Jump to content

இஸ்ரேல் பயணம்


Recommended Posts

இஸ்ரேல் பயணம்-1

 

நாகேஸ்வரி அண்ணாமலை

telbeach.jpg

விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள்.  அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும்.  அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன்.

என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர்  ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.  ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு  ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.  அங்கிருக்கும் போது ஒரு முறை அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர் சிகாகோவிற்கும் வந்திருந்தார்.

சிகாகோவில் அவரைச் சந்தித்துப் பேசிய போது இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய  ஆசையை சும்மா கேஷுவலாகக் கூறினேன்.  அவர், ‘நீங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கு இது நல்ல தருணம்’ என்றார்’  ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  இப்போது அங்கு அமைதி நிலவுகிறதா?’ என்றேன்.  ‘நான் இப்போது அங்கு இருக்கிறேன்.  அதனால்தான் இது நல்ல சமயம் என்றேன்’ என்றார்.

அப்போதே என் கணவரிடம் இஸ்ரேல் போவது பற்றிப்  பேச ஆரம்பித்தேன்.  அவருக்கும் என்னுடைய வெகுநாளைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இது சரியான சமயமாகத் தெரிந்தது.  அடுத்ததாக எப்போது போவது என்று எண்ண ஆரம்பித்தோம்.  நண்பர் ஜூனில் வந்தால் தனக்கும் சற்று ஓய்வு இருக்கும் என்றும் மேலும் அப்போது பல்கலைக் கழகத்தில் என் கணவருக்கு ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்வதற்குத் தகுந்த நேரம் என்றும் கூறினார்.  வருடா வருடம் ஜூனில் இந்தியாவிற்கு வருவோம்.  இந்த முறை அப்படிச் செல்லும்போது வழியில் இஸ்ரேலில் ஒரு வாரம் கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  தற்செயலாக இன்னொரு அமெரிக்க நணபர் ஒருவர் – இவரும் யூதர் – நாங்கள் போவதாகத் திட்டமிட்ட தினங்களில் அங்கு இருப்பதாகக் கூறியதும் இப்படி எல்லாம் கனிந்து வந்ததில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.  (போன வாரம் நடந்தது போல் காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல் அப்போது நடந்திருந்தால் போயிருப்போமா என்பது சந்தேகமே.  நல்ல வேளையாக அப்போது எதுவும் நடக்கவில்லை.)

பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே அமெரிக்காவில் குடியேறி அங்கு செட்டிலாகிவிட்ட  அமெரிக்க யூதர்கள் பலர் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்குச் சென்று அங்கு சில நாட்களாவது தங்கி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் யூதர்களாகிய தாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  மேலே கூறிய நண்பரும் இந்த வகையைச் சேர்ந்தவர்.

இஸ்ரேலில் உதவுவதற்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி  கொடுத்த தெம்பில் மளமளவென்று என் மகள் டிக்கெட் வாங்குவது, ஜெருசலேமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்தாள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும்  நண்பர்கள் ஆதலால் இஸ்ரேலுக்குப்  போவதற்கு அமெரிக்கக் குடிமக்களும் குடியுரிமை பெற்றவர்களும்  விசா எதுவும் இல்லாமல் போகலாம்.  இந்தியர்கள் என்றால் விசா வாங்க வேண்டும்.  அன்கு போவதற்கு ஒரு மாதமாவது இருக்கும் போதுதான் விசா கொடுக்கிறார்கள்.  இஸ்ரேலுக்குப் போய் வந்தவர்களை பல அரபு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை ஆதலால் இஸ்ரேல் விசாவை ஒரு தனித் தாளில் பெற்று இஸ்ரேலுக்குப் போய்வந்த பிறகு அதைப் பாஸ்போர்ட்டிலிருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார்.  அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இஸ்ரேல் தூதரகத்திடம் அந்த வேண்டுகோளைக் கூறுங்கள் என்றார்கள்.  ஆனால் அதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.  பாஸ்போர்ட்டிலேயே குத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் ஒரு மாடர்ன் நகரம்.  அங்கு எங்களைப் போன்றோர்களுக்குப் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  எங்களுடைய விருப்பம் எல்லாம் பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரையும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற பழைய நகரங்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான். ஜெருசலேமில் விமான நிலையம் இல்லையாதலால் டெல் அவிவிற்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக ஜெருசலேம் செல்ல வேண்டும்.  நாங்கள் சிகாகோவிலிருந்து கனடா நாட்டிலுள்ள டொரொண்டோ விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டெல் அவிவிற்குச் செல்லத் திட்டமிட்டோம்.

சிகாகோவிலிருந்து  டோரண்டோ செல்ல ஒன்றரை மணி  நேரம்தான்.  அதற்குப் பிறகு  டெல் அவிவ் செல்லும் விமானம்  கிளம்ப ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தது.  இத்தனை மணி நேர இடைவெளி இருந்ததால் டெல் அவிவ் செல்லும் விமானம் கிளம்பும் இடத்திற்கு அப்போது எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.  விமான நிலையத்தில் வேலை பார்த்த பல தமிழர்கள் – டோரண்டோவில் இலங்கையிலிருந்து குடியேறிய பல தமிழர்கள் இருக்கிறார்கள் – நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டு நன்றாக உதவினர்.

டோரண்டோ-டெல் அவிவ்  விமானப் பயணம் பன்னிரெண்டு  மணி நேரம் எடுத்தது.  வழியில் மூன்று தடவை உணவு கொடுத்தார்கள்.  நாங்கள்  எப்போதும் விமானப் பயணத்தின்  போது சைவ, ஆசிய உணவையே கொடுக்குமாறு விமானக் கம்பெனியிடம் கேட்பதுண்டு.  இங்கும் அம்மாதிரிக் கேட்டிருந்தும் மூன்று முறையில் இரண்டு முறை பாலஸ்தீன உணவைக் கொடுத்தார்கள்.  பாலஸ்தீனத்திற்குப் போகும் முன்பே எங்களுக்குப் பாலஸ்தீன உணவு கிடைத்தாலும் விமான உணவு பாலஸ்தீனத்தில் கிடைத்த உணவு போல் இல்லை.  எல்லா விமான உணவுகளைப் பொறுத்த வரையிலும் இப்படித்தான்.  நம் இந்திய உணவு இந்திய உணவு போல் இருக்காது.

இஸ்ரேலுக்குப் போவதாக நண்பர்களிடம் கூறியதுமே  அங்கு மிகவும் கெடுபிடியாக  இருக்கும், விமான நிலையத்தில் உங்களிடம் பல கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் எச்சரித்திருந்தனர்.  அதிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் அதிகக் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறியிருந்தனர்.  ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.  விமான நிலைய அனுபவத்தைப் பொறுத்த வரை குறிப்பிடத் தகுத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை.  எங்களில் யாரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும் மிகக் குறைந்த வயது இளைஞர் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  குடிபுகல் பகுதியில் இருந்த ஊழியர்கள் எல்லா நாட்டிலும் போல் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  குடிபுகல் பகுதியில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா நாடுகளிலும் மறந்தும் சிரித்துவிடாதீர்கள் என்று பயிற்சியின் போது அறிவுரை கூறியிருப்பார்கள் போலும் என்று நான் நினைத்துக்கொள்வேன்.

டெல் அவிவ் விமான  நிலையம் டெல் அவிவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது.  ஜெருசலேம்  நகரம் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.  விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டாக்சி ஒன்றில் ஜெருசலேம் நோக்கிக் கிளம்பினோம்.  டாக்சி டிரைவர் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்.  ஜெருசலேமிலும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் எச்சரித்திருந்ததால் விமான நிலையத்திலிருந்து ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்ல சுமாராக எவ்வளவு ஆகும் என்று நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்தோம். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சில ஊர்களுக்குச் செல்வதற்குரிய கட்டண அறிவிப்புப் பலகை இருந்தது.  டாக்சி டிரைவர் கேட்ட தொகை அதை அடுத்து இருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் காரில் ஏறினோம்.

மைசூரில் ஆட்டோக்காரர்கள்  பக்கத்து இடத்திற்கு வருவதற்குத்  தயங்குவார்கள்; அல்லது குறைந்த கட்டணமான இருபது ரூபாயை விட அதிகம் கேட்பார்கள்.  ஜெருசலேமில் டாக்சி டிரைவர்களைப் பொறுத்தவரை இதே கதைதான்.  ஜெருசலேம் தெருக்கள் மேடும் பள்ளமுமாக இருந்ததாலும் சில இடங்களில் படிகளோடு இருந்ததாலும் என்னால் நடக்க முடியவில்லை.  போனில் டாக்சியைக் கூப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் குறிப்பிட்டு போக வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டால் வர முடியாது என்று கூறிவிடுவார்கள்.  அதனால் கூடியவரை போகும் இடத்தைக் கூறுவதை முடிந்தால் தவிர்த்துவிடுவோம்.  சில சமயங்களில் எங்களால் முடியாவிட்டால் நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரரிடம் உதவி கேட்டால் அவர் தவறாமல் டாக்சியை வரவழைத்துவிடுவார்.  அவர்கள் மொழியில் அவர் பேசியது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் ஜெருசலேம்  சென்ற அன்று நல்ல வெயில் அடித்தது.  பகலில் அங்கு ஜூனில் நல்ல வெயில் அடிக்கிறது.  பொழுது சாயும் போது வெப்பம் குறைந்து கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிடுகிறது.  நாங்கள் விருந்திற்குப் போன இரண்டு நண்பர்கள் வீட்டிலும் இரவு உணவைத் தோட்டத்தில் மேஜை, நாற்காலி போட்டுப் பரிமாறினார்கள்.  வெளியில் உணவருந்துவது இஸ்ரேல் நாட்டவர்களுக்குப் பிடித்தமான விஷயம் போல் தெரிகிறது.

ஜெருசலேமில் ஓட்டல்களிலும்  தங்கலாம்.  நாங்கள் அபார்ட்மெண்ட்டில்  தங்குவது என்று முடிவு செய்தோம்.  வீட்டின் ஒரு பகுதியை சில  வீட்டுச் சொந்தக்காரர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.  இவற்றில் ஓட்டல்களில் இல்லாத சமைக்கும் வசதி உண்டு.  எங்கள் அபார்ட்மெண்ட்டில் நிறையச் சமையல் சாமான்கள் இருந்தன.  ஒரு மின்சார அடுப்பும் இருந்தது.  சிறிய சமையலறை இருந்தது.  ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்தது.  பால், ரொட்டி, சீஸ், பழங்கள் என்று வாங்கிவைத்துக்கொண்டு காலை உணவை நாங்களே தயாரித்துக்கொண்டோம். ஒட்டலில் இல்லாத இன்னொரு வசதி துணிகளைத் துவைத்துக் காயப் போட அபார்ட்மெண்ட்டிற்கு வெளியே கொடி இருந்தது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அபார்ட்மெண்டைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஒரு பெண் வந்தார்

 

நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் எங்கள் அபார்ட்மெண்டிற்கு  மேலே உள்ள பகுதியில் குடியிருந்தார்.  அபார்ட்மெண்ட்டிற்குப் போவதற்கு இருநூறு அடிகள் இருக்கும்போதே படிகள் இருந்ததால் டாக்சியால் அதற்கு மேல் போக முடியவில்லை.  அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு நடந்தோம்.  அபார்ட்மெண்ட் சொந்தக்காரரைச் சந்தித்துச் சாவியைப் பெற்றுக்கொண்டோம்.  ‘உங்களைப் பார்க்க நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார்.  இந்தப் பழங்களையும் இனிப்புகளையும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்’ என்று கூறி அவர் கொடுத்துவிட்டுப் போயிருந்த பொருள்களை எங்களிடம் கொடுத்தார்.

எங்களோடு எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வந்து எப்படி அதைத் திறப்பது என்று காட்டிவிட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம் என்றும் எப்போதும் அவராவது அல்லது அவருடைய மனைவியாவது வீட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  எங்கள் அபார்ட்மெண்ட் அவர் அபார்ட்மெண்ட்டிற்குக் கீழேதான் என்றாலும் எங்கள் அபார்ட்மெண்ட் வாசல் கிழக்குப் பார்த்தும் அவருடைய பகுதியின் வாசல் மேற்குப் பார்த்தும் இருந்ததாலும் பல வீடுகளைக் கடந்து சுற்றிக்கொண்டுதான் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வர வேண்டியிருந்தது.  எங்கள் அபார்ட்மெண்ட் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருந்தது.  இதை old city என்கிறார்கள்.  இது ஒரு பழைய கோட்டைச் சுவருக்குள் இருக்கிறது.  இதில் பல பகுதிகள் இருக்கின்றன.  இங்குதான் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தங்கள் இடம்தான் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் பல இடங்கள் இருக்கின்றன.  அங்குள்ள ஒரு மசூதியின் கூண்டு எங்கள் அபார்ட்மெண்ட்டிலிருந்தே தெரிந்தது.  எங்களை எங்கள் அபார்ட்மெண்ட்டிற்குக் கூட்டி வந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் ‘இதோ தெரிகிறதே, இதற்குத்தான் மூன்று மதத்தினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.  இவர் பெயர் யோசி (Yossi).  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.

(தொடரும்)

 

http://www.vallamai.com/?p=29096

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் 2

 

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல்  உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது.  சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும்.  யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

 

மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது.  செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.  தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர்.  ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

 

ஒரு காலத்தில் எகிப்தின்  அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும்   ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.  Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான்.  இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது.  அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.  யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.  இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.  எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.  ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.

யூதர்களின் மூதாதையர்  ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.  (இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.)  ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.  இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.

 

சாலமன் காலத்தில்  ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால்  அழிக்கப்பட்டது.  அதன் பிறகு  கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.  அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.

 

கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும்  இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார்.  அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.  அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார்.  இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார்.  அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.    இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.  அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.  அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது.  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.  இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.  தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ  நம்பத் தயாராக இல்லை.  இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது.  நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.  ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.

 

தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது.  தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.  கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர்.   இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.

 

கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த  பாவத்தைச் செய்தவர்கள்  ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு  கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள்  கூற ஆரம்பித்தனர்.  இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள்.  இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது.  அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.

 

கிறிஸ்துவிற்குப்  பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ  மதம் தழைக்கவில்லை.  அது  மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும்  பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மூன்றாம் நூற்றாண்டு வரை  கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு  ஆளாயினர்.  ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.

 

கான்ஸ்ட்டாண்டின்  தன்னுடைய கடைசிக் காலத்தில்  கிறிஸ்துவனாக மாறினான்.  அவனுக்குப் பின் வந்த முதல்  தியோடிசியஸ் கிறிஸ்துவ  மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ  மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.  கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது.  தியோடிசியஸ்  யூதர்களின் குடியுரிமைகளுக்குப்  பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை  என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள்  யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.  இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக  ரோமானியர்களின் பல கடவுள்களைக்  கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும்  யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது.  பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே  சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.  முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார்.  ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

 

ஹிரக்லியஸ் என்னும்  ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.  அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.  அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.

 

வரலாற்றின் இடைக்  காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.  பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர்.  வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.  யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர்.  அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது.  (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)

 

ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.  முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.  ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர்.  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர்.  1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.  (இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார்.  இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)

 

பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.  இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.  போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர்.  யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர்.  ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.

ரஷ்யப் பேரரசி கேத்தரின்  பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில்  குடியேற அனுமதித்தார்.  அரசி இவர்களுக்கு ஆதரவு  அளித்தாலும் அவர்களை மண்ணில்  பாடுபடும் விவசாயிகளாகவே  அனுமதித்திருந்தார்.  யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை.  இவருக்குப் பின் வந்த முதலாம்  அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.  யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.

 

பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.  ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

 

பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும்  விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.  மேலும் யூதர்கள் தாங்கள்  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்  என்ற எண்ணத்தையும் எப்போதும்  கொண்டிருந்தனர்.  பல நாடுகளில்  மற்றவர்களிடமிருந்து தனித்தே  வாழ்ந்திருக்கிறார்கள்.  குடியேறிய எல்லா இடங்களிலும்  அந்தந்தச் சமுதாயங்களோடு  அவர்களால் இணைய முடியவில்லை.  இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.  தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.  ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது.  இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.

 

ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.  டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய  நலன்களைக் காத்துக்கொள்ள  முடியும் என்று நினைக்க  ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

 

யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.  இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.  மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.  இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.  இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.  (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.  காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)

 

http://www.vallamai.com/?p=29503

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலைப் பற்றி, முழுமையாக அறிய வேண்டும் என்று.... நெடுநாளாக, ஆவல் இருந்தது.
ஆதவனின், இந்தப் பதிவு ஒரு வரப் பிரசாதம்.
நேரம் கிடைக்கும் போது, நிச்சயம் வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – பகுதி (3 )

 

யூதர்களுக்குத் தனி  நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர்.  இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார்.  சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர்ந்தபோது (யூத மதக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்துகொண்டிருந்தனர்) யூத மத போதகர்களின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உள்ளானார்.  1825-இல் செர்பியாவில் யூத மத போதகராக வேலைபார்த்தார்.  1834-இல் இவர் எழுதிய புத்தகத்தில், அதுவரை யூத மதத்தினர் கடவுளின் தூதர் தங்களை வந்து தங்களுடைய புண்ணிய தலத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்.  1840-இல் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (அப்போது அது ஆட்டொமான் பேரரசில் இருந்தது.  பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆட்சி நடத்திய ஆட்டோமான் பேரரசு இப்போதைய துருக்கி, சிரியா, லெபனான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, யேமென் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது). குழந்தைகளின் இரத்தத்தை மதச் சடங்குகளுக்கு உபயோகிக்கிறார்கள் என்று யூதர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு வேண்டும், அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவிற்கு வந்து, யூதர்கள் தங்களுடைய மீட்சிப் பணியில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திப் பல சிறிய புத்தகங்களும் அறிக்கைகளும் வெளியிட்டார்.  கடவுளின் தூதர் வருவதற்கு முன்பே யூதர்கள் தங்கள் புனித நாட்டில் வாழ்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  தூதரை அனுப்பிவைப்பது இறைவனின் செயல் என்றாலும், மனிதர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் தேவை என்று எடுத்துரைத்தார்.  ஹீப்ரூ ஒரு புனித மொழி, அதை மதச் சடங்குகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று மதபோதகர்களிடையே நிலவி வந்த எண்ணத்தையும் மாற்றினார்.  பல நாடுகளில் பல மொழிகள் பேசி வந்த யூதர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டுமென்றால் எல்லோரும் ஹீப்ரூ மொழியைக் கற்க வேண்டும் என்றும் அது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபட வேண்டும் என்றும் கூறினார்.  யூதர்களின் மீட்சி நிறைவுற வேண்டுமென்றால் எல்லா நாட்டிலுள்ள யூதர்களும் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளை விட்டு வந்து, புனித நாட்டில் குடியேற வேண்டும்; அங்கு இந்தத் தலைவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்று போதித்தார்.

 

பாலஸ்தீனத்தில் யூதர்  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இந்த இயக்கம்தான் ஆங்கிலத்தில் ஸயோனிஸம் (Zionism) என்று அழைக்கப்படுகிறது.   இதைத் தமிழில் யூத இனவாதம் எனலாம்.  இந்த இனவாதத்திற்கு ஒரு தனி நாடு வேண்டும் என்பதே கோரிக்கை.

இவரையடுத்து போலந்து  நாட்டில் மத போதகராக இருந்த ஸ்வி ஹிர்ஷ் கலிச்செர் (Zwi Hirsch Kalischer) பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.  யூதர்களின் மீட்சி திடீரென்று நிகழக் கூடிய தெய்வீக அற்புதம் அல்லவென்றும், கொடைப் பண்பு உடையவர்களின் ஆதரவாலும் உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களும் தங்கள் புனித நாட்டில் சேருவதை ஆதரிப்பதாலும் மட்டுமே நிகழக் கூடியது என்றும் கூறினார்.  யூதர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி அங்கு விளைநிலங்களையும் முந்திரித் தோட்டங்களையும் விலைக்கு வாங்கி அவற்றில் பயிரிடுவதின் மூலம் அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும், ஏழ்மையில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.  யூதர்கள் ஒரு தனி நாட்டில் கூடி வாழ வேண்டும் என்பதும், அந்தத் தனி நாடு யூதர்கள் தங்கள் புனித இடமாகக் கருதும் பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை.

 

இவரை அடுத்து யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் லேட்வியாவில் 1865-இல் பிறந்த ஆபிரகாம் ஐஸக் குக் (Abraham Isaac Kook) என்பவர்.  பாலஸ்தீனத்தை விட்டுச் சென்ற யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் யூத மதத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், தங்கள் புனித இடமான பாலஸ்தீனத்தில் வாழ்ந்தால்தான் யூத மதத்திற்கே உரிய சிறப்புத் தன்மையை இழக்காமல் இருக்க முடியும் என்றும், அதற்குப் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.  இப்படி உருவாக்கப்படும் நாட்டில்தான் யூதர்கள் தங்களுடைய பழைய கலாச்சார, மதக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.

 

இவர்களுக்குப் பின்னால் வந்த மதச்சார்பற்ற யூதர்களும், யூதர்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், யூதர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.  எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தில் கூடி வாழ முடியவில்லையென்றாலும், யூதர்களுக்கென்று இருக்கும் நாட்டில் அங்கு போக விரும்புபவர்கள் போவதற்கு வசதியாக ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தனர்.  (இப்போதும் அமெரிக்காவில் குடியேறிருக்கும் யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அங்கு போய்வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.  (நான் முன்னால் குறிப்பிட்ட எங்கள் அமெரிக்க யூத நண்பர் ‘வருடத்திற்கு ஒரு முறையாவது நான் அங்கு போக விரும்புகிறேன்.  அப்படிப் போகவில்லையென்றால் ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது’ என்பார்.  இன்னொரு நண்பர் யூத மதத்தின் வாழ்க்கைச் சட்டங்களைக் (Jewish law) கற்றுக்கொள்ள ஜெருசலேமிற்குப் போய்வந்தார்.)

மதச்சார்பற்ற யூத  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள்  தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பவர் முதன்மையானவர்.  1860-இல் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் ஊரில் பெரிய செல்வந்தரின் மகனாகப் பிறந்த இவர், புடாபெஸ்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு வியன்னாவிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  பின் ஆஸ்ட்ரியாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு பாரீஸ் செய்தியாளராக வேலைபார்த்தபோது ஆல்ப்ரெட் ட்ரைஃபஸ் (Alfred Dreyfus) என்னும் பிரெஞ்சு நாட்டு யூதருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதி ஹெர்ஸலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது.  ட்ரைஃபஸ் பிரெஞ்சு ராணுவத்தில் வேலைபார்த்தபோது ஜெர்மனிக்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ மரியாதை எல்லாம் பறிக்கப்பட்டு, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டார்.  ஏற்கனவே யூத எதிர்ப்பை தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருந்தாலும், அது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை அனுபவம் என்று நினைத்திருந்த ஹெர்ஸல், இப்போது யூதர் என்பதற்காக ட்ரைஃபஸுக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.  அன்றிலிருந்து யூத எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு மட்டுமல்ல, இன எதிர்ப்பும் என்றும் நினைத்தார்.  அதிலும் நவீன, கலாச்சார மேம்பாடுடைய, நாகரீகம் மிகுந்த பிரான்ஸில் அந்தச் சம்பவம் நடந்தது அவரை மிகவும் பாதித்தது.

