Jump to content

பழந்தமிழர் கடல் வணிகம்-1


Recommended Posts

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக

களியியல் யானைக் கரிகால் வளவ!”

என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார்.

நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆக கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு வெகு காலம் முன்பே காற்றின் தொழில் நுட்பம் அறிந்து, நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறமையும், வல்லமையும் உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள். மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல், பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.

பண்டையகால தமிழர் கடல் வணிகம் என்பது, முதல் இரண்டு காலகட்டத்தை மட்டும் கொண்டதாகும்(தொடக்ககாலம் முதல் கி.பி. 300 வரை) . மூன்றாம் காலகட்ட கடல் வணிகம் (கி.பி.300 முதல் கி.பி.1300 வரை), இதில் சேராது. பண்டைய தமிழர் கடல் வணிகத்தின் முதல்காலகட்டம் என்பது போதிய ஆதாரங்கள் இல்லாததாகும். ஆனால் இரண்டாவது கால கட்டத்திற்கோ ஓரளவு ஆதாரங்கள் உள்ளன. நாம் இங்கு முதல் காலகட்ட கடல் வணிகம்(கி.மு.3000 முதல் கி.மு.700 வரை), குறித்து மட்டும், முதலில் பார்ப்போம்.

பண்டைய உலக வணிகம்:

tamilar_sea_travel_630.jpg

SsSOURCE: E-DOCUMENTS-SPICE TRADE-WIKI.

மேற்கண்ட வரைபடத்தில் நீல நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய கடல் வணிகத்தையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய தரை வணிகத்தையும் காட்டுகிறது. சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள் இதில் தரப்பட்டுள்ளன. ஆரம்பகால thதமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது.

தமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர். அரேபியர்களே தமிழகம், Iஇலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின் பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர். பழங்காலத்தில் மேற்குலக நாடுகளுக்கு வாசனைப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிக மிக தேவைப்பட்டது. பின்னர் தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர். தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர்.

மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. மேலே வரைபடத்தில் உள்ள ஜாவா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத் தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன. பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாஜாவும்(Barygaza) வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.

தமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:

“காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவில்(தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )

கிப்பாலஸ்(Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, திராவிடியர்களும்(தமிழர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் ஸ்காப் அவர்கள். கென்னடி eஎன்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில்(Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக ஸ்காப் அவர்கள் தெரிவிக்கிறார்.

இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த ஸ்காப் அவர்கள், ஏழரா(eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்.) இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார்.

ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார். மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )

ஆக திரு. ஸ்காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.

திரு.ஸ்காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), ஸ்காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.ஸ்காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார். ஆக பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம். பிளினி, ஸ்ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் ஸ்மித், ஸ்வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. ஸ்காப் எழுதி உள்ளார்.

சிந்து-இந்து-இந்தியா:

தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.

சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 & தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)

சிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து, இந்த சிந்து என்ற சொல் வரவில்லை என்றால், இந்த சிந்து என்ற தமிழ் சொல்லில் இருந்து தான், இந்து மதத்திற்கான “இந்து” என்ற பெயரும், நமது நாட்டிற்கான “இந்தியா” என்ற பெயரும் வந்ththதுள்ளன என கருதலாம். (சிந்துவெளி மக்கள் சிந்து நதிக்கு என்ன பெயர் வைத்திருந்தனர் என அறியும் போதே இவை குறித்து இறுதியாகச் சொல்ல முடியும்.) தமிழ் சொல்லில் இருந்து இந்தியா என்ற பெயர் வந்ததன் காரணமாகவே, ஆரம்பகாலம் முதலே தமிழகம் பொதுவாக உலக மக்களால் இந்தியா என்றே கருதப்பட்டு, இந்தியா என்றே சொல்லப்பட்டும் வந்துள்ளது. இவை தமிழர் வணிகத்தின் பழமையை சுட்டிக்காட்டுகிறது எனலாம்..

தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:

கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து ஹர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும் மெழுக்கு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது. இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் .( தமிழக வரலாறு பக்.31).

கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன. அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)

தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் ஸ்மித், ஸ்காப், கென்னடி, ஸ்வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)

அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)

தமிழர் கடல் வணிகம்-பழைய ஏற்பாடு:

யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.

மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).

ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர் களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.

கி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).

சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள். உதாரணம்: 1.துகிம்- தோகை, மயில்தோகை; 2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள் 3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51).

பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)

ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.

பண்டைய தமிழகம்:

பண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

இவை போக இன்றைய இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளும், அநுராதபுரத்தை ஒட்டிய பகுதிகளும், இலங்கைக் கடற்கரையில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன.

இவைகளை ஒப்பிட, கீழ்க் கண்ட சில தரவுகளை அறிவது நலம். நமது இன்றைய தமிழகத்தின் பரப்பு சுமார் 1.3 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய தமிழக கடற்கரையின் நீளம் சுமார் 800 கி.மீ. இன்றைய இந்திய நாட்டின் பரப்பு சுமார் 33 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய இந்திய கடற்கரையின் நீளம் சுமார் 6000 கி.மீ. பிற்கால சோழப்பேரரசு உச்ச நிலையில் இருந்தபொழுது, அதாவது இராசேந்திர சோழன் காலத்தில் அதன் ஆட்சிக்குட்பட்ட பரப்பு சுமார் 16.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர். பண்டைய தமிழகத்தின், சுமார் 2500 கி.மீ நீளக்கடற்கரை, தமிழர்களை கடலோடிகளாகவும் கடல் வணிகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ஆக்கியது எனலாம்.

தமிழர் கடல் வணிகம்- இணையதளத் தரவுகள்:

கி.மு.3000வாக்கில் அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது. இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

கி.மு.2400இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கஸ்(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது. இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.

பாபிலோனிய மன்னன் ஹமுராபி(HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்களும் தேவைப்பட்டன.

எகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன.

எகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி ஹட்செப்சுட்ஸ் (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசஸ்-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )

தமிழர் வணிகம்-திருமதி. இலட்சுமி:

பண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார். அவரது தரவுகள் சிலவற்றை காண்போம்.

எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.

இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.

எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன. திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன்.

தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க, அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)

பெருங்கற்கால குறியீடுகள்:

தமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழி எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன.

இவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.

சுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)

சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248)

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.) மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)

தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)

சீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244) அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, ஜப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)

பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

தமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:

பண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.)

இலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.) இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110). புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.

பொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும். இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.

எனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்திரபாலா.(பக்: 114).

ஆதிச்ச நல்லூர்:

தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை

ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.

தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

ஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு,

1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை. ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும்.

4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.

மேற்கண்ட 5 ஆதாரங்களும், காரணங்களும் போக வேறு பல இருக்கலாம் எனினும், இவையே பிரதானமானவைகளாகும்.

- கணியன்பாலன்

http://www.keetru.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.