 ஆம் ஆண்டிலிருந்து மோகனுடன் பழக்கமிருந்தது;

எனவே விருப்பத்துடன் சென்றேன். கூட்டத்தில் சாம்ராஜ், லீனா மணிமேகலை, தமிழச்சி

தங்கபாண்டியன் முதலியோர் பேசினர். இராமானுஜம் என்ற உண்மையான ஓர் ஓவியக் கலைஞனைப் பற்றியது இந்த நாவல். எல்லோருமே நாவலைச் சிறப்பானதென்று பாராட்டினர். எனினும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சே என்னைக் கவர்ந்தது; இவர் ஆங்கிலப்

பேராசிரியருமாவார்! பலரும் சூழ்ந்துகொண்டிருந்ததில் மோகனுடன் அதிகம் கதைக்க முடியவில்லை.

 

 ஈ). 17.01.2014 இல், காலச்சுவடு ஒழுங்குசெய்த நூல் வெளியீட்டு நிகழ்வு சிற்றரங்கத்தில் நடைபெற்றது. சிலம்பு நா.செல்வராசுவின் ‘கண்ணகி தொன்மம்’, ‘ஸ்ரீதரன் கதைகள்’, நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கம் செய்த ‘லெ கிளேஸியோ’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே க.ப.அறவாணன், பி.ஏ. கிருஷ்ணன், க.பஞ்சாங்கம் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். தமிழியல் வெளியீடாக வந்துள்ள ‘ஸ்ரீதரன் கதைகள்’ மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பிந்திய மூன்று கதைகள் மிகமுக்கியமானவை என்றும் பி.ஏ. கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

1978619_237596069775570_215747598_a.jpg

 

உ). 18.01.2014 இல், அதே இடத்தில், காலச்சுவடு வெளியீடுகளான- கீதா சுகுமாரனின் மொழியாக்கமான ‘தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி’, செந்தியின் ‘தனித்தலையும் செம்போத்து’, அனாரின் ‘பெருங்கடல் போடுகிறேன்’, க.வை.பழனிச்சாமியின் ‘காற்றில் கரையும் கணினி’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே அனார், சுகுமாரன், இந்திரன்,  க.மோகனரங்கன் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். “.... அனாரின் பல கவிதைகள் நிறத்தைப் பற்றியவை. ஒரு metaphor இன்மேல் இன்னொரு metaphor வைக்கப்படுகிறது. இது சிறப்பு. ‘நிறங்களை அழுபவள்’ மிக முக்கிய கவிதை. ‘மாபெரும் உணவு மேசை’ புதுமையான மொழி வெளிப்பாடு ....” என இந்திரன்தெரிவித்தார்.

 

2. கவிதை அரங்குகள்

 

  அ). வெளி அரங்கில் 18.01.2014 இல் கவிதை அரங்கு இடம்பெற்றது. கலாப்பிரியா, கல்யாண்ஜி, சாம்ராஜ், சுகிர்தராணி, சே.பிருந்தா, அய்யப்ப மாதவன், கவின்மலர்  ஆகிய தமிழகக் கவிஞர்களுடன்- ஈழத்தைச் சேர்ந்தஈழவாணி, நளாயினி தாமரைச்செல்வன், தமிழ்நதி ஆகியோர் கவிதை வாசித்தனர். எட்டுக் கவிஞர்களின் கவிதை வாசிப்பையே கேட்டேன்; பலரின் கவிதைகள் வெறும் வசனங்களாக இருந்தன; (புதுக்கவிதைக்காரரின்

வழமையான!) வாசிப்பு முறையில், உணர்வு வெளிப்படவில்லை. இவ்விடத்தில், “.... நவீனத்

தமிழ்க் கவிதை அல்லது புதுக்கவிதை உரத்த குரல் வாசிப்புக்குப்  பொருத்தமானதல்ல. .... பெரும்பாலும் உரைநடை சார்ந்து எழுதப்படும்  புதுக்கவிதைகள் மௌன வாசிப்புக்குப் பொருந்துபவையே தவிர மேடைகளில் வாசிக்கப் பொருத்தமற்றவை” என்ற கவிஞர் சுகுமாரனின் வரிகளையும்  இணைத்துப் பார்க்கலாம்! ஆயினும் கல்யாண்ஜி, தமிழ்நதி, நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோரின் கவிதைகளும் வாசிப்பு முறையும்

வித்தியாசமாயிருந்தன!