 

ஹெர்ஸலுக்கு முன்பே பல யூதர்கள் தங்களுடைய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருந்த போதிலும், இவர் அதற்கான காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்.  பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார யூதரை தனக்கு உதவ அணுகினார்.  அவர் நிறையப் பணம் செலவழித்து சில யூதர்களை அர்ஜெண்டைனாவில் குடியேற்றியிருந்தார்.  ‘யூதர்கள் விவசாயத்தில் சிறந்தவர்கள்; அவர்கள் அங்கு அதில் சிறந்து விளங்கினால் ரஷ்யாவிற்குக் கூட அவர்கள் குடிபெயரலாம்; அவர்களை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள; இப்போதே அவர்களை முன்னுக்குத் தள்ளுவது அவ்வளவு சரியல்ல’ என்று அவர் கூறிவிட்டார்.  இன்னும் சில பணக்கார யூதர்களும் இதே மாதிரி ஹெர்ஸலுக்கு உதவ ஆர்வம் காட்டாததால், பல நாடுகளில் வசிக்கும் யூதர்களையெல்லாம் ஒன்றுகூட்ட ஒரு மாநாடு நடத்துவதென்று முடிவுசெய்து, 1897-இல் ஸ்விட்சர்லாந்திலுள்ள பேஸல் (Basle) என்னும் ஊரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்.  இதற்கு இருபத்து நான்கு நாடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இருநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வந்திருந்தனர்.  யூத நாடு அமைப்பதன் மூலம்தான் யூதர் இனத்தையும் அவர்களின் மதத்தையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்று அந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.  அதன் பிறகு நடந்த மாநாடுகளில் நிறையப் பேர் அவருடைய இயக்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தனர்.

http://www.vallamai.com/?p=30255

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – 4

 

 

PalestineAndTransjordan-300x282.png

 

அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது.  எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி முயன்றார்.  ரஷ்யாவில் நிலைபெற்றிருந்த ரஷ்ய சனாதனக் கிறிஸ்துவ அமைப்பு (Russian Orthodox Church) ஒரு போதும் பாலஸ்தீனம் யூதர்கள் வசம் வருவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதால் ஹெர்ஸல், ரஷ்ய அதிபர் ஜாரின் (Czar) உதவியை நாடாமல் ஜெர்மன் அதிபர் மூலம் சுல்தானிடம் சம்மதம் பெற முயன்றார்.  அந்த முயற்சியும் வெற்றி பெறாததால் தானே சுல்தானைச் சந்தித்து ஆட்டோமான் பேரரசுக்கு இருந்த கடனைத் தீர்க்க உலகெங்கிலுமுள்ள பணம் படைத்த யூதர்கள் உதவுவார்கள் என்று கூறினார்.  ‘நாடு என்னுடையதல்ல.  அது மக்களுடையது’ என்று கூறி அந்தத் திட்டத்தை சுல்தான் ஏற்க மறுத்துவிட்டார்.  மேலும் யூதர்கள் ஆட்டோமான் பேரரசின் குடிமக்களாகி அதன் இராணுவத்தில் பணிபுரிந்தால் ஹெர்ஸலின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

 

இதை ஏற்க மறுத்த ஹெர்ஸல்  பின் பிரிட்டனின் பக்கம் திரும்பினார்.  பிரிட்டிஷ் அரசு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் (அப்போது கென்யா பிரிட்டனின் காலனியாக இருந்தது) ஒரு இடத்தை யூதர்களுக்கு ஒதுக்கித் தருவதாகக் கூறியது.  தங்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில்தான் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு இது பிடிக்கவில்லை.  கடைசியாகப் பாலஸ்தீனத்திற்குப் போவதற்கு இது முதல் படி  என்று ஹெர்ஸல் கூறியதை  மற்ற யூதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.   ஹெர்ஸல் இத்தாலிய அரசரையும்  போப்பையும் சந்தித்து இது  பற்றிக் கேட்டபோது, யூதர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலொழிய அவர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்புவதைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று போப் கூறிவிட்டார்.  தன் கனவு பலிக்காமலே 1904-இல் ஹெர்ஸல் இறந்துவிட்டார்.  நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு (இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு) அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வியன்னாவில் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவருடைய உடலை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு மேற்குப் பகுதியில் இருந்த குன்றில் புதைத்து அந்தக் குன்றிற்கு ஹெர்ஸல் குன்று என்று பெயரிட்டனர்.  யுத்தத்தில் இறந்த வீரர்களைப் புதைக்கும் இடமாக அது இப்போது விளங்குகிறது.

 

ottoman-empire-15801.gif

 

பல யூதர்களின் மனதில் கடவுளால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இடமான பாலஸ்தீனம் தேனும் பாலும் பாயும் இடம் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருந்தது.  ஆனால்  பாலஸ்தீன் கரடு முரடான, மலைகளும் பாலைவனமும் நிறைந்த இடம்.  இது 1517-லிருந்து ஆட்டொமான் பேரரசின் கீழ் இருந்தது.  மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்த இதில் யூதர்களும் பாலஸ்தீன அரேபியர்களும் அடுத்தடுத்து வாழ்ந்து வந்தனர்.  1897-இல் முதல் யூத மாநாடு நடந்த போது இங்கு 50,000 யூதர்களும் 4,00,000 அரேபியர்களும் இருந்தனர்.  இங்கிருந்த யூதர்களில் பலர் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வசதிபடைத்த யூதர்கள் நன்கொடையாக அளித்த பணத்தால் எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தனர்.  பின்னால் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு வந்த யூதர்கள் தங்கள் புண்ணிய பூமியில் தங்கள் இறைவனை வணங்குவதற்காகவும், முடிந்தால் அந்த மண்ணிலேயே இறந்து புதைக்கப்படுவதற்காகவும் பணத்தோடு வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பாலஸ்தீனத்திற்கு வந்தவர்களோ அவர்கள் வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அஞ்சி ஓடி வந்தவர்கள்.

 

ஹெர்ஸல் யூதர்களின் தேசம் நிறுவப்படுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும்போதே பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்; பல ஸ்தாபனங்களையும் நிறுவிக்கொண்டிருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெருசலேமில் 10,000 யூதர்கள் வசித்துவந்தனர்.  1870-இல் போலந்து, லித்துவேனியாவிருந்து வந்தவர்கள் சாஃபேட் (Safed), அக்ரே (Acre), ஜாஃபா (Jaffa) ஆகிய இடங்களில் குடியேறினர்.  ஆட்டோமான் அரசின் ஒப்புதலோடு பிரான்ஸிலிருந்து வந்த ஒரு யூதக் கல்வியாளர் மிக்வா இஸ்ரேல் என்னும் இடத்தில் ஒரு விவசாயப் பள்ளியை நிறுவினார்.  ரஷ்யப் படுகொலையிலிருந்து தப்பித்து வந்த யூதர்கள் விவசாயக் குடியிருப்புகளையும் கிராமங்களையும் நிறுவினர்; பின்னால் பல பள்ளிகளை நிறுவினர்.  இப்படியாக, பல இடங்களிலிருந்து வந்த யூதர்கள் தங்களுக்கென்று பல ஸ்தாபனங்களை நிறுவிக்கொண்டனர்.  இந்த ஸ்தாபனங்களுக்குத் தேவைப்பட்ட இடங்களை பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்களிடமிருந்தும் துருக்கியர்களிடமிருந்தும் (துருக்கி ஆட்டோமான் பேரரசின் மையப் பகுதி) வாங்கினார்கள்.  ஹீப்ரு மொழிப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.  யூதர்களின் முதல் மருத்துவமனை அரேபியர்களின் துறைமுகமான ஹைபாவில் ஜெர்மனியிலிருந்து பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்த ஒரு மருத்துவரால் 1911-இல் ஆரம்பிக்கப்பட்டது.  1912-இல் அமெரிக்கப் பெண்கள் யூத அமைப்பு (American Jewish Women’s Organization), தன் இரு அங்கத்தினர்களை ஜெருசலேமில் ஒரு கிளினிக் ஆரம்பிக்க அனுப்பியது.  அமெரிக்க யூதர் ஒருவர் ஜெருசலேமில் ஒரு மருத்துவமனையை நிறுவப் பணம் கொடுத்தார்.  (1948-இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்படும் வரை அமெரிக்காவில் குடியேறியிருந்த பணக்கார யூதர்கள் பாலஸ்தீன யூதர்களுக்கு நிறையப் பண உதவி செய்துகொண்டிருந்தனர்.  ஆனால் இஸ்ரேல் உருவாகி அரை மணி நேரத்திலேயே அமெரிக்கா அதற்கு அங்கீகாரம் அளித்தது.  அதன் பிறகு அமெரிக்க அரசின் பணமும் – அங்குள்ள யூதர்களின் கட்டாயத்தினால் – இஸ்ரேலுக்குக் கிடைக்கத் தொடங்கியது.  இப்போதும் அமெரிக்காவின் ஆதரவும் பண உதவியும் இருப்பதால்தான் இஸ்ரேல் பலம் பெற்று விளங்குகிறது.) 1913-இல் பெண்களுக்கான விவசாயப் பண்ணை தொடங்கப்பட்டது.  1919-இல் ஹீப்ரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த நிதியிலிருந்து பல ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டது.

 

இந்த நிதியிலிருந்து 43 குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.  அப்போது யூதர்கள் விவசாயிகளாகவும்  விவசாயப் பண்ணைகளில் வேலைபார்ப்பவர்களாகவும் இருந்தனர்.  சிலர் தொழில் வல்லுநர்களாகவும் கடைச்  சொந்தக்காரர்களாவும் இருந்தனர்.  இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 90,000-ஆகப் பெருகியிருந்தது.  யூதர்களின் வரவால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தங்கள் நலனைக் காத்துக்கொள்ள பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்கள் ஆட்டோமான் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினர்.  ஜெருசலேமைச் சேர்ந்த இரண்டு அரேபியர்கள் கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த ஆட்டோமான் பார்லிமெண்டிற்குத் தேர்தெடுக்கப்பட்டனர்.  ஆட்டோமான் அரசும் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.  முதல் உலகப் போர் 1914-இல் ஆரம்பித்ததும், பிரான்ஸ், பிரிட்டனுடன் ரஷ்யாவும் ஆட்டோமான் அரசின் எதிரி ஆயிற்று.  பாலஸ்தீனத்தில் அப்போதிருந்த யூதர்களில் பலர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்களாகையால், ஆட்டோமான் அரசு அவர்களின் மீது வெறுப்பைக் காட்டி அடக்குமுறையையும் அவிழ்த்துவிட்டது.  இதனால் பல யூதர்கள் பக்கத்து நாடான எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் தஞ்சம் புகுந்தனர்.

 

யூத சமுதாய நிறுவன இயக்கத்தில்  (Zionist Movement) சம்பந்தப்பட்டிருந்தவர்களை ஆட்டோமான் அரசு நாடு கடத்தியது.  இதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பயந்த ஜாஃபாவைச் சேர்ந்த யூதர்கள் தங்களுக்குள் ஒரு படையை நிறுவி நேசநாடுகளோடு (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) சேர்ந்து போர்புரியத் தயாராகினர்.  ஆட்டோமான் அரசுக்கு எதிராகப் போரிட்டால் தங்களுடைய கோரிக்கையான பாலஸ்தீன நாட்டைத் தங்களுக்கு நேசநாடுகள் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

 

துருக்கியைத் தோற்கடித்து  மத்திய கிழக்கில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பிரிட்டனின் சுயநலமும்  இதற்கு ஒத்துப் போகவே, பாலஸ்தீன யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் வெளிநாட்டு மந்திரி லார்ட் ஆர்த்தர் ஜேம்ஸ் பேல்ஃபர் (Lord Arthur James Balfour), இங்கிலாந்திலுள்ள யூதர்களின் தலைவரான லார்ட் வால்டர் ராத்சைல்ட்க்கு (Lord Walter Rothschild) 1917 நவம்பர் 2-இல் எழுதிய கடிதத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தனி நாடு அமைக்க பிரிட்டன் உதவும் என்று கூறினார்.  அப்படி நாடு அமைக்கும் பட்சத்தில் அங்கேயே இருக்கும் யூதரல்லாத மற்றவர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இது பேல்ஃபர் அறிக்கை (Balfour declaration) எனப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன் ஹெர்ஸல் ஆட்டோமான் சுல்தான்களிடமிருந்து இம்மாதிரியான ஒரு ஒப்பந்தத்தைப் பெற முயன்று அதில் தோல்வி கண்டிருந்தார்.  பேல்ஃபர் அறிக்கை, அப்போது பலம் மிகுந்த நாடாக விளங்கிய பிரிட்டனிடமிருந்து வந்ததால் முக்கியம் வாய்ந்ததாக யூதர்களால் கருதப்பட்டது.

 

Dr.-Chaim-Weizmann-290x300.jpg

 

இந்த பேல்ஃபர் அறிக்கையின் முக்கிய காரணகர்த்தா செயிம் வெயிஸ்மேன் (Chaim Weizmann).  (இவர் பின்னால் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியானார்.)  முதல் உலக யுத்தத்தின்போது ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான அசிடோன் (acetone) என்னும் பொருளை ஜெர்மனி கையகப்படுத்திக்கொண்டதால் பிரிட்டனால் ஆயுதங்கள் தயாரிக்க முடியாமல் இருந்தது.  செயிம் வெயிஸ்மேன் என்பவர் ஒரு விஞ்ஞானி என்பதோடு பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவரும் கூட.  இவருக்கு ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் யூத பார்லிமெண்ட் அங்கத்தினர் ஒருவர் நண்பர்.  வெயிஸ்மேன் அசிடோன் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது பிரிட்டனுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  அதோடு யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை உருவாக்கினால், அமெரிக்காவிலுள்ள யூதர்கள் அமெரிக்காவை முதல் உலக யுத்தத்தில் கலந்துகொள்ளத் தூண்டுவார்கள் என்றும் பிரிட்டன் கணக்குப் போட்டது.  அதோடு, ரஷ்ய யூதர்கள் ரஷ்யாவில் புரட்சி நடத்தி வந்த போல்ஷிவிக் கட்சியோடு அதிகத் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து ரஷ்யா பிரான்ஸோடும் பிரிட்டனோடும் சேர்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபடும் என்றும் நினைத்தனர்.  இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் யூத இனம், பழைய கிரேக்க இனத்திற்குப் பிறகு தோன்றிய சிறந்த இனம் என்றும், அவர்களுக்கென்று சொந்த நாடு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதுவும் பிரிட்டன் அதைச் செய்ய வேண்டும் என்றும் பேல்ஃபரே விரும்பினார் என்பது.

 

வெயிஸ்மேன் ரஷ்யாவில் 1874-இல் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வேதியலில்  மேற்படிப்புப் படிப்பதற்காக ஜெர்மனி சென்றார்.  அங்கிருந்து  இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர்  பல்கலைக்கழகத்தில் வேதியல்  பேரசிரியராக வேலை கிடைத்து, இங்கிலாந்து வந்து அங்கேயே குடியுரிமை பெற்றார்.  இவர் இரண்டு முறை உலக யூதர்களின் அமைப்பிற்குத் தலைவராக (1920-1931, 1935-1946) இருந்திருக்கிறார்.

 

பேல்ஃபர் அறிக்கை  வெளிவந்தபோது 90,000 யூதர்களும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரேபியர்களும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர்.  அதாவது ஜனத்தொகையில் 87 சதவிகிதம் அரேபியர்கள்.  பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த யூதர்களுக்கு பேல்ஃபர் அறிக்கை பெரிய வெற்றியாகத் தோன்றியது.  ஆனால் பல பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போடுவது பிடிக்கவில்லை.  சுற்றியிருந்த அரபு நாடுகளுக்கும் தங்களுக்கிடையில் யூத நாடு உருவாவது பிடிக்கவில்லை.

 

1918-இல் பிரிட்டிஷ்  படை ஆட்டோமான் அரசின்  கீழ் இருந்த பாலஸ்தீனத்தை  வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.  பாலஸ்தீனம் முழுவதும் பிரிட்டனின் கைக்கு வந்தது.  இதோடு பாலஸ்தீனத்தில் அது வரை இருந்த ஆட்டோமான் ஆட்சி முடிவிற்கு வந்தது.  பாலஸ்தீனம் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழே வந்ததும், யூதர்கள் அங்கு சிறுபான்மையினராக இருந்தபோதிலும், ஜெருசலேம் நிர்வாகத்தில் தங்களுக்கு அரேபியர்களோடு சம உரிமை வேண்டுமென்றும், ஒரு யூதர் ஜெருசலேம் மேயராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க அலுவல்களில் ஹீப்ருவுக்கும் அரேபிய மொழியோடு சம அந்தஸ்து வேண்டும் என்றும் கோரினர்.  (பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் ஜெருசலேம்.  இங்குள்ள யூதக் கோயிலில் இருந்த குருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைத் தட்டிக் கேட்ட இயேசுவை இங்குதான் சிலுவையில் அறைந்தார்கள்.)  இந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டாலும், தங்களுக்கு எப்படியும் பிரிட்டன் தனி நாடு அமைத்துக் கொடுக்கும் என்று யூதர்கள் நம்பினர்.  இதற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்தும் போலந்திலிருந்தும் பல யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இப்படி வந்தவர்கள் சாலைகள் அமைப்பது, சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்ததோடு தற்காலிகக் கூடாரங்களில் வசித்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஒரு மத்திய கமிட்டிக்கு அனுப்பினர்.  இந்தச் சமயத்தில்தான் ஹீப்ரு மொழியை வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, அம்மொழியில் நிறைய கவிதைகள் இயற்றினர்.  மதச் சடங்குகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரு மொழி அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டு வளரத் தொடங்கியது.  அதன் பிறகு அது வாழும் மொழியாக புனர்ஜென்மம் எடுத்தது.  .

 

படங்களுக்கு நன்றி:

 

ttp://wis-wander.weizmann.ac.il/chaim-weizmann#.UOVSXqxa6RM

 

http://www.vallamai.com/?p=30424

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம்- 5

 

யூதர்கள் சாலைகள், ஸ்தாபனங்கள் அமைத்ததால் அரேபியர்களும் பயன் அடைந்தாலும், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுடைய தனி நாடு அமைக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு கலக்கம் அடைந்தனர்.  பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கே என்று நினைத்திருந்ததற்கு மாறாக, நிறைய யூதர்கள் மேலும் மேலும் குடியேறுவதும், அவர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான பல இடங்களை வாங்கிப் போடுவதும் இவர்களின் கோபத்தைக் கிளப்பியது.  யூதர்களின் குடியேற்றத்தை நிறுத்தும் பொருட்டு 1920-இல் யூதர்கள் தனியாக இருந்த குடியிருப்புகளை அவர்கள் தாக்கினர்.  இதில் யூதர்களின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டார்.  சாகும் தறுவாயில் அவர் கூறிய ‘நாட்டிற்காக உயிர் விடுவது நல்லது’ என்ற வார்த்தைகள் அவரை ஒரு பெரிய தியாகி ஆக்கின.  யூத நாட்டை உருவாக்கியே தீருவது என்பதில் யூதர்கள் முடிவாக இருந்தனர்.  தங்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அசெம்பிளியையும், கமிட்டியையும் அமைத்துக்கொண்டனர்.  பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமலே தங்களைக் காத்துக்கொள்ள ஒரு சிறு படையையும் அமைத்துக்கொண்டனர்.  இது பின்னால் இஸ்ரேலின் ராணுவத்தின் முக்கிய அங்கமானது.  இவற்றோடு தொழிலாளர் அமைப்பு ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

 

முதல் உலகப் போருக்குப் பின் ஆட்டோமான் பேரரசு பாலஸ்தீனம் உட்பட பல இடங்களை இழந்தது.  ஜூலை 1922-இல்  சர்வதேச சங்கம் (League of Nations) பாலஸ்தீன அரசியலை மேற்பார்வை செய்ய பிரிட்டனை நியமித்தது. பல நேசநாடுகளின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட இந்த நியமனம் (இதை ஆங்கிலத்தில் British Mandate என்றார்கள்.) யூதர்களின் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.  இதையடுத்து பிரிட்டன் தன் ராணுவ நிர்வாகத்தை நீக்கிவிட்டு, சிவில் நிர்வாகத்தை பாலஸ்தீனத்தில் அமைத்தது.  ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் பிரிட்டிஷ் யூதரை பாலஸ்தீனத்திற்குத் தன் பிரதிநிதியாக நியமித்தது.  இவரும் பாலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவராகையால், அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களுடைய கடவுளின் தூதர் அவர் என்று – முதலிலாவது – எண்ணி வரவேற்றனர்.

 

பாலஸ்தீனம் பிரிட்டனின்  அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டதால் எப்படியும் பிரிட்டன் பேல்ஃபர் அறிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தில் தனி நாடு அமைக்கத் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்பினர்.  இதை  யூதர்கள் தங்களுடைய பெரிய  வெற்றியாகக் கருதினர்.

 

தொடர்ந்து யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து  பாலஸ்தீனத்தில் குடியேறி வந்ததாலும் அங்கு நிலங்களை வாங்கிக்கொண்டிருந்ததாலும்  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே  சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த  அரேபியர்கள் பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வந்து தங்கும்  முக்கிய இடமான ஜாஃபாவைத்  தாக்கினர்.  அதைத் தொடர்ந்து  அதற்கு வடக்கிலும் தெற்கிலும் இருவருக்கும் இடையே கலவரங்கள் வெடித்தன.  யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதுதான் கலவரங்களுக்குக் காரணம் என்று நினைத்த ஹெர்பெர்ட் சாமுவேல் தற்காலிகமாக யூதர்கள் வருவதைத் தடைசெய்தார்.  ஆனால் சீக்கிரமே அந்தத் தடை நீக்கப்பட்டது.

 

இதற்கிடையில் லண்டனில், பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை உருவாக்க பாலஸ்தீன் உருவாக்க நிதி (Palestinian Foundation Fund) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.  அதே சமயத்தில் அங்கு அவர்களின் விவசாயக் குடியிருப்புகளை நிறுவ ஸயோனிஸ்ட் சங்கம் இன்னொரு நிதியை ஏற்படுத்தியது.  ரஷ்யாவிலிருந்து குடியேறிய ஒரு யூதர் பாலஸ்தீனத்தில் மின்நிலையங்களை அரசு அனுமதியுடன் தொடங்கினார்.  இதனால் டெல் அவிவ் (Tel Aviv), ஹைஃபா (Haifa), டிபீரியஸ் (Tiberius) போன்ற யூதர்கள் வாழ்ந்த பகுதிகள் தொழில்வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டன.  யூதர்களின் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே போனதால் பீதியடைந்த அரேபியர்களின் பயத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசு யூதர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது.

