Jump to content

வடக்கில் இராணுவத்தை வைத்திருக்கவே “ புலிவருது” நாடகம் அரசால் அரங்கேற்றம்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு


Recommended Posts

வடக்கில் இராணுவத்தை வைத்திருக்கவே “ புலிவருது” நாடகம் அரசால் அரங்கேற்றம்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
 

ரொஷான் நாகலிங்கம்

தமிழ் மக்கள் மீதான  அடக்குமுறைகளை  அரசு  இனியும் தொடர்ந்தால்  சர்வதேசத்தின் உதவியை இன்னும்    அதிகமாக நாட வேண்டியேற்படுமென  எச்சரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்காதிருப்பதற்காக “புலிவருது”  நாடகத்தை அரசு அரங்கேற்றி வருவதாக குற்றஞ்சாட்டியதுடன், அரசின் இந்த நாடகத்திற்கு அமைவாக தமிழ் இளைஞர்கள் நடந்து கொள்ளக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.

 அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; 

 இன்றைக்கு அரசாங்கம் புலிவருது புலி வருது என்று கூறி மீண்டுமொரு  பயங்கரவாத சூழ்நிலையை  உருவாக்கி வருகின்றது. விசேடமாக வட மாகாணத்திலே  திரும்பவும் புலிப்பயங்கரவாதம் தலைதூக்கின்றதென்ற குற்றச்சாட்டை முன்வைத்து  சுற்றி வளைப்புகள்,  தேடுதல்கள் மற்றும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இராணுவ மயமாக்கலுக்கு எதிராக சர்வதேசம் குரல் கொடுக்கும்  வேளையில் தொடர்ச்சியாக இராணுவத்தை வடக்கில் குறைக்காது வைத்துக் கொள்வதற்கான நியாயப் பாட்டை  மேற்கொள்ளவே இப்படியான ஒரு புலிவருது நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 அரசாங்கம்  எங்களுடைய மக்கள் மீது தொடர்ச்சியாக இந்த விதமான அடக்கு முறையை முன்னெடுக்குமாக இருந்தால் இன்னும்  கூடுதலான சர்வதேச உதவியை  நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதேவேளை இப்படியான கட்டுக் கதைகளுக்கு மற்றவர்கள் செவி கொடுக்காது  இருக்க வேண்டுமானால் புலிவருது என்பது கட்டுக்கதையென  உலகத்துக்கு புலப்பட வேண்டுமாக இருந்தால் நாங்களும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆகையினாலே விசேடமாக தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுளோள் விடுக்கின்றோம். அதாவது அரசாங்கத்தின் கட்டுக்கதைகளுக்கு ஏதுவாக நீங்கள் எந்தவிதத்லும் நடந்து கொள்ளவேண்டாம். அப்படியான பொய் பிரசாரத்தை வெளியுலகம் நம்பும் வகையில் எங்ளுடைய செயற்பாடுகள் இருக்கக் கூடாது. எனவே  சற்றுக் பொறுமையோடு இருந்து பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். உலகம்  நம்பும் வகையில் வன்முறையை முற்றுமுழுதாக விட்டிருக்கிறோம் என்பதை  எடுத்துக் காட்ட வேண்டும்.

  எமது மக்கள் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆணை ஒற்றுமையாக ஒரு நாட்டுக்குள்ளே முழுமையான அதிகாரப் பகிர்வின் மூலமாக ஒரு தீர்வைக் காண வேண்டுமென்பது தான்.  அதாவது நாம் அந்த தீர்வை காண்பதற்கு சாத்வீக ,  ஜனநாயக முறையான வன்முறையற்ற போராட்டத்தை நடத்தும் படியாக எங்களுக்கு ஆணை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 அதனை நாங்கள் செய்கின்றமையால் இன்றைக்கு சர்வதேச ரீதியிலான ஆதரவு எங்களுக்கு முழுமையாக கிட்டியிருக்கின்றது. அந்த ஆதரவை  தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் அதனை உபயோகிக்க வேண்டுமாகவிருந்தால்  நாங்கள் ஒரே நாட்டுக்குள் தொடர்ச்சியான தீர்வை காண்பதற்கு தயாராக இருக்கின்றோம். அதற்கான போராட்டத்தை வன்முறையற்ற விதத்தில் முன்னேடுப்போம் என்ற செய்தியை தெரிவிக்கும் வகையில்  செயற்பட வேண்டும்.

 எவ்வளவு தான் இராணுவத்தினுடைய அரசாங்கத்தினுடைய கெடுபிடியிருந்தாலும் எவ்வளவு தான் அடக்கு முறை மேலோங்கியிருந்தாலும் நாங்கள் சாத்வீக முறையில்  எங்களுடைய  முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்ல இப்புது வருடத்தில் திடசங்கற்பம்  பூண வேண்டும் என தமிழ் மக்கள் அனைவரையும் கோருகின்றோம்.

 இதேவேளை நாட்டில் வாழும் மற்றைய இன மக்கள் விசேடமாக சிங்கள மக்கள் அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.  தமிழ் மக்கள் சமாதான முறையிலேயே ஒரு நாட்டுக்குள்ளே வன்முறையற்ற விதத்தில் வாழவதற்கு தயாராகவவுள்ளனர் என்பதை  நம்ப வேண்டும்.

எனவே அரசாங்கத்தின் பொய் பிரசாரம் மக்களை பயமுறுத்தும்  ஒரு சூழ்நிலைக்குள் கொண்டு செல்லும் என்பதால் அதனை ஏற்காது தமிழ்  மக்களும் தமது அரசியல் உரிமைகளை முழுமை யாக அனுபவிக்க இடிமளிக்க வேண்டும்.

பெரும்பான்மை பலத்தினால் சிங்கள மக்கள் தங்களுடைய விடயங்களை தாங்களே எவ்வாறு நிர்ணயிக்கின்றனரோ அதேபோல் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய  ஜனநாயக உரிமைகளை,  அரசியல் உரிமைகளை உபயோகிக்க கூடிய வகையில் நாட்டினுடைய அரசியல் முறை மாற்றியமைக்கப்படுவதற்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்றார்.

- See more at: http://thinakkural.lk/article.php?local/r8tmpvjizl1037eddb904a6d5153nvnckb773755d2857aacadb1cb0woipa#sthash.5sY987sV.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.