Jump to content

அஞ்சலி: வாலி - காலத்தை வென்றவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாலி - காலத்தை வென்றவன்

எஸ். கோபாலகிருஷ்ணன்

திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்ட வாலி அண்மையில் இறந்துவிட்டார். அவரது உடலுக்கு வயது 82 ஆகியிருந்தது. ஆனால் மனதளவில் அவர் என்றும் மார்க்கண்டேயன்தான். அவரது திறமைகளையும் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பாடலாசிரியராக புரட்சி, பாசம், காதல், காமம், இழப்பு, வலி, துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் பாடல் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார். அவரது பாடல்வரிகள் இலக்கிய ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கின்றன. பாடல் வரிகளில் நவீனத்தையும் ஆங்கிலக் கலப்பையும் புகுத்தி தற்காலிக கிளர்ச்சி விரும்பிகளையும் ஈர்க்கத் தவறியதில்லை. இரண்டு வகையான பாடல்களிலும் அவரது மொழி ஆளுமை மேலோங்கி நிற்கும்.

பாடல்களில் மட்டுமல்ல, பத்தி எழுத்திலும் மேடைப் பேச்சிலும்கூடத் தன் மொழி ஆளுமையைப் பயன்படுத்தி எதுகை மோனையில் அவர் கொளுத்திப் போடும் சரவெடிகளுக்கு கைதட்டல்கள் அடங்க பல நொடிகள் பிடிக்கும். இது தவிர தீவிர ஆன்மீகப் பற்றுக் கொண்டிருந்தவர். முருகன் மீது பல பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார். ராமாயணத்தை அவதார புருஷன் என்றும் மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்றும் கவிதை நடையில் எளிய தமிழில் எழுதி அந்த இருபெரும் இதிகாசங்கள் எளிய வாசகர்களைச் சென்றடைய வித்திட்டவர். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைப் பாராட்டியும் கவிதைத் தொகுப்புகளை எழுதி இருக்கிறார்.

இவை எல்லாம் அவர் திறமை மற்றும் உழைப்பு சார்ந்தவை. அவரது வார்த்தைகளில் சொல்வதானால், கலைக் கடவுள் சரஸ்வதி தேவி அவருக்கு அளித்த கொடை. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரையும் சமமாகப் பாவித்து தன்னை யாருக்கும் உயர்வானவராகவும் கருதாமல் அதே நேரத்தில் தன் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை வாழ்ந்து சென்ற குணாதிசயம்தான் வாலியின் தனிப்பண்பு. இதைப் பறைசாற்றும் எண்ணற்ற நிகழ்வுகளில் சிலவற்றை நினைவுகூரலாம்.

வாலி திரையுலகில் காலூன்றக் களம் அமைத்துக் கொடுத்தவர் அன்றைய நட்சத்திர நாயகர் எம்.ஜி. ராமச்சந்திரன். வாலியை சந்திப்பதற்கு முன்பே தமிழக அரசியலிலும் முக்கிய அந்தஸ்தைப் பெற்று செல்வாக்கு நிறைந்த மனிதராகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பும் மரியாதையும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரிடம்கூட தன் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க வாலி தயங்கியதில்லை. தன் மனைவியின் பிரசவ நேரத்தில் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாட்டெழுத உடனடியாக வருமாறு அழைப்பு வருகிறது. தன் நிலைமையைச் சொன்ன வாலியை அழைத்துப்போக வந்தவர் நக்கலாக ஏதோ சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் சார்பில் வந்த அழைப்பு என்பதைப் பொருட்படுத்தாமல் கோபத்தில் கொதித்துவிட்டார் வாலி. தன் சார்பில் அழைத்தவர் அப்படிப் பேசியதற்காக எம்.ஜி.ஆரே தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக பின்நாட்களில் ஒரு வார இதழுக்கு எழுதிய பத்தியில் வாலி பகிர்ந்துகொண்டார்.

அடுத்து வந்த முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரோடும் மட்டற்ற நட்பு பாராட்டியவர்தான் என்றாலும் தனக்குத் தவறென்று பட்டால் அவர்களையும் விமர்சிக்கத் தவறியதில்லை.

திரையுலகிலும் இதே கதைதான். எப்பேர்ப்பட்ட ஜாம்பவனானாலும் வாலியிடம் வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டும். அவர்களின் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார் வாலி. இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.