 

1504039_237596666442177_941052800_a.jpg

 

ஆ). இதே அரங்கில், 19.01.2014  அன்று, ‘கடவு’ அமைப்பும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து, தென்மொழிக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வை நடத்தின. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிக் கவிஞர்கள் கவிதை வாசித்தனர்; என். டி. ராஜ்குமார் ( தமிழ்), அனிதா தம்பி (மலையாளம்), விமலா மோர்த்தலா (தெலுங்கு), மம்தா சாகர் (கன்னடம்), சேரன் (தமிழ்) ஆகியோரே அக்கவிஞர்கள். பிறமொழிக் கவிதைகளின்  தமிழ்

மொழியாக்கங்களும் வாசிக்கப்பட்டன. பிறமொழிக் கவிதைகளை முறையே சுகுமாரனும் கௌரி கிருபானந்தனும் பாவண்ணனும் மொழியாக்கம் செய்தனர்; மலையாளக் கவிதையின் மொழியாக்கத்தை சுகுமாரனும், ஏனையவற்றை சுகிர்தராணியும் வாசித்தனர். கவிதை வாசிப்பு நிகழ்வு ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது! ராஜ்குமாரினதும் சேரனதும் தமிழ்க் கவிதை வாசிப்புகள்  உயிர்த்துடிப்புடன் அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுபோல், மேடையின் பல பக்கங்களிலும் நடந்தபடி மம்தா சாகர் தனது கவிதைகளை வாசித்தமையும், சுகிர்தராணி அவரது கவிதையின் மொழியாக்கத்தை வாசித்தபோது – தனது  கன்னட மூலக் கவிதையை மெல்லிய குரலில் வாசித்தபடி மேடையைச் சுற்றி வந்தமையும், அருமையான நிகழ்த்துகலை அனுபவத்தைத்  தந்தன!

 

1601466_237597643108746_558051906_a.jpg

 

3. வேறு நிகழ்வுகள்

 

   அ). பொங்கல் நாளையொட்டியதாக ‘தமிழர் திருவிழா’ நிகழ்வுகள், இராயப்பேட்டை வை. டபிள்யு. சி.ஏ. மைதானத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் சந்தித்த

ஈழத்து  நண்பர்கள் அ. இரவி, விஜயரட்ணம், சோதிலிங்கம் ஆகியோர் முதல் நாள் தாங்கள் அங்கு சென்றதையும் நல்ல நிகழ்ச்சிகள் என்பதையும் கூறி, இன்று தங்களுடன் அங்கு வருமாறும் கேட்டனர்; சிதம்பரநாதனும் பத்மினியும் அவர்களுடன் நின்றனர். நானும் சென்றேன். நாட்டுப் பாடல்களும், கிராமிய  நடனங்களும், தப்பாட்டம் போன்றவையும் நன்றாகவிருந்தன; தி.மு.கவுக்கான பிரச்சாரமும் அடிக்கடி அந்த மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே வளாகத்தில் தனியாக, தோற்பாவைக் கூத்தும் நடைபெற்றது; கொஞ்சநேரம் அதனையும் பார்த்து இரசித்தேன்!

 

 

    ஆ). 24 ஆம் திகதிய தினத்தந்தி நாளேட்டில், ‘முத்தமிழ்ப்பேரவையின் 36ஆம் ஆண்டு இசை விழா’ ஆரம்ப நிகழ்வு பற்றிய செய்தியைக் கண்டேன்; அடையாறிலுள்ள நாதஸ்வர வித்துவான் ரி. என். ராஜரத்தினம்பிள்ளை நினைவரங்கத்தில், மு.கருணாநிதி தலைமையில் இரவு அது நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நானிருக்குமிடத்திலிருந்து

