Jump to content

தமிழ் தேசியவாதத்தை விட்டு விட்டு யுத்தத்துக்கு பின்னரான வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் -கோதாபய ராஜபக்ஷ


Recommended Posts

இலங்கையின் வடபகுதி இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதியாக நிராகரித்துள்ளார். 22 மாவட்டங்களிலும் படையினர் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அத்தியாவசியமான பிரசன்னத்தையே படையினர் வட பிராந்தியத்தில் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

முப்பது மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னரும் கூட வடக்கில் அதிகளவு இராணுவ முகாம்கள் இருப்பதாக தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் குற்றஞ்சாட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரியின் பிரசன்னம் இல்லாமல் குடும்ப கொண்டாட்டங்கள் கூட அதாவது எந்தவொரு பொதுமக்கள் நடவடிக்கையும் வடக்கில் இடம்பெறுவதில்லையென தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர்ந்த சமூகம் குற்றச்சாட்டு தெரிவிப்பது குறித்து கொழும்பிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து டெக்கான் குரோனிக்கல் பத்திரிகைக்களித்த பேட்டியிலே அவர் இதனைத் தெரிவித்தாக த ஏசியன் ஏஜ் குறிப்பிட்டிருக்கிறது.

யுத்தத்தில் வெற்றிபெற்ற இரண்டரை வருட காலத்தில் நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக சிலர் இதனை அங்கீகரிக்காமல் தேவையற்ற விடயங்களை எடுத்துக்கொள்கின்றனர். தடைகள் பற்றி கதைக்கின்றனர். இது சாதாரணமான கிளர்ச்சியல்ல. உண்மையான யுத்தமாக இருந்தது. எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் புலிகளை ஒப்பிட முடியாது. அல்ஹைடாவைக் கூட புலிகளுடன் ஒப்பிட இயலாது என்று கோதாபய ராஜபக்ஷ அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியவாதத்தைக் கைவிட்டு யுத்தத்திற்குப் பின்னரான வாய்ப்புக்களைப் பயன்படுத்துமாறு தமிழ் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். குறுகிய காலப்பகுதியில் நாடு ஈட்டிய வெற்றியை எவரும் மெச்சவில்லையென அவர் கவலை தெரிவித்துள்ளார். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிக்கும் பாரிய பணியை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. அத்துடன் சுமார் 11 ஆயிரம் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகிறது. இந்த முன்னாள் உறுப்பினர்களை சமூத்துடன் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அவர்களை சிறைகளில் வைத்திருப்பதிலும் பார்க்க சமூகத்துடன் ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட சகலரும் பொதுமக்கள் எனவும் அதில் தமிழர்களும் உள்ளடங்கியிருந்ததாக கோதாபய கூறியுள்ளார். சரணடைந்த உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 700 முன்னாள் போராளிகள் மட்டுமே இன்னரும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர் பாலகுமாரின் நிலைமை பற்றி கேட்கப்பட்ட போது விசேடமான விடயங்கள் குறித்து எனக்கு தெரியாது. அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. அறியப்பட்ட பலர் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டனர். சரணடையும் நடவடிக்கைகளின் போது ஐ.சி.ஆர்.சி.யும் ஏனைய முகவரமைப்புகளும் இருந்தன என்று அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த கோதாபய பிரான்ஸின் எம்.எஸ்.எவ்., இந்திய மருத்துவக் குழு உட்பட சர்வதேச முகவரமைப்புகள் மோதல் வலயத்தில் பிரசன்னமாகியிருந்தன. உயிருடன் இருந்தவர்களையும் சரணடைந்த போராளிகளையும் ஏற்றுக்கொள்ளும்போது அவை மோதல் வலயத்தில் பிரசன்னமாகியிருந்தன என்று கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருப்பது தொடர்பான முறைப்பாடு குறித்து கேட்கப்பட்ட போது, நாங்கள் ஆகக்குறைந்த அளவு இராணுவ பிரசன்னத்தையே அங்கு கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் மற்றும் தமிழ் நாட்டில் கூட இராணுவ அணிகள் உள்ளன. ஆனால், இப்போது வடக்கில் வீதித்தடைகளோ தேடுதல்களோ இடம்பெறவில்லை. நாங்கள் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை பொலிஸாருக்கு மாற்றியுள்ளோம். தமிழ்ப் பொலிஸாரை பணிக்கமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் இராணுவத்திற்கான ஆள்திரட்டல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், ஓய்வுபெற்றதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் கூட நிரப்பப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு படை வீரரைப் பயன்படுத்திய பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பிமுடியாது என்று கூறியுள்ள அவர் அவர்கள் குடும்பத்திற்கு உழைப்பவர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த கால விடயங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த கணிசமான அளவு இராணுவத்தின் பிரசன்னம் வடக்கில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.ilankathir.com/?p=4077

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.