கட்டுப்பாடுகள் இருந்தாலும்  பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வருவது குறையவில்லை.  1924-1929 வரை போலந்திலிருந்து பல யூதர்கள் போலந்து அரசு யூதர்களுடைய வருமானவரியை அதிகரித்ததால் போலந்தை விட்டு பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இந்தச் சமயத்தில் இவர்களுக்கு அமெரிக்காவிற்குப் போக அனுமதி கிடைக்கவில்லை.  இந்த வணிகர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி வணிக நிறுவனங்களைத் தொடங்கினர்.  முன்னால் வந்த யூதர்களைப் போல் அல்லாமல் இவர்கள் நகரவாசிகள் ஆயினர்.  இதனால் டெல் அவிவ் போன்ற நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன.  கட்டடப் பணி வளர்ந்தது.  யூதர்கள் வாழ்ந்த நகரங்கள் விரிந்துகொண்டே போயின.  யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே அவ்வப்போது கலவரங்களும் வெடித்தன.

 

1932-க்கும் 1939-க்கும்  இடையில் 175,000 யூதர்கள் ஜெர்மனியிலிருந்தும் போலந்திலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,00,000 ஆனது.  ஸயோனிஸ்ட் அமைப்பின் தலைவர்களுக்கும் ஜெர்மன் அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஜெர்மானிய யூதர்கள் தங்களுடைய சேமிப்பின் ஒரு பகுதியை ஜெர்மனியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் பாலஸ்தீனத்திற்குள் நிறையப் பணம் கொண்டுவரப்பட்டு அதன் பொருளாதாரம் சிறப்படைந்தது.  உலோகங்கள், துணி, வேதியல் பொருள்கள் ஆகியவற்றின் வணிகம் பெருகியது.  மேலும் இப்படி வந்தவர்களில் பலர் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கியதால் ஹீப்ரு பலகலைக்கழகமும் மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களும் மேம்பாடடைந்தன.  கலைகளும் கலைக்கூடங்களும் சிறப்புற்றன.  இவர்கள் நகரங்களில் வாழத் தொடங்கியதால் யூதர்களின் நகரங்களும் விரிவடைந்துகொண்டே போயின.

 

யூதர்களின் செல்வமும்  செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே போனதால் அரேபியர்களின்  பயமும் அதிகரித்தது.  அது  பெரிய கலவரமாக வெடித்தது.  புதிதாக யூதர்கள் வாங்கும் விவசாய நிலங்களில் ஏற்கனவே  அரேபியர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு ஒரு சிறிய பகுதியை விட்டுவிட்டுத்தான் நிலத்தை வாங்க வேண்டும் என்று பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டிஷ் அரசு உத்தரவு போட்டிருந்த போதிலும், யூதர்கள் அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரித்துவிட்டு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லாத நிலங்களையே வாங்கினர்.  மேலும் அந்த நிலங்களில் பாடுபட யூதர்களையே நியமித்தனர்.  தாங்கள் இது வரை உழைத்து வந்த நிலங்கள் தங்கள் கைகளை விட்டுப் போனதுமல்லாமல் தங்களுக்கு வேலையும் போய்விட்டதால் அரேபியர்களின் கோபம் அதிகமானது.  யூதர்களுக்குப் பணமும் தொழில்நுட்ப அறிவும் இருந்ததால் அவர்களின் விளைபொருள்களான காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து அரேபியர்களின் பொருள்களைச் சந்தையிலிருந்து விரட்டியடித்தன.  யூதர்கள் தங்களுக்கென்று யூதர்கள் நிறைய வாழும் டெல் அவிவ் நகரில் ஒரு சிறிய துறைமுகத்தையும் அமைத்துக்கொண்டனர்.  யூதர்களின் வளர்ச்சியை நிறுத்தும் நோக்கத்துடன் அரேபியர்கள் ஆரம்பித்த கிளர்ச்சி, யூதர்கள் தங்களை மேலும் வலுப்படுத்திக்-கொள்வதற்குப் பயன்பட்டது.

 

மேலும், யூதர்கள் முதலில் இரகசியமாக ஆரம்பித்த படைக்குத் தடை விதித்திருந்த பிரிட்டிஷ் அரசு அந்தத் தடையை நீக்கி. யூதர்கள் தங்களுக்கென்று ஒரு படையை வைத்துக்கொள்ள அனுமதித்தது.  1939-இல் 14,500 ஆட்களைக் கொண்டதாக இந்தப் படை இருந்தது.

 

அடிக்கடி யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே  மோதல்கள் ஏற்பட்டதால் பிரிட்டிஷ் அரசு 1936-ல் லண்டனிலிருந்து லார்ட் பீல் (Lord Peel) என்பவரை பாலஸ்தீனத்திற்கு அங்குள்ள நிலைமையை அறிந்துவர அனுப்பியது.  அவர் தன்னுடைய நீண்ட அறிக்கையில், யூதர்கள் பழங்காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்பால் அதற்கு உரிமை கொண்டாடுவதும், அரேபியர்கள் பதிமூன்று நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துவருவதால் அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுவதும் சரியே என்றும் வாதிட்டு, இருவருக்கும் பாலஸ்தீனத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சரியான தீர்வு என்றும் அப்படிச் செய்வதின் மூலம்தான் அங்கு ஏற்படும் கலவரங்களுக்கு முடிவு காணமுடியும் என்றும் கூறினார்.

 

பாலஸ்தீனத்தின் வட மேற்குப் பகுதியில் இருந்த கலீலி மற்றும் கடற்கரையை  ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தை – இது பாலஸ்தீனத்தின் பரப்பளவில் 20 சதவிகிதம்; ஆனால் வளம் நிறைந்த பகுதி -  யூதர்களுக்கும் மற்ற இடங்களைப் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுப்பதென்றும் முடிவாகியது.  இருவரும் தனித்தனியே தங்கள் நாடுகளை அமைத்துக்கொள்வதென்றும், அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதி பின்னால் ட்ரானஸ் ஜோர்டன் (Transjordan) என்ற பகுதியோடு சேர்க்கப்படும் என்றும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.  ஜோர்டன் நதிக்குக் கிழக்கே இருந்த நிலப் பகுதி ட்ரான்ஸ் ஜோர்டன் என்றும் மேற்கே இருந்த பகுதி வெஸ்ட் பேங்க் (West Bank) என்றும் அழைக்கப்பட்டன.    வெஸ்ட் பேங்க் பாலஸ்தீன அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  பின்னால் ட்ரான்ஸ் ஜோர்டன், ஜோர்டான் என்ற தனி நாடாகியது.

 

225px-Hitler_portrait_crop.jpg

தங்களுக்குப் பாலஸ்தீனம் முழுவதும் வேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்த யூதர்களில் ஒரு பிரிவினர் பீலின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாயினும், மற்றவர்கள் அப்போதைக்கு அதை ஏற்றுக்கொள்ளுவதென்றும் பின்னால் பிரிட்டிஷ் அரசோடு பேசி இன்னும் கொஞ்சம் இடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்ததால் பீலின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  மேலும், ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு யூதர்களின் நிலை மோசமாகிக்கொண்டே போனதால் யூதர்களுக்கென்று உடனே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்திலும் யூதர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.  தங்களிடம் ஒரு படை இருந்ததால் பின்னால் அரேபியர்களோடு சண்டைபோட்டு அவர்கள் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் என்று இரகசியமாகத் திட்டமிட்டதும் இன்னொரு காரணம்.

 

ஆனால், சிரியாவில் நடைபெற்ற அரேபியர் மாநாட்டில் பல அரபு நாடுகளிலிருந்து வந்திருந்த 400 பிரதிநிதிகள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  அரேபியர்களுக்கு மட்டுமே உரிய அரபு நாட்டை (பாலஸ்தீனத்தை) யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.  பீலுக்குப் பிறகு பாலஸ்தீன நிலையைக் கண்டறிய அனுப்பப்பட்ட இன்னொருவர் பாலஸ்தீனத்தைப் பிரிப்பது மிகவும் சிக்கலான காரியம் என்று அறிக்கை கொடுத்ததால் பீல் திட்டம் கைவிடப்பட்டது.

 

யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும்  இடையே நடக்கும் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்தன.  யூதர்கள் தங்கள் குடியிருப்புகளை  நிறுவும் திட்டங்களும் தொடர்ந்தன.  பிரிட்டன் இரு தரப்பையும் கூட்டி ஒரு முடிவிற்கு வர முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.  இதற்கிடையில் 1939-இல் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் சூழ்ந்துவந்ததால் பிரிட்டன் அதில் கவனம் செலுத்த விரும்பியது.  யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறுவதும் யூத-அரேபிய போராட்டங்களுக்குக் காரணம் என்று பிரிட்டன் முடிவு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு வரலாம் என்று வரையறுத்தது.  சுதந்திரம் அடையப் போகும் பாலஸ்தீனத்தில் அரேபிய பெரும்பான்மையோடு தாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணிய யூதர்கள், பிரிட்டன் ஸயோனிஸத்தின் எதிரி என்று நினைக்க ஆரம்பித்தனர்.

 

இருப்பினும், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனின் பக்கம் சேர்ந்து சண்டையிட்டால் யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையைப் பல யூதர்கள் வைத்திருந்தனர்.  இவர்களால் பிரிட்டனை எதிர்த்த பிரிவினர் நசுக்கப்பட்டனர்.  பிரிட்டனோடு சேர்ந்து சண்டையிட்ட பல யூதர்கள் யுத்தத்தில் உயிர் இழந்தனர்.

 

யுத்தம் முடிவடைந்ததும் பிரிட்டனில் தொழில் கட்சி  (Labour Party) ஆட்சிக்கு வந்தது.  இது கொள்கையளவில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், செயல்களில் யூதர்களுக்கு எதிராகவே இருந்தது.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை யூதர்கள் எதிர்த்து, யுத்த முடிவில் ஐரோப்பாவில் அகதிகளாக்கப்பட்ட யூதர்களைப் பாலஸ்தீனத்திற்குள் சட்டவிரோதமாகக் கூட்டிவந்தனர்.  ஐரோப்பாவில் அவர்கள் புறப்பட்ட இடங்களிலிருந்தும் பாலஸ்தீனத்தில் அவர்கள் நுழைய முயன்ற இடங்களிலும் அவர்களைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

200px-UN_Partition_Plan_For_Palestine_19

 

பாலஸ்தீனத்தில் பலரை இழந்த பிரிட்டன் அதற்கு மேல் அங்கு இருப்பதால் தனக்குப் பலன் எதுவும் இல்லை என்று  எண்ணிப் பாலஸ்தீனப் பிரச்சினையை  மறுபடி ஐ.நா.-விடமே கொடுத்தது.  ஐ.நா. சபை பாலஸ்தீனப் பிரச்சினையைத்  தீர்க்க ஒரு குழுவை நியமித்து  பாலஸ்தீனத்திற்குச் நேரில் சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியது.  இந்தக் குழு ஜெருசலேமில்  ஐந்து வாரங்கள் தங்கியிருந்த போது யூதப் பிரதிநிதிகள், குழு அங்கத்தினர்களைச் சந்தித்துத் தங்கள் பக்கக் கோரிக்கைகளைக் கூறினர்.  ஆனால் அரேபிய பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கவில்லை.  பாலஸ்தீனத்தை பிரிட்டனின் அதிகாரத்திலிருந்து விடுவித்துவிடுவது என்றும், பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் கொடுப்பது என்றும் ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.  1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிப்பது என்ற தீர்மானத்தை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.  இத்தீர்மானத்தின்படி ஆறு லட்சம் யூதர்களுக்கு 5700 சதுர மைல் இடமும் 14 லட்சம் அரேபியர்களுக்கு 4300 சதுர மைல் இடமும் கொடுக்கப்பட்டது.  ஜெருசலேம், பெத்லஹேம் முதலான புண்ணிய தலங்கள் ஐ.நா.வின் பார்வையில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  யூதர்களுக்கு அவர்களே எதிர்பார்த்ததை விட அதிக நிலம் கிடைத்தது.

 

இதை எதிர்த்த அரேபியர்கள்  பாலஸ்தீனத்தை முழுவதுமாகப் பெறப் போவதாகச் சூளுரைத்தனர்.  இதையடுத்து அரேபியர்களும்  யூதர்களும் உள்நாட்டு யுத்தத்தில்  ஈடுபட்டனர்.  முதலில் அரேபியர்களின்  கை ஓங்கியிருப்பதாகத் தோன்றினாலும், யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் பிடித்துக்கொண்டனர்.  முதலில் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் முடிவை அமெரிக்கா வெகுவாக ஆதரித்து ஐ.நா.வின் அந்த முடிவைச் செயலாக்கத் தன் வோட்டை அளிக்கத் தயாரானது,  ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரமடையவே தன் முடிவிலிருந்து பின்வாங்கி ஐ.நா.வின் கீழ் பாலஸ்தீனம் இருப்பதே சரி என்று நினைத்தது.

 

அமெரிக்க ஆதரவுத்  தங்களுக்குக் குறைவதை உணர்ந்த  பாலஸ்தீன யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட  இடங்களைத் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டுவந்தனர்.  அதே சமயத்தில்  அமெரிக்காவையும் பாலஸ்தீனப் பிரிவினைக்குச் சம்மதிக்க  வைக்க முயன்றனர்.  இதனால் அமெரிக்காவும் அங்கு அமைதியை  நிலைநாட்ட முன்றது.  யூதர்கள் அரேபியர்களும் யூதர்களும் வாழ்ந்த இடங்களையும் பிடித்துக்கொண்டனர்.  இந்தச் சமயத்தில்தான் பல அரேபியர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு விட்டு வெஸ்ட் பேங்க் பகுதியிலும் சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளிலும் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர்.  மிஞ்சியிருந்த சிலரையும் யூதர்கள் பலவந்தமாக வெளியேற்றினர்.  1948 ஏப்ரலில் டேர் யாசின் (Deir Yassin) என்ற இடத்தில் 110 அரேபியர்கள் யூதர்களால் கொல்லப்பட்டதை அடுத்து 7,50,000 பாலஸ்தீன அரேபியர்கள் பாலஸ்தீனத்தை விட்டே வெளியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகியது.

 

1948 மே 15-ஆம் தேதி பாலஸ்தீனத்தை  விட்டு வெளியேறப் போவதாக  பிரிட்டன் அறிவித்தது.  மே 14-ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு  யூதர்கள் ஐ.நா.வால் தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட இடங்களை  இஸ்ரேல் என்ற நாடாகப்  பிரகடனம் செய்துகொண்டனர்.  அரேபியர்கள் ஐ.நா.வின்  தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல்  மறுபரிசீலனை செய்யும்படி  கேட்டுக்கொண்டிருந்ததால், இன்று வரை அரேபியர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட, இறையாண்மை உள்ள (sovereign) பாலஸ்தீன நாடு உருவாகவில்லை.

 

படங்களுக்கு நன்றி :
 
 
 
Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – 6

 

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் விமானத்தில் சென்று இறங்கினாலும் டெல் அவிவ் நகருக்குப் போகும் திட்டம் எங்களுக்கு இல்லை. அது இப்போது மிகவும் பெரிய தொழில்நகரமாகி விட்டது. இஸ்ரேலின் ஜெருசலேம் மிகப் பழமை வாய்ந்த ஊர். இங்குதான் கிறிஸ்துவர்களின் வேதப் புத்தகமாகிய பழைய, புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல இடங்களைக் காண முடிகிறது. இதனால் ஜெருசலேமில் தங்கிகொண்டு இஸ்ரேலின் மற்ற இடங்களையும் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் வெஸ்ட் பேங்க்கில் இருக்கும் இடங்களையும் பார்ப்பதென்று முடிவு செய்தோம். டெல் அவிவ் விமான நிலையம் டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கிறது. (டெல் அவிவ் விமான நிலையத்தின் பெயர் பென் குரியன் விமான நிலையம். போலந்தில் 1888-இல் பிறந்த பென் குரியன் தன் இளவயதிலேயே ஸயோனிஸத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆட்டோமான் காலத்திலேயே பாலஸ்தீனத்திற்கு வந்து யூதர்களுக்கென்று தனி நாடு நிறுவுவதில் தீவிரமாகப் பணிபுரிந்தார். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு அதன் முதல் பிரதம மந்திரியானார்.) டெல் அவிவ் விமானநிலையத்தை விட்டு ஜெருசலேம் நோக்கி வர வர சமவெளியாக இருந்த இடங்கள் மலைப்பாங்கான இடங்களாகவும் பாலைவனப்பிரதேசமாகவும் மாறிக்கொண்டிருந்தன. ஜெருசலேமும் இம்மாதிரி மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கிறது.

 

Jerus-n4i-300x197.jpg

 

ஜெருசலேம் நகரம் 48 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இது பரப்பளவைப் பொறுத்த வரை இஸ்ரேலின் பெரிய நகரம் என்று கருதப்பட்டாலும் ஜனத்தொகையில் டெல் அவிவை விட சிறியதுதான். இங்கு வாழும் 7,00,000 பேர்களில் 4,60,000 பேர் யூதர்கள், 2,25,000 பேர் இஸ்லாமியர்கள் (அரேபியர்கள்), 15,000 பேர் கிறிஸ்துவர்கள். இந்த நகரின் மையத்தில் உள்ள புராதனப் பகுதி புராதன நகரம் (old city) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த புராதன நகரத்தைச் சுற்றிப் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியிருக்கின்றன. புராதன நகரம் கடல் மட்டத்திற்கு மேல் 2,600 அடி உயரத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக உருவாக்க ஐ.நா. 1947-இல் திட்டமிட்டபோது ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் ஐ.நா.வின் நேர் பார்வையில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த ஆறு சண்டைகளில் 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமை தனதாக்கிக் கொண்டது. அதனால் அது இப்போது இஸ்ரேலின் கீழ் இருக்கிறது.

புராதன நகரம் முழுவதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருக்கிறது. அது பல மட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது. அதற்குள் போவதற்கு ஏழு வாயில்கள் இருக்கின்றன. நடந்து செல்லக் கூடியவர்கள் மட்டுமே புராதன நகருக்குள் சென்று அங்குள்ள பைபிளோடு தொடர்புடைய, யூதர்களும் முஸ்லீம்களும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் பல இடங்களையும் பார்க்கலாம். அது ஒரு தனி உலகம்.

ஜெருசலேமில் ஆங்காங்கே ஆலிவ் மரங்களும் பேரீச்சம்பழ மரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் இந்தப் பிரதேசத்தில் காலம் காலமாக விளைபவை. ஆனால் அமெரிக்க யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் இன்னும் மற்ற இடங்களில் வாழும் யூதர்களிடமிருந்தும் இஸ்ரேலுக்கு நிறையப் பணம் வருவதால், விவசாயத்தில் புது தொழில்முறைகளைக் கையாண்டு இஸ்ரேல் முழுவதும் பல வகைச் செடிகளைப் பயிர்செய்கிறார்கள். இங்கு விளையும் கத்தரிக்காய் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கிறது. மேலும் மிகவும் பெரிதாக இருந்தாலும் பிஞ்சாக இருக்கிறது. ஒரு நாள் அவற்றை வாங்கிச் சமைத்த எனக்கு அவற்றில் இரண்டையாவது இந்தியாவிற்குக் கொண்டுவர ஆசை. இஸ்ரேலின் சொட்டு நீர்ப் பாசன முறையை அவர்களிடமிருந்து கற்றுத் தமிழ்நாட்டிலும் இப்போது அதைக் கடைப்பிடிப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன். நவீன விவசாயத் தொழில் முன்னேற்றத்தில் இதுவும் ஒன்று. அதுவும் தண்ணீர் அதிகம் இல்லாத இஸ்ரேலில் இந்த முறை மிகவும் பயன்படுகிறது.

ஜெருசலேம் முழுக்க பேருந்துகளிலேயே போய்வரலாம். நிறைய பேருந்துகள் ஓடுகின்றன. சாலைகளின், ஊர்களின் பெயர்கள் ஹீப்ரு, அரேபியம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளன. யூதர்களுக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை ஓய்வு தினம் (shabbath day – அதாவது அன்று இறைவனுக்கு நன்றி சொல்லி முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று கருதுவதால்). அன்று அரசுப் பேருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள்; கடைகளையும் மூடிவிடுகிறார்கள். உணவகங்களும் இதில் சேர்த்தி. ஆனால் துபாயில் ரம்ஜான் சமயத்தில் போல் வெளியில் நம் உணவை உண்பதைத் தடுப்பதில்லை.

ஜெருசலேமில், குறிப்பாக பழைய நகர்ப் பகுதியில் நிறைய யூதர்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளில் நடமாடிக்கொண்டிருந்தனர்.

ஜெருசலேமிலும் புறநகர்ப் பகுதிகளில் அமெரிக்க மாடலில் பெரிய மால்கள் இருக்கின்றன. அமெரிக்க மாடல் மால்கள் உலகெங்கிலும் பரவி வரும்போது அமெரிக்காவிடமிருந்து எக்கச்சக்கமாகப் பண உதவி பெறும் இஸ்ரேலில் இந்த மாதிரி மால்கள் இல்லாமல் இருக்குமா?

Israel-Museum-entry-nighttime1.jpg

 

 

ஜெருசலேமைச் சுற்றிலும் சிறிய தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (monasteries) மற்றும் மசூதிகள் இருக்கின்றன. பழைய நகரை விடுத்து ஜெருசலேமில் மிக முக்கியமான இரண்டு இடங்கள் எல்லோரும் பார்க்க வேண்டியவை. ஒன்று இஸ்ரேல் மியுஸியம் (The Israel Museum); இரண்டாவது யாத் வாஷம் (Yad Vashem). முதலாவது யூதர்களின் பழைய பெருமை வாய்ந்த சரித்திரத்தை எடுத்துக் கூறி தங்கள் இனம் இறைவனின் படைப்பில் சிறந்த இனம் என்று எடுத்துக் காட்ட உருவாக்கப்பட்டது. இரண்டாவது ஜெர்மனியில் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுச் சின்னம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை அவர்களுடைய தலைமுறைகளும் உலகமும் என்றும் மறக்காமல் இருப்பதற்காகவும் இனி அந்த மாதிரி கொடுமை யூதர்களுக்கு எப்போதும் இழைக்கப்படாமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. இரண்டிலும் பணத்தைக் கொண்டு கொட்டியிருக்கிறார்கள்.