வெகு தொலைவில் அவ்வரங்கம்  இருந்தது;  எனினும் தமிழிசையில் ஆர்வம் உள்ளவனாதலால், எப்படியும் போய்ப் பார்ப்பதென முடிவெடுத்து இடத்தை விசாரித்துச் சென்றேன். நான் சென்றபோது நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு இசைக் கலைஞர்கள் பலர் கெளரவம் செய்யப்பட்டனர்; தமிழிசையைப் பரப்ப முயன்றவர்கள் எதிர்கொண்ட சில சவால்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டன; தி.மு.கவுக்குச் சார்பான கருத்துகளும் சொல்லப்பட்டன. மேடையில் மு.கருணாநிதியுடன், கௌரவிக்கப்பட்ட கலைஞர்களும் அமர்ந்திருந்தனர்; பட்டம்மாளின் பேர்த்தியும்  கர்நாடக இசைக்கலைஞருமான நித்தியஸ்ரீயும் கௌரவம் பெற்ற ஒருவர். அன்று இசை நிகழ்வெதுவும் நடைபெறவில்லை; அதனால்  ஏமாற்றம் அடைந்தேன்! மண்டபத்தில் குறைந்த அளவு

கூட்டமே இருந்தது. அரங்கத்தின் வெளியே முன்புறச் சுவரில், முக்கியமான இசைக் கலைஞர்

பலரின் பெரிய அளவு உருவப் படங்கள் வைக்கப் பட்டிருந்தமை மகிழ்வை அளித்தது!

 

இ). ‘தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு

 

10173759_237598036442040_774789550_a.jpg

 

சென்னைப் பயணம் பற்றிய தகவலை எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துக்கு மின்னஞ்சலில்

அறிவித்தபோது, தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒழுங்குசெய்து  கோவையில் நடைபெற விருக்கிற, ‘தாயகம் கடந்த தமிழ்’ அனைத்துலகக் கருத்தரங்கு பற்றிய தகவலைத் தந்து, நான் பேராளராகப் பதிவுசெய்வதற்குரிய தொடர்புஇணைய முகவரியையும் அனுப்பிவைத்தார். கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரலைப் பார்த்தபோது சேரன், எஸ். பொ., அ. முத்துலிங்கம், அனார் ஆகிய ஈழத்தவர் பெயர்களைக் கண்டேன்; கண்பார்வை இழந்தவராக முதுமை நிலையிலுள்ள கோவை ஞானியைச் சந்திக்கும் விருப்பும் இருந்தது. எனவே கோவை செல்லத் தீர்மானித்து, பேராளராகப் பதிவுசெய்துகொண்டேன்.சென்னையில் நின்றபோது தொடர்புகொண்ட செயப்பிரகாசம் அவர்கள், 20 ஆம் திகதி காலைசென்று 23ஆம் திகதி காலை திரும்புவதற்குரிய சென்னை – கோவை தொடருந்துப் பயணச்சீட்டைத் தனது செலவில் பதிவுசெய்து தந்தார்; கோவையில் தங்குமிடத்தை கருத்தரங்க அமைப்பாளருள்ஒருவரான கவிஞர் சேரன் ஒழுங்குசெய்தார்.

 

    20 ஆம் திகதி மாலை தொடக்க நிகழ்வு, கலை நிகழ்ச்சிகளும் கருத்துரைகளுமாக நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு நாள்களிலும் ‘தாயகம் கடந்த தமிழ் ; ஓர் அறிமுகம்’, ‘தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்’, ‘புதிய சிறகுகள்’, ‘தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள்’,’தமிழ்கூறும் ஊடக உலகம்’, 'மொழிபெயர்ப்பு : வெளி உலகின் வாயில்’, ‘தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி’ ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன;

பேராளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. கருத்தரங்குகளில்

திருத்தமான தமிழில் கட்டுரை படித்தும் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்த,  ஜேர்மனியைச் சேர்ந்த உல்ரிக்கே நிக்கொலஸ் மற்றும் சீனப் பெண்மணியான கலைமகள் இருவரும், கூடுதல் கவனத்தையும் மதிப்பையும் மண்டபத்தில் இருந்தோரிடம் பெற்றனர்! முடிவு நிகழ்ச்சியின்போது, இருநாள் நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீட்டுக் குறிப்பை ஐந்து நிமிடங்களுக்குள் தெரிவிக்கும் வாய்ப்பு, இருவருக்கு வழங்கப்பட்டது; அந்த இருவரில் ஒருவராக நானும் கருத்துரைத்தேன்!   