90களின் தொடக்கத்தில் அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்துவிட்ட நடிகர் ஒருவரின் படம். அந்த நடிகர் பாடல் பதிவின்போது உடனமர்கிறார். பாடலுக்கான சூழல் வாலியிடம் விளக்கப்படுகிறது. வாலியும் ஒரு பல்லவியைத் தருகிறார். 'இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கலாமே' என்று நடிகர் தயக்கத்துடன் கூற விருட்டென்று எழுந்து சென்றுவிடுகிறார் வாலி. நடிகர் சொன்ன வாக்கியத்தில் இன்னும் என்ற வார்த்தை வாலியின் காதில் விழாததுதான் காரணம். பிறகு நடிகர் மன்னிப்புக் கேட்டு வாலியைப் பாட்டெழுத அழைத்துவருகிறார். அந்த நடிகர் கமல்ஹாசன், படம் அபூர்வ சகோதரர்கள். பாடல், உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்.

90களின் தொடக்கத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். முதல் படத்தின் பாடல்கள் தேசிய விருதுகளைப் பெறுகின்றன. அவருடன் இணைந்து பணியாற்ற மூத்தோர் முதல் இளையோர் வரை அனைவரும் காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் தன் இரண்டாவது படத்துக்குப் பாடல்களை எழுத வாலியை அணுகுகிறார் இசையமைப்பாளர். ஆனால் புதியவர்களுக்கு எழுதுவதில்லை, நான்கைந்து படங்களுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறுகிறார் வாலி. பிறகு தான் சேகரின் மகன் என்று சொன்னதும் தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு பாடல் எழுத ஒப்புக்கொள்கிறார் வாலி. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், படம் ஜெண்டில்மேன், பாடல் சிக்கு புக்கு ரயிலே.

90களில் அறிமுகமாகித் தொடர் வெற்றிகளால் நட்சத்திர இயக்குநராக உயர்ந்துவிட்ட இயக்குநர், வாலியை ஒரு நாள் காலை அழைக்கிறார். அப்போது அவரது படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு வழங்கப்படவில்லை. இயக்குநர் அழைப்பை எடுத்ததும் வாலி, 'என்னைய்யா, நீதான் எந்திரன்லயே எந்திறன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியே. இப்ப ஏன் கூப்பிட்ற?' என்கிறார். அந்த இயக்குநர் ஷங்கர்.

வாலியின் தன்மான உணர்வை அறியாதவர்கள் இல்லை. அதை மீறி தெரிந்தோ தெரியாமலோ அவரது தன்மானத்துக்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள்பவர்கள் வாலியின் அறச்சீற்றத்துக்கும் தப்பியதில்லை. பொதுவாக இதுபோல் மனதில்பட்டதைப் பட்டென்று உடைத்துப் பேசுபவர்களுக்கு அதிக நண்பர்களோ நலன்விரும்பிகளோ இருக்க மாட்டார்கள். ஆனால் வாலி, எம்.ஜி.ஆர் முதல் நேற்று அறிமுகமான நடிகர்கள் வரை அனைவரின் அன்புக்குரியவராகவே விளங்கினார். எம்.ஜி.ஆரின் பாசத்துக்குரியவர். சிவாஜியின் அன்புக்கும் பாத்திரமானவர். நடிகர் நாகேஷின் 'வாடா போடா' நண்பர். நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் தன் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை பல இடங்களில் நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார் வாலி. எம்.எஸ். விஸ்வநாதனின் அன்புத் தம்பி. இளையராஜா, ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களால் 'அண்ணா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