 

இஸ்ரேல் மியுசியத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவு யூதர்களுடைய 3000 வருஷ சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறது அவர்களுடைய கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகிய பற்றிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்த சரித்திரம் இருக்கிறது. ஆங்காங்கு அவர்கள் கட்டிய யூதக்கோயில்கள் (Synagogue என்று யூதக்கோயில்களை அழைக்கிறார்கள்) பற்றிய விபரங்களும் நான்கு யூதக்கோயில்களின் உட்புறங்களின் மாடல்களும் இருக்கின்றன. கொச்சியில் இருக்கும் யூதக்கோயில் அவற்றில் ஒன்று. யூதர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தபோது இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் வந்திருக்கிறார்கள். குடிபெயர்ந்த பல இடங்களில் அந்தந்த இடங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றி உபயோகித்த பொருட்கள் – துணிகள், உடைகள், ஆபரணங்கள் – காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அவர்கள் உபயோகித்த மணப்பெண் உடை ஒன்றும் இருந்தது. சரித்திர மத்திய காலத்திலிருந்து இன்று வரை, பல இடங்களிலிருந்தும் – ஸ்பெயின், சீனா போன்ற தூர தேச நாடுகளிலிருந்தும் – சேகரித்த பல பொருள்கள் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

 

பல வகையான புத்தகங்களின் கைப் பிரதிகளும் இங்கே இருக்கின்றன. 14-ஆம் நூற்றாண்டில் பாஸ் ஓவர் (Passover) பண்டிகையின் போது ஒரு யூத மதத் தலைவர் வாசித்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் 15-ஆம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட பழைய ஏற்பாடு பைபிள், சட்ட சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பிரதிகளும் இருக்கின்றன. Passover என்பது யூதர்கள் எகிப்தில் ஃபேரோவின் அடிமைகளாக இருந்தபோது கடவுளிடம் தங்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட போது இறைவன் யூதர்களை விடுவிக்கும்படியும் இல்லையென்றால் பல இன்னல்களுக்கு உட்படும்படியும் எகிப்து அரசனை எச்சரித்து எகிப்தியர்களுக்குப் பல தண்டனைகள் கொடுத்தார். அதில் எகிப்தியக் குடும்பத்தின் எல்லா ஆண்பிள்ளைகளையும் கொன்றுவிடுவது ஒன்று. இறைவன் யூதர்களிடம் ஆடுகளைப் பலிகொடுத்து அவற்றின் இரத்தத்தை யூதர்களின் வீடுகளின் வாசலில் பூசிவைத்தால் அந்த வீடுகளைத் தான் அடையாளம் கண்டுகொண்டு யூதர்களின் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டுவிடுவதாக வாக்களித்தாராம். அதைக் கொண்டாடும் நாள்தான் Passover ஆகியது.

 

கலைப் பொருள்கள் பகுதியில் பல காலங்களில் சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்களிலிருந்து தற்கால ஓவியங்கள் – எல்லாம் யூதர்களின் படைப்புகள் – வரை இருக்கின்றன. சீனாவின் பீங்கான் சாமான்களிலிருந்து ஆப்பிரிக்காவின் மனித உருவப் பொம்மைகள், மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு அழகு செய்துகொள்ளும் கலைக்கூடம் வரை இருக்கின்றன. இப்பகுதியில் பெயர்பெற்ற நவீன கலைஞர்களின் படைப்புகளையும் காணலாம்.

 

இன்னொரு பகுதி தொல்லியல் துறை. இதில் இஸ்ரேலில் தோண்டி எடுக்கப்பட்ட பல தொல்லியல் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாகத் தோண்டப்பட்ட இடம் இஸ்ரேல்தான் என்கிறார்கள். (இப்போதும் புராதன நகரத்தில் பல இடங்களில் தரையைத் தோண்டும் வேலை நடக்கிறது. புராதன நகரத்தில் பல இடங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இருப்பதால் இப்படித் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.) கி.மு.வின் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி.யின் பல நூற்றாண்டுகள் வரை கண்டெடுக்கப்பட்ட பல அரிய பொருள்கள் இருக்கின்றன. சாலமன் அரசன் காலத்தில் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவிலிலிருந்து கிடைத்ததாகக் கருதப்படும் பழைய ஹீப்ரு எழுத்துக்கள் எழுதப்பட்ட தந்தத்தில் செய்த மாதுளம் பழத் தொல்லியல் பொருள் ஒன்றும் இருக்கிறது. யூதர்களின் இரண்டாவது கோவில் மாடல் ஒன்றும் இந்த மியுசியத்தில் இருக்கிறது.

 

இன்னொரு முக்கியமான அம்சம் உயிரற்ற கடலின் (Dead Sea) அருகில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட சுவடிகள் (Dead Sea Scrolls) அடங்கிய பகுதி. 1947-இல் பெடுயின் (Bedouin) இனத்தைச் சேர்ந்த இடையன் ஒருவன் தொலைந்துபோன தன் ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்காகக் குகைக்குள் சென்றபோது அவனுக்குத் தற்செயலாகக் கிடைத்த சுவடிகளை மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு சில தசாப்தங்களில் இன்னும் 800 சுவடிகள் பதினொரு குகைகளில் கிடைத்தனவாம். இந்தக் குகைகளுக்குப் பக்கத்தில் உள்ள கும்ரான் என்ற ஊரில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று இப்போது நம்பப்படுகிறது. இந்தச் சுவடிகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 68 வரை எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இது கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் கிறிஸ்தவ மத வரலாற்றையே இவை மாற்றிவிடலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் இவை யூதர்களின் பழைய வேதமான தோரா (Torah) என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுவடிகளின் மூலப்பொருள் தோலாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகப் பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை மியுசியத்தின் தளத்திற்குக் கீழே உள்ள அரை இருட்டு அறையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது காட்சிக்கு வைத்திருப்பவற்றை எடுத்துவிட்டுப் புதிதாகச் சிலவற்றை வைப்பார்களாம். ஒன்றையே வைத்திருந்தால் அவை கொஞ்சம் பழுதடைந்து போகலாம் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

 

jerusalem.jpg

 

யாத் வாஷம் ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது உலகத் தரம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 1953-இல் கட்டப்பட்டது. இப்போது நிறைய புது விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Hall of Names என்னும் பகுதி 180 மீட்டர் நீளமுடையது. இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் இரண்டு பக்கங்களிலும் ஜெர்மன் படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள், அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் இருபது லட்சம் பக்கங்கள் இங்கு இருக்கின்றன. இதன் கோன் வடிவமான கூரையில் 600 படங்கள் இருக்கின்றன. இதன் ஒருகோடியில் இருக்கும் கணினி அறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய data base இருக்கிறது. அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் உதவியால் யார் பற்றிய விபரம் வேண்டுமானாலும் அதில் தேடலாம்.

 

கலைக்காட்சியகம் (Art Museum) ஒன்றும் யாத் வாஷத்தின் முக்கிய அம்சம். இங்குள்ள ஓவியங்கள் யாவும் ‘படுகொலை’ (Holocaust) சமயத்தில் பல யூதர்கள் உருவாக்கியவை. படுகொலையில் தப்பிக்காத பலரின் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள Exhibition Pavilion-இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருள்கள் இருந்தாலும் எல்லாம் ஜெர்மானியப் படுகொலையோடு சம்பந்தப்பட்டவை. அடுத்து வரும் Learning Center-உம் அப்படியே. ஜெர்மானியப் படுகொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு விடை காண விரும்புவோர் இங்கு கணினிகள் மூலம் விடை காணலாம்; காதில் மாட்டிக்கொள்ளும் ear phones மூலமும் விடை தெரிந்துகொள்ளலாம். Visual Center-இல் யூதப் படுகொலை பற்றிய எல்லா ஆவணப் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள யூதக்கோவிலில் ஐரோப்பாவில் பல இடங்களில் அழிக்கப்பட்ட யூதக்கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல வகையான பொருள்கள் இருக்கின்றன.

 

இந்த மியுசியத்தின் சார்பில் பல ஆன் லைன் வகுப்புகள் நடத்துகிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இதில் சேரலாம். யூதர்களின் சரித்திரத்தையும் ஜெர்மானியப் படுகொலை பற்றியும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

 

யாத் வாஷத்திற்கு அனுமதி இலவசம். ஆனால் இங்கு வருபவர்கள் உரிய முறையில் உடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கால் பேண்ட்டுகள் (shorts), குட்டைப் பாவாடைகள் (mini skirts) அணிந்துகொண்டு மியுசியத்திற்குள் நுழைய முடியாது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் நிமித்தமாக இந்த நிபந்தனை இருக்கிறது என்று நினைக்கிறேன். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘யூதப் படுகொலை’ சம்பந்தப்பட்ட சில காட்சிப் பொருள்கள் அவர்களின் மனதைப் பாதிக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு போலும். எல்லாப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கே மூடிவிடுகிறார்கள். சனிக்கிழமை முழுவதும் விடுமுறை. ஜெர்மானியப் படுகொலை பற்றிய எல்லா விபரங்களையும் பார்ப்பவர் மனதில் இருத்த வேண்டும் என்பதே இம்மியுசியத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. இதற்கு வெளியே வந்து பார்த்தால் இஸ்ரேல் ஊர் முழுவதும் மிக அழகிய முறையில் தோற்றமளிக்கிறது.

 

நாங்கள் இஸ்ரேலுக்குப் போகும் முன்பே ஒரு அமெரிக்க யூத நண்பர் ‘இந்த மியுசியத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேல் ஏன் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாகப் புரியும்’ என்று சொல்லிக் கண்டிப்பாக இதைப் பார்த்து வரும்படிக் கூறினார். இப்போது இஸ்ரேல் உருவான சரித்திரம் தெரிந்த பிறகு ‘ஜெர்மானியப் படுகொலைக்கு’ வெகு காலம் முன்பே யூதர்கள் தங்களுக்கென்று, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது

Picture of Israel Museum
 
overview of Yad Vashem The first of many pictures
model of second Jewish temple
 

 

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் 7

 

இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம்.  இது மிகத் தொன்மை வாய்ந்தது.  கி.மு. பதினோராம் நூற்றாண்டில் டேவிட் (King David) என்னும் யூத மன்னன் இந்த ஊரை ஒரு குன்றின் மேல் உருவாக்கியதாகப் பைபிளில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.  இதன் அடிப்படையில் தாங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து வாழ்ந்துவந்ததாக யூதர்கள் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  அது எப்படியாயினும் இந்த நகரோடு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூன்று மதத்தினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  இந்த மதங்கள் சம்பந்தப்பட்ட பல புண்ணிய தலங்கள், தேவாலயங்கள், துறவி மடங்கள், மசூதிகள் இங்கு இருக்கின்றன.  அதனால் மூன்று மதத்தவர்களும் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  இதற்குள் நுழைந்துவிட்டால் சரித்திர காலத்திற்கே போய்விட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.

 

Dome-ofthe-rock.jpg

இந்நகர் கி.மு.வுக்கு முன்னும் கி.மு.வுக்குப் பின்னும் பல மதங்களைச் சேர்ந்தவர்களின்  கையில் இருந்திருக்கிறது. முதலில் யூதர்கள், பின் ரோமானியர்கள், அதன் பிறகு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மறுபடி கிறிஸ்தவர்கள் என்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இதனால் இம்மூன்று மதங்களின் இறைவழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  அதிலும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட பல கட்டடங்களை அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள பல இடங்கள் எந்த மதத்திற்கு உரியது என்ற சர்ச்சை நடந்துவருகிறது.  நம் நாட்டில் இந்துக் கோவிலான ராமஜென்ம பூமியை இடித்துவிட்டு அதற்கு மேல் பாபர் மசூதியைக் கட்டியதாக சர்ச்சை நடந்து வருவதைப் போல.  பல இடங்களில் இன்றும் அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது.

1967-இல் நடந்த அரேபிய-இஸ்ரேல் சண்டையில் (இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கும் சிரியா, எகிப்து, ஜோர்டன் ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையே ஆறு போர்கள் நடந்திருக்கின்றன.  இவற்றில் இஸ்ரேல் 1948-இல் ஐ.நா. பாலஸ்தீனத்திற்குக் கொடுத்த பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.)  இஸ்ரேல் ஜோர்டனிடமிருந்து இந்த நகரத்தைக் கைப்பற்றியது.  பிறகு 1980-இல் ஜோர்டான், இதை உலகப் பாரம்பரியச் சொத்துகளில் (World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.-வுக்குக் கோரிக்கை விடுத்ததை ஐ.நா. ஏற்று, அந்தப் பட்டியலில் இந்த நகரை இடம் பெறச் செய்திருக்கிறது.

இதனுடைய பரப்பளவு 0.9 சதுர கிலோமீட்டர்தான்.  இதைச் சுற்றிக் கற்களாலான மதில் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவர் பல காலத்தில் பல மன்னர்களால் இடிக்கப்பட்டும் திரும்ப எழுப்பப்பட்டும் இருந்திருக்கிறது.  இப்போதுள்ள மதில் சுவர் ஆட்டோமான் பேரரசராகிய சுலைமான் என்பவரால் (Suleiman, the Magnificent) 1538-இல் கட்டப்பட்டது.  இந்த மதிலின் நீளம் 2.8 மைல்.  உயரம் 16 அடியிலிருந்து 49 அடி வரை இருக்கிறது.  சில இடங்களில் இதன் பருமன் 10 அடி கொண்டதாக இருக்கிறது.  இதில் 43 காவல் கோபுரங்களும் (Surveillance Towers) பதினொரு நுழைவாயில்களும் (Gates) இருக்கின்றன.  இப்போது ஏழு நுழைவாயில்களே உபயோகத்தில் இருக்கின்றன.  மூடப்பட்ட நுழைவாயில்களில் ஒன்றான தங்க வாயில் (Golden Gate) வழியாக யூதக் கடவுள் அவருடைய தூதரை அனுப்பும்போது அவர் இந்த வாயில் வழியாகத்தான் வருவார் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  தூதர் வருவதைத் தடுக்க முஸ்லீம் மன்னன் ஒருவன் இதை மூடிவிட்டானாம். அப்படி மூடிவிட்டாலும் இவ்வளவு தூரம் வந்தவர் உள்ளே வருவதற்கு என்ன தயக்கம் இருக்க முடியும் என்று யூதர்கள் கூறிக்கொள்வார்களாம்.  1887-ஆம் ஆண்டு வரை எல்லாக் கதவுகளும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மூடப்பட்டு, மறு நாள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் திறக்கப்படுமாம்.

இந்த நுழைவாயில்கள்  நேராக அமைக்கப்படாமல் L வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.  எதிரிகள் குதிரைகளின் மேல் வேகமாக வரும்போது வாயில் இந்த வடிவில் இருந்தால் அது அவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துமாம்.  மேலும் யூதர்களின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சில வாயில்களில் பெரிய துவாரங்கள் இருக்கின்றன.  எதிரிகள் உள்ளே நுழையும்போது அவர்கள் மேல் காய்ச்சிய திரவத்தை ஊற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். இன்று இந்த மதில் சுவரின் மேலே நடந்து பார்த்தால் ஜெருசலேம் நகரம் முழுவதும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது.

 

புராதன நகரின் தெருக்கள், சாலைகள் முழுவதும் cobble stones என்னும் ஒரு வகைக் கூழாங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் கற்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

 

இந்த நகர் கிறிஸ்துவப்  பிரிவு, யூதர்கள் பிரிவு, முஸ்லீம்கள் பிரிவு, ஆர்மீனியர் பிரிவு என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.  அதிகபட்சமாக எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்களோ அந்த மதத்தின் பெயரால் அந்தப் பகுதி வழங்குகிறது.  அதனால் இப்படிப் பல பிரிவுகளாக இருந்தாலும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மதப் பிரிவில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.  ஒரு சிறிய மொரோக்கன் பிரிவும் இருக்கிறது.  இந்தப் பிரிவுகள் சம அளவில்  இல்லை.  டமாஸ்கஸ் (Damascus Gate) வாயிலிலிருந்து ஸயான் வாயில் (Zion Gate) வரை ஓடும் தெரு இந்நகரை கிழக்கு, மேற்காகப் பிரிக்கிறது.  ஜாஃபா வாயிலிலிருந்து (Jaffa Gate) சிங்க வாயில் (Lion’s Gate) வரை ஓடும் தெரு நகரை வடக்கு, தெற்காகப் பிரிக்கிறது.  நகரின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லீம் பிரிவும் வட மேற்கில் கிறிஸ்தவர்கள் பிரிவும் தென்மேற்கில் யூதர்கள் பிரிவும் தென்கிழக்கில் முஸ்லீம்கள் பிரிவும் இருக்கின்றன.

 The-13th-Station-of-cross.jpg

கிறிஸ்தவப் பிரிவில் 40 தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (Monasteries), கிறிஸ்தவ பயணிகள் தங்குமிடங்கள் ஆகியவை இருக்கின்றன.  கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புண்ணிய தலமாகக் கருதப்படும் Church of the Holy Sepulcher இங்குதான் இருக்கிறது.  இயேசு குற்றவாளி என்று ரோமானிய அரசன் பிலாத்து தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை வழங்கிய இடம் முஸ்லீம் பிரிவில் இருக்கிறது.  அங்கிருந்து தொடங்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கடைசியாக உயிர் துறந்து அவர் உடல் புதைக்கப்பட்ட இடம் வரை உள்ள பாதையைப் பதினான்கு பிரிவுகளாகக் குறித்திருக்கிறார்கள்.  அவற்றை ஆங்கிலத்தில் stations என்று குறிப்பிடுகிறார்கள். இயேசு தன்னுடைய கடைசி யாத்திரையை நோக்கி நடந்த பாதையை Via Dolorosa என்கிறார்கள்.  பாதையின் ஆரம்பத்தில் இயேசுவைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டிய இடம், பின் அவர் சிலுவையைத் தூக்கி வருமாறு ஆணையிட்ட இடம், அவர் சிலுவையின் சுமையால் விழுந்த இடம், பின் அவர் தன் தாயைக் கூட்டத்தில் சந்தித்த இடம், அவர் தன் ஆதரவாளர்களோடு பேசிய இடம், ஜெருசலேம் பெண்களைச் சந்தித்த இடம் என்று கூறப்படும் இடங்கள் முஸ்லீம் பிரிவில் இருக்கின்றன.  இயேசு சிலுவையின் சுமையால் மறுபடி விழுந்த இடம், ரோமர் சிப்பாய்கள் அவருடைய ஆடைகளைக் கழைந்த இடம், அவரைச் சிலுவையில் அறைந்த இடம், அவருடைய உடலைக் கீழே இறக்கி வைத்த இடம், அவருடைய கல்லறை ஆகியவை பின்னால் கட்டப்பட்ட Church of the Holy Sepulcher-குள்ளே இருக்கின்றன.  இயேசுவை அறைந்த சிலுவையை ஊன்றிய கல் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது.  அதில் ஒரு சிலுவையை நட்டு இப்போது வழிபடுகிறார்கள்.  உலகின் பல கோடியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் இங்கு வருகிறார்கள்.  நாங்கள் சென்றிருந்தபோது ஆந்திராவிலிருந்து ஒரு கோஷ்டி வந்திருந்தது.  (கிறிஸ்தவர்களின் இந்தப் புண்ணிய தலத்திற்கு வர விரும்பும் கிறிஸ்தவர்களில் வருடத்திற்கு 500 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.20,000 உதவிப் பணமாகத் தமிழ்நாடு அரசு வழங்கப் போவதாகச் செய்தித்தாளில் படித்தேன்.)  இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட இடம் என்று ஒரு கல்மேடை இருக்கிறது.  கிறிஸ்தவர்கள் அதில் தங்கள் தலையை வைத்து வழிபடுகிறார்கள்.  இயேசுவின் கல்லறையைப் பார்க்க மக்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள்.  ரோமானிய அரசன் கான்ஸ்டாண்ட்டின் (இவன்தான் கிறிஸ்தவ மதத்தை மறுபடித் துளிர்க்கச் செய்தவன்) காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் பல முறை இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது.  இப்போதைய கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.  இந்தக் கோவிலின் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதில் பல கிறிஸ்தவ மதப் பிரிவினர்களுக்கிடையே நடந்த சச்சரவால் இதனுடைய பெரிய மரக் கதவுகளுக்கான சாவி ஒரு முஸ்லீம் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்!  இப்போதும் பத்து அங்குல நீளமுடைய இதன் சாவி ஒரு முஸ்லீம் கையில் இருக்கிறது.  அவர் காலையில் கதவைத் திறந்துவிட்டு மறுபடி இரவு எட்டு மணிக்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் செல்வாராம்.

 

இயேசுவின் இந்தக் கடைசி  யாத்திரை வழியாக ஒவ்வொரு  வெள்ளிக்கிழமையும் இப்போது  ஃப்ரான்ஸிஸ்கன் (Franciscan) பிரிவைச் சேர்ந்த குருமார் தலைமையில் பக்தர்கள் பாடிக்கொண்டும் ஜபித்துக்கொண்டும் நடக்கிறார்கள்.  இப்போது இருக்கும் பாதைதான் இயேசு நடந்த அதே இடம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

இயேசு தன் சீடர்களுடன்  கடைசியாக உணவருந்திய இடம் (Last Supper) என்ற ஒரு இடம் இருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய தலம் என்று கருதி போப் இதைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடும்படி இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.  அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் ஸ்பெயின் நாட்டிலுள்ள யூதக்கோவில் ஒன்றை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடுவதாக வாக்களித்திருக்கிறாராம்.

 

யூதர்கள் பிரிவில் Western Wall என்னும் யூதர்களுடைய இரண்டாவது கோவிலின் இடிபாடுகளில் மிஞ்சிய மேற்குச் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவரின் மிகப் பெரிய கல்லின் எடை பத்து லட்சம் பவுண்டிற்கும் மேலானது.  நீளம் 45 அடி, உயரம் 15 அடி, ஆழம் 15 அடி.  இந்தச் சுவரின் உயரம் 65 அடி.  யூதர்களின் இரண்டாவது கோவில் இடிக்கப்பட்டது கி.பி. 70-இல்.  கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களாக இது இருந்து வருகிறது.  தங்களுடைய இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டுவிட்டதால் மூன்றாவது கோவிலை எப்படியும் மறுபடியும் கட்டிவிட வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள்.  யூதர்கள் பகுதியில் உள்ள ஒரு சதுக்கத்தில் மெனோரா (menorah) என்னும் யூதர்களின் ஏழு தீப விளக்கு ஒன்று இருக்கிறது.  இது யூதர்களுக்கு மிக முக்கியமான விளக்கு.  இதில் எரிவதற்கு மிகச் சுத்தமான ஆலிவ் எண்ணெய்தான் உபயோகிக்க வேண்டுமாம். மிகப் பழங்காலத்தில் ஒரு முறை ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான ஆலிவ் எண்ணெய்தான் இருந்ததாம்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த எண்ணெயிலேயே ஏழு நாளைக்கு தீபம் எரிந்ததாம்..  அதிலிருந்து இந்த விளக்கை ஏழு முகம் கொண்டதாக அமைத்தார்களாம்.  யூதர்கள் பகுதியில் இருக்கும் மெனோராவின் அடியில் ‘மூன்றாவது கோவிலை நாம் காலத்திற்குள் கட்டிவிடுவோம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

 

1948-இல் நடந்த இஸ்ரேல்-அரேபிய யுத்தத்தில் ஜெருசலேம் ஜோர்டனின் கீழ் வந்தது.  ஜோர்டானிய அரசு இங்கு வாழ்ந்துவந்த யூதர்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டது.  மறுபடி 1967-இல் நடந்த சண்டையில் ஜெருசலேம் முழுவதையும் பிடித்துக்கொண்ட இஸ்ரேல் மறுபடி யூதர்களை அங்கு குடியேற்றியது.  ஆங்காங்கே யூதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுடைய யூதக்கோவில்களைக் (synagogues) கட்டிக்கொண்டாலும் பழைய நகரத்தில் உள்ள மேற்குச் சுவர் யூதர்களைப் பொறுத்த வரை மிகவும் புனிதமானது.  கி.பி.70-இல் ரோமானியர்கள் யூதர்களின் இரண்டாவது கோவிலை இடித்தபிறகு இது மட்டும் மிஞ்சியிருக்கிறது.  ரோமானியர்கள் கோவிலை இடித்த போது இது கோவிலின் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும் என்றும் இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று நினைத்து அதை இடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று இடிக்காமல் விடப்பட்ட இந்தச் சுவரே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறதென்றால் கோவில் எத்தனை பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும்!  நவீன கட்டடக் கலை உத்திகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கற்களைக் கொண்டே இப்படி ஒரு பிரமாண்டமான மதில் சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது இது யூதர்களின் தலைசிறந்த புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.  உலகிலுள்ள யூதர்கள் எல்லோரும் இதைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  1948-லிருந்து 1967 வரை இது பாலஸ்தீனர்களின் கையில் இருந்தபோது பல யூதர்களால் இதைத் தரிசிக்க முடியவில்லையாம்.  அதனால் பலர் மிகவும் சோகப்பட்டார்களாம்.  எங்கள் அமெரிக்க யூத நண்பர் ஒருவர் அவருடைய தாத்தாவும் பாட்டியும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறியவர்கள் என்றும் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு அங்கு சென்று இந்தப் புண்ணிய இடத்தைப் பார்க்க விரும்பியதாகவும் ஆனால் அது அப்போது ஜோர்டனின் கீழ் இருந்ததால் அதைப் பார்க்க முடியாமல் போனதாகவும் அதனால் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் கூறினார்.