 

10176142_237598229775354_505086191_a.jpg

 

தங்கியிருந்த ஹொட்டேலிலும் ( The Hotel Residency) கருத்தரங்க மண்டபத்திலும் சிற்பி எல்.

முருகேசன், கவிஞர் சிற்பி, முனைவர் ரெ. கார்த்திகேசு, சீ.ஆர். ரவீந்திரன்,

எஸ்.பொ., இளைய அப்துல்லா, கோவை ஞானி, மாத்ருபூமி உதவி ஆசிரியர் விஜயகுமார்,

புவியரசு, பீக்கிங் வானொலியின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் வேலை பார்க்கும்

கலைமகள், இலக்கியா, ஈஸ்வரி ஆகிய தமிழ் பேசும் சீனப்பெண்கள் எனப் பலருடன் கொஞ்சநேரம் உரையாட முடிந்தது; இந்திரன், மாலன், சேரன், அனார் ஆகியோரிடம் கூடுதலாக உரையாட வாய்ப்புக் கிடைத்தது. கலைமகளுக்கு, கைவசமிருந்த ஜீவநதி இதழொன்றையும் கொடுத்தேன்.

 

                                                                                                            (தொடரும்)

====   அ.யேசுராசா ==  முகநூல் ==  Athanas Jesurasa

Link to comment
Share on other sites

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 2 )
 

10156136_237950013073509_164639370_a.jpg

 

4. சந்தித்த எழுத்தாளர் – இலக்கியத் துறை

    சார்ந்தோர்

 

 

  புத்தகத் திருவிழாவிலுள்ள விற்பனை அரங்குகளிலும், ஏனைய நிகழ்வுகளிலும் பலரைச் சந்திக்க முடிந்தபோதும், ஆறுதலாக உரையாடும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது; சூழலும் தேவைகளும் கதைக்கும் நேரத்தைக் குறுக்கிவிட்டன. நீண்டகாலத் தொடர்புள்ள சி.மோகன், அசோகமித்திரன், திலீப்குமார், வசந்தகுமார், கண்ணன், வேதாந்தம், அம்ஷன்குமார், நிழல் திருநாவுக்கரசு, சேரன், அ .இரவி ஆகியாரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியே! ஈழத்தைச் சேர்ந்த உமா வரதராஜன், மீராபாரதி, தமிழ்நதி, ஆழியாள், ஊடறு ரஞ்சி, நளாயினி தாமரைச்செல்வன், தீபச்செல்வன், தெ. மதுசூதனன், அந்தனி ஜீவா, த.துரைசிங்கம் முதலியோரையும் அங்கு சந்திக்க முடிந்தது. சிலருடன் மட்டுமே ஆறுதலாக அமர்ந்து உரையாட வாய்ப்புக் கிட்டியது.

 

 

   அ). சா.கந்தசாமி

 

10177966_237950359740141_2070853243_a.jp

 

ஒரு நாள், தெருவிலிருந்து  புத்தகத் திருவிழாவின் வெளி வாயிலைக் கடந்து உட்செல்கையில், சிறுதூரத்தில் முன்னால் செல்பவர் எழுத்தாளர் சா. கந்தசாமி என அடையாளங் கண்டேன். ‘சாயாவனம்’ என்ற நாவலின்மூலம் பெயர்பெற்றவர் அவர்; பின்னர் வேறு நூலுக்காகச் சாகித்திய அக்கடமிப் பரிசையும் பெற்றார். விரைவாக நடந்து அவரருகில் சென்று, “ நான் யேசுராசா.... யாழ்ப்பாணம்” என்று சொல்லி, 1982 இல் அவரது வீட்டில் காலை உணவு அருந்தியதையும் தெரிவித்தேன். “ஓ.... நினைவிருக்கு” என்றபடி ”எப்ப வந்தீங்க....?” என விசாரித்துக் கதைத்தார். நான் எனது நூல்வெளியீடு நடந்தது பற்றிய விபரத்தைத் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வரும்படி கூறி தொலைபேசி இலக்கத்தையும், வழி விபரங்களையும் குறித்துத் தந்தார். ஒருநாள்அவருக்கு அறிவித்தபின்னர், பெசண்ட் நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்த -யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஒரு குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு, நண்பரின் மகனுடன் மோட்டார் சைக்கிளில் கந்தசாமியின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு சூடான பஜ்ஜியைச் சாப்பிட்டு, “காப்பி”யையும் குடித்தபடி உரையாடினோம். அவரது சில

