Jump to content

ராஜபக்சேவின் போர்க்குற்றத்திற்கு இந்தியா துணை போவதாக கருணாநிதி வேதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனை தமக்கு ஏற்படுவதாக  தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (24ஆம் தேதி) விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:-

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறதே?

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு, விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இலங்கைக்கு ஐ.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.  
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர், நவி பிள்ளை, கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா. விசாரணைக் குழுவை நியமித்தார். இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவிலே 3 நிபுணர்களும், 13 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்து விட்டதாக, இலங்கை மனித உரிமை ஆணையர், பிரதிபா மகாண மாஹெவா தெரிவித்திருக்கிறார். இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளிலே இருந்து விசாரணையைத் தொடங்க ஐ.நா. குழு முடிவு செய்தது. அந்த அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால் இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை. இந்தியா ஐ.நா. குழுவுக்கு விசாவை மறுத்திருப்பது- இந்திய தலைமையிடமிருந்து கிடைத்திருக்கும் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதுவதாக இலங்கை மனித உரிமை ஆணையர் தெரிவித்திருக்கிறார். இதனால், ஐ.நா. விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. உலக அளவில் நியூயார்க், பாங்காக், ஜெனீவா ஆகிய மூன்று இடங்களில் மையங்களை அமைத்து, அங்கிருந்தவாறு இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைக்கோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை நடத்தி வருகிறது.  

இதற்கிடையே கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. வெளியுறவுக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளர் சேஷாத்ரி சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை உள்ளடக்கிய குழுவினருடன் சென்ற சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தபோது, ’பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச நலனை கருத்தில் கொண்டுதான் அமையுமே தவிர, பிராந்திய பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அமையாது. தமிழ்நாட்டைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இலங்கையில் நிலவும் உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நான் கேட்டுக் கொள்வேன். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டப்படுவது குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முந்தைய காலத்தைக் காட்டிலும் இலங்கைக்கு ஆதரவு அளிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. ஆகவே மனித உரிமை மீறல் பிரச்னையில் இலங்கை அரசு கவலை கொள்ளத் தேவையில்லை.

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. தீவிரவாத அமைப்பை நீங்கள் அடியோடு ஒழித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இதை நினைக்கும்போது மனித உரிமை மீறல் பிரச்னை என்பது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை’ என்றெல்லாம் சுப்ரமணியன் சுவாமி கூறியதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி, பா.ஜ.க. அரசு அமையுமேயானால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறியிருந்தார். ஆனால் மோடி சொன்னதற்கு மாறாக இலங்கைப் பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு தற்போது ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்திருப்பது சிங்களப் பேரினவாத ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனையைத் தருகிறது. எனவே இந்திய அரசு இலங்கை மீதான தனது கருத்தினை வெளிப்படுத்த வேண்டுமென்பதோடு, போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்கும் முடிவினை மேற்கொள்ள வேண்டுமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 38 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?

நம்முடைய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பற்றியும், தாக்கப்படுவது பற்றியும் நாமும் தொடர்ந்து குரல் கொடுத்து வேண்டுகோள் விடுத்துத்தான் வருகிறோம். முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது நின்றபாடில்லை. எனவே தான் மத்திய-மாநில அரசுகளை நம்பிக் கொண்டிருப்பதைவிட, நீதிமன்றத்தை நாடலாம் என்று சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இந்தியக் கடல் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று இந்த நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் உத்தரவு பிறப்பித்தன; மத்திய அரசு அமல்படுத்தவில்லை. முதல் உத்தரவுக்குப் பின் 73 தாக்குதல் சம்பவங்களும், 2வது உத்தரவுக்குப் பின் 33 தாக்குதல் சம்பவங்களும் மேலும் இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்த பின் 3 தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன. இலங்கையின் இந்தத் தாக்குதலை நிறுத்தக் கோரி, தமிழகத்தின் முந்தைய முதல்வரும், தற்போதைய முதல்வரும் மத்திய அரசுக்கு 33 கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அதன் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இதே நீதிமன்றத்தில், இலங்கைக்கு இந்திய அரசு போர்க் கப்பல் விற்பது பற்றி தமிழக முதலமைச்சரும், பிரதமரும் எழுதிக் கொண்ட கடித விவரங்களைத் தாக்கல் செய்யவும்  உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காகப் பயிலும் மாணவர்கள் தங்களைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தார்களே?

சென்னை, வடபழனி அண்ணா பொது நல மன்றம் மற்றும் இதர பயிற்சி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து சில கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள். குறிப்பாக யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்விற்கான கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அச்சிடப்படுவதால்,  இந்தி மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் நிலைத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிப் பெறுவதற்கு மிகவும் சாதகமாக உள்ளது என்றும், இந்தி மொழி பேசாத தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வு முறை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், முதல் நிலை வினாத்தாள்  ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது மூன்று மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அச்சிடப்பட வேண்டுமென்றும் கூறினார்கள். குறிப்பாக வினாத்தாள் -2 இந்தி மொழி பேசும் மாணவர்களுக்கு சாதகமாக அமைகின்றது என்றும், கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு மிகக் கடினமாக உள்ளது என்றும், எனவே கேள்வித்தாள் 2க்கு தரப்படுகின்ற முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். இந்தப் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நமது மாணவர்களின் இந்த முக்கியமான பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

மேலும் 'மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளையும் இணைத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும்’ என்று கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டோம் என்பதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30552

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னத்தை.... எவர் சொல்லுறது என்று, விவஸ்தையே... இல்லாமல் போச்சு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.