Jump to content

நிதி இல்லாமல் தத்தளிக்கும் சிந்து சமவெளி ஆய்வு


Recommended Posts

Tamil_News_large_1026394.jpg
 
கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
 
அவர்களிடம் பேசியதில் இருந்து...
 
* ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி?
 
ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்து, தற்போது பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., மதிப்புறு ஆலோசகராக உள்ளார். நிறுவனத்தின், முழுநேர ஆய்வாளராக, ச.சுப்பிரமணியன் இருக்கிறார். நான், நூலக இயக்குனராக இருக்கிறேன்.
 
* சிந்துசமவெளி ஆராய்ச்சிகளின் தற்போதைய நிலை?
 
ஜி.சுந்தர்: சிந்துசமவெளியின் பெரும்பகுதி, பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவில், இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளுக்காக, நாம் பெருமைகொள்ள முடியாது. காரணம், 1977க்குப் பின், பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை. நடந்த ஆய்வு முடிவுகளும் தொகுக்கப்படவில்லை. அதனால், சிந்துசமவெளியை பற்றி திட்டவட்டமான கருத்துக்களைக் கூற முடியவில்லை. அரியானாவில் ராக்கிகடி, பர்மானா ஆகிய இடங்களிலும், குஜராத்தின் லோத்தல், தோலாவிரா உள்ளிட்ட இடங்களிலும், மகாராஷ்டிராவின் தைமதாபாத்திலும் மட்டுமே, சிந்து சமவெளி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், அந்த நாகரிகம், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது என்பதும், முந்தைய திராவிடர்களுக்கு நெருங்கியதாகவும் உள்ளது என்ற கருதுகோள்கள் உள்ளன. சிந்துசமவெளி மக்கள், சமஸ்கிருதம், திராவிட மொழி, முண்டா ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பேசி இருக்கலாம் என்னும் கருதுகோள்களும் உள்ளன. கி.மு.1300க்குப் பிறகு வந்த சமஸ்கிருதத்திற்கு, ஆரம்பகாலத்தில் குறியீடுகளோ, வரிவடிவமோ இல்லை என்பதால், ஆரியர்களுக்கும் சிந்துசமவெளிக்கும் தொடர்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஆரியர்களின் வருகைக்குப் பின் சிந்துசமவெளி மக்களின் பண்பாட்டில், ஆரிய கலப்பு ஏற்பட்டிருக்கலாம் எனும் கருத்துகளும் உள்ளன.
 
* திராவிட-சிந்துசமவெளி நாகரிகங்களுக்கு இடையே நெருக்கம் உள்ளதா ?
 
ச.சுப்பிரமணியன்: சிந்துசமவெளி பொருட்களில், மொழிக்கான கூறுகள் ஏதும் இல்லை. ஆனால், குறியீடுகள் உள்ளன.மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன்கண்டியூரில் கிடைத்த கற்கோடரியில், சிந்துசமவெளி குறியீடுகளுக்கு நிகரான குறியீடுகள், சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. கோவைக்கு அருகில் உள்ள சூலூரில் கிடைத்த மண்பாண்டத்திலும், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள சானூரில் கிடைத்த மண்பாண்டத்திலும் சிந்துசமவெளிக்கு நிகரான குறியீடுகள் கிடைத்து உள்ளன. அதை போன்ற பொருட்கள், இந்தியாவில் வேறெங்கும் கிடைக்கவில்லை என்பதாலும், அந்த பொருட்களின் காலம் சிந்துசமவெளி காலத்திற்கு பிற்பட்ட காலம் என்பதாலும் சிந்துசமவெளி மக்கள் திராவிடர்களாக இருக்கலாம் என்ற கருதுகோள் வலுத்துள்ளது. மேலும், அசோகர் காலத்துக்கு முன் இந்தியாவில் பிராமி எழுத்துக்கள் இல்லை என்பதாலும், இந்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம் எனும் கருத்துக்களும் உள்ளன. அதேபோல், தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் வரும் காட்சிகளும், நகர அமைப்புகளும் சிந்துசமவெளி நாகரிகத்தினை நினைவுபடுத்துவதாக உள்ளன. தற்போதைய தமிழக ஊர்ப்பெயர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் ஊர்ப்பெயர்களை ஒத்திருப்பதால், சிந்துசமவெளிக்கும் திராவிடர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளும், முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
* சிந்துசமவெளி பற்றி, தமிழ் நூல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
 
ஜி.சுந்தர்: நிதிநிலைதான் முதல் காரணம். ஆங்கில சொல்லாடல்களுக்கு நிகரான தமிழ் கலைச் சொற்களை, அரசு உருவாக்கி, தொல்லியல் துறைக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். தமிழில் எழுதுவதற்கு, ஊக்குவிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது நடக்கும் ஆய்வு முடிவுகளை உடனுக்குடன், மாணவர்களும், உலகத்தாரும் அறிந்துகொள்ளும் வகையில், கணினிமயமாக்கி இணையப் பக்கங்களில் இணைக்க வேண்டும். தமிழகத்திலேயே, 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான இடங்களை, தேர்வு செய்ய தொல்லியல் ஆய்வுக் குழுவில் (ஏ.எஸ்.ஐ) போதிய ஆட்களும், நிதியும் இல்லை. அதனால், பாரம்பரிய சொத்துகள் உள்ள பல இடங்கள், நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட் போன்றவைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. மேலும், தொல்லியல் துறையில் உள்ளவர்கள் மட்டுமே, இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பதை விடுத்து, வரலாற்றிலும், தொல்பொருள் பற்றிய ஆர்வம் உள்ளவர்களையும் பயிற்றுவித்து, ஊக்குவிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் நிதியுதவியும் செய்ய முன்வர வேண்டும். 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.