 

இந்த மேற்குச் சுவரை (Western Wall), Wailing Wall என்று கூறுவோரும் உண்டு.  இந்தச் சுவரின் முன்னே நின்று யூதர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.  இந்தப் பகுதி ஆண்களுக்கு ஒரு பெரிய பிரிவாகவும் பெண்களுக்கு ஒரு சிறிய பிரிவாகவும் ஒரு வேலி மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இந்தச் சுவரின் அருகில் நின்று பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சிறு தாளில் தங்கள் வேண்டுகோளை எழுதிச் சுவரில் உள்ள இடுகல்களில் சொருகிவிடலாம்.  இறைவன் அந்த வேண்டுகோள்களை நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.  அவர்கள் உருக்கமாகப் பிரார்த்திப்பதால் Wailing Wall என்று இதற்குப் பெயர் வந்ததாம்.  நாங்களும் எங்கள் வேண்டுதல்களை ஒரு தாளில் எழுதி சுவரில் செருகிவிட்டு வந்தோம்.  குறை தீர்க்கும் கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன?

 

இதை அடுத்து இருக்கும்  இடத்திற்குப் பெயர் கோவில் குன்று (Temple Mount). இதில் அல்-அக்ஸா (Al-Aksa) என்னும் மசூதியும் குன்றின் மேல் கூண்டு (Dome of the Rock) என்னும் மசூதியும் இருக்கின்றன.  இவை இரண்டும் அழிக்கப்பட்ட யூதர்களின் கோவிலின் இடத்தில் கட்டப்பட்டது என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  இந்த இரண்டு மசூதிகளிலும் முஸ்லீம்களின் ஐந்து பிரார்த்தனை நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாது.  இந்த இரண்டு மசூதிகளுக்குள்ளும்  முஸ்லீம் அல்லாதவர்கள் உள்ளே செல்லவே முடியாது.  ஆனால் இந்த மசூதிகளின் வளாகத்திற்குள் முஸ்லீம் அல்லாதவர்களும் போகலாம்.

கோவில் குன்று என்று  அழைக்கப்படும் Temple Mount-இல் தான் யூதர்களின் இனத்தை ஸ்தாபித்த ஆபிரகாம், இறைவனின் ஆணைக்கு இணங்கி தன் மகன் ஐஸக்கைப் பலியிடத் தயாரானாராம்.  இதே இடத்தில்தான் முஸ்லீம் மத ஸ்தாபகரான முகம்மது தன் குதிரையின் மீது ஏறி சொர்க்கத்தை நோக்கிச் சென்றாராம்.

 

இந்த இரண்டு புராணச்  சம்பவங்களாலும் யூதர்களும் முஸ்லீம்களும் இதற்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  புராதன காலத்தில் இவை யூதர்களுக்குச் சொந்தமான இடமாக இருந்தன  என்றும் மசூதி இருக்கும்  இடத்தில்தான் யூதக் கடவுள் ஒரு கல்லிலிருந்து உலகைப் படைத்தார் என்றும் யூதர்கள் நம்புவதால், அவர்கள் அல்-அஸ்கா மசூதிக்குள் எப்படியாவது சென்று அங்கு வழிபட விரும்புகிறார்கள்.  அப்படி சிலர் நுழைய முயலும்போது கலவரங்கள் வெடிக்கின்றன.  இவற்றைத் தவிர்க்க இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் யாரும் அங்கு போகாதவாறு அந்த இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இஸ்ரேல் காவலர்கள் அங்கு போகும் எல்லோரையும் அவர்கள் இஸ்ரேல் பிரஜைகள் அல்ல என்று சரிபார்த்துக்கொள்கிறார்கள்.  (1967 சண்டைக்குப் பிறகு இந்த இடம் இஸ்ரேலின் கீழ் இருந்தாலும் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த இடங்களின் பராமரிப்பு இப்போது ஜோர்டன் கையிலும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடு இஸ்ரேல் கையிலும் இருக்கின்றன.)  எங்களிடமும் எங்கள் பாஸ்போர்ட் பற்றிக் கேட்டார்கள்.  நாங்கள் எங்கள் பாஸ்போர்ட்டுகளை எடுத்துச் சென்றிருக்கவில்லையாதலால் என் கணவருடைய அமெரிக்க டிரைவர் லைசென்சைச் சரிபார்த்துவிட்டு எங்களை உள்ளே விட்டார்கள்.

 

கோட்டைச் சுவரில்  ஒரு ஒலி-ஒளிக் காட்சி உண்டு.  இது கோட்டைச் சுவரின் பின்னணியில்  காட்டப்படுகிறது.  இஸ்ரேலின்  வரலாற்றை ஆதிகாலத்திலிருந்து இயேசு காலம் வரை யூதர்களின் பார்வையில் இக்காட்சி காட்டுகிறது.  அந்தச் சூழ்நிலையும் பிரமாண்டமான  காட்சியமைப்பும் நம்மை  புராதன காலத்திற்கே கொண்டுசெல்கின்றன.  இந்தக் காட்சி இரவில் நடக்கிறது.  பகலில் சுவரில் உள்ள பல அறைகளில் இஸ்ரேலின் வரலாற்றுக்கால  நிகழ்ச்சிகளை காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.  இவற்றில் ஜெருசலேம் மற்றும் பிற  நகரங்களின் மீது யார், எப்போது, எதற்குப் படையெடுத்தார்கள் என்பதை விளக்கமாகக் காணலாம்.  ஒரு அறையில் வரலாற்றைத் திரைப்படமாகக் காட்டுகிறார்கள்.  கோட்டைச் சுவரின் உச்சியில் ஒரு தொலைநோக்கிக் கருவி இருக்கிறது.  ஜெருசலேமின் முக்கியமான இடங்களை விளக்கும் ஒலிப் பேழையை வைத்துக்கொண்டு தொலைநோக்கி மூலம் பார்த்தால் ஜெருசலேமின் வரலாறும் சிறப்பும் நம் கண் முன்னே நிற்கும்.

(தொடரும்)

 

http://www.vallamai.com/?p=31155

 

 

DSC00468.JPG

View of Old Jerusalem from the terrace of the Austrian guesthouse.

Link to comment
Share on other sites

DSC00475.JPG

 

View of Old Jerusalem from Mount of Olives.


DSC00375.JPG

Stone of Unction, where the body of Jesus was cleansed.

 

DSC00628.JPG

A store in the Christian quarter where the storekeeper, a Muslim, has left for his Friday afternoon prayer.  They just left a bar across their store and left to pray.


DSC00587.JPG

12th Station of the Cross, in the Greek Orthodox Chapel, said to be the site of crucifixion.


DSC00607.JPG

A temporary dome just outside Jaffa Gate, for the Jerusalem Festival of Lights in June 2012.


DSC00606.JPG

In the King David Museum.


ஜெருசலேமில் என் மகள் மெல்லி எடுத்த புகைப்படங்களின்  ஆல்பத்தை இந்த இணைப்பில்  விரும்புபவர்கள் பார்க்கலாம்.  இந்த ஆல்பத்தில் புராதன நகரின் முக்கிய கட்டடங்கள், தெருக்கள், இயேசுவின் கடைசி யாத்திரைப் பாதை ஆகிய படங்களைப் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் 8

 

DSC00556.jpg

 

புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன.  சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன.  அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன.  அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள்.  ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன.  காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன.  இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம்.  ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன.  பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன.  புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை.  ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன.  அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது.  அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன.  இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும்.  புதுக்கருக்கு மாறாமல் இருந்தது.  அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும்.  அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.

 

புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா  இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம்.  அவர் ஒரு அரேபிய முஸ்லீம்.  முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம்.  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு.  அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி

 

நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில்  இருந்தது.  மொத்த தூரம்  அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.  சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும்.  பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை.  அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம்.  இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும்.  மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார்.  நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம்.  இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும்.  இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது. இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது.  சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது.  ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது.  பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார்.  ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel).  ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை.  நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்

 

மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது.  மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம்.  ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.)  பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.
 
ஜெருசலேம் நகரம் இப்போது  மிகவும் விரிந்திருக்கிறது.  1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை.  அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது.  ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன.  இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.
 
1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.  ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர்.  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது.  இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும்.  1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது.  1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது.  சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.  1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன.  ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை.  சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.
 
இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர்.  மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம்.  இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன.  இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது.  இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.
 
இது வரை இஸ்ரேல்  என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்.  ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.
 
இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர்.  இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.)  1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.
 
1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார்.  1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி.  (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது.  இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார்.  மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.)  ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
 
1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர்.  இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார்.  இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார்.  பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்.  இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார்.  இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.
 
யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும்  பலர் குடியேறினர்.  ஜெருசலேமைச்  சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன.  1967 சண்டைக்குப் பிறகு  இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது.  இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை.  1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார்.  2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.
 
ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.
 
ஜெருசலேமின் பல இடங்களில்  இந்தச் சுவரைக் காண முடிந்தது.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது.  பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன.  இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.  இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும்.  அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம்.  மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம்.  சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.
 
இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது.  சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.  கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம்.  பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம்.  கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது.  வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன.  சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.  சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது.  வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது.  இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும்.  நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.
 
பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின்  வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார்.  அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம்  கூறினர்.  பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம்.  அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம்.  நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.
 
DSC00477.JPG
 

சுவர் பற்றிய படங்களை  இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/TheWall?authkey=Gv1sRgCL_Pu8mm_obUPg

 

http://www.vallamai.com/?p=31611

 

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – 9

 

ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது.  இந்தப் பகுதி தற்போது A, B, C  என்னும் மூன்று நிர்வாகப் பிரிவுகளாக இருக்கிறது.  ஒரு பிரிவு முழுவதும் இஸ்ரேலின் நிர்வாகத்திலும் மற்றொரு பிரிவு பாலஸ்தீன நிர்வாகத்திலும் மூன்றாவது இரண்டின் நிர்வாகத்திலும் இருக்கின்றன.  ஒரு நாள் பாலஸ்தீன நிர்வாகத்தில் இருக்கும் பெத்லஹேம் (Bethlehem ),   ராமல்லா (Ramallah) போன்ற இடங்களைப் பார்க்க சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யும் கம்பெனிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேதியையும் குறித்துக்கொண்டோம்.  இந்த ஏற்பாடுகளைச் செய்த போதே ‘நாங்கள் உங்களை அங்கு கொண்டுபோய்விட்டுவிட்டு எல்லா இடங்களையும் காட்டிவிடுவோம்.  அதன் பிறகு நீங்களாகத்தான் திரும்பி வரவேண்டும்.  அப்படி நீங்களாக வந்தால்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் வரும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்குப் புரியும்’ என்று சொல்லியிருந்தார்கள்.  நாங்களும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டோம்.

 

அன்று காலை ஒன்பது மணிக்குப் பிரயாணத்தை ஆரம்பித்தோம்.  எங்களை அழைத்துச் செல்ல வந்த டாக்ஸி எங்களை ஏற்றிக்கொண்டு சென்றது.  சுமார் பத்து மைல் தூரம் சென்றதும் ஒரு சோதனைச் சாவடி அருகில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.  அவரால் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல முடியாது.  இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் யாரும் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல அனுமதி இல்லை.  சோதனைச் சாவடியைத் தாண்டியதும் அந்தப் பக்கம் இன்னொரு ஓட்டுநர் எங்களை அவருடைய டாக்ஸியில் அழைத்துச் செல்வார் என்றார்கள்.

 

இரு பக்கமும் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீண்ட சோதனைச் சாவடிப் பாதையைக் கடந்து சென்ற பிறகு அந்தப் பக்கம் எங்களுக்காகக் காத்திருந்த ஓட்டுநரைச் சந்தித்தோம்.  அவரால் இஸ்ரேலுக்குள் வர முடியாது.  சோதனைச் சாவடியைத் தாண்டி வெளியே வந்தவுடன் பெத்லஹேம் ஊர் துவங்குகிறது.  இங்கேயும் வளைந்து நெளிந்து செல்லும் பிரமாண்ட தடுப்புச் சுவரைப் பார்த்தோம்.  பாலஸ்தீனர்களுக்காக ஐ.நா. 1947-இல் ஒதுக்கிய இடங்களில் 1967 போரில் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களைச் சுற்றிக்கொண்டு இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தப் பகுதியின் சுவரில் பாலஸ்தீனியர்கள் தங்கள் கோரிக்கைகளையும், கனவுகளையும் ஸ்பிரே பெயிண்டில் (spray paint) எழுதியிருந்தார்கள்.  ஊரைப் பார்க்கவரும் பயணிகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தார்கள்.  என் கணவரும் அவர் பங்கிற்கு ‘விடுதலை’ என்று தமிழில் எழுதி வைத்தார்.

 DSC00510.jpg

1948-லிருந்து யூதர்களின் வன்முறையாலும் பல முறை நடந்த போர்களாலும் பல பாலஸ்தீனியக் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறின.  இவர்கள் பக்கத்திலுள்ள லெபனான், ஜோர்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள்.  இப்போதைய பாலஸ்தீனத்திலும் அகதிகள் முகாம் இருக்கிறது.  அதில் ஒன்று ஐ.நா. மேற்பார்வையில் பெத்லஹேம் நகரில் இருக்கிறது.  அதற்கு நடந்து போனோம்.  இங்கே நெருக்கமான வீடுகள், குறுகிய சந்துகள் இருக்கின்றன.  ஜனநெருக்கமும் அதிகமாக இருக்கிறது.  தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வருமாம்.  ஐ.நா. ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறது.  பல வீடுகளில் குண்டடி பட்ட துவாரங்கள் இருந்தன.  அகதிகளின் இரண்டாம் தலைமுறையினர் வேறு நாடுகளுக்குப் போய் சம்பாதித்துப் பணம் அனுப்புவதால் மோசமான வறுமை இல்லை.  இந்த முகாமில் வேலைவாய்ப்பே கிடையாது.   இதில் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களைச் செய்து வருகிறது.  அகதிகள் செய்யும் கைவினைப் பொருள்களை விற்கிறது.  இதன் அலுவலகத்தில் ஒரு சிறு கண்காட்சியும் இருந்தது.  பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பற்றிய புத்தகங்களையும் விற்கிறார்கள்.  அதில் மனதை நெகிழ வைத்தது பெரிய சாவிகள்.  1948-இல் இஸ்ரேல் உருவானதாக அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர்களாக ஓடிவந்த அகதிகளும் இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்டவர்களும் வெஸ்ட் பேங்கிலும் ஜோர்டனிலும் சிரியாவிலும் லெபனானிலும் தஞ்சம் அடைந்தனர்.  இவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு என்றாவது திரும்புவோம் என்ற நம்பிக்கையில் சாவிகளைப் பத்திரமாக வைத்திருக்கிறர்களாம்.  அதைக் காட்டும் அடையாளம்தான் கண்காட்சியிலுள்ள சாவி.  இவர்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு எப்போது திரும்பிச் செல்வார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

 

இந்த அகதிகள் இருக்கும் இடம் ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருக்கிறது.  அங்கு செல்வதற்கு முன் எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.  என்னைப் பயண வழிகாட்டியின் தந்தை நடத்தும் ஒரு கடையில் அரை மணி நேரம் உட்கார வைத்துவிட்டு என் குடும்பத்தினர் பக்கத்து இடங்களுக்குச் சென்று வந்தனர்.  அது ஒரு சிறிய கடை.  நான் அங்கு இருந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை.  முக்கியமாக பாலஸ்தீனியர்கள் உடை, அவர்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருள்கள் ஆகிய நினைவுப் பொருள்கள்தான் (souvenir) இருந்தன.  ஜூன் மாதமாதலால் வெயில் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது.  குளிர்சாதன அமைப்பு எதுவும் இல்லை.  அந்த வெக்கையால் அசதி ஏற்பட்டு நான் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துவிட்டேன்.  கண்களைத் திறந்து பார்த்தால் கடைக்காரரைக் காணோம்.  நான் எழுந்திருந்து பார்த்தபோது அவர் கடைக்கு வெளியில் நின்றிருந்தார்.  நான் கண்ணயர்ந்து இருக்கும்போது, தான் கடையில் இருப்பது நாகரிகமல்ல என்று நினைத்துவிட்டார் போலும்.  நான் விழித்துவிட்டது தெரிந்ததும் உள்ளே வந்தார்.  முஸ்லீம்கள் எல்லாம் முரடர்கள் என்று நினைப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கட்டும்.

 DSC00515.jpg

அகதிகள் முகாமை முடித்துக்கொண்டு பெத்லஹேமில் உள்ள பெரிய தேவாலயத்தைக் காணச் சென்றோம்.  இயேசுவின் பெற்றோர்கள் நாசரேத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இயேசு பிறந்தது பெத்லஹேம் நகரில்.  அங்கு அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்வார்கள்.  அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு வெள்ளி நட்சத்திரம் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது.  இது ஒரு குகை போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.  கி.பி. 160-இல் இந்த இடம் இயேசு பிறந்த இடமாக அடையாளம் பெற்றது.  ஆனால் 326-இல் தான் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டின் இங்கு ஒரு கோயில் கட்டும்படி ஆணையிட்டான்.  கி.பி.530-இல் இது மறுபடி புதுப்பிக்கப்பட்டது.  பின்னால் 10-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள் (Crusaders) அதை மேலும்  அழகுபடுத்தினார்கள்.  அதன் பிறகு இது பல முறை அழகுபடுத்தப்பட்டது.  இப்போது பெரிய தேவாலயமாகக் காட்சியளிக்கிறது.  பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான தூண்களோடும் சாண்டிலியர் விளக்குகள் பொருத்தப்பட்ட கூரைகளோடும் மிக அழகாக காட்சியளிக்கிறது.  பெத்லஹேம் ஊரின் மையப் பகுதியில் மேஞ்சர் ஸ்கொயர் (Manger Square) என்னும் இடத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

 

பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் போன்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய ஸ்தலம் என்பதால் இதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.  இப்போது இஸ்ரேலிலிருந்து பல பாலஸ்தீன அகதிகள் வந்திருப்பதால் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கிறது.

 

பெத்லஹேமில் மதிய உணவை முடித்துக்கொண்டு ராமல்லா என்ற ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.  இது இப்போது பாலஸ்தீன அத்தாரிட்டியின் (Palestinian Authority) தலைமைச் செயலகமாக விளங்குகிறது.  ராமல்லா என்ற பெயரிலிருக்கும் ‘ராம்’ என்றால் உயரம் என்று அர்த்தமாம்;  அல்லா இஸ்லாமியரின் கடவுள்..  இந்த இரண்டும் சேர்ந்து உயரத்தில் இருக்கும் கடவுளின் இருப்பிடம் என்ற பெயர் இதற்கு வந்ததாம்.

 

ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற மற்ற தொன்மையான நகரங்களைப் போன்று ராமல்லாவும் தொன்மை வாய்ந்த நகரம்.  இது பல ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தபோது பெரிய நிலச்சுவான்தார்கள் நிறைய கட்டடங்கள் கட்டினர்; 1936-இல் இந்த ஊருக்கு மின்சாரம் வந்தது.  மொத்தத்தில் இந்த ஊர் வளமடைந்தது.  பி.பி.சி. ஒரு வானொலி நிலையத்தைத் துவக்கியது.  1947-இல் ஐ.நா. பாலஸ்தீனத்தைப் பிரித்தபோது வெஸ்ட் பேங்கில் இருக்கும் இது பாலஸ்தீனர்களுக்காக ஒதுக்கப்பட்டது.  1948 போருக்குப் பிறகு இது ஜோர்டனுக்குக் கீழ் வந்தது.  ஜோர்டன் அரசு சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளுக்கு இங்கு வசித்த பாலஸ்தீனர்கள் போய்வர சுதந்திரம் அளித்தது.

 

1967-இல் நடந்த போருக்குப் பிறகு இது இஸ்ரேலின் கீழ் வந்தது.  இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் பிடித்துக்கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  போர் முடிந்ததும் இஸ்ரேல் இங்கு வசித்த மக்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு எடுத்தது.  அங்கு வசிக்கும் எல்லோருக்கும் இஸ்ரேலுக்குள் வருவதற்கும் அங்கு வேலைபார்ப்பதற்கும் ஒரு அனுமதி அட்டை வழங்கியது.  அப்போது வெளிநாட்டில் இருந்தவர்கள் அந்த அட்டையைப் பெற முடியாமல் போனது.  அவர்கள் ராமல்லாவில் வசிக்கும் உரிமையை இழந்தனர்.   இஸ்ரேல் ராமல்லா உட்பட தான் பிடித்துக்கொண்ட வெஸ்ட் பேங்க் இடங்களில் பல கெடுபிடிகளைக் கையாண்டது.  ராமல்லாவைச் சுற்றிப் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே உபயோகிக்கக் கூடிய சாலைகளை அமைத்தது.  இதனால் ராமல்லா ஜெருசலேமிலிருந்து துண்டிக்கப்பட்டது.  ராமல்லாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமிற்குப் போவதற்கு இஸ்ரேல் அமைத்திருக்கும் சோதனைச் சாவடிகளைத் தாண்டித்தான் போக வேண்டும்.  இந்தச் சோதனைச் சாவடிகளில் இருக்கும் (stationed) இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் ராமல்லாவாசிகளுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

 

1964-இல் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) தோன்றியது.  1969-இல் இதன் தலைவராக யாசர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இஸ்ரேலியர்களுக்கு எதிராக வெஸ்ட் பேங்கில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் செய்த வன்முறைச் செயல்களை இவர் தடுக்கவில்லை என்பதால் இவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேலும் இஸ்ரேலை ஆதரித்துவந்த அமெரிக்காவும் என்று அழைத்தன.  பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கையோடு  இஸ்ரேல் என்ற நாடு இருக்கக் கூடாது என்று அராபத் கூறிவந்தார்.  ஆனால் இந்தக் கொள்கையிலிருந்து மாறி 1992-இல் நார்வே அதிகாரிகள் செய்த முதற்சிகளின் மூலம் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டார்.  இஸ்ரேலும் பாலஸ்தீன நாடு உருவாவதை ஒப்புக்கொண்டது.  1993-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தானது.  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் தனி நாடாக இயங்கும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் தான் பிடித்துக்கொண்ட இடங்களிலிருந்து வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஜெருசலேமின் எதிர்காலம், இஸ்ரேலிலிருந்து வெஸ்ட் பேங்கிற்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த அகதிகள், வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் அமைத்த குடியிருப்புகள் ஆகியவை பற்றிய விபரங்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை.  பாலஸ்தீன தேசிய அத்தாரிட்டி (Palestinian National Authority) உருவாக்கப்பட்டு ராமல்லா வளர்ச்சி அடையத் தொடங்கியது.