கருத்துக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எழுப்பின! தியடோர் பாஸ்கரனின்

சினிமா பற்றிய எழுத்துக்களைச் சாதாரணமானவை என்று சொன்னார். எஸ்.பொவின்  ‘வரலாற்றில் வாழ்தல்’ நூலைக் கோவை ஞானி மிகச் சிறப்பான நூலாக அடையாளங் காட்டியிருப்பதை நான் சொன்னபோது, அந்த நூல் முக்கியமானதல்ல என்றும், கோவை ஞானி மேம்போக்காகக் கருத்துக் கூறுபவர் என்றும் சொன்னார். அதைப்போல, நான் விரும்பும் மலையாள எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் நூல்களைப் பற்றிச் சொன்னபோதும், மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீரை மட்டும்தான் குறிப்பிடலாம் என்றும் சொன்னார்!

 

 

    ஆ). கி. அ. சச்சிதானந்தம்

 

 

 

10168134_237950549740122_1294291042_a.jp

 

      1982 ஆம் ஆண்டு,

நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி வீட்டில் முதலில் சந்தித்தபோதே பிரமிப்பைத் தந்தவர்

சச்சிதானந்தம்; மீசைக்காரப் பூச்சியிலிருந்து இமயமலையின் பௌத்த துறவிகள்,

தத்துவங்கள் எனப் பலவற்றை அன்று கதைத்தார்! அவரது பயணங்களும் பரந்த வாசிப்பும்

அதன் அடித்தளம்! நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவார். இம்முறை சென்னையில், வடக்குக் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை அண்மையில் ஒழுங்குசெய்த இலக்கிய விழாவில், வாழ்நாள் பங்களிப்புக்காக ஐம்பதினாயிரம்

ரூபா பணமும், விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. சிறுகதைகள், திறனாய்வுகள், மொழியாக்கங்கள், தொகுப்புகள், பதிப்புகள் என இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன. மொழியாக்கம்செய்து நூல் வடிவம் பெறாத அரிய பிரதிகள் பலவற்றையும் வைத்திருக்கிறார். நூல் வடிவம் பெறாமல் இவை நீண்டகாலம் தேங்கிக் கிடப்பதைப் பற்றி இப்போதும் அலட்டிக் கொள்ளாமலே  இருக்கிறார். “எனது பணி முடிந்தது; மற்றையோர்பற்றி

ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். குட்டி இளவரசன் நூலை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார் (பிரெஞ்சு மூலத்திலிருந்து செய்யப்பட்ட மொழியாக்கம், ஏற்கெனவே க்ரியா வெளியீடாக வந்துள்ளது); இரண்டு ஆண்டுகளின் முன்னர் சென்னையில் இவரைச் சந்தித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நூலாக வெளியிடுவதாகக் கூறி ஒரு பிரதியைப் பெற்றுக் கொண்டு சென்றதாகவும்குறிப்பிட்டார். அவ்வாறு நூலெதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பதை, அவருக்குத் தெரிவித்தேன்!

 

 

    இ). க்ரியா ராமகிருஷ்ணன்

 

 

    க்ரியா தமிழ் அகராதி தமிழ் உலகில் புகழ் பெற்றது; பல பதிப்புகளையும் கண்டது. நவீன இலக்கிய நூல்களை நவீன வடிவமைப்புடன் -  திருத்தமான பதிப்பாக,

எண்பதுகளிலேயே வெளியிடத் தொடங்கிய முன்னோடிப் பதிப்பகம், க்ரியா பதிப்பகம் ஆகும்.