கண்ணதாசனுடன் ஏற்பட்ட பிணக்கால் அவரை தவிர்த்துவிட்டு வாலியை வளர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று சொல்வார்கள். இதனால் வாலி, கண்ணதாசன் இருவருக்குமிடையில் உரசல் இல்லாமல் இல்லை. ஆனால் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இல்லாமல் இருந்ததில்லை. கண்ணதாசன் வயதில் மட்டுமல்லாமல் கவிபாடும் திறமை, மொழி ஆளுமை என அனைத்து வகையிலும் தன்னைவிட உயர்ந்தவர் என்ற மரியாதை வாலிக்கு எப்போதுமே இருந்ததுண்டு. தன்னை வாழ்த்தி எழுதப்பட்ட பாடலொன்றில் கண்ணதாசனை தான் முந்திவிட்டதாக வந்த வரியை நீக்கச் சொல்லி அடம்பிடித்து, அதை நீக்கிய பின்தான் பாடலை வெளியிட அனுமதித்தார் வாலி என்று அந்தப் பாடலை எழுதியவரும் வாலியின் உற்ற நண்பருமான கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். கண்ணதாசனை யாராலுமே தோற்கடிக்க முடியாது. அவருக்கு நிகர் அவர் மட்டும்தான் என்ற கருத்தை ஆழமாகத் தன் நெஞ்சத்தில் பதித்திருந்தார் வாலி என்பதற்கு இதுவே சான்று. இதே போல் கண்ணதாசனும் பல நேரங்களில் தான் எழுதிய பாடல்களுக்கும் வாலி எழுதிய பாடல்களுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறுவார்கள். இந்தக் குழப்பம் கண்ணதாசனுக்கு மட்டுமில்லை. ரசிகர்களுக்கும் உண்டு. வாலியால் எழுதப்பட்ட பல பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டவை என்ற கருத்து பரவிவிடும்.

தன் அடுத்த போட்டியாளரான வைரமுத்துவிடம் தொழில் ரீதியாகப் போட்டி உணர்வு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டத் தவறியதில்லை வாலி. வைரமுத்துவும் அந்த அன்புக்கு ஏற்றவாறு நடந்துகொண்டிருக்கிறார். பொதுவாக வைரமுத்து அளவுக்குக் கவிதைத் தரத்துடன் எழுத வாலி மெனக்கெடுவதில்லை என்று இருவருக்குள்ளும் பகை ஏற்படுத்திக் குளிர்காய நினைத்தவர்கள் சொன்னதை அவர்கள் இருவரும் விவாத அளவிலேயே விட்டுவிட்டனர்.

வைரமுத்துவுக்கு அடுத்து வந்த அனைத்துக் கவிஞர்களுமே வாலியின் சீடர்களாகவே தங்களை அறிவித்துக்கொண்டார்கள். பழனி பாரதி வாலியின் அன்புக்குப் பாத்திரமானவர். தினமும் சந்திக்கும் நண்பர். பா.விஜய், கபிலன், நா. முத்துகுமார், ஸ்நேகன், தாமரை ஆகியோரும் வாலியை அன்பு மழையில் நனையவைக்கத் தவறியதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் வைரமுத்துவிடம் நெருங்கியதில்லை. அவரைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதுகூட இல்லை. வைரமுத்துவைவிட மூத்தவரான வாலி பழகுவதற்கு இனியவராகவும் எளியவராகவும் இருப்பதாக அடுத்த தலைமுறைக் கவிஞர்கள் உணர்ந்திருக்கலாம்.

தீவிர ஆத்திகராக இருந்துகொண்டே நாத்திகர்களிடம், குறிப்பாக திராவிடக் கட்சித் தலைவர்களிடம் நட்பு பாராட்டியதும் வாலியின் தனித்தன்மைகளில் ஒன்று. தன் மதம் சாதி சார்ந்த அடையாளங்களை ஒருபோதும் மறைக்கவோ மறுக்கவோ விரும்பாத வாலி, மு.கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் நண்பராக இருந்திருக்கிறார். இவர்களின் கடுமையான விமர்சகர்களான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமாசாமியின் நண்பராகவும் இருந்திருக்கிறார். கருணாநிதியின் எதிர் முகாமைச் சேர்ந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததற்கு வாழ்த்துப்பா படிக்கும் அளவுக்கு ஜெயலலிதா மீது அன்புகொண்டிருந்தார்.

ஈழத்துயர் குறித்தும் வாலி அவ்வப்போது தன் கவிதைகளால் கண்ணீர் வடித்ததுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவின்போதும் அவ்வாறே அவரது பேனா அழுதது. 'பார்வதி அம்மாளுக்கு தங்க இடம்தராத எங்கள் தமிழ்மண் நிரந்தரமாய் பழிதேடிக்கொண்டது' என அவர் கவிதை நிறைவுபெற்றிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் கவிஞர் வாலி பெருமதிப்பும் விருப்பும் கொண்டிருந்தார் என்பதற்கு அவரது கவிதைகளே சாட்சியாய் நிற்கின்றன.