 

ஆஸ்லோ ஒப்பந்தத்தின் காரணகர்த்தாக்களுள் ஒருவரான இஸ்ரேல் பிரதம மந்திரி யிட்சக் ராபின் (Yitzhak Robin) தீவிரவாத யூதன் ஒருவனால் கொலைசெய்யப்பட்டர்.  அதன் பிறகு 1996–இல் பதவிக்கு வந்த நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  2001-இல் பதவிக்கு வந்த ஏரியல் ஷேரன் காலத்தில் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்க இஸ்ரேலையும் பாலஸ்தீனப் பகுதிகளையும் பிரிக்க பிரமாண்டமான சுவரை 2002-இல் கட்ட ஆரம்பித்தார்.   ராமல்லா இருக்கும் பகுதியிலும் இந்தச் சுவர் செல்கிறது.

 

இந்த ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக எங்களை ஏற்றிச் சென்ற வேன் சென்றது.  பல இடங்களையும் காட்டிவிட்டுக் கடைசியாக பேருந்து நிலையத்தில் எங்களை விட்டுச் சென்றனர்.  வழியில் யாசர் அராபத்தின் (இவர் 2004-இல் பாரீஸில் இறந்தார்) கல்லறை இருந்தது.  அது பல இடிபாடுகளுடன் காணப்பட்டது.  பயண வழிகாட்டி ‘அராபத் இறந்த பிறகும் ஏமாற்றப்பட்டர்’ என்று கல்லறை சரியாகக் கட்டப்படாததைச் சுட்டி காட்டினார்.  (பாரீஸில் அவரை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சமீபத்தில் அவர் கல்லறையிலிருந்து அவர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.)

 

முதலில் கூறியபடியே எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயண வழிகாட்டி சென்றுவிட்டார்.  நம் நாட்டு பேருந்துகள் போல்தான் கூட்டம் அங்கு வழிந்துகொண்டிருந்தது.  108-ஆம் எண் பேருந்துகள் எல்லாவற்றிலும் எங்களைக் கட்டணம் எதுவும் இல்லாமல் ஏற்றிக்கொள்வார்கள் என்றும் நேரே ஜெருசலேமிற்கு வந்துவிடலாம் என்றும் பயண வழிகாட்டி கூறியிருந்தார்.  ஜெருசலேமிற்கும் ராமல்லாவிற்கும் இடையே உள்ள தூரம் பத்து மைல்களுக்கும் குறைவு.  தடுப்புச் சுவர் இருப்பதால் அதைச் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதால் இருபது மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது.

 

108-ஆம் எண் பேருந்துகள் வந்த வண்ணமாக இருந்தன.  அதில் ஒன்றில் ஏறி நாங்கள் ஜெருசலேமை நோக்கிப் பயணம் செய்தோம்.  வழியில் இஸ்ரேலின் சோதனைச் சாவடி ஒன்று இருந்தது.  அங்கு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள்.  திடீரென்று இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவர் – ஒரு ஆணும் பெண்ணும் – பேருந்திற்குள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஏறினர்.  (இஸ்ரேலில் இளவயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை உண்டு.  யூதர்களுடைய வேத புத்தகமான தோராவை (Torah) ஓதும் சநாதன யூதர்களுக்கும் (Orthodox Jews) இஸ்ரேலில் வாழும் அரபு இஸ்ரேலியர்களுக்கும் இதிலிருந்து விலக்கு உண்டு.  அரேபியர்களை இஸ்ரேல் அரசு நம்புவதில்லை.  அதனால் அவர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. வேதம் ஓதுவதால் சநாதன யூதர்களுக்கு விலக்கு உண்டு.  ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.)

 

எல்லோருடைய பாஸ்போர்ட்டுகளையும் பரிசோதித்துவிட்டு இளைஞர்கள் அனைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.  அப்படி அழைத்துச் சென்றவர்களில் எங்கள் மகள்கள் இருவரும் சேர்த்தி.  இதை எதிர்பார்க்காத நான் கொஞ்சம் வெலவெலத்துப் போய் படைவீரர்களிடம் ஏதோ கேட்கப் போனேன்.  ஆனால் அவர்கள் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எல்லோரையும் பேருந்தை விட்டுக் கீழே இறங்கச் சொல்லி சாலையின் ஓரத்திலிருந்த சோதனைச் சாவடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.  அதன் பிறகு இருபது நிமிடங்கள் கடந்தன.  உள்ளே சென்ற சிலர் சிறிது நேரத்தில் வெளியே வந்தனர்.  ஆனால் எங்கள் மகள்கள் வரவில்லை.  அதுவரை பேருந்தை நிறுத்தியிருந்த ஓட்டுநர் பேருந்தை மறுபடி ஓட்டத் தொடங்கினான்.  எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  மகள்கள் வராமல் போக வேண்டாம் என்று முடிவுசெய்து நாங்களும் பேருந்தை விட்டு இறங்கினோம்.  சோதனைச் சாவடிக் கட்டடத்திற்கு முன்னால் நின்றுகொண்டு எங்கள் மகள்கள் வருகிறார்களா என்று வாயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  சிறிது நேரத்தில் இன்னொரு 108-எண் பேருந்து வந்தது.  அதிலிருந்தவர்களில் சிலரையும் படைவீரர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அவ்வப்போது சிலர் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.  இதுவரை எங்கள் மகள்கள் வெளியே வராததால் எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது.  இரண்டாவதாக வந்த பேருந்து ஓட்டுநரை அணுகி அவர் பேருந்திலிருந்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டோம்.  அவர் தன் பேருந்தில் வந்தவர்கள் சிலர் இன்னும் உள்ளே இருப்பதாகவும் முதல் பேருந்தில் (அதாவது நாங்கள் வந்த பேருந்து) இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார்.  எங்களுக்கு ஒரே அதிர்ச்சி ஆகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியாமல் கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த படைவீரர்களை அணுகினோம்.  (இவர்கள் கைகளிலும் துப்பாக்கி.)  அவர்கள் உள்ளே சென்று விபரம் அறிந்து வருவதாகக் கூறினர்.  உள்ளே சென்ற பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவர்கள் எங்கள் மகள்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள் என்றும் சிறிது நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினர்.  மிகவும் கலவரப்பட்டுப் போயிருந்த எங்கள் முகங்களைப் பார்த்ததனாலோ என்னவோ இரண்டு சிறிய நாற்காலிகளைக் கொண்டுவந்து எங்களை அவற்றில் அமரச் சொன்னார்கள்.  கட்டடங்களுக்கு வெளியே – சாலையின் ஓரத்தில் – பதைபதைத்துக்கொண்டு – குறிப்பாக நான் – உட்கார்ந்திருந்தோம்.  அதன்பிறகும் மகள்கள் வெளியே வர கால் மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  அதிலும் பெரிய மகள் வந்து பத்து நிமிஷங்களுக்குப் பிறகுதான் சிறிய மகள் வெளியே வந்தாள்.  சில நிமிஷங்கள் கழித்து வந்த ஒரு 108-எண் பேருந்தில் ஜெருசலேம் நோக்கிப் பயணித்தோம்.  இந்தச் சோதனையும் அவதியும் பாலஸ்தீனர்களுக்கு தினசரி அனுபவம்.  ஏன் நாங்களாகத் திரும்பி வர வேண்டும் என்று சொன்னார்கள் என்பது புரிந்தது.

 

பெத்லஹேம், ராமல்லா படங்களைக் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

 

 படங்களைக் காண கீழே சொடுக்குங்கள்

 

https://picasaweb.google.com/108173580006522327175/BethlehemAndRamallah?authkey=Gv1sRgCLjJ_cGU3dmz9gE

http://www.vallamai.com/?p=32291

 

DSC00546.JPG

Ramallah seemed like a prosperous town, which was unexpected.  It is the capital of the Palestinian Territories, so the center of commerce for that region.

 

 

DSC00512.JPG

Bethlehem is a thriving Arab town today.  Here is Manger Square.  One side is the Church of the Nativity.

 

DSC00528.JPG

The shortest route from Bethlehem to Ramallah is through Jerusalem.  But because of the Wall travellers have to take a longer route to go from Bethhelem to Ramallah (or back) to travel without going through checkpoints (which many Arabs are not allowed to cross).  This is an annoyance and hardship for residents traveling for business or pleasure.

 

http://www.vallamai.com/?p=32291

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – 10

 

DSC00645.jpg

 

நாங்கள் கடைசியாக இஸ்ரேலில் பார்த்த இடம் மசாடா (Masada).  இங்கு போவதற்குச் சொந்தமாக டாக்சி வைத்திருக்கும் ஒரு பயண வழிகாட்டி கிடைத்தார்.  பிழைப்புக்காக இவர் இந்தத் தொழிலைச் செய்யவில்லை.  கொஞ்சம் வருமானம் வருகிறது என்பதோடு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்து வருகிறார்.  அமெரிக்காவில் எங்கள் யூத நண்பர் ஒருவரின் நண்பர் மூலம் இவருடைய முகவரி கிடைத்தது.  இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தனர்.  எங்கள் நண்பரின் நண்பரும் அவர் மனைவியும் இப்படி இஸ்ரேலுக்கு அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.  இவர் மனைவி ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்.  இவர்களிடமிருந்து பயண வழிகாட்டியின் முகவரியைப் பெற்றுக்கொண்டதும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.  மிகவும் வெக்கையான இடம், நிறையத் தண்ணீர் கொண்டுவாருங்கள், உடன் தலையை நன்றாக மூடிக்கொள்ள ஒரு தொப்பியையும் கொண்டுவாருங்கள் என்று முதலிலேயே எங்களை எச்சரித்தார்.  சென்னை வெயிலுக்குப் பழகிப் போயிருந்த எங்களுக்கு அப்படி என்ன வெயில் இருந்துவிடப் போகிறது என்று நினைத்தோம்.  அங்கு காரில் போகும்போதும் அந்த இடத்தை அடைந்த பிறகும் இருந்த வெக்கையைப் பார்த்த பிறகுதான் அவர் சொன்னது எவ்வளவு சரி என்று தோன்றியது.  வழி நெடுக பாலைவனப் பிரதேச மணல் குன்றுகளும் ஆங்காங்கே பேரீச்சம்பழத் தோட்டங்களும் இருக்கின்றன.  ஜெருசலேம் நகரிலிருந்து 30 மைல் தொலைவில் இருக்கும் மசாடாவிற்குச் செல்லும் சாலை நேர்த்தியாக இருக்கிறது.  வழியில் எந்த விதமான கட்டடங்களும் இல்லை.  ஒரே மணல் காடாகக் காட்சியளிக்கிறது.

பாலஸ்தீனம் முழுவதும் சிறிய குன்றுகளும் சமவெளிகளும் நிறைந்து காணப்படுகிறது.  அதற்கு மேல் பாலைவனப் பிரதேசம் மிகுதியாக இருக்கிறது.  மத்திய தரைக் கடலை நோக்கிச் செல்லும்போதுதான் சமவெளிப் பிரதேசம் இருக்கிறது.  மசாடா, இஸ்ரேலின் தென்கிழக்குக் கோடியில் உள்ள ஜுடாயா (Judean) பாலைவனப் பகுதியில் இருக்கிறது.  இதற்குப் பக்கத்தில் இருக்கும் உயிரற்ற கடலின் (Dead Sea, இதற்கு ‘சாக்கடல்’ என்றும் பெயர்) மட்டத்திலிருந்து மசாடா 1,300 அடி உயரத்தில் இருக்கிறது.  இதை ஊர் என்பதை விட பெரிய குன்றின் மேல் உள்ள சமதளப் பகுதியில் கட்டப்பட்ட, மதில் சுவரால் சூழப்பட்ட அரண் என்று கூறலாம்.  இதற்குள் மூன்று அரண்மனைகள், யூதர்களின் கோயிலான சினகாக் ஒன்று, பல வீடுகள், சிப்பாய்களின் குடியிருப்புகள், தானியக் கிடங்குகள், தண்ணீரைச் சேமித்து வைக்கப் பெரிய தொட்டிகள், பொது மற்றும் தனிப்பட்டவர்களின் குளியல் அறைகள் என்று அக்காலத்திய பொறியியல் விநோதங்கள் பல இருக்கின்றன.

DSC00675.jpg

மசாடா 2001-இல் ஐ.நா.வின் உலகப் பாரம்பரிய இடங்களில் (UN World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மசாடா என்றால் ஹீப்ரு மொழியில் கோட்டை என்று அர்த்தமாம்.  இது கி.மு. இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலேயே கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.  கி.மு. 42 – 4 வரை யூத மன்னனாக விளங்கிய ஹெராட் (Herod) (இவன் ரோமானிய அரசர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தவன்) ஒரு வேளை தன் பதவிக்குப் பங்கம் வந்தால் தான் அதில்  தங்கிக்கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக இதை விரிவுபடுத்திக் கட்டினானாம்.  ஆனால் அதை உபயோகிக்கும் தேவை ஹெராட் மன்னனுக்கு ஏற்படவில்லை.

ஹெராட் இறந்ததும் மசாடா ரோமானியர்களின் வசம் சிக்கியது.  கி.பி. 66-இல் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்துப் போராடி மறுபடி இதைத் தங்கள் வசமாக்கிக்கொண்டனர்.  ஆனால் கி.பி. 70-இல் தங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்களை ரோமானிய அரசன் நசுக்கி ஜெருசலேமில் இருந்த அவர்களின் இரண்டாவது கோவிலையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்.  (அதன் வெளிச் சுவர் ஒன்று மட்டும் இப்போது இருக்கிறது.  இது இஸ்ரேலியர்களின் புனித இடங்களில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.)  ஜெருசலேமை இழந்த பிறகு பல யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  ஆனால் ரோமானியர்களை எதிர்த்தே தீருவது என்று முடிவுசெய்து 960 யூதர்கள் மட்டும் – இவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் சேர்ந்து – ரோமானியர்களிடமிருந்து தப்பிக்கத் தங்கள் வசமிருந்த மசாடாவிற்குப் போய்த் தங்கினர்.  அங்கு இரண்டு வருடங்கள் தங்கி ரோமானியர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.  கி.பி. 73-இல் ஃப்ளேவியஸ் சில்வா (Flavius Silva) என்னும் ரோமானிய படைத் தளபதி மசாடாவை முற்றுகையிட்டான்.  மலையின் அடிவாரத்தில் 10,000 ஆட்களைக் கொண்ட படையைத் தங்கச் செய்து மலைக்கு மேல் செல்வதற்கு படிகளைக் கொண்ட சாய்தளத்தைக் (ramp) கட்டினான்.  இந்தப் படை கோட்டையைச் சூழ்ந்துகொண்டு கோட்டைக்குள் இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் செய்தது.  கடைசியாகச் சுவர்களைத் தகர்க்கும் இயந்திரங்களை இந்தச் சாய்தளம் மூலம் மேலே கொண்டுசென்று கோட்டையை ரோமானியப் படை தகர்த்தது.  இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அறிந்த யூதர்கள் ரோமானியர்களிடம் சிக்குவதற்குப் பதிலாக உயிரை இழப்பதே மேல் என்று முடிவுசெய்து எல்லோரும் இறந்துவிடுவது என்று முடிவுசெய்தார்களாம்.  யார் யாரைக் கொல்ல வேண்டும் என்று சீட்டுப்போட்டு எடுத்தார்களாம்.  முதலில் பத்துப் பேர் மற்றவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் பின் அந்தப் பத்துப் பேரை யார் கொல்ல வேண்டும் என்றும் முடிவுசெய்தார்களாம்.  இதற்குரிய சான்றுகளை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் எப்படியோ தப்பித்தார்களாம்.  மசாடா கோட்டைதான் பாலஸ்தீனத்தில் யூதர்களின் கடைசி இடமாக விளங்கியது.

DSC00672.jpg

மசாடா ஒரு செங்குத்தான குன்று.  இதன் மேல்தளம் சமதளமாக இருக்கிறது.  அதன் விஸ்தீரணம் இருபது ஏக்கர்.  இந்தக் கோட்டைக்கு இரண்டு சுற்றுச் சுவர்கள் உண்டு.  வெளிச்சுவரின் நீளம் 1,400 மீட்டர்.  இதற்கு இணையாக இதற்கு உள்புறம் இன்னொரு சுவர் இருக்கிறது.  இவை இரண்டும் எளிதில் தகர்க்க முடியாதவை.  வெளிச் சுவரின் அகலம் 1.5 மீட்டர்; உயரம் நான்கு முதல் ஐந்து மீட்டர்.  உள்சுவரின் அகலம் ஒரு மீட்டர்.  இரண்டு சுவர்களுக்கும் இடையேயுள்ள நான்கு மீட்டர் இடம் 110 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.   இந்த அறைகளுக்குள்ளே நுழைய வடக்குப் புறமாக வாசல் அமைக்கப்ப்பட்டிருக்கிறது.  மசாடா முழுவதும் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலும் இங்குள்ள சீதோஷ்ணநிலை மிகவும் ஈரச்சத்தில்லாமல் வெப்பமாக இருப்பதாலும் பல நூற்றாண்டுகளாக இவை அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.  வெளிச்சுவரில் 37 கோபுரங்கள் இருக்கின்றன.  இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 35-90 மீட்டர் இடைவெளி இருக்கிறது.  இந்தக் கோபுரங்களில் ஏறுவதற்கு உள்ளேயே படிகள் கொண்ட சாய்தளம் இருக்கிறது.  இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள அறைகளின் மேலே கூரை வேயப்பட்டிருக்கிறது.  இந்தக் கூரைகள் மரக்கட்டைகளாலும் அவற்றிற்கு குறுக்கே செங்கோணத்தில் (right angle) அமைக்கப்பட்டிருக்கும் நாணல்களாலும் கட்டப்பட்டிருக்கின்றன.  இதற்கு மேலே பின்னப்பட்ட பாய்களை வைத்துக் கூரையை மூடியிருக்கிறார்கள்.  இந்தக் கூரைகள் மிகவும் பலமாக இருந்ததால் வீரர்கள் இதன் மீது நடக்கவும் கனமான பொருட்களை வைத்துக்கொள்ளவும் வசதியாக இருந்திருக்க வேண்டும்.  மலை மீது ஏறிவந்த எதிரிகளின் மீது வீரர்கள் எறிந்த கற்கள் இடிபாடுகளுக்கிடையே கிடைத்திருக்கின்றன.  சுவர்களுக்கு இடையே இருந்த அறைகள் வீரர்கள் தங்கிகொள்வதற்காகக் கட்டப்பட்டவை.  ஆனால் ஹெராட் காலத்தில் இந்த அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை.  ரோமானியரை எதிர்த்துப் போராடிய யூதர்கள் காலத்தில் அவர்கள் இந்த அறைகளில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  அவர்கள் உபயோகித்த அடுப்புகள், பாத்திரங்கள் இன்னும் இருக்கின்றன.

அரணிற்கு உள்ளே மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  அரண்மனைகளுக்கு அருகே உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன.  முதலில் ஒரு அறை,  பின் முற்றம், அதற்குப் பின் அறைகள் இருக்கின்றன.  இவற்றின் சுவர்களில் சுவர்ச் சித்திரங்கள் காணப்படுகின்றன.  தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவற்றை மூடியிருந்த மண் அகற்றப்பட்டதால் சில சித்திரங்கள் மங்க ஆரம்பித்தனவாம்.  அவற்றை ஜெருசலேமிற்கு எடுத்துச் சென்று புதுப்பித்து மறுபடி அதே இடங்களிலேயே பொருத்தினார்களாம்.  மசாடாவில் உள்ள கட்டடங்கள் யாவும் அந்தக் கால கட்டடக்கலையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

DSC00392.jpg

பல காலம் தங்குவதற்குத் தேவையான வசதிகள் கோட்டைக்குள் இருந்தனவாம்.  மழைத் தண்ணீர் ஒரு இடத்தில் சேர்ந்து பின் தொட்டிகளில் சேர்வதற்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள்.  அங்கு வருஷம் முழுவதும் பெய்த மழையின் அளவு 22 செண்டி மீட்டர்கள்தான்.  வடக்குப் பகுதியில் இருக்கு அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள இடம் மிகவும் செழிப்பானதாம்.  இந்த இடத்தை மற்ற எந்தக் காரியத்திற்காகவும் உபயோகித்ததாகத் தெரியவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலேயே அவர்கள் அங்கு தங்க நேர்ந்திருந்தாலும் இந்த இடத்தில் விளைந்ததை வைத்து சமாளித்திருப்பார்களாம்.  மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  ஹெராட் தங்குவதற்கான அரண்மனை, விருந்தினர்களை வரவேற்கும் இடம், சிப்பாய்கள் தங்கும் விடுதிகள், விசாலமான குளியல் அறைகள், பொழுதுபோக்கிற்கான இடம் என்று இன்று இடிபாடுகளாகக் காணப்படும் இடங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

மலைக்கு மேல் செல்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.  முதலாவது முதல் முதலாக யூதர்கள் கட்டிய ‘பாம்புப் பாதை’.  இது மிகவும் செங்குத்தாக இருக்கிறது.  இதை யாரும் இப்போது உபயோகிப்பதில்லை.  இரண்டாவதாக ரோமானியர்கள் கட்டிய படிகளைக் கொண்ட சாய்தளப் பாதை.  மலைக்கு மேல் போவதற்கு இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.  படிகளில் ஏறிச் செல்வதற்கு மலைக்காதவர்கள் இதில் செல்லலாம்.  அதிக தூரம் ஏற முடியாதவர்களுக்கு ‘கேபிள் கார்’ வசதி இருக்கிறது.  மலையடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை மூலம் நேரே மலை உச்சிக்குப் போய்விடலாம்.  மலைக்கு மேலே இருக்கும் இந்த அரண் முழுவதும் சமதளத்தில் இருக்கிறது.  கேபிள் காரிலிருந்து இறங்கியவுடன் நேரே அரணின் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்லலாம்.

மசாடா பாலஸ்தீனத்தின் ஒரு கோடியில் இருப்பதாலும் இங்கு யாரும் வரவில்லையாதலாலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பாழடைந்து போயிருந்த கோட்டையை இஸ்ரேலிய அரசு தேவையான இடங்களில் புதுப்பித்திருக்கிறது.  1965-இல் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது.  இப்போது முன்னால் எப்படி இருந்தது என்று கற்பனை செய்து புதுப்பித்திருகிறார்கள்.