அவ்வாறே உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு, ஜெர்மன் மொழிப் படைப்புகளை நேரடி மொழியாக்கமாக  -  தகுதியானவர்களைக் கொண்டு ஆக்கியும் வெளியிட்டு வருகிறது. இப்பதிப்பகத்தின் இயக்குசக்தியாக இருப்பவர்தான் ராமகிருஷ்ணன். 1982 இல் முதலில்

சந்தித்தேன்; 1984 இல், ‘அறியப்படாதவர்கள் நினைவாக....!’ என்ற எனது கவிதைத் தொகுதியையும், எம்.ஏ. நுஃமானும் நானும் இணைந்து தொகுத்த, ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ நூலையும் ஏற்கெனவே வெளியிட்டவர். நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை அவரைச் சந்தித்தேன். திருவான்மியூரிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கண்டேன்; கலைமுகம் 50ஆவது சிறப்பிதழையும் பிந்திய மூன்று இதழ்களையும், எனது ‘பதிவுகள்’ நூலையும் கொடுத்தேன். ஆர்வமாக அவற்றைப் புரட்டிப் பார்த்தார். நீண்ட காலத்தின் பின் சந்திப்பதைக் குறித்து உரையாடிவிட்டு, தனது வீட்டுக்குக் கூட்டிச்சென்றார்.

அங்கு சுவையான மரக்கறிச் சாப்பாட்டை இரசித்துச் சாப்பிட்டேன். புதிய சொற்களையும்

விளக்கங்களையும்  சேர்த்து அகராதியை மேம்படுத்துவது பற்றிப் பேசினார். சொல்வங்கிக்கு யாரும் தரவுகளை அனுப்பலா மெனவும், அதுபற்றிய செயல்முறையையும் ஆர்வத்துடன் செய்து காட்டினார். புதிய நூல்களின் செம்மையான பதிப்புக்குரிய

உழைப்பின் முக்கியத்தையும் பேச்சில் உணர்த்தினார். பார்வையற்றோருக்கான பிரெய்லி

முறையிலான க்ரியா அகராதியையும், குட்டி இளவரசன் நூலின் பிரெய்லி பதிப்பையும்

காட்டினார்; மகிழ்ச்சியாயிருந்தது. மேலும், எனக்குத் தேவையான நூல்களை க்ரியா

அரங்கில் பெற்றுக்கொள்ளும்படியும், தான் அங்குள்ள அலுவலருக்குத் தெரிவிப்பதாயும்

சொன்னார். காஃவ்காவின் ‘விசாரணை’ நாவலின் புதிய பிரதியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். என்னிடம் முதலாம் பதிப்பு இருந்தது; ஆனால், மொழியாக்கத்தில் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டமையைக் குறிப்பிட்டே அதனை வலியுறுத்தினார். அவரது அர்ப்பணிப்பு நிறைந்த முயற்சிகளுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்தேன்; அவர் கூறியதற்கிணங்க மறுநாள், க்ரியா அரங்கில் முக்கியமான நூல்களை- குறிப்பாக மொழியாக்க நூல்களை – பெற்றுக்கொண்டேன்!

 

 

    ஈ). கோவை ஞானி

 

 

 

1797510_237950713073439_955001853_a.jpg

 