வாலி யார் மீதும் அன்பும் நட்பும் பாராட்டத் தயங்கியதில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட நண்பராயினும் அவருக்காகத் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை.

எல்லா மனிதர்களைப் போல் வாலியின் மீதும் சில குறைகள் உண்டு. பாராட்ட நினைத்தால் மனதாரப் பாராட்டிவிடுவது ஒரு நற்பண்புதான். ஆனால் சில நேரங்களில் சம்பந்தப்பட்டவரே கூச்சபப்டும் அளவுக்குப் பாராட்டுவிடுவது வாலியின் வழக்கம். குறிப்பாக கருணாநிதியை விமர்சனமின்றிப் பாராட்டிக்கொண்டே இருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் தவறுகளையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளையோ ஒரு முறைகூட விமர்சித்ததில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்வதற்குப் பெயர்போனவர்கள் அல்ல என்றாலும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர் என்று அறியப்பட்ட வாலியும் அவர்களை விமர்சிக்கத் தயங்கியது சற்று ஏமாற்றம் அளிக்கும் விஷயமே.

வாலி மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம், அவர் இசையமைப்பாளரின் மெட்டுக்காகவும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்காகவும் மொழியை தன் இஷ்டத்துக்கு வளைத்தார் என்பது. இவரது பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு. 'என்னைத் தேடி வரும் இலக்கிய ரசிகர்களுக்கு நான் பாலூட்டும் தாய், பணம் தரும் தயாரிப்பாளருக்கு வாலாட்டும் நாய்' என்று சுயவிமர்சன பாணியில் வாலியே இதை ஒப்புக்கொண்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இதுபோன்ற சமரசங்களைத் தவிர்க்கும் நிலையை அடைந்த பின்னும், அவர் அதற்கு முயற்சிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

மூன்றாவது அவரது கவிதைத் திறமை பற்றியது. பாடல் எழுதுவது என்பது வேறு, கவிதை என்பது வேறு. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுபவர்கள் அனைவரும் கவிஞர் என்று அழைக்கப்பட்டாலும் அவர்களும் சில கவிதை முயற்சிகளைச் செய்திருந்தாலும் கவிதைகளைத் தீவிரமான கலையாகக் காண்பவர்கள் இவர்களைக் கவிஞர்களாக ஏற்றுக்கொண்டதில்லை. அதற்காக இவர்களுக்கு கவித்திறனே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரின் பாடல்களில் கவிதை நயம் மிளிர்கிறது. கவிதையை எட்டுவதற்கான முயற்சி தென்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாடல்களை கவிதைகள் என்று கவிதை வாசகர்கள் கொண்டாடத் தக்கவையாக இருந்ததில்லை. வாலி திரைப்படத் தேவை எதுவும் இல்லாமல் வெளியே எழுதிய கவிதைகளிலும் எதுகை மோனை ஜாலங்களைத் தவிர அத்தனை சிறப்பாக வேறெதுவும் இருந்ததில்லை என்றே தேர்ந்த கவிதை வாசகர்கள் மதிப்பிடுகிறார்கள்.

கறாரான மதிப்பீடுகள் இப்படி இருந்தாலும் உன்னை நான் சந்தித்தேன், அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்பன போன்ற இலக்கியத் தரமான பாடல்கள், சிக்கு புக்கு போன்ற இளமைத் துள்ளலான பாடல்கள், நேத்து ராத்திரி போன்ற காம ரசம் சொட்டும் பாடல்கள், கற்பனை என்றாலும்.. என்பன போன்ற பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகைமைகளிலும் சிறந்து விளங்கினார் என்பதில் சந்தேகமில்லை. பல்வகை உணர்ச்சிகளையும் பாத்திரங்களையும் வாழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் சினிமாவுக்கு ஏற்ற முழுமையான படைப்பாளியாக அவர் விளங்கினார் என்றும் சொல்லலாம்.

கால மாற்றத்தால் காலாவதியாகிவிடாத உயிர்ப்பும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் திறமும் இயல்பான சொல்லாட்சிகளும் அந்தஸ்தையும் வயதையும் பொருட்படுத்தாமல் அவர் வாரி வழங்கிய அன்பும் வாலியின் முத்திரைகளாகத் தமிழர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=c1a186e5-dd68-4fa5-9f53-7bbaa956ba66

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.