ஜோஸபஸ் ஃப்ளேவியஸ் (Josephus Flavius) என்னும் வரலாற்று ஆசிரியர் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து மசாடாவில் தங்கிப் போர்புரிந்ததை யூதர்களின் யுத்தம் (The Jewish war) என்ற தன் நூலில் எழுதியிருக்கிறார்.  இவர் யூதராகப் பிறந்தவர்.  யூதர்கள் ரோமானியரை எதிர்த்ததைத் தடுத்து நிறுத்த முயன்றார்; ஆனால் முடியவில்லை.  பின்னர் யூதர்களின் சார்பில் சண்டையிட்டு ரோமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பின்னால விடுவிக்கப்பட்டார்.  யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே தூது போய்க்கொண்டும் இருந்திருக்கிறார்.  கடைசியாக ரோமானியர் பக்கம் சேர்ந்து ரோமானியக் குடிமகன் ஆனார்.  ரோமானிய அரசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த யுத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

பயணிகளுக்கு வசதியாக மலைக்கு மேலேயே இப்போது குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.  களைப்படையும் பயணிகள் ஓய்வு எடுக்க நிழல் தரும் இடமும் கல்லினால் செய்யப்பட்ட பெஞ்சுகளும் இருக்கின்றன.  இத்தனை வசதிகள் இருந்தும் அங்கு அடிக்கும் வெயில் யாரையும் அசத்திவிடும்.  தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.  வெயிலிலிருந்து காத்துக்கொள்ள தலையில் தொப்பியையும் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும்.

மசாடா யூதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சின்னமாக இப்போது விளங்குகிறது.  இஸ்ரேலியப் பள்ளிக் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக  இந்தக் கோட்டையைக் காட்டுவார்களாம்.  இஸ்ரேலியப் படைகள் தங்கள் பயிற்சிகளை முடித்த பிறகு இங்கு வந்து ‘மசாடா இனி ஒரு போதும் வீழ்ச்சி அடையாது’ (‘Masada shall not fall again’) என்று சூளுரைப்பார்களாம்.

மசாடாவிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் உயிரற்ற கடலைப் பார்க்கச் சென்றோம்.  இதன் நீர் மிகவும் உப்பாக இருப்பதால் இதில் உயிரினங்கள் எதுவும் இல்லை.  இந்தக் கடல் நீருக்கும் மண்ணிற்கும் நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.  இதனால் இதன் அருகில் உடல் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் கொண்ட ஓட்டல்கள் இருக்கின்றன.  இது ஒரு சிறிய ஏரியின் அளவுதான் இருக்கும்.  ஆனாலும் நீர் உவர்ப்பாக இருப்பதால் கடல் என்று அழைக்கிறார்கள்.  இதன் ஒரு பகுதி ஜோர்டான் நாட்டிலும் ஒரு பகுதி இஸ்ரேலிலும் இருக்கிறது.  இதன் நீளம் தெற்கு வடக்காக 47 மைல்கள்தான்; அகலம் 10 மைல்கள்.  இது கடல் மட்டத்திற்குக் கீழே 1300 அடியில் இருக்கிறது.  இதுதான் உலகிலேயே தாழ்ந்த இடம் என்கிறார்கள்.  ஜோர்டன் நதிதான் இதில் கலக்கிறது.  இப்போது ஜோர்டன் நதியின் நீரின் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் இந்தக் கடலின் நீர் மட்டம் குறைந்துகொண்டே போகிறதாம்.

DSC00651.jpg

இந்தக் கடல் பற்றிய விளம்பரங்களில் ‘இதில் மூழ்கவே முடியாது.  அப்படியே மிதந்துகொண்டே இருக்கலாம்.  இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு’ என்று போட்டிருக்கிறார்கள்.  அந்த இடம் மிகவும் வெக்கையாக இருப்பதால் கடல் நீர் மிகவும் சூடாக இருக்கிறது.  கரையில் உள்ள மணலில் கால் வைக்கவே முடியவில்லை.  அப்படி ஒரு சூடு.  சிலர் தண்ணீரின் மேலே மிதந்துகொண்டிருந்தார்கள்.  கடலின் கரைக்கு அருகிலேயே உப்பற்ற குளிர்ந்த நீர், குழாய்கள் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கடலில் மிதந்துவிட்டு இவற்றில் நீராடிவிட்டு வரலாம்.  கடலுக்குப் பக்கத்திலேயே உல்லாசப் பயணிகளுக்கு வசதியாக உணவகங்கள் இருக்கின்றன.

DSC00434.jpg

இதையடுத்து நாங்கள் பார்க்கச் சென்றது உயிரற்ற கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் (Qumran) என்னும் குகைகள் அடங்கிய இடம்.  கி.மு. 150-க்கும் கி.பி. 68-க்கும் இடையில் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தங்களுடைய கடவுளின் தூதர் வருவார் என்று எதிர்பார்த்து மற்றவர்களிடமிருந்து தனித்து எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தூதரை வரவேற்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  1948-இல் பெடுயின் (Bedouin) என்னும் ஆடு மேய்க்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தற்செயலாக இந்தக் குகைகளுக்குள் ஒன்றில் காணாமல் போய்விட்ட தன் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடிச் சென்றிருக்கிறான்.  அங்கு தாழிகளுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த சுவடிகளைக் கண்டிருக்கிறான்.  இந்தச் சுவடிகள் கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட யூதர்களின் வேத புத்தகமான தோராக்களின் (Torah) விளக்கங்கள்.  இவை கண்டுபிடிக்கப்பட்டதும் முதலில் இவை கிறிஸ்துவ சமயத்தின் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்று கிறிஸ்துவர்கள் பயந்தார்களாம்.  ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. முன்பே கூறியபடி, இந்தச் சுவடிகள் இப்போது மிகவும் பத்திரமாக இஸ்ரேல் மியுசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

(தொடரும்)

 

 

மசாடாவின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/MasadaQumranAndDeadSea?authkey=Gv1sRgCJL_nIiBia7v1AE

DSC00647.JPG

Desert landscape on our way to Masada.  Right outside Jerusalem the landscape became a complete desert - not a single tree or plant was in sight.

 

DSC00648.JPG

The cliffs are crumbly to the touch.

 

DSC00428.JPG

On the road back to Jerusalem.

 

DSC00394.JPG

A close view of one of the camps.  The camps have survived from 73 CE till now.  The camps together constitute the most complete surviving ancient Roman siege system in the world.

 

DSC00391.JPG

View of two of the eight Roman camps built to house Roman soldiers during the three year siege.  The squares are the camps.  We are looking down from Masada to see the camps.

http://www.vallamai.com/?p=33067

Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் – 11

 

இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம்.  அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது.  எடுத்த எடுப்பிலேயே அவர்கள் இஸ்ரேலின் இரகசிய உளவுப் படையான மோசாடில் (Mossad) கூட சேர்ந்து பணிபுரியலாம்.  வளம் நிறைந்த அமெரிக்காவிலிருந்து கூட பல யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர்.  1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் 3000 ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புண்ணிய பூமியில் தங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உருவாகியிருக்கிறது, அங்கு சென்று வாழ்க்கையைக் கழித்தால்தான் சொர்க்கத்தை அடையலாம் என்று எண்ணிப் பல யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்திருக்கின்றனர்.  இப்போதும் இங்கேயே முழுவதுமாகக் குடிபெயரவில்லை என்றாலும் வருடத்தில் சில நாட்களாவது இங்கு வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று பல அமெரிக்க யூதர்கள் நினைக்கிறார்கள். 

 
ஆனால் அதே சமயம் பாலஸ்தீன அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி பதின்மூன்று நூற்றாண்டுகளாக இங்கேயே வசித்துவருகிறார்கள்.  இதற்கு முன்னால் இவர்கள் பழங்குடி மக்களாக இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.  இந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் வசிக்க எல்லாத் தொல்லைகளையும் இஸ்ரேல் அரசு கொடுத்து வருகிறது.  இப்படித் தொந்தரவுகள் கொடுப்பதால் அவர்களாக வெளியேறினால் நல்லது.  இல்லயென்றால் அவர்களை எப்படியாவது வெளியேற்றிவிடவும் பல திட்டங்களை வைத்திருக்கிறது.
 
எங்களை புராதன நகருக்குள் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  இவர் மூன்று வருடங்கள் படிப்பதற்காக பெல்ஜியத்திற்குச் சென்றிருந்தாராம்.  திரும்பி வந்தபோது இஸ்ரேல் அரசு இவர் நாட்டிற்குள் வருவதற்குப் பல தடைகள் விதித்ததாம்.  சில ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்துவிடுவார்களாம்.  தன்னுடைய குடியுரிமையைப் பெறுவதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம்.  (இவருக்கு யூத இனத்தைச் சேர்ந்த காதல் தோழி இருக்கிறாள்.  ஆனால் சாதாரணமாக இப்படி இருப்பதைப் பார்க்க முடியாது.)
 
எங்களை பெத்லஹேமுக்கும் ராமல்லாவுக்கும் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டியின் மனைவியும் குழந்தைகளும் கனடாவில் இருக்கிறார்கள்.  வருடம் ஒரு முறை அவர்கள் இங்கு வருகிறார்கள்.  அவர் இருப்பது வெஸ்ட் பேங்கில்.  அங்கிருப்பவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை வேண்டும்.  எந்த இடத்திலும் வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முடியாதபடி இஸ்ரேல் அரசு மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பியிருக்கிறது.  சில இடங்களில் இதைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேல் அரசு அமைத்துள்ள சோதனைச் சாவடிகளின் மூலம்தான் வர வேண்டும்.  இப்படி இவர்களுக்குத் தடைகள் இருப்பதால் இவர் குடும்பம் கனடாவிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறது.
 
நாங்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து (இஸ்ரேல் உருவாவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.  இவரின் பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைத்திருக்கிறார்கள்.) ஜோர்டன் தலைநகரான அம்மான் வந்துசேர்ந்தோம்.  ஜெருசலேமிற்கும் அம்மானுக்கும் இடையே உள்ள தூரம் நாற்பத்தைந்து மைல்கள்தான்.  ஆனால் அந்த தூரத்தைக் கடக்க ஜெருசலேமில் சர்வதேச விமானப் போக்குவரத்து இல்லை.  பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும்.  பேருந்தில் பயணம் செய்தால் இஸ்ரேலிய-ஜோர்டன் எல்லையில் இஸ்ரேலிய அரசு நடத்தும் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றார்கள்.  பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.  அதனால் டெல் அவிவிலிருந்து விமானம் மூலமே இஸ்ரேலை விட்டுக் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தோம்.  விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான்.  ஆனால் கட்டணம் எவ்வளவு தெரியுமா?  அறுநூறு அமெரிக்க டாலர்கள்.  அடிக்கடி ஒரே கம்பெனியில் விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு.  என் மகளுக்கிருந்த அந்தச் சலுகையைப் பயன்படுத்தி எங்களுக்கு அந்தப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தாள்.
 
எங்களை அன்று ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒரு அரேபியர்.  இளவயதினர்.  சொந்தமாக டாக்சி வைத்திருக்கிறார்.  அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு டெல் அவிவ் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் இஸ்ரேல் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் டாக்சியை நிறுத்தினார்.  எல்லா போலீஸார் கையிலும் நீண்ட துப்பாக்கி.  இவர் கையிலும் ஒன்று இருந்தது.  எங்கள் டாக்சி அருகே வந்து உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார்.  எங்கள் சூட்கேசுகளைத் திறக்கச் சொன்னார்.  எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, டிரைவரை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றார்.  அதற்கு முன்பே அவருக்கு அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்.  அவரைத் தனியாக அங்கு பக்கத்தில் இருந்த அவர்களுடைய அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்று பல கேள்விகள் கேட்டுவிட்டுப் பின் அனுப்பிவைத்தனர்.  அந்த டிரைவருக்கு இப்படி அவர்கள் தன்னை நடத்தியதைக் கண்டு அப்படி ஒரு எரிச்சல்.  ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ‘உனக்கு நான் அடிமை இல்லை’ என்ற பாவத்தில் முகத்தை வைத்துக்கொண்டார்.  அதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  இவர் பல தலைமுறைகளாக ஜெருசலேமில் வாழ்ந்து வருகிறாராம்.  இவரைப் போன்றவர்கள் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இரண்டாம் பட்ச குடிமக்களாகி இருக்கின்றனர்.
 
இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் ஒரே வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் இல்லையாம்.  யூதர்களுக்கு அதிகமாகவும் அரேபியர்களுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படுகிறதாம்.  பயண வழிகாட்டி எங்களை ராமல்லாவுக்கு அழைத்துச் சென்றபோது இஸ்ரேல் அரசால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அரேபியர்களின் வீடுகளையும் காட்டினார்.  அரேபியர்களுக்குத் தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதால் அவர்களின் வீடுகளின் கூரைகளில் தண்ணீரைச் சேமித்துவைத்துக்கொள்ள பெரிய தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள்.  ஆனால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளில் அப்படி தொட்டிகள் எதுவும் இல்லை.  அவர்களுக்குத் தினமும் தண்ணீர் சப்ளை இருக்கிறதாம்.  அதனால் இவர்கள் வீடுகளுக்கு முன்னால் செழிப்பான புல்வெளிகள் இருக்கின்றன.
 
பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான – ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட – இடங்களைப் பிடித்துக்கொண்டு அங்கு யூதர்களை இஸ்ரேலிய அரசு குடியேற்றியிருக்கிறது.  இது 1967–லிருந்து –  அதாவது இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டதிலிருந்து – தொடர்ந்து வருகிறது.  இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் அரேபியர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கிறார்கள்.  ஒரு முறை பெடுயின் (Bedouin) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்களாம்.
 
நாங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்குக் காரணமாகயிருந்த யூத நண்பரும் இன்னொரு யூத நண்பரும் தீவிர இடதுசாரிகள்.  இவர்கள் பல முறை இஸ்ரேல் அரசு அரேபியர்களுக்கும் பெடுயின் இனத்தவர்களுக்கும் இழைத்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் ‘முதல் யூதக் கோவில் இடிக்கப்பட்டதுதான் யூத இன சரித்திரத்திலேயே நடந்த சிறந்த சம்பவம்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.  இவர்தான் நாங்கள் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.  இஸ்ரேலைச் சேர்ந்த இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆறு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு மறுபடி இஸ்ரேலுக்கே திரும்பச் சென்றுவிட்டார்.  இவர் இப்படித் திரும்பக் காரணமாக இருந்தவர் இவர் மனைவி என்கிறார்.  ஒரு முறை  இவர் ரேடியோவில் பேட்டி கொடுத்தபோது இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம்.  இஸ்ரேலில் போல் அங்கும் பழைய சரித்திரத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றதும் அப்படியே பேட்டியை முடித்துவிட்டார்களாம்.  இன்னொருவர் அமெரிக்காவில் பிறந்து தனது பதினெட்டாவது வயதில் ஹீப்ரு மொழியால் ஈர்க்கப்பட்டு இஸ்ரேலுக்கு வந்தவர்.  இருவரும் அரசின் கொள்கைகளை வெகுவாகக் கண்டிப்பவர்கள்.  இருவரும் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்கள்.  இஸ்ரேலில் யூதர்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட பிறகு யூத மத குருமார்கள் அடங்கிய ஒரு குழு அதை அங்கீகரிக்க வேண்டுமாம்.  இவர் விவாகரத்து செய்துகொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது குருமார்கள் குழு எளிதில் அதை அங்கீகரிக்கவில்லையாம்.
 
எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல் யூத சமூகத்திலும்பல விதக் கொள்கைகள் உடையவர்கள் இருக்கிறார்கள்.  பழமை பேணும் யூதர்களிலிருந்து (conservative) பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள் (liberal) வரை இருக்கிறார்கள்.  அமெரிக்காவில் இருக்கும் எங்கள் யூத நண்பர் வருடத்திற்கு ஒரு முறை இஸ்ரேலுக்குப் போக வேண்டியது தன் கடமை என்று நினைக்கிறார்.  பலர் சேர்ந்து வாங்கும் ஒரு அப்பார்ட்மெண்டை ஜெருசலேமில் வாங்கியிருக்கிறார்.  ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் திவருடைய முறை.  அந்தச் சமயத்தில் இவர் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.  அமெரிக்காவில் வாழும் இன்னொரு யூத நண்பர் ஓரிரு முறை யூதச் சட்டங்களைப் (Jewish Law) படிக்க ஜெருசலேம் சென்றுவருகிறார்.  இவரைப் பொறுத்தவரை யூத மதம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, அதற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொரு யூதனுடைய கடமை.  யூதர்கள் தங்கள் புண்ணிய தலம் என்று கருதும் பாலஸ்தீனத்திற்குப் போக வேண்டும், அங்கேயே தங்கி உயிரை விட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய கொள்கையல்ல.  ஆனால் யூத மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.  யூதர்களுடைய ஓய்வு தினமான (Sabbath Day) சனியன்று – அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமித்ததிலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை – இவர் யாரிடமும் பேசுவதில்லை; தொலைபேசியை அன்று தொடவே மாட்டார்.  அன்று யார் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவர் மனைவிதான் பேசுவார்.  பெரிய வேலை எதுவும் அன்று செய்வதில்லை.   இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதால் அமெரிக்கப் பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் இப்படிச் சில யூதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்.  யூதர்கள் தங்களுக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  இவருடைய பிள்ளைகளும் யூதர்களுக்குள்ளேயே திருமணம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
 
இவருடைய நண்பர்களான ஒரு தம்பதி இப்போது இஸ்ரேலில் வாழ்ந்துவருகிறார்கள்.  இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்கள்.  இஸ்ரேலில்தான் யூதப் பழக்க வழக்கங்களை நன்றாகப் பின்பற்ற முடியும் என்று எண்ணி அங்கு குடியேறியவர்கள்.  மேலே குறிப்பிட்டவர்களை விட இவர்கள் இன்னும் கொஞ்சம் பழமைவாதிகள் எனலாம்.  இருந்தாலும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் இவர்களுக்கு உடன்பாடில்லை.  இவர்களும் அரசுக்கு எதிரான சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
 
மேலே குறிப்பிட்ட சிகாகோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரின் மனைவிதான் அவர்கள் குடும்பம் இஸ்ரேலுக்குத் திரும்பிச் செல்லக் காரணமாக இருந்தவர் என்று மேலே சொன்னேன்.  இவருக்கு யூத மத நம்பிக்கை உண்டு போலும்.  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மத குருமார்கள் பெண்ணை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி சில சோதனைகள் செய்வார்களாம்.  இது யூதப் பழக்கம் போலும்   இதை இவர் எதிர்க்கவில்லையாம்.  மேலும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இவர்களுடைய பிள்ளைகளுக்கு – இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் – கட்டாய ராணுவ சேவை இருந்திருக்காது.  இஸ்ரேலில் மூன்று பிள்ளைகளுக்கும் அது உண்டு.  அப்படியும் இஸ்ரேலுக்கு வர வேண்டுமென்று இவர் நினைத்திருக்கிறார்.  இவர்கள் வீட்டில் ஒரு நாள் எங்களுக்கு விருந்து கொடுத்தார்கள்.  மத்திய கிழக்கில் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் இருந்தன.  அதை சமைத்தது அல்லது இவருக்குச் சமைக்க உதவியது யார் தெரியுமா?  இவருக்கு வீட்டு வேலைகளில் அவ்வப்போது உதவும் ஒரு இஸ்ரேலிய அரேபியப் பெண்.
 
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும்.  அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறியிருக்கும் எல்லா யூதர்களுக்கும் அவர்கள் விரும்பினால் திரும்ப அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.  இவர்கள் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்கள்.  இஸ்ரேலும் இவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு நன்றாக நடத்தத் தயாராக இருக்கிறது; அமெரிக்காவும் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.
 
யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முற்றிலும் சரி என்று நினைக்கும் யூதர்களிலும் சிலர் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும் அந்த முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் அரசு செய்து வருவது சரியில்லை என்றும் நினைக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டுகொள்ளாத யூதர்களும் உண்டு.  இப்படிப் பல தரப்பட்ட கொள்கைகளையுடைய யூதர்களின் விருப்பம் எப்படி 2013 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
 
Link to comment
Share on other sites

இஸ்ரேல் பயணம் -12

 

செய்தி வாசிப்பவர்கள்  செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள்.  அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்) சுருக்கத்தைக் கூறுகிறேன்..

 
மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில், அதாவது இப்போதைய இஸ்ரேலிலும் தனி நாடாக உருவாகப் போகும் பாலஸ்தீனத்திலும் 3000 ஆண்டுகளுக்கு முன் பல யூத இனங்கள் வாழ்ந்து வந்தன.  இவர்கள் ஆபிரஹாம், அவர் மகன் ஐஸக், அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.  பழைய ஏற்பாடு பைபிளில் கூறப்பட்டிருக்கும் புராணக் கதைகள் தவிர இதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  ரோமானிய, கிரேக்க சமூகங்கள் பல கடவுள்களையுடைய மதங்களைப் பின்பற்றி வந்தபோது இவர்கள் ஒரே கடவுளைக் கொண்ட மதத்தைப் பின்பற்றி வந்தனர்.  என்றாவது ஒரு நாள் தங்கள் கடவுளின் தூதர் ஒருவர் வந்து தங்களை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.  டேவிட், சாலமன் என்ற இரு புகழ்பெற்ற அரசர்கள் இவர்கள் வழியில் வந்தவர்கள்.
 
இவர்கள் அடிக்கடி பக்கத்து நாடுகளில் ஆண்டுவந்த அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.  கி.மு.750-இல் அசீரியர்களாலும், கி.மு.612-இல் பாபிலோனியர்களாலும், கி.மு.538-இல் பெர்ஷியர்களாலும், கி.மு.333-இல் கிரேக்கர்களாலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.  அதற்குப் பிறகு வந்த ரோமானியர்கள் ஆட்சியில் கி.பி. 66-இல் இவர்கள் ரோமானிய அரசரை எதிர்த்ததால் ஜெருசலேமை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு உள்ளாயினர்.  இதற்கிடையில் கி.பி. 0-இல் இவர்களில் ஒருவராக இயேசு கிறிஸ்து பிறந்து அப்போதைய சமூகத்தில் – குறிப்பாக ஜெருசலேமில் உள்ள யூதக் கோயிலில் – நடந்து வந்த அநீதிகளையும் ஊழல்களையும் ஒழிக்கப் பாடுபட்டார்.  யூதர்களில் ஒரு சாரார் இயேசுவைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு அவருடைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.  அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  ஆனால் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள், இயேசுவின் கொள்கைகளால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் விளையும் என்று பயந்து அவரை ஒழித்துவிடத் தீர்மானித்து ரோமானிய அரசனின் உதவியோடு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.  குற்றம் புரியும் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே அவர்களை இறக்கவிடுவதுதான் அப்போதைய பழக்கம்.  இப்படித்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார்கள்.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு தன் சொந்த சமூகத்தாலேயே சமூக விரோதியாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்.  கிறிஸ்துவின் சீடர்களும் தண்டிக்கப்பட்டனர்.  அப்போதைக்கு அவர்களால் வெளிப்படையாகக் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற முடியவில்லை.
 