1982 தைமாதம் சென்னையிலும், பங்குனியில் கோவையிலும் பின்னர்  1984 இல் கோவையிலும் அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன்; அப்போது அவருக்குக் கண்பார்வை இருந்தது. 1998இல் திருநெல்வேலியில் ஒரு லொட்ஜில் சந்தித்தபோது, அவருக்குப பார்வை இல்லாமலாகிவிட்டது! அன்று நள்ளிரவு வரை ஈழத்து அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் ஆர்வத்துடன் உரையாடினார்! நீண்ட காலத்துக்குப் பிறகு, தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கில், 21ஆம் திகதி மதிய உணவு வேளை அவரருகில் சென்று, அவரைத் தொட்டபடி “நான் யேசுராசா....” என்று சொன்னபோது, “யேசுராசாவா....!” என்று வியப்புடன் கேட்டு கையைப் பற்றியபடி இருந்தார்; பின்னர், “இந்தியாவும் தமிழக அரசும் ஈழத் தமிழருக்குத் துரோகமிழைத்துவிட்டன” என்று சொன்னார். அன்று மாலை அவரது வீட்டுக்கு வருவதாகச் சொல்லி, சேரனும் நானும் - எஸ்.பொவும் மனைவியுமாக அன்று இரவு ஞானியின் வீட்டுக்குச் சென்றோம். வழமைபோல் அரசியல் இலக்கியம் பற்றிய கதைகள். பின்னர் நூல்கள் உள்ள அவரது அறைக்குக் கூட்டிச் சென்றார்; தனது உதவியாளரான பெண்ணை அழைத்து, தனது நூல்கள் பலவற்றை எடுத்து எமக்குக் கொடுக்குமாறு சொன்னார். சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அவரது ‘நிகழ்’ சிற்றிதழ்த் தொகுப்பையும் தந்தார். அவர் தனது முக்கிய நூற்சேகரிப்பு முழுவதையும் யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு வழங்க விரும்புவதாகவும், அவற்றை அங்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பை நூலகம் ஏற்கவேண்டுமெனவும் தெரிவித்து அறிவித்ததாகவும், அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை எனவும் அவரது உதவியாளர் சொன்னார். யாழ்ப்பாணம் சென்றதும் பிரதம நூலகரிடம் இதுபற்றித் தெரிவிப்பதாகச் சொன்னேன்; அதுபோல், இங்கு வந்தபின்னர் நூலகரிடம் கதைத்து, ஞானியுடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளேன்!

 

 

    உ). மாலதி மைத்ரி கேட்டுக்கொண்டபடி, தை 26 ஆம் திகதி காலை, பேருந்தில்  பாண்டிச்சேரி புறப்பட்டேன்; பா. செயப்பிரகாசத்துக்கும் தெரிவித்தேன். அவர், பாண்டிச்சேரியில் நடிகர் சிவாஜி சிலையடியில் இறங்குமாறு அறிவுறுத்தினார். 

அங்கு இறங்கியபோது அவர் என்னைச் சந்தித்து, பக்கத்திலுள்ள – பாரதி பாடிய

குயில் தோப்புக்குக் கூட்டிச்சென்றார்; அது சரியாகப் பேணப்படாமல் உருமாறி

இருந்தது! பின்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்துக்கும், பாரதி வாழ்ந்த

இல்லத்துக்கும் சென்றோம். ஆனால் அன்று குடியரசு தினமென்பதால், இரண்டு இடங்களும்

பூட்டியபடி இருந்தன; அவற்றின் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போனமை  ஏமாற்றமாகிவிட்டது. பின்னர், மாலதி மைத்ரியின் வீட்டிற்குச் சென்றோம்.

மீனவர் நலவுரிமைக்காக உழைக்கும் கணவன் மனைவி ஆகிய இருவரை அங்கு சந்திக்க நேர்ந்தது. தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு நேரும் அவலங்களை விளக்கினேன். தமிழகக் கடல் வளம் அழிக்கப்பட்டது போன்று எமது கடல் வளம் மிக மோசமாகப் பாதிக்கப் படுவதையும், ஒவ்வொருமுறையும் கச்சதீவில் மீன்பிடிக்கும்போதுதான் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள் எனத் தமிழக ஊடகங்களும் தலைவர்களும் சொல்வது பொய் என்பதையும், தமிழக மீனவர்கள் எமது இடங்களின் கரைகளுக்கு அருகிலேயே வருகிறார்கள் என்பதையும்  விளக்கினேன்.

 

 

பின்னர் உணவருந்தி செயப்பிரகாசமும் நானும் மாலதி மைத்ரியும் கதைத்துக் கொண்டிருந்தோம்; இலக்கிய அரசியல், ஈழத்து நிலைமைகள் பற்றியதாக அது இருந்தது. மாலை அங்கிருந்து சென்னை புறப்பட்டேன்; இரவு

எனது பொருள்களை ஒழுங்குபடுத்தி, மறுநாள் காலை விமானத்தில் இலங்கை திரும்பினேன்!