கி.பி. 66-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்கள் பலர் உயிர் இழந்தனர்;  பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்;  பலர் ஜெருசலேமிலிருந்து வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்.  மறுபடியும் இஸ்ரேலில் இருந்த யூதர்கள் கி.பி. 132-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்.  இதிலும் யூதர்கள் பலர் உயிரிழந்தனர்.  அதன் பிறகு யூதர்கள் முழுவதுமாக ஜெருசலேமை விட்டு வெளியேறினர்.  மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் என்னும் ரோமானிய அரசன் கிறிஸ்துவனான பிறகு ஜெருசலேம் நகரம் மறு வாழ்வு பெற்று கிறிஸ்தவ நகரமாக விளங்கத் தொடங்கியது.  யூதர்கள் ஜெருசலேமில் குடியேற அனுமதிக்கப்படவில்லை யென்றாலும், இடிக்கப்படாமல் மிஞ்சியிருந்த யூதர்களின் இரண்டாவது கோயிலின் வெளிச் சுவரை – இது யூதர்களின் மிகச் சிறந்த புண்ணியதலமாகக் கருதப்பட்டது – சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
 
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தார்.  இந்த மதத்தைப் பின்பற்றிய அரசர்கள் ரோமானியர்களை வென்று பாலஸ்தீனத்தில் ஆட்சி நடத்தத் தொடங்கினர்.  இந்த இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் யூதர்கள் ஜெருசலேமிற்குள் வருவதற்கு இருந்த தடை நீங்கி அவர்கள் ஜெருசலேமில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  பதினோராம் நூற்றாண்டில் போப்பாக இருந்த போப் அர்பன் (Pope Urban II) கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் மத சம்பந்தப்பட்ட இடங்களை வழிபட ஏதுவாக அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களோடு சண்டை புரிந்து ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவைப் போராளிகளை அனுப்பினார்.  அவர்கள் முஸ்லீம் அரசர்களை வென்ற பிறகு சுமார் இருநூறு வருடங்கள் கிறிஸ்தவர்களின் கையில் ஜெருசலேம் இருந்தது.  அப்போது யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்;  பல யூதர்கள் கொல்லப்பட்டனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.  அதன் பிறகு இரு நூற்றாண்டுகள் இப்பகுதி எகிப்தை ஆண்ட மாம்லக் அரச பரம்பரை வசம் இருந்தது.  1517-இல் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  முதல் உலகப் போரில் ஆட்டோமான் அரசு வீழ்ச்சி அடையும் வரை பாலஸ்தீனம் அவர்கள் ஆளுகையில் இருந்தது.  அப்போதும் யூதர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 
யூதர்கள் குடியேறிய  இடங்களில் தாங்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஆங்காங்கே இருந்த மக்களோடு சேராமல் தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் செய்துவந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலாலும் இவர்கள் மீது மற்றவர்களுக்கு நட்புரிமை ஏற்படவில்லை.   அந்தந்த நாடுகளில் இருந்த கிறிஸ்துவர்கள், தங்கள் கடவுளின் தூதரை – அதாவது இயேசுவை – வஞ்சித்துக் கொன்றவர்கள் யூதர்கள் என்று எண்ணி இவர்களின் மீது மிகுந்த வன்மம் பாராட்டினர்.  ஸ்பெயின் முஸ்லீம் மன்னர்களின் கீழ் இருந்தபோது யூதர்கள் எந்த விதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை.  ஆனால் சிலுவைப் போராளிகள் ஸ்பெயினில் நுழைந்ததும் யூதர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர்.  அவர்கள் குடியேறியிருந்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் இவர்களிடம் பகைமை பாராட்டியதால், தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அங்கு சுதந்திரமாக எந்த விதப் பிரச்சினையுமின்றி இருக்கலாம் என்ற எண்ணம் பல நாடுகளிலும் இருந்த யூதர்களிடம் உண்டானது.  தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தோடல்லாமல் அந்த நாடு ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்துவந்த, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய, பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணம் ஒரு இயக்கமாக மாறியது.  இதற்குப் பெயர் ஸயானிஸம் (Zionism). இந்த இயக்கம் தோன்றியதிலிருந்தே பல நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அது மட்டுமல்ல, தாங்கள் கொண்டுவந்த தொழில்நுட்பம், செல்வம் ஆகியவற்றின் பலத்தால் பாலஸ்தீனத்தில் பல நிலங்களை வாங்கிப்போட்டு நவீன முறையில் விவசாயம் செய்தனர்; தொழிற்சாலைகள் ஆரம்பித்தனர்.  பாலஸ்தீனம் வளமடையத் தொடங்கியதால் அங்கு குடியேறிய யூதர்களோடு பாலஸ்தீன அரேபியர்களும் நன்மை அடைந்தாலும், யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்தில் குடியேறியதும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும் அரேபியர்களின் கோபத்தையும் பயத்தையும் அதிகரித்தது.  முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆட்டோமான் பேரரசு அழிந்து, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் பிரிட்டனின் மேற்பார்வையில் வந்ததும் யூதர்கள் பிரிட்டனிடம் பாலஸ்தீனத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.  இரண்டாவது உலக யுத்தத்தில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஹிட்லர் ஜெர்மனியில் இருந்த அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வழிகோலியது.  யூதர்களின் மேல் ஏன் இந்த அளவிற்கு ஹிட்லருக்குக் கோபம் இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இவர் சிறு வயதினராக இருந்தபோது இவர் தாய்க்கு சிகிச்சை அளித்தவர் ஒரு யூத மருத்துவராம்.  சிகிச்சை பலனின்றி அவர் தாய் இறந்துவிட்டாராம்.  அவருடைய தாயின் இறப்பிற்கு அந்த யூத மருத்துவர் காரணம் என்று நினைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.  இன்னொரு கோட்பாட்டின்படி அப்போது ஜெர்மனியில் பாதிக்கு மேற்பட்ட வங்கிகள் யூதர்களின் கைகளில் இருந்தனவாம்.  ஜெர்மனியில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.  எந்த ஆராய்ச்சியிலும் உண்மையான காரணம் எது என்று வெளிவரவில்லை.  ஜெர்மனியிலும் யூதர்களுக்கு எதிராக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.  அப்போதிருந்த கிறிஸ்தவ போப்பும் ஹிட்லர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கவில்லை.
 
யூதர்கள் வெளியிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறக் குடியேற யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிறையப் பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.  இந்தப் பூசல்களைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணியும், இனி பாலஸ்தீனம் தன் மேற்பார்வையில் இருப்பதால் தனக்கு நன்மை எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்த பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுத் தான் வெளியேறுவதாக ஐ.நா.விடம் தெரிவித்தது.  ஐ.நா. பல முறை தன் பிரதிநிதிகளை அனுப்பி அங்குள்ள நிலையை அறிந்துவரச் செய்தது.  1947-இல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரேபியர்களுக்கும் (இவர்களில் அரேபிய கிறிஸ்தவர்களும் உண்டு) கொடுப்பது என்று ஐ.நா. முடிவுசெய்தது.
 
பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் இந்தப் பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடுவது என்று முடிவுசெய்தனர்.  அதனால் இன்று வரை பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகாமலேயே இருக்கிறது.  ஆனால் யூதர்களோ தாங்கள் கேட்டதற்கு மேலேயே அதிக அளவுள்ள நாடு கிடைத்துவிட்டதால் உடனேயே தங்கள் நாடான இஸ்ரேலைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  இதற்கு மறு நாளே பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்ததில் அரபு நாடுகள் தோற்றுப் போயின.  மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது.  இப்படி அரேபிய இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டதோடு அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றவும் செய்தது.  இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருக்கும் அரேபியர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறது.  பாலஸ்தீனத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அரேபியர்களை அங்கு தொடர்ந்து இருக்கவிடுவதே தன்னுடைய தாராள மனப்பான்மையினால்தான் என்பது போல் இஸ்ரேல் நடந்துகொள்ள ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்குத் தனி நாடு உருவாக்கிக் கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டபோது அங்கு ஏற்கனவே வசித்துவரும் அரேபியர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையைப் போட்டிருந்தது.  அதையெல்லாம் இஸ்ரேல் நினைப்பதாகத் தெரியவில்லை.
 
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து  பூசல்கள் ஏற்பட்டன.  1967-இல் நடந்த யுத்தத்தில் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேல் அங்கும் யூதர்களைக் குடியேற்றுவதைத் தொடர்ந்தது.  இப்படிக் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நிறையத் தொந்தரவுகள் கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.  இவர்கள் ஒரு முறை பெடுயின் இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இனத்தவரின் ஆடுகளுக்கு விஷம் வைத்து அவற்றைக் கொன்றனர்.  இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றப்பட்ட யூதர்களும் (இப்படிக் குடியேற்றப்பட்ட யூதர்களில் பலர் 1960-க்குப் பிறகு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்) அங்கேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினர்.
 
1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.  1969-இல் யாசர் அராபத் அதன் தலைவரானார்.  பாலஸ்தீனம் முழுவதையும் ஒரே நாடாக உருவாக்கியே தீருவது என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள்.  ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர் தட்டிக் கேட்டபோது அவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேல் கூற ஆரம்பித்தது.  1992-இல் பிரதமர் பதவியேற்ற யிட்சக் ராபின் பாலஸ்தீனர்களோடு சமரசம் பேச முன்வந்தார்.  அதுவரை இஸ்ரேல் நாடு இருப்பதையே ஒப்புக்கொள்ளாத பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத், யிட்சக் ராபினின் சமரச ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.  இவர்களுக்கிடையே 1993-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு இருப்பதை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒப்புக்கொள்வதென்றும் 1947-இல் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அது வரை இந்த இடங்கள் பாலஸ்தீன அத்தாரிட்டி என்னும் அமைப்பின் கீழ் செயல்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் என்று பெயர்.  1995-இல் ராபின், இதை எதிர்த்த ஒரு யூத வெறியனால் கொலைசெய்யப்பட்ட பிறகு அதற்குப் பின் பதவிக்கு வந்த நேத்தன்யாஹூ (சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி 120 இடங்கள் உள்ள இஸ்ரேலிய பார்லிமெண்டில் 31 இடங்களைப் பிடித்தது; மற்ற சில கட்சிகளோடு சேர்ந்து இப்போது இவர் மந்திரிசபை அமைத்திருக்கிறார்.  இவர்தான் பிரதம மந்திரி.) ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.
 
இஸ்ரேல் அரசோடு சமாதானமாகப்  பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று நினைத்த  பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச்  சேர்ந்த சிலர் யாசர்  அராபத்தின் ஃபாட்டா (Fatah) கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்.  ஹமாஸ் (Hamas) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து பிடித்திருந்த காஸா பகுதியை இஸ்ரேல் 2005-இல் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கு ஆட்சி செய்யத் தொடங்கினர்.  லெபனானில் இஸ்ரேல் பிடித்திருந்த இடத்தை ஹெஸ்புல்லா (Hezbollah) என்ற கட்சி பிடித்து அங்கு ஆட்சி நடத்தத் தொடங்கியது.  இவை இரண்டும் தீவிரவாதக் கட்சிகள்.  அடிக்கடி இக்கட்சிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் பூசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
 
இஸ்ரேலின் கொள்கைகளால்  அதிருப்தி அடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேலுக்குள் சென்று யூதர்களைக் கொன்றனர்.  யாசர் அராபத் பாலஸ்தீன இளைஞர்களை இந்த வன்முறையிலிருந்து தடுக்கவில்லை என்று கூறி 2002-இல் அப்போது பிரதமராகயிருந்த எரியல் ஷேரன் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் பகுதிக்குள் வருவதைத் தடுக்கப் பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார்.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் (1947-இல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா. கொடுத்த இடத்தில் இதுவும் சேர்த்தி) இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டது.  (சுவர் இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.)  இந்தச் சுவர் எழுப்பியதின் மூலம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகின்றனர்.  பலருடைய விளைநிலங்கள் சுவருக்கு இந்தப் பக்கம் இருப்பதால் அவர்கள் சுவரைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேலின் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான் தங்கள் விளைநிலங்களுக்கோ அல்லது வேலைபார்ப்பதற்கோ வர வேண்டியதிருக்கிறது.  மேலும் இப்படி வருவதற்கு இஸ்ரேல் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் காட்ட வேண்டும்.  ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்திருக்கும் தங்கள் சொந்த இடத்திலேயே பாலஸ்தீன அரேபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
 
2004-இல் யாசர் அராபத் பாரீஸில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெற்று வரும்போது இறந்துவிட்டார்.  இப்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்று அவர் மனைவி சந்தேகப்பட்டதால் ராமல்லா என்ற ஊரில் (இதுதான் பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைமையகம்) இருந்த அவருடைய கல்லறையைத் தோண்டி அவர் உடலை மீட்டுப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.
 
இவருக்குப் பிறகு  ஃபாட்டாவின் பொறுப்பை அகம்மது  அப்பாஸ் என்பவர் ஏற்றார்.  இவரும் சமாதான விரும்பி.  எப்படியாவது பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
 
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்கில் கொடுக்கப்பட்ட இடங்களில் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டு சில இடங்களை மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டி நிர்வகிக்கும்படி விட்டிருக்கிறது.  (ஆஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிட்டி உருவாக்கப்பட்டு பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை நிர்வகித்து வருகிறது.)  சில இடங்கள் இருவரின் கீழேயும் இருக்கின்றன.  சில இடங்கள் இஸ்ரேலின் கீழ் இருக்கின்றன.  வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய நூறு மில்லியன் டாலர் சுங்கவரிப் பணத்தை பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.  சில நாட்களுக்கு முன்தான் அந்த வரிப் பணம் பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் நிறையப் பணம் வந்துகொண்டிருக்கிறது.  ஆனால் பாலஸ்தீனர்களுக்கு அப்படியில்லை.  1945-இல் அரபு நாடுகள் பல ஒன்று சேர்ந்து (முதலில் இதில் ஜோர்டன், சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகள் இருந்தன.  பின்னால் பல நாடுகள் சேர்ந்துகொண்டன.  இப்போது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21) அராப் லீக் (Arab league) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டன.  இந்த அமைப்பிலிருந்து பாலஸ்தீனத்திற்கு பணம் வந்துகொண்டிருந்தது.  இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள்.  இதனால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ் இருக்கும் இடங்களில் வறுமை இருக்கிறது.
 
அமெரிக்காவிலுள்ள பல பணபலமுள்ள யூதர்களின் வற்புறுத்தலாலும் செல்வாக்காலும் அமெரிக்கா இஸ்ரேலின் முழு நண்பனாகவும் ஆதரவாளனாகவும் விளங்குகிறது.  அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு தினமும் பத்து லட்சம் டாலர் உதவிப்பணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  2011-இல் ஐ.நா.வின் யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பாலஸ்தீன் ஒரு அங்கத்தினர் ஆனது.  இதை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிர்த்தது.  அதோடு மட்டுமல்ல அமெரிக்கா யுனெஸ்கோவுக்குக் கொடுக்கும் தன் பங்கிற்கான பணத்தையும் கொடுக்க மறுத்தது.  (ஐ.நா.வின் பல ஸ்தாபனங்களுக்கு உலகிலேயே பணக்கார நாடு என்பதால் அமெரிக்காதான் நிறையப் பணம் வழங்கி வருகிறது.  அதனால் அவற்றில் அதிகாரமும் செலுத்திவருகிறது.)
 
மேலும் தனி நாடாகி ஐ.நா.வில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன் இப்போதே ஜெனரல் அசெம்பிளியில் 2012 நவம்பர் மாதம் non-member observer entity என்ற அந்தஸ்தை பாலஸ்தீனத்திற்கு முகம்மது அப்பாஸ் பெற்றிருக்கிறார்.  இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.  கோபத்தில் அமெரிக்கா பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டது.  அதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே பாலஸ்தீன அத்தாரிட்டி திணறுகிறது.  பாலஸ்தீனத்திற்கு இந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்குரிய ஓட்டெடுப்பில் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட 138 நாடுகள் அந்தஸ்து கொடுக்கலாம் என்று ஓட்டளித்தன.  அமெரிக்கா இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் கூடாது என்று ஓட்டளித்தன.  ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றுக்கொள்ளவில்லை.
 
இப்படி ஐ.நா.வின் ஜெனரல் அசெம்பிளியில் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு, ‘ஓட்டெடுப்பில் பங்கெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தினர்’ பதவி (non-member observer status) கிடைத்திருப்பதால் இஸ்ரேலுக்குச் சில பின்விளைவுகள் ஏற்படலாம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி அகில உலக கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது ஐ.நா.வால் பாலஸ்தீனத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்புகளை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பது அவற்றில் ஒன்று
 
இப்படிப்பட்ட பின்விளைவுகளுக்குப் பயந்து அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி ‘நாளை எழுந்ததும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை.  அமைத்திக்கான பேச்சு வார்த்தைகளில்தான் இன்னும் தாமதம் ஏற்படப் போகிறது’ என்று ஏளனமாகக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் கூட்டாக பாலஸ்தீனத்தின் புதிய அந்தஸ்தை எதிர்க்கின்றன.  பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எதிராக அகில உலக கிரிமினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிடுவதாகவும் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாவிட்டால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் வாஷிங்டன் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. 
 
2013 மார்ச் மாதம் அமெரிக்கா கௌரவிக்கவிருந்த பெண்கள் பட்டியலிலிருந்து எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் பெயரை நீக்கியிருக்கிறது.  அவருடைய ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பல்கேரியாவில் இஸ்ரேலிய யூதர்கள் பயணித்த ஒரு பேருந்து தாக்கப்பட்டதைப் புகழ்ந்து எழுதியிருந்தாராம்; மேலும் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கூறிய ஒரு மேற்கோளும் எடுத்தாளப்பட்டிருக்கிறதாம்.  ஆனால் அந்தப் பெண் தான் அப்படி எழுதவில்லை என்றும் தன்னுடைய கடவுச் சொல்லை (password) யாரோ திருடி தன் கணக்கில் யாரோ அப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.  இது பற்றி தீர விசாரித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்காதான் இப்போதைய இஸ்ரேலின் முழு நண்பன்.  இஸ்ரேலைத் தாக்கும் யாரும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.
 
சென்ற ஜனவரி 22-ஆம்  தேதி இஸ்ரேலில் பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது.  எட்டு  மில்லியன் ஜனத்தொகை கொண்ட  இஸ்ரேலில் 20 சதவிகிதம்பேர்  (1.5 மில்லியன்) அரேபியர்கள். இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை.  இதற்குப் பல காரணங்கள் உள்ளன.  2008-இல் நடந்த தேர்தலில் 53% வாக்களித்தனர்.  இந்தத் தேர்தலில் இன்னும் இது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் 56% வாக்களித்திருக்கிறார்கள்.  ‘யூதர்கள் (64%) அளவு அரேபியர்கள் ஓட்டளித்தால் இருபதுக்கும் மேலான இடங்களைப் பெறலாம்.  இப்போது வாக்களிப்பவர்களில் இன்னும் 50% அதிகரித்தால் நேத்தன் யாஹூ அரசில் (government) இருக்க முடியாது’ என்று முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரும் மந்திரியுமான கேலப் மஜாட்லே (Ghaleb Majadleh) கூறியிருக்கிறார்.  நிறைய அரேபியர்கள் ஓட்டளித்தால் நாடு (இஸ்ரேல்) ஜனநாயகத்தையும், எல்லோருக்கும் சமஉரிமை கொடுப்பதையும் மதிக்கிறது என்பது புலனாகும் என்கிறார்கள் இஸ்ரேல் தலைவர்கள்.    அரேபிய அரசியல்வாதிகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள், முனிசிபல் வசதிகள் இல்லை என்கிறார்கள்.  அரேபிய கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்கிறார்கள்.  சில அரேபியர்களுக்கு தேர்தலில் அக்கறையில்லை.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கு.  இரண்டாவது வகையினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை.  வாக்களிப்பதால் தங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை, ஏனெனில் இஸ்ரேல் தங்களுடைய நாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.  ஒரு குடியரசு என்று இஸ்ரேல் தன்னைக் கூறிக்கொண்டாலும் அரேபியர்களை சரியாக நடத்துவதில்லையாதலால் வாக்களித்துப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள்.  என்னதான் தாங்கள் சரியாக நடத்தப்படாவிட்டாலும் – வேலைவாய்ப்பு, கல்வி வசதி, முனிசிபல் வசதிகள் இல்லையென்றாலும் – யூதர்களைப் போல் தங்களுக்கும் ஓட்டுரிமை இருப்பதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  மூன்று அரேபியர்கள் கட்சி – ஒன்று மத அடிப்படையில், இன்னொன்று கம்யூனிஸ்ட், இன்னொன்று தேசியக்கட்சி – இருக்கின்றன.  புதிதாக இன்னொன்று இந்தத் தேர்தலில் சேர்ந்திருக்கிறது.  இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கைகளைத் தட்டிக்கேட்க யாராவது வேண்டுமல்லவா;  அதனால் நான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறார் இன்னொரு அரேபியர்.
 
2013 மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் விஜயம் செய்தார்.  அரசியல் தலைவர்களோடு பேசுவதை விட இளம் தலைமுறையினரோடு பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொண்டார்.  இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக ஜெருசலேமில் உள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றில் 2000 பேர் அடங்கிய கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார்.  ‘பாலஸ்தீனர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.  அவர்கள் கண்கள் மூலம் உலகைப் பாருங்கள்.  பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உங்களைப் போல் சொந்த நாட்டில் சுதந்திரமாக வளரும் உரிமை இருக்கிறதல்லவா?’ என்று பேசினார்.  ஆனால் இஸ்ரேல் அமைத்துவரும் குடியிருப்புகளைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.  முகம்மது அப்பாஸை ராமல்லாவில் சந்தித்தபோது மறுபடி சமாதான உடன்பாட்டிற்குரிய பேச்சுவார்த்தைகளில் எந்த வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.
 
அமெரிக்க ஜனாதிபதி இப்படிப் பேசி இஸ்ரேல் தலைவர்களை  நியாயமாக நடந்துகொள்ள வைக்க  முடியுமா என்று தெரியவில்லை.  பாலஸ்தீனியர்களின் இடங்களில்  இஸ்ரேலியர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும்  குடியிருப்புகளில் வசித்துவரும் இஸ்ரேலியர்களை எப்படி அங்கிருந்து  வெளியேற்றுவது?  இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டாலும் தீர்வு காண முடியாத இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேல் அரசு நிர்மாணித்து வரும் பெரிய மதில் சுவரால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இப்போது தொடர்ச்சியாக இல்லை.  இப்படித் தொடர்ச்சியாக இல்லாத இடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது?
 
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக இல்லாமல் பாலஸ்தீனம் முழுவதும் ஒரே நாடாக உருவானாலும் யூதர்கள் அதை விரும்பவில்லை.  அவர்களுடைய நாடு ஒரு யூத நாடாகத்தான் இருக்க வேண்டுமாம்.  மேலும் அப்படி ஒரே நாடு உருவாகும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள்.  தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு யூத நாடு வேண்டும் என்று கேட்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள்?  இத்தகைய காரணங்களினால் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
 
கடையாக ஒன்றைக் குறிப்பிட  வேண்டும்.  மேலே குறிப்பிட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் கிறிஸ்துவர்கள்தான் யூதர்களைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்றாகப் புலனாகும்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் பற்றி இப்போது பேசுபவர்கள் இந்த உண்மையை மறந்துவிடுகிறார்கள்.  அது மட்டுமல்ல, முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் போலவும் அவர்களால்தான் யூதர்களுக்குத் தீங்கு விளைவது போலவும் கூறுகிறார்கள்.
 
முற்றும்
 
கீழே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக்கொண்ட வரைபடத்தைப் பார்க்கலாம்.
 
 
loss_of_land.gif?itok=RdwP71a2

http://www.vallamai.com/?p=33994

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.