அன்றிரவே கொழும்பிலிருந்து யாழ்ப்பாண மெயில் வண்டியில் பயணம்செய்து, மறுநாள் காலை கிளிநொச்சி வந்து, பேருந்தில் யாழ்ப்பாணம் வந்து வீடு சேர்ந்தேன்! 

 

1978613_237951303073380_2055652609_a.jpg

 

    அண்மையில் தொலைபேசியில் கதைத்த ஒரு நண்பர், “தமிழகப் பயணம் பயனளித்ததா?” எனக் கேட்டார்; “ஓம்!” எனச் சொன்னேன். புத்தகத் திருவிழாவில் ‘புத்தகக் கடல்’ இருந்தது;

இலட்சக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களைப் பார்ப்பதும் விருப்பமானவற்றை

வாங்குவதுமாக இருந்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, சென்னைவாசிகளின் கலாசார வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது! ஆரம்பத்தில் பத்துவீதமாகத் தமிழ்ப் புத்தகங்களும் மிகுதி ஆங்கிலப் புத்தகங்களுமாக இருந்த நிலைமை, இன்றோ தலைகீழாகிவிட்டது! புதிய

புதிய பதிப்பகங்கள் தோன்றுகின்றன; முக்கியமான படைப்புகள் அழகிய நவீன

வடிவமைப்புகளுடன் தமிழில் வருகின்றன; முக்கியமான மொழியாக்கங்களும் அவ்வாறே. நாமெல்லாம் அவாவுறுகிற புத்தகக் கலாசாரம் என்பது வளர்கிறது. இத்தகைய அரிய நிகழ்வில் முதல்முறையாகப்  பங்குபற்றியமையும், எனது நூலொன்று இவ்விழாவில் வெளிவர நான் நேரில் கலந்துகொண்டமையும், மகிழ்வைத் தருகின்றன. தொண்ணூறுகளில் ஒரு நண்பர் இரவல்வாங்கித் தொலைத்துவிட்ட (க.நா.சு. மொழியாக்கம் செய்த) ‘விலங்குப் பண்ணை’ நூலை நீண்ட காலத்தின் பின்னர், இங்குதான் வாங்கமுடிந்தது; ‘காட்சிப் பிழை’ இதழில் விடுபட்ட இதழ்கள் பலவும், ‘மந்திரச் சிமிழ்’ இதழ்களும் கிடைத்தன. இவ்வாறே, எனது ‘முதல்  விருப்பமான’  திரைப்படம் பற்றிய நூல்கள் பலவற்றையும் பெற

முடிந்தது! ராகுல்ஜி எழுதிய ‘ஊர்சுற்றிப் புராணம் நூலை நீண்ட காலத்தின் முன்பே  இரசித்துப்படித்துவிட்ட  எனக்கு, அங்குமிங்குமான பயணங்கள் எப்போதும் விருப்பமானவையே; அதனால்தான், எழுபதுகளிலிருந்தே ‘பயணி’ என்னும் புனைபெயரையும் வைத்துள்ளேன்! சென்னையிலிருந்து கோவைக்கும் கோவையிலிருந்து சென்னைக்கும்  பகல்வேளையில் செய்த நீண்ட தொடருந்துப் பயணங்கள், வித்தியாசமான அனுபவங்களுடன் அருமையாகவிருந்தன!  நான் மதிப்பு வைத்திருக்கும் கோவை ஞானி, க்ரியா ராமகிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், பா.செயப்பிரகாசம், அசோகமித்திரன்  முதலியோரைச் சந்தித்தமையும் : சேரன், அ. இரவி முதலிய ஈழத்து நண்பர்களை மிக நீண்ட காலத்தின் பின் சந்தித்தமையும் எல்லாம்.... எனது பயணத்துக்குப் ‘பெறுமதியான அர்த்தத்தை’ வழங்கிக்கொண்டே  இருக்கின்றன! 

 

                                                                                                                       

                                                                                                                                14.03.2014.

 

                                                                       


 

 

                                                    

                                                                    ***

 

 


 

10155320_238071869727990_1047447720_a.jp

 

 

அ.யேசுராசா ==  முகநூல் ==  Athanas Jesurasa   ==  நன்றி: ஜீவநதி
                                                                                     சித்திரை - 2014

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.